சிவஞானபோதம்  – முனைவர் ந. இரா. சென்னியப்பனார் அவர்களின் கட்டுரை

1. முன்னுரை

சங்க காலத்தில் தமிழகத்தில் பண்பாடு, ஒழுக்கம், வழிபாடு சிறப்புற்றிருந்தன. அடுத்த வந்த இருண்ட காலத்தில் அவை அனைத்தும் மாறின. கி.பி. ஆறாம் நூற்றாண்டு முதல் பல்லவராச்சி தமிழகத்தில் பரவியது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் மக்களிடத்தில் மாற்றத்தை உண்டாக்கினர். சிவ வழிபாடு, சிவன்புகழ் பாடு நூல்கள் பெருகின. கி.பி.ஏழாம் நூற்றாண்டில் தென்னாட்டுக்கு வந்த யுவான்சுவாங் என்ற சீனநாட்டறிஞர் புத்தம் சமணம் செல்வாக்குப் பெற்றிருந்ததைக் குறிப்பிட்டுள்ளார். நாயன்மார்களால் புத்த சமயம், சமணசமயம் செல்வாக்குக் குறையத் தொடங்கியது.

பாண்டி நாட்டிலும் திருஞானசம்பந்தரால் சமணம் செல்வாக்குக் குறைந்தது; சைவம் வளர்ந்தது. திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற கோயில்களுக்குச் சென்று தேவாரப் பாடல்களைப் பாடினர்; அற்புதச் செயல் பலவற்றை நிகழ்த்தினர்.

பல்லவர் ஆட்சியின் வீழ்ச்சிக்குப்பின் பிற்காலச் சோழப் பேரரசு தோன்றியது. பல சிவன் கோயில்கள் கற்றளிகளாக மாற்றப்பட்டன. செம்பியன் மாதேவி அவ்வகையில் பெருந்தொண்டு புரிந்தார். இராசராசன், இராசேந்திரன் முதலியோர் பெருங்கோயில்களைக் கட்டினர். திருக்கோயிகளில் தேவாரப் பாடல்களைப் பண்ணோடு பாடப் பிடாரர் (ஓதுவார்) பலரை நியமித்தனர். சோழ மன்னர்களில் கண்டராதித்தர் திருவிசைப்பாப் பாடியுள்ளார். சோழர் காலத்தில் முதல் ஏழு திருமுறைகள் தொகுக்கப்பெற்றன. திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி அவர்களே சைவத் தொடர்பான நாயன்மார் தொடர்பான பத்து நூல்களைப் பாடியுள்ளார். கருவூர்த் தேவர் புதிதாகக் கட்டப் பெற்ற தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழேச்சரம் ஆகிய கோயில்களைப் பற்றியும், பிற கோயில்களைப் பற்றியும் திருவிசைப்பாப் பாடியுள்ளார்.

ஒட்டக்கூத்தர் சோழர்காலத்தில் மூவர் உலா, தக்கயாகப் பரணி ஆகியவற்றைப் பாடியுள்ளார். சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தையும், கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணத்தையும் பாடியுள்ளார். சோழர் ஆட்சியில் சைவம் மிகச் சிறந்த நிலையைப் பெற்றிருந்தது. கோயில் வழிபாடு ஒழுங்கு செய்யப்பெற்றது. சைவ இலக்கியங்கள் பல்கிப் பெருகின.

முந்திய சித்தாந்த நூல்கள்

சைவத்தத்துவக் கொள்கை சங்ககாலம் தொட்டுத் தமிழகத்தில் இருந்து வந்துள்ளது. தனி நூல் எதுவும் தோன்றவில்லை. வாகீச முனிவர் ஞானாமிர்தம் என்னும் நூலை இயற்றினார். திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் திருவுந்தியார் என்னும் நூலை இயற்றினார். திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் திருக்களிற்றுப் படியார் என்னும் நூலை இயற்றினார். ஞானாமிர்தம், திருவுந்தியார், திருக்களிற்றுப் படியார் ஆகிய மூன்று சைவ சித்தாந்த நூல்களும் சிவஞான போதத்திற்கு முன் தோன்றிய சைவசித்தாந்த நூல்களாகும்.

2. மெய்காண்டார் வரலாறு

தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் நடுவே உள்ள நாடு நடுநாடாகும்; திருமுனைப்பாடி நாடு என்றும் வழங்கப் பெறும். திருநாவுக்கரசரும் நம்பியாரூரரூம் இந்நாட்டில் அவதரித்தவர் ஆவர்.

“அறந்தருநா வுக்கரசும் ஆலால சுந்தரரும்
பிறந்தருள உளதானால் நம்மளவோ பேருலகில்
சிறந்ததிரு முனைப்பாடித் திறம்பாடும் சீர்ப்பாடு”
(திருநாவுக்கரசு நாயனார் புராணம் பாடல் 11)

என்று சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்நாட்டில் பெண்ணாகடம் என்பது தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமாகும். விருத்தாசலத்திலிருந்து. தென்மேற்கில் 17 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. தேவ கன்னியர், காமதேனு, வெள்ளை யானை (பெண்+ஆ+கடம்) ஆகியவை வழிபட்டதால் பெண்ணாகடம் என ஆயிற்று என்பது தலபுராணச் செய்தி. கடந்தையர் – வீரமக்கள் – வாழ்ந்தால் கடந்தை நகர் என்ற பெயர் ஏற்பட்டது. தூங்கானை மாட அமைப்பில் கோயில் உள்ளது. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான கலிக்கம்பர் இத்தலத்தில் தோன்றியவர் ஆவார்.

பெண்ணாகடத்தில் சைவ வேளாள மரபில் அச்சுதக் களப்பாளார் என்பவர் வாழ்த்து வந்தார். வாழ்க்கையில் எல்லாச் செல்வங்களும் நிறைந்திருந்த போதிலும் மக்கட்செல்லவம் இல்லாத பெருங்குறை. அவருக்குக் கற்பில் சிறந்த மனைவி வாய்க்கப் பெற்றிருந்தார். திருவெண்ணெய்நல்லூர்ச் சடையப்ப வள்ளலின் உடன் பிறந்தவள் இவ்வம்மையார் என்பது மறைமலை அடிகளார் கருத்தாகும். அக்காலத்தில் திருவதிகையின் வடக்கேயுள்ள திருத்துறையூரில் சகலாகம பணடிதர் என்பவர் சிறந்து விளங்கினார். சைவத்தையும் சித்தாந்தத்தையும் அடியார் பலருக்கு முறையாக உபதேசித்துவந்தார்; பலருக்குச் சிவதீக்கை செய்து வைத்தார்; பலருக்குக் குலகுருவாக விளங்கினார்.

சகலாகம பண்டிதர் தம்மிடம் வருவோர் குறைகளை வினாவித் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு வேண்டிய நல்லறிவுரைகளை அவ்வப்போது வழங்கி வந்தார். ஆதலால் சைவ மக்களிடத்தே மிகச் செல்வாக்குப் பெற்று விளங்கினார்; அச்சுதக் களப்பாளருக்கு ஞானாசிரியராக அமைந்தார். சைவத்தின் பெருமைகைளைப் பலகால் உபதேசித்துவந்தார். அச்சுதக் களப்பாளரும் அவரிடத்தில் பெருமதிப்பும் பேரன்பும் கொண்டிருந்தார்.

அச்சுதக்களப்பாளர் மக்கட் பேறில்லாக்குறையை அவ்வப்போது குறிப்பாகவும் வெளிப்படையாகவும் பணிவுடன் விண்ணப்பித்துவந்தார். சகலாகம பண்டிதரும் நாள்தோறும் சைவத் திருமுறைகளை ஓதிவருமாறு உரைத்திருந்தார். அச்சுதக் களப்பாளரும் அவ்வாறே திருமுறைகளை ஓதிவந்தார். ஒருநாள் சகலாகம பண்டிதர் வந்து அச்சுதக் களப்பாளர் இல்லத்தில் தங்கியிருந்தார். சிவபூசை முடித்துவிட்டு அமர்ந்திருந்தபோது அச்சுதக்களப்பாளார் தம்குறையை முறையிட்டார். உடனே சகலாம பண்டிதரும் திருமுறை எழுதிய ஓலைச் சுவடிக் கட்டுகளைக் கொண்டு வரச் செய்தார்.அதனை இருக்கையின் மேல் வைத்துச் சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கோயிலும், திருவுருவமுமாகக் கருதி வழிபாடு செய்தார். பட்டுக்கயிறு ஒன்றை எடுத்து ஓலைக்கட்டின் நடுவே சாத்தி எடுத்தார். திருஞானசம்பந்தர் பாடிய “கண்காட்டும் நுதலானும்” எனத் தொடங்கும் பதிகத்தில் இரண்டாம் திருப்பாட்டு ஆன

“பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ள நினைவு
ஆயினவே வரம்பெறுவர் ஐயுறவேண்டா ஒன்றும்
வேயனத்தோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீவினையே”
எனும் இப்பாடல் வந்தது. அதனைப் பல முறை படித்துக் காட்டினர். படிக்கும் போதெல்லாம் பெருமகிழ்ச்சியும் பேரின்பமும் தோன்றின. ஞானாசிரியர், உறவினர், நண்பர் முதலியோர் பாடலின் பொருளை அறிந்து வியந்தனர்.

“பிள்ளையினோடு உள்ள நினைவு ஆயினவே வரம் பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும்” என்ற தொடரைக் கண்டு திருவருளின் பெருமையை நினைத்துக் கண்ணீர்விட்டனர்.

திருவெண்காட்டுத் திருக்கோயிலில் சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம், அக்கினிதீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்களில் மூழ்கி எழுந்தால் தீவினைகள் விட்டு நீங்கும், பேய்பிடிக்காது, அகன்றுவிடும். மக்கட்பேறு கிட்டும். உள்ளத்தில் நினைத்த வரங்கள் எல்லாவற்றையும் பெறுவர். இவ்வாறெல்லாம் நடக்கிறதா? நடக்காதா என்று ஐயமுற வேண்டா – என்பது பாட்டின் பொருள்.

சங்க காலத்தில் புகார் நகரின் ஒரு பகுதியாகத் திருவெண்காடு இடம் பெற்றிருக்க வேண்டும். சிலப்பதிகாரத்தில், கனாத்திறமுரைத்த காதையில் தேவந்தி கண்ணகியிடம் “சோம குண்டம் சூரிய குண்டம் துறைமூழ்கி” வழிபட வேண்டுமென்று கூறியதாக இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார். சிலப்பதிகாரக் காலத்திற்குப்பின் திருவெண்காட்டில் அக்கினி தீர்த்தமும் சேர்ந்து தீர்த்தங்கள் மூன்றாயின, தற்போதும் திருவெண்காட்டுக் கோயிலில் மூன்று தீர்த்தங்கள் உள்ளத்தைக் காணலாம்.

குலகுருவான சகலாகம் பண்டிதர் அச்சுதக்களப்பாளரையும் அவர் துணைவியாரையும் திருவெண்காட்டுக்குச் சென்று நாள்தொறும் முக்குளத்தில் மூழ்கி வழிபாடு செய்யுமாறு பணித்தார். தற்போது திருவெண்காடு சீர்காழிக்குத் தெங்கிழக்கில் 10 கி,மீ. தொலைவில் உள்ளது. அச்சுதக் களப்பாளரும் அவர் மனைவியாரும் திருவெண்காடு சென்று நல்ல இல்லம் ஒன்றில் தங்கினர். நாள்தோறும் முக்குளத்தில் மூழ்கித் திருவெண்காடுடைய மகாதேவரை வழிபட்டுவந்தனர். ஒருநாள் இரவு அச்சுதக் களப்பாளர் கனவில் திருவெண்காட்டு இறைவன் தோன்றி “உனக்கு இப்பிறப்பில் மகப்பேறு கிடைத்தல் அரிது எனினும் உண்மையான அடியார்கள் பாடிய திருமுறைப் பாட்டுக்களை உண்மை என நம்பி எம்மை வழிபட்டுவருகிறாய். ஆகையால் திருப்பாட்டுக்களைப் பாடி அருளிய திருஞானசம்பந்தர் போலவே நல்ல ஞானத்தை மக்களுக்குப் போதிக்கும் மெய்ஞ்ஞானமுடைய மகனைக் குழந்தையாகப் பெறுவாய்” என்று சொல்லித் திருநீறு கொடுத்துவிட்டு மறைந்தார். இக் கனவைக் கண்ட அச்சுதக் களப்பாளர் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தார். மனைவியிடமும் கனவு பற்றி அடிக்கடி உரையாடி வந்தார். முறையாக நாள்தோறும் சிவபெருமானை வழிபட்டுவந்தார்.

கனவு பற்றிச் சைவத்திரு.கா.சுப்பிரமணியபிள்ளை கருத்து

கனவில் கண்டதெல்லாம் பொய்யென்று ஒதுக்கிவிடுதல் தவறு.கனவென்பது நுண்ணுடம்பின் நுகர்ச்சியாக உள்ளது. நமது கண்ணிற்குப் புலனாக நின்ற உடம்பே தூல உடம்பென்று கூறப்படும். அவ்வுடம்பு கொண்டு நனவிலே உயிர் போதல் வருதல் வருதல் முதலியன செய்யும்; கட்புலனாகாத நுண்ணுடம்பு தூங்கும்போது பலவித நுகர்ச்சிகளை அடைதல் கூடும், அருந்தவத்திரனரது கட்புலனுக்கு அருள் செய்யுங் கடவுள் அவரது நுண்ணுடம்பிற்கு மாத்திரையே புலனாகும் வண்ணம் தோன்றுதலும் இயல்பே. (மெய் கண்ட சாத்திரம் பதினாங்கு – கா.சுப்பிரமணியபிள்ளை முன்னுரை பக்கம் 12,13)

குழந்தைப் பேறு – பெயர் சூட்டுதல் பற்றிய கருத்து வேறுபாடு

 1. அச்சுதக் களப்பாளாரின் மனைவியார் கருவுற்றார். பத்துத் திங்களும் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்துவந்தார். நல்ல வேளையில் குழந்தை அவதாரம் செய்தது. ஆண் குழந்தைக்குச் செய்ய வேண்டிய சடங்குகளை யெல்லாம் செய்து, சிலநாள் கழிந்த பின் திருப்பெண்ணாகடம் மீண்டார். உறவினரும், ஊரில் உள்ளாரும் செய்தியறிந்து அச்சுதக் களப்பாளாரின் இல்லத்திற்கு வந்து குழந்தையின் சிறப்பைக் கண்டு மகிழ்ந்து வாழ்த்திச் சென்றனர். குழந்தைக்குச் சுவேதவனப் பெருமாள் என்று பெயரிட்டனர். இவ்வாறு கருதுபவர் கா.சுப்பிரமணிய பிள்ளையாவார்.
 2. அச்சுதக் களப்பாளர் மனைவியார் திருவெண்காட்டில் கருவுற்றார். கரு முதிரத்தொடங்கியதும் பெண்ணாகடம் சென்று சேர்ந்தார். பெண்ணாகடத்தில் குழந்தை பிறந்தது. பெண்ணாகடத்தில் பெயரிட்டனர் (மெய்கண்ட தேவர் சரித்தர சுருக்கம் – சிவப்பிரகாசம் – மதுரைச் சிவபிரகாசர் உரை பக்கம் 27)
 3. அச்சுதக் களப்பாளர் மனைவியார் கருக்கொண்டார். இறைவன் தமக்குச் செய்த அருள்திறத்தை நினைந்து வியந்து பல காலம் வணங்கி, அங்கிருந்தும் புறப்பட்டுத் தமதூர்க்குச் செல்லாமல், தம் மனைவியாரின் தாய்வீட்டுக்கே அவரை அழைத்துச் செல்லும் பொருட்டு, அச்சுதக் களப்பாளர் மனைவியாருடன் திருவெண்ணெய் நல்லூரே போய்ச் சேர்ந்தார். தலைப்பிள்ளைப் பேற்றிற்குத் தாய்வீடு செல்வதே தமிழ்நாட்டு மகளிர்க்குள் வழ்க்கமாயிருத்தலின், அச்சுதக் களப்பாளரும் அவ்வழக்கப்படியே தம் மனைவியாரை அவர்தம் தாய்வீட்டிற்கு அழைத்தேகினார் என்க.

சிலர் கருதுமாறு, மிகப் பெருஞ் செல்வரான திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்பபிள்ளை, அச்சுதக் களப்பாளரின் மனைவியோடு உடன் பிறந்தவரானால், இவ்விருவரும் அவரது இல்லத்தில் எத்துணை வளத்துடன் இருந்தவராகல் வேண்டுமென்பதை யாங்கூறல் வேண்டா. அம்மையார் பத்தாந் திங்களில் ஓர் அழகிய ஆண்மகனை ஈன்றனர். திருவெண்காட்டிறைவர் திருவருளால் அம்மகவு பிறந்தமைபற்றி அதற்குத் திருவெண்காடன் அல்லது சுவேதவனன் என்று பெயரமைத்தார்கள்; வெண்காடன் என்பது தமிழ்ப் பெயர். சுவேதவனன் என்பது அதற்கு நேரான வடமொழிப் பெயர். வெண்மையைச் சுவேதம் என்றும், காட்டை வனம் என்றும் வடவர் வழங்குவர். மெய்கண்ட தேவருக்குச் “சுவேதவனன்” என்னும் பெயர் போந்த காரணம் இங்ஙனமாதல் கண்டுகொள்க. (சிவஞானபோத ஆராய்ச்சி – மறைமலை அடிகள், பக்கம் 244).

 1. அச்சுதக்களப்பாளர், மனைவியாரும் திருவெண்காட்டில் முக்குளநீராடி வழிபாடு செய்துவந்தனர். மனைவியார் கருப்பவதியாகி ஓர் ஆண் பிள்ளையைப் பெற்றெடுத்தனர். குழந்தைக்குக் சுவேதவனப் பெருமாள் என்ற திருநாமம் சூட்டப்பட்டது. இக்குழந்தை பெண்ணாகடத்தில் தந்தையார் இல்லத்திலும், அருமையாக வளர்ந்துவந்தது (ம.பாலசுப்பிரமணியம் – மெய்கண்டார் வரலாறு – சிவஞானமாபாடியம் பக்கம் 23)

திருவாரூர்ச் சாமிநாத தேசிகர் பாடிய ‘சைவ சந்தானாச்சாரியார் புராணம்’ என்னும் நூலில் மெய்கண்டார் வரலாறு பலவாறாகப் பாடப்பட்டுள்ளது. அந்நூலின் அடிப்படையிலேயே பலரும் மெய்கண்டார் வரலாற்றை எழுதியுள்ளனர். புராணம் உண்மைச் செய்திகளை உள்ளவாறு கூறுவதுமுண்டு. சில இடங்களில் புராணச் சுவைக்காக மாற்றியும் பாடுவதுண்டு. தமிழ் நாட்டில் மக்கட் பழக்கவழக்கங்கள், பண்பாடு, சமுதாய அமைப்பு, உறவினர் உரிமைகள், முதலியவற்றில் பல மரபுகள் உண்டு. பெண் ஒருத்தி கருவுறும்போது தாய்வீட்டுக்கு அழைத்துச் செல்வதென்பது சிறந்த பண்பாட்டு மரபாகும். கருவுற்ற காலத்தில் தாய்வீட்டில் இருக்கும்போது மனமகிழும் சூழ்நிலை உருவாகும். பெண்ணுக்குத் தாயிடமே பலவற்றைச் சொல்லும் இயற்கைக் குணம் இயல்பாக அமைந்திருக்கும். மற்றவர்களைக் காட்டிலும் கருவுற்ற பெண்ணை நன்கு கவனித்துக்கொள்வாள். கருவுற்ற காலத்தில் கடைசிச் சில மாதங்களில் தாய்வீட்டில் தங்கியிருத்தல் தமிழர் பண்பாட்டு மரபாகும். குழந்தை பிறந்த பின் சில திங்கள் கழித்தே கணவன் வீட்டுக்கு அழைத்துச்செல்வதும் வழக்கத்தில் உள்ளதே.

மெகண்டார் திருவெண்ணெய்நல்லூரில் தோன்றினார் என்பதற்கு அகச்சான்றுகள்:

மெய்கண்டாரின் மாணாக்கர் அருள்நந்தி சிவாச்சாரியார் மெய்கண்டாரைக் குறிப்பிடும் போதெல்லாம் திருவெணெய் நல்லூருடன் தொடர்புபடுத்திக் குறிப்பிட்டுள்ளார்.

 1. கண்ணகன் ஞாலத்துக் கதிரவன் தானென
  வெண்ணெய்த் தோன்றிய மெய்கண்ட தேவ
  (இருபா இருபஃது – 2)2. வெண்ணெய்த் தோன்றி நண்ணியுள் புகுந்து
  (இருபா இருபஃது – 6)

என இரண்டு இடங்களில் வெண்ணையில் தோன்றியதாகவே அருணந்தி சிவாச்சாரியார் குறிப்பிட்டுள்ளார். மதுரைச் சிவப்பிரகாசரும் உரையில் திருவெண்ணெய் நல்லூரில் தோன்றியருளியதாகவே குறிப்பிட்டுள்ளார்.

 1. சிவஞானபோதம் சிறப்புப் பாயிரம்“உயர்சிவ ஞானபோதம் உரைத்தோன்
  பெண்ணைப் புனல்சூழ் வெண்ணெய்ச் சுவேதவனன்
  பொய்கண் டகன்ற மெய்கண்ட தேவன்”
  என்று குறிப்பிடுகிறது.

சிவஞான முனிவர் இப்பகுதிக்கு உரை எழுதம் போது திருவெண்ணெய் நல்லூரில் அவதரித்து அருளிய சுவேதவனப் பெருமாள் என்னும் பிள்ளைத் திருநாமம் உடையான் என்றே உரைவகுத்துள்ளார்.

 1. “விண்டமலர்ப் பொழில்புடை சூழ் வெண்ணெய் மேவு
  மெய்கண்ட தேவன்மிகு சைவ நாதன்
  (சிவஞான சித்தியார் பரபக்கம் பாயிரம்)
  5. மின்னமர் பொழில் சூழ் வெண்ணெய்
  மேவிவாழ் மெய்கண்டான்
  (சிவஞான சித்தியார் சுபக்கப் பாயிரம்)

எனச் சித்தியாரிலும் திருவெண்ணெய் நல்லூரோடு மெய்கண்டார் சேர்த்துக் கூறப்பட்டுள்ளார். என்வே, மெய்கண்டார் அவதரித்த ஊர் திருவெண்ணெய் நல்லூர் ஆகும். வேறு சாத்திர நூல்களில் மெய்கண்டாரைப் பெண்ணாகடம், திருவெண்காடு ஆகிய ஊர்களோடு சேர்த்துக் கூறப்படவில்லை.

ஞானகுரு உபதேசம்

திருவெண்ணெய் நல்லூரில் குழந்தை வளர்ந்துவரும் போது இரண்டாண்டு முடிவுற்று, மூன்றாம் ஆண்டு தொடங்கியது. கயிலாயத்திலிருந்து பரஞ்சோதி முனிவர் வான் வழியாகத் தெற்கு நோக்கிச் சென்றார். குழந்தை வீதியில் விளையாடிக் கொண்டிருந்த இடத்தை அடைந்தபோது முனிவருடைய வான்வழிச் செலவு தடைப்பட்டது. உடனே முனிவர் நடைபெறுப்போவதை உணர்ந்து பூமியில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைக்கு உபதேசம் செய்தார். குழந்தைக்குத் தம் ஞானகுருவான சத்தியஞானதரிசினிகள் என்பதனைத் தமிழில் மெய்கண்டார் எனத் தமிழ் மரபுக்கேற்ப மாற்றியமைத்து வழங்கினார் சைவசித்தாந்தக் கொள்கைகள் தமிழகத்தில் நிலைபெற்று விளங்குமாறு நூல் ஒன்றைச் செய்யுமாறு உரைத்து விட்டு முனிவர் தம் பயணத்தைத் தொடங்கினார்.

“பின்னர்க் குழந்தையாகிய மெய்கண்டார் தாம் வழிபடுகின்ற திருவெணெய் நல்லூர்ச் சிவாலயத்திலுள்ள பொல்லாப் பிள்ளையார் சந்நிதியில் சென்றிருந்து ஞானநிட்டை கூடிச் சிவானுபவம் பெற்று, அதன் பயனாக ஏது திருட்டாந்தங்களோடு சிவஞான போதம் என்ற சைவசித்தாந்த சாத்திரத்தைத் தமிழ் மொழியில் முதன் முதலாகச் செய்தார் என்று ஆராய்ச்சிப் பேரறிஞர் மு.அருணாச்சலம் குறிப்பிட்டுள்ளார்.

மெய்கண்டாரும் சித்தாந்த உண்மைகளைப் பலருக்கும் போதித்துவந்தார். பலரும் இவரிடம் வந்து சைவசமய உண்மைப் பொருள்களைத் தெரிந்துகொள்ள முயன்றனர்.

அருள்நந்தியாரை ஆணவத்தின் வடிவமென்று சுட்டி இருப்பாரா?

அருள்நந்தி சிவாச்சாரியார் திருவெணெய் நல்லூரில் இருந்த தம் மாணாக்கர்களைக் காணும்பொருட்டு துறையூரிலிருந்து திருவெணெய் நல்லூர் வந்து சேர்ந்தார் மாணாக்கர், வீதி ஒப்பனை செய்து ஞானகுருவைச் சிறப்பாக வரவேற்றனர். மாணாக்கர் பலரும் அவரைக் கண்டு வணங்கி வாழ்த்துப் பெற்றுச் சென்றனர். அக்காலத்தே பெண்ணாகடத்து வாழ்ந்தவரும் தம்முடைய மாணாக்கருமான அச்சுதக்களப்பாளருக்கு மகனாகத் தோன்றிய மெய்கண்டார் தம்மை வந்து காணாமையைத் தெரிந்துகொண்டார் மெய்கண்டார் சைவசித்தாந்தத்தைச் சிறப்பாகச் சொல்வதைக் கேள்விப்பட்டு வியப்புற்றார். எனினும், தம்மை வந்து காணாத்தால் உள்ளத்தே அழுக்காறு தோன்றிற்று, உடனே மெய்கண்டார் சைவசித்தாந்தம் சொல்லும் இடத்திற்குச் சென்றார். இவரங்குச் சென்றதபோது மெய்கண்டார் மாணக்கரோடு ஆணவமலத்தைப் பற்றி உரையாடிக்கொண்டிருந்தார். இவர் சென்றதை மெய்கண்டார் கண்டுகொள்ளவில்லை. அழுக்காற்றால் உள்ளம் வெதும்பிக் கோபமுற்று “ஆணவத்தின் சொரூபம் யாது”? என்று மெய்கண்டாரைக் கேட்டார். அவர் உடனே எவ்விதத் தடையுமின்றி முகமலர்ந்து புன்முறுவல் செய்து தம் வலக்கைச் சுட்டுவிரல் நீட்டிச் சகலாகம் பண்டிதரையே சுட்டிக் காட்டினார்.

உண்மையுணர்ந்த சகலாகம பண்டிதர் கீழே விழுந்து வணங்கி, மெய்கண்டாரைக் குருவாக ஏற்றுக் கொண்டார் என்று சைவ சந்தானாச்சாரியார் புராணம் குறிப்பிடுகிறது. இது ஒரு பொய்க்கதையாகும். வேறு எங்கும் இதற்கு ஆதாரமில்லை. ஔவை.சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள், “அருணந்தி சிவாச்சாரியாருடைய அழகிய ஞான உரைகளை நாம் இன்று படிக்கின்றோம், பயன் துய்க்கின்றோம். அவற்றை நினைக்கும் போது இவ்வரலாற்றுக் குறிப்பு மெய்ம்மையோடு படாத பொய்க் குறிப்பு என்று நமது உள்ளத்தில் நன்கு தோன்றுகிறது” என்று குறிப்பிடுகிறார்.

மெய்கண்டார் மாணாக்கர்

மெய்கண்டார்க்கு நாற்பத்தொன்பது மாணாக்கர் இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர். தலையாய மாணக்கர் அருணந்தி சிவாச்சாரியார் ஆவார். ,மற்றொரு மாணாக்கர் மனவாசகம் கடந்தாராவார். அருணந்தி சிவாச்சாரியார் சிவஞானபோதத்திற்கு விளக்கமாகச் சிவஞான சித்தியார் என்னும் நூலைச் செய்துள்ளார். அருணந்தி சிவாச்சாரியாரும் மெய்கண்டாரை வினவும் முறையில் இருபா இருபஃது என்ற நூலைப் பாடியுள்ளார். சிவஞான போதத்தைச் செய்து, சைவத்திற்குப் பெருமை சேர்ந்த மெய்கண்டார் ஓர் ஐப்பசித் திங்கள் சுவாதி நட்சத்திரத்தன்று இறைவன் திருவடியடைந்தார்.

2.மெய்கண்டார் காலம்

மெய்கண்டார் சிவஞான போதத்தைச் செய்து உபதேசித்து வருகையில் தமிழ்நாடெங்கும் அவர் புகழ் பரவியது. திருவண்ணாமலையில் அக்காலத்தில் கோளகிமடமொன்று செல்வாக்குப் பெற்றிருந்தது. மெய்கண்டார் மடத்தின் தலைவராக இருந்து சைவ சித்தாந்தத்தைப் போதித்து வந்தார். செல்வர்பலர் மெய்கண்டாரிடம் சைவசித்தாந்தம் கேட்டுச் சிறப்புற்றனர். அவர்களில் ஊருடைய பெருமாள் என்பவரும் ஒருவர். அடுத்தது வலியவேளார் என்றும் அவருக்கு பெயருண்டு. திருவண்ணாமலைக்கு அண்மையில் மாத்தூர் என்று ஓர் ஊருண்டு. அவ்வூர் திருவண்ணாமலைக்கு தேவதானமான மாத்தூரில் கோயிலாரிடம் ஆணைபெற்றுப் புதிதாக ஏரி ஒன்றை வெட்டினார். அதற்குத் தம் ஞான குருவான மெய்கண்டார் பெயரில் மெய்கண்ட தேவப் புத்தேரி என்று பெயரிட்டார். இந்த ஏரியின் கீழ்ப் பகுதியில் அவ்வேளாளரே சிவன் கோயில் ஒன்றையும் கட்டி, அதற்கு மெய்கண்டீச்சுரம் என்றும் பெயரிட்டார். மெய்கண்டாருடைய சிறப்பையும் மாணாக்கர் சிவத்தொண்டையும் கண்ட கோயிலார் அவ்வேரியின் கீழுள்ள நிலங்களை மெய்கண்டீச்சுரம் உடைய பெருமானுக்குத் தேவதானமாக விடவேண்டும் என்று எண்ணி, அக்கால அரசனிடம் வேண்டினர். அக்காலத்தில் ஆட்சி செய்த சோழ மன்னன் திரிபுவன சக்கரவர்த்திகள் மூன்றாம் இராசராசன் ஆவான். அரசனும் மனம் மகிழ்ந்து மாத்தூருக்கு இராசராசநல்லூர் என்று பெயரிட்டு ஆணை வழங்கினான்.

“ஸ்வஸ்தி ஸ்ரீதிரிபுவனச் சக்ரவத்திகள் ஸ்ரீ ராசராச தேவர்க்கு யாண்டு 16 ஆவது இஷபநாயிற்று இருபத்தெட்டாந்தியதியும் சனிக்கிழமையும் பெற்று மிருக சீரிடத்து நாள் உடையார் திருவண்ணாமலை உடைய நாயனார் கோயில் சீமாகேஸ்வரக் கண்கானி செய்வார்களும் தேவர்கன்மி கோயில் கணக்கனும், திருவெணெய் நல்லூருடையான் மெய்கண்ட தேவன் ஊருடைய பெருமாளான அடுத்தது வலிய வேளாளார்க்குக் கல்வெட்டிக் கொடுத்த பரிசாவது………….. இவ்விராசராச நல்லூரில் எழுந்தருளுவிக்கின்ற உடையார் மெய்கண்டீசுரமுடைய நாயனார்க்குப் பூசைக்கும் அமுதுபடிக்கும் மூன்றில் என்று தேவதானமாகவும்…………………………….. இப்படிச் சம்மதித்துக் கல்வெட்டிக் கொடுத்தோம் இவ்வாணையோம். இது பன்மாஹோஸ்வர ரஷை” என்பது கல்வெட்டாகும். இக்கல்வெட்டு மூன்றாம் இராசராசனுடைய 16 ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டாகும். மூன்றாம் இராசராசன் கி.பி. 1216 முதல் 1256 வரை ஆட்சி செய்த சோழ மன்னனாவான். இக்கல்வெட்டின் காலம் 1216 + 16 = 1232 ஆகும்.

மெய்கண்டாருக்குப் பின் அருணந்தி சிவாச்சாரியார், அவர் மாணாக்கர் மறைஞான சம்பந்தர், அவர் மாணாக்கர் உமாபதி சிவாச்சாரியார் ஆவார். உமாபதி சிவாச்சாரியார் சங்கற்ப நிராகரணம் என்ற நூலை அருளிய காலம், “ஏழஞ்சு இருநூறு எடுத்த ஆயிரம் வாழும் நற்சகம்” எனக் குறிப்பிடப் பெறுகிறது. இது சகம் 1235 ஆகும். சக ஆண்டோடு 78ஐக் கூட்டினால் கி.பி ஆண்டு வரும். எனவே 1235+78 = 1313. இவ்வாண்டு சங்கற்ப நிராகரணம் பாடிய காலமாகும். உமாபதி சிவாச்சாரியார்க்கு மூன்று தலைமுறை முற்பட்டவர் மெய்கண்டார். எனவே 75 ஆண்டுக்கு ஏறக்குறைய முற்பட்டவர் ஆவார். 1313 – 75 = 1238, 1238 ஐ ஓட்டிய காலம் மெய்கண்டார் காலமாக இருக்கலாம். கல்வெட்டுக் கூறும் 1232ம் இதற்குப் பக்கத்தில் உள்ளது. எனவே கி.பி. 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி மெய்கண்டார் காலமாகலாம்.

து.அ. கோபிநாத ராயரே முதன் முதலாகச் சாசனம் கூறியபடி மெய்கண்டார் 1232ல் வாழ்ந்தார் என்று எழுதினார். இவர் கூற்றைத் தனிப்பட்டுப் பின்னர் ஒருவரும் ஆராயாமலே ஏற்றுக் கொண்டார்கள். அதன் பயனே இச்சந்தானசாரியார் 13ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று கருதுகின்ற மரபு ஏற்பட்டது என்பது மு.அருணாசலம் அவர்கள் கருத்தாகும்.

களப்பாளரைப் பற்றிய கருத்து

மெய்கண்டாரின் தந்தையார் அச்சுதக்களப்பாளர். தமிழ்நாவலர் சரிதையில் அச்சுதக்களப்பாளர் ஒருவர் குறிப்பிடப் பெறுகிறார். அவர் தில்லையில் வாழ்ந்தவர், பிறந்தவர், இருவரும் வெவ்வேறானவர், களப்பிரர் வேறு, களப்பாளர் வேறு, களப்பிரர் தமிழகத்திலில் கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கும் 6 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட இருண்ட காலத்தில் வாழ்ந்த ஓரினத்தவர். அவர்கள் தமிழ்ப்பண்பாட்டையும் சமயத்தையும் சிதைத்தவர் ஆவர். பண்டைக்காலத்தில் வாழ்ந்த மழவர், வாணவர் முதலியோர்களை வென்றவர்களை மழவராயர், வாணராயர் எனப் பெயரிட்டு அழைத்தனர். களப்பிரரை வென்றவரைக் களப்பாளராயர் என அக்காலத்து வழங்கினர். தொடக்க காலத்தில் இச்சிறப்புப் பெயர் வெற்றி பெற்ற சிலருக்கே இருந்தது. காலஞ்செல்லச் செல்லத் தந்தையின் சிறப்பு மகனுக்கும் வழி வந்தோர்க்கும் வருகின்ற முறையில் களப்பாளராயர் குடிப்பெயராக அமைந்தது.

“களப்பாளராயர் என்ற பெயர் கொண்ட பலரும் தமிழ் வேளாண் மக்களே ஆவர்” என்பவர் ஔவை சு.துரைசாமிப் பிள்ளையவர்கள். அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான கூற்றுவ நாயனார் களந்தை என்ற ஊரில் வாழ்ந்த களப்பாள மரபைச் சேர்ந்தவராவார். முதற் குலோத்துங்கன் காலத்தில் தொண்டை நாட்டு நெற்குன்றம் என்ற ஊரில் அரையன் நெற்குன்றங் கிழார் கருவுள் நாயகரானா களப்பாளராயர் ஒருவர் இருந்ததைக் கல்வெட்டால் அறிய முடிகிறது. இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் கங்கை கொண்ட சோழக் களப்பாளராயர் ஒருவர் இருந்துள்ளார். கொங்குச் சோழர் வீர ராசேந்திரன் காலத்தில் காடுவெட்டிக் கண்ணன் களப்பாளராயன் பற்றியச் செய்தி கண்ணபுரக் கல்வெட்டால் காணப்படுகிறது. பிற்காலத்தில் விசயநகரப் பேரரசுக் காலத்தில் களப்பாளராயர் பெயரில் பலர் இருந்துள்ளனர். இத்தகைய வேளாளர் மரபில் தோன்றிய அச்சுதக்களப்பாளரும் வேளாள மரபினரே ஆவர்.

3.சிவஞானபோதம்

சிவஞானபோதம் தமிழ் முதல் நூலே

சிவஞான போதம் தமிழில் தோன்றிய முதல் நூலாகும். பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, மறைமலை அடிகளார், கா.சுப்பிரமணிய பிள்ளை முதலியோர் ஆராய்ந்து தமிழில் தோன்றிய முதல் நூலே என்று உறுதி செய்துள்ளனர். பாலசுப்பிரமணிய முதலியாரவர்கள் 120 காரணங்களைக் காட்டிச் சிவஞானபோதம் தனித்தமிழ் நூலே என்று நிறுவியுள்ளார். அவற்றுள் சில.

 1. மெய்கண்ட சாத்திரங்களில் அவற்றை எழுதிய ஆசிரியர்கள் எங்கும் சிவஞான போதத்திற்கு முதல் நூல் இதுவென்று குறிப்பிடவில்லை.
 2. சிவஞானபோதத்திற்கு வடமொழியில் உள்ள இரௌவரவ ஆகமத்தில் பாசவிமோசனப் படலத்தில் உள்ள பன்னிரண்டு சூத்திரங்களே மூலமென்பர். சத்தியோசோதி சிவாச்சாரியார் தத்துவசங்கிரகம் என்னும் நூலை இயற்றியவர். திரிலோசன சிவாச்சாரியார் இரௌவரவ ஆகமத்திற்கு உரை எழுதியவர். அகோர சிவாச்சாரியார் ஆகமத்தின் பல பகுதிகளை மேற்கோள் காட்டுவர். நீலகண்ட சிவாச்சாரியார், ஆதி சங்கராச்சாரியார் ஆகமங்கள் பலவற்றிற்கு விளக்கமும், பலவற்றை மேற்கோளாகவும் செய்தவர். இவர்களில் யாரும் பன்னிரண்டு சூத்திரங்களில் ஒன்றைக்கூடக் குறிப்பிடவில்லை.
 3. வடமொழிச் சிவஞானபோத அமைப்பிற்கும் தமிழ்ச் சிவஞானபோத அமைப்பிற்கும் வேறுபாடு உண்டு.
 4. முதல் சூத்திரம் வடமொழியில் பெண் ஆண் அலி எனக் குறிப்பிடுகின்றது. தமிழ்ச் சிவஞானபோதம் அவன், அவள், அது என்று குறிப்பிடுகின்றது.
 5. இரண்டாம் சூத்திரம் வடமொழியில் இறைவன் வியாப்தியாய் இருப்பதைக் குறிக்கிறது. தமிழ்ச் சிவஞானபோதம் கடவுள் வியாபகம், உயிர்கள் வியாப்பியம் மலங்கள் வியாப்தி என்ற கொள்கை உடையது. இவ்வாறு பல சூத்திர வேறுபாடுகள் தமிழ்ச் சிவஞானபோதம் வடமொழிச் சிவஞானபோதம் இரண்டுக்கும் மிக்குள்ளன.

“மெய்கண்ட தேவர் சிவஞான போதம் அருளிச் செய்தற்கு முன் அப்பெயர் கொண்ட நூலென்று வடமொழியிலாதல், தென்மொழியிலாதல் இருந்ததற்குச் சான்றேதுமில்லை” என்பர் மறைமலை அடிகளார். தமிழ்ச் சிவஞான போதத்தைப் பார்த்து வடமொழியில் மொழிபெயர்த்துக்கொண்டனர். தாம் மொழி பெயர்த்துக்கொண்டனர். தாம் மொழி பெயர்த்த பன்னிரண்டாம் சூத்திரத்தின் இறுதியில் “இங்ஙனமாகச் சிவஞானபோதத்தில் சைவசித்தாந்தப் பொருள் முடிவை அறிந்து கொள்க” என்ற பொருளில் “ஏவம் வித்யாச் சிவஞான போதே சைவார்த்தி நிர்ணயம்” என்ற வடமொழிப் பகுதி அமைந்துள்ளது. தமிழ்ச் சிவஞான போதம் “ஆலயந்தானும் அரனெனத் தொழுமே” என்று முடிகிறது. “இத்தகையவற்றை உற்று நோக்குங்கால் அவ்வடமொழிச் சூத்திரங்கள் பன்னிரண்டும் தமிழ்ச்சிவஞான போதச் சூத்திரங்கள் பன்னிரண்டன் மொழி பெயர்ப்பாதல் புலனாகா நிற்கும்” என்று மறைமலை அடிகள் ஆய்ந்து முடிவு செய்துள்ளார்.

தொல்காப்பியம், இறையனார் களவியல், சங்க இலக்கியங்கள், திருமுறைகள் ஆகியவற்றில் காணப்பெறும் சைவசித்தாந்தக் கொள்கைகளை ஒன்று திரட்டித் திருவருள் கூட்டத் தமிழ்ச் சிவஞானபோதத்தை மெய்கண்டார் இயற்றியுள்ளார்.

மெய்கண்டார் மரபு

இறைவன் நந்தி எம்பெருமானுக்குத் தத்துவப் பொருள்களை உபதேசித்தார். நந்தியெம்பெருமான் சனற்குமாரருக்கு உபதேசித்தார். சனற்குமாரர் சத்தியஞானதர்சினிகளுக்கு உபதேசித்தார். சத்தியஞானதரிசினியிடம் பரஞ்சோதி முனிவர் உபதேசம் பெற்றார். இவர்கள் நல்வரும் கயிலை மலையிங்கண் தொடர்ந்து உபதேசம் பெற்றதால் அகச் சந்தானம் என அழைக்கப் பெற்றனர்.

பரஞ்சோதி முனிவர் திருவெண்ணெய் நல்லூரில் சுவேதவனப் பெருமானுக்குச் சிவஞானத்தை உபதேசித்தார். தம் ஞானகுருவான சத்தியஞான தரிசினிகள் என்ற பெயரைத் தமிழகத்திற்கேற்ப மெய்கண்டார் என்று மாற்றிச் சுவேதவனப் பெருமானுக்கு இட்டு வழங்கினார். இதுமுதல் மெய்கண்டார் என வழங்கப்பட்டது. மெய்கண்டாருக்கு மாணாக்கர் பலர் இருந்தாலும் அருள் நந்தி சிவாச்சாரியாரே சந்தன மரபில் மெய்கண்டாரின் மாணாக்கராக வழங்கப்பெறுகிறார். அருள்நந்தி சிவாச்சாரியார் மறைஞான சம்பந்தருக்கு உபதேசம் செய்தார். மறைஞான சம்பந்தரிடம் தில்லை வாழ் அந்தணரான உமாபதி சிவாச்சாரியார் உபதேசம் பெற்றார். உமாபதி சிவாச்சாரியார் சிவப்பிரகாசம், திருவருட்பயன் முதலிய எட்டுச் சாத்திர நூல்களை எழுதினார்.

1. மெய்கண்டார்
2. அருள்நந்தி சிவாச்சாரியார்
3. மறைஞானசம்பந்தர்
4. உமாபதி சிவாச்சாரியார்

ஆகிய நால்வரும் புறச் சந்தானம் என வழங்கப்படுகின்றனர். நிலவுலகில் மக்களுக்குப் பயன்படும் வகையில் சந்தானகுரவராக விளங்கியதால் புறச்சந்தான குரவர் என வழங்கப் பெற்றனர்.

சிவஞானபோதம் நூல் உரைகள்

சிவஞான போதத்திற்கு விளக்கமாக அருள்நந்தி சிவாச்சாரியார், சிவஞான சித்தியார் என்ற நூலைப் பொருள்விளக்க முறையில் பாடல் வாயிலாக விரிவான அமைப்பு முறையைத் தந்துள்ளார். பாண்டிப் பெருமாள் எழுதிய உரையே சிவஞான போதத்திற்குத் தோன்றிய உரைவடிவான முதல் உரையாகும். சிவஞான முனிவர் பேருரை, சிற்றுரை என்ற இருவகை உரைகளையும் எழுதியுள்ளார். தென்னிந்திய மொழிகளிலேயே மாபாடியம் என வழங்கிய பேருரை சிவஞானபோதத்திற்குத்தான் தமிழில் தோன்றியது. ஆதலால், திராவிட மாபாடியம் என்று பெயர் பெற்றது. சிவஞான போதக் கருத்துக்கள் பற்றிய விளக்கம் உரைகள் இந்நூலில் சிவஞான முனிவரின் சிற்றுரை பேருரைகளை ஒட்டியே அமைக்கப்பட்டுள்ளன.

***************************************

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.