சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார்  உரை – பகுதி எட்டு

ஏழாம் நூற்பா உரை

நூற்பா :

 “யாவையும் சூனியம் சத்துஎதிர் ஆகலின்
      சத்தே அறியாது, அசத்துஇலது அறியாது
      இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா”   (சிவஞான போதம்-7)

உரை :

சத்து, அசத்து எத்தகையன என்பதை முன்பு அறிந்தோம். மாறாத, நிலையான பொருள் சத்து. மாறும் தன்மையுடைய பொருள் அசத்து. பதியாகிய இறைவன் சத்து எனப்பெறுவான்.

பாசங்களாகிய உலகப் பொருள்கள் அசத்து ஆகும். பதி சத்து, பாசம் அசத்து என்றால் பசுவாகிய உயிர் எத்தகையது என்ற வினா எழும். பசுவின் தன்மை இத்தகையது என்பதே இப்பகுதி ஆகும்.

சிவசத்தாகிய பதியின் முன்னிலையில் அசத்தாகிய பாசப்பொருள்கள் எதிர்ப்பட்டுத் தனியே விளங்கித் தோன்றா. ஆதலால் சத்தாகிய பதி தன்னெதிரில் விளங்கித் தோன்றாத பாசப்பொருள்களை அறிந்து அனுபவியாது. பாசம் அறிவில்லாதது ஆதலால் நிலையான பதியை அறிந்து அனுபவியாது.

இவ்வாறு பதியும், பாசமும் ஒன்றையொன்று அறியாது என்பதனால் அவ்விரண்டையும் அறியும் அறிவு உடைய பொருள் ஒன்று உண்டு என்பது தெரிய வருகிறது.

முப்பொருள்களுள் சத்தாகிய பதியும், அசத்தாகிய பாசமும் அறியா என விலக்கப்பட்டதால் எஞ்சியிருப்பது பசுவாகிய உயிரே ஆகும். எஞ்சிய முறையில் பாரிசேட அளவையில் பசுவே அவ்விரண்டையும் அறியும் என்பதாயிற்று.

நிலையுடைய பொருளாகிய சத்தையும், நிலையிலாத பொருளாகிய அசத்தையும் அறியும் உரிமை பசுவுக்கு இருத்தலால் சதசத்து என்று கூறுவது சைவ சித்தாந்த மரபாகும்.

உலகப் பொருள்கள் நமக்கு வேறாக எதிரில் தோன்றுகின்றன. அதனால் இது குடம், இது ஆடை, இது மரம் என்று நாம் சுட்டி அறிகின்றோம். பதியின் பெருநிறைவுள் (வியாபகத்துள்) அடங்கி (வியாப்பியம்) எல்லாப் பொருள்களும் உள்ளன. எனவே தனித்தனியாகச் சுட்டி அறிய வேண்டிய நிலை பதிக்கு இல்லை. நாம் சுட்டி அறிந்த பொருளை அனுபவிக்கும் போது அவ்வனுபவத்தில் மூழ்கி விடுகிறோம். தேனின் இனிப்பை நுகரும்போது அதன் சுவையுள் மூழ்கிவிடுகிறோம். ஒரு நாடகத்தைக் காணும் போது அக்காட்சியில் மூழ்கிவிடுகிறோம். அதுபோல பதி தன்னுள் எல்லாவற்றையும் அடக்கிக் கலந்து நிற்கின்றான். எல்லாவற்றையும் ஒரேசமயத்தில் ஒருங்கே அறிந்து நிற்பான். நம்மைப்போல அறியும் பொருளில் மூழ்கி நிற்றல் பதிக்கு இல்லை.

கதிரவன் முன்னிலையில் இருள் விளங்கி நிற்காது; அடங்கியே நிற்கும். அதுபோலப் பதியின் முன்னிலையில் அசத்துப் பொருள்கள் விளங்கித் தோன்றாமல் அடங்கியே நிற்கும்.

கதிரவன் முன்னிலையில் இருள் வேறாக நிற்பது இல்லை. பதியின் முன்னிலையில் அசத்துப் பொருள்கள் வேறாக நிற்காமல் வியாபகத்துள் வியாப்பியமாகவே இருக்கும்.

‘தன்னுள் வியாப்பியமான பசு, பாசங்களோடு வேற்றுமை இல்லாத முதல்வனுக்குச் சுட்டியறியக் கிடப்பது ஒன்று இல்லையாகலான் அத்தன்மையனாகிய முதல்வன் அசத்தை அறியலுறுவானாயில் சுட்டுணர்வின்றி நின்றவாறே அறிவான் அன்றி எம்மனோர் போலத் தனக்கு வேறாகச் சுட்டியறிவான் அல்லன், நன்மையில்லாத அசத்து ஞாயிற்றின் முன் இருள்போல அவன் எதிர் விளங்குதல் இல்லை’ (சிவஞானமாபாடியம்).

உடல், உடலில் உள்ள கருவிகள், உலகம், உலகப்பொருள் (தனு, கரணம், புவனம், போகங்கள்) ஆகியவையே அசத்து என்று கூறப்படுவன. இவற்றுள் உடல், உலகம், உலகப் பொருள்கள் ஆகியவை அறிவற்றவையே. கண், செவி முதலிய புறக்கருவிகள்; மனம், புத்தி முதலிய அகக்கருவிகள் அறிவுடையவை எனலாம்.

கண் காண்கின்றது, செவி கேட்கின்றது, மனம் பற்றுகின்றது, புத்தி உறுதி செய்கின்றது. எனவே அறிவற்றன – அசத்து என்று கூறமுடியாது. அக்கருவிகள் பெத்த (கட்டுண்டிருக்கும்) காலத்தில் உயிரின் கருவிகளாக ( பசுகரணங்கள்) உலகப் பொருள்களை அறியும்.

முத்திக் காலத்தில் சிவத்தைச் சார்ந்து, சிவகரணங்களாக அமைந்து சிவத்தை அறியும் என்று கூறித் தடை எழுப்புவர். அதனால் அசத்தாகிய கருவிகள் சிவத்தை அறியாது என்பது பொருந்தாது என்பர்.

பொதுநிலையில் காணும்போது கண், செவி முதலிய புறக் கருவிகளுக்கும், மனம், புத்தி முதலிய அகக் கருவிகளுக்கும் அறிவு இருப்பது போல் தோன்றும். உண்மையில் நன்றாக ஆராய்ந்து காணும்போது அக்கருவிகளுக்கு அறிவு இல்லை என்பது நன்கு தெரியும்.

உயிரின் துணையால் கருவிகள் செயல்படுகின்றன. கண் கண்டது, காது கேட்டது, மனம் பற்றியது என்று கூறும் முறை உயிரினுடைய செயல்பாட்டைக் கருவிகளின் மேல் ஏற்றிக் கூறுவதாகும். கருவிகளுக்கு எவ்விதத்திலும் தனியாக அறிவில்லை.

பாலை நிலத்தில் காணப்பெறும் கானல் நீர் அருகில் சென்றபோது பொய்யாகி விடுகின்றது. அதுபோல, ஞானாசிரியன் உபதேசம் கிடைக்காத போது கருவிகள் அறிவுடையன போலத் தோன்றும். ஞானாசிரியன் உபதேசம் வாய்க்கப் பெற்று உண்மை உணர்ந்தவர்க்குக் கருவிகளுக்கு அறிவு இல்லை என்பது தெரியவரும்.

பெத்த நிலையில் உள்ளபோது கருவிகளையே நாமாக நினைக்கின்றோம். அவையெல்லாம் அறிவற்றவை என்பதையும் அவற்றின் வேறாகிய நாம் அறிவுடையவர் என்பதையும் உணர்வதில்லை. ஞானாசிரியர் உபதேசம் பெற்று ஞானம் பெற்றவர்க்கே கருவிகளின் உண்மைநிலை தெரியவரும்.

சத்தாகிய சிவத்தையும், அசத்தாகிய உலகப் பொருள்களையும் அறிவது சத்தும் அல்லாத, அசத்தும் அல்லாத சதசத்தாகிய உயிரே ஆகும். சூரியனின் ஒளி உலகப் பொருள்கள் மேல் படுகின்றது. சூரியன் உலகப் பொருள்களைக் காண்பதில்லை. உலகப் பொருள்களும் சூரியனைக் காண்பதில்லை. இரண்டையும் கண்டு அனுபவிப்பது கண்ணே ஆகும். அதுபோலச் சத்து, அசத்து இரண்டையும் அறிவது உயிரே ஆகும்.

‘தம்முள் ஒன்றான் ஒன்று அனுபவிக்கப்படாத ஞாயிற்றையும் விடயத்தையும் அனுபவிக்கும் கண்போலும் என அநுமானம் கூறிக் காண்க’ (சிவஞானமாபாடியம்).

சத்து, அசத்து ஆகிய இருபொருள்களையும் அறிவதாயும், அவ்விரு பொருள்களால் அறிவதாயும், அவ்விரு பொருள்களிடத்தும் அது அதுவாயே நின்று அறிவதாயும் உள்ள பொருள் உயிரேயாகும்.

இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா என்பது சிவஞானபோத மேற்கோள். இருதிறன் அறிவுளது என்பதற்கு மூன்று வகையாகப் பொருள் கூறப்பெறுகின்றது.

  1. சத்து, அசத்து ஆகிய இரண்டையும் அறிவதாய் நின்ற அதுவே சத்தும், அசத்தும் அல்லாத உயிர். இரண்டையும் அறிபவன் உயிர் ஆகும்.

அறிபவன் தத்துவ உலகில் ஞாதா எனப்படுவான். கட்டுண்ட காலத்தில் (பெத்த நிலையில்) அசத்தாகிய உலகப் பொருள்கள் அறியப்படும் பொருள்கள் ஆகும். வீடுபேறு அடைந்த காலத்தில் (முத்தி நிலையில்) உயிர்க்குயிராய் நிற்கும் சத்தாகிய சிவமே அறியப்படும் பொருள் ஆகும். அறியப்படும் பொருள் தத்துவ உலகில் ஞேயம் எனப்படும்.

அறிபவனாகிய உயிர் தன் அறிவைக் கொண்டே பொருள்களை அறியும். பொருளை அறிவதற்கு உயிரின் அறிவே கருவியாகும். அறிதற்குரிய உயிரின் அறிவு ஞானம் எனப்படும்.

அறியும் தொழில் நடைபெறுவதற்கு அறிபவன் ஞாதா, அறிவு (ஞானம்), அறியப்படும் பொருள் (ஞேயம்) ஆகிய மூன்றும் தேவை. எனவே சத்து, அசத்து ஆகிய இரண்டையும் அறிவது உயிரே ஆகும் என்பது உறுதியாயிற்று.

  1. உயிர்- சத்து, அசத்து ஆகிய இரண்டால் அறியும். சத்தாகிய சிவத்தால் அருளப்பெறும் சிவஞானத்தால் உயிர் அச்சிவத்தை அறிய முடியும். அசத்தாகிய கருவிகளைக் கொண்டே உலகியற் பொருள்களை உயிர் அறிந்து வருகின்றது.

ஐம்பொறிகள், அந்தக்கரணங்கள், சொற்கள், நூல்கள் முதலியவற்றின் துணைக் கொண்டே உலகியற்பொருள்களை உயிர் அறிகின்றது. அவையெல்லாம் அசத்தே. எனவே சத்து, அசத்து ஆகிய இரண்டால் உயிர் அறிந்து வருகின்றது என்பது புலனாகிறது.

  1. உயிர்- சத்து, அசத்து ஆகிய இரண்டிடத்தும் அறியும் அறிவு உடையது. சத்தாகிய சிவத்திடத்துத் தோய்ந்து சிவமாய் நின்று சிவயோகத்தை உயிர் அனுபவிக்கிறது. அதேபோல் அசத்தாகிய உலகியல் பொருள்களில் தோய்ந்து உலகப் பொருள்களாக இயைந்து உலகியல் இன்பத்தை உயிர் அனுபவிக்கிறது. ஆதலால் உயிர்- சத்து, அசத்து இரண்டன்பாலும் அறியும் அறிவு உடையது என்பது தெரிய வருகின்றது.

நுண்ணிதாகிய நூல்களை அறிவதாகிய உயிரே நுண்பொருளாகிய சத்து, பருப்பொருளாகிய அசத்து ஆகிய இரண்டையும் அறியும். அவ்வாறு அறியும் உயிர் சத்து, அசத்து இரண்டும் ஆகாது. அவற்றின் வேறாகும். அவ்விரண்டையும் அறியும் உயிர் தன்னை அறியுமோ? அறியாதோ? என்ற வினா வரும்.

உயிர் தன்னை அறியும் என்றால்- சத்தை அறிதல், அசத்தை அறிதல் ஆகியவற்றுடன் தன்னையும் அறியும்போது மூன்றையும் அறியும் என்றாகும். இருதிறனை அறியும் என்பது பொருந்தாது ஆகிவிடும்.

ஆதலால் உயிர் தன்னை அறியாது என்று கூறினால் அறியப்படாத பொருள் இல்பொருளாய்- சூனியம் என்று ஆகும். வேறு எவ்வாறு கூறுவது? என்ற நிலை ஏற்படும்.

சத்து, அசத்து ஆகிய இரண்டும் தனிப்பொருள்களாகத் தோன்றி வேறாக விளங்கி நிற்கும். அவற்றைப் போல உயிர் தனிப்பொருளாக விளங்கி நிற்காது.

எங்கும் உயிர் தனித்து நிற்பது இல்லை. சத்து, அசத்து ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைப் பற்றியே நிற்கும்.

கேவல நிலையில் உயிர் ஆணவ மலத்தைப் பற்றி நின்றது. சகலத்தில் மாயாகாரியமாகிய உடல், கருவிகளைப் பற்றி நிற்கின்றது. சுத்தநிலை – முத்தியில் சிவத்தைப் பற்றியே நிற்கும். எந்நிலையிலும் உயிர் தனித்து நில்லாததால், தன்னைத் தனியே அறிவதில்லை.

எனினும் உயிர் தன்னை அறியாமல் போகாது. மலரிடத்துள்ள மணம் அம்மலருக்கு வேறாகத் தனித்துத் தோன்றுவதில்லை. தோன்றாமலும் இல்லை. அம்மலரை மோந்து பார்க்கும்போது மணம் மலருக்குள் அடங்கித் தோன்றுகிறது. அதுபோல உயிர் சத்து, அசத்து ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் அடங்கி அதன் வண்ணமாகவே தன்னை அறியும்.

உடலுக்கு ஒரு பிணி வந்தால் ஒருவித மயக்கம் உண்டாகின்றது. உரிய மருந்து கொடுத்தால் மயக்கம் நீங்குகின்றது, தெளிவு ஏற்படுகின்றது. அதேபோலப் பசி வந்தபோது ஒருவித மயக்கம் உண்டாகின்றது. உணவு உண்டபோது பசி நீங்கித் தெளிவு உண்டாகின்றது. சங்க இலக்கியங்களில் பசியைப் பசிப் பிணி என்றும், பசி நீங்க உணவு தரும் வள்ளலைப் பசிப்பிணி மருத்துவன் என்றும் குறிப்பிடும் முறையைக் காணலாம்.

     “பாரகம் அடங்கலும் பசிப்பிணி யறுகென
      ஆதிரை இட்டனள் ஆருயிர் மருந்து

என்று மணிமேகலை ஆதிரை அமுதசுரபியில் உணவு இட்டதைக் குறிப்பிடுகின்றது.

உயிர் அறிவை விளக்குவதற்கு வேண்டிய கருவிகள் இல்லாதபோது அறிய மாட்டாமல் மயக்கத்தை அடைகின்றது. அறிதற்குரிய கருவிகள் துணையாக இருக்கும்போது மயக்கம் நீங்கித் தெளிவு பெற்றும் வருகின்றது.

அறியாமையைப் பசிநோயாகவும், அறியாமையை நீக்கும் கருவிகளை உணவாகிய மருந்தாகவும் மெய்கண்டார் குறிப்பிட்டுள்ளார். உணவு உண்டபோது பசி நீங்கி விடுகின்றது. அதுபோலக் கருவிகள் துணையால் அறியும்போது அறியாமை நீங்கி விடுகின்றது.

உண்டு சில நேரம் ஆனதும் மீண்டும் பசி வந்து விடுகின்றது. அதுபோலக் கருவிகள் மடங்கிச் செயல்படாதபோது மீண்டும் அறியாமை ஏற்படுகின்றது. இவ்வாறு உயிர் அறியாமையையும், அறிவையும் மாறி மாறிப் பெற்று வருகின்றது. எக்காலத்தும் எல்லாவற்றையும் ஒருங்கே அறியும் சத்தின் அறிவைப் போலச் சுதந்திர அறிவு உயிர்க்கு இல்லை.

அசத்தின் தன்மை உயிர்க்கு உண்டா? என்ற தடை ஏற்படும். அறிவில்லாமல் வினை செய்ய இயலாது. உயிர்தான் அறிந்து வினைகளைச் செய்தன. அவற்றின் பயன்களை உயிர்தான் அனுபவிக்க வேண்டும்.

அசத்துப் பொருள்கள் அறிவற்றன. அவை வினைப்பயன்களை அறிந்து அனுபவிக்க மாட்டா. அறிந்து அனுபவிப்பது உயிரே. எனவே உயிர் அசத்தின் தன்மையை என்றும் பெறாது.

சத்தாகிய சிவத்தின் அறிவு எக்காலத்தும் ஒரே இயல்பாய் நிலைபெற்று விளங்கும். அதுவே மெய்ஞ்ஞானம் என்று வழங்கப்படும். அஞ்ஞானமாகிய ஆணவம் எக்காலத்தும் அறிவற்ற அசத்து ஆகும். உயிர் சிற்றறிவு உடையது. பாசமாகிய ஆணவம் பருப்பொருள் ஆகும். அது சிற்றறிவு உடைய உயிரைப் பற்றுமே அல்லாமல் மெய்ஞ்ஞானமாகிய சிவத்தைப் பற்றாது.

கடல், கடல்நீர், கடல் நீரில் கலந்த உப்பு ஆகியவை அனாதி காலந்தொட்டே உள்ளவை. உப்பு- கடலில் உள்ள நீரை மட்டும் பற்றும். கடலைப் பற்றாது. உப்பு நீரில் கரையும் தன்மையுடையது. எனவே நீரை மட்டும் பற்றியது. அதுபோல ஆணவம் சதசத்தாகிய உயிரைப் பற்றுமே அல்லாமல் சத்தாகிய சிவத்தைப் பற்றாது.

பதியாகிய சிவம் என்று உண்டோ, அன்றே பசுவாகிய உயிரும் உண்டு. பசுவைப் பற்றிய பாசமும் அன்றே உண்டு. எனவே பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள்கள் என்றும் உள்ளவை ஆகும். எதிலிருந்தும் எதுவும் தோன்றவில்லை. எந்த ஒன்றும் எந்த ஒன்றையும் தோற்றுவிக்கவில்லை. முப்பொருள்களும் அனாதியானவை.

     “யாவையும் சூனியம் சத்துஎதிர் ஆகலின்
      சத்தே அறியாது, அசத்துஇலது அறியாது
      இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா”   (சிவஞான போதம்-7)

  • To be continued.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.