சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார்  உரை – பகுதி ஏழு

ஆறாம் நூற்பா உரை

நூற்பா :

  “உணர் உருஅசத்து எனின், உணராது இன்மையின்
      இருதிறன் அல்லது சிவசத்தாம் என
      இரண்டு வகையின் இசைக்குமன் உலகே”   (சிவஞான போதம்-6)

உரை :

தத்துவ உலகில் சத்து, அசத்து என இரு சொற்கள் அடிக்கடி வழங்கப் பெறும். இரு சொற்களுக்கும் மற்றைய தத்துவத்தார் சொல்லும் பொருள் வேறு; சைவ சித்தாந்தம் சொல்லும் பொருள் வேறு. இந்தியத் தத்துவங்கள் அனைத்தும் சத்து என்பதற்கு உள்ள பொருள் என்றே கூறுகின்றன.

எவ்வித மாற்றமும் அடையாமல் எக்காலத்தும் ஒரே தன்மையுடையதாய் உள்ள பொருளையே சத்து என்று சைவ சித்தாந்தம் சிறப்பித்துக் கூறுகின்றது. அம்முறையில் பதிப்பொருளாகிய இறைவன் ஒருவனே சத்து என்பதற்கு உரியவன் ஆவான்.

மற்றைய தத்துவத்தார் இப்பொருளையே அசத்து என்று கூறுவர். தோன்றுதல், வளர்தல், நிற்றல், தேய்தல், அழிதல் முதலிய மாற்றங்களுக்கு உரிய பொருள்களே சைவ சித்தாந்தத்தில் அசத்து எனப்படும். ஆணவம், கன்மம், மாயை ஆகிய பாசப் பொருள்களே மாற்றங்களுக்கு உரியன. ஆதலால் அவையே அசத்து எனப்படும்.

உயிர்களின் அறிவுக்குத் துணையாக உள்ளவன் இறைவன். அவ்விறைவன் அளவைகளால் அறியப் பெறும் பொருளா? அறியப் பெறாத பொருளா? என்பது வினா. ‘அறிவுறும் பொருளோ ஈசன் அறிவுறாதவனோ’ – சிவஞான சித்தியார்.

நம் கருவிகளால் அறியப்பெறும் பொருள்கள் எல்லாம் தோன்றி நின்று அழிவனவேயாகும். ஆதலால் அவை அசத்து ஆகும். நம் கருவிகளால் இறைவன் அறியப் பெறும் பொருள் என்றால் அவனும் உலகப் பொருள்களைப் போல அழிபொருளாகி அசத்து ஆவான். ஆதலால் நம் கருவிகளால் அறியப் பெறாதவன் இறைவன் ஆவான்.

இனி, இறைவன் ஒரு வகையாலும் அறியப் பெறாதவன் என்றால் அவனால் உயிர்களுக்கு எவ்விதப் பயனும் இல்லை. எவ்வகையாலும் அறியப் பெறாத பொருள் முயல் கொம்பு போல இல்பொருளாகிவிடும்.

அவ்விரு வகையும் இன்றி ஒருவிதத்தில் பாசஞானம், பசுஞானங்களால் அறியப் பெறாத சிவமாகவும், ஒருவிதத்தில் பதிஞானம் ஒன்றால் அறியப் பெறும் சத்தாகவும் இறைவன் இருப்பான்.

மெய்யுணர்ந்தவர்கள் இரு வகையானும் இறைவன் சிவசத்தே என்று கூறுவார்கள். ஒரு வகையால் அறியப் பெறாதவன், மற்றொரு வகையால் அறியக் கூடியவன் என்று கூறுதல் முன்பின் முரண் (மாறுபாடு) போலத் தோன்றும்.

ஆகாயத்தில் நம் கண்களுக்குத் தெரியாத விண்மீன்கள் எண்ணற்றவை உள்ளன. சிறந்த தொலைநோக்கி வழியாகக் காணும்போது அவற்றைக் காணலாம். நம் புறக்கண்களுக்கு அவை தெரியவில்லை. தொலைநோக்கி வழியாகக் காணும்போது அவை தெரிகின்றன. நம்முடைய ஐம்பொறிகள் முதலிய கருவிகள் காலம், இடம் என்ற எல்லைக்கு உட்பட்டன. காலம், இடம் ஆகிய எல்லைக்கு உட்பட்ட அழியக் கூடிய பொருள்களையே அவை அறிய முடியும். காலம், இடம் கடந்து எங்கும் கலந்த பொருளை அவற்றால் அறிய முடியாது.

எங்கும் பரந்திருக்கும் இறைவனை அறிவதற்கு எங்கும் பரந்திருக்கும் சிவஞானமே துணையாகும். ஒளிமயமான சூரியனைக் காண்பதற்கு அதன் ஒளியே துணை செய்யும். அதுபோலப் பதியைக் காட்டுவது அதன் அறிவாகிய பதிஞானமே ஆகும்.

‘அவன் அருளாலே அவன்தாள் வணங்கி’ என்பது திருவாசகம். ஆதலால் பாசஞானம், பசுஞானம் ஆகியவற்றால் அறியாத நிலையும் பதிஞானத்தால் அறியும் நிலையும் உண்டாயின.

உடல், கருவி, உலகம், நுகர் பொருள்கள் ஆகியவை மாயையாகிய பாசப் பொருள்கள். பாசமாகிய கருவிகளைக் கொண்டு பாசமாகிய உலகப் பொருள்களை அறியும் அறிவு பாச அறிவு அல்லது பாச ஞானம் எனப்படும்.

கண்களுக்கு விளக்குப் போலக் கருவிகள் உலகப் பொருள்களை அறிவதற்குத் துணை செய்கின்றன. அக்கருவிகளே அறிவதில்லை. கருவிகளுக்கு வேறாக அறியும் தன்மையுடைய உயிர் உள்ளது. அவ்வுயிரால் அறியும் அறிவு உயிர் அறிவு அல்லது பசுஞானம் எனப்படும். பதியைப் பற்றி அறிந்துகொள்ளப் பயன்பெறும் திருவருள் ஞானமே பதிஞானம் அல்லது சிவஞானம் எனப்படும்.

உலகப் பொருள்கள் அனைத்தும் உள்ளன போலத் தோன்றிப் பின் அழிந்து விடுகின்றன. உள்ளன என்ற நிலையைத் தோற்றுவித்துக் காணக் கூடிய பொருள்கள் விரைவிலேயே இல்லன என்ற நிலையைக் காட்டி அழிந்து விடுகின்றன.

எனவே பாச ஞானம், பசு ஞானங்களால் அறியப் பெற்ற விளக்கமான பொருள்கள் அனைத்தும் அழிந்து விளக்கம் அற்றவை ஆகிவிடும் என்ற நிலை உண்டாகின்றது. அறிவினால் அறியப்பட்ட சுட்டு அசத்து என்பது சிவஞானபோத மேற்கோள்.

  1. உலகம், அறியப் பெறும் பொருளே ஆகும். அதுபோல இறைவனும் அறியப் பெறும் பொருளே என்பர் சிலர்.

அவ்வாறாயின் உலகம் போல இறைவனும் அழிவானோ என்ற ஐயம் உண்டாகும்.

  1. சுட்டி அறியப் பெறும் பொருளும் அழியாத நிலையான பொருளே – ஆதலால் இறைவனும் அழியாத பொருளே என்பர் மற்றொரு சாரார்.

சுட்டி அறியப் பெறும் உலகப் பொருள்கள் எல்லாம் ஒரு காலத்தில் காணப்பட்டாலும்

பிறிதொரு காலத்தில் அழியும். அப்பொருள்கள் நீரில் எழுதப் பெறும் எழுத்தும், கனவும், கானல் நீரும் போல அதிவேகமாக அழிந்துவிடும். ஆதலால் எல்லாப் பொருள்களும் நிலையுடையன என்று கூற முடியாது.

இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன். ஆதலின் மற்றைய உலகியற் பொருள் போல இவன்தான் இறைவன் என்று சுட்டி உணரப்படாதவன் என்று அவ்விருவர் கருத்துக்களும் மறுக்கப்பட்டன.

நம்மால் அறியப் பெறும் பொருள் அசத்து. அறிவுக்கு எட்டாதது இல்பொருள். இவ்விரண்டு தன்மைகளுமின்றிப் பாசஞானம், பசுஞானங்களுக்கு அப்பாற்பட்டதாய், பதிஞானத்திற்கு விளங்கித் தோன்றுவதாய் உள்ள முதற் பொருளே சத்தாகிய சிவம் ஆகும். 1. வாக்கு மனங்களுக்கு அப்பாற்பட்டது. 2. பதிஞானத்தால் விளங்கித் தோன்றுவது என்ற இரண்டு தன்மைகள் சத்தாகிய சிவத்திற்கு உள்ளன.

இறைவன் வாக்கு, மனம் கடந்தவன் என்பது பொருந்தும். விளங்கித் தோன்றுவன் என்பது பொருந்தாது என்று மாயாவாதிகள் தடை எழுப்பினர்.

ஒருவாற்றாலும் அறியப்படாத பொருள் உண்டு என்று கூறுவது பொருந்தாது. ஆதலால் இறைவன் திருவருளில் அழுந்தியறியும் மெய்யுணர்வால் அறியப் பெறுவான். அவ்வாறு அறியும் போது விளங்கித் தோன்றுவான் என்று அவர் கருத்து மறுக்கப்பட்டது.

அருளாலே மெய்ப்பொருளைக் காணும் விதியுடையேன் என்று காரைக்காலம்மையாரும்,

‘அவன் அருளே கண்ணாகக் காணின் அல்லால்

இப்படியன் இந்நறத்தன் இவ்வண்ணத்தன்

இவன் இறைவன் என்று எழுதிக்காட்ட ஒண்ணாது’

என்று திருநாவுக்கரசரும் பாடியுள்ளமை சான்றாகும்.

நியாயம், வைசேடிகம் ஆகிய தத்துவங்கள் திருக்கவாதம் என்று அழைக்கப் பெறும். நியாய மதத்தினர் நையாயிகர் எனப்படுவர். இறைவன் விளங்கித் தோன்றுவன் என்பது பொருந்தும்; வாக்கு, மனங்களைக் கடந்தவன் என்பது பொருந்தாது என்பர் நையாயிகர்.

உயிர், மனம் முதலிய கருவிகளைக் கூடிய போது அறிவு உடையதாகிறது. பிற பொருள்களை அறிவதைப் போலவே மெய்ப் பொருளாகிய பதியை மனம் முதலிய கருவிகளைக் கொண்டறியும் வாக்கு மனங்களைக் கடந்தவன் என்பது ஏலாது என்பர்.

அறியப்பெறும் மனம் முதலிய கருவிகள் எல்லாம் அசத்தே. கருவிகளுள் ஒன்றேனும் இறைவனை உணராது, ஏனைய பொருள்களைப் போலவே இறைவனையும் கருவிகளால் அறியலாம் என்றால், ஏனைய பொருள்களைப் போலவே வேறானதாகவும் அழியக் கூடியதாகவும் இறைவன் ஆகிவிடுவான்.

இறைவன் வேறாக இல்லை. உயிர்க்குயிராய்க் கலந்தே உள்ளான். அவனுள் அடங்கி நின்று அவனருளால் அறியலாம். எனவே வாக்கு மனங்களைக் கடந்தவனே இறைவன். ‘மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன்’ – திருவாசகம். (மாற்றம் – வாக்கு).

பதஞ்சலி யோகத்தைப் பின்பற்றுவோர் பாதஞ்சலர் எனப்படுவர். தியானம் முதலிய பாவனைகளால் இறைவன் அறியக்கூடியவனே என்பர். யோக நூல் பாவனை நால் வகைப்படும்.

  1. இறைவன் மனம் முதலிய கருவிகளோடு சேர்ந்து நின்று பாவிக்கப் பெறுவது என்றால், உயிர் அறிவினால் அறியக் கூடிய சுட்டுப் பொருளாகி அசத்து ஆகிவிடுவான்.
  1. கருவிகளோடு சேராமல் நின்று கருவிகளிடமிருந்து நீங்கிப் பாவனையைக் கடந்து பாவிக்கப்படுவது என்றால் கருவிகள் நீங்கியபோது எதனையும் அறிய முடியாது. ஆதலால் இறைவனும் அறிய முடியாத பொருளாகிப் பயன்படாமல்போய் விடுவான்.
  1. கருவிகளோடு கூடுதல், கூடாமை என்ற இரு வகையுமில்லாமல் உறுதியாகச் சொல்ல முடியாத அநிர்வசனம் என்று பாவிக்கலாம் என்றால், இறைவன் ஒன்றுமில்லாத சூனியப் பொருளாவான்.
  1. பாவனைக்கு எய்தாப் பொருளை எய்தியதாகக் கொண்டு பாவிக்கலாம் என்றால், அவ்வாறு பாவிப்பது போலிப் பாவனையாய்ப் பயனற்றதாகிவிடும், அதனால் எவ்விதப் பயனுமில்லை.

1) கருவிகளோடு கூடிப் பாவித்தல், 2) கருவிகளோடு கூடாது பாவித்தல், 3) இரண்டு வகையும் இல்லாமல் பாவித்தல், 4) பசித்தவன் உண்டதாக நினைத்துக் கொண்டு பொய்யாகப் பாவித்தல் எனப் பாவித்தல் நால் வகைப்படும்.

நால்வகைப் பாவித்தலும் தவறு. நால்வகைப் பாவித்தலுக்கும் வாராமை பற்றி இறைவன் பாழ்ப்பொருள் (சூனியம்) ஆகமாட்டான். இறைவனை அவன் திருவருள் துணைக் கொண்டே பாவிக்க வேண்டும், அப்போது விளங்கித் தோன்றுவான்.

சைவத்தின் உட்பிரிவுகளில் அகச்சமயங்களுள் ஒன்று சிவசமவாத சைவம். முத்தி நிலையில் உயிர் சிவனுடன் சமமாக நிற்கும் என்ற கொள்கை உடையவர். பாசத்தை நீங்கி முத்தியடைந்த உயிர் சிவத்துடன் சமமாகிவிடும்.

பாசத்தின் நீங்கிய உயிரின் ஞானம் பதிஞானத்துடன் சமமாக இருக்கும். அந்நிலையில் உயிர் தன்னுடைய ஞானத்தாலேயே சிவனை உணர்ந்து கொள்ளும். இறைஞானம் என்னும் பதிஞானம் கொண்டு அறிய வேண்டுவதில்லை என்பது அவர்கள் கூறும் தடை.

உயிர் சிவனை அறிவதற்கு அவ்வுயிருக்கு வேறாக இறைவன் இல்லை. இறைவன் உயிரின் அறிவுக்கு அறிவாய் உள்ளே இருப்பான். உயிரின் அறிவால் இறைவனை அறிய முடியாது கண்ணொளியுடன் கலந்து நிற்கும் உயிரைக் கண் காணாதவாறு போல உயிருடன் கலந்து நிற்கும் இறைவனை உயிர் அறிவு அறிவதில்லை.

எனவே, இறைவன் எந்நிலையிலும் உயிர் அறிவால் அறியப்படாதவனே. முத்திநிலையிலும் உயிர் அறிவு இறைவன் அறிவைத் துணைக் கொண்டே அறியும்.

உயிரின் அறிவுக்குள் அறிவாகி இறைவன் நிற்பான் என்றால், ஓர் அறிவுக்குள் மற்றொரு அறிவு இருக்க முடியுமா? என்ற ஐயம் எழும்.

உயிரின் அறிவு சிற்றறிவு, பருமையானது. இறைவன் அறிவு நுண்ணறிவு, ஞானமயமானது. பருப்பொருளாகிய நீரில் நுண் பொருளாகிய உப்புக் கலந்திருந்தல் போல் இறைவனுடைய நுண்ணறிவு உயிரின் பருப்பொருளாகிய அறிவுக்குள் கலந்திருக்கும்.

‘அறிவுக்கு அறிவாகி’ – குமரகுருபரர்.

‘அறிவினுள்ளே அறிவுதன்னை’ – சிவஞான சித்தியார்.

அகச் சமயத்துள் மற்றொரு பிரிவினர் சிவாத்துவித சைவர். பாசத்தின் நீங்கிச் சிவனையடைந்த உயிர் முத்தியில் சிவனுடன் ஒன்றாகிவிடும். அறிவதும் அறியப்படுவதும் அங்கு இல்லை. அதனால் முத்தியில் உயிர் சிவனை அவனருளால் அறிந்து நிற்கும் என்பது பொருந்தாது என்பர்.

மாயாவாதிகள் குணமில்லாமல் அறிவு வடிவானவன் என்ற கருத்தில் நிர்க்குணப்பிரமம் என்பர். சிவாத்துவித சைவர் அவ்வாறு கூறாமல், பல மங்கல குணங்களை உடையவன் சிவன் என்பர்.

முத்தியில் உயிர் சிவத்துடன் ஒன்றாகி விடும் என்றால், மங்கல குணங்களை அனுபவிக்கிற உயிராகிய அறிவுப் பொருளும் வேறாக இருக்க வேண்டும் அல்லவா?

அவ்வாறு உயிர் வேறாக இருக்கும் என்றால், முத்தியில் இரண்டறக் கலத்தல் என்பது இல்லையாகிவிடும் என்று தடை எழுப்புவர்.

உயிர், உலகப் பொருள்களை அறிவதைப் போலச் சிவத்தை அறிவதில்லை. உலகப் பொருள்கள் சுட்டியறியப் பெறும் பொருளாக உள்ளன. பதியாகிய சிவன் உயிருக்கு வேறாகச் சுட்டியறியப் பெறும் பொருள் அல்லன். உயிர்க்குயிராய்க் கலந்து நிற்கின்றான்.

அறிகின்ற உயிரும் சிவமாய் இருந்தே அறியும். முத்தியிலும் உயிர் சிவத்துடன் கலந்து நின்றே சிவத்தை அனுபவிக்கும்.

‘நண்ணரிய சிவானந்த வடிவே ஆகி அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்ட அரவு இருந்தார். ’ (பெரிய புராணம்).

     “உணர் உருஅசத்து எனின், உணராது இன்மையின்
      இருதிறன் அல்லது சிவசத்தாம் என
      இரண்டு வகையின் இசைக்குமன் உலகே”   (சிவஞான போதம்-6)

உணர் உரு எனின் அசத்து, உணராது எனின் இன்மையின் என்று கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்.

  • To be continued.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.