சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார்  உரை – பகுதி ஆறு

ஐந்தாம் நூற்பா உரை

நூற்பா :

விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்கு
      அளந்தறிந்து அறியா, ஆங்கவை போலத்
      தாம்தம் உணர்வின் தமி யருள் 
      காந்தம் கண்ட பசாசத் தவையே”   (சிவஞான போதம்-5)

உரை :

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை ஐம்பொறிகள் எனப்படும். அறிகருவிகள் – ஞானேந்திரியங்கள் என்றும் வழங்கப் பெறும். மெய் உணர்வை உணரும். வாய் சுவையை உணரும். கண் காட்சியைக் காணும். செவி ஓசையை அறியும். அவ்வாறு அறிந்தாலும் அறிகின்ற தம்மை அறியமாட்டா. உயிர் உடனிருந்து செலுத்தினால் மட்டும் அவை செயல்படும்.

ஐம்பொறிகள் தம்மையும் தம்மைச் செலுத்துகின்ற உயிரையும் அறிவதில்லை. அவற்றைப் போல உயிரும் தன்னையும் அறிவதில்லை, தன்னைச் செயல்படுத்துகின்ற திருவருளையும் அறிவதில்லை.

உயிர்க்குத் துணை செய்கின்ற அகக்கருவிகள், புறக்கருவிகள் ஆகியவை அறிவற்ற சடப் பொருட்கள். உயிர் சிற்றறிவு உடையது, உணர்த்த உணர்வது. திருவருள் துணையால் அனைத்தையும் செய்து அவற்றின் பயன்களை நுகரும் இயல்புடையது உயிர்.

திருவருள் இயக்க இயங்கும் உயிரின் இயல்பு காந்தத்தின் முன் நின்ற இரும்பு இயங்குவது போல ஆகும். காந்தக் கல் போன்றவன் இறைவன். காந்தத்தின் ஈர்ப்பு ஆற்றல் போன்றது திருவருட்சத்தி.

காந்தம் தன் ஆற்றலால் இரும்பை ஈர்ப்பது போல் இறைவன் தன் திருவருட் சத்தியால் உயிரினங்களைச் செயல்படுத்துகின்றான். காந்தம் இரும்பை ஈர்த்தாலும் எவ்வித அசைவுமின்றி நிற்கும். அதுபோல இறைவனும் உயிரினங்களைச் செயல்படுத்தினாலும் எவ்வித மாற்றமும் அடைவது இல்லை.

தாமரை இலையில் உள்ள தண்ணீர் போல உயிர் எவ்விதப் பற்றும் இல்லாமல் இருக்கும். அவ்வாறு இருக்கும் உயிரின் முன்னிலையில் புத்தி தத்துவம் பல்வேறு நிலைகளை – அவத்தைகளை அடையும். உயிர் பலவேறு நிலைகளை – அவத்தைகளை அடையும் என்பது பொருந்தாது என்பது சாங்கியர் கூறும் தடை.

அரசன் தன்னுடைய அத்தாணி மண்டபத்தில் வீற்றிருந்து தன் கீழ்ச் செயல் புரிவோரை அந்தந்தப் பணிக்கு ஏவுவான். அதுபோல உயிரும் நனவில் செயல்படும் போது புருவ நடுவிலிருந்து மெய், வாய், கண் முதலிய பொறிகளை அந்தந்தப் புலனுக்கு அனுப்பும்.

அரசனால் ஏவப்பெற்ற ஏவலர்கள் தத்தமக்குரிய செயல்களை மட்டும் செய்வர். அதற்கு மேல் செல்லமாட்டார்கள். அதுபோல் உயிரால் செயல்படும் பொறிகளும் தத்தமக்குரிய புலன்களை மட்டும் நுகரும். ஐம்பொறிகளுடன் உயிர் ஒற்றுமைப்பட்டு நின்று அறிவதனால் உயிரினாலே ஐம்பொறிகள் செயல்படுகின்றன. ஐம்பொறிகளும் தாமே செயல்படா.

உயிர் ஐம்பொறிகள் வழியாக அறியாதாயின் ஒன்றையும் அறியாது. அறியும் தன்மையுள்ள உயிர், பொறிகளுடன் ஒன்றி நின்று செயல்படா விட்டால் கண்கள் காணமாட்டா, செவிகள் கேட்கமாட்டா. ஏனைய பொறிகளும் அவ்வாறே ஆகும். ஆக, உயிரும் பொறிகளும் ஒன்றை மற்றொன்று அறிந்து செயல்படுவது இன்றியமையாதது என்பது புலனாகின்றது. ஆதலால் புத்தி தனியே செயல்படாது.

மனம், புத்தி முதலிய அகக்கருவிகள், மெய், வாய், கண் முதலிய புறக்கருவிகள் ஆகியவை அறிவற்ற சடப்பொருள்கள் ஆகும். ஆதலால் அவற்றின் செயல்பாட்டிற்கு அறிவுடைய உயிரின் துணை அவற்றிற்குத் தேவைப்பட்டது. ஆனால், உயிர் அறிவுடையது என்பது எல்லாரும் ஏற்றுக் கொண்ட கொள்கை.

அத்தகைய அறிவுடைய உயிர்க்கு அறிந்து செயல்படுவதற்கு மற்றொரு துணையாகிய இறைவன் திருவருள் வேண்டா, வேண்டப்படும் என்றால், உயிர்க்குத் துணை செய்யும் இறைவனுக்கு மற்றொரு துணை தேவைப்படும். இவ்வாறே சென்றால் வரம்பின்றிச் செல்லும் என்ற குற்றத்திற்குக் காரணம் ஆகுமே என்ற தடை எழுப்பப்படுகின்றது.

ஐம்பொறிகள் அறிவற்றன, உயிர் அறிவுடையது, இவ்வாறு வேற்றுமை இருந்தாலும் உயிர் தன்னையும் தனக்குத் துணையாக உள்ள திருவருளையும் அறிவதில்லை. பொறிகள் தம்மையும் தம்மைச் செலுத்தும் உயிரையும் அறிவதில்லை.அதுபோல உயிரும் தன்னையும் தன்னைச் செலுத்தும் திருவருளையும் அறிவதில்லை.

பொறிகளுக்கு உயிர் இன்றியமையாதது. அதுபோல உயிர்க்கு இறைவன் திருவருள் இன்றியமையாதது பொறிகள் உணர்வன உயிர்க்காகவே ஆகும். உயிர் உணர்வது தன் பொருட்டே ஆகும்.

இறைவன் உயிர்க்கு உதவுவது கருணையாலன்றித் தன்பொருட்டன்று. அனைத்துயிர்க்கும் தான் முதல்வனாக உள்ளதன்றித் தனக்கொரு முதல்வன் இல்லாதவன் இறைவன். ஆதலால் உயிர்க்கு இறைவன் திருவருள் வேண்டப்படுவது போல இறைவனுக்குப் பிறர் துணை வேண்டுவதில்லை.

இறைவன் திருவருள் என்பது சைவசித்தாந்த மரபில் மறைப்பாற்றலையே (திரோதான சத்தி) குறிக்கும். உயிர் உலகியல் அனுபவத்தில் ஈடுபடும் போது, அவற்றால் உண்டாகும் நன்மை, தீமைகளை அறிய வேண்டிய நிலை ஏற்பட்டால், உயிர் உலகியல் அனுபவத்தில் தலைப்படாது. உயிர் அனுபவித்துத்தான் மலக் குற்றங்களை நீக்க முடியும். ஆதலால் அத்தகைய நன்மை, தீமைகளை உயிர் அறியாதவாறு மறைத்தலால் திரோதான சத்தி எனப்பட்டது.

உயிர்க்கு உடல், கருவி, உலகம், நுகர்பொருள் (தனு, கரணம், புவனம், போகம்) ஆகியவை மாயை ஆகும். செய்யும் நன்மை, தீமை – நுகரும் இன்பம் துன்பம் ஆகியவை வினை (கன்மம்) ஆகும். மாயை கன்மங்களின் வழியே இவ்வாறு செயல்பட வேண்டியுள்ளதால், உயிர்க்குத் திருவருளின் துணை வேண்டப்பட்டது.

உயிர்கள் எண்ணற்றவை – கணக்கில்லாதன. அவ்வுயிர்களுக்குப் பலவாறு இறைவன் துணை செய்கின்றான். அவ்வாறு செய்வதால் இறைவனுக்கு மாறுபாடு உண்டாகாதா? என்பது தடை.

ஐம்பொறிகள் ஐம்புலன்களை நுகர்கின்றன. உயிர்களும் புலன்களை நுகர்கின்றது. எனினும் வேறுபாடு உண்டு.

ஐம்பொறிகள் உயிரால் செலுத்தப் பெறுவதனாலேயே நுகர்கின்றன. ஆதலால் நுகர்வின் பயன்கள் அவை அடைவதில்லை. மாறாக உயிர் தன் வினையினால் தன்பொருட்டாகவே நுகர்கின்றது. அதனால் நுகர்வின் பயனை உயிரே பெறுகின்றது.

அவ்வுயிரைச் செலுத்துகின்ற இறைவன் உலக அனுபவத்தைப் பெறுவதில்லை. அவன் முன்னிலையில் உலக நிகழ்வுகள் செயல்படுகின்றன.

இறைவன் எவ்வித மாற்றமும் இன்றி ஒரு தன்மையனாக உள்ளான். அவ்வாறு உள்ளதால் இறைவனைச் செம்பொருள் என்று திருவள்ளுவரும், (மாணிக்கவாசகரும் குறிப்பிட்டுள்ளனர்.)

மாறுபாடு இல்லாததே செம்பொருளாகும். மெய்கண்டார் மன்னுசிவன் என்று கூறுகிறார்.

மன்னுதல் – நிலையாய் இருத்தல்.

     “குறைவிலா மங்கல குணத்த னாகலின்
      நிறைமலம் அநாதியின் நீக்கி நிற்றலின்
      அறைகுவர் சிவனென அறிவின் மேலோர்

என்று சிவஞான முனிவர் சிவன் என்பதற்கு விளக்கம் செய்துள்ளார்.

ஒருவன் வயிற்றினுள் புழுக்கள் கிடக்கும். அப்புழுக்கள் அடைகின்ற இன்ப, துன்பங்கள் பிறப்பு இறப்புகள் முதலியவை அவனை எவ்வகையிலும் பாதிப்பதில்லை. அதுபோல அறிவுள்ள பொருள், அறிவில்லாப் பொருள் அடங்கிய உலகம் இறைவனுடைய வியாபகத்தில் அடங்கியிருந்தாலும் அவற்றை இறைவன் நுகர்வதில்லை. அவற்றால் அவன் வேறுபாடும் அடைவதில்லை என்று திருக்களிற்றுப்படியார் (செய்யுள்-87) கூறுகின்றது.

கோள்கள் (கிரகங்கள்) சூரியனிடத்திலிருந்து ஒளியைப் பெறுகின்றன. பகல் நேரத்தில் வேறாக விளங்காமல் சூரியனுடைய ஒளியில் ஒடுங்கி உடனாய் உள்ளன. அதுபோல உயிர்கள் இறைவன் துணையால் அறிவு பெறுகின்றன. கண்டும், கேட்டும், உண்டும், உயிர்த்தும், உற்றும் அறிந்து உலகப் பொருள்களை நுகர்கின்றன. அம்முறையில் நுகரும் உயிர்கள் இறைவனிடத்தில் வேறாய் நீங்கி நில்லாமல், அவனுடைய வியாபகத் தில் அடங்கி உடனாய் நிற்கின்றன.

உயிர்கள் பொருள்களைத் தாமே உணர்ந்து நுகர்வதில்லை. திருவருள் உணர்த்தவே உயிர்கள் உணரும் என்றால், எல்லா உயிர்களுக்கும் ஒரே விதமான அறிவு நிகழ வேண்டுமே? அவ்வாறு நிகழ்வதில்லை.

உயிர்களிடத்தில் பலவேறு வகையான அறிவுநிகழ்வுகள் உண்டாகின்றன. அவ்வாறாயின் இறைவன் உணர்த்துகின்ற தன்மையில் வேறுபாடு இருத்தல் வேண்டும். அவ்வாறு இருந்தால் வேண்டுதல் வேண்டாமையில்லாதான், நிருவிகாரி என்ற இயல்புகளுக்கு மாறுபாடு உண்டாகுமே என்பது தடை.

“ஞாயிற்றின் சன்னிதியில் தாமரைப்பூ ஒன்று மொக்குளாதலும், ஒன்று அலர்தலும் ஒன்று கூம்புதலும், ஒன்று வாடுதலுமாகிய பலவேறு தொழில் நிகழவும் அவ்வவற்றிற்குரிய தொழில் வேறுபாடு தன்கண் அன்றி, ஞாயிறு நின்றாங்கு நிற்றல் கண்டாம், அதுபோல முதல்வனும் விகாரமின்றி நின்றாங்கு நிற்ப அவன் சன்னிதி மாத்திரையின் ஆன்மாக்கள் தோறும் தத்தம் கன்மத்துக்கேற்ப உணர்வு பலவேறு வகைப்பட்டு நிகழ்தல் அமையும்”. – (சிவஞானமாபாடியம்).

சூரியன் முன்னிலையில் உள்ள தாமரைகளில் ஒன்று மொட்டாக உள்ளது, ஒன்று மலர்கின்றது, ஒன்று கூம்புகின்றது, ஒன்று வாடு கின்றது. இவ்வாறு பலவிதமாக நிகழ்ந்தாலும் தாமரை மலர்களிடத்தில் மாற்றத்தை உண்டாக்குகின்றது. அல்லாமல் சூரியனிடத்தில் எவ்வித மாற்றமும் உண்டாகவில்லை. அதுபோலவே இறைவன் மாற்றமின்றியிருக்க, அவன் முன்னிலையில் உயிர்கள் மாறுபாடு உடையதாகின்றன.

உயிர்களின் அறிவு விளங்குவதற்காக அகக்கருவிகள், புறக்கருவிகள் ஆகியவற்றை இறைவன் கூட்டுவித்தான். அவற்றுடன் கூடினாலும் உயிர்களுக்கு அறிவு உடனே உண்டாகாது திருவருள் கூட்டுவிக்க வேண்டும்.

உயிர்களைப் பிணைத்துள்ள கட்டுக்களை – பாசங்களை நீக்கிப் பேரின்பத்தைத் தருதல் வேண்டும் என்ற கருணை இறைவனிடத்தில் என்றும் உண்டு. அக்கருணையே அவனுடைய சத்தியாகும்.

கருணையாகிய சத்தியும் இறைவனை விட்டுத் தனியாக இல்லை. இறைவனும் அச்சத்தியை விட்டுத் தனியாக இல்லை.

சூரியன் ஒளிக்கதிருடன் வேற்றுமையின்றிச் சேர்ந்திருத்தலைப் போல இறைவன் தன் சத்தியுடன் ஒன்றாகச் சேர்ந்திருப்பான். தத்துவத்தில் தாதான்மியம் என்று இது வழங்கப் பெறும்.

     “தான்எங்குளது அங்குளது ஐயன் மாதேவி  (திருமந்திரம்)

     “அரிதரு கண்ணியாளை ஒருபாகமாக
      அருள் காரணத்தின் வருவார்  (தேவாரம்)

     “விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்கு
      அளந்தறிந்து அறியா, ஆங்கவை போலத்
      தாம்தம் உணர்வின் தமி யருள் 
      காந்தம் கண்ட பசாசத் தவையே”   (சிவஞான போதம்-5)

(விளம்பிய – எடுத்துக்கூறிய, உள்ளம் – உயிர், தமி – ஒப்பற்ற முதல்வன், பசாசம் – இரும்பு.)

  • To be continued.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.