சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார்  உரை – பகுதி ஐந்து

நான்காம் நூற்பா உர

நூற்பா :

அந்தக் கரணம் அவற்றின் ஒன்று அன்று
 அமைச்சு அரசு ஏய்ப்ப நின்று அஞ்சு அவத்தைத்தே  

(சிவஞானபோதம் நூற்பா-4)

உரை :

உடல் வேறு உயிர் வேறு – இரண்டும் சேர்ந்தே செயல்படுகின்றன. உடல் செயல்பாட்டிற்குப் பல கருவிகள் உள்ளன. புறக் கருவிகள், அகக் கருவிகள் எனக் கருவிகள் இரு வகைப்படும். மெய், வாய், கண், மூக்கு, கை, கால் முதலியன புறக் கருவிகள் ஆகும். மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகியவை அகக்கருவிகள் ஆகும்.

அகக்கருவிகளைத் தத்துவ முறையில் அந்தக்கரணங்கள் என்று அழைக்கப்பெறுவது மரபு. அந்தர் – உள்அகம்; கரணம் – கருவி, அந்தர் + கரணம் = அந்தக்கரணம். (அந்தர் + புரம் = அந்தப்புரம், அந்தர் + வாயில் = அந்தவாயில் என்று வரும்).

உடல், ஐம்பொறிகள், நுண்ணுடம்பு, பிராணவாயு முதலியன அறிவற்ற சடப்பொருள், அவை உயிர் ஆகா. அந்தக்கரணங்களாகிய மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகியவை சிறப்பு உணர்வைத் தருகின்றன. ஆகையால் அந்தக் கரணங்களே உயிர் ஆகும் என்று அந்தக்கரண ஆன்மவாதி கூறினான்.

உயிர் ஆகிய ஆன்மா அந்தக்கரணங்களாகிய மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய நான்கனுள் ஒன்றன்று. உயிர் தன்னை இயற்கையிலேயே பற்றியுள்ள ஆணவ மலமாகிய குற்றத்தினால் அறிவை இழந்து நிற்கின்றது. அதாவது, அரசன் நுட்பமான அறிவு இல்லாதிருத்தலால் ஆலோசனைத் துணைக்கு அமைச்சர்களைத் துணையாகக் செயல்படுகின்றான். அவர்கள் அறிவுத் துணையைக் கொண்டு அரசன் ஆட்சியை நடத்துவான். அதுபோல ஆன்மாவானது ஆணவ மல மறைப்பினால் அறிவின்றி நின்ற நிலையில், அந்தக்கரணங்களுடன் சேர்ந்து செயல்படுகின்றது.

அமைச்சர் செயல்பாட்டிற்கேற்ப அரசன் நிலை வேறுபடும். அதுபோல அந்தக்கரணங்களின் செயல்பாட்டிற்கேற்ப உயிர் பல்வேறு நிலையை அடையும். அவ்வாறு அடையும் நிலை அவத்தை எனப்படும்.

உயிர் அந்தக்கரணங்களைச் செயல்படுத்துகின்றது. அந்தக்கரணங்கள் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகள் வழியாக உணர்கின்றன. அந்தக் கரணங்கள் தமக்குக் கீழ் உள்ள ஐம்பொறிகளை நோக்க அறிவுடையன. ஆனால், தம்மைத் தாம் அறிய மாட்டாமையால் அறிவற்றன. உயிர் தன்கீழ் உள்ள கருவிகளை நோக்க அறிவுடையது, அறிவுடையது. ஆதலால் அந்தக்கரணங்கள் நான்கில் உயிர் ஒன்று அன்று.

உயிரால் செயல்படுத்தப்பெறும் அந்தக்கரணங்களுள் சித்தம் – ஒன்றைச் சிந்தித்து அறியும், ஆனால் நான் சிந்தித்தேன் என்று அறியமாட்டாது. மனம் – இன்னது, இது இவ்வாறு ஆகுமோ? ஆகாதோ? என்று ஒன்றை நினைத்துப் பற்றும், ஆனால் தன்னைப் பற்றி அறியாது. அகங்காரம் – அதனை இவ்வாறு இருக்கும் என்று துணிந்து முடிவு செய்வேன் என்று ஒருப்பட்டு எழுந்து செயல்படும், ஆனால் ஒருப்பட்டு எழுந்தேன் என்று தன்னை அறியாது. புத்தி – இன்னது, இது என்று நிச்சயித்து அறியும், நிச்சயித்தேன் என்று தன்னை அறியாது. ஆனால் உயிர் – சிந்தித்தேன், பற்றினேன், ஒருப்பட்டு எழுந்தேன், நிச்சயித்தேன் என்று அறியும். உயிர் தன்னை நோக்கியும், பிறவற்றை நோக்கியும் அறிவாய் உள்ள நிலையில் தம்மை நோக்க அறிவற்ற சடமாயுள்ள அந்தக் கரணங்களில் வேறாக உண்டு என்பது உறுதியாகிறது.

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய ஐம்புலன்களை ஐம்பொறிகள் அனுபவிக்கும். பொறிகள் இவ்வாறு உணர்வது வாயில் காட்சி எனப்படும். ஐம்பொறிகளால் அறியப்பெறும் ஐம்புலன்களை மனம் முதலிய அந்தக்கரணங்கள் அறிதல் மானதக் காட்சி எனப்படும். மனதில் தோன்றியவற்றை ஆன்மாவாகிய உயிர் அனுபவிக்கும். அவ்வனுபவம் தன் வேதனைக் காட்சி எனப்படும். வேதனை – அனுபவம். கடலில் தோன்றிக் கரையை அடையும் அலைபோல் உயிரில் இக்காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றியடங்கும். கடல் போல் உயிர். அலை போல் காட்சிகள்.

அலை ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ச்சியாகக் கரையை அடைவதைப் போல் மூன்று காட்சிகளும் முறையாக ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றி, உயிர் அறிவினுள் பதிந்து மறையும். மனம் முதலிய அந்தக்கரணங்கள் ஐம்புலனுக்கு வேறாதல் போல், உயிரும் மனம் முதலிய அந்தக்கரணங்களுக்கு வேறு என்பது கருத்து.

பலவாறாக உணர்கின்ற உயிர், மனம் முதலிய அந்தக்கரணங்களுக்கு வேறாக உள்ளது என்பதனை மெய்கண்டார் காலதத்துவ உவமையைக் கொண்டு விளக்கியுள்ளார்.

தத்துவங்களில் காலதத்துவம் தனிச் சிறப்பு உடையது. சூரியன், நிலா, நட்சத்திரங்கள் முதலியவற்றின் சார்பினால் காலதத்துவத்தில் பகல், இரவு, நாள், மாதம் முதலியவை உண்டாகின்றன. காலதத்துவம் சூரியன், நிலா முதலியவற்றிற்கு வேறானதே. அதுபோல உயிர், மனம் முதலிய அந்தக்கரணங்களைச் சார்ந்து பலவித உணர்வுகளை உடையதாகின்றது. எனினும் உயிர் அந்தக்கரணங்களின் வேறானதே ஆகும்.

காலதத்துவம் ஆன்மாவிற்கு உவமை, சூரியன், நிலா, நட்சத்திரங்கள் ஆகியவை மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய அந்தக் கரணங்களுக்கு உவமை. கால வேறுபாடுகள் பலவித உணர்வுகளுக்கு உவமை. சூரியன், நிலா, நட்சத்திரங்கள் காலதத்துவத்திற்கு வேறாதல் மனம், புத்தி முதலிய அந்தக்கரணங்களுக்கு ஆன்மா வேறாதலுக்கு உவமை ஆகும்.

அந்தக்கரணங்கள் அறிவற்ற சடம் ஆகும். அவற்றைச் செலுத்துவதற்கு மந்திர எழுத்துக்களும், தெய்வங்களும் உண்டு. ஓம் என்பது பிரணவ மந்திரமாகும். அதனைப் பிரிக்காமல் வழங்கியவாறே கொள்வது சமட்டிப் பிரணவம் எனப்படும். அதனையே அகரம், உகரம், மகரம், நாதம், விந்து என்று ஐந்தாகப் பிரிக்கப் பெறும்போது வியட்டிப் பிரணவம் என்று வழங்கப் பெறும்.

அகரத்திற்கு அதிதெய்வம் பிரம்மா. அகரத்தால் அகங்காரம் செலுத்தப் பெறும். உடனே அகங்காரம் இன்னது எனத் தெளிவேன் என்று ஒருப்பட்டு எழுந்து தொழிற்படும். உகரத்திற்கு அதிதெய்வம் திருமால். உகரத்தால் புத்தி செலுத்தப் பெறும். உடனே புத்தி இன்னது என்று தெளிந்து கொள்ளும். மகரத்திற்கு அதிதெய்வம் உருத்திரன். மகரத்தால் மனம் செலுத்தப் பெறும். உடனே மனம் இன்னது இது என்று சென்று பற்றும். விந்துவுக்கு அதிதெய்வம் மகேசுவரன். விந்துவில் சித்தம் செலுத்தப் பெறும். உடனே சித்தம் சிந்திக்கும். சதாசிவத்தை அதிதெய்வமாகக் கொண்டு நாதம் புருட தத்துவத்தைச் செலுத்த ஆன்மா செயல்படும்.

அறிவுடைய உயிர் அறிவற்ற அந்தக்கரணங்களோடு சேர்ந்து செயல்படுவது ஏன்? என்ற வினா எழும். ஆன்மாவாகிய உயிர் என்று உண்டோ அன்றே அதனைக் குற்றம் ஒன்று பற்றியுள்ளது. செம்பில் களிம்பு போலவும், நெல்லில் உமி போலவும் அக்குற்றம் உயிரிடத்தில் பற்றியுள்ளது. அவ்வியல்பான குற்றமே ஆணவ மலமாகும்.

மலம் என்பதற்கு அழுக்கு என்பது பொருளாகும். ஆடையின் வெண்மை நிறம் தோன்றாதவாறு அழுக்கு மறைத்திருப்பது போல உயிரினுடைய அறிவு சிறிதும் விளங்காதவாறு ஆணவமலம் மறைத்து நிற்கின்றது. உயிரிடத்தில் இயற்கையாய் இருப்பதால் சகச மலம் எனப்படும். அச்சகச மலம் நீங்கி அறிவு பெறுவதற்காக உயிர் அந்தக்கரணங்களுடன் கூட வேண்டியதாயிற்று. ஏனைய மலங்களுக்கு மூல காரணமாக இருப்பதால் ஆணவத்தை மூல மலம் என்று வழங்குவது உண்டு.

மலம் என்றாலே ஆணவ மலத்தையே குறிக்கும். ஆணவம் ஒன்றேயல்லாமல் பலவாக இல்லை. அதன் சத்திகள் எண்ணற்றன. இரவில் இருள் ஒன்றே பலருடைய கண்களையும் மறைத்து நிற்றலைப் போல் ஆணவம் ஒன்றே பல ஆற்றலால் பல உயிர்களின் அறிவை மறைத்து நிற்கின்றது.

பிற சமயத்தார் யாரும் ஆணவ மலம் உண்டு என்று கொள்வதில்லை. பிற சமயத்தாரில் சிலர் மாயை, கன்மங்களே உயிருக்கு அறியாமையைச் செய்கின்றன என்று கூறுவர். சைவ சித்தாந்தம் மட்டும் ஆணவத்தை உடன்பட்டு ஆணவத்தை நீக்கவே மாயை, கன்மங்களை இறைவன் உயிர்களுக்குக் கூட்டினான் என்றும், ஆணவம் இருள் போன்றது; மாயை ஒளி போன்றது என்றும், மாயை கன்மங்கள் உயிர்களுக்கு விளக்கத்தைத் தருவன என்றும் கூறும்.

மாயா கருவிகள் உயிரின் வினைக்கேற்ப அவ்வப்பொழுது ஒடுங்கியும், எழுச்சியுற்றும் நிற்றலால் உயிரின் அறிவும் குறைந்தும் கூடியும் நிற்கும். அதனால் உயிர்க்குப் பல நிலைகள் உண்டாகும். அமைச்சர்களுடன் சேர்ந்து ஆட்சி நடத்தும் அரசற்கு அந்தந்த நேரத்தில் பல்வேறு நிலைகள் ஏற்படும். உயிரும் அதுபோலக் கருவிகளின் கூடுதல், நீங்குதல் ஆகியவற்றால் பலவேறு நிலையை அடையும்.

ஆணவத்தால் அறியாமை அடைந்த உயிர் அந்தக்கரணங்களுடன் சேர்ந்து செயல்படும்போது பலவித நிலைகளை அடையும். அவ்வாறு அடையும் நிலைக்கு அவத்தை என்று பெயர்.

அவத்தை 1. காரணாவத்தை, 2. காரியாவத்தை என இருவகைப்படும்.

காரணாவத்தை 1. கேவல நிலை, 2. சகல நிலை, 3. சுத்த நிலை என மூவகைப்படும்.

கேவலம் – தனிமை. உயிர் ஆணவத்தோடு மட்டும் கூடித் தனிமையில் கிடக்கின்றதால் கேவல நிலை எனப் பெற்றது. அறிவுப் பொருளாகிய உயிர், அறிவே சிறிதும் இல்லாமல் தன்னையும் உணராமல் கிடக்கும். ஆணவ மலத்தில் மூழ்கிக் கிடப்பதால் கேவல நிலை எனப் பெற்றது.

ஆணவ இருளில் மூழ்கிக் கேவல நிலையில் கிடந்த உயிர்க்கு இரங்கி இறைவன் மாயையிலிருந்து உடல், கருவி, உலகம், நுகர்பொருள் ஆகியவற்றைப் படைத்துக் கொடுப்பான். இவற்றைத் தனு, கரணம், புவனம், போகம் எனக் கூறுவர். இவற்றின் துணையால் ஆணவ மல மறைப்புச் சிறிதே நீங்கப் பெற்று அறிவும் செயலும் ஓரளவு விளங்கி உலக வாழ்வில் உயிர் செயல்படும். உலக வாழ்வில் முன்செய்த வினைகளுக்கேற்ப இன்ப, துன்பங்களை அனுபவித்தும் நல்வினை, தீவினைகளைச் செய்தும் மாறி மாறி இறந்தும், பிறந்தும் உயிர் சுழன்று கொண்டே இருக்கும். இந்நிலைக்குச் சகல நிலை என்று பெயர்.

உயிர் கேவலம், சகலம் ஆகிய இரண்டையும் நீங்கி இறைவனைச் சார்ந்து பேரின்பத்தை அனுபவிக்கும் நிலை சுத்தம் எனப் பெறும். கேவலம் இருள்நிலை; இரவு போன்றது. சகலம் மருள்நிலை; பகல் போன்றது. சுத்தம் தெருள்நிலை; இரவு பகலற்ற நிலை எனப்படும்.

     “இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
      மாசறு காட்சி யவர்க்கு        (குறள்)

இருள் – கேவலம், மருள் – சகலம், இரண்டு நீங்கிய மாசறு காட்சியர்க்கு இன்பம் பயத்தல் – சுத்தம். இம்மூன்று அவத்தைகளும் பல பிறப்புக்களில் நடைபெறுவனவாகும்.

உயிர் உடலுடன் கூடி வாழும் போது நாள்தோறும் நடைபெறும் அவத்தை காரியாவத்தை எனப்படும். 1. நனவு (சாக்கிரம்), 2. கனவு (சொப்பனம்), 3. உறக்கம் (சுழுத்தி), 4. பேருறக்கம் (துரியம்), 5. உயிர்ப்படங்கல் (துரியாதீதம்) எனக் காரியாவத்தை ஐவகைப்படும்.

நனவு, கனவு முதலிய நிலைகளில் அறிவு படிப்படியாகக் குறைந்து வரும் அந்நிலையில் உயிர் சிறப்பாக நிற்கும் இடம் ஐந்தாகும். செயல்படும் கருவிகளும் குறைந்து கொண்டே வரும்.

  1. நனவு (சாக்கிர) நிலையில் புருவ நடுவில் உயிர் இருக்கும். 35 கருவிகள் செயல்படும்.

செவி, தோல், கண், நாக்கு, மூக்கு ஆகிய ஞானேந்திரியங்கள் – 5.

ஓசை, ஊறு, ஒளி, சுவை, மணம் ஆகிய புலன்கள் – 5.

வாய், கால், கை, எருவாய், கருவாய் ஆகிய தொழிற் கருவிகள் – 5.

பேச்சு, நடை, கொடை, போக்கு, இன்பம் ஆகிய தொழிற் கருவிகளின் செயல்கள் – 5.

பிராணவாயு, அபானவாயு, உதான வாயு (ஒலிக்காற்று), வியானன் (தொழிற் காற்று), சமானன் (உடல் நிலையைச் சமப்படுத்தும் காற்று), நாகன் (தும்மல் காற்று), கிருகரன் (கொட்டாவிக் காற்று), கூர்மன் (விழிக் காற்று). தனஞ்செயன் (வீங்கல் காற்று), தேவதத்தன் (இமைக் காற்று) ஆகிய வாயுக்கள் 10.

அந்தக்கரணங்கள் 4. புருடன் 1. ஆக, இம்முப்பத்தைந்து கருவிகளும் நனவு நிலையில் செயல்படும்.

  1. கனவு (சொப்பன) நிலையில் உயிர் கழுத்திலிருக்கும் போது 25 கருவிகள் செயல்படும்.

நனவு நிலையில் உள்ள ஞானேந்திரியங்கள், தொழிற் கருவிகள் ஆகிய பத்தும் நீங்க எஞ்சிய 25 கருவிகள் செயல்படும்.

  1. உறக்க (சுழுத்தி) நிலையில் உயிர் இதயத்தில் இருக்கும்போது சித்தம், பிராணவாயு, புருடன் ஆகிய மூன்றும் செயல்படும்.
  1. பேருறக்க (துரிய) நிலையில் உந்தியில் உயிர் இருக்கும்போது பிராணவாயு, புருடன் ஆகிய இரண்டு மட்டும் செயல்படும்.
  1. உயிர்ப்படங்கல் (துரியாதீத) நிலையில் மூலாதாரத்தில் புருடன் மட்டும் இருக்கும்.

இவ்வாறு மேலே இருந்து கருவிகள் குறையக் குறைய மூலாதாரத்தை அடைந்த உயிர், அறியாமையில் அழுந்தியிருக்கும். மேலே இருந்து கீழே வரவரக் கருவிகள் குறைகின்றன. இந்நிலை கீழாலவத்தை எனப்படும். மீண்டும் கீழேயிருந்து மேலே செல்லுதல் மேலாலவத்தை எனப்படும்.

காரிய அவத்தைகளைக் காரிய கேவலம் 5, காரிய சகலம் 5, காரிய சுத்தம் 5 என்று 15 ஆக்கி விரித்துக் கூறப்பெறும். இச்செயல்பாடுகள் உயிரின் பொது இலக்கணம் ஆகும்.

அந்தக்கரணங்களின் செயல்கள், அவத்தைநிலைகள் ஆகியவற்றை விரித்துக் கூறியதன் நோக்கம் தூயநினைவு, தூயசொல், தூய செயல் என்ற முறையில் உயிர் செயல்பட வேண்டும். ‘பர பரக்க வேண்டா பலகாலும் சொன்னேன்’ என்பதற்கேற்பப் பரபரப்பு நீங்கி அமைதியான வழிக்கு உயிர் செல்ல முயலும் என்பதே ஆகும்.

     “அந்தக் கரணம் அவற்றின் ஒன்று அன்று
      அமைச்சு அரசு ஏய்ப்ப நின்று அஞ்சு அவத்தைத்தே  

(சிவஞானபோதம் நூற்பா-4)

(ஏய்ப்ப – போல)

 

  • To be continued.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.