சிவஞான போதம் — ந. இரா. சென்னியப்பனார் உரை – பகுதி நான்கு

மூன்றாம் நூற்பா உரை

நூற்பா :

 “உளது இலது என்றலின், எனது உடல் என்றலின்,
      ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின், கண்படில்
      உண்டி வினைஇன்மையின், உணர்த்த உணர்தலின்
      மாயா இயந்திரதனுவினுள் ஆன்மா”         (சிவஞானபோதம் நூற்பா-3)

உரை :

உயிர்கள் செய்த வினைக்கேற்ப இறைவன் அவற்றைச் செயல்படுத்துவான் என்பதனை மெய்கண்டார் சிவஞானபோதம் இரண்டாம் நூற்பாவில் குறிப்பிட்டுள்ளார். உயிரை ஆன்மா என்பது தத்துவ மரபு. ஆன்மா உண்டு என்பதனை மூன்றாம் நூற்பாவில் நிலைநாட்டியுள்ளார். ஆன்மாவாகிய உயிர் எது? என்பதனைப் பற்றிக் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

 1. ஆன்மா என்ற ஒன்று இல்லை என்று கூறுவோர் சூனிய ஆன்மாவாதிகள்.
 1. உடம்பே ஆன்மா என்போர் தேகான்மாவாதிகள்.
 1. மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளே ஆன்மா என்பர் இந்திரிய ஆன்மாவாதிகள்.
 1. கனவில் செயல்படும் நுண்ணுடம்பே (சூக்கும தேகம்) ஆன்மா என்பர் சூக்கும ஆன்மாவாதிகள்.
 1. பிராணவாயுவே ஆன்மா என்பர் பிராணான்மவாதிகள்.
 1. சுத்த பிரமமே ஆன்மா என்பர் ஏகான்மவாதிகள்.
 1. எல்லாக் கருவிகளும் கூடிய கூட்டமே ஆன்மா என்பர் சமூக ஆன்மாவாதிகள்.

இவ்வாறு கூறும் எழுவர் கருத்துக்களையும் மறுத்துத் தனியாக ஆன்மா உளது என்று நிலைநாட்டி உள்ளார் மெய்கண்டார்.

 1. ஆன்மா சூனியம் என்று கொள்பவர் பெளத்தரில் ஒரு பிரிவினர். உடம்பில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் பகுத்து ஆய்ந்து பார்த்து ஆன்மா இன்னது என்று அறிய முடியாமையினால் ஆன்மா சூனியம் என்றனர்.

ஆன்மா இல்லை என்று கூறும் சூனிய ஆன்மாவாதிகளும் இல்லை என்று வாளா கூறாமல் உடல், பொறி முதலியவற்றையெல்லாம் முறையே இஃது ஆன்மா அன்று, இஃது ஆன்மா அன்று என்று ஒவ்வொன்றாக கழித்து அங்ஙனம் இல்லை என்று கூறும் ஓர் அறிவு உண்டல்லவா? அவ்வறிவே ஆன்மா ஆகும். (இலது என்றலின் ஆன்மா உளது).

 1. உடம்பில்தான் அறிவு நிகழ்கின்றது, அதனால் உடலையே ஆன்மா என்பர் தேகான்மவாதிகள்.

எனது வீடு, எனது மனைவி, எனது கணவன் என்பதைப் போலவே எனது கை, கால், எனது உடல் என்று கூறுகின்றோம். எனது உடல் என்று கூறும்போது உடலுக்கு வேறாக ஆன்மா உள்ளது என்பது தெரிய வருகிறது. நான் உடல் என்று யாரும் கூறுவதில்லை.

தொல்காப்பியரே ‘காலம், உலகம், உயிரே, உடம்பே… ’ என்று உயிர் வேறு, உடல் வேறு என்று குறிப்பிட்டுள்ளார். (எனது உடல் என்றலின் ஆன்மா உளது).

 1. உடம்பில் உள்ள செவி, தோல், கண், நாக்கு, மூக்கு, ஆகிய ஐம்பொறிகளே ஓசை, ஊறு, ஒளி, சுவை, மணம் ஆகியவற்றை அறிகின்றன. ஆதலால் ஐம்பொறிகளே ஆன்மா என்பர் இந்திரிய ஆன்மாவாதிகள்.

உடலில் உள்ள பொறிகளில் ஒன்று ஒன்றை மட்டுமே அறியும், மற்றொன்றை அறியாது. கண் உருவத்தை அறியும், ஆனால் கேட்கும் செயலைச் செய்யாது. காது கேட்டலைச் செய்யும், ஆனால் ஒரு பொருளின் சுவையை சுவைக்க முடியாது. ஏனைய பொறிகளும் இவ்வாறே ஆகும். ஐம்பொறிகளும் தன்னை உணரமாட்டா, தம்மைச் செயல்படுத்துகின்ற ஆன்மாவையும் அறியமாட்டா. ஐம்பொறிகளையும் செயல்படுத்துகின்ற – அனுபவிக்கின்ற ஆன்மாவானது ஐம்பொறிகளுக்கு வேறாக உள்ளது. (ஐம்புலன் அறிதலின் ஆன்மா உள்ளது).

 1. ஓசை, ஊறு, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐந்து மற்றும் அந்தக்கரணங்களாகிய மனம், புத்தி, அகங்காரம் ஆகிய மூன்று என்ற எட்டும் சேர்ந்தது நுண்ணுடம்பு (சூக்குமதேகம்) ஆகும். கனவு நிலையில் இச்சூக்கும உடலே செயல்படும். ஐம்பொறிகளையும் சூக்குமதேகம் உள்ளே இருந்து செலுத்தி அறிகின்றதாகையால் அச்சூக்கும தேகமே ஆன்மா என்பர் சூக்கும ஆன்மாவாதிகள்.

சூக்குமதேகம் ஆன்மா என்றால் கனவில் கண்டவற்றை நனவில் தெளிவாக அறிந்து கூற வேண்டும். முந்திய நாள் நடைபெற்ற நிகழ்ச்சிகளை நனவில் மறுநாள் மாறாமல் தெளிவாகக் கூறுகின்றோம். ஆனால், இரவில் கண்ட கனவு நிகழ்ச்சிகளை மறுநாள் காலையில் மறவாமல் முழுவதும் கூற முடிவதில்லை. கனவு கண்டதும் விழித்துக் கொண்டாலும் உடனே மறந்து விடுகின்றது. தெளிவாக அறிந்துகூற முடிவதில்லை. கண்ட கனவைத் தெளிவாகத் தெரிந்து கூற முடியாமைக்குக் காரணம், ஆன்மா பருஉடம்பு (தூலதேகம்), நுண்ணுடம்பு (சூக்குமதேகம்) ஆகிய இரண்டிற்கும் வேறாக உள்ளதே ஆகும்.

நனவு நிலையில் ஆன்மா பருஉடம்பில் நின்று புறத்து நிகழ்ச்சிகளை அறிந்து வருகின்றது. கனவு நிலையில் பரு உடம்பு செயலற்றுக்கிடக்க, ஆன்மா சூக்கும உடம்புடன் கூடி நின்று அகத்தே நிகழும் நிகழ்ச்சிகளை அறிந்து வருகின்றது. கனவு நீங்கி நனவுக்கு வரும்போது சூக்கும உடம்பை விட்டு நீங்கிப் பருவுடம்பிற்கு வருகின்றது. அந்த மாற்றத்தால் ஆன்மா சூக்குமதேகத்தில் இருந்து கண்டவற்றை மறந்து விடுகின்றது. தூலதேகம், சூக்குமதேகம் ஆகிய இரண்டிற்கும் வேறாகிய ஆன்மா ஒரு தேகத்தை விட்டு மற்றொரு தேகத்தைப் பற்றும்போது தேக மாற்றத்தால் மறதியைப் பெறுகின்றது. ஆதலால் ஆன்மா சூக்குமதேகத்தின் வேறாக உள்ளது என்பது புலனாகிறது. (ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உளது). ஒடுக்கம் ஐம்பொறிகளும் செயல்படாமல் ஒடுங்கி நிற்கின்ற கனவு நிலையாகும்.

 1. பிராண வாயு என்ற மூச்சுக் காற்று உடலின் உள்ளே புகுந்து தொழிற்பட்டு, உடலில் உள்ள கருவிகளைச் செயல்படுத்தி அறிந்து கொள்ளும் தன்மை உடையதாய் இருத்தலால் அப்பிராணவாயுவே ஆன்மா என்பர் பிராணான்மாவாதிகள்.

ஒடுங்கிய உறக்க நிலையில் பிராணவாயு இயங்கிக் கொண்டிருந்தாலும் இன்பத் துன்ப நுகர்ச்சியும் உடலின் தொழிற்பாடும் நிகழவில்லை. நனவில் ஏனைய கருவிகள் இயங்கும் பொழுது இன்பத் துன்ப நுகர்ச்சியும் உடலின் தொழிற்பாடும் நிகழ்கின்றன. பிராணவாயுவே ஆன்மா என்றால் நனவைப் போலவே உறக்கத்திலும் அப்பிராணவாயு இயங்கிக் கொண்டிருப்பதால் நனவில் நிகழ்கின்ற இன்பத் துன்ப நுகர்ச்சியும் உடம்பின் தொழிற்பாடும் உறக்கத்திலும் நிகழ்தல் வேண்டும். அவ்வாறு நிகழாமையால் பிராணவாயுவே ஆன்மா என்பது பொருந்தாது. (கண்படில் உண்டி, வினை இன்மையின் ஆன்மா உளது).

கண்படில் – உறக்கத்தில், உண்டி – இன்பத் துன்ப நுகர்ச்சி, வினை – உடல் தொழிற்படுதல். இன்று பலரும் பிராணவாயுவே ஆன்மா என்று கருதுகின்றனர். அக்கொள்கை மறுக்கப்பட்டுள்ளது.

 1. பருவுடம்பு, ஐம்பொறிகள், சூக்குமதேகம், பிராணவாயு ஆகியன சடப்பொருள்கள் ஆகும். அவற்றைத் தனித்தனி ஆன்மா என்று கூறுதல் பொருந்தாது. பரம்பொருள் என்னும் பிரமம் அறிவாய் உள்ளது. ஆதலால் பிரமமே ஆன்மா என்பர் ஏகான்மவாதிகள். பிரமமே ஆன்மா என்பதால் பிரமான்மவாதி என்றும் பிரமம் பேரறிவுடையது, அவ்வறிவே ஆன்மா என்பதால் விஞ்ஞான ஆன்மவாதி என்றும் வழங்கப் பெறுவர்.

ஆன்மாவானது கருவிகள் தொழிற்படாமல் அடங்கிய நிலையில் எதனையும் அறிவதில்லை. எல்லாக் கருவிகளும் கூடிய விழிப்பு நிலையில் அனைத்தையும் நன்றாக ஆன்மா அறிகின்றது. ஆனால் பிரமமோ கருவிகள் எவற்றின் துணையும் இல்லாமல் என்றும் ஒரே தன்மையாக அறிகின்றது. ஆன்மா எதனையும் தானே அறிய மாட்டாது. துணையாகிய கருவிகள் உணர்த்தவே ஆன்மா உலகப் பொருள்களை உணர்கின்றது. அறிவித்தால் அன்றி அறிய மாட்டாத ஆன்மா, எல்லாவற்றையும் தானே அறிந்து நிற்கும் பிரமத்தின் வேறாகும். (உணர்த்த உணர்தலின் ஆன்மா உளது).

உணர்த்த உணர்தலின் ஆன்மா உள்ளது என்ற கொள்கை தொல்காப்பியர் காலந்தொட்டு வரும் உண்மையாகும். “உயிர் எத்தன்மைத்து என்று வினாயவழி உணர்தல் தன்மைத்து” என்று சேனாவரையர் தொல்காப்பிய உரையில் குறிப்பிட்டுள்ளார்.

 1. உடல், ஐம்பொறி, சூக்குமதேகம், பிராணவாயு ஆகியவற்றுள் ஒவ்வொன்றே ஆன்மா என்றால் பொருந்தாது. அவற்றுள் ஒன்று குறைந்தபோது அறிவு நிகழாமையால் அவை எல்லாம் கூடியபோது அறிவு நிகழ்வதால் அவை அனைத்தும் கூடிய கூட்டமே (சமூகம்) ஆன்மா என்பர் சமூக ஆன்மவாதிகள்.

எல்லாக் கருவிகளும் சேர்ந்த கூட்டம் (சமூகம்) உடம்பு என்று பெயர் பெறுவதின்றி ஆன்மா என்று பெயர் பெறுவதில்லை. உடம்பு ஓர் இயந்திரம் போன்ற இயல்பு உடையது. உடம்பில் உள்ள கருவிகள் அந்த இயந்திரத்தினுடைய உறுப்புகள் போன்ற இயல்பின. இயந்திரத்தின் உறுப்புகள் நன்றாக இருந்தாலும் இயந்திரம் தானே இயங்காது, அவ்வியந்திரத்தை இயக்குவோன் வேறாக ஒருவன் இருந்து இயக்க வேண்டும். அதுபோல உடம்பும் கருவிகளுடன் சேர்ந்திருந்தாலும் இயக்கும் ஆன்மா வேறாக இருந்து இயக்கும் போதுதான் செயல்படும். ஆதலால் உடம்பினுள் நின்று உடம்பை இயக்கும் அறிவாகிய ஆன்மா, சடமாகிய இக்கருவிகளின் கூட்டத்திற்கு வேறாக இருத்தல் வேண்டும். (மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா உளது).

அதாவது, மாயையின் காரியங்கள் ஆகிய கருவிகளால் ஆக்கப் பெற்ற இயந்திரம் போன்ற உடலினுள்ளே அக்கருவிகளின் கூட்டத்திற்கு வேறாக ஆன்மா உள்ளது.

     “பாராதி பூதம் நீயல்லை உன்னிப்
      பார் இந்திரியம் கரணம் நீயல்லை
      ஆராய் உணர்வு நீஎன்றான் ஐயன்

‘அன்பாய் உரைத்த சொல் ஆனந்தம் தோழி’ என்று தாயுமானவரும் பூதங்களால் ஆன உடல், ஐம்பொறிகள், கருவிகள் முதலியன ஆன்மா அன்று, ஆராய்ந்தறியும் அறிவே ஆன்மா என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ் இலக்கியங்கள் மன்னுயிர், நல்லுயிர், இன்னுயிர், தொல்லுயிர் என்று குறிப்பிடுகின்றன.

காணாமரபிற்று உயிர் தொல்காப்பிய உரையில் காட்டப் பெறும் பழைய மேற்கோளாகும்.

பசுவின் மயிர் ஒன்றை நூறு கூறு செய்து, அதில் ஒரு கூறை ஆயிரம் கூறாக்கி, அதில் ஒரு கூறை நூறாயிரம் (இலட்சம்) கூறு ஆக்கினால் அதில் ஒரு கூறு ஆன்மா என்று திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.

     “மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
      கோவின் மயிர் ஒன்று நூறுடன் கூறிட்டு
      மேவிய கூறது ஆயிரம் ஆயினால் 
      ஆவியன் கூறது நூறாயிரத்தொன்றே)”  (திருமந்திரம்)

இன்றைய மருத்துவ அறிவியலில் இரத்தத்திலுள்ள அணுக்களில் நுண்ணணுக்கள் உள்ளே நாற்பதுக்கும் மேற்பட்டன உள்ளன. அவை உயிர் அணுக்கள் என்கின்றனர். திருமூலர் கூறுவது எவ்வளவு நுட்பமானது?

உயிர்க்கு ஆன்மா, பசு, சீவன், புருடன், பூமான், கிஞ்சிஞ்ஞனன், சுதந்தரவீனன், அகர்த்தா, அணு, அழியாதவன், உள்ளம், சைதன்னியன், பிரகிருதி, புத்தி, பிராணன், சதசத்து, புற்கலன் முதலிய பல பெயர்கள் உள்ளன. எல்லாப் பெயர்களும் காரணப் பெயர்களே.

உயிர்த்தலால் உயிர், வியாபகம் உடையது ஆன்மா. பச்-கட்டு; பசு-கட்டப்பட்டது. சீவித்தலால் சீவன். காலம், நியதி, கலை, வித்தை, அராகம் எனும் ஐந்தால் ஆனது புருடன். பிரகிருதி மாயை காரணமாக அமைந்த உடலுக்குத் தலைவனாதலின் பூமான், தேகத்தை உடையவன் தேகி. கிஞ்சித் – சிறிய, ஞனன் – அறிவோன்,

சிற்றறிவுடையவன் கிஞ்சிஞ்ஞனன். இறைவனுக்கு அடிமை ஆதலின் சுதந்தர ஈனன். எச்செயலுக்கும் தான் கர்த்தா அல்லன் ஆதலால் அகர்த்தா. ஆணவமலத்தால் அணுத்தன்மை படுதலின்அணு. மன்னுயிராதலின் அழியாதவன். பூதஉடல், நுண்ணுடல் முதலிய உடம்புக்குள்ளே இருத்தலின் உள்ளம். அறிவு வடிவினன் சைதன்னியன். குண தத்துவங்கள் தோன்றுவதற்குக் காரணமாக இருத்தலால் பிரகிருதி. புத்தித் தத்துவத்தைப் பொருந்தி நிற்றலால் ஆன்மா புத்தி எனப்படும். பிராணன் – உயிர், சத்தாகிய பதியுடன் சேர்ந்து சத்தாகியும், அசத்தாகிய பாசத்துடன் சேர்ந்து இருத்தலால் சதசத்து. புற்கலம் – உடம்பு, உடம்பை உடையவன் புற்கலன்.

     “உளது இலது என்றலின், எனது உடல் என்றலின்,
      ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின், கண்படில்
      உண்டி வினைஇன்மையின், உணர்த்த உணர்தலின்
      மாயா இயந்திரதனுவினுள் ஆன்மா”         (சிவஞானபோதம் நூற்பா-3)

 1. இலது என்றலின் ஆன்மா உளது.
 1. எனது உடல் என்றலின் ஆன்மா உளது.
 1. ஐம்புலன் அறிதலின் ஆன்மா உளது.
 1. ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உளது.
 1. கண்படில் உண்டி வினை இன்மையின் ஆன்மா உளது.
 1. உணர்த்த உணர்தலின் ஆன்மா உளது.
 1. மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா உளது.

இவ்வாறு மேற்சொன்னபடி நூற்பாவைப் பிரித்துக் காட்டிப் பொருள் செய்ய வேண்டும்.

 

 • To be continued.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.