சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார் உரை – பகுதி இரண்டு

நூற்பா :
     “அவன் அவள் அதுஎனும் அவை மூவினைமையின்
      தோற்றிய திதியே, ஒடுங்கி மலத்து உளதாம்
      அந்தம் ஆதி என்மனார் புலவர்

உரை :

தமிழ்மொழியில் பன்னிரண்டு என்ற எண் தனிச் சிறப்பு உடையது. தமிழில் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு. ஓராண்டுக்கு மாதங்கள் பன்னிரண்டு. சோதிடத்தில் இராசிகள் பன்னிரண்டு. தேவகுரு – வியாழ பகவான் ஒருமுறை சுழற்சிக்குப் பன்னிரண்டு ஆண்டுக் காலம். இந்தியாவில் உள்ள சோதி லிங்கங்கள் பன்னிரண்டு. சீர்காழிக்கு உரிய பெயர்கள் பன்னிரண்டு. சைவத்திருமுறைகள் பன்னிரண்டு. சிவஞானபோதம் நூற்பா பன்னிரண்டு.

வடமொழியில் சூத்திரம் தமிழ்மொழியில் நூற்பா என வழங்கப் பெறும். சைவ சித்தாந்தத்தில் கூறப்பெறும் பொருள்கள் கடவுள்(பதி), உயிர்(பசு, ஆன்மா), தளை (பாசம்) என மூன்றாகும்.

     “பதி, பசு, பாசம் எனப்பகர் மூன்றில்
      பதியினைப் போல்பசு பாசம் அனாதி

என்று திருமூலரும்,

     “சான்றவர் ஆய்ந்திடத் தக்கவாம் பொருள்
      மூன்றுள, மறையெலாம் மொழிய நின்றன
      ஆன்றதோர் தொல்பதி ஆருயிர்த் தொகை 
      வான்திகழ் தளையென வகுப்பர் அன்னவே

என்று கச்சியப்ப சிவாச்சாரியாரும் சைவ சித்தாந்தத்தின் முப்பொருள் உண்மையைக் குறிப்பிட்டுள்ளனர்.

புத்தமதத்தில் மாத்தியமிகர் என்பவர் ஒரு பிரிவினர், அடிப்படையில் ஒரு பொருளும் இல்லை என்று சூன்ய வாதம் கூறுவோர். ஒரே ஒரு பொருள் மட்டுமே உண்டு என்று கூறுவோர் வேதாந்திகள். பிரகிருதி, புருடன் என்ற இரு பொருள் உண்டு என்று கூறுவோர் சாங்கியர். சைவ சித்தாந்தம் முப்பொருள் உண்மை பேசுவது. நியாய, வைசேடிகர் மூன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் உண்டு என்ற கொள்கை உடையோர்.

மெய்கண்டார் ‘சிவஞானபோதம்’ முதல் நூற்பாவில் பதி உண்டு என்பதை நிலைநாட்டி உள்ளார். உலகப் பொருள்களை இயற்கைப் பொருள், செயற்கைப் பொருள், உயிர் உள்ள பொருள், உயிர் இல்லாப் பொருள் எனப் பலவாறாகப் பாகுபாடு செய்வது உண்டு.

தமிழ் இலக்கணத்தில் உயர்திணை, அஃறிணை என இரண்டாகக் கூறுவது மரபு. அவற்றுள் ஆண், பெண் பாகுபாடு உண்டு. உயிர் உள்ள பொருள்களில் ஆண், பெண் பாகுபாடு இருந்தாலும் அஃறிணை பலவற்றில் ஆண், பெண் பாகுபாடு இல்லை. ஆதலால் உயர்திணையை ஆண், பெண் – ஒருவன், ஒருத்தி – அவன், அவள் என்று குறிப்பிடுவது மரபு. அஃறிணையை ஒன்று அல்லது அது என்று குறிப்பிடுவதும் மரபு.

உலகம் முழுவதும் ஒருவன் என்றும், ஒருத்தி என்றும், ஒன்று என்றும் கூறப் பெறும் பாகுபாட்டில் அடங்கும். அத்தகைய உலகத் தொகுதி தோன்றுதல், நிலைபெற்றிருத்தல், ஒடுங்குதல் என்ற முத்தொழில்களை உடையது. இம்முத்தொழில்கள் தாமாகவே நடைபெறாது.

காணப்பெற்ற காரியமாகிய குடத்தைப் பார்த்து அதனைச் செய்வதற்குரிய காரணன் ஆகிய குலாலன் ஒருவன் உண்டு என்று கருதுவதைப் போலக் காணப்பெற்ற காரியமாகிய உலகத் தொகுதியைப் பார்த்து அதனைப் படைத்தற்குரிய கடவுள் ஒருவன் உண்டு என்பதனை உணர்ந்து கொள்ளலாம்.

தோன்றுதல், நிலைபெற்றிருத்தல், அழிதல் என்ற முத்தொழில்களில் உலகத் தொகுதிக்குக் கண்ணால் காணக் கூடியது நிலை பெற்றிருத்தல் மட்டும்தான். தோற்றமும், அழிவும் கண்ணால் காண முடியாதவை. உலகத் தொகுதிக்கு தோற்றமும், அழிவும் உண்டு என்பது எவ்வாறு பொருந்தும்?

தோற்றமும், அழிவும் உள்ள ஒன்றினாலே அறிய முடியும். ஒரு மரத்தைக் காண்கிறோம். தற்போதுள்ள அம்மரம் முன்பு ஒரு காலத்தில் தோன்றியிருக்க வேண்டும். பின்பு ஒரு காலத்தில் நிச்சயம் அழிவெய்தும் என்பது திண்ணம். அதனால் உள்ள ஒன்றினால் தோற்றமும், அழிவும் உண்டு என்பதை அறியலாம். தாய், தந்தையர் உள்ளனர்; அவர்களுக்கு மக்கள் தோன்றுகின்றனர்; உள்ள அவர்தம் தாய், தந்தையர் இறக்கின்றனர்.

அவ்வாறாயின் ஒன்று தோன்ற, ஒன்று இருக்க, ஒன்று அழிவதல்லாமல் ஒருங்கே தோன்றி, ஒருங்கே அழிவதை காணவில்லையே என்ற தடை உண்டாகும். கார்ப் பருவத்தில் சில உயிரினங்கள், சில செடிகள் ஒருங்கே தோன்றி, ஒருங்கே அழிவதைக் காண்கின்றோம். நிலநடுக்கம், எரிமலை, பெருவெள்ளம்(சுனாமி), போர் முதலியவற்றால் ஒருங்கே இருந்தன ஒருங்கே அழிவதைக் காண்கின்றோம்.

நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய பூதங்களால் ஆன உலகத் தொகுதியும் ஒருங்கே அழியும் என்பதை அறிந்து கொள்ளலாம். உள்ள பொருளே தோன்றி, நின்று, அழியும் என்பதை அறிந்து கொள்ளலாம். முயலுக்கு கொம்பு எக்காலத்தும் இல்லாதது. அதற்குத் தோற்றம், நிற்றல், அழிவு இல்லை. தோற்றம், நிலைபேறு, அழிதல் என்ற மூன்று இயல்புடைய உலகத் தொகுதி கடவுள் ஒருவரால் தோற்றுவிக்கப் பெற்ற உள்பொருளே ஆகும்.

     “ உலகத் தொகுதி தோற்றம், நிலை, இறுதி என்னும் முத்தொழில் உடைமை யான் ஒருவனால் தோற்றப்பட்டு நின்று உள்ளதேயாம் (சிவஞானமாபாடியம்).

சட்டசபை, பாராளுமன்றம் ஆகியன ஒருகாலத்தில் கூடுகின்றன. சிலநாட்கள் நடைபெறுகின்றன. பின் கலைந்து செல்கின்றன. இவ்வமைப்புகள் தாமே கூடுவதில்லை. ஒருவர் கூட்டக் கூட்டலும், பிரிக்கப் பிரிதலும் (கலைதலும்) நடை பெறுகின்றன. அதுபோல இவ்வுலகத் தொகுதியும் தானே தோன்றாமல், கடவுள் ஒருவனால் தோற்றுவிக்கத் தோன்றுதலும், நிற்பிக்க நிலைபெறுதலும், ஒடுங்க ஒடுங்குதலும் உடையது.

பள்ளி, கல்லூரிகளில் காலையில் மாணாக்கர்கள் சென்று கூடுகின்றனர். அங்கே ஒடுங்கிப் பயிலுகின்றனர். மாலையில் அங்கே இருந்து வெளியே வருகின்றனர். அதுபோல உலகத் தொகுதி ஒடுங்கும் போது கடவுளிடத்திலே ஒடுங்குகின்றது. மீளத் தோற்றுவிக்கும் போது அவனிடத்திலேயிருந்தே மீண்டும் தோன்றுகின்றது.

உலகத் தொகுதியை ஒடுக்கும் போது அவ்வுலகத் தொகுதி ஒடுங்கியிருப்பதற்குத் தானே இடமாதலால், கடவுளை ‘ ஒடுங்கி’ என்று மெய்கண்டார் குறிப்பிட்டுள்ளார். விடையேறி, பிறைசூடி, சுடலைப் பொடி பூசி முதலியன பெயர்ச்சொல்களே ஆகும். அதுபோல ஒடுங்கி என்பதும் பெயர்ச்சொல்லே ஆகும்.

நீதிமன்றத்திலே வழக்கு ஒன்று வருகின்றது. நீதிபதி அவ்வழக்குக்கு தடை விதிக்கிறார். மறுநாள் தடையை உடைக்க வழக்கு ஒன்று தொடுக்கப்படுகின்றது. மீண்டும் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது. அதுபோலத் தோற்றுவிக்கப் பெற்ற உலகத் தொகுதி முழுப் பயனை நுகராமையால் மீண்டும் தோற்றுவிக்கப்படுகின்றது.

முழுப் பயனை நுகராமல் செய்த தடை சைவ சித்தாந்தத்தில் மலம் என்று வழங்கப்பெறும்.

ஒடுங்கிய உலகம் ஒடுங்கியவாறே நில்லாமல் மீண்டும் ஏன் தோற்றுவிக்க வேண்டும்? ஒடுக்காமல் உலகம் இருந்தவாறே இருந்திருக்கலாம். உலகம் நிலைபெறாமல் ஒடுங்குதலும், மீளத் தோன்றுதலும் எதற்காக என்று ஐயம் எழும். உலகத் தொகுதியில் உள்ள உயிரினங்கள் செய்த வினைகள் பக்குவம் ஆதற்பொருட்டு ஒடுங்குதலும், ஆணவ மலம் பக்குவம் ஆதற்பொருட்டு மீளத் தோன்றுதலும் காரணமாகும்.

பெருந்தொகுதியாகிய மண்ணின் ஒரு பகுதியை குலாலன் பிசைந்தெடுத்துச் சக்கரத்தில் வைத்துச் சட்டி பானைகளாகச் செய்கின்றான். இச் செயலுக்கு குலாலன் நிமித்த காரணம், மண் முதற்காரணம். சக்கரம் முதலிய கருவிகள் துணைக் காரணமாகும். அதுபோல் இறைவன் மாயையின் ஒரு பகுதியை உலகம், உடல், கருவிகள், நுகர்பொருள்கள் என்று ஆக்குகின்றான். இறைவன் நிமித்த காரணம், மாயை முதற்காரணம், திருவருட்சக்தி, வினை முதலியன துணைக் காரணங்கள் ஆகும்.

மாயையும், உலகமும் – வித்தும், முளையும் போல என்று உவமை கூறுவதுண்டு. வித்துக்கு ஆதாரமான நிலம் குளிர்ந்தால் அல்லாமல் நிலத்திலிருந்து வித்து முளைக்காது. அதுபோல இறைவனுடைய வைப்புச் சக்தியாகிய மாயையும், இறைவனுடைய அருளாற்றலாகிய செயலும் இல்லாமல் உலகத் தோற்றம் நடைபெறாது.

முளைக்கு ஆதாரம் வித்து. வித்துக்கு ஆதாரம் நிலம். அதுபோல உலகத்துக்கு ஆதாரம் மாயை. மாயைக்கு ஆதாரம் சிவசக்தி. அச்சக்தி சிவனுக்கு வேறாதல் இல்லை. ஆதலால், மாயையிலிருந்து தோன்றும் உலகத்திற்கு இறைவன் இன்றியமையாதவன் என்பது புலனாகும்.

மாயையில் ஒடுங்கிய உலகத்தை மாயையே மீண்டும் தோற்றுவிக்கும். அதற்கொரு கடவுள் தேவையில்லையே என்ற ஐயம் உண்டாகும். மண்ணில் ஒடுங்கிய குடத்தை மண்ணே தோற்றுவிக்கும், குலாலன் ஒருவன் வேண்டா என்பது போல அவ்வையமாகும்.

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியன இறைவன் ஒருவன் ஆணையின் வண்ணமே நடைபெறுகின்றன. படைத்துக் காத்து அழிக்கும் போது இறைவனுக்குப் பாதிப்பு ஏற்படாதா? என்ற ஐயம் தோன்றும்.

காலம் என்பது இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம், நாழிகை, நாள், மாதம், ஆண்டு முதலியனவாக வெவ்வேறு வகையில் நின்று தொழிற்படும். அதனால் காலம் பாதிக்கப் பெற்று விகாரம் அடையாது. அது போலக் கருவிகளால் படைக்காமலும், காக்காமலும், அழிக்காமலும் நினைப்பு மாத்திரையாலே அவற்றை செயல்படுத்துவதால் இறைவனுக்கு பாதிப்பு இல்லை.

ஒருவன் ஒரு நூலை நன்றாகக் கற்பான். நூலில் வரும் செய்தி உள்ளத்தில் தோன்றும்போது அதனால் பாதிப்பு ஏற்படாது. கனவில் சிலவற்றைக் காண்பர். கண்டவற்றை நினைவிற்குக் கொண்டு வரும்போது பாதிப்பு ஏற்படுவதில்லை. அவற்றைப் போல முத்தொழில் செய்வதால் இறைவனுக்குப் பாதிப்பு உண்டாகாது. அழித்தலைச் செய்யும் சங்காரக் கடவுள் ஒருவனே முதற்கடவுள். முற்று அழிப்புச் செய்யும்போது அனைவரும் அழிக்கப் பெறுவர், மீண்டும் அவனிடத்தில் இருந்தே அனைத்தும் தோற்றுவிக்கப் பெற வேண்டும்.

தேர் முதலியவற்றைச் செய்வதற்குப் பலர் முற்படுகின்றனர். மிகமிக வியந்து போற்றத்தக்க இவ்வுலகத்தை ஒருவரால் செயல்படுத்த இயலாது. பல கடவுளர் வேண்டுமே என்ற தடை உண்டாகும். தேர் முதலியவற்றைப் பலர் கூடியே செய்வார்கள். அவ்வாறு செய்யும்போது தலைமையான ஒருவன் ஏவல் வழியே நின்று அனைவரும் செயல்படுவார்கள். அதுபோல இவ்வுலகமும் பிரம்மா முதலியோரால் தொழிற்படினும் அவர்கள், இறைவன் ஏவல் வழியே நின்று தொழில் செய்வார்கள்.

உலகம் முழுவதும் ஒப்பற்ற பரம்பொருளாலே படைக்கப் பெற்றுக் காக்கப் பெறும். அந்தப் பரம்பொருளிடத்திலே ஒடுங்கும். அத்தகைய இறைவனே உலகத்திற்கு முதற் கடவுள் ஆவார்.

காரியமாகிய உலகம் அறிவில்லாத சடப்பொருள் ஆகும். சிற்றறிவு உடைய உயிரினங்களும், ஆணவம் முதலிய பாசத்தால் கட்டுண்டு உள்ளன.

இவ்வாறு உலகமும் உயிரினங்களும் உள்ளதால் அவற்றைத் தொழிற்படுத்தும் முதற்கடவுள் முற்றறிவும், பேராற்றலும் உடையவராக இருத்தல் வேண்டும். அத்தகைய கடவுள், ஒருவராகத்தான் இருக்க முடியும். ஆதலால் சங்கர காரணனாகிய கடவுளே உலகிற்கு முதற் கடவுள் ஆவார்.

  • To be continued.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.