சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார்  உரை – பகுதி மூன்று

 1.2.                    இரண்டாம் நூற்பா உரை

நூற்பா :

அவையே தானேயாய், இருவினையின்
      போக்கு வரவு புரிய ஆணையின்
      நீக்கமின்றி நிற்கும் அன்றே”         

(சிவஞானபோதம் நூற்பா-2)

உரை :

பெண் ஒருத்தி பருவம் அடைந்து உரிய காலத்தில் நல்ல கணவனைத் திருமணம் செய்கிறாள். கருவுற்றுப் பத்து மாதத்தில் குழந்தையைப் பெற்றெடுக்கின்றாள். குழந்தை வளர்ந்தபின் பள்ளிக்குச் செல்கின்றது. கருவுற்ற காலத்தில் குழந்தையும் தாயும் ஒன்றாக இருந்தனர். பிறந்த குழந்தை சில காலம் தாயாருடன் இருந்தது. வளர்ந்த பின் தாயை விட்டுப் பிரிந்து வேறாகப் பள்ளிக்குச் செல்கின்றது. ஒன்றாக, உடனாக, வேறாக இருக்கும் நிலையைக் கண்கூடாகக் காண்கிறோம். அதுபோல இறைவன் ஞான நிலையில் அருவநிலையில் உலகத் தொகுதியுடன் ஒன்றாகவும், உடனாகவும், வேறாகவும் இருப்பான். தத்துவ உலகில் அவ்வாறு இருத்தல் அத்துவிதம் என வழங்கப் பெறுகிறது.

உலகத்துக்கு முதல்வனாக உள்ள இறைவன் உயிர்களுக்காக உலகத்தினை மீண்டும் தோற்றுவிக்கின்றான். உடம்பு இருந்து செயல்படுவதற்கு உயிர் அந்த உடம்புடன் கலந்து அவ்வுடம்பாகவே நிற்கும். அதுபோல உயிர்கள் நிலைபெற்றுச் செயல்படுவதற்கு அவ்வுயிர்களிடத்து இறைவன் கலந்து அவ்வுயிராகவே இருப்பான். இவ்வாறு இருத்தல் ஒன்றாய் நிற்றல் என வழங்கப் பெறும்.

     “வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
      ஊனாகி உயிராகி

என்று திருவாசகத்தில் வருவது இத்தகைய ஒன்றாய் நிற்றல் ஆகும்.

கண்கள் காண்பதற்குத் துணையாக ஒளியைத் தருவது சூரியன் ஆகும். சூரியன் கண்களிலிருந்து வேறாதல் போல உயிர்களிடத்தில் அறிதலைச் செய்வதற்குத் துணையாக நிற்கும் இறைவன் அவ்வுயிர்களின் வேறாக நிற்பான்.

     “மண் அல்லை, விண் அல்லை, வலயம் அல்லை
      மலை அல்லை, கடல் அல்லை, வாயு அல்லை

என்று தேவாரத்தில் வருவது வேறாக நிற்றல் ஆகும்.

கண் ஒளி பொருளைக் காண்பதற்கு உயிரறிவு உடன் நின்று காண வேண்டும். சில சமயங்களில் வேறு சிந்தனையுடன் நடந்து கொண்டிருப்போம். கண்கள் விழிந்திருந்தாலும் எதிரில் வரும் நண்பரைக் காண்பதில்லை, பார்க்காமலேயே நடந்து கொண்டிருப்போம். உயிரறிவு கண்களுடன் பொருந்தி உடன்நின்று காணாததால் அந்நிலை ஏற்படுகின்றது. அதுபோல இறைவன் உடனிருந்து அறிவிக்கவில்லை என்றால், உயிர்கள் அறிய மாட்டா. உயிர்கள் பொருள்களை அறிந்து அனுபவித்தலுக்கு இறைவன் உடனாய் நிற்றல் வேண்டும்.

     “ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
      தோழனுமாய் யான்செய்யும் துவிசுகளுக்கு உடனாகி

என்று சுந்தரர் பாடியது இறைவன் உடனாய் நிற்றலை உணர்த்தும்.

இறைவன் உயிர்களுடன் ஒன்றாயும், வேறாயும், உடனாயும் இரண்டறக் கலந்து நிற்றலைச் சைவ சித்தாந்தம் அத்துவிதம் என்று கூறுகின்றது. இறைவன் உயிர்களுடன் செயல்படும் நிலைக்கு மூன்றுவிதமான கருத்துக்கள் தத்துவ உலகில் கூறப் பெறுகின்றன.

1) பொன்னே ஆபரணமாவதைப் போல பிரம்மமே உயிராயிற்று என்று ஏகான்மவாதிகள் கூறுவர்.

2) இருளும் ஒளியும் போல இறைவனும் உயிரும் வேறு வேறு என்று மத்துவர் கூறுவர்.

3) சொல்லும் பொருளும் போல இறைவனும் உயிரும் ஒருவிதத்தில் ஒன்றாயும் வேறு விதத்தில் வேறாயும் இருக்கும் என்று வைணவர் கூறுவர்.

ஆனால் இம்மூன்று கொள்கையும் சைவ சித்தாந்தத்தில் மறுக்கப் பெறும்.

உயிர்கள் மனத்தால் நினைத்தலையும், வாயால் சொல்லுதலையும், உடம்பால் செய்தலையும் மேற்கொள்கின்றன. இவை வினை என வழங்கப் பெறும். வினையின் பயன் விளையும்போது இன்பமாயின் நல்வினை என்றும் தீமையாயின் தீவினை என்றும் பெயர் பெறும். வினைகள் அறிவில்லாத சடமாகலான் தம்மைச் செய்த உயிரைத் தாமே சென்று சேரா. வினையும் வினைப்பயன்களையும் உயிர்களுக்குக் கூட்டுபவன் இறைவன் ஆவான்.

வினைப் பயன்களையும், பயன்களை அனுபவிப்பதற்குரிய உடல் கருவிகளையும் இறைவன் தன் ஆணையாகிய திருவருட் சக்தியால் தோற்றுவிப்பான். இறைவன் எண்ணத்தையே தனக்கு ஆணையாகக் கொண்டு திருவருட் சக்தி இயங்குவதால் அதனையே ஆணை என்றனர். ஆணையாகிய திருவருட் சக்தி வினைப் பயன்களை நுகர்தற்கேற்ப உடல் கருவிகள் முதலியவற்றை கூட்டுவதும் நீக்குவதும் செய்யும். கூட்டும் போது பிறப்பும், நீக்கும்போது இறப்பும் உண்டாகின்றன.

எனவே இறைவன் உயிர்களுடன் ஒன்றாயும், வேறாயும், உடனாயும் நின்று தன்னுடைய ஆணை எனப் பெறும் திருவருட் சக்தியினால் செலுத்தப் பெற்று வரும் இரு வினைகளால் உயிரினங்கள் பிறப்பு இறப்புகளை மேற்கொள்கின்றன என்பது தெரிய வருகின்றது.

செந்தாமரைப் பூவின் செம்மையை பூவிலிருந்து பிரிக்க முடியாமல் ஒன்றியிருப்பதைப் போல ஆணையாகிய திருவருட்சக்தி இறைவனை விட்டு நீங்காமல் ஒன்றி இருக்கும்.

     “அவையே தானேயாய், இருவினையின்
      போக்கு வரவு புரிய ஆணையின்
      நீக்கமின்றி நிற்கும் அன்றே”         (சிவஞானபோதம் நூற்பா-2)

அவையே யாய் நிற்கும் இறைவன் உயிர்களுடன் கலந்து ஒன்றாய் நிற்பான்.
தானேயாய் நிற்கும் பொருள் தன்மையினால் உயிர்களின் வேறாய் நிற்பான்.
அவையே தானேயாய் நிற்கும் அவையும் (உயிர்களும்) தானுமாய் உடனாய் நிற்பான்.
ஆணையின் இரு வினையின் தன்னுடைய திருவருட் சக்தியினால் வருகின்ற இரு வினைகளுக்கு ஏற்ப.
போக்குவரவு புரிய உயிர்கள் பிறந்தும் இறந்தும் வருமாறு செய்து.
ஆணையின் நீக்கமின்றி நிற்கும் அத்திருவருட் சக்தியின் நின்றும் தான் வேறாதல் இல்லாமல் கலந்து நிற்பான்.

 

1) இறைவன் உயிர்களுடன் இரண்டறக் கலந்து நிற்கும் அத்துவித நிலை.

2) உயிகளுக்கும் உண்டாகும் – உயிர்கள் செய்யும் இரு வினைகள்.

3) இருவினைகள் காரணமாக வரும் பிறப்பு இறப்புகள்.

4) வினைகளைச் செயல்படுத்தும் திருவருட் சக்தி.

ஆகிய நான்கு பற்றிய செய்திகளே இரண்டாம் நூற்பாவில் விரிவாக விளக்கப் பெறுகின்றன.

மெய்கண்டார் பத்து வெண்பாக்களில் அவற்றை விளக்கியுள்ளார். அவர் மாணக்கர் அருள்நந்திசிவம் சிவஞான சித்தியாரில் அறுபத்தாறு பாடல்களில் அவற்றை விளக்கமாகப் பாடியுள்ளார். சிவஞான மாபாடியத்தில் இரண்டாம் நூற்பாவின் செய்திகளை ஏறக்குறைய 170 பக்கங்கள் மிக விரிவாக விளக்கு எழுதியுள்ளார். படிப்போர் புரிந்துகொள்ளும் முறையில் சில செய்திகள் சுருக்கமாகத் தரப் பெறுகின்றன.

நாடி, நரம்பு முதலியவற்றால் கட்டப்பெற்ற உடம்பினையும், மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளையும் பற்றி நிற்கும் உயிரானது – உடம்பிற்கு வைத்த பெயர் கொண்டு முருகா! கந்தா! என்று பிறர் அழைத்த போது, ஏன்? என்று கேட்கும்.

இருவர் ஒன்றாகச் செல்லும் போது அவ்வாறு பெயரைச் சொல்லி அழைத்தால் அப்பெயருக்கு உரியவன் ஏன்? என்று கேட்பான். உடம்புக்கு வைத்த பெயர் கொண்டு அழைத்தபோது உயிர், ஏன்? என்று கேட்டதற்குக் காரணம் உயிரானது உடம்பு என்றும் தான் என்றும் வேற்றுமை காணாமல் ஒன்றாக நிற்பதே காரணமாகும். அதுபோல இறைவன் உயிர்களிடத்தில் வேறுபடாது நன்றாக இயைந்து நிற்பதே கலப்பினால் ஒன்றாக நிற்றல் எனப்படும்.

உயிரும் மெய்யுமாக உள்ள எழுத்துக்களுக்கு எல்லாம் ‘அ’கரம் முதலானாற் போல உயிர்களும், உடம்புகளுமாக உள்ள உலகத்திற்கு இறைவன் முதல்வன் ஆவான்.

     “அகர முகர எழுத்தெல்லாம் ஆதி
      பகவன் முதற்றே உலகு.

என்று திருவள்ளுவரும் அகரத்தை இறைவனுக்கு உவமையாகக் கூறியுள்ளார். அகரம் தானும் இயங்கிப் பிற எழுத்துகளையும் இயக்கும். ‘மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்’ என்பது தொல்காப்பியம். அகரம் தனித்தன்மையும் தலைமைத் தன்மையும் உடையது. அதுபோல இறைவன் பிறவற்றை இயக்கும்போது வேறாக இருப்பான்.

பண்ணும் அதனின் வேறாகாத இசையும் போலவும், பழமும் அதனின் வேறாகாத சுவையும் போலவும் இறைவன் உயிர்களிடத்தில் வேற்றுமையின்றி உடனாய் நிற்பான். உருக்கிய அரக்குடன் கலந்த கற்பொடியானது அந்த அரக்கினுடன் சேர்ந்து ஒருங்கு இயைந்து நீக்கமின்றிச் சாணைக் கல்லாய் நின்றதைப் போல, இறைவன் உயிர்களிடத்தில் ஒருங்கு சேர்ந்து நீக்கமின்றி உடனாதலால் ஒன்றாயும் வேறாயும் உடனாயும் நிற்பான்.

இறைவன் உயிர்களுடன் இரண்டறக் கலந்து நிற்கும்போது இரு வினை நிகழும்.

‘இவ்வான்மாக்கட்கு இருவினை முதல்வன் ஆணையின் வரும்’ என்பது சிவஞானபோத மேற்கோள்.

இன்றைய உலகில் செல்வத்துடன் வீடு, ஊர்தி, நிலம், தொழில் முதலியவற்றால் சிலர் சிறப்பாக வாழ்கின்றனர். சிலர் வறுமையுற்று, வீடு முதலியன இல்லாமல் துன்பப்படுகின்றனர். எல்லாவற்றையும் நடத்துபவன் இறைவன் என்றால் இத்தகைய ஏற்றத்தாழ்வு வரலாமா? என்று தடை எழுப்புவர் உள்ளனர்.

நாட்டையும் நகரத்தையும் ஆட்சி செய்யும் மன்னன் மக்களுக்கு இடையூறு வாராமல் காக்கும் கடமை உடையவன். அரசாட்சி நெறிமுறைக்கேற்ப வாழ்வோர்க்கு நல்லன செய்வான். நெறியில் இல்லாமல் குற்றம் செய்வோர்க்குத் தண்டனை கொடுப்பான். தண்டனையை மன்னன் நேரே கொடுப்பதில்லை. அங்குள்ள நம்பிக்கைக்குரிய அதிகாரி மூலம் செயல்படுத்துவான். இறைவ உயர்ந்தோர் மூலம் அற நூல்களையும் அருள் நூல்களையும் வழங்கி அறநெறிப்படி வாழ வழிவகுத்துள்ளான். நன்னெறியில் ஒழுகியவர்க்கு அவர் செய்த வினைக்கேற்ப நன்மைகளைத் தருகின்றான். தீய வழியில் நடந்தவர்க்குத் தீமைகளைத் தருகின்றான். தீமை போலத் தோன்றினாலும் உயிர்களைத் திருத்திப் பக்குவப்படுத்தி நன்னிலைப்படுத்துவதற்கே ஆகும்.

‘திருத்தித் திருத்தி வந்தென் சிந்தையிடங் கொள்கயிலாயா’ என்பது சுந்தரர் வாக்கு.

உயிர்களுக்கு நன்மை புரிதலும் தண்டித்தலும் இறைவன் ஆணையாகிய திருவருட்சக்தியின் மூலமே நடைபெறும்.

முற்பிறப்புக்களில் செய்யப்பெற்ற வினைத் தொகுதிக்குப் பழவினை, தொல்வினை, சஞ்சிதம் எனப் பெயர்கள் வழங்கப் பெறும். அத்தொகுயிலிருந்து இப்பிறப்பில் அனுபவிப்பதற்கென்று எடுத்துக் கொண்ட வினை நுகர்வினை, ஊழ்வினை, பிராரத்தம் என்று வழங்கப் பெறும்.

வினையை நுகரும்போது மனம், மொழி, மெய்களால் செய்யப் பெறும் புது வினை எதிர்வினை, ஆகாமியம் எனப் பெயர் பெறும். வினைக் கோட்பாட்டில் 1) செய்வான், 2) செய்வினை, 3) வினைப்பயன், 4) பயனைக் கொடுப்போன் என்ற நான்கு அடிப்படை சைவ சித்தாந்தத்தில் கூறப் பெறும்.

பழவினையே உயிர் அனுபவிப்பதற்குரிய இன்ப துன்பங்களையும் அவற்றிற்கு இடமான உடம்பையும் தோற்றுவிக்க உயிர் அவ்வுடம்பைப் பொருந்திப் பயன்களை நுகரும். ஊழ்வினையை நுகரும்போது தோன்றும் புதிய வினை அடுத்த பிறவிக்கு வித்தாக அமையும். உழவர் செய்யும் உழவுத் தொழில் நேரே பயன் கொடுப்பதில்லை. விளைநிலம் உழவுத் தொழிலை ஏற்று நின்று அதற்குரிய பயனை உழவர்க்குக் கொடுக்கும். அதுபோல உயிர்கள் செய்யும் நல்வினை, தீவினைப் பயன்களை இறைவனே ஏற்றுநின்று உயிர்களுக்குப் பயன்களைக் கொடுப்பான்.

ஒருவன் இரும்பை எடுத்துக் காந்தத்தின் நேரே பிடிக்கும்போது காந்தம் அவ்விரும்பை இழுத்துக் கொள்ளும். அதுபோல் இறைவன் உயிர்களுக்கு வினைப் பயன்களை நுகர்விக்கும்போது உயிர்கள் தமக்கு இடமாக உள்ள உடம்பிலே இருந்து வினைப் பயன்களை அனுபவிக்கும்.

நெல்லிடத்தில் உமியும், செம்பிடத்தில் களிம்பும் புதியனவாக வந்தன அல்ல. தொன்றுதொட்டே உள்ளனவாகும். அதுபோல மாயா மலம், ஆணவ மலம், கன்ம மலம் ஆகிய மூன்றும் தொன்றுதொட்டே உள்ளனவாகும். சூரியன் ஒளியால் தாமரை மலர் மலர்தலும் வாடுதலும் நடைபெறுவதைப் போல மூன்று மலங்களும் இறைவனின் திருவருட் சக்தியால் தொழிற்படும்.

மாயை சடப்பொருள் உலகத் தோற்றத்திற்கு முதற்காரணமாக இருக்கும். இறைவனுக்கு வைப்பு ஆற்றல் (பரிக்கிரக சத்தி) எனப்படும். ஊர்தி, எழுதுகோல், கருவிகள் முதலியவற்றை வேண்டும் போது பயன்படுத்துகிறோம். அப்போது அவற்றின் ஆற்றல்கள் வெளிப்படும். வேண்டாதபோது உரிய இடத்தில் வைத்து விடுகிறோம். அதுபோலவே இறைவன் படைக்கும் காலத்தில் மாயையைப் பயன்படுத்துவான். தன்னிடத்தில் அடங்கிய மாயையை உடல், கருவி, உலகம், நுகர்பொருளாக விரியச் செய்வான்.

திருவருட்சத்தி சிற்சத்தி (அறிவாற்றல்) எனப்படும். சிற்சத்தி இறைவனைப் பிரியாமல் நீக்கமின்றி நிற்கும். அதனால் தாதான்மியசத்தி என அழைக்கப் பெறும்.

நம்முடைய உடல், கை, கால், கண், செவி முதலிய உறுப்புகள் மாயையே ஆகும். இவ்வுடல் பருவுடல் (தூல சரீரம்) எனப்படும். பருவுடலை விட்டு உயிர் பிரிவது இறத்தல் எனப்படும். “சென்ற உயிரின் நின்ற யாக்கை’ என்பார் தொல்காப்பியர்.

பிரிந்த உயிர் நுண்ணுடம்புடன் மேலே செல்லும். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய எட்டினால் ஆகிய நுண்ணுடம்பு (சூக்கும சரீரம்) என்ற அழியாததைத் துணையாகக் கொண்டு உயிர் மேலே செல்லும். எட்டினால் ஆனதால் புரியட்ட சரீரம் என்றும் வழங்கப் பெறும்.

எல்லாப் பிறப்புகளிலும் நுண்ணுடம்பு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். முத்தியடைதல் அல்லது முற்றழிவுண்டாகும் பேரூழிக் காலத்தில் மட்டுமே நுண்ணுடம்பு அழியும். நுண்ணுடம்புடன் செல்லும் உயிர் முன்பு தீவினையை நரகத்தில் சென்று அனுபவிக்க வன்மையான யாதனா சரீரத்தைப் பெற்று அனுபவிக்கும். முன்பு செய்த நல்வினையைச் சுவர்க்கத்தில் சென்று அனுபவிக்க மென்மையான பூதசார சரீரத்தைப் பெற்று அனுபவிக்கும்.

இவ்வாறு துன்ப இன்பங்களை அனுபவித்து வரும்போது நனவில் கண்டவற்றைக் கனவு காணும்போது மறந்து அறிவு வேறுபட்டதைப் போலப் பருவுடல், நுண்ணுடல், யாதனா சரீரம் ஆகியவற்றில் அறிவு வேறுபட்டு, அனுபவித்தவற்றை மறந்து, புண்ணிய பாவங்களுக்கேற்ப மனம் செலுத்து முறையில் நுண்ணுடம்பாய்ச் சென்று ஒரு கருவினில் சென்று பிறக்கும்.

உயிர்களுக்கு மறுபிறப்பு உண்டு என்றபோது முற்பிறப்புகளில் செய்தவற்றை உயிர்கள் இப்பிறவியில் ஏன் அறிவதில்லை? என்ற தடைக்கு விடையாக இப்பகுதி அமைந்துள்ளது.

மேலுலகில் துன்பத்தையும், இன்பத்தையும் அனுபவித்த உயிர் எஞ்சிய வினையை அனுபவிப்பதற்காக மீண்டும் நிலவுலகத்திற்கு வரத் தொடங்குகின்றது. மேக மண்டலத்தை அடைந்து மழைத் துளிகளுடன் கீழே வருகின்றது. அங்குள்ள நெல் முதலிய தானியங்களில் சேர்ந்து உணவு வடிவாக ஆணின் உடலைச் சேர்கின்றது. ஆண் விந்து என்னும் சுக்கிலமாக மாறிப் பெண் விந்தாகிய சுரோணிதத்துடன் சேர்ந்து கருக்கொண்டு தாய் வயிற்றில் தங்கிக் குழந்தையாக பிறந்து வளர்ச்சியடைகின்றது. 1) மேலுலகம், 2) மேக மண்டலம், 3) நிலம், 4) தந்தை, 5) தாய் ஆகிய ஐந்து இடங்களில் தங்கி வருவதால் பஞ்சாக்கினி வித்தை என்று வழங்கப் பெறும்.

பாம்பு தோலையுரித்துப் பின் வேறொரு தோலுடன் செல்லுதலும், உயிர் நனவு உடலை நீங்கிக் கனவு உடலில் செல்லுதலும், யோகியர்தம் உடலைவிட்டு மற்றொரு உடலிலே சென்று மீளுதலும் (பரகாயப் பிரவேசம்) ஆகிய மூன்றும் உயிர் பரு உடலை விட்டு நீக்குதற்கு உவமைகளாகக் கூறப்படுகின்றன.

இறைவன் படைப்பில் முதலில் தருவது நுண்ணுடம்பே ஆகும். நுண்ணுடம்பிலிருந்தே பருவுடல் தோன்றும். நுண்ணுடம்பில் ஆண், பெண் வேறுபாடு இல்லை. ஆண், பெண் வேறுபாடு பருவுடலில் மட்டும் உண்டு. நுண்ணுடம்பிலிருந்து தோன்றும் உடல்கள் நரக உலகத்துக்குரிய உடல், துறக்க உலகத்துக்குரிய உடல், நில உலகத்துக்குரிய உடல்.

  • To be continued.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.