சிவஞான போதம் — ந. இரா. சென்னியப்பனார் உரை – பகுதி ஒன்று

 சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார்  உரை பகுதி ஒன்று

%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-1
சிவ வழிபாடு மிகத் தொன்மையானது. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே சிவ வழிபாடு உலகு எங்கிலும் பரவியிருந்தது. சிந்துவெளி நாகரிகம் சிவலிங்க வழிபாட்டை முதன்மையாகக் கொண்டிருந்தது என்று ஜான் மார்சல் குறிப்பிட்டுள்ளார்.

வட அமெரிக்காவில் கொலறடோ என்னும் ஓர் ஆறு உள்ளது. கொலறடோ என்னும் இந்த ஆறு நிலத்தை ஒரு மைல் ஆழம் வரையில் அரித்து ஆழத்தில் ஓடிக் கொண்டு இருக்கிறது. இதன் பக்கத்தே மேற்பாகம் தட்டையாகக் காணப்படும். குன்றின் உச்சி சிவன் ஆலயம் என நீண்ட காலம் அங்குள்ள மக்கள் ஞாபகத்தில் இருந்து வந்தது. இச்சிவன் ஆலயத்தின் காலம் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென்று சிலரும், இதற்கு இன்னும் மிகப் பழமையுடையது என்று சிலரும் தமது கருத்தைத் தெரிவித்துள்ளார்கள் என்ற செய்திகளை ஆய்வாளர் ந. சி. கந்தையாபிள்ளை அவர்கள் ‘சிவன்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

‘சைவம் சிவனுடன் சம்பந்தம் ஆகுதல்’ என்று திருமூலர் குறிப்பிட்டுள்ளார். இறை(பதி), உயிர்(பசு), தளை(பாசம்) ஆகிய முப்பொருள் கொள்கையே சைவத்தின் அடிப்படையாகும்.

தொல்காப்பியத்திலேயே முப்பொருள் பற்றிய உண்மைகள் காணப்படுகின்றன. கடவுள், கந்தழி, வழிபடு தெய்வம் முதலியவை பதியைப் பற்றியவையாகும். காலம், உலகம், உயிரே, உடம்பே என்று வருவதில் உயிர் பசுவைக் குறிக்கும். காலம், உலகம், உடம்பு ஆகியவை பாசத்தைக் குறிக்கும்.

உடல் வேறு, உயிர் வேறு என்பதனால் அக்கால மெய்ப்பொருள் இயல் தெரிய வருகின்றது. ‘சென்ற உயிரின் நின்ற யாக்கை’ என்பதில் உடலை விட்டு உயிர் பிரிந்து செல்லும் என்ற உண்மை புலனாகின்றது.

     “நிலம், தீ, நீர், வளி, விசும்பொடு ஐந்தும்
      கலந்த மயக்கம் உலகம்

என்ற தொல்காப்பியர் கருத்து, தமிழர் தம் கூர்த்த நுண்ணறிவைக் காட்டுகின்றது. உயிரினங்களை ஓர் அறிவு முதலாக ஆறு அறிவு உள்ளனவாகப் பகுத்து ‘மக்கள்தாமே ஆறு அறிவு உயிரே’ என்ற உண்மையையும் உரைத்துள்ளார்.

சங்க இலக்கியங்களும், திருக்குறளும் ‘மன்னுயிர்’ என்றே குறிக்கின்றன. சைவசித்தாந்தக் கோட்பாட்டில் உயிர் என்றும் உள்ளது; படைக்கப் பெறுவதில்லை. தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர் காட்டும் மேற்கோளில் ‘காணாமரபிற்றுயிர்’ என்ற கருத்து காணப்படுகின்றது.

     “விண்ணோர் மருங்கின் எய்திய நல்லுயிர்
      மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கினும்
      மக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர் 
      மிக்கோர் விலங்கின் எய்தினும் எய்தும் 
      விலங்கின் யாக்கை விலங்கிய இன்னுயிர் 
      கலங்குஅஞர் நரகரைக் காணினும் காணும்

என்று இளங்கோவடிகளார் உயிரை நல்லுயிர், மன்னுயிர், இன்னுயிர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சைவ சித்தாந்தத்தில் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நானெறிகள் மிகச் சிறந்த அடிப்படையாகும். சிலப்பதிகாரத்தில் அடியார்க்கு நல்லார் இந்நானெறிகளை விளக்கியுள்ளார்.

சிலப்பதிகாரத்தில் ஊர்காண் காதையில் வரும் ‘அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளி’ எனும் தொடர்க்கு அவர் கூறும் உரை விளக்கம்:

‘அறமும் அதன் துறைகளும் விளங்குதற்குக் காரணமாகிய அறவோர்களுடைய இருப்பிடங்களை, ஈண்டு பள்ளி என்றது அவ்விடங்களை. அறத்துறை — அறமும் அறத்தின் துறையுமென உம்மைத் தொகை. அறமாவது இரு வகைப்படும். ஒன்று இல்லறம். மற்றது துறவறம். அவற்றுள் இல்லறம் என்பது கற்புடை மனைவியோடு இல்லின்கண் இருந்து செய்யும் அறம். அதன் துறையாவன: தன்னையொழிந்த மூவர்க்கும், துறந்தார்க்கும், துவ்வாதவர்க்கும், பிறர்க்கும் துணையாதலும், வேள்வி செய்தலும், சீலங்காத்தலும் முதலியனவும் அருளும், அன்பும் உடையனதாதலும் பிறவும்.’

அடுத்து, துறவறமாவது நாகம் தோலுரித்தாற் போல அகப்பற்றும், புறப்பற்றும் அற்ற இந்திரிய நுகர்ச்சியை மறுத்து முற்றத்துறத்தல். அதன் துறையாவன: சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன.

அவற்றுள் சரியை அலகிடல் முதலியன; கிரியை பூசை முதலியன; யோகம் எண் வகை, அவை: இயமம், நியமம், ஆசனம், வளிநிலை, தொகை நிலை, பொறை நிலை, தியானம், சமாதி என்பன.

தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் முதலியவற்றில் குறிக்கப் பெறும் சைவ சிந்தாந்த உண்மைகளை ஒழுங்குபடுத்தி, வகைப்படுத்தி அமைத்துக் காட்டியவர் திருமூலர் ஆவார்.

     “பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
      பதியினைப் போல்பசு பாசம் அநாதி

என்று முப்பொருள் உண்மையினை முறையாகச் சுட்டியுள்ளார்.

சைவசித்தாந்தம் பற்றி முதலில் தோன்றிய நூல் வாகீசமுனிவர் அருளிச் செய்த ஞானாமிர்தம் ஆகும். ‘பசு பாசத்தோடு பதியாய பெற்றி’ என்று முப்பொருளைக் குறித்துத் தொடர்ந்து விளக்கம் செய்துள்ளார்.

‘திருமிகு ஞானம், இலங்கொளி யோகம், நலங்கிளர் கிரியை, சரியை’ என்று நானெறியினையும் சுட்டியுள்ளார்.

சைவசித்தாந்த மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கு ஆகும். திருவியலூர் உய்யவந்த தேவனார் பாடிய திருவுந்தியார், திருக்கடவூர் உய்யவந்த தேவனார் பாடிய திருக்களிற்றுப்படியார் ஆகியவை முதலில் தோன்றிய சாத்திர நூல்கள் ஆகும்.

அடுத்துத் தோன்றிய சாத்திர நூல் மெய்கண்டார் அருளிய சிவஞான போதம்ஆகும்.

மெய்கண்டார் 13-ஆம் நூற்றாண்டினர் என்று கல்வெட்டு ஆய்வாளர் கோபிநாதராவ், மு. அருணாச்சலம் ஆகியோர் உறுதி செய்துள்ளனர்.

சிவஞான போதம் தமிழில் தோன்றிய முதல் சித்தாந்த நூல் என்று அறிஞர் பலரும் நிறுவியுள்ளனர். கா. சு. பிள்ளை, மறைமலையடிகள், ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை முதலியோர் சிவஞான போதம் தமிழில் தோன்றிய முதல் சித்தாந்த நூலே எனக் காரணங்காட்டி நிறுவியுள்ளனர்.

பேரறிஞர் ம. பாலசுப்பிரமணிய முதலியார் 120 காரணங்கள் காட்டித் தமிழில் தோன்றிய முதல் சித்தாந்த நூல் சிவஞான போதம் என்று முடிவு செய்துள்ளார்.

திருவோத்தூர் வையாபுரி முருகேசனார், மெய்கண்டார் அருளிய சிவஞானபோதப் பேருரை என்ற நூலில் மிகச் சிறந்த ஆய்வுக் கருத்துகள் பலவற்றை வெளியிட்டு உள்ளார். சிவஞான போதம் தமிழில் தோன்றிய முதல் சித்தாந்த நூலே என்பது அவருடைய முடிவு ஆகும்.

சிவஞான போதம் முதலில் ‘மலர் தலையுலகின்’ எனத் தொடங்கும் சிறப்புப் பாயிரம் அமைந்துள்ளது.

     “கல்லார் நிழல்மலை
      வில்லார் அருளிய
      பொல்லார் இணைமலர் 
      நல்லார் புனைவரே

என்ற மங்கல வாழ்த்துப் பாடல் மெய்கண்டாரால் கடவுள் வாழ்த்தாகப் பாடப்பெற்றுள்ளது. கல், ஆல், நிழல், மலைவு, இல்லார், அருளிய, பொல்லார், இணை, மலர், நல்லார், புனைவர், ஏ எனப் பன்னிரண்டு சொற்களைக் கொண்டுள்ளது.

சிவஞான போதம் 12 நூற்பாக்களைக் கொண்டது. 12 நூற்பாக்களில் பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள்களின் செய்திகள் கூறப்பட்டுள்ளன. செய்திகளை விளக்க 81 வெண்பாக்கள் உள்ளன. சிவஞானபோதத்திற்கு விளக்கமாக அருணந்திசிவம், ‘சிவஞான சித்தியார்’ என்ற நூலைப் பாடியுள்ளார்.

சிவஞான போதத்திற்குப் பாண்டிப் பெருமாள் என்பவர் முதன்முதலில் உரையெழுதினார்.

சிவஞான முனிவர் சிற்றுரை, பேருரை என இரு உரைகளை எழுதியுள்ளார். சிற்றுரைக்கு விளக்கமாகத் தூத்துக்குடி பொ. முத்தைய பிள்ளை அவர்கள் எழுதிய நூல் வெளிவந்துள்ளது. பேருரை மாபாடியம் என வழங்கப்படும்.

வடமொழியில் பிரம்ம சூத்திரத்திற்கு சங்கரர், இராமனுசர், மத்துவர், நிம்பார்க்கர், நீலகண்டசிவம் ஆகியோர் மாபாடியம் எழுதியுள்ளனர்.

அவற்றைப் போல் சிவஞானபோதத்திற்கு சிவஞானமுனிவர் எழுதிய மாபாடியம் தனிச் சிறப்புடையது.

திராவிட மொழிகளிலேயே மாபாடியம் இந்த ஒன்று மட்டும் தான். அதனால் ‘திராவிட மாபாடியம்’ அல்லது ‘சிவஞான மாபாடியம்’ என வழங்கப்படுகிறது.

மாபாடியம் பொருட் சிறப்பும், தத்துவச் சிறப்பும், சிறந்த நடையும் உடையது. கற்றோர்க்கன்றி மற்றோர்க்கு எளிதில் புரியாததாகும்.

நெல்லை சி. சு. மணி அவர்கள் சிவஞான மாபாடியத்திற்குத் தமிழில் மிக விரிவாக விளக்க நூல் செய்துள்ளார்.

க. வச்சிரவேல் முதலியார் அவர்கள் ‘சிவஞான பாடியத் திறவு’ என்ற நூல் செய்துள்ளார். அவரே சிவஞான மாபாடியம் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

மகாவித்துவான் சி. அருணை வடிவேல் முதலியார் ‘சிவஞான போத மாபாடிய உரைவிளக்கம்’ என்ற நூலை எழுதியுள்ளார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தால் அந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில் எம். கந்தசாமி அவர்களால் சிவஞான மாபாடியம் முழுவதும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ‘Sagacity of the Supernal Effulgence Sivagnana Botham’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது. அந்நூல் வெளிவருவதற்கு திரு. என். ஏ. பி. கண்ணன் ராஜா, ‘அருட்செல்வர்’ நா. மகாலிங்கம் ஐயா ஆகியோர் பேருதவி செய்துள்ளனர்.

  • To be continued.

************************************************************************

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.