அம்மாவை அழைச்சிட்டுப் போங்க

அம்மாவை அழைச்சிட்டுப் போங்க

*******************************************************

என் கணவர் “எனக்கு நேரம் இல்லைடா, நீதான் அழைச்சிட்டுப் போயேன்” என்றார்.

“சரி, சாயந்தரம் ஆஃபீஸிலிருந்து வந்ததும் அழைச்சிட்டுப் போறேன்.”

மாலை வந்ததும் டாக்டரிடம் சென்றோம். அம்மா என்றால் என் அம்மாதான்.

சில நாட்களாய் ஒரு மாதிரி இருக்கிறார். 82 வயது. தன் வேலையைத் தானேதான் செய்துகொள்கிறார்.

அம்மாவிடம், டாக்டர் “பெரியம்மா, கையை நீட்டுங்க, கண்னைக் காட்டுங்க, வாயைத் திறங்க ……. என்னம்மா கண் இத்தனை செவந்து இருக்கு. ஏதாவது விழுந்துச்சா ?” என்று கூறிவிட்டு, BP  பார்க்க அம்மாவின் கையைச் சுற்ற பலூன் இணைப்பை செருகியதும், “டாக்டர், ரொம்ப இருக்கமா ஊதாதீங்க. கை ரொம்ப வலிக்கும்” என்றார்.

“ஏம்மா, நான் கேட்டதுக்கு பதிலே சொல்லல. ஒங்க பையன் ஒங்களைக் கவனிக்கலயா… ஓ ஒங்களுக்கு இந்த மகள் மட்டும்தானா, அப்ப, ஒங்க மருமகன் ஒங்களை கவனிக்கலயா… என்ன அவர்தான் ஒங்க மகனா” என்று சொன்னவர்,  “BP  சரியாத்தான் இருக்கு, இவங்க என்ன சொல்றாங்கன்னே புரியல, ஒடம்புல ஒண்ணும் கோளாறு இல்ல, ஏதாவது வருத்தம் இருக்கா இவங்களுக்கு ? மருந்து ஒண்ணும் வேண்டாம்.”

வழக்கமான ஃபீஸ் ரூபாய் 500 நான் நீட்ட, அவர் மறுத்து விட்டு, “ எங்க அம்மாவுக்கும் இதே வயசுதான். இந்த வயசுல அவங்களுக்கு என்ன வருத்தம்னு ஓப்பனா தேர்ட் பார்ட்டிக்கிட்ட சொல்ல மாட்டாங்க. நல்லா பாத்துக்குங்க. நீங்களே அன்பாக் கேட்டு தெரிஞ்சு அதை சரி செய்யுங்க” என்றார் கண்ணீருடன்.

எழுந்து இரு கைகளாலும் டாக்டரை வணங்கிய அம்மா “ டாக்டர் சார், ஒங்க அன்புக்கு ரொம்ப நன்றி சார். நீங்க க்ஷேமமாய் இருக்கணும் “ என்றதற்கு, டாக்டர் “ அம்மா, நீங்க சந்தோஷமாய் இருக்கணும்மா” என்றார்.

அடுத்த நாள் போர்டு மீட்டிங்குக்கு அஜெண்டா அனுப்பவேண்டும். இத்தடவை 17 சப்ஜக்ட்டில் போர்ட் நோட்ஸ் சப்மிட் செய்யணும். அம்மாவுக்கு டாக்டர் உடம்புக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்றதால், அம்மாவை முழுதாக இரண்டு நாள் மறந்து அலுவலக வேலையில் மூழ்கிப் போனேன்.

மூன்றாம் நாள் பார்த்தபோது அம்மா காலை 6 மணிக்கே எழுபவர், இன்று 7.30க்குத்தான் எழுந்தார். கண்கள் மிகவும் சிவந்து இருந்தன. ராத்திரி முழுதும் தூக்கம் இல்லை என்றார். “இல்லை, இல்லை, நான் ஈவினிங் சீக்கிரம் வந்துர்ரேன். இந்த சமயம் பார்த்து இந்த மனுஷன் வேற பாம்பே போயிருக்கார்.  அவருக்கு நிறைய டாக்டர்கள் தெரியும். கூப்பிட்டா மனுஷன் வந்தாத்தானே. என்னமோ எப்பவும் பாங்கு, பாங்குன்னு தொங்கிக் கொண்டெ இருக்கிறார். நீ 5 மணிக்கு ரெடியா இரு. அப்போலோ ஆஸ்பத்திரி டாக்டர் ஒருத்தி நுங்கம்பாக்கத்தில் இருக்காளாம். போவோம்.”

மாலை 5 மணிக்கு வந்ததும், அம்மா படுத்திருப்பதைப் பார்த்தேன். “என்னம்மா ?”

“ஒன்றும் இல்லைடி, லேசாத் தலைவலிதான்”

“அம்ருதாஞ்சன் தடவி விடட்டுமா ?”

“வேண்டாம், வேண்டாம், ரொம்ப எரியும். போனவாரம் தடவி நெத்தி தோலே போயிடுத்து பார்”

“சரி விக்ஸ் வேபரப் தரவா?”

“வேண்டாண்டி, அது சும்மா மெழுகு களிம்பு மாதிரி இருக்கு. ஒரு தடவை தடவினா, தினமும் விக்ஸ் வேண்டுகிற மாதிரி ஏதோ ஒரு மாயம் வச்சிருக்காண்டி அதுல. ஆயுர்வேதிக் மருந்துன்னு வேற அதில ப்ரிண்ட் செஞ்சிருக்கான் அதுல. பொய் சொன்னாத்தான் அது வியாபாரம் வளர்ச்சிக்கு உதவும் போல” என்றாள்.

“இந்தக் காலம் அப்படித்தாம்மா இருக்கு. பொய் சொல்லாத மனுஷனே இல்லை.  என் பையனே எங்கிட்ட பொய் சொல்லக் கூடாது அப்படிங்கறத்துக்காக, ஒரு அம்மாவா நான் சொல்லவேண்டியதக் கூட நிதானமா கோபம் இல்லாமல் சொல்றேன். இருந்தாலும் ஏதாவது பொய் சொல்றானோ என்ற சந்தேகமும் வருது. ஒரு நாள் அவன் கிட்ட சொல்லாமல் அவன் ஆஸ்டலுக்குப் போய் பார்க்கணும்.”

“ஒம்பையன் பொய் சொல்ல மாட்டாண்டி. ஒன் கணவனைத் தான் உரிச்சு வச்சிருக்கிறான் பார் பையனும். ஒன் கணவர் ஒரு பொய் கூட சொல்ல மாட்டார். இவருக்கு இவர் பாங்கில வந்திருக்கிற ப்ரமோஷன் அளவுக்கு வேற யாருக்காவது வந்திருந்தா, அவனவன் இவர் வீட்டுக்கு வந்து வேலை செய்வான். பொழக்கத் தெரியாத வெள்ளந்தி. உண்மையாவே இருந்துட்டு ஏழையாவே ரிடயர் ஆகிறேன்னு கொஞ்சம்கூட வெக்கம் இல்லாமே எல்லார்ட்டயும் சொல்றார் பார். உலக விவஸ்தையே தெரியல்லடீ.”

“சரி, சரி, டாக்டர்ட்ட வாம்மா.”

“இல்லடீ, நீயே போய் ஏதாவது மருந்து வாங்கிட்டு வா. என்னாலே நடக்கக் கூட முடியல்ல.”

“கால் வலி, தலைவலி — என்னன்னு டாக்டர்ட்ட சொல்ல? ஏம்மா உண்மையை சொல்லு. உனக்கு ஏதாவது சீரியசா ஒடம்பு சரியில்லையா. சரியா மோஷன் போறதா ? யூரின் போறதா, அடிக்கடி தண்ணி குடிக்கிறயா இல்லையா. எங்களுக்கு செலவு வேண்டாம் என்று ஒண்ணும் சொல்லாமல் இருக்கியா ? நீ வேணும்மா எங்களுக்கு. நீ இன்னும் 20 வருடம் இருந்து 100ஐத் தாண்டணும்மா. ஏதாவது வருத்தம் இருக்கா. அவர் உன்னை ஏதாவது திட்டிவிட்டாரா, இல்லை மரியாதை காட்டவில்லையா, சொல்லேன்.”

“ஒண்ணும் இல்லேடி. கொஞ்சம் அப்பப்ப வருத்தம் வருது. அதான் தூக்கம் வரல்ல. உன் பேர்லயோ உன் புருஷன் பேர்லயோ எந்தத் தப்பும் இல்லேடி. நீ சீக்கிரம் டாக்டர்ட்ட போய்ட்டு வா, நா சித்த நாழி படுக்கிறேன்.”

சலித்துக் கொண்டே நான் டாக்டரிடம் சென்று சொல்லி ஏதோ பலத்துக்காக ஒரு டானிக் வாங்கி வந்தேன்.

வாசலில் பைக்கை ஸ்டாண்ட் செய்தபோது  TV சவுண்ட் அதிகமாகக் கேட்டது. அம்மாதான் TV  பார்க்கிறாள். 10 வருடமாக காது சரியாகக் கேட்கவில்லை.

காலிங் பெல் 3 முறை அழுத்தியபின் கதவைத் திறந்தாள். டானிக் குடித்தாள். பிறகு படுத்துவிட்டாள்.

அடுத்த நாள் காலை ஐந்தரை மணிக்கே எழுந்து, என்னை எழுப்பி, “காபி நான் போட்டுட்டேன், நானே சமைச்சுடறேன், நீ மெதுவா பேப்பர் பாத்துட்டு குளிச்சிட்டு ஆஃபீஸ் கிளம்பு. உனக்கு மத்தியானம் சப்பாத்தி செய்யட்டுமா” என்று கேட்ட அம்மாவைப் பார்த்தேன்.

கண் சிவப்பாய் இல்லை. “என்னம்மா, நல்லாத் தூங்கினியா” என்றேன்.

“ஆமாண்டி நல்லாத் தூங்கினேன். நீ வாங்கி வந்த டானிக் ரொம்ப நல்ல மருந்தோ “ என்று சிரித்தபடி கூறிவிட்டு சென்றாள்.

அம்மா சமைத்ததனால், நான் இன்று நன்றாகச் சாப்பிட்டு விட்டு சீக்கிரமே ஆஃபீஸ் கிளம்பினேன். எதிர்வீட்டு மாமி என்னிடம் தன்னை பாண்டி பஜார் கோஆப்டெக்ஸில் இறக்கி விடச் சொன்னார். 30% தள்ளுபடிச் சேலை வாங்க வேண்டுமாம்.

கோஆப்டெக்ஸில் வண்டியை நிறுத்தி நானும் மாமியுடன் சென்றேன். “என்னடி இது, ஆஃபீசர் நீ, இந்தக் கிழவிக்காக வண்டியில் அழைத்துவந்து கடைக்குள்ளும் வருகிறாயே. உனக்கு நேரம் இருக்கா”

“இல்ல மாமி, இன்னும் 40 நிமிஷம் இருக்கு, 10 நிமிஷம் கழிச்சு கிளம்பறேன். மாமி ஒரு உதவி செய்யணும். எங்க அம்மாவுக்கு இப்பல்லாம் உடம்பு சரியில்லாம போறது. 3 தடவை டாக்டர்ட்ட போனோம். என்ன பிரச்சனைன்னு தெரியல்ல. நேத்து ஒரே தலைவலி, 4 நாளா தூக்கம் இல்ல. டாக்டர்ட்ட நான் மட்டும் போய் ஒரு டானிக் வாங்கி வந்தேன். இன்னக்கு திடீர்ன்னு சீக்கிரம் எழுந்து சமைச்சிட்டார். ஏதாவது வருத்தமான்னு தெரியல்ல. நீங்க முடிஞ்சப்ப போய் அவங்களைப் பாத்துக்கணும்”

“நான் ஒண்ணு சொன்னா நீ கோபப் பட மாட்டியே.  நீ மொதல்ல ஒங்க வீட்டு TVஐ வித்துடு. இல்லே, அத ஏதாவது ரிப்பேர் பண்ணி ஓட முடியாதபடி பண்ணு. ஒங்கம்மாவுக்கு எல்லாம் சரியாப் போகும்.”

“என்ன மாமி, அவளுக்கு வயசு 80க்குமேல. நானும் ஆஃபீஸ் போயிடறேன். வீட்டில் தனியாய் எப்படி இருப்பாள். TV தான் அவளுக்கு துணை மாமி.”

“இல்லேடி,  TV தான் ஒங்கம்மாவுக்கு வினை. ஒரு வாரமா சன் டிவில தெய்வமகள் சீரியல்ல வர்ர ஹீரோயின் சத்யா ஹைதராபாத் போய் மாட்டிண்டு அவஸ்தைப் படுறதைப் பாத்துட்டு அவளுக்கு ரொம்ப கவலையாய் போய் விடுகிறது. அந்த நல்ல பெண் சத்யா அந்த கொடுமைக்காரி காயத்ரி பண்ற சூழ்ச்சியிலே அவளுக்கு ஏதாவது உயிருக்கு பாதிப்பு வந்துடுமோன்னு, தினமும் ஒங்கம்மா அழுது அழுது தூங்க மாட்டேங்கறா. ஒண்ணு நான் சொல்ற மாதிரி TVஐ ரிப்பேர் ஆக்கிடு. இல்லை ஒங்க ஆஃபீஸுக்குப் பக்கத்துலேதானே சன் டிவி ஆஃபீஸ் இருக்கு, அங்கே ஒங்க MD யோட போய் கதையை நல்லபடியா மாத்தி எழுதச் சொல்லு, ஒங்கம்மாவோட உயிர் அந்த சீரியல்லதான் இருக்குன்னு சொன்னா, அந்த டைரக்டரைக் கூப்ட்டு கதையை மாத்தினாலும் மாத்துவா” என்றார்.

என் அம்மாவைக் குறித்து இப்படிச் சொல்லிவிட்டாரே என்று எனக்கு கோபம் ஏற்பட்டது. “சரி மாமி, நான் அதைப் பாத்துக்கறேன். நீங்களும் ஓய்வா இருக்கும்போது போய் அம்மாவைப் பாத்துக்கோங்க”

“அதெல்லாம் முடியாது. அடிக்கடி நான் போனால் என்னையும் அந்த அழுகை சீரியல் எல்லாம் பாக்க வச்சிடுவா. எனக்கு கொஞ்ச நஞ்சம் இருக்கிற மூளையும் போய்விடும்.”

கோபத்தை ஸ்கூட்டரிடம் காட்டியதில், ஸ்டாண்ட் காலில் இடித்து, கணுக்காலில் ரத்தம். மஞ்சள் சுடிதாரில் சிகப்பு ரத்தம். வீட்டுக்குப் போய் சுடிதார் மாற்ற நேரம் இல்லை. “இந்த அம்மா சனியனை சாயங்காலம் வந்து வைத்துக் கொள்வோம்” என்று கறுவி விட்டு ஆஃபீஸ் சென்றேன்.

இன்றைக்குப் பார்த்து அந்த முசுடு GM முன் சீட்டில் உட்கார்ந்து இருந்தது. ““என்ன மேடம், 10.10 ஆகிறது. இந்தச் சுடிதார் ரொம்ப அழகு.” வழிந்த ஆளிடம் “40 வயசுக்கு மேல் சுடிதார் அழகா இருந்தா என்ன, இல்லைன்னா என்ன, அது மட்டும்தான் கேடு. எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்ல சார், டாக்டர்ட்ட போனோம். லேட்டாயிடுச்சு.”

இந்த மனிதனிடம் இப்படி பொய் சொல்லி நாளை ஆரம்பித்தாகி விட்டது.

நல்ல வேளை என் கணவர் இந்த ஆஃபீஸில் எனக்கு அதிகாரியாய் இல்லை. நான் பொய் சொன்னது தெரிந்தால் ஒவ்வொரு பொய்க்கும் பத்தடி விலகுவார். அவர் பத்து வருடம் என் ஆஃபீஸில் என்னுடன் வேலை பார்த்திருந்தால், என் பொய்யைக் கணக்குப் பார்த்து, இப்போது அனேகமாய் பாம்பேயும் தாண்டி அதிக தூரம் போய்விட்டிருப்பார்.

நான் வேலை செய்வது ஒரு லீகல் கன்சல்டன்சி கம்பெனியில். எங்கள் கம்பெனியில் உண்மை மிகவும் காஸ்ட்லியான ஒரு பொருள். மிகவும் அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் பயன்படுத்துவோம்.

—- இதெல்லாம் என்றும் தீராத கதை —————–

*********************************************************************************************************

தைரியமாய் இருங்கள். கதை தொடராது.

——- கற்பனை: கணபதி சுப்ரமணியன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.