எலும்பு முறிவு குணம் அடையவும் மற்றும் தீவினை தீரவும் அருளிச் செய்யும் திருப்பதிகம்

ஒம் நமசிவாய

திருஞானசம்பந்தர் தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருமாகறல் திருப்பதிகம்

திருச்சிற்றம்பலம்

770 விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல்விளை யாடல்அரவம்
மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி நீடுபொழில் மாகறலுளான்
கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்களணி செஞ்சடையினான்
செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள் தீருமுடனே.
3.72.1
771. கலையினொலி மங்கையர்கள் பாடலொலி யாடல்கவின் எய்தியழகார்
மலையின்நிகர் மாடமுயர் நீள்கொடிகள் வீசுமலி மாகறலுளான்
இலையின்மலி வேல்நுனைய சூலம்வலன் ஏந்தியெரி புன்சடையினுள்
அலைகொள்புன லேந்துபெரு மானடியை யேத்தவினை யகலுமிகவே.
3.72.2
772. காலையொடு துந்துபிகள் சங்குகுழல் யாழ்முழவு காமருவுசீர்
மாலைவழி பாடுசெய்து மாதவர்கள் ஏத்திமகிழ் மாகறலுளான்
தோலையுடை பேணியதன் மேலோர்சுடர் நாகமசை யாவழகிதாப்
பாலையன நீறுபுனை வானடியை யேத்தவினை பறையுமுடனே.
3.72.3
773. இங்குகதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்தியெழில் மெய்யுளுடனே
மங்கையரும் மைந்தர்களும் மன்னுபுன லாடிமகிழ் மாகறலுளான்
கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி செஞ்சடையி னானடியையே
நுங்கள்வினை தீரமிக ஏத்திவழி பாடுநுக ராவெழுமினே.
3.72.4
774. துஞ்சுநறு நீலமிருள் நீங்கவொளி தோன்றுமது வார்கழனிவாய்
மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கள்நட மாடல்மலி மாகறலுளான்
வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ் வானோர்மழு வாளன்வளரும்
நஞ்சமிருள் கண்டமுடை நாதனடி யாரைநலி யாவினைகளே.
3.72.5
775. மன்னுமறை யோர்களொடு பல்படிம மாதவர்கள் கூடியுடனாய்
இன்னவகை யாலினிதி றைஞ்சியிமை யோரிலெழு மாகறலுளான்
மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள் கங்கையொடு திங்களெனவே
உன்னுமவர் தொல்வினைகள் ஒல்கவுயர் வானுலகம் ஏறலெளிதே.
3.72.6
776. வெய்யவினை நெறிகள்செல வந்தணையும் மேல்வினைகள் வீட்டலுறுவீர்
மைகொள்விரி கானல்மது வார்கழனி மாகறலு ளான்எழிலதார்
கையகரி கால்வரையின் மேலதுரி தோலுடைய மேனியழகார்
ஐயனடி சேர்பவரை அஞ்சியடை யாவினைகள் அகலுமிகவே.
3.72.7
777. தூசுதுகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வனபொன் மாடமிசையே
மாசுபடு செய்கைமிக மாதவர்கள் ஓதிமலி மாகறலுளான்
பாசுபத விச்சைவரி நச்சரவு கச்சையுடை பேணியழகார்
பூசுபொடி யீசனென ஏத்தவினை நிற்றலில போகுமுடனே.
3.72.8
778. தூயவிரி தாமரைகள் நெய்தல்கழு நீர்குவளை தோன்றமருவுண்
பாயவரி வண்டுபல பண்முரலும் ஓசைபயில் மாகறலுளான்
சாயவிர லூன்றியஇ ராவணன தன்மைகெட நின்றபெருமான்
ஆயபுக ழேத்தும்அடி யார்கள்வினை யாயினவும் அகல்வதெளிதே.
3.72.9
779. காலின்நல பைங்கழல்கள் நீள்முடியின் மேலுணர்வு காமுறவினார்
மாலுமல ரானும்அறி யாமையெரி யாகியுயர் மாகறலுளான்
நாலுமெரி தோலுமுரி மாமணிய நாகமொடு கூடியுடனாய்
ஆலும்விடை யூர்தியுடை யடிகளடி யாரையடை யாவினைகளே.
3.72.10
780. கடைகொள்நெடு மாடமிக ஓங்குகமழ் வீதிமலி காழியவர்கோன்
அடையும்வகை யாற்பரவி யரனையடி கூடுசம் பந்தன்உரையான்
மடைகொள்புன லோடுவயல் கூடுபொழில் மாகறலு ளான்அடியையே
உடையதமிழ் பத்துமுணர் வாரவர்கள் தொல்வினைகள் ஒல்குமுடனே.
3.72.11

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – அடைக்கலங்காத்தநாதர், தேவியார் – புவனநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

வினை தீர்க்கும் பதிகம்

பாடல் எண் : 1
விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல்விளை யாடலரவம்
மங்குலொடு நீள்கொடிகண் மாடமலி நீடுபொழின் மாகறலுளான்
கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்களணி செஞ்சடையினான்
செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள் தீருமுடனே.பொழிப்புரை :
நன்றாக இஞ்சி விளையும் வயலில் பணிசெய்யும் பள்ளத்தியர்களின் பாடலும் , ஆடலுமாகிய ஓசை விளங்க , மேகத்தைத் தொடும்படி நீண்ட கொடிகளும் , உயர்ந்த மாடமாளிகைகளும் , அடர்ந்த சோலைகளும் கொண்ட திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் சிவபெருமான் . நறுமணம் கமழும் கொன்றை மலரும் , கங்கையும் , பிறைச்சந்திரனும் அணிந்த சிவந்த சடையை உடையவனும் , சிவந்த கண்களையுடைய திருமாலாகிய இடபத்தை உடையவனுமான அப்பெருமானின் திருவடிகளை இடைவிடாது நினைப்பவர்களின் தீவினைகள் உடனே தீரும் .பாடல் எண் : 2
கலையினொலி மங்கையர்கள் பாடலொலி யாடல்கவி னெய்தியழகார்
மலையினிகர் மாடமுயர் நீள்கொடிகள் வீசுமலி மாகறலுளான்
இலையின்மலி வேல்நுனைய சூலம்வல னேந்தியெரி புன்சடையினுள்
அலைகொள்புன லேந்துபெரு மானடியை யேத்தவினை யகலுமிகவே.பொழிப்புரை :
வேதாகமக் கலைகளைக் கற்பவர்களின் ஒலியும் , பெண்களின் பாடல் , ஆடல் ஒலிகளும் சேர்ந்து இனிமை தர , அழகிய மலையை ஒத்த உயர்ந்த மாட மாளிகைகளில் நீண்ட கொடிகள் அசைய செல்வ வளமிக்க திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . இலைபோன்ற அமைப்புடைய வேலையும் , கூர்மையான நுனியுடைய சூலத்தையும் , வலக்கையிலே ஏந்தி , நெருப்புப் போன்ற சிவந்த புன்சடையில் அலைகளையுடைய கங்கையைத் தாங்கிய அச்சிவபெருமானின் திருவடிகளைப் போற்ற வினை முற்றிலும் நீங்கும் .

பாடல் எண் : 3
காலையொடு துந்துபிகள் சங்குகுழல் யாழ்முழவு காமருவுசீர்
மாலைவழி பாடுசெய்து மாதவர்க ளேத்திமகிழ் மாகறலுளான்
தோலையுடை பேணியதன் மேலொர்சுடர் நாகமசை யாவழகிதாப்
பாலையன நீறுபுனை வானடியை யேத்தவினை பறையுமுடனே.

பொழிப்புரை :
துந்துபி , சங்கு , குழல் , யாழ் , முழவு முதலிய வாத்தியங்கள் ஒலிக்க , காலையும் மாலையும் வழிபாடு செய்து முனிவர்கள் போற்றி வணங்க மகிழ்வுடன் சிவபெருமான் திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் . அப்பெருமான் தோலாடையை விரும்பி அணிந்து , அதன்மேல் ஒளிவிடும் நாகத்தைக் கச்சாகக் கட்டி , அழகுறப் பால்போன்ற திருவெண்ணீற்றைப் பூசி விளங்குகின்றான் . அவனுடைய திருவடிகளைப் போற்றி வணங்க , உடனே வினையாவும் நீங்கும் .

பாடல் எண் : 4
இங்குகதிர் முத்தினொடு பொன்மணிக ளுந்தியெழின் மெய்யுளுடனே
மங்கையரு மைந்தர்களு மன்னுபுன லாடிமகிழ் மாகறலுளான்
கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி செஞ்சடையி னானடியையே
நுங்கள்வினை தீரமிக வேத்திவழி பாடுநுகரா வெழுமினே.

பொழிப்புரை :
ஒளிர்கின்ற முத்து , பொன் , மணி இவற்றை ஆபரணங்களாக அணியப்பெற்ற பெண்கள் தங்கள் துணைவர்களுடன் நீராடி மகிழ்கின்ற திருமாகறல் என்னும்
திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . அப்பெருமான் நறுமணம் கமழும் கொன்றையையும் , குளிர்ந்த சந்திரனையும் சிவந்த சடையில் அணிந்துள்ளான் . அவனுடைய திருவடிகளை உங்கள் வினைதீர மிகவும் போற்றி வழிபட எழுவீர்களாக .

பாடல் எண் : 5
துஞ்சுநறு நீலமிரு ணீங்கவொளி தோன்றுமது வார்கழனிவாய்
மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கணட மாடமலி மாகறலுளான்
வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ் வானொர்மழு வாளன் வளரும்
நஞ்சமிருள் கண்டமுடை நாதனடி யாரைநலி யாவினைகளே.

பொழிப்புரை :
நறுமணம் கமழும் நீலோற்பல மலர்கள் இருட்டில் இருட்டாய் இருந்து , இருள்நீங்கி விடிந்ததும் நிறம் விளங்கித் தோன்றுகின்றன . நிறையப் பூக்கும் அம்மலர்கள் தேனை வயல்களில் சொரிகின்றன . அருகிலுள்ள , மேகங்கள் படிந்துள்ள பூஞ்சோலைகளில் மயில்கள் நடனமாடுகின்றன . இத்தகைய சிறப்புடைய திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . அப்பெருமான் வஞ்சமுடைய மதயானையின் தோலை உரித்துப் போர்த்து மகிழ்கின்றான் . ஒப்பற்ற மழுப்படையை உடையவன் . நஞ்சையுண்டு மிக இருண்ட கழுத்தையுடையவன் . அத்தலைவனான சிவபெருமானின் அடியார்களை வினைகள் துன்புறுத்தா .

பாடல் எண் : 6
மன்னுமறை யோர்களொடு பல்படிம மாதவர்கள் கூடியுடனாய்
இன்னவகை யாலினிதி றைஞ்சியிமை யோரிலெழு மாகறலுளான்
மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள் கங்கையொடு திங்களெனவே
உன்னுமவர் தொல்வினைக ளொல்கவுயர் வானுலக மேறலெளிதே.

பொழிப்புரை :
என்றும் நிலைத்திருக்கும் வேதங்களை நன்கு கற்ற அந்தணர்களும் , பலவித தவக்கோலங்கள் தாங்கிய முனிவர்களும் கூடி இறைவனை இனிது இறைஞ்சும் தன்மையில் தேவர்களை ஒத்து விளங்குகின்ற திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . அப்பெருமான் மின்னல்போல் ஒளிரும் விரிந்த செஞ் சடையின்மேல் மலர்களையும் , கங்கையையும் , பிறைச் சந்திரனையும் அணிந்துள்ளான் . அப்பெருமானை நினைந்து வழிபடுபவர்களின் தொல்வினைகள் நீங்க , உயர் வானுலகை அவர்கள் எளிதில் அடைவர் .

பாடல் எண் : 7
வெய்யவினை நெறிகள்செல வந்தணையு மேல்வினைகள் வீட்டலுறுவீர்
மைகொள்விரி கானன்மது வார்கழனி மாகறலு ளானெழிலதார்
கையகரி கால்வரையின் மேலதுரி தோலுடைய மேனியழகார்
ஐயனடி சேர்பவரை யஞ்சியடை யாவினைக ளகலுமிகவே.

பொழிப்புரை :
கொடிய வினைகள் தாம் வந்த வழியே செல்லவும் , இனி இப்பிறவியில் மேலும் ஈட்டுதற்குரிய ஆகாமிய வினைகளை ஒழிக்க வல்லவர்களே ! மேகங்கள் தவழும் ஆற்றங்கரைச் சோலைகளிலுள்ள பூக்களிலிருந்து தேன் ஒழுகும் வயல்களையுடைய திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் யானையின் தோலை உரித்துப் போர்த்த அழகிய திருமேனியுடையவன் .யாவர்க்கும் தலைவனான அப் பெருமானின் திருவடிகளை நினைந்து வழிபடுபவர்களை வினையானது அடைய அஞ்சி அகன்று ஓடும் .

பாடல் எண் : 8
தூசுதுகி னீள்கொடிகண் மேகமொடு தோய்வனபொன் மாடமிசையே
மாசுபடு செய்கைமிக மாதவர்க ளோதிமலி மாகறலுளான்
பாசுபத விச்சைவரி நச்சரவு கச்சையுடை பேணியழகார்
பூசுபொடி யீசனென வேத்தவினை நிற்றலில போகுமுடனே.

பொழிப்புரை :
பொன்மயமான மாடங்களின் உச்சியில் கட்டப்பட்டுள்ள வெண்துகிலாலான கொடிகள் கருநிற மேகத்தைத் தொடுகின்ற மாசுபடு செய்கை தவிர வேறு குற்றமில்லாத , பெரிய தவத்தார்கள், வேதங்கள் ஓத விளங்கும் திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் பாசுபத கோலத்தை விரும்பி, வரிகளையுடைய விடமுடைய பாம்பைக் கச்சாக அணிந்த அழகுடையவன் . திருவெண்ணீற்றைப் பூசியவன் . அவனைப் போற்றி வழிபட வினையாவும் நில்லாது உடனே விலகிச் செல்லும் .
பாடல் எண் : 9
தூயவிரி தாமரைக ணெய்தல்கழு நீர்குவளை தோன்றமதுவுண்
பாயவரி வண்டுபல பண்முரலு மோசைபயின் மாகறலுளான்
சாயவிர லூன்றியவி ராவணன தன்மைகெட நின்றபெருமான்
ஆயபுக ழேத்துமடி யார்கள்வினை யாயினவு மகல்வதெளிதே.

பொழிப்புரை :
தூய்மையான தாமரை , நெய்தல் , கழுநீர் , குவளை போன்ற மலர்கள் விரிய , அவற்றிலிருந்து தேனைப் பருகும் வரிகளையுடைய வண்டுகள் பண்ணிசையோடு பாடுதலால் ஏற்படும் ஓசை மிகுந்த திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . அவன் தன் காற்பெருவிரலை ஊன்றி இராவணனின் வலிமை கெடுமாறு செய்தவன் . அப்பெருமானின் புகழைப் போற்றி வணங்கும் அடியவர்களின் வினை எளிதில் நீங்கும் .

பாடல் எண் : 10
காலினல பைங்கழல்க ணீண்முடியின் மேலுணர்வு காமுறவினார்
மாலுமல ரானுமறி யாமையெரி யாகியுயர் மாகறலுளான்
நாலுமெரி தோலுமுரி மாமணிய நாகமொடு கூடியுடனாய்
ஆலும்விடை யூர்தியுடை யடிகளடி யாரையடை யாவினைகளே.

பொழிப்புரை :
பைம்பொன்னாலாகிய வீரக்கழல்களை அணிந்த திருவடிகளையும் , நீண்ட சடைமுடியையும் காணவேண்டும் என்ற விருப்பமுடன் முயன்ற திருமாலும்  பிரமனும் அறியாவண்ணம் நெருப்புப் பிழம்பாய் ஓங்கி நின்ற சிவபெருமான் திருமாகறலில் வீற்றிருந்தருளுகின்றான் . உடம்பில் நாலிடத்து நெருப்பைக் கொண்டும் , தோலுரித்து மாணிக்கத்தைக் கக்கும் பாம்பணிந்தும் , அசைந்து நடக்கின்ற இடபத்தை வாகனமாகக் கொண்டுள்ள சிவபெருமானின் அடியார்களை வினைகள் அடையா .

பாடல் எண் : 11
கடைகொணெடு மாடமிக வோங்குகமழ் வீதிமலி காழியவர்கோன்
அடையும்வகை யாற்பரவி யரனையடி கூடுசம் பந்தனுரையால்
மடைகொள்புன லோடுவயல் கூடுபொழின் மாகறலுளா னடியையே
உடையதமிழ் பத்துமுணர் வாரவர்கள் தொல்வினைக ளொல்குமுடனே.

பொழிப்புரை :
வாயில்களையுடைய மிக உயர்ந்த நீண்ட மாடங்களும் , நறுமணம் கமழும் வீதிகளும் உடைய சீகாழியில் வாழ்பவர்கட்குத் தலைவனான திருஞானசம்பந்தன் , சிவபெருமானைச் சேர்தற்குரிய நெறிமுறைகளால் துதித்து , மடைகளில் தேங்கிய தண்ணீர் ஓடிப் பாய்கின்ற வயல்களும் , நெருங்கிய சோலைகளுமாக நீர்வளமும் , நிலவளமுமிக்க திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமானைப் போற்றி அருளிய இத்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் உணர்ந்து ஓதவல்லவர்களின் தொல்வினைகள் நீங்கும் .

வரலாறு

வினை தீர்க்கும் சிறப்பினை பெற்ற ஒரே ஒரு சிவ ஆலயம் திருமாகறல் ஏறத்தாழ ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஏழாம் நூற்றாண்டு கால கட்டத்தில் இம்மாபெரும் நிலபரப்பை இராஜேந்திர சோழன் ஆண்டு வந்தான். தற்போதைய காஞ்சிபுரம் மாநகருக்கு பதினாறு மைல் தொலைவில் செய்யாறு என்னும் வற்றாத ஆறு பாய்ந்து வந்தது. ஆற்றங்கரை ஓரத்தில் வேணுபுரம் என்னும் சிற்றூறில் மக்கள் அனைவரும் செல்வா செழிப்புடன் மக்கட்பேறு கொண்டு வாழ்வை நடத்திவந்தனர்.
அவ்வூரில் இந்திரனாலே உருவாக்கப்பட்ட அதிசைய பலாமரம் ஒன்று இருந்தது. மூத்த பிராம்மணர்கள் தலயில் சிகையும் காலில் பாதரட்சையும் இல்லாமல் வேணுபுரத்திலிருந்து சிதம்பரத்திற்கு கால் நடையாக பலா பழத்தை கொண்டு சேர்க்க வேண்டும்.
பலாபழமானது சிதம்பரம் நடராஜ பெருமானுக்கு நிவேதனம் செய்யப்பட்டு
இராஜாவுக்கு அனுப்பிவைக்கும் வழக்கம் இருந்து வந்தது. இராஜாவுடைய அரண்மனை திருச்சி அருகேயுள்ள உறையூர். பிரசாதத்தை இராஜாவும் அவரின் பந்துக்களும் மட்டுமே உட்கொள்ள வேண்டும். இது இராஜாவின் கட்டளை. வேணுபுரத்தில் இருந்த அறியாத பிராம்மண சிறுவன் வயதான முதியோர் நடந்து சிதம்பரத்திற்கு செல்வது மனதுக்கு ஒப்பாமல் மரத்தை எரித்துவிடுகிறான்.
மறுநாள் பலாபழம் இல்லாமல் நடராஜ பெருமானுக்கு பூஜை நடக்கிறது. இராஜாவின் படையாட்கள் கேட்கும் பொழுது பழமே வரவில்லை வேணுபுரம் சென்று விசாரித்து கொள்ளுங்கள் என்று சிதம்பரத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.
இராஜாவிடம் நடந்ததை கூறியவுடன் இராஜாவும் படையாட்களும் வேணுபுரம் செல்கின்றனர். மரத்தை எரித்த சிறுவன் தவறை ஒப்புக்கொள்கிறான். இராஜா அச்சிறுவனை நாடுகடத்த உத்தரவிடுகிறார்.
இராஜாவின் படையாட்கள் சிறுவனுடய கண்களை கட்டி அழைத்து செல்கின்றனர். மறுநாள் காலை பொழுது விடிந்த இடத்தில் சிறுவனுக்கு கண்ணை கட்டியிருந்த துணி அவிழ்த்து விடப்படுகிறது. அங்கிருந்து அவன் திரும்பி ஊருக்கு வருவதோ உறவினர்களை பார்ப்பதோ கூடாது இது இராஜாவின் கட்டளை. அவ்வாறு பொழுது விடிந்த ஊர் விடிமாகறல். தற்போதுள்ள திருவள்ளூர் மாவட்டம்.
இராஜா வேணுபுரத்தில் இருந்து இஞ்சி விளையும் காட்டின் வழியாக வரும்போது ஸ்வர்ண மயமான உடும்பை பார்க்கிறார். உடும்பை பிடிக்க அம்பு எய்கிறார் உடும்பானது பாதி புற்றுக்குள் செல்லும் பொழுது அம்பு தைக்கிறது. உடும்பின் இரத்தம் இராஜாவின் மீது தெறித்து பார்வையை இழக்கிறார். பார்வை இல்லாத இராஜா அரசாட்சியை நடத்த முடியாது. எனவே விநாயகரை நோக்கி தவம் செய்கிறார். உடனே இத்தலத்தின் பொய்யா மொழி
விநாயகர் அசரீரி குரலில் உடும்பாக காட்சி கொடுத்தவர் சிவபெருமான் என்றும் இங்கே உடும்பீசருக்கு கோயில் கட்டி குடமுழுக்கு செய்வாயாக என்று கூறியது. உடனே இராஜா அங்கே உடும்பு வால் வடிவில் சுயம்பு ஸ்வரூபியாக காட்சி நல்கிய சிவ பெருமானுக்கு கஜபிருஷ்ட வடிவில் விமானத்துடன் கோயில் கட்டி எலுமிச்சை பழத்தால் அபிஷேகம் செய்வித்தார். எலுமிச்சையின் விதை தானாகவே முளைத்து கோயில் கும்பாபிஷேகத்தில் மீண்டும் அம்மரத்தின் எலுமிச்சை அபிஷேகம் செய்த
உடன் இராஜாவுக்கு பார்வை கிடைத்தது.
மேலும் இராஜாவுக்கு சந்தான பாக்கியமும் செல்வ செழிப்பான வாழ்வை பெற வரத்தை வாங்கி மீண்டும் தன் தலைநகருக்கு சென்றதாக வரலாறு கூறுகிறது.மேலும் ஆற்றங்கரையோரம் தனி மண்டபத்தில் பொய்யாமொழி விநாயகர் காட்சி அளிக்கிறார். ஆற்றங்கரையோரம் உள்ள கடம்பனாதரின் உத்தரவுபடி மலையன், மாகரன் என்கிற அசுரர்களை வதம் செய்ய வேல் விடுகிறார் முருகர். மாகரன் என்ற அசுரனை மாகரலிலும் மலையன் என்கிற அசுரனை மலையாங்குலத்திலும் வதம் செய்த வேல் இளைத்து விழுந்த ஊர் இளையனார் வேலூர். ஆகையால் இவ்வூருக்கு பெயர் மாகரல். வதம் செய்த திருத்தலம் ஆகையால் முருகர் வடக்கு நோக்கி காட்சி தருகிறார்.
திருப்பரங்குன்றில் இருந்து தெய்வயானை திருமணகோலத்தோடு இத்தலத்தில் காட்சிதர வேண்டபட்டார். வதம் செய்த தலம் என்பதால் திருமணத்திற்காக இந்திரன் கொடுத்த சீதனம் வெள்ளை யானை மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.சிவ பெருமானுக்கு பன்னிரண்டு பெயர்கள். தேடிவரும் பக்தர்களுக்கு
அடைக்கலம் தருவதால் “அடைக்கலம் தந்த நாதர்” . மாசி மகம் தீர்த்தவாரி அதன் முன்பு பத்து நாள் உற்சவம் எனவே “மகம் வாழ்வித்தவர்”. இராஜாவுக்கு
உடும்பாக காட்சி தந்ததால் “உடும்பீசர்”. அம்பு பட்ட இடம் தழும்பாக
இருப்பதால் “பாரதத்தழும்பர்”. புற்றிலே ஒளிந்து கொண்டதால் “புற்றிடம்
கொண்டார்”. இராஜாவை ஷேத்திரத்தில் தங்கி கோயில் கட்ட பணிந்தமையால் “நிலையிட்ட நாதர்”. பக்தர்களின் மாங்கல்யத்தை காப்பதால் “மங்களம் காத்தவர்”. பக்தர்களின் வேண்டுகோள் எதுவாக இருந்தாலும் பரிவோடு அருள்புரிவதால் “பரிந்து காத்தவர்”. மாகறம் என்றால் உடும்பு. மாகறமாக காட்சி தருவதால் “திருமாகரலிசர்”. அகத்தியர் பூஜை செய்தமையால் “அகத்தீசர்”. ஆபத்தில் உதவும் பெருந்தகை ஆதலால் “ஆபத்சகாயர்”. இராஜாவை ஆட்கொண்டமையால் “தடுத்தாட் கொண்டவர்”. இது ஓலை சுவடிகளில் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.

One thought on “எலும்பு முறிவு குணம் அடையவும் மற்றும் தீவினை தீரவும் அருளிச் செய்யும் திருப்பதிகம்

  1. திருமாகறல் தல வரலாற்றனை தெளிவாகத் தெரிந்து கொண்டேன் நன்றி முத்துராமன்

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.