ஸ்ரீமத் பகவத்கீதை (17) — சிரத்தாத்ரய விபாக யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை – பொழிப்புரை

ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா

 பதினேழாவது அத்தியாயம் –  சிரத்தாத்ரய விபாக யோகம்

 1. அர்ஜுனன் கேட்கிறார் – “கிருஷ்ணா! எவர்கள் சாஸ்திர விதிமுறைகளை மீறி, சிரத்தையால் உந்தப்பட்டு, தெய்வங்களை வழிபடுகிறார்களோ, அவர்களுடைய நிலைதான் என்ன? சத்துவ குணமுடையதா? ரஜோ குணமுடையதா? அல்லது தமோகுணமுடையதா?”
 2. ஸ்ரீபகவான் சொல்கிறார் – “மனிதர்களுக்கு அறநெறி முறையின்றி இயல்பாக உண்டான அந்தச் சிரத்தை சத்துவ குணமுடையது, ரஜோ குணமுடையது, தமோ குணமுடையது என்று மூன்றுவிதமாகவே இருக்கிறது. அதனை, நீ என்னிடமிருந்து கேள்.
 3. பரதகுலத் தோன்றலே! எல்லா மனிதர்களுக்கும் சிரத்தை அவர்களுடைய அந்தக்கரணத்திற்கு ஏற்றவாறு அமைகிறது. மனிதன் சிரத்தையே உருவானவன். ஆகையினால், எந்த மனிதன் எந்தச் சிரத்தையோடு கூடியவனோ, அவன் அந்தச் சிரத்தையின் தன்மையுடையவனே.
 4. சத்துவ குணம் நிறைந்த மனிதர்கள் தேவர்களை வழிபடுகிறார்கள். ரஜோ குணமுடையவர்கள் யக்ஷர்களையும் அரக்கர்களையும் வழிபடுகிறார்கள். மற்ற தாமஸ குணமுடைய மக்கள் பிரேத பூதங்களை வழிபடுகிறார்கள்.
 5. எந்த மனிதர்கள் சாஸ்திர விதிமுறைகளை விடுத்து, மனம் போனபடி கொடிய தவம் செய்கிறார்களோ, டாம்பீகம், அகங்காரம் இவற்றோடு பேராசை, விருப்பம் மற்றும் உடல்வலிமை – இவற்றின் மீது கர்வமும் கொண்டுள்ளார்களோ –
 6. உடல் உருவில் உள்ள பூத சமுதாயத்தையும், உள்ளத்தில் உறையும் பரமாத்மாவான என்னையும் துன்புறுத்துகிறார்களோ, அந்த அறிவிலிகளை, நீ அசுரப் பண்பு உடையவர்கள் என அறிந்து கொள்.
 7. உணவும் எல்லோருக்கும் தத்தம் இயல்புக்கேற்றவாறு மூன்று வகைகளில் பிடித்ததாக உள்ளது. மேலும், அவ்வாறே யாகமும் தவமும் தானமும் மூவகைப்படும். அவற்றின் தனித்தன்மை கொண்ட இந்த வேறுபாட்டை (நீ என்னிடமிருந்து) கேட்டுக் கொள்.
 8. ஆயுள், அறிவு, வலிமை, உடல்நலம், இன்பம், அன்பு – இவற்றை வளர்க்கின்றவையாகவும், ரஸம் உள்ளவையாகவும், நெய்ப்புடையவையாகவும், உடலில் நீண்ட நேரம் தங்குபவையாகவும், இயல்பாகவே மனத்திற்குப் பிடித்தவையாகவும் இருக்கக் கூடிய உணவு வகைகள் சத்துவ குணமுடையவர்களுக்கு விருப்பமானவை.
 9. கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, மிக்க சூடு, காரம் – இவற்றுடன் கூடிய வறண்ட, எரிச்சல் உண்டுபண்ணக் கூடிய மற்றும் துன்பம், கவலை, நோய் – இவற்றை உருவாக்கக் கூடிய உணவு வகைகள் ரஜோ குணமுடையவனுக்கு விருப்பமானவை.
 10. எந்த உணவு அரைவேக்காடு ஆனதோ, ரசமற்றதோ, துர்நாற்றமுடையதோ, பழையதோ, மேலும் உண்டு மிகுந்ததோ, தூய்மையும் அற்றதோ, அந்த உணவு தாமஸ குணமுடையவர்களுக்கு விருப்பமானது.
 11. எந்த யாகம் சாஸ்திரங்களுக்கு உட்பட்டதோ, செய்யப்பட வேண்டிய கடமைதான் என்று மனத்தை ஒருநிலைப்படுத்திப் பயனில் பற்றற்றவர்களால் செய்யப் படுகின்றதோ, அது சாத்விகமான யாகம்.
 12. ஆனால் அர்ஜுனா! பகட்டுக்காகவோ அல்லது பயனைக் கருத்தில் கொண்டோ, எந்த யாகம் செய்யப்படுகிறதோ, அந்த யாகத்தை ராஜஸம் என்று தெரிந்து கொள்.
 13. சாஸ்திரமுறை வழுவியும் அன்னதானம் அளிக்கப் படாமலும், தட்சணை கொடுக்கப் படாமலும், மேலும் சிரத்தை இல்லாமலும் செய்யப் படுகின்ற யாகத்தைத் தாமஸம் என்று கூறுவார்கள்.
 14. தெய்வங்கள், அந்தணர்கள், பெரியோர்கள், ஞானிகள் – இவர்களைப் பூஜித்தல், தூய்மை, நேர்மை, பிரம்மசரியம், அகிம்சை ஆகியவை உடலால் செய்யக் கூடிய தவம் என்று சொல்லப்படுகிறது.
 15. எது பிறர் மனத்தைப் புண்படுத்தாமல் இனிமையும் நலனும் அளிக்கக் கூடியதாகவும், உண்மையாகவும் இருக்குமோ, அந்தப் பேச்சும், வேத சாஸ்திரங்களை ஓதுதலும், பகவானுடைய நாம கீர்த்தனமும் வாக்கினால் செய்யக்கூடிய தவம் என்று கூறப்படுகிறது.
 16. மனமகிழ்ச்சி, அமைதியான இயல்பு, பகவானை இடைவிடாது சிந்தித்திருக்கின்ற இயல்பு, மனவடக்கம், உள்ளத்தூய்மை – இவையெல்லாம் மனத்தால் ஆற்றக்கூடிய தவம் எனப்படுகின்றன.
 17. பயனில் கருத்தில்லாத யோகிகளால் மிகுந்த சிரத்தையுடன் செய்யப்படுகின்ற மனம், மொழி, மெய் – இவற்றால் ஆற்றப்படுகின்ற அந்த மூன்றுவிதமான தவம் சாத்விகமானது என்று சொல்லப்படுகிறது.
 18. எந்தத் தவம் பாராட்டுதலையும் பெருமையையும் போற்றுதலையும் குறிக்கோளாகக் கொண்டதோ மற்றும் தன்னலம் கருதும் இயல்பினாலோ, ஆடம்பரத்திற்காகவோ செய்யப் படுகிறதோ, பயன் தருமா, தராதா என்ற நிச்சயமில்லாத, அழியக் கூடிய, உறுதியற்ற பயனைத் தரும் அந்தத் தவம், இங்கு ராஜஸம் என்று கூறப்படுகிறது.
 19. எந்தத் தவம் முரட்டுப் பிடிவாதத்தினால் மனம்-மொழி-மெய்களுக்குத் துன்பம் இழைப்பதற்காகவோ அல்லது பிறருக்குத் தீங்கு இழைப்பதற்காகவோ செய்யப் படுகிறதோ, அந்தத் தவம் தாமஸம் எனப்படும்.
 20. தானம் செய்வது தம் கடமை எனக்கருதி, எந்த தானம் உரிய இடத்திலும் உரிய காலத்திலும் தகுதியானவருக்கும், தனக்குப் பிரதி உபகாரம் செய்யாதவர் ஆயினும் அவருக்கும் தன்னலமின்றிக் கொடுக்கப் படுகிறதோ, அத்தகைய தானம் சாத்விகம் என்று கருதப்படுகிறது.
 21. ஆனால், எந்த தானம் மன வருத்தத்தோடோ, கைம்மாறு கருதியோ, பயனைக் கருத்தில் கொண்டோ கொடுக்கப் படுகிறதோ, அந்த தானம் ராஜஸம் எனப்படும்.
 22. எந்த தானம், மரியாதையின்றி இகழ்ச்சியோடு தகாத இடத்திலும் தகாத காலத்திலும் தகுதியற்றவர்களுக்குக் கொடுக்கப் படுகிறதோ, அது தாமஸம் எனப்படுகிறது.
 23. ஓம் தத் ஸத் என்று மூன்றுவிதமாக ஸத் சித் ஆனந்தமயமான பிரம்மத்தினுடைய பெயர் மொழியப்பட்டுள்ளது. அந்த பிரம்மத்தினால் படைப்பின் ஆரம்பத்தில் பிராமணர்களும் வேதங்களும் வேள்விகளும் படைக்கப்பட்டன.
 24. ஆகையினால், வேதம் ஓதும் பெரியோர்களுடைய சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள வேள்வி, தானம், தவம் முதலிய கர்மங்கள் எப்பொழுதும் ‘ஓம்’ என்கிற பரமாத்மாவின் திருப்பெயரை உச்சரித்துக் கொண்டே தொடங்கப் படுகின்றன.
 25. ‘தத்’ என்று அழைக்கப்படுகின்ற பரமாத்மாவுக்கே எல்லாம் உரியது என்ற உணர்வுடன் பயனை விரும்பாமல் பலவிதமான வேள்வி, தவம் ஆகிய செயல்களும் தானமாகிய கர்மங்களும், மோட்சமாகிய நலன் நாடும் நல்லோரால் செய்யப் படுகின்றன.
 26. ‘ஸத்’ என்ற பகவானுடைய பெயர் உண்மை என்ற கருத்திலும் நல்லெண்ணம் என்ற கருத்திலும் உபயோகப் படுத்தப் படுகிறது. அங்ஙனமே, அர்ஜுனா! உயர்ந்த மங்களமான கர்மத்திலும் ‘ஸத்’ என்ற சொல் உபயோகிக்கப் படுகிறது.
 27. வேள்வியிலும் தவத்திலும் தானத்திலும் எந்த உறுதி நிலை இருக்கிறதோ, அதுகூட ‘ஸத்’ என்றே கூறப்படுகிறது. மேலும், பரமாத்மாவின் பொருட்டுச் செய்யப் படுகின்ற அந்தச் செயல் நிச்சயமாக ‘ஸத்’ என்றே அழைக்கப் படுகிறது.
 28. அர்ஜுனா! சிரத்தையின்றிச் செய்யப்படுகின்ற ஹோமமும், அளிக்கப்படுகின்ற தானமும், அவ்வாறே செய்யப்படும் தவமும், செய்யப்பட்ட மங்கள கர்மங்களும் ‘அஸத்’ என்று சொல்லப் படுகின்றன. எனவே, அவை இந்த உலகிலும் நன்மை பயவாதவை; இறந்த பிறகும் நன்மை பயவாதவை.”

இதுவரை ‘சிரத்தாத்ரய  விபாக யோகம்’ என்ற பதினேழாவது அத்தியாயம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.