ஸ்ரீமத் பகவத்கீதை (18) — மோக்ஷ ஸந்யாஸ யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை – பொழிப்புரை

ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா

 பதினெட்டாவது அத்தியாயம் –  மோக்ஷ ஸந்யாஸ யோகம்

 1. அர்ஜுனன் கேட்கிறார் – “நீண்ட புஜங்கள் உடையவரே! அந்தர்யாமியே! கேசியை வதைத்த வாசுதேவனே! ஸந்யாஸம், தியாகம் – இவை பற்றிய தத்துவங்களைத் தனித்தனியாக அறிந்து கொள்ள விரும்புகிறேன்.”
 2. ஸ்ரீபகவான் கூறுகிறார் – “ பண்டிதர்கள், விரும்பிய பொருளைப் பெறுவதற்காகச் செய்யப்படும் காம்ய கர்மங்களைத் துறத்தலை ஸந்யாஸம் என்று அறிகிறார்கள். மற்றும் சில அராய்ச்சியாளர்கள் கர்மங்கள் அனைத்தினுடைய பயனையும் துறத்தலையே தியாகம் என்று கூறுகிறார்கள்.
 3. சில அறிஞர்கள், கர்மங்கள் அனைத்தும் குற்றமுடையவை, ஆகவே, துறக்கப்பட வேண்டியவை என்று சொல்கிறார்கள். இன்னும் சிலர் வேள்வி, தானம், தவம் என்கிற கர்மங்கள் துறக்கத் தகுந்தன அல்ல என்று கூறுகிறார்கள்.
 4. மனிதர்களில் சிறந்தவனே! அர்ஜுனா! ஸந்யாஸம், தியாகம் – இவை இரண்டிலும் முதலில் தியாகத்தைப் பற்றி, நீ என்னுடைய கொள்கையைக் கேள். ஏனெனில் தியாகம் சாத்விகம், ராஜஸம், தாமஸம் என்ற பிரிவுகளோடு மூன்றுவிதமாகக் கூறப்பட்டுள்ளது.
 5. வேள்வி, தானம், தவம் ஆகிய கர்மங்கள் துறக்கத் தக்கனவல்ல. அவை கட்டாயம் செய்யப்பட வேண்டியவைதான். ஏனெனில், வேள்வி, தானம், தவம் – இம்மூன்றுமே அறிவுடையவர்களைப் பரிசுத்தப்படுத்தக் கூடியன.
 6. ஆகையால் பார்த்தனே! இந்த வேள்வி, தானம், தவம் என்ற கர்மங்களும், அப்படியே மேலும் செய்யவேண்டிய கடமைகளும், பற்றையும் பயன்களையும் தியாகம் செய்து கட்டாயமாகச் செய்யப்பட வேண்டியன என்பது என்னுடைய தீர்மானிக்கப்பட்ட உயர்ந்த கொள்கை.
 7. (விலக்கப்பட்ட கர்மங்களும், பயனை எதிர்பார்த்துச் செய்யப்படும் கர்மங்களும் துறக்கப்பட வேண்டியனவே.) ஆனால், விதிக்கப்பட்ட கர்மத்தைச் செய்யாமல் விடுதல் தகாது. ஆகையால், அறியாமையினால் அதைத் தியாகம் செய்தல் தாமஸத் தியாகம் என்று சொல்லப்படுகிறது.
 8. எது செய்ய வேண்டிய கர்மமோ, அதைத் துன்பம் என்றே நினைத்து உடல் வருந்துமோ என்ற பயத்தினால் ஒருவன் செய்யாமல் விடுவானேயானால், அவன் ராஜஸத் தியாகத்தைச் செய்து, தியாகத்திற்குரிய பயனை அடையவே மாட்டான்.
 9. அர்ஜுனா! சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட எந்தக் கர்மம் கட்டாயம் செய்யப்படத்தான் வேண்டும் என்று கருதிப் பற்றையும் பயனையும் விடுத்துச் செய்யப் படுகிறதோ, அதுவே சாத்விகமான தியாகம் என்று மதிக்கப்படுகிறது.
 10. எந்த மனிதன் நன்மை பயக்காத கர்மத்தை வெறுப்பதில்லையோ, மேலும் நன்மை பயக்கக் கூடிய கர்மத்தில் பற்றும் கொள்வதில்லையோ, அந்த சுத்தமான சத்துவ குணம் நிறைந்தவன் தான் ஸந்தேகம் நீங்கப் பெற்றவனும் அறிஞனும் உண்மையான தியாகியும் ஆவான்.
 11. ஏனெனில், உடல்பெற்ற மனிதன் யாராலும் கர்மங்கள் அனைத்தையும் முற்றிலுமாகத் தியாகம் செய்வது சாத்தியமன்று. ஆகையால், எவன் கர்மத்தின் பயனைத் துறக்கிறானோ, அவனே தியாகம் செய்தவன் என்று சொல்லப் படுகிறான்.
 12. கர்மத்தின் பயனைத் துறக்காத மனிதர்களுக்குக் கர்மத்தினுடைய நல்லதும் தீயதும் மேலும் இரண்டும் கலந்ததுமான மூன்றுவிதமான பயன் இறந்தபின் கட்டாயமாகக் கிடைக்கின்றது. ஆனால், கர்மபயனைத் துறந்த மனிதர்களுக்குக் கர்மங்களுடைய பயன் ஒருபோதும் ஏற்படாது.
 13. அகன்ற தோள் படைத்தவனே! எல்லாக் கர்மங்களும் நிறைவேறுதற்கு இந்த ஐந்து காரணங்கள் கர்மங்களின் முடிவிற்கான உபாயத்தைக் கூறும் ஸாங்க்ய சாஸ்திரத்தில் கூறப்பட்டன. அவற்றை நீ என்னிடமிருந்து நன்கு அறிந்துகொள்.
 14. கர்மங்களின் ஸித்தியைப் பெறும் விஷயத்தில் கர்மம் செய்கிற உடலும், செய்கிறவனும், தனித்தனியான இந்திரியங்களும் அதன் உபகரணங்களும், பலவிதமான தனித்தனியான செயல்களும், அவ்வாறே ஐந்தாவதாக தெய்வமும் காரணமாகும்.
 15. மனிதன் மனம்-வாக்கு-உடலினால் சாஸ்திரங்களுக்கு இசைந்தவாறோ அல்லது அதற்கு முரணாகவோ எந்தச் செயல்களைச் செய்கிறானோ, அதற்கு இந்த ஐந்தும் காரணங்கள்.
 16. ஆனால், இங்ஙனம் இருக்க, எந்த மனிதன் புத்தியில் தூய்மை இல்லாமையினால் கர்மங்களைச் செய்வதில் தூயதான ஆத்மாவையே செய்பவனாகக் காண்கிறானோ, அந்தத் தூய்மையற்ற புத்தியுடைய அஞ்ஞானி உண்மையைப் புரிந்து கொள்ளவில்லை.
 17. எந்த மனிதனுடைய உள்ளத்தில் நான் செய்கிறேன் என்னும் எண்ணம் இல்லையோ, அவ்வாறே எவனுடைய புத்தி உலகியல் பொருட்களிலும் செயல்களிலும் ஒட்டுவதில்லையோ, அவன் இவ்வுலகங்கள் அனைத்தையும் (மக்கள் அனைவரையும்) கொன்றாலும் உண்மையில் கொல்வதில்லை. மேலும், பாவத்தினால் தளைப்படுவதும் இல்லை.
 18. அறிபவன், அறிவு, அறியப்படுவது என்ற மூன்றும் (ஒன்று சேர்ந்து) கர்மத்தைத் தூண்டுவன. மேலும், செயல்புரிபவன், கரணம் (மனம், புத்தி, புலன்கள்), செயல் என்ற மூன்றும் கர்மத்தின் தொகுப்பு (அதாவது, இம்மூன்றும் ஒன்று சேர்வதாலேயே கர்மம் உண்டாகிறது).
 19. குணங்களின் எண்ணிக்கையைக் கூறும் ஸாங்க்ய சாஸ்திரத்தில் ஞானமும் செயலும் செய்பவனும் குணங்களின் வேற்றுமையினால் மும்மூன்றாகவே சொல்லப்படுகின்றன. அவற்றையும் நீ என்னிடமிருந்து உள்ளவாறு கேட்டுக் கொள்.
 20. எந்த ஞானத்தினால் மனிதன் தனித்தனியான உயிரினங்கள் அனைத்திலும் ஒன்றேயானதும் அழிவற்றதுமான பரமாத்மாவின் இருப்பைப் பிரிவற்றதாக (எங்கும் சமமாக உள்ளதாக)ப் பார்க்கிறானோ, அந்த ஞானத்தைச் சாத்விகம் என்று அறிவாயாக.
 21. ஆனால், எந்த ஞானத்தின் மூலமாக மனிதன் உயிரினங்கள் அனைத்திலும் தனித்தனியான, விதவிதமான இருப்புகளைத் தனித்தனியாக அறிகிறானோ, அந்த ஞானத்தை ராஜஸம் என்று அறிந்துகொள்.
 22. ஆனால், பிரகிருதி காரியத்தின் விளைவான உடல் ஒன்றையே அனைத்தும் என்று பற்றுக் கொண்டுள்ள எந்த ஞானம் உண்டோ, அது யுக்திக்குப் பொருந்தாதது; உண்மைப் பொருளை உணர்த்தாதது; அற்பமானது. ஆகவே, இந்தக் கருத்து தாமஸம் என்று கூறப்படுகிறது.
 23. எந்தச் செயல் சாஸ்திரங்களில் விதிக்கப் பட்டுள்ளதோ, ‘நான் செய்கிறேன்’ என்ற அபிமானமின்றிப் பயனில் விருப்பம் கொள்ளாத மனிதனால் விருப்பு-வெறுப்பின்றிச் செய்யப்படுகிறதோ, அச்செயல் சாத்விகம் என்று சொல்லப்படுகிறது.
 24. ஆனால், எந்தச் செயல் கடுமையான உழைப்பினால் நிறைவேறக் கூடியதோ, அவ்வாறே போகப்பயனில் கருத்துடையவனாலோ அல்லது அகங்காரமுடையவனாலோ செய்யப்படுகிறதோ, அந்தச் செயல் ‘ராஜஸம்’ எனப்படுகிறது.
 25. எந்தச் செயல் விளைவையும் இழப்பையும் துன்பத்தையும் திறமையையும் ஆராயாமல் வெறும் அஞ்ஞானத்தினால் தொடங்கப்படுகிறதோ, அந்தச் செயல் ‘தாமஸம்’ என்று கூறப்படுகிறது.
 26. பற்றற்றவனாகவும், நான் என்ற அகங்காரத்தைக் காட்டும் சொல்லைக் கூறாதவனாகவும், உறுதியும், ஊக்கமும் உடையவனாகவும், செயல் கைகூடுதல், கைகூடாமை – இவற்றில் மகிழ்ச்சி, துயரம் முதலிய மாறுபாடற்றவனாகபும் இருக்கின்ற அந்த கர்த்தா, சாத்விகன் எனப்படுகிறான்.
 27. பற்றுடன் கூடியவன், செயலின் பயனை விரும்புபவன், பேராசையுள்ளவன், பிறரைத் துன்புறுத்தும் தன்மை கொண்டவன், தூய்மையற்ற நடத்தையுள்ளவன், மகிழ்ச்சியாலும் துயரத்தாலும் பாதிக்கப் படுபவன் – இத்தகைய கர்த்தா ‘ராஜஸன்’ என்று அழைக்கப் படுகிறான்.
 28. கட்டுப்படுத்தப்படாத மனமும், புலன்களும் உடையவனும், அறிவு முதிர்ச்சி அடையாதவனும், கர்வமுடையவனும், வஞ்சகனும், பிறருடைய வாழ்க்கையைக் கெடுப்பவனும், கவலை கொண்டவனும், சோம்பேறியும், காலம் கடத்துபவனுமான கர்த்தா ‘தாமஸன்’ என்று கூறப்படுகிறான்.
 29. அர்ஜுனா! இப்பொழுது நீ முக்குணங்களுக்கேற்பவே புத்திக்கும் மனஉறுதிக்கும் ஏற்படும் மூன்றுவிதமான பாகுபாட்டை முழுமையாகவும் தனித்தனியாகவும் நான் கூறக்கேள்.
 30. அர்ஜுனா! எந்த புத்தி, பிரவிருத்தி- நிவிருத்தி மார்க்கத்தையும், செய்யத் தகுந்தது- செய்யத்தகாதது என்பதையும், பயம்-பயமின்மையையும், தளை-மோட்சத்தையும் உண்மையாக அறிகிறதோ, அந்த புத்தி சாத்விகமானது.
 31. பிருதையின் மைந்தனே! மனிதன் எந்த புத்தியினால் தர்மத்தையும் அதர்மத்தையும் செய்யத்தகுந்த காரியத்தையும் செய்யத்தகாத காரியத்தையும் கூட உள்ளபடியன்றி அறிகிறானோ, அந்த புத்தி ராஜஸம் எனப்படும்.
 32. அர்ஜுனா! எந்த புத்தி தமோகுணத்தினால் சூழப்பட்டு அதர்மத்தைத் தர்மம் என்றும், எல்லாப் பொருட்களியும் அவற்றின் உண்மைத் தன்மைக்கு மாறாகவும் நினைக்கிறதோ, அந்த புத்தி தாமஸமானது.
 33. அர்ஜுனா! பகவானைத் தவிர வேறு எந்த விஷயத்திலும் சிந்திக்காத எந்த உறுதியினால் மனிதன் தியான யோகத்தின் மூலம் மனம், பிராணன், புலன்கள் – இவற்றினுடைய செயல்களை நிலைநிறுத்துகிறானோ, அந்த உறுதி சாத்விகமானது.
 34. ஆனால், பிருதையின் மைந்தனே! அர்ஜுனா! பயனில் விருப்பமுடைய மனிதன் எந்த உறுதியினால் மிகுந்த பற்றோடு அறம், பொருள், இன்பங்களை அடைவதிலேயே உறுதியாக இருக்கிறானோ, அந்த உறுதி ராஜஸமாகிறது.
 35. பார்த்தா! தீய புத்தி கொண்டவன் எந்த உறுதியினால் தூக்கத்தையும் அச்சத்தையும் கவலையையும் துயரத்தையும் செருக்கையும் கூட விடாமல் உறுதியுடன் பற்றுகிறானோ, அந்த உறுதி தாமஸமானது.
 36. பரதகுலச் செம்மலே! இப்பொழுது மூன்று விதமான சுகம் பற்றியும் நீ என்னிடம் கேள். எந்தச் சுகத்தில் சாதகனான மனிதன் பஜனை, தியானம், சேவை முதலிய பயிற்சியினால் இன்புறுகிறானோ, துன்பத்தின் முடிவையும் அடைகிறானோ, அந்தச் சுகம் சாதனையின் தொடக்கத்தில் விஷத்தைப்போலத் தோன்றினாலும் விளைவில் அமிர்தத்திற்கொப்பாக இருக்கும். ஆகவே, பகவான் பற்றிய தெளிவான அறிவினால் ஏற்படக் கூடிய அந்தச் சுகம் சாத்விகம் என்று கூறப்படுகிறது.
 37. எந்தச் சுகம் போகப் பொருட்களில் புலன்கள் திளைப்பதால் உண்டாகிறதோ, அந்தச் சுகம் தொடக்கத்தில் (அனுபவிக்கும் காலத்தில்) அமுதத்திற்கொப்பாகத் தோன்றினாலும் விளைவில் நஞ்சுக்கு ஒப்பாகும். ஆகையால், அந்தச் சுகம் ராஜஸம் என்று கூறப்படுகிறது.
 38. எந்தச் சுகம் அனுபவிக்கும் காலத்திலும் விளைவிலும் ஆத்மாவை மயக்கமடையச் செய்கிறதோ, தூக்கம், சோம்பல், கவனமின்மை – இவற்றிலிருந்து தோன்றும் அந்தச் சுகம் தாமஸம் என்று கூறப்படுகிறது.
 39. பிரகிருதியில் உண்டான இந்த மூன்று குணங்களிலிருந்து விடுபட்டதாக எந்தப் பிராணியும் நில உலகிலோ, ஆகாயத்திலோ, வானவர்களிலோ அல்லது இவற்றைத் தவிர வேறு இடத்திலோ (எங்கும்) இல்லை.
 40. எதிரிகளை வாட்டுபவனே! பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் மற்றும் நான்காம் வர்ணத்தவருடைய கர்மங்கள் இயல்பிலிருந்து உண்டான குணங்களுக்கு ஏற்பப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன.
 41. மனவடக்கம்; புலனடக்கம்; ஸ்வதர்மத்தைக் கடைப் பிடிப்பதற்காகத் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுதல்; அகத்தூய்மை-புறத்தூய்மை; பிறர் குற்றம் பொறுத்தல்; மனம், புலன், உடல் – இவற்றில் நேர்மை; வேதம், சாஸ்திரம், கடவுள், பரலோகம் – இவற்றில் நம்பிக்கை; வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றல்- கற்பித்தல்; பரமாத்மத் தத்துவத்தை அனுபவம் மூலம் உணர்தல் – இவையே பிராமணர்களுக்கு இயல்பாகவே உண்டான கர்மங்கள்.
 42. சூரவீரத்தனமும், தேஜஸ்ஸும், உறுதியும்,  திறமையும்,  போரில் புறங்காட்டாமையும்,  கொடையும்,  ஆளும் தன்மையும், க்ஷத்திரியர்களுக்கு இயல்பான கர்மங்கள் ஆகும்.
 43. உழவு செய்தலும், பசுக்களைக் காத்தலும், பொருட்களை வாங்கி விற்பதில் சத்தியத்தைக் கடைப்பிடித்தலும், வைசியர்களுக்கு இயல்பாக உண்டான கர்மங்கள். அப்படியே, மக்கள் அனைவருக்கும் சேவை புரிதல் நான்காம் வர்ணத்தவர்களுக்கு இயல்பாக உண்டான கர்மம்.
 44. தத்தம் இயல்பான கடமைகளில் முழுமுனைப்புடன் ஈடுபட்டிருக்கும் மனிதன், பகவானை அடைதலாகிற ஸித்தியை அடைகிறான். தன்னுடைய இயல்பான கடமையில் கருத்துடையவன் தன் செயலை எப்படிச் செய்து பரமநிலையை அடைகிறானோ, அந்த முறையை நீ கேள்.
 45. எந்தப் பரம்பொருளில் இருந்து சகலப் பிராணிகளும் உண்டாயினவோ, எந்த பரமாத்மாவினால் இந்த உலகம் முழுமையும் நிறைந்துள்ளதோ, அந்த பரமாத்மாவைத் தன்னுடைய இயல்பான கடமைகளினால் வழிபட்டு, மனிதன் பரமஸித்தியை அடைகிறான்.
 46. நல்ல முறையில் கடைப்பிடிக்கப்பட்ட பிறருடைய தர்மத்தைக் காட்டிலும், குணக்குறை உள்ளதாயினும், தன்னுடைய தர்மம் உயர்ந்தது. ஏனெனில், இயல்புக்கேற்ப விதிக்கப்பட்ட தன்னுடைய கடமையைச் செய்கிற மனிதன் பாவத்தை அடையமாட்டான்.
 47. குந்தியின் மைந்தனே! குறை உள்ளதாயினும் தனக்குரிய இயல்பான கடமையை விட்டுவிடலாகாது. ஏனெனில், புகையால் சூழப்பட்ட தீ போல் எல்லாச் செயல்களும் ஏதோ ஒரு வகையில் குறையினால் சூழப்பட்டுள்ளன.
 48. எங்கும் பற்றற்ற புத்தியுடைய, ஆசையற்றவனான, உள்ளத்தை அடக்கிய மனிதன் ஸாங்க்ய யோகத்தினால் கர்மத் தளைகளில் இருந்து முற்றிலும் விடுபட்ட பெருநிலையை அடைகிறான்.
 49. ஞானயோகத்தினுடைய எந்த உயர்ந்த நிலை உண்டோ, அந்த நைஷ்கர்ம்ய ஸித்தியை அடைந்த மனிதன் பிரம்மத்தை எப்படி அடைகிறானோ, அந்த முறையை, குந்தியின் புதல்வனே! சுருக்கமாகவே என்னிடமிருந்து அறிந்துகொள்.
 50. 53. தெளிந்த அறிவுடன் கூடியவனாகவும், எளிய – சாத்விக-அளவான உணவு அருந்துபவனாகவும், ஒலி முதலிய புலன்நுகர்ப் பொருட்களைத் துறந்து, தூய்மையான இடத்தில் தனித்திருந்து, சாத்விகமான உறுதியோடு உள்ளத்தையும் புலன்களையும் அடக்கி, மனம்-வாக்கு-உடல் ஆகியவற்றைத் தன்வசத்தில் நிறுத்தி, விருப்பு-வெறுப்புகளை முற்றிலும் அழித்து, திடமான வைராக்கியத்தை அடைந்தவனாகவும், அகங்காரத்தையும் வலிமையையும் கர்வத்தையும் காமத்தையும் கோபத்தையும் சொத்து சேர்த்தலையும் நீக்கி, எப்பொழுதும் தியான யோகத்தில் நிலைத்திருந்து, மமகாரமற்று, சாந்தியோடு கூடியவனாகவும் உள்ளவன், ஸத் சித் ஆனந்தமயமான பரப்பிரம்மத்தில் இரண்டறக் கலப்பதற்குத் தகுதி பெறுகிறான்.
 51. ஸத் சித் ஆனந்தமயமான பிரம்மத்தில் ஒன்றிய மனத்தெளிவுடைய யோகி எதற்கும் வருந்தவதில்லை. அனைத்துப் பிராணிகளிடமும் சமபாவனையோடு இருந்துகொண்டு, என்னுடைய உயர்ந்த பராபக்தியைப் பெறுகிறான்.
 52. அந்த பராபக்தியின் மூலம் அவன் பரமாத்மாவான என்னை யார் என்றும், எத்தன்மையானவன் என்றும், உண்மையில் உள்ளது உள்ளபடியே தத்துவரீதியாக அறிந்து, அக்கணமே என்னிடம் ஐக்கியமாகிறான்.
 53. என்னையே புகலாகக் கொண்ட கர்மயோகி எல்லாக் கர்மங்களையும் எப்பொழுதும் செய்து கொண்டிருப்பினும், எனது அருளால் நிலையான என்றுமுள்ள அழியாத பரமபதத்தை அடைகிறான்.
 54. எல்லாக் கர்மங்களையும் மனப்பூர்வமாக என்னிடம் அர்ப்பணம் செய்து, அப்படியே சமபுத்தியாகிற யோகத்தைக் கடைப்பிடித்து, என்னையே அடைக்கலமாகக் கொண்டு, மேலும் எப்பொழுதும் என்னிடமே உள்ளம் பதித்தவனாக இருப்பாயாக.
 55. (மேற்கூறியபடி) என்னிடமே உள்ளம் பதித்தவனாக, நீ எனது அருளால் எல்லா இன்னல்களையும் எளிதாகக் கடந்துவிடுவாய். மேலும், அகங்காரத்தின் காரணமாக என்னுடைய சொற்களைக் கேளாவிட்டால் அழிந்து போவாய். அதாவது பெருநிலை பெறமாட்டாய்.
 56. எந்த அகங்காரத்தின் வசப்பட்டு நீ, ‘நான் யுத்தம் செய்யமாட்டேன்’ என்று நினைக்கிறாயோ, உன்னுடைய இந்தத் தீர்மானம் பொய்யானது. ஏனெனில், உன்னுடைய இயல்பு உன்னை வலுவில் போரில் ஈடுபடுத்தும்.
 57. குந்தியின் மைந்தனே! அறிவுமயக்கத்தின் காரணமாக, நீ எந்தச் செயலைச் செய்வதற்கு விரும்பவில்லையோ, அதையும் உன்னுடைய இயல்பான கர்மவினையினால் கட்டப்பட்டு, உன்வசம் இழந்து செய்யப் போகிறாய்.
 58. அர்ஜுனா! உடல் என்கிற இயந்திரத்தில் ஏற்றி வைக்கப்பட்ட அனைத்துப் பிராணிகளையும், அந்தர்யாமியாகிய பகவான் தன்னுடைய மாயையினால் அவரவர்கள் கர்மவினைக்கேற்றவாறு சுழலச் செய்து கொண்டு, அனைத்துப் பிராணிகளுடைய இதயத்திலும் வீற்றிருக்கிறார்.
 59. பரதகுலத்தோன்றலே! நீ எவ்வகையிலும் அந்த பரமேசுவரனையே தஞ்சம் அடைவாயாக! அந்த பரமாத்மாவின் அருளினால் நீ உயர்ந்த அமைதியையும், நிலையான பரமபதத்தையும் அடைவாய்.
 60. இவ்வாறு மறைபொருளுக்கெல்லாம் மறைபொருளான ஞானம் என்னால் உனக்குக் கூறப்பட்டது. இப்பொழுது நீ ரகசியமான இந்த ஞானத்தை முழுமையாக நன்கு ஆராய்ந்து எப்படி விரும்புகிறாயோ, அப்படியே செய்.
 61. மறைபொருளுக்கெல்லாம் மறைபொருளான என்னுடைய மேலான ரகசியமான உரையை மீண்டும் கேள். எனக்கு நீ மிகவும் உற்ற நண்பனாக இருக்கிறாய். ஆகையால், மேலான நன்மை பயக்கும் என்ற கருத்தோடு, இந்த உரையை நான் உனக்குக் கூறுவேன்.
 62. அர்ஜுனா! நீ என்னிடமே மனத்தைச் செலுத்து. என்னிடமே பக்தி கொண்டிரு. என்னையே வழிபடு. என்னையே வணங்கு. இப்படிச் செய்வதால் நீ என்னையே அடைவாய். இதையே நான் உனக்கு உண்மையென உறுதி கூறுகிறேன். ஏனெனில், நீ எனக்கு மிகவும் அன்புக்குரியவனாக இருக்கிறாய்.
 63. தர்மங்கள் அனைத்தையும் அதாவது செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் என்னிடம் அர்ப்பணம் செய்துவிட்டு, சர்ம வல்லமை பொருந்திய, எல்லாவற்றிற்கும் ஆதாரமான, பரமேசுவரனான என் ஒருவனையே சரணடைவாயாக! நான் உன்னைப் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுவிப்பேன். வருந்தாதே!
 64. உனக்குக் கூறப்பட்ட இந்த ரகசியமான கீதோபதேசத்தை ஒருபோதும் தவம் இல்லாதவனுக்குச் செல்லக்கூடாது; பக்தியில்லாதவனுக்கும் சொல்லக்கூடாது; கேட்க விரும்பாதவனுக்கும் சொல்லக்கூடாது. எவன் என்னிடம் குறை காண்கிறானோ, அவனுக்கு ஒருபொழுதும் சொல்லக்கூடாது.
 65. எந்த மனிதன் என்னிடம் உயர்ந்த பிரேம பக்தியைச் செய்து, இந்த உயர்ந்த ரகசியமான கீதா சாஸ்திரத்தை என்னுடைய பக்தர்களுக்குச் சொல்வானோ, அவன் என்னையே அடைகிறான். இதில் சந்தேகமில்லை.
 66. அந்த பக்தனைக் காட்டிலும் எனக்கு மிகவும் பிரியமான காரியத்தைச் செய்யக்கூடியவன் மனிதர்களில் வேறு எவனுமில்லை. அப்படியே, பூமியில் அவனைக் காட்டிலும் எனக்கு மிகவும் பிரியமானவன் வேறொருவன் இருக்கப் போவதில்லை.
 67. எந்த மனிதன், இந்த தர்மமயமான, நம் இருவருடைய உரையாடலான கீதாசாஸ்திரத்தைக் கற்பானோ, அவனாலும் நான் ஞான வேள்வியினால் வழிபட்டவனாக ஆவேன் என்பது என்னுடைய கருத்து.
 68. எந்த மனிதன் நம்பிக்கையுடனும் குறைகாணாதவனாகவும் இந்த கீதா சாஸ்திரத்தைக் கேட்கவாவது செய்வானோ, அவனும் பாவங்களில் இருந்து விடுபட்டுப் புண்ணிய காரியங்கள் செய்யக்கூடிய மனிதர்கள் அடையும் சிறந்த புண்ணிய உலகங்களை அடைவான்.
 69. பார்த்தா! இந்த கீதா சாஸ்திரம் உன்னால் ஒருமுகப்படுத்தப்பட்ட மனத்தோடு கேட்கப்பட்டதா? (மேலும்) அர்ஜுனா! அஞ்ஞானத்தினாலுண்டான உன் மோகம் அழிந்துவிட்டதா?”
 70. அர்ஜுனன் கூறுகிறார் –“ அச்யுதா! உங்கள் அருளால் எனது மோகம் அழிந்தது. மேலும், என்னால் ஞான ஒளி பெறப்பட்டது. இப்பொழுது நான் சந்தேகமற்றவனாக உறுதியாக இருக்கிறேன். ஆகையால், உங்கள் ஆணையை நிறைவேற்றுவேன்.”
 71. ஸஞ்ஜயன் கூறுகிறார் – ‘இவ்வாறு நான், பகவான் ஸ்ரீவாசுதேவருக்கும், மகாத்மாவான பார்த்தனுக்கும் இடையே நிகழ்ந்த இந்த அற்புதமான உட்பொருள் கொண்ட புல்லரிக்கக் கூடிய உரையாடலைக் கேட்டேன்.
 72. ஸ்ரீவியாச பகவானுடைய அருளினால் தெய்விகப் பார்வை பெற்ற நான் உயர்ந்த ரகசியமான இந்த யோகத்தை, அர்ஜுனனைக் குறித்துச் சொல்லுகின்ற சாட்சாத் யோகேசுவரனான பகவான் ஸ்ரீகிருஷ்ணனிடமிருந்து நேரிடையாகக் கேட்டேன்.
 73. அரசே! பகவான் ஸ்ரீகிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்குமிடையே நடந்த இந்த ரகசியமான நன்மை தரக் கூடிய அற்புதமான உரையாடலை நினைத்து நினைத்து, நான் மீண்டும் மீண்டும் மகிழ்கிறேன்.
 74. அரசே! பாவங்கள் அனைத்தையும் போக்கக் கூடிய பகவான் ஸ்ரீஹரியின் மிகவும், அற்புதமான, அழகான அந்தத் திருவுருவையும் நினைந்து நினைந்து, என்னுடைய மனத்தில் பெருவியப்பு உண்டாகிறது. மேலும் நான், மேலும் மேலும் மகிழ்ச்சியடைகிறேன்.
 75. அரசே! இங்கு நான் என்ன சொல்லப் போகிறேன்? எங்கு யோகேசுவரனான பகவான் ஸ்ரீகிருஷ்ணனும் எவ்விடத்தில் காண்டீவம் ஏந்திய அர்ஜுனனும் இருக்கிறார்களோ, அவ்விடத்தில் மகாலட்சுமியும் வெற்றியும் ஐசுவரியமும் நிலைத்த நீதியும் இருக்கும் என்பது என்னுடைய கொள்கை.

இதுவரை ‘மோக்ஷ ஸந்யாஸ யோகம்’ என்ற பதினெட்டாவது அத்தியாயம்.

****

இத்துடன் பதினெட்டு அத்தியாயங்கள் கொண்ட பகவத்கீதையின் சுருக்க உரை முடிவுற்றது.

***

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.