ஸ்ரீமத் பகவத்கீதை (12) – பக்தி யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை – பொழிப்புரை

ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா

 பன்னிரண்டாவது அத்தியாயம் –  பக்தி யோகம்

 1. அர்ஜுனன் கேட்கிறார் – “வேறொன்றிலும் நாட்டமில்லாமல் உங்களிடம் அன்பு கொண்ட எந்த பக்தர்கள், இவ்வாறு உங்களுடைய பஜனையிலும் தியானத்திலும் ஈடுபட்டு, ஸகுணரூபனான, பரமேசுவரனான உங்களை உயர்ந்த நிலையில் வழிபடுகிறார்களோ, மேலும், எவர்கள் அழிவற்ற பிரம்மத்தையே உயர்ந்த நிலையில் வழிபடுகிறார்களோ, இவ்விரு வகையான உபாசகர்களிடையே யோகத்தைச் சிறந்த முறையில் அறிந்தவர்கள் யார்?”
 2. ஸ்ரீபகவான் கூறுகிறார் – “என்னிடத்தில் மனத்தை ஒருமுகப் படுத்தி எப்பொழுதும் என்னை வழிபடுதலிலும், தியானம் செய்வதிலும் ஈடுபட்டுள்ள எந்த பக்த ஜனங்கள் சிறந்த சிரத்தையுடன் கூடியவர்களாக ஸகுணரூபத்தோடு கூடிய பரமேசுவரனான என்னை வழிபடுகிறார்களோ, அவர்கள் யோகிகளிலேயே மேலானவர்கள் என்று என்னால் மதிக்கப்படுவர்.
 3. ஆனால், எவர்கள் புலன்களின் தொகுதியை நன்கு அடக்கி மனம்-புத்திகளுக்கு அப்பாற்பட்டதும், எங்கும் நிறைந்ததும், சொற்களால் விளக்க முடியாததுமான ஸ்வரூபமுடையது என்றும், என்றும் ஒரேவிதமாக இருப்பது, நித்தியமானது, அசையாதது, இயக்கமற்றது, உருவமற்றது, அழிவற்றது, ஸத் சித் ஆனந்தமானதே பிரம்மம் என்றெல்லாம், எப்பொழுதும் ஒன்றிய பாவனையோடு தியானம் செய்து உபாசிக்கிறார்களோ, எல்லா உயிரினங்களின் நன்மையிலேயே ஈடுபாடு கொண்டவர்களான, எல்லாவற்றிற்கும் சமபாவனையுள்ள யோகிகளான அவர்களும் என்னையே அடைகிறார்கள்.
 4. ஸத் சித் ஆனந்தமயமான உருவமற்ற பிரம்மத்தில் மனத்தை ஈடுபடுத்தும் அந்த மனிதர்களுக்குச் சாதனையில் உழைப்பு அதிகமாகும். ஏனெனில், உடலில் பற்றுள்ளவர்களால் உருவமற்ற பிரம்ம விஷயமான மார்க்கம் மிகுந்த சிரமத்துடன் அடையப் படுகிறது.
 5. ஆனால், என்னையே கதியாகக் கொண்ட எந்த பக்தர்கள் எல்லாக் கர்மங்களையும் என்னிடம் சமர்ப்பணம் செய்து, ஸகுணமான பரமாத்மாவான என்னையே அநன்யமான பக்தியோகத்துடன் இடைவிடாது தியானம் செய்துகொண்டு உபாசிக்கிறார்களோ –
 6. அர்ஜுனா! இவ்விதம் என்னிடம் மனத்தை ஈடுபடுத்தியவர்களான பிரேம பக்தி செய்யும் அவர்களை, நான் சீக்கிரமாகவே மரண வடிவான சம்சாரக் கடலிலிருந்து கரையேற்றுபவனாக ஆகிறேன்.
 7. என்னிடமே மனத்தை நிலைநிறுத்து. என்னிடமே புத்தியை ஈடுபடுத்து. அதற்குப் பிறகு என்னிடமே வாழ்வாய். இதில் சிறிதும் ஐயமில்லை.
 8. அர்ஜுனா! ஒருக்கால் மனத்தை என்னிடம் அசையாமல் நிறுத்தி வைப்பதற்கு முடியாவிட்டால், அப்போது பகவந்நாம கீர்த்தனம் – இறைவன் திருநாமம் ஓதுதல் – முதலிய பயிற்சி யோகத்தினால் என்னை அடைய விரும்பு.
 9. இவ்விதமான பயிற்சியில்கூடத் திறமையற்றவனாய் இருந்தால், எனக்காகவே கடமைகளை ஆற்றுவது என்பதையே மேலான லட்சியமாகக் கொண்டு இரு. என் பொருட்டாகவே கடமைகளை ஆற்றிக் கொண்டே இருந்தாலும் என்னை அடைவது என்ற லட்சியத்தை அடைவாய்.
 10. என்னை அடைவது என்ற யோகத்தைச் சார்ந்து நின்று அப்யாஸ யோகத்தைக் கூடச் செய்வதற்குத் திறமையற்றவனாய் இருந்தால், அப்போது மனம், புத்தி முதலியவற்றை அடக்கி வெற்றி கண்டு, செய்கின்ற எல்லாக் கர்மங்களின் பயன்களையும் துறந்துவிடு.
 11. உட்பொருள் அறியாமல் பகவானை அடையும் பொருட்டுச் செய்யும் சாஸ்திரப் பயிற்சியை விட சாஸ்திரங்கள் மூலம் கிடைக்கும் ஞானம் சிறந்தது; அந்த ஞானத்தைக் காட்டிலும் என் ஸ்வரூபத்தைத் தியானம் செய்வது சிறந்தது; தியானத்தைக் காட்டிலும் கர்மத்தின் பயனைத் துறப்பது சாலச்சிறந்தது. ஏனெனில், தியாகத்தின் மூலம் உடனேயே கால இடைவெளியின்றி மேலான அமைதி உண்டாகிறது.
 12. எவன் எல்லா உயிரினங்களிலும் வெறுப்பு இல்லாதவனோ, தன்னலம் இல்லாமல் எல்லோரிடமும் அன்பு கொண்டவனோ, காரணமின்றி இரக்கம் காட்டுபவனோ, மமகாரமற்றவனோ, அகங்காரமற்றவனோ, இன்ப-துன்பங்கள் நேரும்போது நிலைமாறாது சமமாக இருப்பவனோ, பொறுக்கும் இயல்புடையவனோ அதாவது குற்றம் செய்தவனுக்கும் அபயம் அளிப்பவனோ, யோகியோ, எப்பொழுதும் எல்லாவிதங்களிலும் திருப்தி உள்ளவனோ, மனம் மற்றும் புலன்களோடு கூடிய உடலைத் தன்வசப் படுத்தியவனோ, மேலும் என் மீது திடமான நம்பிக்கை உடையவனோ, என்னிடத்தில் மனம், புத்தி – இவற்றை அர்ப்பணம் செய்தவனோ, என்னுடைய அந்த பக்தன் எனக்குப் பிரியமானவன்.
 13. எவனிடமிருந்து எந்த ஜீவனும் பாதிப்பு அடைவதில்லையோ, எவன் எந்த ஜீவன் மூலமும் பாதிப்படைய மாட்டானோ, மேலும் எவனொருவன் மகிழ்ச்சி, பொறாமை, பயம், பாதிப்பு முதலியவற்றிலிருந்து விடுபட்டவனோ, அந்த பக்தன் எனக்குப் பிரியமானவன்.
 14. எந்த மனிதன், எதையும் எதிர்பார்க்காதவனோ, அகத்தூய்மையும் புறத்தூய்மையும் உள்ளவனோ, பிறவிப்பயனை அறிந்தவனோ, பட்சபாதமற்றவனோ, துக்கங்களிலிருந்து விடுதலை பெற்றவனோ, செயல்கள் அனைத்திலும் ‘நான் செய்கிறேன்’ என்னும் அபிமானத்தை நீக்கியவனோ, அந்த என் பக்தன் எனக்குப் பிரியமானவன்.
 15. எவன் ஒருபோதும் மகிழ்வதில்லையோ, வெறுப்பதில்லையோ, துயரப் படுவதில்லையோ, எதற்கும் ஆசைப்படுவதில்லையோ, எவனொருவன் நல்லதும் தீயதுமான செயல்கள் அனைத்தையும் துறந்தவனோ, அந்த என்னிடம் பக்தியுள்ளவன் எனக்குப் பிரியமானவன்.
 16. எவன் பகைவனிடமும் நண்பனிடமும், மதிப்பிலும் அவமதிப்பிலும் சமபுத்தி உடையவனோ, அவ்விதமே தட்ப-வெப்பம், சுக-துக்கங்களாகிற இரட்டைகளில் சமபுத்தி உடையவனோ –
 17. இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் சமமாக மதிப்பவனோ, பகவானை எப்பொழுதும் சிந்தித்திருப்பவனோ, மேலும் எந்தவிதத்தில் உடலைப் பேணுதல் நடைபெற்றாலும் மகிழ்ச்சி கொள்பவனோ, வசிக்கும் இடத்தில் தனது என்ற பற்றற்றவனோ, நிலைத்த புத்தியுடையவனோ, பக்தியுள்ள அந்த மனிதன் எனக்குப் பிரியமானவன்.
 18. ஆனால், எவர்கள் என்னிடம் நம்பிக்கையோடு என்னையே மேலான கதியாகக் கொண்டு, மேலே கூறப்பட்ட இந்த தர்மமே உருவான அமுதத்தைப் பயனைக் கருதாது அன்புடன் அனுஷ்டிக்கிறார்களோ, அந்த பக்தர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்.”

இதுவரை ‘பக்தி யோகம்’ என்ற பன்னிரண்டாவது அத்தியாயம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.