ஸ்ரீமத் பகவத்கீதை (13) – க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை – பொழிப்புரை

ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா

பதின்மூன்றாவது அத்தியாயம் –  க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்

 1. ஸ்ரீபகவான் கூறினார் – “அர்ஜுனா! இந்த உடல் க்ஷேத்திரம் என்ற பெயரால் அழைக்கப் படுகின்றது. இதை எவன் அறிகிறானோ, அவனை க்ஷேத்திரக்ஞன் என்று தத்துவமறிந்த ஞானிகள் கூறுகிறார்கள்.
 2. அர்ஜுனா! நீ , எல்லா க்ஷேத்திரங்களிலும் உள்ள க்ஷேத்திரக்ஞன், அதாவது ஜீவாத்மாவும் நானே என்று தெரிந்துகொள். மேலும் க்ஷேத்திரத்தைப் பற்றியும், க்ஷேத்திரக்ஞனைப் பற்றியும், அதாவது விகாரத்தோடு கூடிய பிரகிருதியையும் புருஷனையும் பற்றிய எது தத்துவரீதியாக அறியக்கூடிய ஞானமோ, அதுதான் ஞானம் என்பது என் கருத்து.
 3. அந்த க்ஷேத்திரம் எது? மேலும் எத்தகையது? எந்த விகாரங்களோடு கூடியது ? எதிலிருந்து எது உண்டாயிற்று ? மேலும், அந்த க்ஷேத்திரக்ஞன் யார்? எத்தகைய பெருமை கொண்டவன்? என்ற இவையனைத்தையும் சுருக்கமாக என்னிடமிருந்து கேள்.
 4. இந்த க்ஷேத்திர க்ஷேத்திரக்ஞனுடைய தத்துவம் ரிஷிகளால் பலவாறு கூறப்பட்டு இருக்கிறது. மேலும், பலவிதமான வேதமந்திரங்கள் மூலமாகவும், தனியாகப் பிரித்தும் சொல்லப் பட்டிருக்கிறது. அப்படியே நன்கு தீர்மானிக்கப்பட்ட யுக்திகளோடு கூடிய பிரம்மசூத்திரத்தின் பதங்களாலும் கூறப்பட்டிருக்கிறது.
 5. நுண்ணிய ஐம்பெரும் பூதங்களும் அகங்காரமும் புத்தியும் மூலப்பிரகிருதியும் பத்துப் புலன்களும் மனமும் புலன்களுடைய நுகர்பொருட்களான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்தும் –
 6. அப்படியே விருப்பு, வெறுப்பு, இன்பம், துன்பம், உடற்கட்டு, சைதன்யசக்தி மேலும் உறுதி ஆகிய மாறுபாடுகளுடைய இந்த க்ஷேத்திரம் சுருக்கமாகச் சொல்லப்பட்டது.
 7. தற்பெருமையின்மை; தன்னிடம் இல்லாத நற்குணங்களை இருப்பதாகக் காட்டிக் கொள்ளாமை; எந்த உயிரினத்தையும் எந்த வகையிலும் துன்புறுத்தாமல் இருத்தல்; பொறுத்துக் கொள்ளுதல்; மனம், வாக்கு முதலியவற்றில் நேர்மை;  சிரத்தையுடனும் பக்தியுடனும் பெரியோர்களுக்குப் பணிவிடை செய்தல்; உள்ளும் புறமும் தூய்மையாக இருத்தல்; உள்ளத்தின் உறுதி; மனம்-புலன்களோடு கூடிய உடலைக் கட்டுப்படுத்துதல் –
 8. இவ்வுலக பரலோக போகங்கள் அனைத்திலும் பற்றற்ற தன்மை; மேலும், அகங்காரம் இல்லாமை; பிறப்பு, இறப்பு, மூப்பு, நோய் – இவற்றில் உள்ள துக்கத்தையும் குறைபாடுகளையும் திரும்பத் திரும்பச் சிந்தித்துப் பார்த்தல் –
 9. மனைவி,மக்கள், வீடு, செல்வம் – இவற்றில் பற்றின்மை; தன்னுடையது என்ற எண்ணமின்மை (மமகாரமின்மை); அவ்வாறே வேண்டியன – வேண்டாதனவற்றை அடையும்போதும் எப்போதுமே உள்ளம் ஒரே மாதிரியாக இருத்தல், அதாவது சமபாவனையில் இருத்தல் –
 10. பரமேசுவரனான என்னிடத்தில் வேறு எதையும் எண்ணாத யோகத்தின் மூலம் பிறழாத பக்தி; தனிமையில் தூய்மையான இடத்தில் வாழும் இயல்பு; உலகியலில் ஈடுபாடு கொண்ட மனிதர்களுடைய கூட்டத்தில் விருப்பம் கொள்ளாதிருத்தல் –
 11. அத்யாத்ம ஞானத்தில் எப்பொழுதும் நிலைத்து நிற்றல்; தத்துவ ஞானத்தின் பொருளான பரமாத்மாவையே தரிசனம் செய்தல் – இவையெல்லாம் ஞானம் என்றும், எது அதனிலும் மாறுபட்டதோ, அது அஞ்ஞானம் என்றும் சொல்லப்பட்டது.
 12. எது அறியப்பட வேண்டியதோ, எதை அறிந்து மனிதன் பரமானந்தத்தை அடைகிறானோ, அதை விளக்கிக் கூறுவேன். அந்த ஆதியில்லாத பரப்பிரம்மம் ‘ஸத்’ என்றும் கூறப்படுவதில்லை; ‘அஸத்’ என்றும் கூறப்படுவதில்லை.
 13. அது எங்கும் கைகால்களை உடையது. எங்கும் கண்-தலை-முகங்களோடு கூடியது. எங்கும் காதுகளை உடையது. ஏனெனில், அது உலகில் அனைத்தையும் வியாபித்து நிற்கிறது.
 14. எல்லாப் புலன்நுகர்ப் பொருட்களையும் அறிவது. ஆனால், உண்மையில் எல்லாப் புலன்களும் அற்றது. அப்படியே ஒன்றிலும் பற்றற்றது. ஆனாலும், எல்லாவற்றையும் தாங்குவது, காப்பது. மேலும் குணமற்றதாக இருந்தாலும் குணங்களை அனுபவிப்பது.
 15. சராசரமான எல்லாப் பிராணிகளினுடைய உள்ளும் புறமும் அது நிறைந்திருக்கிறது. அசைவன – அசையாதனவற்றின் வடிவிலும் கூட அதுவே உள்ளது. அது நுண்ணியதாக இருப்பதால் அறிய முடியாதது. மிக அருகிலும் மிக தூரத்திலும் இருப்பதும் அதுவே.
 16. அறியத்தக்க அந்த பரப்பிரம்மம் ஆகாயத்தைப்போல் பிளவு இல்லாமல் எங்கும் ஒரே சீராக நிறைந்திருந்த போதிலும், சராசரமாகிய பிராணிகள் அனைத்திலும் பிரிக்கப்பட்டுத் தனித்தனியாக இருப்பது போன்ற தோற்றத்தை அளிக்கிறது. ஸ்ரீமகாவிஷ்ணு ஸ்வரூபமாக சகலப் பிராணிகளையும் தாங்கிப் பேணிக் காப்பது. மேலும் ருத்ரனுடைய உருவமாக அழிப்பது. அப்படியே பிரம்மாவின் உருவமாக எல்லோரையும் படைப்பது.
 17. அந்த பரப்பிரம்மம் ஒளிகளுக்கெல்லாம் ஒளியானது; மாயைக்கு அப்பாற்பட்டது; ஞான வடிவானது; அறியப்பட வேண்டியது;  தத்துவ ஞானத்தினால் அடையத் தக்கது; எல்லோருடைய இதயத்திலும் சிறப்பாக விளங்குவது என்று கூறப்படுகிறது.
 18. இவ்விதமே க்ஷேத்திரத்தினுடைய ஸ்வரூபமும், அவ்விதமே ஞானமும், அறியவேண்டிய பரமாத்ம ஸ்வரூபமும் சுருக்கமாகச் சொல்லப்பட்டன. என்னுடைய பக்தன் இதை உள்ளபடியறிந்து, என்னுடைய ஸ்வரூபத்தை அடைகிறான்.
 19. பிரகிருதியையும் புருஷனையும் – இவ்விரண்டையுமே ஆரம்பமற்றதென அறிந்துகொள். மேலும் ராகம், துவேஷம் முதலிய விகாரங்களையும், முக்குணங்கள் அடங்கிய பொருட்கள் அனைத்தையும் கூட பிரகிருதியிலிருந்து உண்டானவையே என்று அறிந்து கொள்.
 20. காரியத்தையும் கரணங்களையும் உண்டுபண்ணும் விஷயத்தில் பிரகிருதி காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், சுக-துக்கங்களை அனுபவிப்பதில் ஜீவாத்மா காரணமென்று கூறப்படுகிறான்.
 21. பிரகிருதியில் இருந்து கொண்டுதான் புருஷன் பிரகிருதியிலிருந்து உண்டான முக்குணங்கள் நிறைந்த பொருட்களை அனுபவிக்கிறான். மேலும், அந்த குணங்களுடைய தொடர்பே, அந்த ஜீவாத்மா நல்லதும் தீயதுமான பிறவிகளில் பிறப்பதற்குக் காரணமாகிறது.
 22. அந்த புருஷனாகிற ஜீவாத்மா இந்த தேகத்தில் இருப்பினும், அது உண்மையில் பரமாத்மாவே. (அவரே) சாட்சியாக இருப்பதால் ‘உபத்ரஷ்டா’ என்றும், உண்மையான ஒப்புதல் அளிப்பதால் ‘அநுமந்தா’ என்றும், எல்லோரையும் தாங்குதலாலும் காப்பதாலும் ‘பர்தா’ என்றும், ஜீவரூபமாக இருந்தும் அனுபவிப்பதால் ‘போக்தா’ என்றும், பிரம்மா முதலியவர்களுக்கும் தலைவரானதால் ‘மகேசுவரன்’ என்றும், சுத்த ஸத் சித் ஆனந்தமயமாக இருப்பதால் ‘பரமாத்மா’ என்றும் சொல்லப் படுகிறார்.
 23. இவ்வாறு புருஷனையும் குணங்களோடு கூடிய பிரகிருதியையும் எந்த மனிதன் தத்துவரீதியாக அறிவானோ, அவன் எல்லாவிதங்களிலும் செய்யவேண்டிய கடமைகளைச் செய்து கொண்டிருந்தால்கூட மறுபடியும் பிறப்பதில்லை.
 24. அந்தப் பரமாத்மாவைச் சில மனிதர்கள் தூய்மையடைந்த நுண்ணிய புத்தியினால் தியானத்தின் மூலமாக இதயத்தில் பார்க்கிறார்கள். மற்றும் சிலர், ஞானயோகத்தின் மூலமாகவும், வேறு சிலர் கர்மயோகத்தின் மூலமாகவும் பார்க்கிறார்கள் (அடைகிறார்கள்).
 25. ஆனால், வேறு சிலர் (அதாவது, மந்த புத்தியுள்ளவர்கள்) இவ்வாறு அறியாமல், தத்துவத்தை அறிந்த பெரியோர்களிடமிருந்து கேட்டு, அதற்கேற்ப உபாசனையும் செய்கிறார்கள். அவ்வாறு கேட்டறிந்த உபதேசத்தையே மேலான கதியாகக் கொண்டவர்களும் மரணரூபமான சம்சாரக் கடலைச் சந்தேகமின்றிக் கடக்கிறார்கள்.
 26. அர்ஜுனா! எத்தனை எத்தனை அசைவன, அசையாதன ஆகிய பிராணி வர்க்கம் உண்டாகின்றனவோ, அவையனைத்தும் நீ, க்ஷேத்திரம் (அபராப்பிரகிருதி), க்ஷேத்திரக்ஞன் (பராப்பிரகிருதி) – – இவர்களுடைய சேர்க்கையால் உண்டானதென அறிந்துகொள்.
 27. எந்த மனிதன் அழியக்கூடிய சராசரங்களான அனைத்திலும் பரமேசுவரனான பகவானை அழியாதவராகவும் , (மேலும்) எங்கும் சமமாக இருப்பவராகவும் பார்க்கிறானோ, அவனே உண்மையில் பார்க்கிறவன் ஆவான்.
 28. ஏனெனில், எந்த ஒருவன் அனைத்திலும் சமமாக நிலைபெற்றிருக்கும் பகவானைச் சமமாகவே பார்த்துக் கொண்டு, தன்னைத் தன்னாலேயே அழித்துக் கொள்வதில்லையோ, அதனால் அவன் பரமகதியை அடைகிறான்.
 29. மேலும், எந்த மனிதன் எல்லாக் கர்மங்களும் எல்லாவிதங்களிலும் பிரகிருதியினாலேயே செய்யப் படுவனவென்றும், மேலும் ஆத்மாவைக் கர்த்தா அல்லன் என்றும் பார்க்கிறானோ, அவனே உண்மையைப் பார்க்கிறவன் ஆவான்.
 30. எப்பொழுது இந்த மனிதன் சராசரங்கள் அனைத்தினுடைய தனித்தன்மையும் பரமாத்மா ஒருவரிடமே நிலைபெற்றிருப்பதாகவும், அந்த பரமாத்மாவிடம் இருந்தே சகல சராசரங்களும் விரிவடைந்தவனவாகவும் காண்கிறானோ, அப்பொழுதே ஸத் சித் ஆனந்தமயனான பரமாத்மாவை அடைகிறான்.
 31. அர்ஜுனா! அனாதியானபடியாலும் நிர்குணமானபடியினாலும் இந்த அழிவற்ற பரமாத்மா உடலிலேயே இருந்த போதிலும், உண்மையில் ஒன்றும் செய்வதில்லை; எதிலும் ஒட்டுவதுமில்லை.
 32. எவ்வாறு எங்கும் நிறைந்த ஆகாயம் நுண்ணியதாக இருப்பதால் எங்கும் ஒட்டுவதில்லையோ, அவ்வாறே இவ்வுடலில் எங்கும் நிலைபெற்றிருக்கும் ஆத்மா நிர்குணமாக இருப்பதால் உடலின் குணங்களில் ஒட்டுவதில்லை.
 33. அர்ஜுனா! சூரியன் ஒருவனே, இந்தப் பிரம்மாண்டம் முழுவதையும் எப்படிப் பிரகாசிக்கச் செய்கிறானோ, அப்படியே ஆத்மா ஒன்றே க்ஷேத்திரம் முழுவதையும் பிரகாசிக்கச் செய்கிறான்.
 34. இவ்விதம் க்ஷேத்திரம், க்ஷேத்திரக்ஞன்—இவற்றின் வேறுபாட்டையும், பிரகிருதி, பிரகிருதியினுடைய செயல்கள் – இவற்றில் இருந்து விடுபடுவதையும், எவர்கள் ஞானக் கண்களால் தத்துவரீதியாக அறிகிறார்களோ, அந்த மகாத்மாக்கள் பரப்பிரம்ம பரமாத்மாவை அடைகிறார்கள்.”

இதுவரை ‘க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்’ என்ற பதின்மூன்றாவது அத்தியாயம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.