ஸ்ரீமத் பகவத்கீதை (11) – விசுவரூப தரிசன யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை – பொழிப்புரை

ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா

 பதினொன்றாவது அத்தியாயம் –  விசுவரூப தரிசன யோகம்

 1. அர்ஜுனன் கூறுகிறார் – “எனக்கு அருள்புரிவதற்காக உங்களால் மிக உயர்ந்ததும், மறைத்துக் காப்பாற்றத்தக்கதும், அத்யாத்மக் கருத்துக்கள் கொண்டதுமான எந்த உபதேசம் கூறப்பட்டதோ, அதனால் என்னுடைய இந்த அஞ்ஞானம் அழிந்தது.
 2. ஏனெனில், தாமரைக்கண்ணனே! உங்களிடமிருந்து எல்லா உயிரினங்களுடைய உற்பத்தி, லயம் இரண்டும் என்னால் விரிவாகக் கேட்கப்பட்டன. அவ்வாறே அழிவற்ற பெருமையும் கேட்கப் பட்டது.
 3. பரமேசுவரனே! நீங்கள் உங்களைப் பற்றி எவ்வாறு கூறினீர்களோ, அது அப்படியேதான். ஆனால், புருஷோத்தமா! உங்களுடைய ஞானம், ஈசுவரத்தன்மை, சக்தி, பலம், வீரியம், தேஜஸ் – இவற்றோடு கூடிய ஈசுவர ஸ்வரூபத்தைக் கண்கூடாகக் காண்பதற்கு விரும்புகிறேன்.
 4. பிரபுவே! என்னால் அந்த ஈசுவர உருவத்தைப் பார்ப்பதற்கு முடியும் என்று நினைப்பீர்களே யானால், அப்பொழுது, யோகேசுவரரே! நீங்கள் உங்களுடைய அந்த அழிவற்ற ஸ்வரூபத்தை, எனக்குத் தரிசனம் செய்து வையுங்கள்.”
 5. ஸ்ரீபகவான் கூறுகிறார் – “பார்த்தனே! இப்பொழுது நீ என்னுடைய நூற்றுக் கணக்காகவும், ஆயிரக் கணக்காகவும், பற்பல விதங்களாகவும், பல நிறங்களும் பல உருவங்களும் கொண்டவையாகவும் உள்ள தெய்விகமான (உலகில் காண இயலாத) உருவங்களைப் பார்.
 6. பரதகுலத் தோன்றலே! அர்ஜுனா! அதிதியின் புத்திரர்களான பன்னிரண்டு ஆதித்யர்களையும், எட்டு வசுக்களையும், பதினொரு ருத்ரர்களையும், அசுவினீ குமாரர்கள் இருவரையும், நாற்பத்தொன்பது மருத்துக்களையும் பார். அவ்வாறே இதற்குமுன் கண்டிராத பற்பல ஆச்சரியமான உருவங்களையும் பார்.
 7. உறக்கத்தை வெற்றி கொண்ட அர்ஜுனா! இப்பொழுது இந்த என்னுடைய உடலில் ஒரே இடத்தில் சகல சராசரங்களோடு கூடிய உலகம் முழுவதையும் மற்றும் எதை எதைப் பார்க்க விரும்புகிறாயோ, அதையும் பார்.
 8. ஆனால், நீ, இந்த உன்னுடைய ஊனக்கண்களால் என்னைப் பார்ப்பதற்கு சந்தேகமின்றி நிச்சயமாக முடியவே முடியாது. ஆகையால், உனக்கு உலகியலுக்கு அப்பாற்பட்டதான, தெய்விகமான பார்வையைத் தருகிறேன். என்னுடைய தெய்வத் தன்மை பொருந்திய யோகசக்தியைப் பார்.”
 9. ஸஞ்ஜயன் கூறினார் – அரசே! மகா யோகேசுவரரான சகல பாவங்களையும் போக்குகின்றவரான ஹரியாகிய பகவான் இவ்வாறு சொல்லிவிட்டு, அதற்குப் பிறகு அர்ஜுனனுக்குச் சிறந்ததான ஈசுவர சக்தி கொண்ட தம் தெய்விக உருவைக் காண்பித்தார்.
 10. 11 அநேக முகங்களோடும், அநேக கண்களோடும் கூடியவரும், பல அற்புதமான காட்சிகள் கொண்டவரும், அநேகவிதமான தெய்விகமான ஆபரணங்களோடு கூடியவரும், திவ்வியமான பற்பல ஆயுதங்களைக் கைகளில் ஏந்தியவரும், தெய்விகமான மாலைகளையும் ஆடைகளையும் அணிந்தவரும், திவ்வியமான வாசனைத் திரவியங்களைத் தம் உடலில் பூசிக் கொண்டிருப்பவரும், எல்லாவிதங்களிலும் ஆச்சரியமானவரும், எல்லையற்றவரும், எல்லாப் புறங்களிலும் முகங்களோடு விளங்குகின்றவரும், விராட் ஸ்வரூபமானவருமான தேவாதிதேவனான பரமேசுவரனை அர்ஜுனன் கண்டார்.
 11. ஆகாயத்தில் ஆயிரக்கணக்கான சூரியர்கள் ஒரே காலத்தில் உதயமானால் எத்தகைய பிரகாசம் ஏற்படுமோ, அந்தப் பிரகாசம், அந்த விசுவரூப பரமாத்மாவின் பிரகாசத்திற்கு நிகராக ஒருக்கால் இருக்கக் கூடுமோ!
 12. பாண்டுபுத்திரனான அர்ஜுனன் அப்பொழுது பலவிதமாகப் பிரிந்துள்ள, அதாவது தனித்தனியான உலகம் முழுவதையும், தேவதேவனான ஸ்ரீகிருஷ்ண பகவானுடைய அந்தத் திருமேனியில் ஒரே இடத்தில் இருப்பதைப் பார்த்தார்.
 13. அதன்பிறகு வியப்பு மிகுந்து மெய்சிலிர்த்து, அந்த அர்ஜுனன் ஒளிமிகுந்த விசுவரூப பரமாத்மாவைச் சிரத்தையுடனும் பக்தியுடனும் தலையால் வணங்கிக் கைகூப்பிக் கொண்டு கூறினார்.
 14. அர்ஜுனன் கூறுகிறார் – “தேவனே! நான் உங்களுடைய திருமேனியில் எல்லா தேவர்களையும், அவ்வாறே அநேக பிராணி வர்க்கங்களையும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்ம தேவனையும், மகாதேவனையும், எல்லா ரிஷிகளையும், தெய்விகமான சர்ப்பங்களையும் பார்க்கிறேன்.
 15. அகில லோக நாயகனே! உங்களை எண்ணிலடங்காத கைகள், வயிறுகள், முகங்கள், கண்கள் கொண்டவராகவும், எண்ணற்ற உருவங்கள் ஏற்றவராகவும் எல்லாப் பக்கங்களிலும் பார்க்கிறேன், அகிலாண்டரூபனே! உங்களுடைய முடிவான எல்லையைப் பார்க்கவில்லை; நடுப்பகுதியையும் பார்க்கவில்லை; மேலும் ஆரம்பத்தையும் பார்க்கவில்லை.
 16. உங்களைக் கிரீடம் தரித்தவராகவும், கதை-சக்கரத்தோடு கூடியவராகவும், எங்கும் பிரகாசிக்கின்ற ஒளிப்பிழம்பாகவும், கொழுந்துவிட்டு எரிகின்ற அக்னி-சூரியனுடையது போன்ற ஒளியுடன் கூடியவராகவும், பார்க்கக் கூசுகின்றதும் எங்கும் நிறைந்ததுமான அளவிட முடியாத ஸ்வரூபத்தை உடையவராகவும் பார்க்கிறேன்.
 17. நீங்கள் அறியத்தக்க, மிக உயர்ந்த, அழிவற்ற, பரப் பிரம்ம பரமாத்மா; நீங்களே இந்த அகில உலகத்திற்கும் மேலான உறைவிடம்; நீங்களே நிலையான தர்மத்தைக் காப்பாற்றுபவர்; நீங்களே அழிவற்றவர்; சாசுவதமான பரமன் என்பது என்னுடைய கருத்து.
 18. உங்களை முதல், நடு, முடிவு அற்றவராகவும், எல்லையற்ற திறமை கொண்டவராகவும், எண்ணற்ற தோள்கள் உடையவராகவும், சந்திரன், சூரியன் – இவர்களைக் கண்களாகக் கொண்டவராகவும், கொழுந்து விட்டெரியும் தீ போன்ற வாய் உடையவராகவும், தம்முடைய வெப்பத்தினால் இந்த உலகத்தை வாட்டுபவராகவும் பார்க்கிறேன்.
 19. பரமாத்மாவே! விண்ணிற்கும் மண்ணிற்கும் இடையேயுள்ள இந்த இடைவெளியும் எல்லா திசைகளும் உங்கள் ஒருவராலேயே நிறைந்திருக்கின்றன. உலகியலுக்கு அப்பாற்பட்ட உங்களுடைய இந்த பயங்கரமான உருவத்தைப் பார்த்து மூன்று உலகங்களும் பயத்தால் மிகவும் நடுங்குகின்றன.
 20. முன்பு நான் பார்த்த அதே தேவர்களின் கூட்டங்களே உங்களிடம் புகுகின்றார்கள். சிலர் பயந்துபோய் கைகூப்பிக் கொண்டு, உங்களுடைய திருநாமங்களையும் கல்யாண குணங்களையும் உச்சரிக்கிறார்கள். மகரிஷிகள், சித்தர்களுடைய கூட்டங்கள், ‘மங்களம் உண்டாகட்டும்’ என்று கூறி, அழகானதும் பொருள் பொதிந்ததும் உயர்ந்ததுமான துதிகளால் உங்களைத் துதிக்கிறார்கள்.
 21. பதினொரு ருத்ரர்களும், பன்னிரண்டு ஆதித்யர்களும், எட்டு வசுக்களும், சாத்யர்களும், விசுவேதேவர்களும், இரண்டு அசுவினீ குமாரர்களும், நாற்பத்தொன்பது மருத்துக்களும், பித்ருக்களின் கூட்டங்களும், கந்தர்வர்கள், யக்ஷர்கள், அசுரர்கள், சித்தர்கள் – இவர்களின் கூட்டங்களும் ஆக அவர்கள் எல்லோருமே ஆச்சரியம் அடைந்தவர்களாய் உங்களைப் பார்க்கிறார்கள்.
 22. நீண்ட புஜங்களுடையவரே! பல முகங்களும், கண்களும், பல கைகள்-துடைகள்-திருவடிகளும், பல வயிறுகளும், பல கோரைப்பற்களும் கொண்டும் பயங்கரமான உங்களுடைய பெரிய உருவத்தைப் பார்த்து மக்கள் எல்லோரும் மிகவும் பயந்து நடுங்கி நிற்கிறார்கள். அவ்விதமே நானும் பயந்து நிற்கிறேன்.
 23. ஏனெனில், விஷ்ணுவே! வானவளாவிய பல வண்ணங்கள் கொண்டு மிக விரிந்த வாயும், ஒளிமிக்க அகன்ற கண்களும் உடைய உங்களைப் பார்த்து, பயத்தினால் மிகவும் நடுங்கிய மனமுடைய நான் தைரியத்தையும் அமைதியையும் அடையவில்லை.
 24. கோரைப்பற்களால் பயங்கரமானதும், பிரளய காலத்துத் தீ போன்றவையுமான உங்களுடைய திருமுகங்களைப் பார்த்ததும் திசைகள் கூட என்ன என்று புரியவில்லை. மேலும், சுகத்தையும் பெறவில்லை. தேவதேவனே! ஜகந்நிவாசனே! அருள்புரிய வேண்டும்.
 25. திருதராஷ்டிர குமாரர்களான இவர்கள் அனைவரும் கூட்டங்களோடு உங்களிடம் புகுகிறார்கள். பாட்டனார் பீஷ்மரும் துரோணாசார்யரும் அவ்விதமே கர்ணனும் நம்மைச் சேர்ந்த முக்கியமான போர்வீரர்களுடன் கூட கோரைப்பற்களால் கொடுமையாகவும் பயங்கரமாகவும் உள்ள உங்களுடைய வாய்களில் வேகமாக ஓடிவந்து புகுகிறார்கள். சிலர் தூள்தூளான தலைகளுடன் பல்லிடுக்குகளில் சிக்கியவாறு காணப் படுகிறார்கள்.
 26. ஆறுகளுடைய பற்பல வேகமான நீரோட்டங்கள் இயற்கையாகவே கடலையே நோக்கி எவ்வாறு பாய்கின்றனவோ (கடலில் புகுந்து முற்றிலும் மறைகின்றனவோ), அவ்வாறே இந்த மண்ணுலக வீரர்கள் தீக்கொழுந்து வீசுகின்ற உங்களுடைய வாய்களில் புகுகிறார்கள் (புகுந்து உங்களிடம் இரண்டறக் கலக்கிறார்கள்).
 27. விட்டிற்பூச்சிகள் வெகுவேகமாக ஓடிவந்து கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில், தாம் அழிவதற்காக எவ்விதம் புகுகின்றனவோ, அவ்விதமே எல்லா மக்களும் தங்கள் அழிவிற்காக வெகுவேகமாக ஓடிவந்து, உங்களுடைய வாய்களில் நுழைகிறார்கள்.
 28. அனைத்து உலகங்களையும் தீ உமிழ்கின்ற வாய்களால் விழுங்கிக் கொண்டு, எல்லாப் புறங்களில் இருந்தும் திரும்பத் திரும்ப நாக்குகளால் துழாவுகிறீர்கள். விஷ்ணுவே! உங்களுடைய பயங்கரமான ஒளிகள் உலகம் முழுவதையும் வெப்பத்தினால் நிரப்பி வாட்டுகின்றன.
 29. தேவர்களில் சிறந்தவரே! பயங்கர வடிவுள்ள நீங்கள் யார்? என்னிடம் தயவு செய்து கூறுங்கள். உங்களுக்கு நமஸ்காரம். நீங்கள் அருள் புரியுங்கள். ஆதிபுருஷரான உங்களை நன்கு தெரிந்துகொள்ள விரும்புகிறேன். ஏனெனில், உங்களுடைய செயலை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.”
 30. ஸ்ரீபகவான் கூறுகிறார் – “உலகங்கள் அனைதையும் அழிக்கின்ற, பெருகி வளர்ந்துள்ள மகாகாலனாக இருக்கிறேன். இப்பொழுது உலகங்கள் எல்லாவற்றையும் ஸம்ஹாரம் செய்வதற்கு முனைந்திருக்கிறேன். எந்தப் போர் வீரர்கள் எதிரிப் படைகளில் இருக்கின்றார்களோ, அவர்கள் எல்லோரும் நீ போர் புரியாமல் இருப்பினும் இருக்கப் போவதில்லை – அதாவது இவர்கள் எல்லோரும் போரில் அழிந்தே போவார்கள்.
 31. ஆகவே, நீ எழுந்திரு! புகழைப் பெற்றுக் கொள். பகைவர்களை வென்று தானியங்களும் செல்வமும் நிறைந்த அரசை அனுபவிப்பாயாக! இவர்கள் முன்பே என்னால் கொல்லப் பட்டிருக்கிறார்கள்! இடது கையாலும் அம்பு எய்யும் அர்ஜுனா! நீ நிமித்த காரணமாக மட்டும் இரு.
 32. துரோணரையும் பீஷ்மரையும் ஜயத்ரதனையும் கர்ணனையும், அவ்வாறே என்னால் கொல்லப்பட்ட இன்னும் மற்ற அநேக போர் வீரர்களையும் நீ கொல்வாயாக! பயப்படாதே! போரில் எதிரிகளை ஐயமின்றி வென்று விடுவாய். ஆகவே, போர் புரிவாயாக!”
 33. ஸஞ்ஜயன் கூறுகிறார் – ‘ பகவான் ஸ்ரீகேசவனுடைய இந்த வசனத்தைக் கேட்டு, மகுடம் அணிந்த அர்ஜுனன் நடுங்கிக் கொண்டே கைகூப்பிக் கொண்டு வணங்கி, மறுபடியும் மிகவும் பயந்து நமஸ்காரம் செய்து, பகவான் ஸ்ரீகிருஷ்ணரைப் பார்த்து தழுதழுத்த குரலில் கூறினார்.”
 34. அர்ஜுனன் துதிக்கிறார் – “அந்தர்யாமியான பகவானே! உங்களுடைய திருநாமம், குணங்கள், பிரபாவம் – இவற்றைக் கீர்த்தனம் செய்வதாலேயே உலகம் மிக்க மகிழ்ச்சி அடைகிறது. அன்பும் கொள்கிறது (அகமகிழ்கிறது). பயந்து போன அரக்கர்கள் எல்லாத் திசைகளிலும் ஓடுகின்றனர்; மேலும் சித்தர்களின் கூட்டமனைத்தும் வணங்குகிறார்கள். இது எல்லாம் பொருத்தம்தான்.
 35. மகாத்மாவே! பிரம்மதேவனையே ஆதியில் படைத்தவராகவும், எல்லோரிலும் மூத்தவராகவும் உள்ள உங்களுக்கு ஏன் நமஸ்காரம் செய்யமாட்டார்கள்? முடிவற்றவரே! தேவதேவா! ஜகந்நிவாசா! (ஜகத்திற்கு இருப்பிடமானவரே!) எது ஸத்தாகவும் அஸத்தாகவும் உள்ளதோ, அவற்றிற்கெல்லாம் மேலான, என்றும் அழியாத, ஸத் சித் ஆனந்த பரப்பிரம்மமான பரமாத்மா நீங்களே.
 36. நீங்கள், முழு முதல் தெய்வம்; சநாதமான புருஷர்; இந்த உலகிற்குச் சிறந்த இருப்பிடம்; அறிபவராகவும், அறியப்படுபவராகவும், பரமபதமாகவும் இருக்கிறீர்கள். அனந்தஸ்வரூபனே! உங்களாலேயே உலகனைத்தும் வியாபிக்கப் பட்டுள்ளது.
 37. வாயுதேவனும், யமனும், அக்னிதேவனும், வருணனும், சந்திரனும், மக்களுக்குத் தலைவனான பிரம்மதேவனும், பிரம்மதேவனுக்குத் தந்தையும் நீங்களே! உங்களுக்குப் பல்லாயிரக் கணக்கான நமஸ்காரங்கள். மீண்டும் உங்களுக்கு நமஸ்காரம். திரும்பத் திரும்ப நமஸ்காரம்.
 38. அளவற்ற திறமை உடையவரே! உங்களுக்கு முன்புறமிருந்தும் பின்புறமிருந்தும் நமஸ்காரம். அனைத்துமானவரே! உங்களுக்கு எல்லாப் புறங்களிலிருந்தும் நமஸ்காரம். அளவற்ற பராக்கிரமம் உடைய நீங்கள் உலகனைத்திலும் வியாபித்து இருக்கிறீர்கள். எனவே, (நீங்களே) அனைத்து வடிவாகவும் இருக்கிறீர்கள்.
 39. உங்களுடைய இந்தப் பெருமையை அறியாத என்னால் தோழன் என்றெண்ணி, அன்பினாலோ அசட்டையினாலோ, ‘கிருஷ்ணா! யாதவா! நண்பனே!’ என்று நன்கு சிந்தித்துப் பார்க்காமல், எது துடுக்காகச் சிறுபேரழைத்தனவெல்லாம், அச்சுதா! கேளிக்கைகளின் போதும், படுக்கையில் உறங்கும்போதும், கூட அமரும்போதும், உண்ணும்போதும், நீங்கள் தனியாக இருக்கும்போதும் அல்லது நண்பர்கள் முன்னிலையிலும், கூடக் கேலியாகவும் வேடிக்கையாகவும் எந்தவிதமாக அவமதிக்கப் பட்டிருக்கிறீர்களோ, அந்த எல்லாக் குற்றங்களையும் நினைத்துப் பார்க்கவே முடியாத மகிமை கொண்ட உங்களைப் பொறுத்தருள வேண்டுகிறேன்.
 40. நீங்கள், இந்த அசைவனவும் அசையாதனவும் கொண்ட உலகத்திற்குத் தந்தையாகவும், எல்லோரைக் காட்டிலும் மிகவும் உயர்ந்த குருவாகவும், போற்றத் தகுந்தவராகவும் இருக்கிறீர்கள். இணையற்ற மகிமை உடையவரே! மூவுலகிலும் எவரும் உங்களுக்கு நிகரானவர் கிடையாது. பின், உங்களினும் மேம்பட்டவர் எவ்வாறு இருக்க முடியும்?
 41. ஆகவே, துதிக்கத் தக்க ஈசுவரனான உங்களை, நான் என் உடலை, உங்களுடைய சரணங்களில் நன்கு அர்ப்பணித்து நமஸ்கரித்து, என்னிடம் மகிழ்ச்சி கொண்டவராக இருக்க வேண்டுகிறேன். தெய்வமே! தந்தை, தனயனுடைய குற்றங்களைப் பொறுப்பது போலவும், நண்பன், தன் நண்பனுடைய குற்றங்களைப் பொறுப்பது போலவும், கணவன், தன் அன்புக்குரிய மனைவினுடைய குற்றங்களைப் பொறுப்பது போலவும், என்னுடைய குற்றங்களனைத்தையும் நீங்கள் பொறுத்துக் கொள்ளவேண்டும்.
 42. இதற்குமுன் நான் பார்த்திராத இந்த ஆச்சரியமான உருவத்தை (இப்போது) பார்த்து மகிழ்ச்சி கொண்டவனாக இருக்கிறேன். என்னுடைய மனம் பயத்தினால் மிகவும் நடுங்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே, நீங்கள் அந்த நான்கு கைகளுடன் கூடிய விஷ்ணு ஸ்வரூபத்தையே எனக்குக் காண்பியுங்கள். தேவதேவனே! ஜகந்நிவாசரே! திருவருள் புரியுங்கள்.
 43. கிரீடம் தரித்தவராகவும், கதாயுதத்தையும் சக்கராயுதத்தையும் கைகளில் ஏந்தியவராகவும் உள்ள அந்த ஸ்வரூபத்திலே, நான் உங்களைத் தரிசிக்க விரும்புகிறேன். ஆகையால், விசுவரூபம் கொண்டவரே! ஆயிரக் கணக்கான திருக்கரங்கள் உடையவரே! அதே நான்கு கைகள் கொண்ட அந்த ஸ்வரூபத்துடனேயே தரிசனம் அளியுங்கள்.”
 44. ஸ்ரீபகவான் கூறுகிறார் – “அர்ஜுனா! அனுக்கிரகபூர்வமாய் என்னால் என்னுடைய யோகசக்தியினால் மிகச்சிறந்ததும், ஒளிமயமானதும், எல்லாவற்றிற்கும் முதலானதும், முடிவற்றதுமான என்னுடைய விராட் ஸ்வரூபம் (பேருரு), உனக்குக் காட்டப் பட்டதோ, இந்த விசுவரூபம், உன்னைத் தவிர வேறு எவராலும் இதற்குமுன் பார்க்கப் படவில்லை.
 45. அர்ஜுனா! மனித உலகில் உன்னைத் தவிர வேறு யாராலும் இந்த விசுவரூபம் தாங்கிய நான் காணப்பட இயலாதவன்; வேதங்களையும் யாகத்தின் செயல்முறைகளையும் கற்பதாலோ, தானங்களாலோ காணப்பட இயலாதவன்; கர்மங்களாலும் காணப்பட முடியாதவன்; உக்கிரமான தவங்களாலும் கூடக் காணப்பட முடியாதவன்.
 46. இத்தகைய என்னுடைய கோரமான (அச்சுறுத்தும்) இந்த ஸ்வரூபத்தைப் பார்த்து, உனக்குக் கலக்கம் வேண்டாம்; மதிமயக்கமும் வேண்டாம். நீ பயத்தைத் துறந்து மனமகிழ்ச்சியுடன் அதே என்னுடைய சங்கு, சக்கரம், கதை, பத்மம் ஆகியவற்றை நான்கு கைகளிலும் ஏந்தியுள்ள ஸ்வரூபத்தையே மறுபடியும் பார்.”
 47. ஸஞ்ஜயன் கூறுகிறார் – “வாசுதேவனான பகவான் அர்ஜுனனிடம் இவ்வாறு கூறிவிட்டு, மறுபடியும் அதேவிதமான தன்னுடைய (சதுர்புஜ விஷ்ணு) ஸ்வரூபத்தையும் காண்பித்தார். மறுபடியும் மகாத்மாவான ஸ்ரீகிருஷ்ணன் இனிய வடிவமாக ஆகி, பயந்திருந்த அர்ஜுனனுக்குத் தைரியமூட்டினார்.”
 48. அர்ஜுனன் கூறுகிறார் – “ஜனார்தனா! உங்களுடைய இந்த மிகவும் இனியதான மானுட வடிவைப் பார்த்து, இப்பொழுது நிலைபெற்ற மனம் கொண்டவனாக ஆகிவிட்டேன். என் இயல்பான நிலையையும் அடைந்துவிட்டேன்.”
 49. ஸ்ரீபகவான் கூறுகிறார் – “ என்னுடைய எந்த சதுர்புஜ ஸ்வரூபத்தை நீ இப்போது பார்த்தாயோ, இது காண்பதற்கரிதானது. தேவர்கள்கூட எப்போதும் இந்த உருவத்தைக் காண்பதற்குப் பெருவிருப்பம் கொண்டிருக்கிறார்கள்.
 50. எவ்வாறு நீ என்னைப் பார்த்தாயோ, இவ்விதமான சதுர்புஜம் கொண்ட நான், வேதங்களைக் கற்பதால் காணப்பட முடியாதவன்; தவத்தினாலும் காணப்பட முடியாதவன்; தானத்தினாலும் காணப்பட முடியாதவன்; யாகம் செய்வதாலும் காணப்பட முடியாதவன்.
 51. ஆனால், எதிரிகளை வாட்டுபவனே! அர்ஜுனா! இவ்வித சதுர்புஜ ஸ்வரூபமுள்ள நான், வேறொன்றைப் பயனாகக் கருதாத பக்தியினால் கண்கூடாகக் காணப்படக் கூடியவன்; தத்துவரீதியாக அறியப்படவும் கூடியவன். எவரும் ஐக்கிய பாவத்தால் என்னிடம் ஒன்றிவிடவும் முடியும்.
 52. அர்ஜுனா! எவனொருவன் செய்யவேண்டிய எல்லாக் கடமைகளையும் என் பொருட்டே ஆற்றுவானோ, என்னையே அடையத்தக்க மேலான கதியாகக் கொள்வானோ, என்னிடமே பக்தி பூண்டவனோ, பற்றற்றவனோ, உயிரினங்கள் அனைத்திலும் பகைமை இல்லாதவனோ, அந்த அநன்ய பக்தன் என்னையே அடைகிறான்.”

இதுவரை ‘விசுவரூப தரிசன யோகம்’ என்ற பதினொன்றாவது அத்தியாயம்.

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.