ஸ்ரீமத் பகவத்கீதை (14) – குணத்ரய விபாக யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை – பொழிப்புரை

ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா

பதினான்காவது அத்தியாயம் –  குணத்ரய விபாக யோகம்

 1. ஸ்ரீபகவான் கூறினார் – “எந்த ஞானத்தை அறிந்து பரம்பொருளையே சிந்தித்துக் கொண்டிருக்கும் எல்லா முனிவர்களும், இந்த சம்சாரத்தில் இருந்து விடுபட்டு மிக மேலான ஸித்தியாகிய பரமாத்மாவை அடைந்திருக்கிறார்களோ, ஞானங்களிலேயே மிகவும் உயர்ந்ததும் மிகச் சிறந்ததுமான அந்த ஞானத்தைப் பற்றி மறுபடியும் சொல்லப் போகிறேன்.
 2. இந்த ஞானத்தையறிந்து பின்பற்றி, என்னுடைய ஸ்வரூபத்தை அடைந்துள்ளவர்கள் படைப்பின் தொடக்கத்தில் மீண்டும் பிறப்பதில்லை; பிரளய காலத்தில்கூட துன்புறுவதுமில்லை.
 3. அர்ஜுனா! என்னுடைய மஹத் பிரம்மம் என்ற மூலப்பிரகிருதி அகில சராசரங்களுக்கும் பிறப்பிடம். நான் அந்த பிறப்பிடத்தில் சேதன சமுதாயமான உயிரினங்களின் கருவை வைக்கிறேன். அந்த ஜடசேதன சேர்க்கையிலிருந்து சகல சராசரங்களுடைய உற்பத்தி ஏற்படுகிறது.
 4. அர்ஜுனா! பலவிதமான அனைத்துப் பிறப்பிடங்களிலும் எத்தனை உருவங்கள் – உடல்கள் கொண்ட பிராணிகள் உண்டாகின்றனவோ, அவை எல்லாவற்றிற்கும் பிரகிருதியே பிறப்பிடம் – கருத்தரிக்கும் தாய். நான் விதையளிக்கும் தந்தை.
 5. அர்ஜுனா! சத்துவ குணம், ரஜோ குணம், தமோ குணம் என்ற பிரகிருதியில் இருந்து உண்டான மூன்று குணங்களும் அழிவற்றதான ஜீவாத்மாவை இவ்வுடலில் கட்டுகின்றன.
 6. பாவமற்றவனே! அந்த முக்குணங்களில் சத்துவ குணம் தூய்மையானதால் ஒளி கொடுக்கக் கூடியது; மேலும் விகாரமற்றது. ஆயினும், அது இன்பத்தில் கொண்ட தொடர்பினாலும், ஞானத்தில் கொண்ட தொடர்பினாலும் அதாவது அபிமானத்தினாலும் கட்டுகிறது.
 7. அர்ஜுனா! விருப்பு வடிவாகிற ரஜோ குணம், ஆசை, பற்று – இவற்றில் உண்டானதாக அறிந்து கொள். அது ஜீவாத்மாவைக் கர்மங்களின், கர்மங்களிலும் பயன்களிலும் உள்ள தொடர்பால் கட்டுகிறது.
 8. அர்ஜுனா! உடற்பற்றுடைய எல்லோரையும் மயக்கக் கூடிய தமோ குணமோ அஞ்ஞானத்தில் இருந்து உண்டானதாக அறிந்துகொள். அது இந்த ஜீவாத்மாவை வீணான செயல்களில் ஈடுபடுவது, சோம்பல், தூக்கம் – இவற்றால் கட்டுகிறது.
 9. அர்ஜுனா! சத்துவ குணம் சுகத்தில் ஈடுபடுத்துகிறது. ரஜோகுணம் செயலில் ஈடுபடுத்துகிறது. தமோ குணமோ ஞானத்தை மறைத்துக் கவனமின்மையில் அதாவது வீணான செயல்களில் ஈடுபடுத்துகிறது.
 10. அர்ஜுனா! ரஜோகுணத்தையும் தமோகுணத்தையும் அடக்கி, சத்துவகுணம் மேலோங்குகிறது. சத்துவ குணத்தையும் தமோ குணத்தையும் அடக்கி, ரஜோகுணம் மேலோங்குகிறது. அப்படியே சத்துவ குணத்தையும் ரஜோகுணத்தையும் அடக்கி, தமோகுணம் மேலோங்குகிறது.
 11. எப்பொழுது இந்த உடலிலும் உள்ளத்திலும் புலன்களிலும் சைதன்ய சக்தியான ஒளியும் விவேக ஞானமும் உண்டாகிறதோ, அப்போது சத்துவகுணம் மேலோங்கியுள்ளது என்று அறிந்து கொள்ளவேண்டும்.
 12. அர்ஜுனா! ரஜோகுணம் அதிகமாகும்போது பேராசை, உலகியல் கர்மங்களில் ஈடுபாடு, தன்னலத்தில் பற்றோடு கூடிய கர்மங்களைத் தொடங்குதல், அமைதியின்மை, உலகியல் நுகர்பொருட்களில் பேராவல் -– இவை யாவும் உண்டாகின்றன.
 13. அர்ஜுனா! தமோ குணம் அதிகமாகும்போது அந்தக்கரணங்களிலும் புலன்களிலும் ஒளியின்மையும், செய்யவேண்டிய கடமைகளில் ஈடுபாடின்மையும், அசட்டைத்தனம் அதாவது வீண்செயல்களில் ஈடுபாடும், தூக்கம் முதலிய அந்தக்கரணங்களின் மயக்கமும் ஆகிய இவை அனைத்தும் உண்டாகின்றன.
 14. எப்பொழுது இந்த மனிதன் சத்துவகுணம் பெருகி உள்ளபொழுது இறப்பை அடைகிறானோ, அப்பொழுதே உயர்ந்த செயல்கள் செய்பவர்களுடைய நிர்மலமான சுவர்க்கம் முதலிய புண்ணிய உலகங்களை அடைகிறான்.
 15. ரஜோகுணத்தின் ஆதிக்கத்தில் இறப்பை அடைந்து, கர்மங்களில் பற்றுள்ள மனிதர்களிடையே பிறக்கிறான். அவ்வாறே தமோகுணம் அதிகமாக இருக்கும்போது இறந்தவன் புழு-பூச்சி, விலங்கு முதலிய அறிவில்லாத பிறவிகளில் பிறக்கிறான.
 16. சிறந்த செயலின் பயனோ சாத்விகமானது (அதாவது, சுகம், ஞானம், வைராக்கியம் முதலியன கொண்டது); தூய்மையானது என்று சொல்கிறார்கள். ராஜஸமான செயலின் பயன் துயரமானது. தாமஸச் செயலின் பயன் அறியாமை என்று சொல்கிறார்கள்.
 17. சத்துவ குணத்திலிருந்து ஞானம் உண்டாகிறது. ரஜோ குணத்திலிருந்து ஐயமின்றிப் பேராசையே உண்டாகிறது. தமோ குணத்தில் இருந்து கவனமின்மையும் மதிமயக்கமும் உண்டாகின்றன. மேலும் அறியாமையும் உண்டாகின்றது.
 18. சத்துவ குணத்தில் நிலைபெற்ற மனிதர்கள் சுவர்க்கம் முதலிய உயர்ந்த லோகங்களுக்குச் செல்கின்றனர். ரஜோ குணத்தில் நிலைபெற்ற மனிதர்கள் நடுவில் அதாவது மனித உலகிலேயே நிற்கின்றார்கள். தூக்கம், சோம்பல், வீண்செயலில் விருப்பம் முதலிய தாழ்ந்த குணங்களில் நிலைபெற்ற தாமஸ குணம் உடைய மனிதர்கள் புழு, விலங்கு, பறவை முதலிய தாழ்ந்த பிறவியையும் நரகத்தையும் அடைகிறார்கள்.
 19. எப்பொழுது பார்ப்பவன் (சமஷ்டி சேதனனான பரமாத்மாவில் ஒன்றி நிற்கும் சாட்சியான மனிதன்) முக்குணங்களைத் தவிர வேறு ஒருவனைக் கர்த்தா என்று பார்ப்பதில்லையோ, முக்குணங்களுக்கும் அப்பாற்பட்ட ஸத் சித் ஆனந்தமயமான பரமாத்மாவான என்னைத் தத்துவரீதியாக அறிகிறானோ, அப்பொழுது அவன் என் ஸ்வரூபத்தை அடைகிறான்.
 20. புருஷன், உடல் தோன்றுவதற்குக் காரணமான இந்த மூன்று குணங்களையும் கடந்து, பிறப்பு, இறப்பு, மூப்பு – இவற்றிலிருந்தும் , பிற எல்லாத் துன்பங்களில் இருந்தும் விடுபட்டுப் பரமானந்தத்தை அடைகிறான்.”
 21. அர்ஜுனன் கேட்கிறார் – “இந்த மூன்று குணங்களையும் கடந்த மனிதன் எந்தெந்த இலக்கணங்களோடு கூடியவனாக இருக்கிறான்? மேலும், எத்தகைய நடத்தை உள்ளவனாக இருக்கிறான்? ஆப்படியே பிரபுவே! எந்த உபாயத்தினால் இந்த மூன்று குணங்களையும் கடக்கிறான்?”
 22. ஸ்ரீபகவான் கூறுகிறார்—“அர்ஜுனா! எந்த மனிதன் சத்துவ குணத்தின் செயலான பிரகாசத்தையும், ரஜோ குணத்தின் செயலான செயலூக்கத்தையும், தமோ குணத்தின் செயலான மோகத்தையும், அவை வரும்போது அவற்றை வெறுப்பதில்லையோ, விலகும்போது அவற்றைத் திரும்பவும் பெற விரும்புவதில்லையோ –
 23. எவன் சாட்சியைப் போல் இருந்துகொண்டு குணங்களால் அசைக்கப் படுவதில்லையோ, மேலும் குணங்களே குணங்களிலேயே இயங்குகின்றன என்று அறிந்து ஸத் சித் ஆனந்த பரமாத்மாவிடம் ஒன்றியவனாக இருக்கிறானோ, மற்றும் அதிலிருந்து நிலைகுலைவதில்லயோ –
 24. எவன் தன் நிலையான ஆத்ம ஸ்வரூபத்தில் இடையறாது நிலைத்து நிற்கிறானோ, இன்ப-துன்பங்களைச் சமமாகக் கருதுவானோ, மண்ணையும் கல்லையும் பொன்னையும் சமமாக மதிப்பானோ, ஞானியோ, வேண்டியது-வேண்டாதது இரண்டையும் ஒன்றாகவே நினைப்பானோ, இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் ஒன்றெனக் கருதுவானோ –
 25. பெருமையையும் சிறுமையையும் சமமென நினைப்பானோ, நண்பர் பக்கலிலும், பகைவர் பக்கலிலும் சமநோக்குக் கொண்டவனோ, செயல்கள் அனைத்தையும் ‘நான் செய்கிறேன்’ (தான் கர்த்தா) என்ற மனப்பான்மையை விட்டவனோ, அந்த மனிதன் முக்குணங்களையும் கடந்தவன் என்று கூறப்படுகிறான்.
 26. மேலும், எவன் வேறு எதிலும் நாட்டமிலாமல் ஒன்றிய பக்தியோகத்தினால் என்னை இடைவிடாது வழிபடுகிறானோ, அவன் இந்த மூன்று குணங்களையும் கடந்து ஸத் சித் ஆனந்தமயமான பரப்பிரம்மத்தை அடைவதற்குத் தகுதி பெறுகிறான்.
 27. ஏனெனில், அந்த அழிவற்றதான பரப்பிரம்மத்திற்கும் அமிர்த நிலைக்கும் (இறவா நிலைக்கும்) எப்பொழுதும் இருக்கக்கூடிய தர்மத்திற்கும் வேறுபாடற்ற ஒரே சீரான ஆனந்தத்திற்கும் உறைவிடம் நானே.”

இதுவரை ‘குணத்ரய விபாக யோகம்’ என்ற பதினான்காவது அத்தியாயம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.