ஸ்ரீமத் பகவத்கீதை (9) – ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை – பொழிப்புரை

ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா

 ஒன்பதாவது அத்தியாயம் –  ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்

 1. ஸ்ரீபகவான் கூறுகிறார் – அர்ஜுனா! எதை அறிந்து கொண்டதாலேயே துக்க வடிவான உலகியலில் இருந்து விடுதலை பெறுவாயோ, மிகவும் மறைத்துப் போற்ற வேண்டிய விஞ்ஞானத்தோடு கூடிய இந்த ஞானத்தைக் குற்றங்குறை காணாத இயல்புடைய பக்தனான உனக்கு, மறுபடியும் விளக்கிக் கூறப்போகிறேன்.
 2. இந்த விஞ்ஞானத்துடன் கூடிய ஞானம் அனைத்து வித்யைகளுக்கும் அரசு; மறைத்துப் போற்றப்பட வேண்டியவற்றுள் சிறந்தது; மிகப்புனிதமானது; மிகச்சிறந்தது; கண்கூடாக உணர்தற்குரியது; தர்மநெறிக்குட்பட்டது; கடைப் பிடிப்பதற்கு மிகவும் எளிதானது; மேலும் அழிவற்றது.
 3. எதிரிகளை வாட்டுபவனே! மேலே கூறப்பட்ட தர்மத்தினுடைய சிறப்பில் நம்பிக்கையற்ற மனிதர்கள் என்னை அடையாமல் மரண வடிவான சம்சாரச் சக்கரத்தில் சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.
 4. உருவமற்ற பரமாத்மாவான என்னால் இந்த அனைத்துலகமும் பனிக்கட்டியில் நீர் போல நிறைந்துள்ளது. எல்லா உயிரினங்களும் என்னுடைய சங்கல்பத்தின் பலத்தினால் நிலை பெற்றுள்ளன. ஆனால், உண்மையில் நான் அவற்றுள் நிலைபெற்றிருக்கவில்லை.
 5. அந்தச் சராசரங்கள் அனைத்தும் என்னுள் இருப்பவையல்ல. என்னுடைய ஈசுவரத்தன்மை உடைய யோகசக்தியைப் பார். அனைத்து உயிரினங்களையும் தாங்குபவனும், உண்டாக்குகின்றவனுமாக இருந்தபோதிலும், என்னுடைய ஆத்மா உண்மையில் உயிரினங்களில் நிலைபெற்று இருப்பதில்லை.
 6. எங்கும் வீசுகின்ற பெருங்காற்று எவ்வாறு ஆகாயத்தில் எப்பொழுதும் உள்ளதோ, அவ்வாறே எல்லா உயிரினங்களும் என் சங்கல்பத்தில் உண்டானதால், என்னிடம் உள்ளன என்று தெரிந்துகொள்.
 7. குந்தியின் மைந்தனே! அர்ஜுனா! எல்லா உயிரினங்களும் கல்பங்களின் முடிவில் என்னுடைய பிரகிருதியை அடைகின்றன. (பிரகிருதியில் தன்மயமாகி விடுகின்றன.) அவற்றைக் கல்பத்தின் ஆரம்பத்தில் நான் திரும்பவும் தோன்றச் செய்கிறேன்.
 8. இயல்பின் ஆற்றலினால் தன்வசமிழந்த இந்த அனைத்து உயிர்த்தொகுதிகளையும் திரும்பத்திரும்ப என்னுடைய பிரகிருதியை ஏற்றுக் கொண்டு, அவரவர் வினைக்கேற்றவாறு படைக்கிறேன்.
 9. அர்ஜுனா! அந்தக் கர்மங்களில் பற்றில்லாமலும், ஒதுங்கியவனைப் போன்றும் இருக்கின்ற பரமாத்மாவான என்னை, அந்தச் செயல்கள் பந்தப் படுவதில்லை.
 10. குந்தியின் மைந்தனே! தலைவனான என் கண்காணிப்பில் பிரகிருதியானது அசைவன, அசையாதன – இவற்றோடு கூடிய உலகமனைத்தையும் தோற்றுவிக்கிறது. இக் காரணத்தினால் இந்தச் சம்சாரச் சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது.
 11. என்னுடைய மேலான இயல்பை அறியாதவர்களான அறிவிலிகள் மனிதனுடைய உடலைத் தாங்கிக் கொண்டிருக்கும் உயிரினங்களனைத்திற்கும் தலைவனான என்னை அற்பமாக நினைக்கிறார்கள். அதாவது அவமதிக்கிறார்கள். (என்னுடைய யோகமாயையினால் உலகம் அனைத்தையும் காப்பதற்காக மனித உருத்தாங்கி நிலவும் பரமேசுவரனான என்னைச் சாதாரண மனிதன் என்று நினைக்கிறார்கள்.)
 12. வீணான ஆசையுடையவர்களும் பயனற்ற செயல்களைச் செய்பவர்களும், வீணான அறிவு உடையவர்களுமான (தத்துவ ஞானம் இல்லாத) உறுதியற்ற மனமுடைய அறிவிலிகள் அரக்கத் தன்மையையும் அசுரத் தன்மையையும் மோகத்திற்கு வசப்பட்டுத் துன்புறுத்துவது ஆகிய இயல்பையே சார்ந்துள்ளார்கள்.
 13. ஆனால், அர்ஜுனா! தெய்விக இயல்பைக் கைக்கொண்டவர்களான பெரியோர்கள் என்னை எல்லா உயிரினங்களுக்கும் என்றுமுள்ள நிலைத்த காரணம் என்றும், அழிவற்றவன் என்றுமறிந்து, வேறு எதிலும் நாட்டமில்லாத மனத்துடன் இடைவிடாது வழிபடுகிறார்கள்.
 14. உறுதியான நிச்சயம் கொண்ட பக்தர்கள் இடைவிடாது என்னுடைய நாமங்களையும் குணங்களையும் கீர்த்தனம் செய்து கொண்டும், என்னைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டும், என்னைத் திரும்பத் திரும்ப வணங்கிக் கொண்டும், எப்பொழுதும் என்னுடைய தியானத்திலேயே நிலைத்திருந்தும், வேறொன்றிலும் நாட்டமில்லாத அன்புடன் என்னை வழிபடுகிறார்கள்.
 15. வேறு சில ஞானயோகிகள் நிர்குணமான உருவமற்ற பிரம்மமான என்னை ஞான யக்ஞத்தினால் தான் வேறு என்ற எண்ணமில்லாமல் ஒன்றிய பாவத்தோடு வழிபட்டுக் கொண்டும், மற்றும் சிலர் பல தோற்றங்களில் விளங்கும் விராட் ஸ்வரூபம் கொண்ட பரமேசுவரனான என்னைத் தன்னிலும் வேறாக எண்ணியும் வழிபடுகிறார்கள்.
 16. கிரதுவும் நானே; யக்ஞமும் நானே; பித்ரு யக்ஞமான சிராத்தமும் நானே; ஹோமத்திரவியங்களும் மூலிகைகளும் நானே; வைதீக கர்மங்களில் ஓதப்படும் மந்திரமும் நானே; நெய்யும் நானே; அக்னியும் நானே; ஹோமம் என்ற செயலும் நானேதான்!
 17. இந்த உலகம் அனைத்தையும் தாங்குபவனும், கர்மங்களுக்குப் பயனளிப்பவனும், தந்தையும், தாயும், பாட்டனாரும், அறியத் தக்கவனும், புனிதமானவனும், ஓங்காரமும், ருக், சாம, யஜுர் என்ற மூன்று வேதங்களும் நானேதான்.
 18. அடையத்தக்க பரமபதம், காத்துப் போஷிப்பவன், எல்லோரையும் ஆள்பவன், நல்லன-தீயன ஆகியவற்றைப் பார்ப்பவன், அனைத்திற்கும் இருப்பிடம், எல்லாவற்றிற்கும் புகலிடம், கைம்மாறு எதிர்பாராமல் உதவிபுரியும் நண்பன், அகில உலகமும் தோன்றுவதற்கும் ஒடுங்குவதற்குமான காரணம், நிலையாகத் தங்குமிடம், நிதானம், அதாவது பிரளய காலத்தில் அனைத்து உயிரினங்களும் நுண்ணிய வடிவில் லயமடையும் இடம், அழிவில்லாத விதை ஆகிய அனைத்தும் நானே!
 19. நான்தான் சூரியனுடைய வடிவில் வெப்பம் அளிக்கிறேன்; மழையை உள்ளிழுத்துத் தடுத்து நிறுத்துகிறேன்; பொழியவும் செய்கிறேன். அர்ஜுனா! நானே இறவாப்பெருநிலையும் ஆவேன்; படைத்தவற்றை அழிக்கும் மகாகாலனும் நானே ஆவேன். அழியாததும் அழியக் கூடியதும் எல்லாமே நான்தான் (என்னுடைய ஸ்வரூபம்தான்).
 20. மூன்று வேதங்களிலும் வர்ணிக்கப்பட்டுள்ள முறைகளின்படி பயனை நல்கக்கூடிய கர்மங்களைச் செய்து, யாகத்தில் ஸோமம் என்ற ரசத்தை அருந்தி, பாவங்கள் அகன்று தூய்மை பெற்றவர்கள் என்னை யாகங்களால் உபாசித்து சுவர்க்கலோகம் அடைவதை வேண்டுகிறார்கள். அவர்கள் புண்ணியத்தின் பயன் வடிவான அமரர் உலகை அடைந்து, சுவர்க்கத்தின் தெய்விகமான தேவதைகள் அனுபவிக்கும் போகங்களை அனுபவிக்கிறார்கள்.
 21. அதாவது அந்த பரந்து விரிந்துள்ள சுவர்க்கலோக சுகத்தை அனுபவித்துவிட்டுப் புண்ணியம் தீர்ந்து போனவுடன் இறப்புக்குரியதான மண்ணுலகை அடைகிறார்கள். இவ்வாறு சுவர்க்கத்தை அடைவதற்கு சாதனமானவையும் மூன்று வேதங்களில் கூறப்பட்டவையும் பயனை நல்கக்கூடியவையும் ஆன கர்மங்களைச் சார்ந்திருக்கின்ற போகத்தில் பற்றுள்ளவர்கள் திரும்பத் திரும்பப் பிறந்து இறத்தலை அடைகிறார்கள். அதாவது, புண்ணியத்தினால் சுவர்க்கத்தையும், புண்ணியம் தீர்ந்து போவதால் மறுபடி மண்ணுலகையும் அடைகிறார்கள்.
 22. வேறு எதிலும் நாட்டமில்லாது பகவான் ஒருவரிடமே அநன்ய பிரேமை கொண்டவர்களான எந்த பக்தர்கள், பரமேசுவரனான என்னைத் தியானித்துக் கொண்டு, எவ்விதப் பயனையும் எதிர்பார்க்காமல் உபாசிக்கின்றனரோ, இடைவிடாது என்னையே நினைத்துக் கொண்டிருக்கின்ற அவர்களுடைய யோகக்ஷேமத்தை (பகவானை அடைவதற்கான யோகத்திற்குரிய சாதனங்களை) நானே அடையச் செய்கிறேன்.
 23. அர்ஜுனா! பயனை எதிர்பார்ப்பவர்களான எந்த பக்தர்கள் சிரத்தையோடு கூடியவர்களாக இருந்தபோதிலும் மற்ற தேவதைகளை வழிபடுகிறார்களோ, அவர்களும் என்னையே வழிபடுகிறார்கள்.ஆனால், அவர்களுடைய வழிபாடு விதிமுறைப்படி உள்ளதன்று. ( அஞ்ஞானம் நிறைந்தது.)
 24. ஏனெனில், எல்லா யாகங்களையும் ஏற்றுக்கொள்பவனும், தேவர்களை அடக்கி ஆளும் மகேசுவரனும் நானே. ஆனால், அவர்கள் பரமாத்மாவான என்னை இந்தத் தத்துவ ரீதியில் அறிவதில்லை. ஆகையால் வீழ்ச்சி அடைகிறார்கள். (மீண்டும் பிறவியை அடைகிறார்கள்.)
 25. தேவதைகளை வழிபடுபவர்கள் தேவதைகளை அடைகிறார்கள்; பித்ருக்களை வழிபடுபவர்கள் பித்ருக்களை அடைகிறார்கள்; பூதங்களை வழிபடுபவர்கள் பூதங்களை அடைகிறார்கள். ஆனால், என்னை வழிபடுபவர்கள் என்னையே அடைகிறார்கள். (ஆகவே, என் பக்தர்களுக்கு மறுபிறவி கிடையாது.)
 26. எவன் பக்தியோடு எனக்கு இலை, மலர், பழம், நீர் முதலியவற்றை அர்ப்பணம் செய்கிறானோ, தூயபுத்தியுடன் பயனை எதிர்பார்க்காமல் பிரேமை நிறைந்த அந்த பக்தனுடைய பக்தியுடன் அர்ப்பணம் செய்யப்பட்ட காணிக்கையான அதை (இலை, மலர் முதலியவற்றை), நான் (ஸகுண ஸ்வரூபமாக வெளிப்பட்டுப் பிரியத்துடன்) அருந்துகிறேன்.
 27. குந்தியின் மைந்தனே! எந்தக் கர்மங்களைச் செய்கிறாயோ, எதை உண்கிறாயோ, எதை ஹோமம் செய்கிறாயோ, எதைத் தானம் அளிக்கிறாயோ, அவையனைத்தையும் எனக்கே அர்ப்பணம் செய்துவிடு.
 28. இவ்வாறு செய்வதனைத்தையும் பகவானுக்கே அர்ப்பணம் செய்வதாகிய ஸந்யாஸ யோகத்தில் ஈடுபட்ட மனத்துடைய நீ, நல்லதும் தீயதுமான பயன்களாகிய கர்மங்களின் கட்டுக்களில் இருந்து விடுபடுவாய். அவ்வாறு விடுபட்டு என்னையே அடைந்து விடுவாய்.
 29. எல்லா உயிரினங்களிலும் நான் ஒரே சமமாக நிறைந்துள்ளேன். எனக்கு வெறுக்கத்தக்கவன் (வேண்டாதவன்) இல்லை; வேண்டியவன் இல்லை. ஆனால், எவர்கள் பிரேமை கொண்டு பக்தியுடன் என்னை வழிபடுகிறார்களோ, அவர்கள் என்னிடமும், நான் அவர்களிடமும் காணக் கூடியவனாக இருக்கிறேன்.
 30. மிகவும் தீய நடத்தை உள்ளவனாகிலும் வேறு எதிலும் நாட்டமின்றி என் பக்தனாகி என்னை வழிபடுவானேயானால், அவன் சாது (நல்லவன்) என்றே கருதப் படக்கூடியவன். ஏனெனில், அவன் பகவானைப் பூஜிப்பதைக் காட்டிலும் சிறந்தது வேறு இல்லை என்ற நல்ல தீர்மானத்துக்கு வந்தவன்.
 31. அவன் விரைவிலேயே தர்மாத்மாவாக ஆகிறான்; நிலையான அமைதியை அடைகிறான். அர்ஜுனா! என்னுடைய பக்தன் அழிவதில்லை என்ற சத்தியத்தை உறுதியாக அறிந்து கொள்.
 32. ஏனெனில், அர்ஜுனா! பெண்கள், வைசியர்கள், நான்காம் வர்ணத்தவர்கள், அவ்வாறே சண்டாளர் முதலிய இழிந்த பிறவி அடைந்தவர்கள் எவர்களாக இருந்தாலும், அவர்களும் என்னையே தஞ்சமடைந்து மேலான பெரும் பேறான மோட்சத்தை அடைகிறார்கள்.
 33. (அங்ஙனமிருக்க) புனிதமான இயல்பு வாய்ந்த பிராமணர்கள், அவ்வாறே ராஜரிஷிகள் ஆகிய பக்தர்கள், என்னைச் சரணம் அடைந்து பரமகதியை அடைகிறார்கள் என்பதில் சொல்லுவதற்கு என்ன உள்ளது? ஆகையால், சுகமில்லாததும் நிலை இல்லாததுமான இந்த மனித உடலை அடைந்த நீ, எப்போதும் என்னை வழிபடுவாயாக.
 34. என்னிடமே மனம் நிலைபெற்றுள்ளவனாக ஆகிவிடு; என் பக்தனாக ஆகிவிடு; என்னைப்பூஜிப்பவனாக ஆகிவிடு; என்னை வணங்கு, இவ்விதம் மனம்-புலன்களோடு கூடிய உடலை என்னிடம் ஈடுபடுத்தி, என்னையே அடையத் தக்க ஒரே புகலாகக் கொண்டு என்னையே அடைவாயாக.”

இதுவரை ‘ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்’ என்ற ஒன்பதாவது அத்தியாயம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.