ஸ்ரீமத் பகவத்கீதை (3) – கர்ம யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை – பொழிப்புரை

ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா

 மூன்றாவது அத்தியாயம் – கர்ம யோகம்

 1. அர்ஜுனன் கேட்கிறார் – “ஜனார்தனா! கர்மத்தைக் காட்டிலும் ஞானம் சிறந்தது என்று உங்களால் கருதப்பட்டால், கேசவா! பின்னர் ஏன் என்னைப்பயங்கரமான கர்மத்தில் ஈடுபடுத்துகிறீர்கள்?
 2. குழம்பியது போன்ற பேச்சினால் என் புத்தியைக் கலக்குகிறீர்கள் போலிருக்கிறதே! எதனால் நான் மேன்மையை அடைவேனோ, அந்த ஒன்றைத் தீர்மானித்துக் கூறுங்கள்.”
 3. ஸ்ரீபகவான் கூறுகிறார் – “பாவமற்றவனே! இவ்வுலகில் என்னால் இருவகைகள் கொண்ட நிஷ்டைகள் முன்பே கூறப்பட்டன. அவற்றில் ஸாங்க்ய யோகிகளுக்கு நிஷ்டை ஞானயோகத்தினாலும், யோகிகளுக்கு நிஷ்டை கர்மயோகத்தினாலும் அமைகிறது.
 4. மனிதன் கர்மங்களை செய்ய ஆரம்பிக்காமல் இருப்பதாலேயே நிஷ்கர்ம நிலையை – கர்ம யோக நிஷ்டையை – அடைவதில்லை. கர்மங்களைச் செய்யாமல் துறப்பதாலேயே ஸித்தியை, அதாவது ஸாங்க்யயோக நிஷ்டையையும் பெறுவதில்லை.
 5. சந்தேகமின்றி எந்த ஒருவனும் எக்காலத்திலும் ஒருகணம் கூடச் செயல் புரியாமல் இருப்பதில்லை. ஏனெனில், மனித சமுதாயம் அனைத்தும் பிரகிருதியிலிருந்து உண்டான குணங்களால் தன்வசமிழந்து வெறு வழியின்றிச் செயல் செய்யத் தூண்டப்படுகின்றது.
 6. அறிவிலியான எவன் புலன்களை அனைத்தையும் வலுவில் (வெளித் தோற்றத்தில்) அடக்கிவிட்டு, மனத்தினால் அந்தப் புலன்நுகர்ப் பொருட்களை நினைத்துக் கொண்டிருக்கிறானோ, அவன் பொய் நடத்தையுள்ளவன் (ஆஷாடபூதி) எனக் கூறப்படுகிறான்.
 7. அனால், அர்ஜுனா! எவனொருவன் மனத்தினால் புலன்களை வசப்படுத்திப் பற்றில்லாதவனாக, எல்லாப் புலன்களாலும் கர்மயோகத்தைக் கடைப்பிடிக்கிரானோ, அவனே சிறந்தவன்.
 8. நீ, சாஸ்திரங்களால் விதிக்கப்பட்ட கர்மங்களை ஆற்றுவாயாக. ஏனெனில், கர்மங்கள் செய்யாமல் இருப்பதைக் காட்டிலும் கர்மங்களை ஆற்றுவது சிறந்தது. மேலும், கர்மம் செய்யாமல் இருப்பதால், உனக்கு உடலைப் பேணுவதுகூட சாத்தியமாகாது.
 9. யாகத்தின் பொருட்டுச் செய்யப்படுகின்ற கர்மம் தவிர, வேறு செயல்களில் ஈடுபடுவதனாலேயே இம்மனித சமுதாயம் கர்மங்களால் பந்தப் படுகிறது. (ஆகையால்) அர்ஜுனா! பற்றுதல் இல்லாமல் அந்த யாகத்தின் பொருட்டே கடமையை நன்கு ஆற்றுவாயாக.
 10. கல்பத்தின் ஆரம்பத்தில் பிரஜைகளின் தலைவரான பிரம்மதேவர் யாகங்களுடன் மக்களைப் படைத்துவிட்டுக் கூறினார் – நீங்கள் இந்த வேள்வியின் மூலம் பல்கிப் பெருகுங்கள். இந்த வேள்வி உங்களுக்கு, நீங்கள் விரும்பிய போகத்தைத் தருவதாக ஆகட்டும்.
 11. இந்த வேள்வியினால் தேவதைகளை வளரச் செய்யுங்கள்.அந்த தேவதைகள் உங்களை வளரச் செய்யட்டும். தன்னலம் கருதாத தன்மையுடன் ஒருவர் மற்றொருவரை வளரச் செய்து, நீங்கள் மேலான நன்மையை அடைவீர்களாக.
 12. வேள்வியினால் வளர்ச்சியடைந்த தேவதைகள், உங்களுக்குக் கேட்காமலேயே விரும்பிய போகங்களை நிச்சயமாகக் கொடுப்பார்கள். இவ்விதம் அவர்களால் கொடுக்கப்பட்ட போகங்களை, அவர்களுக்கு அர்ப்பணம் செய்யாமல் எவனொருவன் அனுபவிக்கிறானோ, அவன் திருடனே.
 13. வேள்வியில் மீதமாக எஞ்சிய உணவை உண்கின்ற சான்றோர்கள், எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறார்கள். ஆனால், எந்தப் பாவிகள் தம் உடலைப் பேணுவதற்காகவே உணவைச் சமைக்கிறார்களோ, அவர்கள் பாவத்தையே உண்கிறார்கள்.
 14. 15 உயிரினங்களனைத்தும் உணவிலிருந்து உண்டாகின்றன. மழையிலிருந்து உணவின் உற்பத்தி ஏற்படுகின்றது. மழை வேள்வியிலிருந்து உண்டாகிறது. வேள்வி விதிக்கப்பட்ட கர்மங்களில் இருந்து உண்டாகிரது. கர்மங்களின் தொகுப்பு வேதத்தில் உண்டாவது. மேலும், வேதம் அழிவற்ற பரமாத்மாவிடம் தோன்றியது என்று தெரிந்துகொள். ஆகவே, எங்கும் நிறைந்த அழிவற்ற பரப்பிரம்ம பரமாத்மா எப்பொழுதும் வேள்வியில் நிலைபெற்றிருக்கிறார் (என்பது இதிலிருந்தே தெரிகிறது).
 15. பார்த்தா! எவனொருவன் இவ்வுலகில் இவ்வாறு பரம்பரையாகத் தொடங்கி வைக்கப்பட்ட படைப்புச் சக்கரத்திற்கு அனுகூலமாகப் பின்பற்றி நடக்கவில்லையோ – தன் கடமையை ஆற்றவில்லையோ – புலன்கள் மூலம் போகங்களில் இன்புற்றிருக்கும் அந்தப் பாவ வாழ்க்கையுடையவன் வீணே வாழ்கிறான்.
 16. ஆனால், எந்த மனிதன் ஆத்மாவிலேயே இன்புற்று இருப்பவனாகவும், மேலும் ஆத்மாவிலேயே திருப்தி கொண்டவனாகவும், ஆத்மாவிலேயே மகிழ்பவனாகவும் இருக்கிறானோ, அவனுக்குச் செய்ய வேண்டிய செயல் எதுவும் இல்லை.
 17. அந்த மாமனிதன், இவ்வுலகில் கர்மங்களைச் செய்வதாலும் எந்தவிதமான பயனும் இல்லை; கர்மங்களைச் செய்யாவிட்டாலும் ஒரு பயனும் இல்லை. அவ்வாறே உயிரினங்கள் அனைத்திலும் எதிலுமே அவனுக்குத் தனக்காக ஆகவேண்டியது என்ற தொடர்பு சிறிதுகூட இல்லை.
 18. ஆகவே, பற்றின்றி எப்பொழுதும் ஆற்றவேண்டிய கடமையைச் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிரு. ஏனெனில், பற்றின்றிக் கர்மங்களைச் செய்கின்ற மனிதன் பரமாத்மாவை அடைகின்றான்.
 19. ஜனகர் முதலிய ஞானிகளும் பற்றின்றிக் கர்மங்களைச் செய்ததன் மூலமே சிறந்த பெற்றை அடைந்தனர். அவ்விதமே உலகத்திற்கு வழிகாட்டுவது என்பதை நன்கு மனத்தில் கொண்டு, நீயும் கர்மங்களைச் செய்வதுதான் உனக்கு உரிய செயலாகும்.
 20. உயர்ந்த மனிதன் எதை எதைச் செய்கிறானோ, ஏனையோரும் அதை அதையே செய்வர். அவன் எதைச் சான்றாக எடுத்துக் காட்டுகிறானோ, மனித சமுதாயம் அனைத்தும் அதையே பின்பற்றி நடக்கிறது.
 21. அர்ஜுனா! எனக்கு மூவுலகங்களிலும் செய்யவேண்டிய கடமை ஒன்றுமில்லை; அடையவேண்டியது எதுவும் அடையப்படாமலுமில்லை. ஆயினும் கூட நான் கர்மா செய்வதிலேயேதான் ஈடுபட்டுள்ளேன்.
 22. ஏனெனில், பார்த்தா! ஒருக்கால் நான் கவனத்துடன் கர்மங்களில் ஈடுபடாமல் இருந்தால் பெரிய தீங்கு விளையும். ஏனெனில், மனிதர்கள் எல்லாவிதங்களிலும் என்னுடைய வழியையே பின்பற்றுகிறார்கள்.
 23. நான் கர்மங்களைச் செய்யாமல் விட்டால் இம்மனிதர்கள் அனைவரும் சீர்குலைந்து போவார்கள். மேலும், நான் சீர்குலைவு செய்கிறவனாகவும், இம்மாந்தர் அனைவரையும் அழிப்பவனாகவும் ஆவேன்.
 24. பரதகுலத் தோன்றலே! கர்மங்களில் பற்றுகொண்ட அஞ்ஞானிகள் எவ்விதம் கர்மங்களைச் செய்கிறார்களோ, பற்றில்லாத தத்துவஞானியும் உலகத்திற்கு வழிகாட்டுதலைச் செய்ய விரும்பி, அவ்விதமே கர்மங்கள் செய்யவேண்டும்.
 25. பரமாத்ம ஸ்வரூபத்தில் நிலைத்து நிற்கின்ற ஞானி, சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களைப் பற்றோடு செய்யும் அஞ்ஞானிகளின் புத்தியில் குழப்பத்தை, அதாவது கர்மங்களை ஆற்றுவதில் சிரத்தை இன்மையை உண்டாக்கக்  கூடாது. மாறாக, தானும் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களைச் செவ்வனே ஆற்றி, அவர்களையும் செய்யும்படி செய்யவேண்டும்.
 26. எல்லாச் செயல்களும் எல்லாவிதங்களிலும் பிரகிருதியின் குணங்களால் செய்யப் படுகின்றன. ஆயினும், அகங்காரத்தால், மழுங்கிய அறிவை உடைய அஞ்ஞானி ‘நான் கர்த்தா’ என்று நினைத்துக் கொள்கிறான்.
 27. ஆனால், நீண்ட புஜங்கள் உடையவனே! குணங்களின் பிரிவு, கர்மங்களின் பிரிவு – இவற்றின் தத்துவம் அறிந்த ஞானயோகி குணங்கள் அனைத்தும் குணங்களில் செயல்படுகின்றன என்று அறிந்து, அவற்றில் பற்று கொள்ளாதிருக்கிறான்.
 28. பிரகிருதியில் உண்டான குணங்களால் மிக்க மயக்கம் அடைந்துள்ள மனிதர்கள் குணங்களிலும் கர்மங்களிலும் ஈடுபடுகிறார்கள். முற்றும் அறிந்திராத குறைமதியுடைய அந்த அஞ்ஞானிகளை முழுமையான அறிவு பெற்றுள்ள ஞானி தடுமாறச் செய்யலாகாது.
 29. அந்தர்யாமியான பரமாத்மாவாகிய என்னிடம் ஒன்றிய மனத்துடன் எல்லாக் கர்மங்களையும் என்னிடம் அர்ப்பணம் செய்துவிட்டு, ஆசையற்றவனாக மமகாரமற்றவனாக மேலும் தாபமற்றவனாக ஆகி யுத்தம் செய்.
 30. எந்த மனிதர்கள் குற்றங்குறை காணாதவர்களாக, சிரத்தை உடையவர்களாக, என்னுடைய இக்கொள்கையை எப்பொழுதும் பின்பற்றுகிறார்கலோ, அவர்களும் அனைத்துக் கர்மங்களில் இருந்தும் விடுபடுகிறார்கள்.
 31. ஆனால், எந்த மனிதர்கள் என்னிடம் குறை காண்பவர்களாக என்னுடைய இந்தக் கருத்தை ஏற்று நடப்பதில்லையோ, அந்த மூடர்களை முழுமையான ஞானத்தில் அறிவு மயக்கமடைந்தவர்கள் என்றும், சீரழிந்து போனவர்கள் என்றும் அறிந்துகொள்.
 32. எல்லா உயிரினங்களும் இயல்பை அடைகின்றன. அதாவது, தம் இயல்புக்கேற்றவாறு தம்வசமின்றிச் செயல் புரிகின்றன. ஞானியும் தமது இயல்புக்கேற்றவாறு செயல் புரிகிறார் என்றால் இதில் ஒருவரது பலவந்தமான பிடிவாதம் என்ன செய்யும்?
 33. ஒவ்வொரு புலனுக்குரிய நுகர்ச்சிப் பொருளிலும் விருப்பு-வெறுப்புகள் மறைந்து இருக்கின்றன. மனிதன் அவ்விரண்டின் பிடியிலும் அகப்படக் கூடாது. ஏனெனில், அவ்விரண்டும்தான் இவனுடைய மேன்மைப் பாதையில் இடையூறு விளைவிக்கும் பெரும் எதிரிகள்.
 34. நன்கு கடைப்பிடிக்கப்பட்ட பிறருடைய தர்மத்தைக் காட்டிலும், குணக்குறைவு இருப்பினும், தன்னுடைய தர்மம் மிகவும் உயர்ந்தது. ஸ்வதர்மத்தைக் கடைப்பிடிப்பதில் இறப்பதும் மேன்மையே தரும். பிறருடைய தர்மம் பயத்தை விளைவிக்கும்.
 35. அர்ஜுனன் கேட்கிறார் – “கிருஷ்ணா! பின் இந்த மனிதன், தான் விரும்பாவிட்டாலும் பலவந்தமாகத் தூண்டப்பட்டவன்போல எதனால் ஏவப்பட்டுப் பாவத்தைச் செய்கிறான்?”
 36. ஸ்ரீபகவான் கூறுகிறார் – “ரஜோ குணத்தில் இருந்து உண்டாகிய இந்தக் காமம்தான் கோபம் ஆகும். இது பெருந்தீனிக்காரன். போகங்களில் ‘போதும்’ என்ற எண்ணமில்லாதவன். மேலும் பெரிய பாவி. இதையே, இந்த விஷயத்தில் பகைவனாக அறிந்துகொள்.
 37. எவ்விதம் புகையால் நெருப்பும், அழுக்கினால் கண்ணாடியும் மறைக்கப்படுகிறதோ, மேலும் எவ்விதம் கருப்பையினால் – தசை மூட்டத்தினால் – கரு மறைக்கப்படுகிறதோ, அவ்விதமே அந்தக் காமத்தினால் இந்த ஞானம் மறைக்கப் பட்டிருக்கிறது.
 38. மேலும், அர்ஜுனா! திருப்தி அடையாத நெருப்பைப் போன்றதும், காமம் என்ற வடிவத்தில் உள்ளதும், ஞானிகளுக்கு என்றுமே பகைவனுமாகிய இந்தக் காமத்தினால் மனிதனுடைய ஞானம் மறைக்கப் பட்டிருக்கிறது.
 39. புலன்கள், மனம், புத்தி – இவையெல்லாம் இந்தக் காமத்தின் இருப்பிடம் என்று சொல்லப்படுகிறது. இந்தக் காமம்தான் மனம்-புத்தி-புலன்களைக் கொண்டு ஞானத்தை மறைத்து, ஜீவாத்மாவை மோகத்திற்கு உட்படுத்துகிறது.
 40. ஆகவே, அர்ஜுனா! நீ முதலில் புலன்களை வசப்படுத்தி, ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் அழிக்கின்ற பெரும்பாவியான இந்தக் காமத்தை நிச்சயமாக வீறுடன் ஒழித்துவிடு.
 41. புலன்கள் உடலைக் காட்டிலும் மேலானவை என்று கூறுகிறார்கள். அவை உயர்ந்தவை; பலமுள்ளவை; நுண்ணியவை. இந்தப் புலன்களைக் காட்டிலும் மனம் மேலானது. மனத்தைக் காட்டிலும் புத்தி மேலானது. மேலும், எது புத்தியைக் காட்டிலும் மேலானதோ, அதுவே ஆத்மா.
 42. நீண்ட புஜங்கள் உடையவனே! இவ்விதம் புத்தியைக் காட்டிலும் ஆத்மா மிகவும் மேலானவன்; நுண்ணியவன்; பலமுள்ளவன் என்று அறிந்து, புத்தியினால் மனத்தை வசப்படுத்தி, காமம் என்ற வெற்றி கொள்ள முடியாத சத்ருவைக் கொன்றுவிடு.”

 

இதுவரை கர்மயோகம் என்ற மூன்றாவது அத்தியாயம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.