ஸ்ரீமத் பகவத்கீதை (1) – அர்ஜுன விஷாத யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை – பொழிப்புரை

ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா

முதல் அத்தியாயம் – அர்ஜுன விஷாத யோகம்

 

 1. திருதராஷ்டிரர் கேட்கிறார்: ஸஞ்ஜயா! தர்மபூமியான குருக்ஷேத்திரத்தில் ஒருங்கே கூடியிருந்தவர்களும், யுத்தம் செய்ய விரும்பினவர்களுமான என்னுடையவர்களும், பாண்டுவின் புதல்வர்களும் என்ன செய்தார்கள் ?
 2. ஸஞ்ஜயன் கூறுகிறார்: அப்பொழுது ராஜா துரியோதனன் அணிவகுத்து நிறுத்தப் பட்டிருந்த பாண்டவர் படையைப் பார்த்ததும் குருவாகிய துரோணாசார்யாரை அணுகி, இந்த வார்த்தைகளைக் கூறலானான்.
 3. ஆசார்யரே! உங்களுடைய புத்திசாலி சீடனான துருபதனின் குமாரன் திருஷ்ட்த்யும்னனால் அணிவகுக்கப்பட்ட பாண்டு புத்திரர்களின் இந்த மிகப்பெரிய படையைப் பாருங்கள்.
 4. 5 6 இந்தப்படையில் பெரிய பெரிய வில்லாளிகள்; யுத்தத்தில் பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் ஈடான வீரர்கள்; ஸாத்யகியும் விராடனும், மகாரதியான ராஜா துருபதனும், திருஷ்டகேதுவும், சேகிதானனும், பலசாலியான காசிராஜனும், புருஜித்தும், குந்திபோஜனும், மனிதர்களிற் சிறந்த சைப்யனும், பராக்கிரமம் மிகுந்த யுதாமன்யுவும், பலசாலியான உத்தமௌஜாவும், சுபத்திரையின் குமாரன் அபிமன்யுவும், அவ்வாரே திரௌபதியின் ஐந்து புதல்வர்களும் – அவர்கள் எல்லோருமே மகாரதிகளாக இருக்கிறார்கள்.
 5. அந்தணர்களிற் சிறந்தவரே! நமது அணியிலும் கூட பிரதான யுத்த வீரர்கள் யார் யார் இருக்கிறார்களோ, அவர்களைத் தெரிந்து கொள்ளுங்கள். என்னுடைய படையின் தலைவர்களான அவர்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வதற்காகச் சொல்கிறேன்.
 6. (துரோணாச்சார்யரான) தாங்களும், பாட்டனார் பீஷ்மரும், கர்ணனும், யுத்தங்களில் வெற்றியே பெறுகின்ற கிருபாசார்யரும், அவ்வாறே அசுவத்தாமாவும், விகர்ணனும், சோமதத்தனின் மகன் பூரிச்ரவஸ்ஸும்,
 7. எனக்காக உயிராசையை விட்டவர்களான வேறு பல சூரவீரர்களும், பற்பல அஸ்திர-சஸ்திரங்களுடன் தயாராக நிற்கின்ற அனைவருமே யுத்தத்தில் திறமைப் பெற்றவர்கள்.
 8. பாட்டனார் பீஷ்மரால் காக்கப்படும் நமது படை எவ்விதங்களிலும் எதிரிகளால் வெல்ல இயலாதது. ஆனால், பீமனால் கட்டிக்காக்கப் படும் இவர்களுடைய படை நம்மால் எளிதில் வெல்லப்படக் கூடியது.
 9. அனைத்துப் போர்முனைகளிலும் தத்தம் இடத்தில் இருந்தபடியே நீங்கள் எல்லோருமே தவறாமல் பாட்டனார் பீஷ்மரையே நாற்புறங்களிலும் சுற்றிநின்று காப்பாற்றுங்கள்.
 10. கௌரவர்களில் முதியவரானவரும் மிக்கப் பிரதாபமுடையவருமான பீஷ்மர் துரியோதனனின் உள்ளத்தில் மகிழ்ச்சியை உண்டு பண்ணுகின்ற வகையில் சிங்க கர்ஜனையைப் போன்று உரக்கக் கர்ஜித்து சங்கை முழக்கினார்.
 11. இதற்குப்பிறகு சங்குகளும் பேரிகைகளும் தம்பட்டம், பறை, கொம்பு முதலிய வாத்தியங்களும் ஒருங்கே முழங்கின. அந்த ஒலி மிகவும் பயங்கரமாக இருந்தது.
 12. இதற்குப் பிறகு வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட உயந்த தேரில் அமர்ந்திருந்த ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவும், அர்ஜுனனும் தெய்விகமான சங்குகளை ஊதினார்கள்.
 13. ஸ்ரீகிருஷ்ணபகவான் பாஞ்சஜன்யம் என்ற பெயர்கொண்ட சங்கை முழக்கினார். அர்ஜுனன் தேவதத்தம் என்ற பெயர்கொண்ட சங்கை முழக்கினார். பயங்கரச் செயல்புரியும் பீமசேனன் பௌண்டிரம் என்ற பெயருள்ள சங்கை முழக்கினார்.
 14. குந்தியின் மகனான அரசர் யுதிஷ்டிரர் அநந்தவிஜயம் என்ற பெயர் கொண்ட சங்கையும், நகுலனும் சகதேவனும் ஸுகோஷம், மணிபுஷ்பகம் என்ற பெயர் கொண்ட சங்குகளையும் முழக்கினார்கள்.
 15. 18 அரசனே ! சிறந்த வில்லாளியான காசிராஜனும், மகாரதியான சிகண்டியும், திருஷ்ட்த்யும்னனும், விராட மன்னனும், தோல்வியே காணாத ஸாத்யகியும், துருபத ராஜனும், திரௌபதியின் ஐந்து புதல்வர்களும், நீண்ட புஜங்களுடைய சுபத்திரையின் குமாரன் அபிமன்யுவும் இவர்கள் எல்லாப் பக்கங்களிலிருந்தும் தனித்தனியாகச் சங்குகளை முழக்கினார்கள்.
 16. மேலும், அந்த பயங்கர ஒலி ஆகாயத்தையும் பூமியையும் எதிரொலிக்கச் செய்து, திருதராஷ்டிரருடைய (அதாவது, உங்கள்) அணியினரின் இதயங்களைப் பிளக்கச் செய்தது.
 17. 21 அரசே ! இதன் பின்னர், அனுமக்கொடியை உடைய அர்ஜுனன் அணிவகுத்துப் போர் புரியத் தயாராய் நிற்கின்ற திருதராஷ்டிர குமாரர்களையும், அவர்களைச் சார்ந்தவர்களையும் பார்த்து, அப்பொழுது ஆயுதங்களை விடுக்க முனைகின்ற போது வில்லை நிமிர்த்திக்கொண்டு ஹ்ருஷீகேசனான பகவான் ஸ்ரீகிருஷ்ணனிடம் இந்த வசனத்தைக் கூறினார் – ‘அச்யுதா ! என்னுடைய ரதத்தை இரண்டு படைகளுக்கும் நடுவில் நிறுத்துங்கள்.
 18. இந்தப் போர் முயற்சியில் என்னால் எவரெவருடன் போரிட நேருமோ, யுத்தம் செய்யும் ஆசையுடன் அணிவகுத்து நிற்கும் இந்த எதிரிப்படை வீரர்களை எவ்வளவு நேரம் நான் பார்ப்பேனோ, அவ்வளவு நேரம் ரதத்தை நிறுத்தி வையுங்கள்.
 19. தீய புத்தியுடைய துரியோதனனுக்கு யுத்தத்தில் நலனைச் செய்ய விரும்பி, எந்தெந்த அரசர்கள் இந்தப் படையில் வந்து கூடியிருக்கிறார்களோ, போர் புரியப் போகிற அவர்களை நான் பார்க்கிறேன்.
 20. 25 ஸஞ்ஜயன் கூறுகிறார் – திருதராஷ்டிரரே ! அர்ஜுனனால் இப்படிச் சொல்லப்பட்ட ஸ்ரீகிருஷ்ணன் இரண்டு படைகளுக்கும் இடையில் பீஷ்மருக்கும் துரோணருக்கும் முன்பும், அனைத்து அரசர்களுக்கு முன்பாகவும் உயர்ந்த ரதத்தைக் கொண்டு நிறுத்தி, “பார்த்தனே! யுத்தத்திற்காக ஒருங்கே கூடியிருக்கும் இந்தக் கௌரவர்களைப் பார்” என்று கூறினார்.
 21. 27 இதற்குப்பிறகு, பிருதையின் (குந்தியின்) குமாரனான அர்ஜுனன் அங்கு இரண்டு படைகளிலேயும் நிற்கின்ற பெரியப்பா – சிற்றப்பாக்களையும், தாத்தா முப்பாட்டனார்களையும், குருநாதர்களையும், தாய்மாமன்களையும், புதல்வர்களையும், பேரன்களையும் மற்றும் நண்பர்களையும், மாமனார்களையும், அன்பர்களையும் பார்த்தார்.
 22. கூடியிருந்த அந்த அனைத்து உறவினர்களையும் நன்கு பார்த்த குந்தியின் மகனான அந்த அர்ஜுனன், மிகுந்த இரக்கத்தோடு கூடியவனாக வருத்தம் கொண்டு, இதைப் பேசலுற்றார்.
 23. அர்ஜுனன் கூறுகிறார் – “ஸ்ரீகிருஷ்ணா ! போர்க்களத்தில் ஒருங்குகூடி நின்று போர்புரிய விரும்புகின்ற இந்த உறவினரின் கூட்டத்தைப் பார்த்து, என் அங்கங்கள் சோர்வடைகின்றன; வாயும் உலர்கிறது. அவ்வாறே என் உடலில் நடுக்கம் ஏற்படுகின்றது; மயிர்ச்சிலிர்ப்பும் ஏற்படுகின்றது.
 24. கையிலிருந்து காண்டீவ வில் நழுவிக் கொண்டிருக்கிறது. மேலும், சருமத்திலும் மிகவும் எரிச்சல் உண்டாகிறது, என்னுடைய மனதும் குழப்பம் அடைவதுபோல் உள்லது. ஆகவே, நான் நிற்பதற்கும் கூட இயலாதவனாக இருக்கிறேன்.
 25. கேசவா! கெடுதல்களை விளைவிக்கக்கூடிய சகுனங்களையும் பார்க்கிறேன். போரில் நம் உறவினர்களைக் கொன்று, எந்த மேன்மையையும் நான் காணவில்லை.
 26. ஸ்ரீகிருஷ்ணா! நான் வெற்றியை விரும்பவில்லை; ராஜ்யத்தையும் விரும்பவில்லை; சுகங்களையும் விரும்பவில்லை. கோவிந்தா! நமக்கு இத்தகைய ராஜ்யத்தினால் என்ன பயன்? அல்லது, இத்தகைய சுகபோகங்களாலோ உயிரோடு வாழ்வதாலோ கூட என்ன பயன்?
 27. நமக்கு, எவர்களுக்காக அரசும் போகங்களும் சுகங்களும் விரும்பத்தக்கனவோ, அத்தகைய இவர்களே செல்வத்தையும் உயிர்மேல் உள்ள ஆசையையும் துறந்து யுத்தத்தில் நிற்கிறார்கள்.
 28. ஆசார்யர்கள், பெரியப்பா-சிற்றப்பாக்கள், மகன்கள், அவ்விதமே பாட்டனார்கள், தாய்மாமன்கள், மாமனார்கள், பேரன்கள், மைத்துனர்கள் மற்றும் உறவினர்கள் இங்கே கூடியிருக்கிறார்கள்.
 29. மதுசூதனா! என்னைக் கொன்றாலும் மூன்று உலகங்களிலும் உள்ள ராஜ்யங்களின் அரசாட்சி என்ற காரணத்திற்காகக்கூட நான் இவர்களைக் கொல்ல விரும்பவில்லை. பிறகு, இப்பூவுலகுக்காகக் கொல்ல விரும்பவில்லை என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
 30. ஜனார்தனா! திருதராஷ்டிர குமாரர்களைக் கொன்று, நமக்கு என்ன மகிழ்ச்சி ஏற்படப் போகிறது? இந்தப் படுபாவிகளைக் கொன்றால் நம்மைப் பாவம்தான் வந்தடையும்.
 31. ஆகவே, மாதவா! நம் உறவினர்களான திருதராஷ்டிர குமாரர்களைக் கொல்வதற்கு நாம் தக்கவரல்லர். நாம் அவர்களைக் கொல்வது சரியன்று. ஏனெனில் நம் குடும்பத்தினரைக் கொன்று, நாம் எப்படி சுகமுள்ளவர்களாக இருப்போம்?
 32. 39 பேராசையால் மதியிழந்த இவர்கள் குலநாசத்தினால் ஏற்படும் குற்றத்தையும், நண்பர்களுக்குக் கெடுதல் செய்வதால் ஏற்படும் பாவத்தையும் பார்ப்பதில்லையாயினும், ஜனார்தனா! குலநாசத்தினால் ஏற்படும் குற்றத்தை நன்கு உணர்கின்ற நாம், இந்தப் பாவச் செயலிலிருந்து விலகுவது பற்றி ஏண் ஆலோசிக்காமல் இருக்கவேண்டும்? (ஆலோசிக்கவே வேண்டும்.)
 33. குலநாசத்தினால் தொன்றுதொட்டு வருகின்ற குலதர்மங்கள் அழிந்து விடுகின்ரன. தர்மம் அழிந்த பிறகு குலம் முழுவதிலும் அதர்மமும் வெகுவாகப் பரவுகிறது.
 34. ஸ்ரீகிருஷ்ணா! அதர்மம் அதிகமாகப் பெருகுவதால் குலப்பெண்கள் நடத்தை கெட்டுப் போவார்கள். மேலும், வார்ஷ்ணேயா! பெண்கள் நடத்தை கெட்டுப் போனால் வர்ணக்கலப்பு உண்டாகி விடுகிறது.
 35. வர்ணக்கலப்பு குலநாசம் செய்தவர்களையும் குலத்தையும் நரகத்திற்கே அழைத்துச் செல்லக் கூடியது, இவர்களுடைய முன்னோர்கள் கூட பிண்டம், நீர்க்கடன், அதாவது சிராத்தம், தர்ப்பணம் – இவற்றை இழந்து வீழ்ச்சி அடைவார்கள்.
 36. குலநாசம் செய்பவர்களின் இந்த வர்ணக்கலப்பு ஏற்படுத்துகின்ற குற்றங்களினால், தொன்றுதொட்டு வருகின்ற குலதர்மங்களும் ஜாதி தர்மங்களும் அழிந்து விடுகின்றன.
 37. ஜனார்தனா! குலதர்மங்கள் அடியோடு அழிந்துவிட்டபின் மனிதர்களுக்கு அளவற்ற காலம்வரை நரகவாசம் ஏற்படுகிறது என்று நாம் கேள்விப் பட்டிருக்கிறோம்.
 38. அந்தோ பாவம்! நாம் அறிவு பெற்றிருந்தும் பெரும்பாவம் செய்வதற்கு முனைந்திருக்கிறோம். ஏனெனில் ராஜ்யம், சுகம் – இவற்றிற்கு ஆசைப்பட்டு, நம் உறவினர்களையே கொல்வதற்கு முனைந்து விட்டோம்.
 39. ஆயுதமின்றியும், எதிர்த்துப் போரிடாமலும் இருக்கின்ற என்னைக் கையில் ஆயுதம் தாங்கிய திருதராஷ்டிர குமாரர்கள் போரில் கொன்றாலும், அதுவும் எனக்கு அதிக நன்மை பயப்பதாகவே ஆகிவிடும்.”
 40. ஸஞ்ஜயன் கூறுகிறார் – “போர்க்களத்தில் சோகத்தினால் கலங்கிய மனத்துடைய அர்ஜுனன் இவ்விதம் சொல்லி அம்புகளுடன் வில்லையும் எறிந்துவிட்டுத் தேர்த்தட்டில் உட்கார்ந்துவிட்டார்.”

 

இதுவரை அர்ஜுனவிஷாதயோகம் என்னும் முதல் அத்தியாயம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.