ஸ்ரீமத் பகவத்கீதை (4) – ஞானகர்ம ஸந்யாஸ யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை – பொழிப்புரை

ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா

 நான்காவது அத்தியாயம் – ஞானகர்ம ஸந்யாஸ யோகம்

 1. ஸ்ரீபகவான் கூறுகிறார் – “ நான் இந்த அழிவற்ற யோகத்தைச் சூரியனுக்குச் சொன்னேன். சூரியன் தன் புதல்வனான வைவஸ்வத மனுவுக்குச் சொன்னார். மனு தன் குமாரனான இக்ஷ்வாகு மன்னனுக்குச் சொன்னார்.
 2. பரந்தபா! (அர்ஜுனா!) இவ்விதம் வழிவழியாக வந்த இந்த யோகத்தை ராஜரிஷிகள் அறிந்திருந்தார்கள். அந்த யோகம் வெகுகாலமாக இவ்வுலகில் மறைந்தாற்போல் ஆகிவிட்டது.
 3. நீ என்னுடைய பக்தனும் உற்ற நண்பனும் ஆவாய். ஆகவே, அதே பழமையான இந்த யோகம் இன்று என்னால் உனக்குச் சொல்லப்பட்டது. ஏனெனில், இந்த யோகம் மிகச் சிறந்தது; ரகசியமானது. அதாவது, மறைத்துக் காப்பாற்றப்பட வேண்டியது.”
 4. அர்ஜுனன் கேட்கிறார் – “உங்களுடைய பிறப்பு அண்மையில் நிகழ்ந்தது. சூரியனுடைய பிறப்பு வெகுகாலத்திற்கு முன்பு ஏற்பட்டது. (கல்பத்தின் ஆதியிலேயே ஏற்பட்டுவிட்டது.) நீங்கள் கல்பத்தின் ஆதியில் சூரியனுக்கு இந்த யோகத்தைக் கூறினீர்கள் என்ற இந்த விஷயத்தை எவ்வாறு புரிந்து கொள்வது ? (நம்புவது?)”
 5. ஸ்ரீபகவான் கூறுகிறார் – “எதிரிகளை வாட்டும் அர்ஜுனா! எனக்கும் உனக்கும் பல பிறவிகள் கழிந்துவிட்டன. அவை எல்லாவற்றையும் நீ அறியமாட்டாய்; நான் அறிவேன்.
 6. நான் பிரப்பற்றவனாகவும் அழிவற்றவனாகவும் இருந்தும் கூட, எல்லா உயிரினங்களுக்கும் ஈசுவரனாக இருந்தும்கூட, என்னுடைய பிரகிருதியை வசப்படுத்திக் கொண்டு, என்னுடைய யோகமாயையினால் வெளிப்படுகிறேன்.
 7. பரதகுலத் தோன்றலே! எப்போதெல்லாம் தர்மத்திற்குக் குறைவும் அதர்மத்தின் ஓங்குதலும் ஏற்படுகின்றனவோ. அப்போதெல்லாம் நான் என்னைத் தோற்றுவித்துக் கொள்கிறேன். அதாவது, மக்கள் முன்னே காணக்கூடிய உருவத்துடன் வெளிப்படுகிறேன்.
 8. சாதுக்களைக் கடைத்தேற்றுவதற்காகவும் (காப்பதற்காகவும்), பாவச்செயல்கள் செய்கின்றவர்களை அழிப்பதற்காகவும், தர்மத்தை நன்கு நிலை நாட்டுவதற்காகவும் நான் யுகந்தோறும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறேன்.
 9. அர்ஜுனா! என்னுடைய பிறப்பும் செயலும் தெய்விகமானவை; அப்பழுக்கற்றவை; உலகியலுக்கு அப்பாற்பட்டவை. இவ்விதம் எவன் தத்துவரீதியாக அறிந்து கொள்கிறானோ, அவன் உடலைத் துறந்து மறுபடியும் பிறவியை அடைவதில்லை. ஆனால், என்னையே அடைந்து விடுகிறான்.
 10. ராகம் (விருப்பம்), பயம், கோபம் – இவை அறவேயற்றவர்களும், வெறெதிலும் நாட்டம் இல்லாமல் என்னிடமே பிரேமையுடன் ஒன்றியவர்களும், என்னையே புகலாகக் கொண்டவர்களுமான பலரும் மேற்கூறிய ஞானம் என்னும் தவத்தினால் தூயவர்களாகி, என் ஸ்வரூபத்தை அடைந்திருக்கிறார்கள்.
 11. அர்ஜுனா! எந்த பக்தர்கள் என்னை எவ்விதம் வழிபடுகிறார்களோ, நானும் அவர்களை அதற்கேற்பவே அணுகுகிறேன். (அருள்புரிகிறேன்). ஏனெனில், எல்லா மனிதர்களும் பல்வேறு விதங்களிலும் என்னுடைய வழியைப் பின்பற்றுகிறார்கள்.
 12. இந்த மானிட உலகில் கர்மங்களின் பயனை விரும்புபவர்கள் (அதற்கான) தேவதைகளை வழிபடுவார்கள். ஏனெனில், அவர்களுக்குக் கர்மங்களினால் விளையும் பயன் விரைவில் கிடைத்துவிடுகிறது.
 13. வேதியர், வேந்தர், வணிகர், வேளாளர் என்ற நான்கு வர்ணங்கள் கொண்ட சமூகம் குணங்களையும் கர்மங்களையும் ஒட்டிய பிரிவுகளாக என்னால் படைக்கப்பட்டது. இங்ஙனம் எந்தப் படைப்பு முதலிய செயல்களைச் செய்யும் கர்த்தாவாக நான் இருந்த போதிலும் அழிவற்ற பரமேசுவரனான என்னை, உண்மையில் கர்த்தா அல்லன் என்றே நீ அறிவாயாக.
 14. கர்மங்களின் பயன்களில் எனக்கு ஆசை இல்லை.ஆகவே, என்னைக் கர்மங்கள் ஒட்டுவதில்லை. இவ்விதம் எந்த மனிதன் என்னைத் தத்துவரீதியாக அறிந்து கொள்கிறானோ, அவனும் கர்மங்களால் கட்டப்படுவதில்லை.
 15. முற்காலத்திலிருந்த மோக்ஷத்தில் நாட்டம் உடையவர்களாலும் இவ்விதம் அறிந்து கர்மம் செய்யப்பட்டது. ஆகவே, நீயும் முன்னோர்களால் தொன்றுதொட்டுச் செய்யப்பட்டு வருகின்ற கர்மங்களைச் செய்வாயாக.
 16. கர்மம் என்றால் என்ன? அகர்மம் என்றால் என்ன? என்று தீர்மானிப்பதில் அறிவாளிகள் கூடத் திகைக்கிறார்கள். ஆகவே, எதை அறிந்து கொண்ட பின்னர், நீ அமங்களத்திலிருந்து – விடுபடுவாயோ, அந்தக் கர்மத்தின் தத்துவத்தை நீ நன்கு உணருமாறு நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.
 17. கர்மத்தினுடைய ஸ்வரூபமும் அறியப்பட வேண்டும். மேலும் அகர்மத்தின் ஸ்வரூபமும் அறியப்பட வேண்டும். அவ்விதமே விகர்மத்தின் ஸ்வரூபமும் அறியப்பட வேண்டும். ஏனென்றால், கர்மத்தின் போக்கு ஆழமானது; அறிய முடியாதது.
 18. எந்த மனிதன் கர்மத்தில் அகர்மத்தைப் பார்க்கிறானோ, மேலும், எவன் அகர்மத்தில் கர்மத்தைப் பார்க்கிறானோ, அவன் மனிதர்களில் புத்திமான். மேலும் அந்த யோகி அனைத்துக் கர்மங்களையும் செய்கிறவன் ஆகிறான்.
 19. எவனுடைய சாஸ்திரங்களுக்குச் சம்மதமான அனைத்து கர்மங்களும் ஆசையையும் சங்கல்பத்தையும் (மமகாரம் முதலியவற்றைத்) துறந்து செய்யப்படுகின்றனவோ, எவனுடைய கர்மங்களனைத்தும் ஞானம் என்ற தீயில் எரிந்து சாம்பலாகி விட்டனவோ, அந்த மாமனிதனை ஞானிகளும் கூடப் பண்டிதன் என்று அழைக்கிறார்கள்.
 20. அனைத்துக் கர்மங்களிலும், அவற்றின் பயன்களிலும் பற்றை முற்றிலும் துறந்து உலகியல் சார்பு இல்லாதவனாகவும், பரமாத்மாவில் எப்பொழுதும் திருப்தி உள்ளவனாகவும் எவன் ஆகிறானோ, அவன் கர்மத்தில் நன்கு ஈடுபட்டாலும் கூட உண்மையில் சிறிதளவுகூட எக்காரியத்தையும் செய்வதேயில்லை.
 21. மனம்-புலன்கள் அடங்கிய இந்த உடலை வென்று, சகல போகப்பொருட்களையும் துறந்து, எதையும் விரும்பாமல் இருப்பவன் உடலைப் பேணுவதற்குரிய செயலை மட்டும் செய்துகொண்டிருந்தாலும் கூட பாவத்தை அடைவதில்லை.
 22. தான் விரும்பாவிடினும் தானாகவே கிடைத்ததில் எப்பொழுதும் சந்தோஷம் உள்ளவனாகவும், பொறாமை அறவே அற்றவனாகவும், மகிழ்ச்சி-துயரம் முதலிய இரட்டைகளுக்கு முற்றிலும் அப்பாற் பட்டவனாகவும், செய்த காரியம் கைகூடினாலும் கைகூடாவிட்டாலும் சமபாவனையுடன் உள்ள கர்மயோகி கர்மங்களைச் செய்தாலும், அவற்றினால் கட்டப்படுவதில்லை.
 23. எவன் உலகப்பற்று, உடற்பற்று, மமதை – இவற்றை அறவே ஒழித்துப் பரமாத்ம ஞானத்தில் மனத்தை நிலைநிறுத்தி, யாகத்திற்காகவே கர்மங்களை ஆற்றுகின்றானோ, அவனுடைய கர்மம் முழுவதும் அழிந்து போய்விடுகிறது.
 24. வேள்வியில் உபயோகிக்கப்படும் ஸ்ருவம் என்னும் ஹோமக்கரண்டி முதலிய உபகரணங்களும் பிரம்மம்தான். ஹோமம் செய்யப்படும் திரவியமும் பிரம்மம்தான். பிரம்மமே ஆன கர்த்தா மூலம் பிரம்மம் ஆகிய அக்னியில் ஆகுதி செய்வது என்ற செயலும் பிரம்மம்தான். பிரம்மம் ஆகிய செயலில் ஊன்றி நிற்கின்ற அந்த யோகியினால் அடையத் தக்க பயனும் பிரம்மமேதான்.
 25. சில யோகியர் தேவபூஜை என்னும் யாகத்தை செவ்வனே செய்கிறார்கள். மற்றும் சில யோகியர் பரப்பிரம்ம பரமாத்மா வடிவான அக்னியில் தானும் பிரம்மமும் வெவ்வேறு என்ற பாவனையின்றி யாகத்தின் மூலமே ஆத்மரூபமான யாகத்தைச் செய்கிறார்கள்.
 26. வேறு சில யோகிகள் காது முதலிய எல்லாப்புலன்களையும் அடக்கம் என்னும் அக்னிகளில் ஹோமம் செய்கிறார்கள். மற்றும் சில யோகிகள் ஒலி முதலிய எல்லாப் புலன்நுகர்ப் பொருட்களையும் புலன்கள் என்னும் அக்னியில் ஹோமம் செய்கிறார்கள்.
 27. வேறு சில யோகிகள் புலன்களின் செயல்கள் அனைத்தையும் பிராணன்களின் செயல்கள் அனைத்தையும் ஞானத்தினால் ஒளிபெற்ற “ஆத்மஸம்யமயோகம்” என்னும் அக்னியில் ஹோமம் செய்கிறார்கள். இங்கே ஹோமம் செய்வது என்பது ஸத் சித் ஆனந்த ஸ்வரூபமாகிய பரமாத்மாவைத் தவிர வேறெதையும் சிந்தியாதிருத்தலாகும்.
 28. வேறு சிலர் திரவியங்களைக் கொண்டு யாகம் செய்கிறார்கள்; சிலர் தவம் என்னும் யாகம் செய்கிறவர்கள்; அவ்வாறே, மற்றும் சிலர் அஷ்டாங்க யோக வடிவான யாகம் செய்பவர்கள்; மேலும் அஹிம்சை முதலிய தீவிரக் கொள்கையோடு கூடி முயற்சி செய்பவர்கள் ஸ்வாத்யாய வடிவான ஞானயக்ஞத்தைச் செய்பவர்கள் ஆவர்.
 29. 30 மற்றும் சில யோகிகள், அபான வாயுவில் பிராணவாயுவை ஹோமம் செய்கிறார்கள். அதேபோன்று வேறு வேறு யோகியர் பிராணவாயுவில் அபான வாயுவை ஹோமம் செய்கிறார்கள்; மற்றும் சிலர், முறையாக உணவு உண்பவர்களாகப் பிராணாயாமத்தில் ஈடுபட்டவர்களாகப் பிராணன், அபானன் – இவற்றின் சஞ்சாரத்தைக் கட்டுப்படுத்திப் பிராணன்களைப் பிராணன்களிலேயே ஹோமம் செய்கிறார்கள். இந்த சாதகர்கள் அனைவரும் யாகத்தினால் பாவங்களை அழித்தவர்கள்; யக்ஞங்களை அறிந்தவர்கள்.
 30. குரு வம்சத்தில் சிறந்தவனான அர்ஜுனா! யக்ஞத்தில் எஞ்சிய அமுதத்தைப் பருகுகின்ற யோகிகள் சாசுவதமான பரப்பிரம்ம பரமாத்மாவை அடைகிறார்கள். யக்ஞம் செய்யாதவருக்கு (மனித உலகமே) இவ்வுலகமே சுகமளிப்பதாக இல்லை. அப்படியிருக்கப் பரலோகம் எப்படி சுகமளிக்கும்?
 31. இவ்விதம் இன்னும் அநேகவிதமான யக்ஞங்கள் வேதங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. அவையெல்லாம் மனம், புலன்கள், உடல் ஆகியவற்றால் செய்து நிறைவேற்றப்பட வேண்டியவை என்று நீ அறிந்துகொள். இவ்வாறு தத்துவரீதியாக அறிந்து அவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் நீ கர்மபந்தத்திலிருந்து முற்றிலும் விடுதலை பெறுவாய்.
 32. பரந்தபா! அர்ஜுனா! திரவியங்களால் நிறைவேற்றக்கூடிய யக்ஞத்தைவிட ஞானயக்ஞம் மிகவும் சிறந்தது. ஏனெனில், என்னென்ன கர்மங்கள் உண்டோ, அந்தக் கர்மங்கள் அனைத்தும் ஞானத்தில் நிறைவு பெறுகின்றன.
 33. அந்த ஞானத்தைத் தத்துவதர்சிகளான ஞானிகளை அணுகி அறிந்துகொள். அவர்களை சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்து வணங்குவதாலும், சேவை செய்வதாலும், கபடமில்லாமல் நேர்மையாகக் கேள்வி கேட்பதாலும், அந்த பரமாத்மத் தத்துவத்தை நன்கு அறிந்துள்ள மகாத்மாக்களான ஞானிகள், உனக்கு அந்த தத்துவஞானத்தை உபதேசிப்பார்கள்.
 34. அர்ஜுனா! எந்த ஞானத்தை அறிந்து கொண்டபின்னர் திரும்பவும் நீ இவ்விதமான குழப்பத்தை அடையமாட்டாயோ, அந்தத் தத்துவஞானத்தினால் சராசரங்கள் அனைதையும் மீதமின்றி முதலில் தன்னிடமும், பிறகு ஸத் சித் ஆனந்தமயனான என்னிடமும் காண்பாய்.
 35. மற்ற எல்லா பாவம் செய்தவர்களைக் காட்டிலும் அதிகமான பாவத்தைச் செய்தவனாக நீ ஒருக்கால் இருந்தாலும் கூட ஞானம் என்னும் படகினால் சந்தேகமின்றி பாவக்கடல் முழுவதையும் நன்கு கடந்து விடுவாய்.
 36. அர்ஜுனா! எப்படிக் கொழுந்து விட்டெரியும் நெருப்பு விறகுகளைச் சாம்பலாகச் செய்கிறதோ, அதேபோன்று ஞானம் என்னும் நெருப்பு எல்லாக் கர்மங்களையும் சாம்பலாகச் செய்கிறது.
 37. இவ்வுலகில் ஞானத்திற்கு நிகராகப் பரிசுத்தம் செய்யக்கூடியது சந்தேகமின்றி எதுவுமே இல்லை. அந்த ஞானத்தை நெடுங்காலமாகக் கடைப்பிடித்த கர்மயோகத்தின் மூலம் உள்ளத்தூய்மையடைந்த மனிதன், தனக்குத்தானே ஆத்மாவிடம் எய்தப்பெறுகிறான்.
 38. புலன்களை அடக்கி வெற்றி கொண்டு சாதனையிலேயே ஒன்றிய சிரத்தை உடைய மனிதன் ஞானத்தைப் பெறுகிறான். ஞானத்தைப் பெற்று அவன் தாமதமின்றி அதே கணத்தில் பகவானை அடைவது என்ற பரமசாந்தியைப் பெறுகிறான்.
 39. விவேகமற்றவனும் சிரத்தை இல்லாதவனுமான சந்தேகமுடையவன், பகவத் விஷயத்தில் தத்துவ ஞானம் பெறாமல் வீணாக அழிவான். இந்தச் சந்தேகம் உடையவனுக்கு இவ்வுலகமும் இல்லை; பரலோகமும் இல்லை; சுகமும் கிடையாது.
 40. அர்ஜுனா! கர்மயோக முறைப்படி கர்மங்கள் அனைத்தையும் நிறைவேற்றி, பரமாத்மாவிடம் அர்ப்பணம் செய்து, விவேக ஞானத்தினால் சந்தேகங்களைப் போக்கிக்கொண்டு, மனத்தைத் தன்வசமாக்கிக் கொண்டுவிட்டவனைக் கர்மங்கள் கட்டுப்படுத்துவதில்லை.
 41. ஆகவே, பரதகுலத்தோன்றலே! அர்ஜுனா! நீ உள்ளத்தில் இருக்கும் அஞ்ஞானத்தில் உண்டான உன்னுடைய இந்தச் சந்தேகத்தை விவேக ஞானம் என்ற வாளினால் சிதைத்து சமத்துவயோகம் என்ற கர்மயோகத்தில் நிலைத்து நில். மேலும் யுத்தத்திற்காக எழுந்திரு.”

இதுவரை ‘ஞானகர்ம சன்யாஸ யோகம்’ என்ற நான்காவது அத்தியாயம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.