ஸ்ரீமத் பகவத்கீதை (5) – கர்ம ஸந்யாஸ யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை – பொழிப்புரை

ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா

 ஐந்தாவது அத்தியாயம் – கர்ம ஸந்யாஸ யோகம்

 1. அர்ஜுனன் கூறுகிறார் – “ஸ்ரீகிருஷ்ணா! நீங்கள் கர்மங்களுடைய ஸந்யாஸத்தைப் பற்றியும், பின்னர் கர்மயோகத்தைப் பற்றியும் புகழ்ந்து பேசுகிறீர்கள். ஆகையால், இவையிரண்டில் எந்தவொன்று எனக்கு நிச்சயமாக மேன்மையைத் தரக்கூடியதோ, அதைக் கூறுங்கள்.”
 2. ஸ்ரீபகவான் கூறுகிறார் – “கர்ம ஸந்யாஸம், கர்மயோகம் இரண்டுமே மிகவும் மேன்மை அளிப்பவைதான். ஆயினும், இவ்விரண்டிலும் கர்ம ஸந்யாஸத்தைக் காட்டிலும் கர்மயோகம் சாதனைமுறையில் மிகச்சிறந்தது.
 3. அர்ஜுனா! எவன் எதையும் வெறுப்பதில்லையோ, எதையும் விரும்புவதில்லையோ, அந்தக் கர்மயோகி எப்பொழுதும் சந்நியாசியேதான் என்று அறியத் தக்கவன். ஏனெனில், விருப்பு-வெறுப்பு என்னும் இரட்டைகள் அற்றவன் எளிதாகவே சம்சார பந்தத்திலிருந்து விடுதலை பெறுகிறான்.
 4. மேலே கூறிய ஸந்யாஸமும் கர்மயோகமும் வெவ்வேறு பலன் தரக்கூடியவை என்று அறியாதவர்கள் கூறுகிறார்கள். ஏனெனில், இவற்றில் ஒன்றையாவது உறுதியாகப் பற்றிக்கொண்டுள்ள மனிதன் இரண்டினுடைய பயனான பரமாத்வாவை அடைகிறான்.
 5. ஞானயோகிகளால் எந்தப் பரமபதம் அடையப்படுகிறதோ, அதுவே கர்மயோகிகளாலும் அடையப்படுகிறது. ஆகவே, எவனொருவன் ஞானயோகம், கர்மயோகம் இரண்டும் ஒரே பயனைக் கொடுக்கக்கூடிய ஒன்றெனக் காண்கிறானோ, அவனே உண்மையைக் காண்கிறான்.
 6. ஆனால், நீண்ட புஜமுடைய அர்ஜுனா! கர்மலோகத்தைக் கடைப்பிடிக்காமலேயே ஸந்யாஸநிலையை அடைவது (மனம், உடல்மூலம் நடைபெறக்கூடிய எல்லாச் செயல்களிலும் ‘தான் கர்த்தா’ என்ற எண்ணத்தைத் தியாகம் செய்வது) மிகக் கடினமானது. மேலும், பகவத் ஸ்வரூபத்தைச் சிந்தித்திருக்கும் கர்மயோகி பரப்பிரம்ம பரமாத்வாவை விரைவிலேயே அடைந்து விடுகிறான்.
 7. மனக் கட்டுப்பாடு உடையவனும் புலன்களை வென்றவனும் மனத்தூய்மை உள்ளவனும் எல்லா உயிரினங்களுக்கும் ஆத்மாவான பரமாத்மாவைத் தன் ஆத்மா என்று உணர்ந்தவனுமான கர்மயோகி கர்மங்களைச் செய்து கொண்டிருந்தாலும், அவற்றில் ஒட்டுவதில்லை.
 8. 9 தத்துவமறிந்த ஸாங்க்யயோகியோ பார்த்தாலும் கேட்டாலும் தொட்டாலும் முகர்ந்தாலும் உணவுண்டானாலும் நடந்து சென்றாலும், உறங்கினாலும் மூச்சுவிட்டாலும் பேசினாலும் கழித்தாலும் பற்றினாலும் கண்களைத் திறந்தாலும் மூடினாலும் கூட, எல்லாப் புலன்களும் தத்தம் புலன்களுக்குரிய பொருட்களில் செயல்படுகின்றன என்றுணர்ந்து கொண்டு, சந்தேகமின்றி எதையும் நான் செய்வதேயில்லை என்று நினைக்கவேண்டும்.
 9. எவன் அனைத்துக் கர்மங்களையும் பரமாத்மாவிடம் அர்ப்பணம் செய்து, உலகியல் பற்றுதலைத் துறந்து கர்மங்களைச் செய்கிறானோ, அவன் தண்ணீரில் தாமரையிலை ஒட்டாமல் இருப்பதுபோலப் பாவத்தினால் பாதிக்கப்படுவதில்லை.
 10. கர்மயோகிகள் மமகாரமின்றி வெறும் புலன்களாலும் மனத்தாலும் புத்தியினாலும் உடலாலும் கூடப் பற்றைத் துறந்து, மனத் தூய்மையை அடையும் பொருட்டுக் கர்மத்தைச் செய்கிறார்கள்.
 11. கர்மயோகி, கர்மத்தின் பயனைத் துறந்து பகவானை அடைவது என்கிற அமைதியைப் பெறுகிறான். ஆனால், பயனில் பற்றுடையவன் ஆசையின் உந்துதலினால் பயனில் பற்று கொண்டு தளைக்கப்படுகிறான்.
 12. மனத்தைத் தன்வசப்படுத்தி ஸாங்க்யயோகத்தைக் கடைப்பிடிக்கின்ற மனிதன், தான் செய்யாமலும் செய்விக்காமலுமே ஒன்பது வாயில்களுடைய உடலாகிய வீட்டில், எல்லாச் செயல்கலையும் மனத்தால் துறந்து, ஸத் சித் ஆன்ந்தமயமான பரமாத்ம ஸ்வரூபத்தில் ஆன்ந்தமயமாக ஆழ்ந்திருக்கிறான்.
 13. பகவான் மனிதர்களுடைய கர்த்தா என்னும் தன்மையை உண்டுபண்ணுவதில்லை. கர்மங்களையும் உண்டுபண்ணுவதில்லை. கர்மத்தின் பயனோடு சேர்த்து வைத்தலையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் இயல்புதான் செயல்படுகிறது.
 14. எங்கும் நிறைந்த பகவான் யாருடைய பாவச் செயலையும் ஏற்பதில்லை; நற்செயல்களையும் ஏற்பதில்லை. ஆனால், அஞ்ஞானத்தினால் ஞானம் மூடப்பட்டிருக்கிறது. அதனால் அஞ்ஞானிகளான எல்லா மனிதர்களும் மோகம் அடைகிறார்கள்.
 15. ஆனால், எவர்களுடைய அந்த அஞ்ஞானம் பரமாத்மாவினுடைய தத்துவ ஞானத்தினால் அழிக்கப் பட்டதோ, அவர்களுடைய அந்த ஞானம் ஆதவன்போல ஸத் சித் ஆனந்தமயமான பரமாத்மாவைப் பிரகாசிக்கச் செய்கிறது. அதாவது, பரமாத்ம ஸ்வரூபத்தைக் கண்கூடாகக் காட்டித் தருகிறது.
 16. எவர்களுடைய மனம், புத்தி பரமாத்மாவில் ஒன்றி இருக்கிறதோ, ஸத் சித் ஆன்ந்த மயமான பரமாத்மாவிடம் எவர்களுக்கு இடையறாத ஐக்கியநிலை இருக்கிறதோ, பகவானை மட்டுமே சார்ந்திருக்கின்ற அத்தகைய மனிதர்கள் ஞானத்தினால் பாவமற்றவர்களாக ஆகி, மீண்டும் திரும்பி வருதல் இல்லாத நிலையை, அதாவது, பிறவாப் பெருநிலையான பரமகதியை அடைகிறார்கள்.
 17. தத்துவஞானிகள் கல்வியோடும் பணிவோடும் கூடிய பிராமணனிடமும் பசுவிடமும் யானையிடமும் நாயிடமும் சண்டாளனிடமும் கூட சமநோக்கு உடையவர்களே. (அதாவது, ஆத்மாவான பகவான் எல்லோரிடமும் சமமாக விளங்குகிறார் என்னும் நோக்கமுடையவர்களே.)
 18. எவர்களுடைய மனம் சமபாவனையில் நிலைத்துள்ளதோ, அவர்களால் உயிர் வாழும்போதே (சரீரத்தோடுள்ள நிலையிலேயே), அகில உலகமும் வெற்றிகொள்ளப் பட்டது. ஏனெனில், ஸத் சித் ஆனந்தமயமான பரமாத்மாவான பரப்பிரம்மம் மாசற்றது. சமமானது. ஆகவே, அவர்கள் ஸத் சித் ஆனந்தமயமான பிரம்மத்திலேயே நிலை பெற்றிருக்கிறார்கள்.
 19. விருப்பமான பொருளை அடையும்போது மகிழ்ச்சியடையாமலும் விரும்பாததை அடையும்போது கலக்கமடையாமலும் இருக்கும் நிலைத்த மதியுடைய, ஐயம் நீங்கிய பிரம்ம ஞானி ஸத் சித் ஆனந்தமய பரப்பிரம்ம பரமாத்மாவில் எப்பொழுதும் ஒன்றி நிலைத்து நிற்கிறான்.
 20. வெளியில் உள்ள புலன்நுகர்ப் பொருட்களில் பற்றற்ற மனமுடைய சாதகனுடைய உள்ளத்தில், தியானத்தினால் ஏற்படுகின்ற சாத்விகமான எந்தச் சுகம் உள்ளதோ, அதைப் பெறுகிறான். அதன் பிறகு, சத் சித் ஆனந்த மயமான பரப் பிரம்ம பரமாத்மாவிடம் தியான யோகத்தினால் இரண்டறக் கலந்துவிட்ட அவன் அழியாத ஆனந்தத்தை அனுபவிக்கிறான்.
 21. புலன்களும் புலன்நுகர்ப் பொருட்களும் ஒன்றுசேரும்போது ஏற்படும் போகங்கள் அனைத்தும் உலகப் பற்றுடையவர்களுக்குச் சுகமாகத் தோன்றியபோதிலும், அவை நிச்சயமாகத் துக்கத்திற்குக் காரணமாகவே உள்ளன. மேலும், ஆரம்பமும் முடிவும் கொண்டவை; அநித்தியமானவை.ஆகையால் அர்ஜுனா! அறிவாளி அவற்றில் இன்புறுவதில்லை.
 22. எந்த சாதகன் இம்மனிதப் பிறவியிலேயே உடல் அழிவதற்கு முன்பே காமத்தினாலும் கோபத்தினாலும் உண்டாகின்ற எழுச்சியைப் பொறுத்துக் கொள்வதற்குத் திறம் பெற்றுவிட்டானோ, அந்த மனிதனே யோகி. அவனே சுகம் பெற்றவன்.
 23. எவன் உறுதியுடன் தீர்மானம் செய்துகொண்டு, ஆத்மாவிடமே சுகம் காண்கிறானோ, ஆத்மாவிடமே இன்புற்றிருப்பானோ, அவ்விதமே எவன் ஆத்மாவிலேயே உள்ளொளி (ஞானம்) பெற்றவனோ, சத் சித் ஆனந்தமயமான பிரம்மத்தில் ஒன்றிவிட்டவனான அந்த ஸாங்க்ய யோகி அமைதி நிறைந்த பிரம்மத்தை அடைகிறான்.
 24. எவர்களுடைய எல்லாப் பாவங்களும் அழிந்து விட்டனவோ, எவர்களுடைய எல்லா ஐயங்களும் ஞானத்தினால் தெளிவாக்கப் பட்டு விட்டனவோ, எவர் அனைத்து உயிரினங்களின் நலனிலும் ஈடுபாடு கொண்டவர்களோ, மேலும், எவர்களுடைய மனம் சஞ்சலமின்றிப் பரமாத்மாவிடமே நிலைத்துள்ளதோ, அந்தப் பிரம்மத்தை அறிந்தவர்கள் ஸத் சித் ஆனந்தமயனான, நிர்குண, நிராகார, பரப்பிரம்ம பரமாத்மாவை அடைகிறார்கள்.
 25. காம-குரோதங்கள் விலகிய, மனத்தை வசப்படுத்தி வெற்றிகொண்ட, பரப்பிரம்ம பரமாத்மாவை நேரிடையாக அனுபவித்த ஞானிகளுடைய நாற்புறங்களிலும் அமைதியின் இருப்பிடமாகிய பரப்பிரம்ம பரமாத்மாவே நிறைந்திருக்கிறார்.
 26. 28 வெளி விஷய போகங்களைச் சிந்தியாமல் அவற்றை வெளியிலேயே தள்ளி, கண்களின் பார்வையை இருபுருவங்களின் நடுவிலும், நாசியின் உள்ளே சஞ்சரிக்கின்ற பிராண –அபான வாயுக்களைச் சமமாக்கி, புலன்கள், மனம், புத்தி – இவற்றை அடக்கி, ஆசை, பயம், கோபம் – இவற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டு, மோட்சத்தில் குறியுள்ள, பரமாத்மாவையே சிந்தித்துக் கொண்டிருக்கின்ற முனிவனான அவன், எப்பொழுதும் விடுதலைப் பெற்றவனே.
 27. என் பக்தன் என்னை எல்லா யாகங்களையும் தவங்களையும் ஏற்பவன் என்றும், அகில லோக நாயகர்களுக்கும் மேலான ஈசுவரன் என்றும், அகில சராசரப் பிராணிகளுக்கும் உற்ற நண்பன் அதாவது தன்னலம் கருதாத அன்பும் அருளும் உடையவன் என்றும் தத்துவரீதியாக அறிந்து மேலான அமைதியை அடைகிறான்.

 

இதுவரை ‘கர்ம ஸந்யாஸ யோகம்’ என்ற ஐந்தாவது அத்தியாயம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.