ஸ்ரீமத் பகவத்கீதை (7) – ஞான விஞ்ஞான யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை – பொழிப்புரை

ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா

 ஏழாவது அத்தியாயம் –  ஞான விஞ்ஞான யோகம்

 1. ஸ்ரீபகவான் சொல்கிறார் – “பார்த்தா! என்னிடம் மிகுந்த அன்பும், முழுமையான ஈடுபாடும் கொண்ட மனத்தினால் என்னையே மேலான கதியாகக் கொண்டு, யோகத்தினாலேயே ஒன்றியவனாக விபூதிகள், பலம், ஐசுவரியம் முதலிய சகல கல்யாண குணங்களுடன் கூடியவனும், எல்லாவற்றிற்கும் ஆத்மாவானவனும் ஆன என்னை எவ்வாறு எவ்வித ஐயமுமின்றி நீ அறிந்து கொள்வாயோ, அவ்வாறு சொல்கிறேன். அதைக் கேள்.
 2. எதை அறிந்துகொண்டபின் இவ்வுலகில் மேலும் தெரிந்து கொள்ளவேண்டியது வேறு ஒன்றும் மீதம் இருக்காதோ, (அதை, அதாவது) விஞ்ஞானத்துடன் கூடிய தத்துவ ஞானத்தை முழுமையாக நான் உனக்குச் சொல்வேன்.
 3. ஆயிரக் கணக்கான மனிதர்களில் யாரோ ஒருவன் என்னை அடைவதற்காக முயல்கிறான். (சாதனை புரிகிறான்). அவ்விதம் முயல்கின்ற யோகிகளிலும் கூட என்னையே மேலான கதியாகக் கொண்ட யாரோ ஒருவன்தான் என்னைத் தத்துவரீதியாக உள்ளபடியே அறிகிறான்.
 4. 5 நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய எனது இந்தப் பிரகிருதி எட்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எட்டு வகையாகப் பிரிக்கப் பட்டுள்ள இதுவோவெனில் ‘அபரா’ அதாவது என் ஜடப் பிரகிருதி. நீண்ட புஜமுடையவனே! இதிலிருந்து வேறான எந்தப் பிரகிருதியினால் இந்த உலகம் முழுவதும் தாங்கப் படுகிறதோ, அது என் ஜீவரூபமான ‘பரா’ அதாவது சேதனப் பிரகிருதி என்று தெரிந்து கொள்.
 5. எல்லா உயிரினங்களும் இந்த இரண்டு பிரகிருதிகளில் இருந்தும் உண்டானவை என்றும், நானே சம்பூர்ணமான எல்லா உலகிற்கும் உற்பத்தியாகும் இடம், அவ்வாறே ஒடுங்குகின்ற இடம் என்றும் தெரிந்துகொள். அதாவது, அகில உலகிற்கும் நானே மூலகாரணம் என்கிறார், பகவான்.
 6. அர்ஜுனா! என்னைக் காட்டிலும் வேறொன்றும் உயர்ந்த காரணமில்லை. இவ்வுலகம் அனைத்தும் நூலில் நூலினால் ஆன மணிகளைப்போல என்னிடம் கோக்கப் பட்டுள்ளன.
 7. அர்ஜுனா! நான் நீரில் சுவையாகவும், எல்லா வேதங்களிலும் ஓங்காரமாகவும், ஆகாயத்தில் ஒலியாகவும், ஆண்களிடத்தில் ஆண்மையாகவும் இருக்கிறேன்.
 8. மண்ணில் புனிதமான நறுமணமாகவும் நெருப்பில் ஒளியாகவும் இருக்கிறேன். அவ்வாறே, எல்லா உயிரினங்களிலும் உயிராகவும் தவம் செய்வோர்களிடத்தில் தவமாகவும் இருக்கிறேன்.
 9. அர்ஜுனா! சராசரங்கள் அனைத்திற்கும் நிலையான விதை என்று என்னை அறிந்துகொள். நான் அறிவாளிகளுடைய அறிவாகவும் தேஜஸ் படைத்தவர்களுடைய தேஜஸாகவும் இருக்கிறேன்.
 10. பரதகுலச்செம்மலே! நான் வலிமை மிக்கவர்களுடைய ஆசையும் பற்றும் நீங்கப்பெற்ற வலிமையாக இருக்கிறேன். மேலும், உயிரினங்களில் அறத்திற்கு மாறுபடாத (சாஸ்திர சம்மதமான) காமமாக இருக்கிறேன்.
 11. மேலும், எந்த உணர்வுகள் சத்துவ குணத்தில் இருந்து தோன்றியவையோ, எவை ரஜோ குணத்திலிருந்து தோன்றியவையோ, அவ்வாறே எவை தமோ குணத்திலிருந்து தோன்றியவையோ, அவையனைத்தும் என்னிடமிருந்தே தோன்றியவை என்று அறிந்துகொள். ஆனால், உண்மையில் அவற்றில் நானும், அவை என்னிடமும் இல்லை.
 12. சாத்விக, ராஜச, தாமச குணங்களின் விளைவுகளான இந்த மூன்று வகையான உணர்வுகளால் இந்த எல்லா உலகமும் (பிராணி சமுதாயமும்) மயக்கம் அடைந்துள்ளன. ஆகையால், இம்முக்குணங்களுக்கு மேற்பட்டவனும் அழிவற்றவனுமான என்னை இந்த உலகம் அறிவதில்லை.
 13. ஏனென்றால், இந்த உலகியலுக்கு அப்பாற்பட்ட தெய்விகமான, மிகவும் அற்புதமான, முக்குணமயமான என்னுடைய மாயை கடப்பதற்கு அரிதானது. ஆனால், எவர்கள் என்னையே எப்பொழுதும் புகலாகக் கொள்கிறார்களோ, அவர்கள் இந்த மாயையைக் கடந்து விடுகிறார்கள். அதாவது, உலகியலில் இருந்து கரையேறுகின்றனர்.
 14. மாயையினால் ஞானம் அபகரிக்கப்பட்டவர்களும் (அதாவது அறிவிழந்தவர்களும்), அசுரத் தன்மையைக் கைக்கொண்டவர்களும், மனிதர்களில் தாழ்ந்தவர்களும், இழிவான செயல்களைப் புரிகின்றவர்களுமான அறிவிலிகள் என்னை வழிபடுவதில்லை. அதாவது, அடைய வேண்டிய மேலான கதியாகக் கொள்வதில்லை.
 15. பரதகுலச்செம்மலே அர்ஜுனா! உலகியல் பொருட்களைப் பெறவேண்டி வழிபடுபவன், துன்பமடைந்தவன், எனது பேருண்மையை அறிய ஆவலுடையவன், மேலும் மெய்ஞ்ஞானம் பெற்றவன் ஆகிய நான்குவிதமான நற்செயல்கள் செய்கின்றவர்களான பக்தியுடைய மனிதர்கள் என்னை வழிபடுகிறார்கள்.
 16. அவர்களுள் எப்பொழுதும் என்னிடமே ஒன்றிவிட்ட, வேறொன்றைச் சாராமல் பக்தி செய்கின்ற ஞானியான பக்தன் மிகவும் சிறந்தவன். ஏனெனில், என்னைத் தத்துவரீதியாக அறிகின்ற ஞானிக்கு நான் மிகவும் இனியவன்; அவனும் எனக்கு மிகவும் இனியவன்.
 17. இவர்கள் எல்லோருமே (மேற்கூறப்பட்ட நால்வருமே) சிறந்தவர்களே. ஆனால், ஞானியோவெனில் என்னுடைய ஸ்வரூபமே என்பது என்னுடைய கருத்து. ஏனெனில், என்னிடம் ஒன்றிய மனமும் புத்தியும் கொண்ட ஞானியாகிய பக்தன், மிகவும் உயர்ந்த கதியாகிய என்னையே உறுதியாகப் பற்றி நிற்கிறான்.
 18. பலபிறவிகளுக்குப்பின் கடைசிப்பிறவியில் தத்துவ ஞானம் பெற்ற மனிதன், அனைத்தும் வாசுதேவனே என்று என்னைப் புகலாகக் கொள்கிறான். அத்தகைய மகாத்மா மிகமிக அரிதானவன்.
 19. அந்தந்த போகப்பொருட்களில் ஏற்படும் ஆசையினால் அறிவிழந்தவர்கள், தம்முடைய இயல்பினால் தூண்டப்பட்டு, அந்தந்த நியமங்களைக் கைக்கொண்டு மற்ற தேவதைகளைப் புகலாகக் கொள்கிறார்கள் (வழி படுகிறார்கள்).
 20. எந்தெந்த ஸகாம பக்தன் (பயன்களை அடைய விருப்பம் கொண்ட பக்தன்) எந்தெந்த தேவதையின் ஸ்வரூபத்தைச் சிரத்தையுடன் பூஜிக்க விரும்புகிறானோ, அந்தந்த பக்தனுக்குச் சிரத்தையை, நான் அந்தந்த தேவதையிடமே அசையாததாகச் செய்கிறேன்.
 21. அந்த மனிதன் அந்தச் சிரத்தையுடன் கூடியவனாக அந்த தேவதையினுடைய பூஜையைச் செய்கிறான். மேலும், அந்த தேவதையிடமிருந்து என்னாலேயே நிர்ணயம் செய்யப்பட்டுள்ள, விரும்பிய அந்த போகங்களைச் சந்தேகமின்றி (அவன்) அடைகிறான்.
 22. ஆனால், சிற்றறிவு படைத்தவர்களாகிய அவர்களுடைய அந்தப் பயன் அழிவுடையதாக ஆகிறது. அவ்வாறே வேறு தேவதைகளைப் பூஜிப்பவர்கள் அந்த தேவதைகளை அடைகிறார்கள். மேலும், என்னுடைய பக்தர்கள் எவ்விதம் வழிபட்டாலும் முடிவில் என்னையே அடைகிறார்கள்.
 23. அறிவற்றவர்கள் என்னுடைய இணையற்றதும் அழிவற்றதும் மேலானதுமான தன்மையை அறிந்து கொள்ளாமல், மனம்- புலன்களுக்கு அப்பாற்பட்டவனான ஸத் சித் ஆனந்தமயமான பரமாத்மாவான என்னை, மனிதனைப்போல பிறப்புள்ளவனாகக் கண்களால் காணக்கூடிய தோற்றத்தை அடைந்தவன் என்று எண்ணுகிறார்கள்.
 24. என்னுடைய யோகமாயையால் மறைக்கப்பட்டுள்ள நான் எல்லோருக்கும் புலப்படுவதில்லை. இந்த அறிவற்ற மனித சமுதாயம் என்னைப் பிறப்பற்றவன் என்றும், அழிவற்ற பரம்பொருள் என்றும் அறிவதில்லை. நான் பிறப்பு-இறப்பு உள்ளவன் என்றே எண்ணுகின்றது.
 25. அர்ஜுனா! முன்பே உயிர்வாழ்ந்து காலமாகிவிட்டவையும், இப்பொழுது இருக்கின்றவையும், அவ்வாறே இனித் தோன்றப் போகின்றவையுமான எல்லா உயிரினங்களையும் நான் அறிவேண். ஆனால், சிரத்தையும் பக்தியும் இல்லாத எந்த மனிதனும் என்னை அறிவதில்லை.
 26. பரதகுலத்தோன்றலே! அர்ஜுனா! உலகில் விருப்பு-வெறுப்புகளால் உண்டான சுகம், துக்கம் முதலிய இரட்டைகள் வடிவான மயக்கத்தினால் எல்லா உயிரினங்களும் மிகுந்த அறியாமையை அடைகின்றன.
 27. ஆனால், பயன் கருதாது சிறந்த செயல்களைப் புரிகின்ற எந்த மனிதர்களுடைய பாவம் நசித்துவிட்டதோ, அந்த விருப்பு-வெறுப்புகளாலுண்டாகிற இரட்டைகள் வடிவான மயக்கத்திலிருந்து விடுபட்ட உறுதியான நிச்சயத்துடன் கூடிய பக்தர்கள் என்னை எல்லா வகைகளிலும் வழிபடுகிறார்கள்.
 28. எவர்கள் என்னைச் சரணமடைந்து மூப்பு, மரணம் – இவற்றிலிருந்து விடுபடுவதற்காக முயல்கிறார்களோ, அவர்கள் அந்தப் பிரம்மத்தையும் அத்யாத்மம் முழுவதையும் (ஜீவசமுதாயத்தையும்), அவ்வாறே சம்பூர்ண கர்மத்தையும் அறிந்து கொள்கின்றனர்.
 29. எவர்கள் அதிபூதம், அதிதைவம், அதியக்ஞத்துடன் கூடியவனாகவும், எல்லாவற்றிற்கும் ஆத்மஸ்வரூபனாகவும் உள்ள என்னை மரணத் தறுவாயிலும் கூட அறிகிறார்களோ, அத்தகைய ஒன்றிய மனத்தோடு கூடிய அவர்கள் என்னையே அறிகிறார்கள் – அடைகிறார்கள்.

இதுவரை ‘ஞான விஞ்ஞான யோகம்’ என்ற ஏழாவது அத்தியாயம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.