ஸ்ரீமத் பகவத்கீதை (8) – அக்ஷர ப்ரஹ்ம யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை – பொழிப்புரை

ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா

 எட்டாவது அத்தியாயம் –  அக்ஷர ப்ரஹ்ம யோகம்

 1. அர்ஜுனன் கேட்கிறார் – “புருஷோத்தமா! அந்தப் பிரம்மம் என்பது என்ன ? அத்யாத்மம் என்பது என்ன? கர்மம் என்பது என்னை? அதிபூதம் என்ற பெயரால் எது அழைக்கப் படுகிறது? மேலும், அதிதைவம் என்று எது சொல்லப்படுகிறது?
 2. மதுசூதனா! இங்கு அதியக்ஞன் என்பவர் யார்? இந்த தேகத்தில் அவர் எப்படி இருக்கிறார்? மேலும், ஒன்றிய மனத்தோடு கூடியவர்களால் மரணத்தறுவாயில் எவ்வாறு நீங்கள் அறியப்படுகிறீர்கள்?”
 3. ஸ்ரீபகவான் சொல்கிறார் – “பிரம்மம் எனப்படுவது மிக உயர்ந்ததும் அழிவற்றதுமானது. அதன் ஸ்வரூபம் அதாவது ஜீவாத்மா அத்யாத்மம் என்ற பெயரால் அழைக்கப் படுகிறது. சராசரங்களின் இருப்பை உண்டுபண்ணுகின்ற படைப்பு (தியாகம்) கர்மம் என்ற பெயரால் அழைக்கப் படுகிறது.
 4. தோன்றுவது, அழிவது என்ற நியதியோடு கூடிய பொருட்கள் எல்லாம் ‘அதிபூதம்’ ஆகும். ஹிரண்யமயனான புருஷன் அதாவது நான்முக பிரம்மதேவன் ‘அதிதைவம்’ ஆவார். மேலும், உடல் பெற்றவர்களில் சிறந்தவனான அர்ஜுனா! இந்த உடலில் வாசுதேவனான நானே அந்தர்யாமி உருவிலே ‘அதியக்ஞ’ மாக இருக்கிறேன்.
 5. மரணகாலத்திலும் எந்த மனிதன் என்னையே நினைத்துக் கொண்டு சரீரத்தை நீத்துக் கிளம்புகிறானோ (அதாவது உயிர்விடுகிறானோ), அவன் என் ஸ்வரூபத்தையே அடைகிறான். இதில் சிறிதுகூட சந்தேகம் இல்லை.
 6. குந்தியின் மைந்தனே! அர்ஜுனா! இந்த மனிதன் கடைசி காலத்தில் (மரணத் தறுவாயில்) எந்தெந்த ஸ்வரூபத்தைச் சிந்தித்த வண்ணமாய் சரீரத்தைத் துறக்கிறானோ, அந்தந்த ஸ்வரூபத்தையே அடைகிறான். ஏனெனில், அவன் எப்பொழுதும் அதே சிந்தனையில் இருந்திருக்கிறான்.
 7. ஆகையினால், அர்ஜுனா! நீ எல்லாக் காலங்களிலும் இடைவிடாது என்னையே தொடர்ந்து நினைத்துக் கொண்டிரு! போரும் புரிவாயாக! இவ்வாறு என்னிடத்தில் அர்ப்பணம் செய்யப்பட்ட மனம்-புத்தியுடன் கூடியவனாக, நீ ஐயமின்றி என்னையே அடைவாய்.
 8. அர்ஜுனா! பகவானைத் தியானிப்பது என்ற பயிற்சியான யோகத்தில் ஈடுபட்டு, வேறு விஷயங்கள்பால் செல்லாத மனத்தினால் பகவானையே சிந்தித்திருக்கும் மனிதன் மிகவும் உயர்ந்த ஒளிபொருந்திய தெய்விகமான புருஷனையே, அதாவது, சாட்சாத் பரமேசுவரனையே அடைகிறான். இது நியதி.
 9. எந்த மனிதன் எல்லாமறிந்தவரும் அநாதியானவரும் (தொன்மையானவரும்) எல்லாவற்றையும் ஆள்பவரும் நுண்ணியதைக் காட்டிலும் மிகவும் நுண்ணியர் ஆனவரும் எல்லாவற்றையும் தாங்கிக் காப்பாற்றுபவரும் சிந்தனைக்கெட்டாத வடிவுடையவரும் சூரியனைப் போன்று எப்பொழுதும் சைதன்யப் பிரகாச வடிவானவரும் அவித்யைக்கு மிகவும் அப்பாற் பட்டவரும் சுத்த ஸத் சித் ஆனந்த மயமானவரும் ஆன பரமேசுவரனை நினைக்கிறானோ –
 10. பக்தியோடு கூடிய அந்த மனிதன் இறக்கும் தறுவாயிலும் யோகத்தின் வலிமையால் புருவங்களின் மத்தியில் பிராணனை நன்றாக நிலைநிறுத்தி, மேலும் அசையாத மனத்தினால் நினைத்துக் கொண்டு, அந்தத் திவ்விய ரூபத்தோடு கூடிய மேலான புருஷனான பரமாத்மாவையே அடைகிறான்.
 11. வேதமறிந்த வித்துவான்கள் எந்த சத் சித் ஆனந்தமயமான பரமபதத்தை அழிவில்லாதது என்று கூறுகிறார்களோ, பற்று நீங்கிய முயற்சியுள்ள சந்நியாசிகளான மகாபுருஷர்கள் எதில் புகுகிறார்களோ, எந்தப் பரமபதத்தை விரும்புகின்ற பிரம்மசாரிகள் பிரம்மசரிய நெறியைக் கடைப்பிடிக்கிறார்களோ, அந்த பரமபதத்தைப் பற்றி உனக்குச் சுருக்கமாக்க் கூறப்போகிறேன்.
 12. 13 புலன்களின் எல்லா வாயில்களையும் அடைத்துவைத்து (அதாவது, வெளிவிஷயங்கள் புகாமல் தடுத்து நிறுத்தி), மனத்தையும் இதயத்தில் நிலையாக நிறுத்தி, (பின் அவ்வாறு வசப்படுத்தப்பட்ட மனத்தால்) பிராணனை உச்சந்தலையில் நிலைபெறச் செய்து, பரமாத்மா சம்பந்தமான யோகதாரணையில் நிலைத்து நின்று, எவன் ‘ஓம்’ என்னும் ஒரே எழுத்தான பிரம்மத்தை உச்சரித்துக் கொண்டு, அந்த ‘ஓம்’ என்ற ஏகாக்ஷரத்தின் பொருளான நிர்குணப் பிரம்மமான என்னைச் சிந்தனை செய்து கொண்டு, இவ்வுடலை நீத்துச் செல்கிறானோ, அந்த மனிதன் உயர்ந்த கதியை அடைகிறான்.
 13. அர்ஜுனா! எவன் வேறு சிந்தனையற்று எப்பொழுதும் இடைவிடாமல் புருஷோத்தமனான என்னை நினைக்கிறானோ, எப்போதும் இடைவிடாமல் என்னிடம் ஒன்றிவிட்ட அந்த யோகி என்னை எளிதில் அடையமுடியும்.
 14. மிக உயர்ந்த ஸித்தியை அடைந்த மகாத்மாக்கள் என்னை அடைந்துவிட்ட பிறகு, துன்பங்களுக்கு உறைவிடமானதும் நிலையற்றதுமான மறுபிறவியை அடைவதில்லை.
 15. அர்ஜுனா! பிரம்மலோகம் வரை உள்ள எல்லா உலகங்களும் அழிந்து உண்டாகும் தன்மை உடையன. அதாவது, அந்த லோகங்களை அடைந்தாலும் திரும்பவும் உலகில் பிறக்க வேண்டும். ஆனால், குந்தியின் புதல்வனே! என்னை அடைந்த பின்னர் மறுபிறவி கிடையாது. ஏனென்றால் நானோ காலத்தைக் கடந்தவன். இந்தப் பிரம்மலோகம் முதலியன எல்லாம் காலவரைக்கு உட்பட்டு அழிவன.
 16. பிரம்மாவுக்கு எது ஒரு பகலோ அது ஓராயிரம் சதுர்யுகங்களைக் காலவரையறை ஆகக் கொண்டது என்றும், அவ்வாறே இரவும் ஓராயிரம் சதுர்யுகங்களை முடிவாகக் கொண்டது என்றும் எந்த மனிதர்கள் தத்துவரீதியாக அறிகிறார்களோ, அந்த யோகியர் பகலிரவு என்ற காலத்தின் தத்துவத்தை அறிந்தவர்கள்.
 17. பிரம்மாவின் பகல் தொடங்கும்போது எல்லாவிதமான சராசரமான உயிர்த்தொகுதிகளும் அவ்யக்தத்திலிருந்து – பிரம்மாவின் சூட்சும சரீரத்தில் இருந்து – வெளிப்படுகின்றன. மேலும், பிரம்மதேவனின் இரவு தொடங்கும்போது, அந்த வயக்தம் என்ற பெயருள்ள பிரம்மாவின் சூட்சும சரீரத்திலேயே மறைகின்றன.
 18. அர்ஜுனா! அதே இந்த உயிரினங்களின் கூட்டம் மீண்டும் மீண்டும் பிறந்து தன்வசமின்றிப் பிரகிருதியின் வசப்பட்டு, இரவின் தொடக்கக் காலத்தில் மறைகிறது. பகலின் தொடக்கத்தில் மறுபடியும் உண்டாகிறது.
 19. ஆனால், அந்த அவ்யக்தத்தைக் காட்டிலும் மிகவும் உயர்ந்த, வேறான தனித்தன்மை கொண்ட எந்த சாசுவதமான, வெளிப்படாத பரம்பொருளான பரமாத்மா உள்ளாரோ, அந்த மேலான திவ்விய புருஷன் எல்லா பூதங்களும் (உயிரினங்களும்) அழிந்தபோதிலும் அழிவதில்லை.
 20. அவ்யக்தம் (தோன்றாநிலை), அக்ஷரம் (அழிவில்லாதது), என்று பெயருள்ள அவ்யக்தத் தன்மையை மிக உயர்ந்த கதி என்று கூறுவர். அவ்வாறே எந்த சநாதனமான அவ்யக்த நிலையை அடைந்த பிறகு மனிதர்கள் திரும்புவதில்லையோ, அது என்னுடைய பரமபதம்.
 21. அர்ஜுனா! எல்லா உயிரினங்களும் எந்த பரமாத்மாவினுள் இருக்கின்றனவோ, எந்த சத் சித் ஆனந்தமயமான பரமாத்மாவினால் இந்த அகில உலகமும் பரிபூரணமாக நிறைந்து இருக்கிறதோ, அந்த சநாதன அவ்யக்தனான பரம புருஷனோ, வேறு எதிலும் நாட்டமில்லாத பக்தியினாலேயே அடையத் தக்கவர்.
 22. அர்ஜுனா! எந்தக் காலத்தில் (வழியில்) உடலை நீத்துவிட்டுச் செல்கின்ற யோகியர் திரும்பிவராத பெருநிலையையும், மேலும் எந்த வழியில் செல்கின்ற யோகிகள் திரும்பி வரும் நிலையையும் (மறுபிறப்பு என்னும் நிலையையும்) அடைகிறார்களோ, அந்தக் காலத்தை (இரண்டு வழிகளையும்) சொல்கிறேன்.
 23. எந்தவழியில் ஒளிமயமான அக்னி அபிமான தேவதையாக இருக்கிறாரோ, பகலின் அபிமான தேவதை இருக்கிறாரோ, சுக்லபக்ஷ அபிமான தேவதை இருக்கிறாரோ, உத்தராயணத்தின் ஆறுமாதங்களின் அபிமான தேவதை இருக்கிறாரோ, அந்த மார்க்கத்தில் இறந்தபிறகு செல்கின்ற பிரம்மத்தை அறிந்த யோகிகளான ஜனங்கள், மேலே கூறப்பட்ட தேவதைகளால் வரிசையாக அழைத்துச் செல்லப்பட்டுப் பிரம்மத்தை அடைகிறார்கள்.
 24. எந்த மார்க்கத்தில் புகைக்குரிய தேவதை இருக்கிறாரோ, ராத்திரிக்குரிய தேவதை இருக்கிறாரோ, அப்படியே கிருஷ்ணபக்ஷத்துக்குரிய தேவதை இருக்கிறாரோ, தக்ஷிணாயனத்தின் ஆறு மாதங்களுக்குரிய தேவதை இருக்கிறாரோ, அந்த மார்க்கத்தில் பற்றுடன் கர்மங்களைச் செய்கின்ற யோகி இறந்தபின், மேற்கூறப்பட்ட தேவதைகளால் வரிசையாக அழைத்துச் செல்லப்பட்டுச் சந்திரனுடைய ஒளியை அடைந்து சுவர்க்கத்தில் தன் நற்செயல்களின் பயன்களை அனுபவித்துவிட்டுத் திரும்பி வருகிறார்.
 25. ஏனென்றால், உலகிற்கு இந்த இரண்டு விதமான சுக்ல, கிருஷ்ண – அதாவது, தேவயானம், பித்ருயானம் எனப்படும் வழிகள் என்றும் உள்ளனவாகக் கருதப் படுகின்றன. இவற்றுள் ஒன்றின் வழியாகச் செல்கின்றவன் (அர்ச்சிர் மார்க்கத்தின் மூலம் செல்கிற யோகி) எதிலிருந்து திரும்பிவர வேண்டியதில்லையோ, அந்த பரமகதியை அடைகிறான். மற்றொரு வழியாகச் செல்பவன் (தூம மார்க்கத்தில் செல்கின்ற பற்றுடன் கர்மம் செய்கின்ற யோகி) மறுபடியும் திரும்பி வருகிறான். அதாவது பிறப்பையும் இறப்பையும் அடைகிறான்.
 26. பார்த்தா! இந்த இரண்டு மார்க்கங்களையும் தத்துவரீதியாக அறிந்த எந்த யோகியும் மோகம் அடைவதில்லை. அவன் பற்றற்ற நிலையிலேயே சாதனையைச் செய்வான். ஆசையில் சிக்கிக் கொள்ளமாட்டான். ஆகையால், அர்ஜுனா! எல்லாக் காலங்களிலும் சமபுத்தி என்னும் யோகத்தோடு கூடியவனாக ஆகிவிடு. எப்பொழுதும் என்னை அடைவதற்காகவே சாதனைகளைச் செய்பவனாக இரு.
 27. யோகியானவன் இந்த ரகசியத்தைத் தத்துவரீதியாக அறிந்து, வேதங்களை அத்தியயனம் செய்வதிலும் யாகங்களைச் செய்வதிலும் தவம் செய்வதிலும் தானங்கள் செய்வதிலும் எந்த புண்ணியத்தின் பயன் ஏற்படுமென்று சொல்லப் பட்டிருக்கிறதோ, அந்த எல்லாவற்றையுமே ஐயமின்றிக் கடந்து செல்கிறான். மேலும் என்றுமுள்ள பரமபதத்தை அடைகிறான்.

இதுவரை ‘அக்ஷர ப்ரஹ்ம யோகம்’ என்ற எட்டாவது அத்தியாயம்

2 thoughts on “ஸ்ரீமத் பகவத்கீதை (8) – அக்ஷர ப்ரஹ்ம யோகம்

 1. 44 வருடங்களுக்கு முன்னான சின்மயானந்தா தொடருரைகள் முதலாக தயானந்த சரஸ்வதி, சித்பவானந்தா வரை செவிமடுத்து, [இது என் தனிப்பட்ட அனுபவ வரிசை] ~~~ஞானேச்வரி என்னும் பாவார்த்த தீபிகையின் ஆங்கில மொழிபெயர்ப்பான திரு ஆர்.கே. பகவத்தின் ஆக்கம், கோதண்டராமையரின் தமிழாக்கம் முதலாக படித்துப் படித்து திருப்தியுறாமல் இப்பொழுது சிவஹரி அம்பாமயி அவர்களின் பவித்ர ஞானேச்வரி [நர்மதா பதிப்பு] வாசிக்கிறேன். பாரதியார் புதுவையில் 1908 முதல் 1918 வரை இருந்த காலகட்டத்தில் அரவிந்தர் கீதைக்குப் பெருவிளக்கம் எழுதியதாகவும் அதனால், தான் சிறிய அளவிலான கீதையுரை எழுதியதாகவும் அவருட்ன் இங்கே பழகும் வாய்ப்புப் பெற்றவர்கள் 1969இல் என்னிடம் சொன்னார்கள். அது பின்னர், ‘கைவிளக்கு’ என்ற பெயரில் வெளிவந்தது. அதற்கு முந்திய அசல் பதிப்பு கையடக்கமானது. கலிக்காக் கட்டடம். இராஜயோகி பி.கே.அண்ணன் நினைவு நூலகத்தில் உள்ளது. இப்பொழுது நீங்கள் தந்துகொண்டிருக்கிற இந்த உரை, இன்னும் எளிதாக உள்ளது. ஆனால் ஸ்:2:57க்கான உரையைத் தேட முடியவில்லை. தளர்ச்சி. உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன். திருக்குறளுக்கு இத்தகைய விசாலமான உரைகள் கிட்டாமை துன்பமே. மொழிஞாயிறு பாவாணர்தம் தமிழ் மரபுரை, பரிமேலழகர் உரையை அடியொற்றியதே என்று தங்கப்பா மொழிந்தது உண்மை. பாவலரேறு பெருஞ்சித்திரனார்தாம் கதிர்காமத்தில் எனக்கு ஞானேச்வர முனிவர் குறித்த விழிப்பை ஊட்டினார். சிறை வாழ்வில், உடன் இருந்த மராத்திய நண்பர், “இதுபோல உங்கள் திருக்குறளுக்கு விளக்கம் உள்ளதா?” என்று கேட்டிருக்கிறார். “தம்பி, நான் அவரிடம் வாங்கிப் படித்துப் பார்த்தேன். அடடா.. அதுபோன்ற உரையைத் திருக்குறளுக்கு நான் வகுக்கப் போகிறேன்!” ~ என்றார். சில நாள்களில் இயற்கை எய்திவிட்டார். இந்த எண்ணத்தை உண்டாக்கியவை உங்கள் வொர்ட்ப்ரஸ் பதிவுகள் எனில் மிகையன்று.

  Liked by 1 person

 2. மதிப்பிற்குரிய பேராசிரியர் ஐயா அவர்களுக்கு வணக்கம். தங்களது அருமையான கருத்துக்களுக்கு மிக்க நன்றி. தாங்கள் பகவத்கீதைக்கு உரைகண்ட பெரியோர் பலரின் மொழியமுதத்தையும் பொருளமுதத்தையும் நீண்டகாலமாக சுவைத்து ரசித்து வருபவர் எளியேனாகிய என்னுடைய இந்த சிறிய முயற்சிக்கு இத்துணை அன்போடு கருத்துரை அளித்ததற்கும் பாராட்டுக்கும் நான் மிகவும் பேறு பெற்றிருக்கிறேன். எனது பதிவுகள் கோரக்பூர் கீதா பிரஸ் வெளியிட்ட கையடக்கப் பதிப்பிலிருந்து நான் நகல் செய்பவை. அடியேனின் இந்த சிறு முயற்சியும் ஒரு பயனுள்ள முயற்சிதான் என்பதைத் தங்கள் எழுத்துக்களில் அறியும்போது, மனம் மிகவும் மகிழ்கிறது. பெருந்தகை தங்களுக்கும் என்னை இப்பதிவை எழுதத்தூண்டிய அந்த கண்ணபிரானுக்கும் நான் நன்றியைக் காணிக்கையாக்குகிறேன். —nytanaya

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.