ஸ்ரீமத் பகவத்கீதை (6) – ஆத்ம ஸம்யம யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை – பொழிப்புரை

ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா

 ஆறாவது அத்தியாயம் – ஆத்ம ஸம்யம யோகம்

 1. ஸ்ரீபகவான் கூறுகிறார். – “எவனொருவன் கர்மத்தின் பயனைச் சார்ந்திராமல் செய்ய வேண்டிய கர்மத்தைச் செய்கிறானோ, அவன் சந்நியாசியும் யோகியும் ஆவான்.  மேலும், அக்னி காரியங்களை மட்டும் துறப்பவன் சந்நியாசி ஆகமாட்டான்; செயல்களைச் செய்யாமல் துறப்பவனும் யோகி ஆகமாட்டான்.
 2. அர்ஜுனா! எதை ஸந்யாஸம் என்று கூறுகிறார்களோ, அதையே யோகம் என்று நீ அறிந்துகொள். ஏனெனில் சங்கல்பங்களைத் துறக்காத எவனும் யோகியாக ஆகமாட்டான்.
 3. யோகத்தைக் கடைப்பிடித்து முன்னேற விரும்புகின்ற, பரம்பொருளைச் சிந்தித்திருக்கின்ற மனிதன், யோகத்தை அடைவதற்கு நிஷ்காமமாகக் கர்மங்களைச் செய்வதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. இவ்விதம் யோகாரூடன் ஆனபிறகு, அந்த யோகத்தைக் கடைப்பிடிப்பவனுக்கு எந்தவிதமான சங்கல்பங்களும் இல்லாதிருத்தல்தான் மேன்மை அடைவதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
 4. எப்பொழுது புலன்களுடைய போகப்பொருட்களில் பற்று கொள்வதில்லையோ, கர்மங்களிலும் பற்று கொள்வதில்லையோ, அப்பொழுது எல்லா சங்கல்பங்களையும் துறந்தவனான அவன் யோகாரூடன் என்று கூறப்படுகிறான்.
 5. தானே தன்னைச் சம்சாரக் கடலிலிருந்து உயர்த்திக் கொள்ளவேண்டும்; தன்னைத்தானே வீழ்த்திக் கொள்ளக்கூடாது. ஏனெனில், தனக்குத் தானேதான் நண்பன். மேலும், தனக்குத் தானேதான் பகைவன்.
 6. எந்த ஜீவாத்மாவினால் மனம்-புலன்களுடன் கூடிய உடல் அடக்கி ஆளப்பட்டு இருக்கிறதோ, அந்த ஜீவாத்மாவிற்குத் தனக்குத் தானே (அவனே) நண்பன். ஆனால், மனம்-புலன்களுடன் கூடிய உடலை அடக்கி ஆளாதவன், தனக்குத் தானே பகைவனைப்போல பகைமை (தீமை) செய்வதில் செயல்படுவான்.
 7. தட்ப-வெப்பம், இன்ப-துன்பம், மான-அவமானம் ஆகியவற்றில் எவனுடைய மனநிலை மிகவும் அமைதியாக இருக்கிறதோ, தன்னை அடக்கி வெற்றிகொண்ட அந்த மனிதனின் ஞானத்தில் ஸத் சித் ஆனந்தமயமான பரமாத்மா நன்கு நிலைத்து நிற்கிறார். அதாவது, அவனுடைய அறிவில் பரமாத்மாவைத் தவிர வேறொன்றுமே இல்லை.
 8. எவரது உள்ளம் ஞானத்தாலும் விஞ்ஞானத்தாலும் நிறைந்து திருப்தியாக இருக்கிறதோ, எவர் தம் நிலையிலிருந்து எந்தச் சூழ்நிலையிலும் விகாரமின்றி இருக்கிறாரோ, எவர் தம் புலன்களை நன்கு அடக்கி வசப்படுத்தி உள்ளாரோ, மேலும் எவர் மண், கல், பொன் ஆகியவற்றில் சமபாவனை கொண்டுள்ளாரோ, அந்த யோகி பகவானை அடைந்தவர் என்று அழைக்கப்படுகிறார்.
 9. தன்னலங்கருதாது அனைவருக்கும் இதம் செய்பவன், நண்பன், பகைவன், உதாஸீனன் (ஒரு சார்புமற்றவன்), நடுநிலையிலே நிற்பவன் (இரு பிரிவினருக்கும் நன்மையை நாடுபவன்), வெறுக்கத் தக்கவன், உறவினர் ஆகியவர்களிடத்தும் நல்லோர்களிடத்தும் பாவிகளிடத்தும் கூட சமமான பாவனை கொண்டுள்ளவன் மிகவும் சிறந்தவன் ஆகிறான்.
 10. மனம்- புலன்களுடன் கூடிய உடலை அடக்கி எதிலும் ஆசையில்லாமல், தனக்கென்று எதையும் சேர்த்து வைத்துக் கொள்ளாத யோகி, தனி ஒருவனாகத் தனியான இடத்தில் அமர்ந்து கொண்டு, ஆத்மாவை இடைவிடாது பரமாத்மாவில் இணைக்கவேண்டும்.
 11. தூய்மையான இடத்தில் தரைமீது தர்ப்பை, மான்தோல், துணி – இவற்றை ஒன்றின்மேல் ஒன்றாக விரித்து, மிக உயரமாக இல்லாமலும், மிகத் தாழ்மையாக இல்லாமலும், தன்னுடைய இருக்கையை அசைவற்றதாக அமைத்துக்கொண்டு –
 12. அந்த ஆசனத்தில் அமர்ந்துகொண்டு, மனம்-புலன்களின் செயல்களைத் தன்வசத்தில் வைத்துக்கொண்டு, மனத்தை ஒருமுனைப்படுத்தி, உள்ளத் தூய்மைக்காக யோகத்தைப் பயில வேண்டும்.
 13. உடல், தலை, கழுத்து – இவற்றைச் சீராகவும் அசைவற்றதாகவும் வைத்துக் கொண்டு, அசையாமல் ஸ்திரமாக இருந்துகொண்டு, மற்ற திசைகளைப் பாராமல் தன்னுடைய நாசியின் நுனியின்மீது பார்வையை ஒருமுனைப்படுத்தி –
 14. பிரம்மசரிய விரதத்தில் நிலைத்து நின்று அச்சமின்றி நன்கு மன அமைதிபெற்ற, தியான காலத்தில் விழிப்புணர்வோடு கூடிய யோகி, தன் மனத்தை அடக்கி, என்னையே மனத்தில் நினைத்தவனாக, என்னையே அடையத்தக்க சிறந்த கதியெனக் கொண்டு நிலை பெற்றிருக்க வேண்டும்.
 15. மனத்தைத் தன்வசப்படுத்திய யோகி, அவ்விதம் ஆத்மாவை இடையறாது பரமேசுவரனான என்னுடைய ஸ்வரூபத்தில் இணைத்துக்கொண்டு, என்னிடம் விளங்குகின்ற பரமானந்தத்தின் பெருநிலையாகிய அமைதியை அடைகிறான்.
 16. அர்ஜுனா! இந்த யோகம் மிகுதியாக உண்பவனுக்கும் கைகூடாது. அறவே உண்ணாமல் இருப்பவனுக்கும் கைகூடாது. மிகுதியாக உறங்கும் இயல்பு உடையவனுக்கும் கைகூடாது.எப்பொழுதும் விழித்துக்கொண்டே இருப்பவனுக்கும் கைகூடாது.
 17. துக்கத்தைப் போக்குகின்ற யோகம் அளவோடு உண்டு நடமாடுகின்றவனுக்கும், கர்மங்களில் உரிய முயற்சி செய்கின்றவனுக்கும், அளவோடு உறங்கி விழித்து இருப்பவனுக்கும் மட்டுமே கைகூடுகிறது.
 18. முற்றிலும் தன்வசப் படுத்தப்பட்டு உள்ள உள்ளம் எப்பொழுது பரமாத்மாவினிடமே நன்கு நிலை பெற்று இருக்கிறதோ, அப்பொழுது அனைத்து போகங்களில் இருந்தும் பற்று நீங்கிய மனிதன் யோகத்தில் முதிர்ந்த நிலை பெற்றவன் என்று அழைக்கப் படுகிறான்.
 19. காற்று வீசாத இடத்தில் இருக்கும் விளக்கின் சுடர் எப்படி அசையாமல் இருக்குமோ, அதே உவமை பரமாத்மாவின் தியானத்தில் ஈடுபடுகின்ற யோகியினுடைய வெற்றி கொள்ளப்பட்ட மனத்திற்கும் உவமையாகச் சொல்லப்பட்டது.
 20. யோகப் பயிற்சியினால் கட்டுண்ட சித்தம் எந்த நிலையில் ஓய்ந்து நிற்கிறதோ, மேலும், எந்த நிலையில் பரமாத்மத் தியானத்தால் தூய்மை பெற்ற நுண்ணிய புத்தியினால் பரமாத்மாவை நேரில் கண்டு, ஸத் சித் ஆனந்த மயமான பரமாத்மாவிலேயே மகிழ்ந்து கொண்டிருக்குமோ –
 21. புலன்களுக்கு அப்பாற்பட்ட தூய்மையான நுண்ணிய புத்திக்கு மட்டும் புலப்படும் எந்த முடிவற்ற ஆனந்தம் உண்டோ, அதை எந்த நிலையில் அனுபவிக்கிறானோ, மேலும் எந்த நிலையில் நிலைபெற்று, இந்த யோகி பரமாத்ம ஸ்வரூபத்தில் இருந்து விலகுவதே இல்லையோ –
 22. பரமாத்மாவை அடைவதாகிற எந்தப் பேற்றைப் பெற்றதும், அதைக் காட்டிலும் வேறொரு பேற்றை உயர்வானதென்று கருத மாட்டானோ, மேலும், பரமாத்மாவுடன் ஒன்றிவிட்ட எந்நிலையில் நிலைபெற்ற யோகி மிகப்பெரிய துயரத்தால்கூட கலங்க மாட்டானோ –
 23. துன்பமயமான சம்சாரச் சேர்க்கையில் இருந்து விடுபடுவதும் யோகம் என்ற பெயர் கொண்டதுமான அந்த யோகத்தை அறியவேண்டும். அந்த யோகம் சோர்வற்ற தைரியமும் உற்சாகமும் உள்ள சித்தத்தோடு உறுதியாக ஆற்றப்பட வேண்டும்.
 24. சங்கல்பத்தினால் உண்டாகக் கூடிய எல்லா விருப்பங்களையும் மீதமின்றித் துறந்து, மனத்தினால் புலன்களின் கூட்டத்தை எல்லாப் புறங்களில் இருந்தும் நன்கு அடக்கி –
 25. படிப்படியாகப் பயின்று மனத்தை உலகியலில் இருந்து ஒதுங்கச் செய்யவேண்டும். உறுதி பூண்ட புத்தியினால் மனத்தைப் பரமாத்மாவிடம் நிலைபெறச் செய்து, பரமாத்மாவைத் தவிர வேறு எதையும் நினையாது இருத்தல் வேண்டும்.
 26. ஆனால், இந்த நிலை இல்லாது அலைந்து கொண்டே இருக்கிற மனம் எந்தெந்த ஒலி முதலிய விஷயங்களின் காரணமாக உலகில் அலைகிறதோ, அந்தந்த விஷயங்களில் இருந்து தடுத்து நிறுத்தி, அதைத் திரும்பத் திரும்ப பரமாத்மாவினிடமே நிலைபெறச் செய்ய வேண்டும்.
 27. ஏனெனில், மனம் நன்கு அமைதி அடைந்தவனும் பாவங்கள் அற்றவனும் உலகியல் ஈடுபாடு அடங்கியவனும் ஸத் சித் ஆனந்த மயமான பிரம்மத்திலே ஒன்றியவனும் ஆன இந்த யோகியை உயரிய சுகம் (பேரானந்தம்) வந்தடைகிறது.
 28. பாவமற்ற இத்தகைய யோகி இவ்வாறு எப்பொழுதும் இடைவிடாது ஆத்மாவைப் பரமாத்மாவிடம் ஈடுபடுத்தி, எளிதாக பரப்பிரம்ம பரமாத்மாவை அடைவது என்னும் முடிவற்ற நிறைவான ஆனந்தத்தை அனுபவிக்கிறான்.
 29. எங்கும் நிறைந்த சைதன்ய ரூபனான பரமாத்மாவிடம் இரண்டறக் கலந்த நிலை என்னும் யோகத்தோடு கூடிய ஆத்மவானும், எல்லாவற்றிலும் சமநோக்கு உடையவனும் ஆன யோகி, ஆத்மாவை எல்லாச் சராசரங்களிலும் இருப்பதாகவும், மேலும் எல்லாச் சராசரங்களும் ஆத்மாவில் கற்பிக்கப்பட்டு இருப்பதாகவும் காண்கிறான்.
 30. எவன் எல்லாச் சராசரங்களிலும் எல்லோருக்கும் ஆத்மாவான வாசுதேவனான நானே வியாபித்து இருப்பதாகப் பார்க்கிறானோ, எல்லாச் சராசரங்களும் வாசுதேவனான என்னிடம் அடங்கி இருப்பதாகப் பார்க்கிறானோ, அவனுக்கு நான் காணப் படாமல் போவதில்லை; அவனும் எனக்குக் காணப் படாமல் போவதில்லை;
 31. எவன் ஒன்றிய நிலையில் நிலைபெற்று அனைத்து சராசரங்களிலும் ஆத்மாவாக விளங்கும் ஸத் சித் ஆனந்தமயனான வாசுதேவனான என்னை வழிபடுகிறானோ, அந்த யோகி எவ்வகையில் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் என்னிடத்திலேயே செயல்பட்டுக் கொண்டு இருக்கிறான். (ஏனெனில், அவனுடைய அனுபவத்தில் என்னைத் தவிர வேறொன்றும் இல்லவே இல்லை.)
 32. அர்ஜுனா! எந்த யோகி எல்லாச் சராசரங்களையும் தன்னைப் போலவே சமநோக்கில் பார்க்கிறானோ, மேலும் சுகத்தையும் துக்கத்தையும் (எல்லோருடைய சுகங்களையும் துக்கங்களையும் ) தன்னுடையவை போன்ற சமமாகப் பார்க்கிறானோ, அந்த யோகி உயந்தவனாக மதிக்கப் படுகிறான்.
 33. அர்ஜுனன் கேட்கிறார் – “மதுசூதனா! இந்த யோகம் சமபாவனையோடு கூடியதென்று எது உங்களால் சொல்லப் பட்டதோ, அந்த யோகத்தினுடைய உறுதியான நிலையை மனத்தின் சஞ்சலத்தினால் நான் உணரவில்லை.
 34. ஏனெனில், கிருஷ்ணா! இந்த மனம் எதிலும் நிலைக்காமல் அலையும் தன்மை உடையது. புலன்களை மிகவும் கலக்கும் தன்மையுடையது; திடமானது; வலிமை பொருந்தியது. ஆகவே, அதை அடக்குதல் காற்றைத் தடுத்து நிறுத்துவது போன்று மிகவும் கடினமானது என்று நான் நினைக்கிறேன்.”
 35. ஸ்ரீபகவான் சொல்கிறார்.—“நீண்ட புஜங்கள் உடையவனே! சந்தேகமின்றி மனம் சஞ்சலமானதுதான்; (இதை) வசப்படுத்துவதும் கடினம்தான். ஆனால், குந்தியின் மகனான அர்ஜுனா! அப்யாசத்தாலும் வைராக்கியத்தினாலும் மனம் வசப் படுத்தப்படுகிறது.
 36. மனத்தை வசப்படுத்த இயலாதவனால் யோகம் அடைய முடியாதது. ஆனால், மனத்தை அடக்கிய, முயற்சியுள்ள மனிதன் பயிற்சியினால் யோகத்தை அடைவது சாத்தியமானது – எளிது – என்பது என் கருத்து.”
 37. அர்ஜுனன் கேட்கிறார் – “கிருஷ்ணா! யோகத்தில் சிரத்தை உள்ளவனாக இருந்தும் மனவடக்கம் இல்லாமையினால் மரணத் தறுவாயில் யோகத்திலிருந்து மனம் நழுவிய இத்தகைய சாதகனான யோகி, யோகத்தின் பயனை – பகவானின் தரிசனத்தை – அடையப் பெறாது போனால் எந்த கதியை அடைகிறான்?
 38. அகன்ற தோள்களுடையவனே! பகவானை அடைகின்ற மார்க்கத்தில் வழி தெரியாமல் மயங்கி, பிடிப்பு இல்லாத மனிதன் இரண்டு வழிகளினின்றும் நழுவிச் சிதறிய மேகம்போல அழிந்துவிட மாட்டானா?
 39. கிருஷ்ணா! என்னுடைய இந்தச் சந்தேகத்தை மீதமின்றிப் போக்குவதற்கு நீங்களே தகுதியானவர். ஏனெனில், இந்தச் சந்தேகத்தைப் போக்குபவர் உங்களைத் தவிர வேறொருவர் கிடைப்பது சாத்தியமில்லை.
 40. ஸ்ரீபகவான் சொல்கிறார் – “அர்ஜுனா! அந்த மனிதனுக்கு இவ்வுலகிலோ, மேலுலகிலோ அழிவில்லை. ஏனெனில், பிரியமானவனே! ஆன்மீக மேம்பாட்டிற்காக –- பகவானை அடைவதற்காக – சாதனை புரியும் எந்த மனிதனும் தாழ்நிலையை அடைவதில்லை.
 41. யோகத்தினின்றும் வழுவியவன் புண்ணியம் செய்தவர்களுக்குரிய சுவர்க்கம் முதலிய உலகங்களை அடைந்து, பல்லாண்டுகள் அங்கு வாழ்ந்து, மறுபடியும் நல்லொழுக்கம் உள்ள செல்வந்தர்களுடைய வீட்டில் பிறக்கிறான்.
 42. அல்லது, வைராக்கியமுள்ள யோகப்ரஷ்டன் அந்த உலகங்களுக்குச் செல்லாமல், ஞானிகளான யோகிகளுடைய குலத்திலேயே பிறக்கிறான். ஆனால், இத்தகைய பிறப்பு இவ்வுலகில் ஐயமின்றி அரிதாகவே உள்ளது.
 43. அங்கு முற்பிறவியில் சேர்த்து வைக்கப்பட்ட அந்தப் புத்திஸம்யோகத்தை – சமபுத்தி யோகத்தின் மனப் பதிவுகளை—எளிதாகவே பெறுகிறான். மேலும், குருநந்தனான அர்ஜுனா! அதனுடைய பிரபாவத்தினால் மறுபடியும் பரமாத்மாவை அடைகிற வழியில் முன்னிலும் தீவிரமாக முயல்கிறான்.
 44. (சீமான்கள் வீட்டில் பிறவி எடுத்த யோகப்ரஷ்டனான) அவன் தன்வசம் இழந்தவனாயினும், அந்த முற்பிறப்பின் பயிற்சியினாலேயே சந்தேகமின்றி பகவான் பால் ஈர்க்கப் படுகிறான். அவ்வாறே சமபுத்தியாகிய யோகத்தை அறிய விரும்புபவன் கூட வேதங்களிலே கூறப்பட்டுள்ள பயனை விரும்பிச் செய்யப்படும் கர்மங்களின் பயனைப் பொருட்படுத்தாமல் கடந்து சென்று விடுகிறான்.
 45. ஆனால், முழுமுயற்சியுடன் பயிற்சி செய்யும் யோகியோ பலபிறவிகளிலும் ஏற்பட்ட மனப் பதிவுகளின் வலிமையால் இப்பிறவியிலேயே ஸித்தி அடைந்து, அனைத்துப் பாவங்களும் நீங்கப்பெற்று பரிசுத்தனாகி, அக்கணமே உயந்த நிலையை (பரமாத்மாவை) அடைகிறான்.
 46. யோகியானவன் தவம் செய்வோர்களைக் காட்டிலும் மேலானவன்; சாஸ்திரங்களை அறிந்தவர்களைக் காட்டிலும் மேலாவனாகக் கருதப் படுகிறான். மேலும், பயனில் ஆர்வம் கொண்டு கர்மங்களைச் செய்பவர்களைக் காட்டிலும் யோகி சிறந்தவன். ஆகையால் அர்ஜுனா! யோகி ஆவாயாக.
 47. அனைத்து யோகிகளிலும் எவன் சிரத்தையுடைய யோகியோ, என்னிடம் ஈடுபாடு கொண்ட உள்ளத்தால் (மனப்பூர்வமாக) என்னை வழிபடுகிறானோ, அந்த யோகியே என்னால் மிகவும் உயர்ந்தவனாக மதிக்கப் படுகிறான்.”

 

இதுவரை ‘ஆத்ம ஸம்யம யோகம்’ என்ற ஆறாவது அத்தியாயம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.