திருவள்ளுவரின்_திருக்குறள்_தரும்_காதல்_நாடகம்

திருவள்ளுவரின்_திருக்குறள்_தரும்_காதல்_நாடகம்

காதலன் தன் காதலியை அழகான இயற்கைச் சூழலில் காண்கிறான். கண்டு காதல் கொண்டு உள்ளம் மயங்குகிறான். அந்த மயக்கம் அவனுடைய சொற்களில் புலனாகிறது : “இவள் தெய்வமகளோ ? மயிலோ ? குழை அணிந்த பெண்ணோ ? என் நெஞ்சம் மயங்குகிறது.”

சிலநாள் கழித்துக் காதல் வளர்ந்தபின் அவன் கூறுகிறான் : “உடம்போடு உயிர்க்கு என்ன உறவோ, அதே உறவுதான் என் காதலியோடு எனக்கு உள்ள நட்பு. உயிர்க்கு வாழ்வு போன்றவள் அவள். அவளுடைய பிரிவு சாதல் போன்றது.”

கற்பனை நயம் மிகுந்த சொற்கள் இந்தப் பகுதியில் மிகுந்திருக்கின்றன.  காதலி கூறுவன கேட்போம்: “என் காதலர் என் கண்ணில் உள்ளார். கண்ணின் உட்பகுதியிலிருந்து அவர் நீங்குவதில்லை. நான் கண்ணை இமைத்தாலும் அதனால் அவர் வருந்துவதில்லை. அவ்வளவு நுட்பமானவர் என் காதலர். அவர் கண்ணுள் இருப்பதால் என் கண்ணுக்கு மை எழுதுவதும் இல்லை. மை தீட்டினால் அது அவரை மறைத்துவிடுமோ என்று அஞ்சுகிறேன்.  காதலர் என் நெஞ்சில் உள்ளார். அதனால், சூடான பொருள்களை உண்ண அஞ்சுகிறேன். சூடானவற்றை உண்டால், அவர்க்கு வெப்பமாக இருக்குமோ என்றுதான் அஞ்சுகிறேன்.”

இவர்களுடைய மறைவான காதல் மெல்லச் சிலர்க்குத் தெரிகிறது; பலர்க்கு எட்டுகிறது. தாயும் மெல்ல அறிகிறாள். கடுஞ்சொல் கூறுகிறாள். அப்போது காதலி கூறுவது என்ன ? “ ஊரார் தூற்றிப் பேசும் சொற்கள் என் காதல் நோய்க்கு எரு ஆகின்றன. “ அன்னையின் சுடுசொற்கள் இந்தப் பயிர்க்கு நீர் ஆகின்றன. இப்படித் தூற்றிப் பேசுவதால் என் காதலை அடக்கிவிடுவோம் என்று எண்ணுகிறார்கள்.  தவறு !  அது நெய்யால் நெருப்பை அவித்து விட எண்ணுவது போன்றதே.”

காதலன் வெளிநாட்டுக்கு ஒரு கடமையை முன்னிட்டுப் பிரிந்து போக எண்ணுகிறான்.  அதைத் தன் காதலியிடம் தெரிவிக்க முயல்கிறான். அவளுடைய மறுமொழியைக் கேட்போம்: “என்னை விட்டுப் பிரியாத செய்தியானால் என்னிடம் சொல்லுங்கள். அல்லது, பிரிந்து விரைவில் திரும்பி வருவேன் என்று சொல்லும் செய்தியானால், இப்போது  என்னிடம் சொல்லவேண்டாம். நீங்கள் திரும்பிவரும்போது உயிரோடு வாழ்ந்திருக்க வல்லவர் யாரேனும் இருந்தால் அவர்களிடம் சொல்லுங்கள்.”

அவள் தனக்குள் சொல்லிக் கொள்கிறாள்: “என்னிடம் வந்து தம் பிரிவைப் பற்றிப் பேசும் வன்மையான நெஞ்சம் அவர்க்கு இருக்குமானால், அப்படிப்பட்டவர் திரும்பி வந்து அருள்வார் என்று ஆசைப்படுதல் வீண்.”

பிரிந்தபின் அவள் படும் துன்பங்கள் நெஞ்சம் உருக்குவன: “நான் இப்போது ஏன் உயிர் வாழ்கிறேன் ? அவரோடு யான் அன்பாக வாழ்ந்திருந்த நாட்களை நினைந்து ஏங்குவதற்காக உயிர் வாழ்கிறேன். மறந்தால் என்ன ஆவேனோ ? மறக்க முடியவில்லை. நினைந்தாலும் நெஞ்சு சுடுகின்றது. நனவில் அவர் வந்து அன்பு செய்யவில்லை. அப்படிப் பட்டவர் கனவில் வரக் காண்கிறேன். அதனால் தான் என் உயிர் இன்னமும் உள்ளது. நனவு என ஒன்று இல்லாமல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ? கனவிலே என் காதலர் நீங்காமல் என்னோடு இருப்பாரே ! காலைப் பொழுதுக்கு யான் என்ன நன்மை செய்தேன் ? மாலைப் பொழுதுக்கு என்ன தீமை செய்தேன் ? மாலைப் பொழுது இவ்வாறு பிரிவுத் துன்பத்தை வளர்க்க வல்லது என்பதை என் காதலர் என்னைவிட்டு நீங்காமல் இருந்த காலத்தில் யான் அறிந்ததில்லை. காலையில் என் நோய் அரும்பாக இருக்கிறது. பகலெல்லாம் முதிர்ந்த அரும்பாக – போதாக – உள்ளது; மாலை வந்ததும் இந்த நோய் மலர்ந்து விடுகிறதே, நெஞ்சமே ! நீ அவரை நாடிச் செல்கிறாய் ! செல்லும்போது என் கண்களையும் உன்னுடன் அழைத்துக் கொண்டு போ. இவை அவரைக் காண வேண்டும் என்னைப் பிய்த்துத் தின்னுகின்றன. “

இவ்வாறு காமத்துப்பால் முழுவதும், நாடகப் போக்கில், காதலனையும் காதலியையும் பேசச் செய்து திருவள்ளுவர் தாம் மறைந்திருக்கின்றார். காதல் உணர்ச்சிகளையும் கற்பனைகளையும் நாடகமேடையில் காண்பதுபோல் உணர்கிறோம். உணர்ச்சிகளுக்கும் கற்பனைகளுக்கும் அழகான வடிவங்கள் அமைகின்றன.

—————————————————————————————————————

=இதை நான் சொல்லவில்லை. (என்னைச் சார்ந்தவர்கள் பார்வைக்கு இதைச் சொல்லவேண்டியதாகிறது) முழுக்க முழுக்க தமிழ்ப் பேரறிஞர் மு.வ. சொன்னது; எனவே திருக்குறளைச் சரியாகப் படித்தவரிடம் இருந்து புகார் வராது. =

—————————————————————————————————————–

ஒன்று சர்வநிச்சயமாய்த் தெரிகிறது. உயர்திரு மு.வரதராசனார், காதலெனும் உன்னதத்தைக் காதலித்தாரோ இல்லையோ, நிச்சயம் அவர் திருவள்ளுவரைக் காதலித்தார் என்பது அவர் எழுதியவைகளில் மிகத் தெளிவாக புலப் படுகிறது.

===================================================================

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.