கம்பராமாயணச் சுவை

இது சாகித்திய அகாதெமி வெளியீடான, மூதறிஞர் மு வரதராசனார் எழுதிய “தமிழ் இலக்கிய வரலாறு” என்னும் நூலில் இருந்து நகல் செய்தது.

வால்மீகி இயற்றிய ஆதி காவியத்தை ஒட்டிக் கம்பர் தம் காப்பியத்தை எழுதியபோதிலும், கம்பராமாயணம் மொழிபெயர்ப்பும் அல்ல; வெறுந்தழுவலும் அல்ல. ஓரு புதுக் காப்பியம் போலவே விளங்குமாறு கம்பர்தம் கற்பனைத் திறனால் படைத்துத் தந்துள்ளார். வால்மீகியால் உயர்ந்த காப்பியத் தலைவர்களாகப் படைத்துக் காட்டப்பட்ட இராமனும் சீதையும், கம்பராமாயணத்தைக் கற்பவர் கேட்பவர்களின் நெஞ்சில் தெய்வங்களாகக் காட்சியளிக்கின்றனர். கம்பருக்குப் பிறகே இந்தியா முழுதும் இராம வழிபாடு பெருகியது என்பர். குமரகுருபரர் என்னும் தமிழ் நாட்டுத் துறவியார் கங்கைக் கரையில் கம்பராமாயணக் கதையைப் பரப்பினார் என்றும், அங்கே அது பரவிய பிறகு இந்தியில் துளசிதாசர் இராமாயணம் இயற்றினார் என்றும், அதனாலேயே துளசி படைத்தஇராமனும் சீதையும் பக்திக்கு உரிய தெய்வங்களாக விளங்குகிறார்கள் என்றும் சிலர் கூறுவர். தமிழர் வாணிகத்தின் காரணமாக இந்தோனேசியா, தாய்லாந்து, சயாம் முதலிய நாடுகளுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சென்றுவந்த போதும், அங்கேயே பலர் குடியேறியபோதும், கம்பராமாயணக் கதைப்பகுதிகள் அந்த நாடுகளில் பரவின.இன்றும் அங்கே கம்பராமாயணத்தை ஒட்டி அமைந்த சிற்பங்களும் கதைகளும் வாழ்கின்றன.

வால்மீகி இராமாயணத்தில் உள்ள பலவற்றைக் கம்பர் தம் காவியத்தில் அவ்வாறே தந்துள்ளார். சிலவற்ரை விரிவாக்கி எழுதியுள்ளார். வால்மீகி சொல்லாத சிலவற்றைத் தாமே படைத்துத் தந்துள்ளார். பழையன புதியன எவையாயினும், கம்பர் கைப்பட்ட பிறகு புது மெருகு பெற்று ஒளிர்கின்றன.

வாலியின் மகன் அங்கதனைப்பற்றி வால்மீகி சொல்லாத முறையில் கம்பர் சொல்லியுள்ளார். #அங்கதனின்_அடைக்கலம்_கம்பரின்_புதிய_படைப்பு.வாலி இறக்கும்போது தன்மகன் அங்கதனை இராமனிடம் ஒப்படைத்து அவனைக் காத்து அருள்புரியுமாறு கேட்டுக் கொள்கிறான். இராமன் வாலியின் வேண்டுகோளுக்கு இசைந்து அடைக்கலமாக ஏற்றுக்கொண்டதற்கு அறிகுறியாகத் தன் உடைவாளை அங்கதனிடம் அளிக்கிறான். அன்றுமுதல் அந்த உடைவாளை ஏந்தி இராமன் பக்கத்தில் நிற்பதே அங்கதனுக்குத் தொழில் ஆகிறது. முடிசூட்டு விழாவினை வருணிக்கும்போது கம்பர், “அங்கதன் உடைவாள் ஏந்த “ என்று அந்தக் காட்சியைக் குறிப்பிட்டுள்ளார்.

கம்பரின் “மாயாசனகப் படலம்” வால்மீகி நூலில் இல்லாதது. இலங்கையில் அசோக வனத்தில் சீதையின் மனத்தை மாற்றுவதற்காக அரக்கர்கள் செய்த சூழ்ச்சிகள் பல. அவற்றுள் ஒன்று இது. சீதையின் தந்தையாகிய சனகனைப்போல் ஒரு உருவம் படைத்து அதைக் கொண்டுவந்து சீதையின்முன் நிறுத்தி இராவணனுக்கு இணங்கிப் போகுமாறு பேசச்சொல்கிறார்கள். அந்த மாயா சனகன் சீதையைப் பார்த்துப் பேசும்போது, தன்னால் தன் தந்தைக்கும் துன்பம் நேர்ந்ததே என்று சீதை கலங்குகிறாள். மாயா சனகன் சீதையை மகளே என அழைத்து இராவணனுடைய விருப்பம்போல் நடந்து கொள்ளுமாறு வேண்டுகிறான்; அவளும் தான் உற்ற துன்பங்கள் தீர்வதற்கு அதுவே வழி என்றும் கூறுகிறான். ஆனால் சீதையோ, “இப்படியா உன்மனம் மாறிப் பேச வேண்டும் ?” என்று கடிந்து கூறுகிறாள். அந்தச் சூழ்ச்சியும் சீதையிடம் பலிக்கவில்லை என்று கூறுவது ‘மாயாசனகப் படலம்.’

 

வாலி இறந்த பிறகு அவனுடைய மனைவி தாரையைச் சுக்கிரீவன் தன் மனைவியாகக் கொண்டான் என்பது வால்மீகி இராமாயணத்தில் உள்ள கதை. கம்பர் தம் நூலில் தாரையை உயர்ந்தவளாகப் படைத்து, சுக்கிரீவனையும் குற்றமில்லாதவனாகத் தீட்டினார். கணவனை இழந்தபின் தாரை மங்கல அணி துறந்து, மலர்புனைதல் முதலியன இல்லாமல், துயரமே வடிவாய் விதவை வாழ்வை நடத்துவதாகத் தமிழ் மகளிர் போற்றத் வகையில், கம்பர் காட்டி யுள்ளார்.

வால்மீகியின் இராமாயணத்தில் இரணியன் பற்றிய விளக்கம் இல்லை. கம்பர் அதை ஒரு தனிப் படலத்துள் எடுத்துரைக்கின்றார். கம்பராமாயணத்துள் இரணியப் படலம் மிகச் சிறந்த ஒரு பகுதியாகப் போற்றப் படுகிறது.

திருமணத்துக்கு முன்பு சீதையும் இராமனும் ஒருவரை ஒருவர் கண்டு கொண்டதாக வால்மீகி கூறவில்லை. கம்பர் அவர்களின் திருமணத்தைக் காதல் மணமாக அமைத்துக் காட்டியுள்ளார். மிதிலை நகரத் தெருவழியே   விசுவாமித்ர முனிவரோடு இராமன் நடந்து சென்றபோது கன்னிமாடத்தில் நின்றிருந்த சீதை அவனைக் கண்டாள் என்றும், இராமனும் அவளைக் கண்டான் என்றும் கூறி, அவர்களின் நெஞ்சில் அப்போது முதல் காதல் வளர்ந்து வருவதாக விளக்கியுள்ளார். இவாறு வால்மீகியின் நூலில் இல்லாமல் தாம் படைத்த நிகழ்ச்சியை மறுபடியும் கம்பர் இராமனின் வாயிலாகவே கூறவைத்து வலியுறுத்தியிருக்கிறார். சீதையைத் தேடி வருமாறு அனுமனை அனுப்பும்போது இராமன் அந்த நிகழ்ச்சியை எடுத்துரைத்து, “உன்னை என் தூதன் என்று சீதை நம்புவதற்காக இந்தச் செய்தியை நினைவூட்டுக” என்கிறான்.

பஞ்சவடியில் இருந்த சீதையை இராவணன் கடந்து சென்றதை வால்மீகி சொன்ன முறை வேறு; கம்பர் சொன்ன முறை வேறு. இராவணன் சீதையைக் கைகளால் பற்றித் தூக்கிச் சென்றதாக வால்மீகர் எழுதியுள்ளார். சீதையின் உயர்வுக்கு ஓர் இழுக்குப்போல் அது தோன்றிய காரணத்தால், தமிழ் மக்களின் மனத்தில் சீதைக்கு உயர்ந்த இடம் வாய்க்காமல் போகுமே என்று அஞ்சினார் கம்பர். அதனால் பஞ்சவடியில் பர்ணசாலையில் இருந்த சீதையை அந்தக் குடிசை தரையோடு வருமாறு பெயர்த்து எடுத்துச் சென்று இலங்கையில் அசோகவனத்தில் சிறைவத்தான் என்றும், அவளைத் தொடவில்லை என்றும் கம்பர் கூறியுள்ளார். இவ்வாறு தாம் படைத்த புதுமையைத் திரும்ப திரும்ப மற்றவர்கள் வாயிலாக வலியுறுத்தியிருக்கிறார். கழுகரசன் சடாயு இராவணனைத் தடுத்து அவனுடைய வாளால் விழுந்து கிடந்து, மாய்வதற்கு முன் இராமனைப் பார்த்துக் கூறும் செய்தியில் சீதையைப் பர்ணசாலையோடு தூக்கிச் சென்றதாக உரைத்துள்ளான்.  மறுபடியும் மற்றோரிடத்தில், அசோகவனத்தில்  அனுமனைக் கண்டபோது சீதை அந்தப் பர்ணசாலை அங்கே இருப்பதைச் சுட்டிக்காட்டுவதாகக் கூறியிருக்கிறார். அனுமன் திரும்பிவந்து இராமனிடம் செய்தி சொல்லும்போது, “ஐயா!, உன் தம்பி தன் கையால் கட்டிய அந்தப் பர்ணசாலையில் சீதை இருக்கக் கண்டேன் “ என்று கூறுவதாக எழுதியுள்ளார்.

இவ்வாறு கம்பரின் படைப்பு முக்கியமான சில இடங்களில் வேறுபட்டுச் செல்கிறது. வேறுபடும் இடங்கள் எல்லாம் கதைச் சுவையும் பண்பாட்டுச் சிறப்பும் மிகுந்து விளங்குகின்றன.

#கற்பனை_வளம்

வால்மீகர் சொல்லாதவற்றை விளக்கி அழகுபடுத்துவதிலும் கம்பருக்குச் சிறப்பு உண்டு. வால்மீகர் சொன்னவற்றையே புதிய அழகோடு விளக்கிக் கூறுவதிலும் கம்பருக்குச் சிறப்பு உண்டு. இயற்கைக் காட்சிகளை எடுத்துரைக்கும் வருணனைப் பகுதிகளிலும் கம்பரின் தனித்திறமை விளங்குகிறது.

மருத நிலத்தை (வயல் சார்ந்த நிலத்தை) வருணிக்கும் இடத்தில், ஓர் அரசன் அல்லது அரசி கலைமண்டபத்தில் வீற்றிருப்பதுபோல் மருதம் கலையின் சூழலில் வீற்றிருப்பதாகக் கூறுகிறார்.     குளிர்ந்த சோலையில் மயில்கள் தோகைவிரித்து நடனம் ஆடுகின்றன. தாமரைகள் விளக்குகள் ஏந்துவனபோல் செந்நிற அரும்புகளையும் மலர்களையும் ஏந்துகின்றன; வானத்து முகில்கள் முழவுபோல் ஒலிக்கின்றன;  குவளைமலர்கள் மலர்ந்துள்ள காட்சி, நாட்டியத்தைக் காணவந்தோரின் கண்கள் நோக்குதல்போல் உள்ளது; பொய்கைகளின் அலைகள் நாட்டிய அரங்கின் திரைகள்போல் உள்ளன; நாட்டியத்துக்கு ஏற்ற பாடல்களைப் பாடுவனபோல் வண்டுகள் ஒலிக்கின்றன; இத்தகைய கலையரங்கிலே மருதம் என்னும் அரசி வீற்றிருந்தாள் என்கிறார்.

கோசல நாட்டு வளமான வாழ்வை வருணிக்கும் இடத்தில், கம்பர் ஒப்பற்ற கற்பனையில் ஈடுபடுகிறார். பெண்கள் எல்லோரும் அழகு வடிவங்களாக விளங்குகிறார்களாம். அவர்கள் பொருட்செல்வம், கல்விச்செல்வம் இரண்டும் நிரம்பியவர்களாம். அதனால் கோசல நாட்டில், துன்புற்று வந்தவர்களுக்குக் கொடுத்து உதவுவதும் நாள்தோறும் விருந்தினரை உபசரிப்பதும் தவிர, வேறு நிகழ்ச்சிகள் இல்லையாம். மக்களின் வாழ்வில் குற்றங்கள் இல்லாமையால், எமபயம் இல்லை. மக்களின் மனம் செம்மையாக இருப்பதால் சினம் கொண்டு விதிக்கும் தண்டனை இல்லை. நல்ல அறம் தவிர, வேறு ஒரு தீமையும் இல்லாமையால் உயர்வு உண்டே தவிர வீழ்ச்சி அல்லது கேடு இல்லை. மக்களிடையே பொருள்களைக் கவர்ந்து செல்லும் கள்வர் இல்லாமையால், பொருள்களுக்குக் காவல் இல்லை. கொடுத்தால் பெற்றுக் கொள்ள வறியவர் இல்லாமையால், கொடுக்கும் கொடையாளர்களுக்கு நாட்டில் இடமில்லை. கல்லாதவர்கள் இல்லாதபடியால், கற்று வல்லவர்கள் என்று யாரையும் சிறப்பித்துக் கூற இடம் இல்லை; எல்லா மக்களும், எல்லா வகைச் செல்வமும் பெற்று விளங்குவதால், செல்வம் இல்லாதவர்கள் இல்லை; செல்வம் உடையவர்களும் இல்லை. நாட்டில் வறுமை இல்லாத காரணத்தால், வண்மை (வள்ளல் தன்மை) என்பதற்கு இடம் இல்லாமல் போயிற்று. பகைவர் என்று யாரும் இல்லாமையால், எதிர்த்துத் தாக்கும் வலிமையும் இல்லாமற் போயிற்று. யாரும் பொய் பேசாமையால், உண்மை என்பது சிறப்பாக விளங்கவில்லை. பலவற்றைக் கேட்டு அறியும் அறிவு எல்லோரிடமும் ஓங்கியிருப்பதால், அறிவின் சிறப்புக்கும் தனியிடம் இல்லை.

#வண்மை_இல்லைஓர்_வறுமை_இன்மையால்

#திண்மை_இல்லைநேர்_செறுநர்_இன்மையால்

#உண்மை_இல்லைபொய்_உரைஇ_லாமையால்

#ஒண்மை_இல்லைபல்_கேள்வி_ஓங்கலால்

 

இது கோசல நாட்டுச் சிறப்பைக் கூறும் வருணனையாக இல்லை. பொதுவாக நாட்டின்  எதிர்காலத்தைப்பற்றிய பல நூற்றாண்டுகளுக்குமுன் ஒரு பெரும்புலவர் கண்ட ஒப்பற்ற  கற்பனைக் காட்சியாக  உள்ளது. ஒரு நல்ல நாடு இப்படி இருத்தல் வேண்டும் என்று அரசியல் ஞானி ஒருவர் வகுத்த நல்ல இலக்கணமாகவும் உள்ளது.

#சுவைபட_விளக்குதல்

கதைப்போக்கில் நிகழ்ச்சிகளை விளக்குவதிலும் கம்பர் இணையற்றவராய் விளங்குகிறார். அனுமன் சீதையைக் கண்டபின் கிஷ்கிந்தைக்குத் திரும்பிவந்து இராமனிடம் செய்தி கூறுகிறான். “இலங்கையில் கணவனைப் பிரிந்து தவம் புரியும் ஒரு நங்கையை மட்டும் காணவில்லை, ஐயா ! நல்ல குடிப்பிறப்பு என்ற ஒன்று, பொறுமை என்ற பண்பு ஒன்று, கற்பு என்ற பெயருடையது ஒன்று அங்கு மகிழ்ந்து நடம் புரிவதைக் கண்டேன்” என்று தன் ஆர்வமும் மகிழ்ச்சியும் சீதையின் உயர்வும், தூய்மையும் ஒருங்கே புலப்படும் வகையில் இராமனிடம் எடுத்துரைக்கிறான்.

போர் வந்தது. கும்பகருணன் உறங்குகிறான். அவனை எழுப்பிச் செய்தி அறிவித்து அழைத்து வருமாறு இராவணன் ஆட்களை அனுப்புகிறான். ஆட்கள் சென்று எழுப்புகிறார்கள். எழுந்த கும்பகருணனிடம் செய்தியை அறிவிக்கிறார்கள். கும்பகருணன் திகைப்படைந்து, “என்ன ! போர் ஏற்பட்டு விட்டதா ? கற்புக்கரசியாகிய சானகியின் துயரம் இன்னும் தீரவில்லையா ? மண்ணுலகும் விண்ணுலகமும் பரந்திருந்த நம் குலத்தின் புகழ் போனதோ ? அழிவுக்காலம் வந்துவிட்டதோ ?” என்கிறான்.

“குற்றம் இல்லாத பிறனுடைய மனைவியைக் கொண்டுவந்து சிறையில் அடைக்கிறோம்; பிறகு உயர்ந்த புகழை விரும்புகிறோம்; மானத்தைப் பற்றிப் பெரிதாகப் பேசுகிறோம்; இடையே காமத்தைப் போற்றுகிறோம்; ஆனால் மனிதரைக் கண்டு கூசுகிறோம் ! நம்முடைய வெற்றி எவ்வளவு அழகாக இருக்கிறது !” என்று வெறுத்துக் கூறுகிறான்.

இவ்வாறு கும்பகருணன் தயங்குவதையும் தனக்கே அறிவுரை கூறுவதையும் இராவணன் எதிர்பார்க்கவில்லை. தன் தம்பியரில் ஒருவன் பகைவரிடம் போய்ச்சரண் அடைய, இன்னொருவன் இப்படிப் பேசுகிறானே என்று இராவணனுடைய மனம் வருந்தியது. ஆயினும் அவனுடைய இரும்பு  நெஞ்சத்தின் உரம் தளரவில்லை. “எனக்கு முன்னே போர் செய்து இறந்தவர்கள் எல்லோரும் இந்தப் பகையை முடிப்பார்கள் என்று நம்பி நான் இதில் இறங்கவில்லை. எனக்குப் பின் இருக்கப் போகின்றவர்கள் எல்லாரும் போரில் வென்று திரும்புவார்கள் என்ற நம்பிக்கையாலும் இந்தப் போரை ஏற்றுக் கொள்ளவில்லை. தம்பியாகிய நீ அவர்களைப் போரில் வென்று எனக்கு வெற்றி பெற்றுத் தருவாய் என்று உணர்ந்து நான் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. என்னுடைய வலிமையை நோக்கி இவர்களின் பெரும்பகையைத் தேடிக் கொண்டிருக்கிறேன்” என்று சிறிதும் கலங்காமல் எடுத்துச் சொல்லித் தன் உறுதியையும் அஞ்சாமையையும் புலப்படுத்துகிறான்.

போர்க்களத்தில் இராமனுடைய அம்பால் முடியிழந்து அவமானப் பட்டுத் திரும்பும் நிலையில் இராவணனுடைய மனநிலையைக் கம்பர் ஒரு பாட்டில் விளக்குகிறார். “வானுலகம் சிரிக்குமே ! மண்ணுலகம் சிரிக்குமே ! நான் எள்ளி நகையாடிய பகைவர் எல்லாரும் இப்போது என்னைப் பார்த்து நகைப்பார்களே “ என்று இராவணன் நாணவில்லையாம். சீதை இதைக் கேட்டு நகைப்பாளே என்றுதான் இராவணன் நாணம் அடைந்து வாடுகிறானாம்.  அந்நிலையில், அவன் போர்க்களத்தை விட்டு ஊர்க்குள் செல்லும் காட்சியையும் கம்பர் மிக நயமாகக் குறிப்பிடுகிறார். தன் முடியை மட்டும் அல்லாமல் வீரத்தையும் போர்க்களத்தில் போட்டுவிட்டு வெறுங்கையோடு இலங்கைக்குள் புகுந்தான் என்கிறார்.

அவன் இங்கும் அங்கும் திசைகளைத் திரும்பிப் பார்க்கவில்லையாம். வளமான நகரத்தையும் கண்ணெடுத்துப் பார்க்கவில்லையாம். தன்னிடம் அன்புள்ளவர்கள் நெருங்கிவருவதையும் பார்க்கவில்லையாம். கடல்போன்ற தன் சேனையையும் பார்க்கவில்லையாம். அவனுடைய தேவிமார் அவனைத் தனித் தனியே நோக்கிக் கொண்டிருக்க, அவன் அவர்களில் ஒருவரையும் நோக்காமல், பூமி என்ற ஒரு பெண்ணையே நோக்கியவாறு சென்றான் என்கிறார் கம்பர். அவன் தன் வீரம் குலைந்த காரணத்தால், மானக்கேடு உணர்ந்து நாணம் அடைந்து யாரையும் நோக்காமல், நிலத்தைப் பார்த்தவாறே தலைகுனிந்து சென்றான் என்பதைக் கம்பர் இவ்வாறு உரைக்கிறார்.

கம்பரின் விளக்கங்கள் சிறந்த சொல்லோவியங்களாக ஒளிர்கின்றன. உரையாடல்களும் காட்சிகளை அமைக்கும் திறமும் நாடகச்சுவை நிறைந்தனவாக உள்ளன. உவமைகள் புதுப்புது அழகு வாய்ந்தனவாக அமைந்துள்ளன. திருக்குறள் முதலான பழைய நூல்களின் சொற்களையும் கருத்துகளையும் அவர் கையாளும்போது, அவற்றிற்கு மெருகு ஏற்றி மேலும் விளக்கமுறச் செய்துள்ளார். கம்பருடைய தமிழ் நடை ஒப்பற்ற அழகு உடையது. தமிழ் மொழியின் திறம் முழுதும் புலப்பட அந்த மொழியைக் கையாண்டார் புலவர் கம்பர்.

#உணர்ச்சிக்கு_ஏற்ற_நடை

கதை மாந்தர்களின் உணர்ச்சிகளுக்கும் பண்புகளுக்கும் ஏற்றவாறு பாட்டுகளின் ஓசைகள் பல்வேறு வகையாக வேறுபடுதலை அவருடைய காவியம் முழுதும் காண்கிறோம். சூர்ப்பணகையின் ஒயிலான நடையையும் கவர்ச்சி தரும் மயக்கத்தையும் விளக்கும் பாட்டு இதோ:-

#பஞ்சியொளிர்_விஞ்சுகுளிர்_பல்லவம்_அனுங்கச்

#செஞ்செவிய_கஞ்சநமிர்_சீறடியள்_ஆகி

#அஞ்சொலின்_மஞ்ஞையென_அன்னமென_மின்னும்

#வஞ்சியென_நஞ்சமென_வஞ்சமகள்_வந்தாள்

இராவணனுடைய மான உணர்ச்சியும் கடுஞ்சினமும் புலப்படுத்தும் பாடல்களுள் ஒன்று இதோ:

#சுட்டது_குரங்கெரி_சூறை_யாடிடக்

#கெட்டது_கொடிநகர்_கிளையும்_நண்பரும்

#பட்டனர்_பரிபவம்_பரந்த_தெங்கணும்

#இட்டதிவ்_வரியணை_இருந்த_தென்னுடல்

இவற்றில் உள்ள உணர்ச்சிகளைச் சொற்களின் பொருள் உணர்த்துவதற்கு முன்னமே அவற்றின் நடையும் ஓசையும் புலப்படுத்தி விடுகின்றன. இலக்குமணனின் ஆத்திரமும் கொதிப்பும், குகனுடைய ஆர்வமும் வீரமும், பரதனின் பக்தியும் பணிவும் முதலியவற்றைக் கம்பர் விளக்குமிடங்களில் தமிழ்ப்பாட்டுகள் சொற்களால் ஆக்கப் பட்டவைகளாகத் தோன்றவில்லை; உணர்ச்சிகளாலேயே படைக்கப்பட்ட கவிதைகளாகத் தோன்றுகின்றன.

தமிழ்மொழியின் வளத்தை முழுதுமாகப் பயன்படுத்தியவர் கம்பர் எனக் கூறலாம். தமிழ்ச் சொற்களின் ஓசைவளத்தையும் பொருள்வளத்தையும் நன்றாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவர் அவர். வீரம், வெகுளி, அழுகை முதலான பல சுவைகளுக்கும் ஏற்றவாறு தமிழ்ச் சொற்களின் ஓசையும் பொருளும் இணைந்து ஏவல் செய்வதை அவருடைய பாடல்களில் கண்டு இன்புறலாம்.

தாடகையின்மேல் இராமன் எறிந்த அம்பு அரக்கியின் வலிமையை உருவிக் கொண்டு சென்றதுமட்டும் அல்லாமல், அடுத்து இருந்த மலையையும் மரங்களையும் மண்ணையும் உருவிக்கொண்டு சென்றது என்கிறார். அந்தப் பாடலில் உரு, உருவி என்ற சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறுவதன் வாயிலாக, அம்பு பலவற்றை உருவிக்கொண்டு செல்லும் காட்சியைப் படம் பிடித்துக் காட்டி விடுகிறார். நெஞ்சம் நன்கு உணருமாறு செய்துவிடுகிறார்.

#அலைஉருவக்_கடல்உருவத்_தாண்டகைதன்_நீண்டுயர்ந்த

#நிலைஉருவப்_புயவலிமை_நீஉருவ_நோக்கையா;

#உலையுருவக்_கனல்உமிழ்கண்_தாடகைதன்_உரம்உருவி

#மலைஉருவி_மரம்உருவி_மண்உருவிற்று_ஒருவாளி

இராவணன் போர்க்களத்தில் விழுந்து மாண்டு கிடக்கும் காட்சியைக் கூறும் இடத்திலும் இவ்வாறு ‘அடங்க’என்ற ஒரு சொல்லைத் திரும்பத் திரும்பக் கூறி, அதன் ஒலியால் இராவணனது வீரம் முதலிய எல்லாம் அடங்கிய காட்சியை நெஞ்சில் பதியவைக்கிறார்.

#வெம்மடங்கல்_வெகுண்டனைய_சினம்அடங்க_மனம்அடங்க_வினையும்_வீயத்

#தெம்மடங்கப்_பொருதடக்கைச்_செயல்_அடங்க_மயல்அடங்க_ஆற்றல்_தேயத்

#தம்அடங்கு_முனிவரையும்_தலை_அடங்க_நிலைஅடங்கச்_சாய்த்த நாளின்

#மும்மடங்கு_பொலிந்தனஅம்_முறைதுறந்தான்_உயிர்துறந்த_முகங்கள்_அம்மா

பொல்லாத சிங்கம் கோபம் கொண்டு எழுவது போன்ற இராவணனுடைய சினம் அடங்கியது; மனம் அடங்கியது; வினையும் அழிந்தது;  பகைவர்கள் அழிவதற்குக் காரணமான நீண்ட கைகளின் வீரச்செயல் அடங்கியது; அவனது காம மயக்கம் அடங்கியது; ஆற்றல் தேய்ந்தது; தம் புலன்கள் அடங்கிய முனிவர்களையும் தலைமை அடங்குமாறும் தவநிலைமை அடங்குமாறும் அடக்கிய அந்தக் காலத்தில் இராவணன் முகங்கள் பெற்றிருந்த பொலிவைவிட, இன்று அவன் உயிர் துறந்து வீழ்ந்து கிடக்கும்போது அந்த முகங்கள் மூன்று மடங்கு பொலிவு பெற்றுவிட்டன என்கிறார். அந்த இராவணனுடைய வீரமும் சினமும் செயலும் முதலான எல்லாம் அடங்கிய காட்சியைக் கண்டு கம்பருடைய உள்ளமே உணர்ச்சி வயப் பட்டதனால், இவ்வாறு ஒரு சொல்லே திரும்பத் திரும்ப அமைந்து உள்ளத்தைத் தொடுகிறது எனலாம்.

இராவணன் எல்லோரையும் அடங்கச் செய்தவன்; புலனடங்குதல் பெற்ற முனிவர்களும் தலைமை இழந்து அடங்கச் செய்தவன்; அப்படிப்பட்ட இராவணனுடைய வீரமும் சினமும் செயலும் அடங்கிய தன்மையைத் திரும்பத் திரும்பக் காட்டி, உயிரற்ற அவனுடைய முகங்களில் மட்டும் பொலிவு மிகுந்துவிட்டதாக்க் காட்டுகிறார். வீரமும் சினமும் செயலும் எல்லாம் தவறாகப் பயன்பட்டமையின், அவனுடைய முகங்கள் உரிய அளவிற்குப் பொலிவு பெற முடியாமல் இருந்தன; இப்போது அக்குற்றங்கள் எல்லாம் நீங்கினமையால், மாசு நீங்கிய மணிபோல் மூன்று மடங்கு பொலிவுற்றன என்கிறார். பாடல் திரும்பத் திரும்பப் படித்துணருமாறு ஓசைச் சிறப்பும் உணர்ச்சிப் பெருக்கும் பொருள் நுட்பமும் பெற்றிருத்தல் காணலாம்.

இவ்வாறு கம்பராமாயணம் முழுதும் ஒவ்வொரு பகுதியும் சொல் நயமும் பொருள் நயமும் கற்பனை வளமும் நிரம்பிச் சுவைமிகுந்த காப்பியமாய்த் திகழ்கிறது.

“இந்த உலகத்துச் செல்வங்கள் எல்லாவற்றையும் பெற்று அரசாள்வதாக இருந்தாலும், தேவர் உலகத்தில் கற்பகச் சோலையின் நிழலில் இன்புறுவதாக இருந்தாலும், இராமனுடைய கதையில், கம்பர் இயற்றிய இராமாயணக் கவிதை போல் கற்றவர்களுக்கு இதயம் மகிழ்ச்சியுறாது” என்று கம்பரைப் போற்றிப் பாடிய பழைய பாட்டும் இந்தச் சிறப்பை விளக்குகிறது.

========================================================

சாகித்திய அகாதெமி வெளியீடான மூதறிஞர் மு.வ. அவர்களுடைய “தமிழ் இலக்கிய வரலாறு”

===========================================================

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.