உங்கள் இதயத்தை வருடிக் கொடுங்களேன் !

உங்கள் இதயத்தை வருடிக் கொடுங்களேன் !

நம் நாட்டில் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை பெரு நகரங்களில் வேகமாக வளர்ந்து  கொண்டிருக்கிறது. சிறு நகரங்களில் அவ்வளவு வேகம் இல்லை. ஆனாலும் பல நகரங்களில், புற நகர்ப்பகுதியில் (extensions) பார்த்தால், சொந்த வீடுகளே, தாங்கள் வாழும் முதியோர் இல்லமாய் மாறிவிட்டிருக்கின்றன. இது ஒரு துயரமான “முன்னேற்றம்.”

காற்றுக்கும், நீருக்கும் அடுத்தபடியாக உலகிலேயே மிக முக்கியமான ஒன்று உண்டென்றால் அது அன்புதான்.  மனிதர் வாழ்விலும் அதுவே மிக முக்கியமான தேவை. இதை நாம் ஒருவரிடத்தில் ஒருவர் பரிமாறிக் கொள்ளுவதும் மிக முக்கியம். ஆனால் இது மிகவும் குறைந்து கொண்டே வருகிறது. இது ஒரு முக்கியமான காரணம் பெற்றோரிடத்தில் பிள்ளைகள் வைக்கும் அன்பு குறைவதுதான். அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. “திரவியம் தேடு”வதற்காக அவர்கள் ஊர் கடந்து, மாநிலம் கடந்து, நாடு கடந்து செல்லவேண்டி உள்ளது. பிள்ளைகளுக்காகத்தான் ஒரு அம்மா வலியையும் பிணியையும் தாங்குகிறாள். அவளுக்குள்ள வலியை எந்தப் பிள்ளையும் பெண்ணும் அவர்களுக்காக இவர்கள் பட முடியாது. அவர்களுக்கு வளர்ந்த பிள்ளைகள் கொடுக்க வேண்டியது மலர்ந்த முகத்துடன் பேசுவதும், அன்புடன் அரவணைப்பதும்தான். இது எவ்வளவு விலை கொடுத்தாலும், பிள்ளைகளைத் தவிர வேறு யாரும் கொடுக்க முடியாது.

நான் தஞ்சையிலுள்ள வங்கிக்கிளையில் 2013 வரை 2 ½ வருடம் பணிபுரிந்தபோது தஞ்சையில் ஏற்பட்ட சில மாற்றங்களும் அங்கே நடந்த சில நிகழ்வுகளும் என் மனத்தில் பதிந்தன.

  1. #சில_புறநகர்க்_குடியிருப்புக்களில்_முதியவர்கள்_மட்டுமே_வாழ்கின்றனர். – இந்த மாற்றம் என்னை உலுக்கியது. நானும் இளமையில் இப்பகுதிகளில் நண்பர்கள் வீடுகளுக்கு அடிக்கடி சென்று வருவேன். அப்போது எல்லாம் பூத்துக் குலுங்கும் செடிகளும், குழந்தைகளின் ஆரவாரமும், மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளும் அவ்வீடுகளில் இருக்கும். அக்காலத்தில் என் நண்பர்களின் மூத்த சகோதரர்கள் அங்கே புதிதாய் வீடுகட்டிக் குடியேறியவர்கள். அவர்களின் எந்தக் குழந்தையும் அவர்களுடன் இல்லை. (எத்தனையோ குழந்தைகள் #அவர்களுடன் இல்லை என்பதைத் தவிர #மனதளவில்கூட #அவர்களிடத்தில் இல்லை.) அன்பு நிலவும் குடும்பமென்றால், பெற்றவர்கள் பிள்ளைகள் இருக்கும் ஊரில் போய் பிள்ளையுடனோ அல்லது அருகாமையிலேயோ இருப்பர். ஆனால் #உண்மையான_அன்பு_ எனும்_ஒன்று உணரக் கிடைக்காததால் இவ்வாறு உள்ளது. இதில் குற்றம் சில பெரியவர்களிடமும் இருக்கிறது. மண்ணாலும் கல்லாலும் கட்டிய வீட்டுக்காகவும், தங்களின் அகந்தைக்காகவும் (Ego) அவ்விடத்தை விட்டு நீங்காதவர்களாய் இருக்கிறார்கள். எனக்குத் தோன்றியது என்ன என்றால், கட்டிடங்களுக்கு ஒரு வயது நிர்ணயித்திருப்பது போல் மனிதனுக்கும் வயது நிர்ணயம் ஆகியுள்ளது. #அன்புக்கும்_வயது_நிர்ணயிப்பதில் எவ்வாறு வளர்ந்த குழந்தைகளுக்கு உரிமையிருக்கிறது என்ற பதிலில்லாத கேள்வியே. கல்விகற்றவர் என்பதன் பொருள்தான் என்ன?
  1. #அன்பு_வெளியில்_குறைவாகக்_கிடைக்கிறது. கிறிஸ்தவ பாதிரியார்கள் போல உடலை முழுதாக மூடும் வெள்ளையுடை எப்போதும் அணியும், நல்ல உள்ளம் படைத்த, ஏழையாகவே வாழ்ந்த 40 வயதுக்குள் மறைந்துவிட்ட ஒரு இந்துமத அன்பாளர். அவரைப் பற்றி, என் வங்கி வாடிக்கையாளர் ஒருவர் கூறியதிலிருந்து நான் அறிந்தேன். அவர் #வருடக்கணக்கில்_தினமும், காலையிலும், மாலையிலும், தஞ்சைப் பெரியகோவில் அமைந்துள்ள சாலையோரங்களில் 50 முதல் 70 பேர்களுக்குக் காலையில் ஒரு பாக்கெட் வெண்பொங்கலும், 5 இட்லிகளும் இலவசமாகவே வழங்கிவந்தார். இதற்கு இஷ்டப் பட்டவர்களிடம் இருந்து 135 ரூபாய் மட்டும் பணம் வாங்குவார். ஒரு நாளில் ஒருவர் அல்லது இருவரிடம்தான் வாங்குவார். இதேபோல் புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் வாசலிலும் உணவு விநியோகம் நடந்துவந்தது. தாயுடன் வாழ்ந்துவந்த அவருக்கு சொந்த இடமோ வீடோ கிடையாது. தானும் தாயும் இருக்கும் வீட்டில், 5 வயது முதல் 16 வயதுவரையுள்ள ஏழைப்பெற்றோரின் குழந்தைகள், அனாதைக் குழந்தைகள் 40 பேருக்கு இடம்தந்து இருந்தார். ஒருமுறை நான் அவர் வீட்டுக்குச் சென்றுள்ளேன். அப்போதுதான் உணவருந்திக் கொண்டிருந்த அக்குழந்தைகளைப் பார்த்தேன். அன்பாளரின் தாயார்தான் தினமும் சமைத்து உணவளித்துவந்தார். சில தினங்களில், குழந்தைகளுக்கு மட்டும் உணவு கிடைக்குமாம். தாயும் தனயனும் மறு நாள்தான் சாப்பிடுவார்களாம். பிறரிடம் தானமாகக் கிடைத்த பணத்தைக் கொண்டு, கோவில் வாசலில் கொண்டு வழங்கவும் அவர் தாய்தான் சமைப்பார்களாம். ஆனால் அதில் இருந்து ஒரு நாள் கூட இவர்கள் உண்ணவில்லையாம். ஒரு சமயம், இருவரும் இரண்டு நாள் பட்டினி. ஆனால் குழந்தைகளுக்கு உணவும், கோவில்வாசலில் அளிக்கும் உணவும் நிறுத்தப் படவில்லை, அதிலிருந்து இவர்களுக்காக எடுக்கப் படவுமில்லை. நான் சென்ற நாளில் அக்குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்தேன். பிள்ளைகள் பொய்யில்லா மகிழ்ச்சியுடனேயே காணப்பட்டனர். நன்றாகவும் படித்து வந்தனர். தையலும் எம்ப்ராய்டரியும் கற்றுக் கொண்ட ஒரு பெண்ணும், வேறுவேலை கற்றுக்கொண்ட ஒரு பையனும் மாதாமாதம் தவறாமல் வந்து தாங்கள் சம்பாதிப்பதை முழுதாகக் கொடுத்து வணங்கிவிட்டு, அவர்களின் செலவுக்கு மட்டும் கேட்டுவாங்கிக் கொள்வார்களாம்.

இதைத் தவிர, செங்கிப்பட்டியில் உள்ள தொழு நோய் காப்பகத்தில், வருடாவருடம் தீபாவளியன்றும் மேலும் வருடத்தில் இரண்டு முறையும் சென்று எல்லோருக்கும் உணவும், புதுத் துணியும், இனிப்பும், வழங்கிவந்தார். ஒருவருடம் எங்கள் கிளையில் உள்ள சில ஊழியர்களும், நானும் ஒரு கணிசமான தொகையை வழங்கினோம்.

வங்கிக்கிளைகளில் அரசு அலுவலகங்கள் தங்கள் பணத்தை நடைமுறைக்கணக்கில் வைத்துக் காசோலை மூலம் அரசுப் பணிகளுக்கு அளிப்பார்கள். சிறிது நாட்களே இருப்பு இருந்தாலும், வங்கிக்கு இது ஒரு முக்கியமான தொகையாக இருக்கும். எனவே நாங்கள் மாவட்ட அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருப்போம். ஒரு புதிய கலெக்டர் வந்து மாவட்டத்தில் பணியேற்றபின், வங்கிமேலாளர் என்ற முறையில் அவரைப்பார்ப்பதற்குச் சென்றேன்.  மதிப்புள்ள பூச்செண்டும், பழங்களும், எங்கள் வங்கியின் டைரியும் தந்து மரியாதை நிமித்தம் சந்திப்பதற்காகச் சென்றிருந்தேன். அவர் பதவியில் அமர்ந்து இரண்டு நாள்தான் ஆயிருந்தது. நான் சென்றது ஜனவரி மூன்றாம் தேதி.  ஒரு மணி நேரத்துக்குப் பின், அனுமதியின் பேரில்  அவர் அறையில் சென்று பார்த்து மிகுந்த மரியாதையுடன் அவரை வணங்கி, பேச யத்தனித்த போது, அவர் மிகவும் கடும் குரலில் “நீங்கள் ஏன் என்னை நான் பதவியேற்ற நாளில் வந்து பார்க்கவில்லை ? நான் என்ன உங்கள் வங்கியின் டைரி பெறுவதற்காகக்  காத்துக் கிடக்கிறேனா” என்று முழங்கிக் கோபித்து, நான் கொண்டுசென்றதை வாங்க மறுத்துவிட்டார். தனிப்பட்ட மனிதன் என்ற நிலையில் நான் யாரிடத்திலும், எவ்விடத்திலும், கையூட்டு பெறாமல், வாடிக்கையாளர் எல்லோரிடமுமே அன்பாகப் பழகுவேன் என்ற காரணத்தால் என் பணியில் எனக்கு எப்போதும் மனத்தில் திருப்தி இருந்தது. எங்கள் வங்கியில் என் கிளையானது பல அரசு வேலைகளில் ஈடுபாடு கொண்டு வந்ததால்  நல்ல பெயருண்டு. புது கலெக்டர் நடத்தியவிதம்  எனக்கு அதிர்ச்சியும் அவமானமும் அளித்தது. உடனே நன்றி சொல்லி வெளியில் வந்து, என்னுடன் வந்த என் அலுவலக நண்பருடன் சென்று, என் செலவில் 3 கிலோ இனிப்பும் காரமும் வாங்கி, இந்த பூச்செண்டு, பழங்களுடன், இன்னும் 20 பழங்கள் வாங்கி, அன்பாளர் வீட்டுக்குச் சென்று அப்பிள்ளைகளைக் கூப்பிட்டு, அவர்களுக்கு இனிப்பும், பழங்களும் கொடுத்து மகிழ்ந்தேன். அவர்கள் மிக்க மகிழ்ச்சியடைந்தனர். எனக்கு அப்போதுதான் மனம் நிம்மதியாயிற்று. பூச்செண்டு, பழங்கள் உள்பட எல்லாச் செலவையும் என் செலவில்தான் செய்தேன். இத்தகைய பிறர் நலம் பற்றியே யோசித்த அந்த அன்பாளர் என் மனதை முழுவதுமாக நிறைத்தவர்.

  1. #காப்பகங்கள்:

தஞ்சையிலும் தஞ்சைக்கடுத்த ஊரிலும் சில முதியோர் காப்பகங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று அரசு நடத்துவது. அதில் இருந்த ஒரு ஓய்வூதியம் பெறுபவர் எங்கள் வங்கியில் கணக்கு வைத்திருந்தார். முதலில் அறிமுகமாகும் போது, அவர் தன் பையன் மன்னார்குடியில் வேலை செய்வதாகவும், தன் குடும்பத்துடன் இருப்பதாகவும், தான்மட்டும் முதியோர் இல்லத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். இப்படி முதிர்ந்த வயதில், பிள்ளைகள் பெற்றிருந்தும் முதியோர் இல்லத்தில் வாழ நேர்ந்ததே என்று நான் துயருற்றேன்.  கனிவுடன் விரைவினில் அவரின் வேலையை முடித்து அனுப்பினேன். மூண்று மாதம் கழித்து அவர் வங்கிக்கணக்கின் சான்று பெறுவதற்காக என்னைச் சந்தித்தார். அது அவரின் மனைவியின் கணக்கு. கேட்டதில் அவர் மனைவி பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வருவதாகவும், அவர் பணி ஓய்வு பேர இன்னும் ஒருவருடம் இருப்பதாகவும், அவர் அலுவலகத்தில் கேட்டதாகவும் கூறி,  சான்றைப் பெற்றார். என் அறையில்  நான் காபி, தேனீர் அருந்துகையில் அங்கு அமர்ந்திருக்கும் அனைவருக்கும் அது வழங்கப்படும். தேனீரைக் குடித்து மகிழ்ந்த அவர் சொன்னது: “சார், மிக்க நன்றி சார். தினமும் ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மேல் வந்துசெல்லும் இப்பெரிய கிளையில், சீஃப் மேனேஜர் தாங்கள் தங்கள் அறையில் என்னை அமர்த்தித் தேனீரும் கொடுத்தும் உபசரிப்பு செய்கிறீர்களே.  இதுவரை என் கணக்கில் அதிகப் பணம் இல்லை. ஆனாலும் என் பையனின் வீடு ஒன்று நான் கட்டிக் கொண்டிருக்கிறேன். அதனால் ஒரு ஐந்து லட்சம் ரூபாய் என்னிடம் இருக்கிறது. அதை அடுத்த மாதம் கணக்கில் ஒரு ஆறுமாதம் டெபாசிட் செய்கிறேன். என் பையனும் சொந்த வீட்டில் தான் இருக்கிறான். எனக்கும் ஒரு பெரிய சொந்த வீடு மன்னார்குடிக்கு அருகில் உள்ளது. என் மனைவியின் பணி ஓய்வுப்பணத்தைக் கொண்டு அவளுக்கு கொஞ்சம் நகையும், இன்னொரு வீடும் வாங்குவதாகவும் உள்ளோம். உங்களைப் பார்த்தால் மிக்க பண்பாளராய்த் தோன்றுகிறீர்கள். அந்த வீட்டின் கிரகப்பிரவேசத்துக்குத் தாங்கள் அவசியம் வந்து எங்களைக் கௌரவப் படுத்த வேண்டும்.” என்றார். அதிர்ச்சியடைந்த நான் அவர் எவ்வாறு முதியோர் இல்லத்தில் இருந்து கொண்டு இவ்வளவும் செய்கிறீர்கள் என்று கேட்க அவர் மேலும் கூறினார். “சார், இங்கு காப்பகத்தில் நாங்கள் கட்டுவது ஒரு சிறிய தொகையே . தஞ்சையில் வாடகைக்கு அவ்வளவு குறைந்த வாடகையில் இடம் கிடைக்காது. மேலும் எங்களுக்கு, அரசு நடத்தும் காப்பகம் என்பதால் உணவும் இலவசம். மேலும் இங்கும் ஒரு கட்டட வேலை நடைபெறுவதால், நான் மன்னார்குடி கிளம்ப இரவு 8 மணிக்கு மேல் ஆகும். எனவே தான் இக்காப்பகத்தில் நான் இருக்கிறேன்” என்றார். நானடைந்த அதிர்ச்சியிலிருந்து மீள எனக்கு ஒருவாரமாயிற்று. ஒன்று தெரிந்துகொண்டேன். சிலர் விருப்பப்பட்டு வசதிக்காக காப்பகங்களில் இருப்பார்கள் என்பதை. இந்த அறிவு எனக்கு என் 58 வயதில்தான் கிடைத்தது. அரசு நடத்தும் காப்பகங்கள் இப்படியும் உபயோகப் படுத்தப் படுவதற்கு அனுமதிக்கின்றன.

#நான்_பார்த்த_இன்னொரு_காப்பகம்: சென்னையில் நாங்கள் வசிக்குமிடத்துக்கு அருகில் ஒரு முதியோர் இல்லம் உள்ளது. நான் பணி ஓய்வு 2014ல் பெற்று, என் அறுபது வயது நிறை நாள் அன்று “அறுபதுக்கறுபது கல்யாணம்” செய்துகொள்ளாமல், ரூபாய் 20000/-க்கு காப்பகங்களில் உள்ளவர்களுக்கு உணவளிக்க முடிவுசெய்து, எங்களுக்குத் தெரிந்த, சாய்பாபா கோவிலில் தினமும் 20 பேருக்கு சொந்த செலவில் தானே சமைத்து வழங்கும் ஒரு பெண்மணி மூலம், அவரையே சமைக்கச் செய்து, வெளியில் உள்ள சில இல்லாதவர்களுக்கும், காப்பகத்தில் உள்ள பெரியோருக்கும் வழங்கினோம். அதுதான் நான் முதல்முறை அவ்வில்லத்துக்குச் சென்றது. நானும் என் மனைவியும், உணவை பாயசம், வடை, பழம், இனிப்புடன் நாங்களே தட்டுகளில் பரிமாறி ஒவ்வொரு முதியவருக்கும் அளித்து, சாப்பிட்டு முடியும்வரை நின்றிருந்து, பின் வணங்கினோம். அதில் இருந்த எல்லோரும் 70 வயதுக்கு மேலானவர்கள். நடக்க முடியாமலும், நிற்க முடியாமலும், படுக்க முடியாமலும் கூட சிலர் இருந்தனர். பல வயதானவர்கள் முழு நேரமும் கண்ணீருடன்தான் சாப்பிட்டனர். கையும் காலும் வற்றிய இவர்கள், உடல்கூறு அறிவியலில் கற்கும் சிறுபிள்ளைகளும் படங்கள் உதவியின்றி, எலும்புகளும் நரம்புகளும் ஆணுக்கும் பெண்ணுக்கும் எவ்வாறு அமைந்துள்ளன என்பதைத் திறமையாகக் கற்கலாம். யாராவது உண்மையான அன்பைத் தரமாட்டார்களா என்ற ஏக்கமும், சீக்கிரமே சாகவேண்டும் என்ற உறுதியும் அவர்கள் கண்களில் தெரிந்தது. எனக்கும் என் மனைவிக்கும் அன்று கண்ணீர் பெருக்கும்  நெகிழ்ச்சியான தருணங்கள் நிறைய ஏற்பட்டன.

பலரும் அவர்களுக்குத் தன் பெண்/பிள்ளை, மருமகன்/மருமகள் அன்புடன் உணவூட்டியதைப் போல இருந்தது என்றும், இதைத் தாம் சாகும்வரையில் மறக்கமுடியாது என்றும் ததும்பிக் கூறினார்கள்; கைகளில் எலும்பும் நரம்புகளுமே இருந்த ஒரு மூதாட்டி, என் கையைப் பிடித்துக் கட்டிலில் என்னை அமரவைத்து பெருமையாகத் தான் அக்காலத்தில் ஒரு புகழ்பெற்ற வீணை வித்வான் எனவும், நாடுமுழுதும் கச்சேரிகள் செய்திருப்பதாகவும், தன்பிள்ளையின் பெயரைச் சொல்லி அவர் தற்சமயம் சினிமாவில் மிகவும் பிரபலமாக இருப்பதையும் சொன்னார். இது போல சொன்னது 20 பேராவது இருக்கும். என் மனம் ஆயிரம் முள் தைத்த ஒரு கந்தலாயிற்று. பலரும் வெற்றிகரமான வாழ்க்கையே நடத்தி, பிள்ளைகளை நன்றாக வளர்த்து, படிப்பித்து, நல்ல நிலைமைக்குக் கொண்டுவந்தவர்களாக இருந்தனர். தள்ளாமை என்று ஒன்று வந்துவிட்டதும், வீடுகளில் வைத்துக்கொள்ள முடியாதவர்களாகி, காப்பகங்களில்தான் தஞ்சம் புகுகிறார்கள். காப்பகங்களும் தற்காலத்தில் வியாபார நோக்கில்தான் இங்கெல்லாம் இயங்குகின்றன. (தரங்கம்பாடியில் இருக்கும் ஒரு குழந்தைகள் காப்பகம் எனக்குப் பரிச்சயமானது. மிக நன்றாக அது நடத்தப் படுகிறது.  அதைப்பற்றி பின்னொரு பதிவில் எழுதுகிறேன்.) அன்பு என்பது மனித வாழ்வில் தொலைந்துதான் வருகிறது.

===========================================

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.