அன்பு தேவை வேற்றுமை மறைய!

அன்பு தேவை வேற்றுமை மறைய!

வேற்றுமையைக் கொண்டாட அன்பு தேவை.

நான் முதலில் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

மனிதரை நடத்துவதிலும், மரியாதை செய்வதிலும், அன்புடன் அரவணைப்பதிலும், பொருளாதார நிலையிலும், மனித நேயத்திலும், வேற்றுமைகளை ஒழிக்கும் முயற்சியில்  இச்சமுதாயம் (எனையும் சேர்த்து) கொண்டுள்ள பார்வையிலும், எடுக்கும் முயற்சிகளிலும் நான் கொண்டுள்ள பற்றினால் இந்த மன்னிப்புக்கோரல் தேவையாகிறது. நான் கொண்டாடும் வேற்றுமைகள் வேறுவகையானது.

கறுப்புக்கும் வெள்ளைக்கும் என்றுமே காதலுண்டு. முழுதும் கறுப்புமுள்ளவைகளையோ, முழுதும் வெளுப்புமாயுள்ளவைகளையோ ரசனைக்குப் பொருளாய் எடுத்துக் கொள்வதில்லை.

இயற்கையே வித்தியாசத்தினால்தான் அழகுபெறுகிறது. மலர்களில், மரங்களில், ரசனையில், புவியிலுள்ள நிலத்தில், வானில், இசையில், கலையில் உள்ள வேற்றுமைதான் உலகுக்கும் வாழ்வுக்கும் இன்பம் சேர்க்கிறது.

ஒத்த ரசனையும், ஒரே துறையில் நாட்டமும், ஒத்த குணங்களும், ஒத்த கல்வியும், ஒத்த அறிவுத் திறனும் உள்ள ஆணும் பெண்ணும் இணையும் வாழ்வில் சுவை குறைவு. உடல் நாட்டம் குறையத் தொடங்கியவுடன், அன்பு குறைந்து,  நாளடைவில் வாழ்வின் சுவை குறைகிறது. போட்டியெண்ணம் உருவாகி, பொறாமை வளர்ந்து, தனித்துவம் பெரிதாகி, ஒருவர் மற்றொருவரை விட உயர்ந்து தன் உயரத்தை நிலைக்க நாட்டம் கொண்டு, மகிழ்ச்சி அரிதாகி, இதன் விளைவாகப், பெற்றெடுத்த பிள்ளைமேல் வைக்கும் நேசமும் கலங்கிவிடுகிறது. இருவர் மனதும் அமைதியிழந்து உளத்திலும் பின்னர் உடலிலும் நோயைத் தோற்றுவிக்கிறது. இதனால்தான் பல காதல் மணங்கள் தோல்வியில் முடிகின்றன.

வேற்றுமையில் ஆரம்பித்த இளந்தம்பதியினர் வாழ்வில், போட்டி அவ்வளவு எளிதில் வருவதில்லை. அன்பினால் ஏற்படும் இணக்கம் ஒருவரையொருவர் பெருமையுடனும், ஆர்வத்துடனும் பார்க்கவைக்கின்றது. சிலபல வருடங்களில் இது ஒருவர் மற்றொருவர் சிந்தனையில் பழகிப்பழகி, அவர்கள் இருவரும் கொண்ட எல்லா ரசனைகளுமே இருவரிடமும் வளர ஆரம்பிக்கிறது. குழந்தைகள் பெறும் அன்பும் அரவணைப்பும், கணவன் மனைவி வித்தியாசத்தினால் மாசுபடுவதில்லை. ஒரு ஆரோக்கியமான குடும்பமாகவே திகழ்கிறார்கள். சில குடும்பங்களில் மட்டும், ஆண், பெண் இருவருமே பிடிவாதம் பிடித்த ரசனைக் காரர்கள் ஆக இருந்தால் மட்டும் அன்பு,  ஆரம்ப முதலே கெட்டுப்போய், வாழ்வே நசுங்கி விடுகிறது.

வேற்றுமைகளைத் தேடுவதிலும், வேற்றுமைகளில் சுகம் காண்பதும்தான் நம் மனித வாழ்க்கை. வெய்யிலில் உள்ளவன் நிழலை ரசிக்கிறான். குளிரிலேயே வாழ்பவனுக்கு கடும்வெய்யில் மிகச் சுகமானது. இரவு பத்துமணிக்கு வீட்டுக்குத் திரும்பும் மனிதன், இத்தண்டனை பெறாதவனைப் பார்த்து அவனிடம் பொறாமை கொள்கிறான். குழந்தையை அழவிட்டுவிட்டு அலுவலகம் செய்யும் பெண், எப்போதும் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கும் எதிர்வீட்டுப் பெண்ணிடம் பொறாமை கொண்கிறாள். இப்படியே இவர்கள் பொறாமை கொள்ளும் அப்பிறரும்  இவர்களைப் பார்த்துப் பொறாமை கொள்கிறார்கள்.

இயற்கை இப்படி வேற்றுமைகளையே படைத்து உலகை அழகாக்கி, வேற்றுமையை நேசியுங்கள் என்ற பாடத்தை நமக்குச் சொல்லித் தருகிறது. ஆனால் எல்லோரும் இதை உணராமல், கலங்கல் பார்வையுடைவர்களாக ஆகிறோம். எல்லாவற்றிலும் ஒற்றுமையைத் தேடி இணையும் சமுதாயம் விரைவில், குறுமதியுடன் இயக்கங்களாகி, வெறுப்பு உமிழும் பீரங்கிகளாகி, சமுதாயத்தில் பிரச்சினைகளை உருவாக்கி, வேற்றுமையை ரசிப்பது என்பது தான் சேர்ந்துள்ள குறுமதி குழுமத்திற்கு இழுக்கு எனும்  அச்சத்தைக் கொண்டு,  மேலும் இறுகி, இறுகி, வேற்றுமையாயுள்ள மற்றவர்களைத் தாக்குவதும், படுகொலை கூட அனுமதிக்கப் பட்ட விதியாகி, சில இயக்கங்களில் அதுவே ஒரே கொள்கையாகியும் விடுகிறது. வேற்றுமையை இருக்க விடாத இவ்வியக்கங்களினால் உலக முழுதும் நம் மனித சமுதாயமே அச்சத்துடன் தவித்துக் கொண்டுதானிருக்கிறது.

எப்போதுதான் நாகரிகம் அடைந்த நம் சமுதாயம் வேற்றுமைகளை ரசிக்க ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் மனித நேயம் உன்னத நிலையை நோக்கிப் பயணிக்கும். வேற்றுமைகளை ரசிக்கும் ஒரு இயக்கம் மிக அவசியத் தேவை ஊர் அளவிலும், நாடு அளவிலும், உலக அளவிலும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.