சிறந்த அழகும் மற்றதும்

சிறந்த அழகும் மற்றதும்

ஓர் ஓவியன் உலகிலேயே மிக அழகான பெண்ணைச் சித்திரம் வரைய ஆசைப்பட்டானாம். அந்தக் காலத்தில் உலகிலே மிக அழகி என்று பேசப்பட்ட ஒருத்தியைச் சந்தித்து அவளைப் படம் வரைந்திருக்கிறான். சில ஆண்டுகள் கழித்து உலகிலே மிக அசிங்கமான ஒருத்தியைப் படம் வரைய வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது அவனுக்கு. இது விசித்திர ஆசைதான். இதற்காக மிகமிக அசிங்கமான பெண்ணைத் தேடி அலைந்திருக்கிறான். அப்போது சிறையில் ஒரு பெண்ணைச் சந்தித்திருக்கிறான் அந்த ஓவியன். அவளையும் படமாக வரைந்து விட்டான்.

இந்த இரண்டு ஓவியங்களையும் ஒன்றாகப் பார்த்தபோது அந்த அசிங்கமான பெண் சொன்னாளாம், “இரண்டு ஓவியங்களிலும் இருப்பவள் நான்தான்.” என்று.

ஓவியனுக்கு ஆச்சரியம்! “நீயா அந்த அழகான பெண்? உன் அழகு எப்படி பறிபோயிற்று?”

அந்தப்பெண் விரக்தியாய்ச் சிரித்தபடி சொன்னாளாம். “என் ஒழுக்கங்கெட்ட நடவடிக்கைகள் பிடிக்காமல் அதுவும் என்னை விட்டுப் போயிருக்கும்.”

பழியும் அச்சமும் பாபமும் பகையும் தரும் உறவுகள் தேவையா?

அடுத்து வள்ளுவர் சொல்வதைப் பார்ப்போம்.

“அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலான்
பெண்மை நயவா தவன்”

அறத்தின் இயல்பொடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்கிறவன், பிறன் பெண்மையை விரும்ப மாட்டான் என்கிறார் வள்ளுவர். இக்குறளில் ‘பிறனியலான்’ என்று பெண்மையை அவர் சுட்டுவது கவனிக்க வேண்டிய விஷயம்.

நம் சமூக இயல்பும், மனித மன இயல்பும், அறத்தின் இயல்பும், ஒருத்தியை ஒருவனுக்கு இயற்கை படுத்தி விடுகிறது. அவ்வாறு இயல்பு படுத்தப்பட்டவன் இயற்கைக்கு விரோதமாகக் கவர்ந்து கொள்ள நினைக்கும் போது, பிரச்னைகள் பெரிதாகின்றன.

இயற்கைக்கு இடையூறு செய்தால் இயற்கை நமக்கு இடையூறு செய்யும். பிறனியல்பாகிவிட்ட ஒருத்தியை அடைய நினைப்பதிலும் அடைந்து சுகிப்பதிலும் இன்னல்கள் பெருகிவரும் என்பது அக்குறளில் காணப்படும் குறிப்பு.

இன்றும் பிறன்மனை விரும்புபவனை சமூகம் காறி உமிழ்வது கண்கூடு. ஏன் எவன் மனைவியுடனோ, எவனோ ஒருவன் உறவு கொள்வதில் ஊருக்கு என்ன கோபம்? நிச்சயம் கோபம் வரும். இது சமூகத்தின் ஆழ்மனம் சம்பந்தப்பட்ட விஷயம். தார்மிகத்தின் வர்ம நாடியில் கைவைக்கும் போதெல்லாம் சமூகம் கொதிக்கவே செய்யும்.

இந்த விஷயம் புரியாத அசடர்கள் தன் நடத்தைக்கு ஏற்ப சமூகத்தை மாற்ற நினைக்கிறார்கள். “தப்பெல்லாம் தப்பில்லை” என்று தொண்டை வறள வியாக்யானம் வேறு செய்கிறார்கள். “அன்பில் திருட்டு அன்பு, நல்ல அன்பு உண்டா? காதலில் கள்ளக்காதல், நல்ல காதல் என்ற பிரிவினை உண்டா? காதலே நல்லதுதானே?” என்று விளக்கம் விரிகிறது அவர்களிடம்.

அன்பற்ற அறம் வறட்டுச் சட்டம் போன்றதுதான். ஆனால் அறமற்ற அன்பு? அதுவும் உயர்ந்த சரக்கில்லை.

அன்பு பெருகி ஓடும் போது தனக்குத்தானே கரையிட்டுக் கொள்ளும். கரையற்ற நதியின் இயல்பை அறிந்து வாழ்கிறவனுக்கு இதுபுரியும்.

வள்ளுவர் சொல்லுகிறார்.

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு”

இல்லற வாழ்வில் எத்தனையோ தர்மங்கள் இல்லறத்தானுக்கு வகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றல்ல பிறன் மனை நோக்காமை என்பது. இதுதான் தர்மங்களில் முதன்மையானது என்கிறார் வள்ளுவர்.

பிறன் மனைவியிடம் உறவு வைப்பது ஆண்மைக்கு அடையாளம் என்று மார் தட்டுவது மடமை. பிறன் மனைவியை நோக்காமைதான் ஆண்மையின் அடையாளம்.

“ஆசையோடு அடுத்தவன் மனைவியைப் பார்ப்பவன் அவளோடு விபச்சாரம் செய்தாயிற்று.” என்று பைபிளில் ஒரு வாசகம் வருகிறது. வள்ளுவரும் பைபிளுக்கு முன்பே இதைச் சொல்லுகிறார். “பிறன் மனை நோக்காமை” என்று. அருவருப்பான ஆசைகளைக் கண்களில் வைத்து அடுத்த பெண்மையை எவன் பார்க்கவில்லலையோ அவனே கட்டுப்பாடு உடையவன். புலன்களிடம் வெற்றி உடையவன். தன்னை வென்ற அவனே ஆண்மகன். புலன்களின் இழுப்பிற்கு ஏற்ப ஓடுகிறவன் வீழ்கிறவன் ஆண்மகனா? வள்ளுவர் சொல்லுகிறார்:-

நலக்குரியார் யார்எனில், நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள் தோயாதார்.

இந்த உலகில் மிகவும் கொடுத்து வைத்தவன் அதாவது புண்ணியாத்மா யார் தெரியுமா? பிறன் மனைவியின் தோள்களில் தோயாதவன் என்கிறார் அவர். இக்குறளில் பிறன்மனை தோய்கிறவன் பாபாத்மா, அதாவது தக்குத்தானே கேடு தேடிக்கொள்கிறவன் என்ற எதிர்ப் பொருள் உண்டு.

அடுத்த குறள் மிக அழகாகச் சொல்கிறது.

“அறன் வரையான் அல்லசெயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.”

தர்மங்களை ஈடுபாட்டுடன் செய்யாதவன் ஆயினும் பிறன் மனைவியை இச்சிக்காதவனாக ஒருவன் இருந்தால் அதுவே போதும் என்கிறார் வள்ளுவர்.

பிற தர்மங்களை கடைப் பிடிக்க வேண்டாம் என்பதல்ல இதன் பொருள். பிறன் மனைவியை விரும்பாமல் இருப்பதே முக்கிய தர்மமாகக் கொள்ளவேண்டும் என்பதே இதன்பொருள்.

ஆணும் பெண்ணும் பொருள் தேடி சம சுதந்திரத்துடன் ஊர்சுற்றும் இக்காலத்தில் இந்தத் தர்மம் மிகவும் கவனித்துப் பேண வேண்டிய ஒன்று. தர்மமாவது மண்ணாவது என்றால் மண்ணாகப் போவது தர்மம் அல்ல, நாமே என்பதே உணர வேண்டும்.

 

பூஜ்யஸ்ரீ ஓங்காரநந்தா சுவாமிகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.