மனிதனும் விலங்கும்

மனிதனும் விலங்கும்

மனிதனுக்கும் பரிணாம வளர்ச்சியில் குறைந்ததென நாம் கருதும் விலங்குக்கும் அடிப்படை வேற்றுமை உடல் அமைப்பிலோ தோற்றத்திலோ இல்லை. அடிப்படை வேற்றுமை மன அளவில் உள்ளது. சிந்திக்கத் தெரிந்துவிட்ட மனம் கொண்டுள்ள மனிதன் பார்ப்பது மட்டுமின்றி, படிக்கவும், விவரிக்கவும் அறிந்து கொண்டுள்ளான். அவன் தனது ஐம்புலன்களுக்கு அப்பாலும் பார்க்கிறான். அவன் அறிவு, புலன் நுகர்ச்சியில் மட்டும் கட்டுண்டு இருக்கவில்லை. வாழ்க்கையின் ஆழ்ந்த புதிர்களையும் இயற்கையின் அதிசயங்களையும் பார்த்து வியந்து சிந்தித்து அந்த புதிர்களை அவிழ்க்க முயல்கிறான். அது மட்டுமல்ல; அவனது அறிவைக் கொண்டு அவனது வாழ்க்கையையை நெறிப்படுத்துவதும் மனிதனுக்குத் தெரிந்த ஒன்று. தன்னை நெறிப்படுத்தும் இந்த அறிவுதான் தனது வளமைக்கும் சமுதாய வளமைக்கும் ஆணிவேராக மாறி, நாகரிகத்தின் முக்கிய அம்சமாக வளர்ந்து விட்டது.

மனிதனது அறிவுத் திறமையை விட அவனது அறநிலை அதாவது ஒழுக்கநெறி பற்றிய பொறுப்பு முக்கியமானது. சில மனவியல் நிபுணர்கள் கருதுவதைப் போல அவன் ஒன்றும் தனது இச்சைகளுக்கு முழு அடிமையல்ல. எது சரி, எது தவறு, எது சிறந்தது, எது மோசமானது, எது மகத்துவமானது, எது கீழ்த்தரமானது, எது நல்லது, எது சுவையானது என்றெல்லாம் உணரக்கூடியவன் மனிதன். இதை இப்படிச் சொல்வதால் மனிதனின் இச்சைகள் வலிமையற்றவை என்று கூறுவதாக ஆகாது. நிச்சயமாக மனிதனின் இச்சைகளின், வேட்கைகளின் ஈர்ப்பு மிக வலிமையானது. ஆனாலும் சிந்திக்கத் தெரிந்த மனிதன், தன் இச்சைகளை ஒரு கட்டுக்கோப்பிற்குள் அடக்கி, தன் நோக்கத்தை அடைவதற்காகத் தன் செயல்களை மாற்றிக் கொள்ள வைக்கும் மனத் திண்மை படைத்தவன். தான் எவ்வாறு, எதைப்பற்றி சிந்திக்க வேண்டும் என்பதிலும், எந்தச் செயலையும் செய்யலாமா, வேண்டாமா, செய்தால் எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் தன் அறிவையும் மனத்தையும் கொண்டு ஆராய்ந்து சரியான முடிவுகளை எடுக்கக் கூடியவன்.

தானே உயர்வு, தனக்கே எல்லாம் என்ற உணர்வெல்லாம் விலங்கின் இயல்பான உணர்வுகள். தனக்கு என்று உய்வதை வேண்டாம் என்பதும் பிறருக்காகத் தியாகம் செய்வதும் மனிதனின் உணர்வுகள். இந்த உணர்வு வேறுபாடுதான் ‘மிருகம்’ என்பதற்கும் ‘மனிதம்’ என்பதற்கும் உள்ள வேறுபாடு. மனிதத்தனம் என்பதுதான் மனிதனுக்கு இயல்பானது. முரட்டுத்தன்மை என்பது மிருகத்துக்கு இயல்பானது. ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டு உயிரைப் பிற மிருகங்களிடம் இருந்து காத்துக் கொள்வதே அவைகளின் தேவை. பிற மிருகங்களை வெற்றிகொண்டு அடக்கியாள முடிந்த மிருகங்களே உயிர்வாழ முடியும். வலிமை ஒன்றே உயிரைக் காக்கும்.

ஆனால் மனித உலகத்தில் இக்காட்சி முழுவதும் மாறிவிடுகிறது. ஓற்றுமை, சுய-தியாகம், தத்துவம் இவைகளால்தான் மனிதன் வாழ்கிறான், முன்னேறுகிறான். தனது பொறுப்புகளையும் கடமைகளையும் சரியாக ஆற்றுவதே மனிதனின் மதிப்பை நிர்ணயம் செய்கிறது. இந்த முக்கியமான உண்மையை மறக்க மறக்க, சமுதாயத்தில் பிரிவினையும் வெறுப்புக்களும் ஏற்பட்டு அதனால் பிரச்சினைகளும், அழிவுகளும் ஏற்படுகின்றன.

மனிதனில்தான் சுயம் என்ற உணர்வு மற்ற விலங்குகளைவிட அதிகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. உலகில் உள்ள மற்ற மனிதரை விட தான் தனியானவன் என்பது அவனுக்கு தெரிகிறது. தன்னைப் பற்றியே அவனால் ஆராய்ச்சி செய்யமுடியும். தான் (self) என்பதும் தான் அல்லாதது (not self) என்பதும் வெவ்வேறு உண்மைகள் என்பது அவனுக்குத் தெரிகிறது. அவனுக்குத் தன் மனம் உடல் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உணரமுடிகிறது. தனக்கு உடல் அளவிலும் தோற்றத்திலும் உள்ள புறவாழ்க்கை, தனது உள்ளே உள்ள மனம் சார்ந்த அகவாழ்க்கை இரண்டும் வேறு வேறு என்று அறிகிறான். தனது மன அளவில் உள்ள அகவாழ்க்கை தனது புறவாழ்வை விட மகத்தானது, ஆழமானது, விரிவானது என்றும் அறிகிறான். அவனது உடல் எவ்வளவுதான் வலிமையானதாக, மிகவும் பிடித்ததாக இருப்பினும் இது அவனது ஆளுமையின் வெளிப்புற தோற்றமே என்னும் பேருண்மையை அறிகிறான். உள்மனம் சார்ந்த அந்த உயர்ந்த வாழ்க்கையில் மனிதத்துவ, தத்துவ, அறம் சார்ந்த, ஆன்மிகம் சார்ந்த உணர்வுகளும் வெளிப்பாடுகளும்தான் அகவாழ்க்கையின் அடையாளங்களாய் அமைகின்றன.

***********************************************************************

கருத்துவித்து: ஆங்கிலத்தில் சுவாமி சத்ப்ரகாஷானந்தர்;

தமிழில் : ந கணபதி சுப்ரமணியன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.