பெரிய பலூனா சின்ன பலூனா ?

பெரிய பலூனா சின்ன பலூனா ?

****************************************

வாழ்க்கை என்பது ஒரு கேள்வியானால் பதில் சொல்வது நாம்தானே.

நினைத்ததைச் செய்வது – அதுதான் சுதந்திரம் என்ற வார்த்தையின் பொருள்.

‘சு’ என்றால் சுயமான, ‘தந்திரம்’ என்றால் செயல் என்று பொருள்.

இந்தச் சொல் ‘நரியின் தந்திரம்’ போன்ற சொல்லில் வருவது அல்ல. சிலவற்றை நாம் சில கோணங்களில் மட்டும் பார்த்துப் பழகிவிடும்போது சில சொற்கள் கூட சிறைவாய்ப் பட்டு, நசுங்கி, மெலிந்து, தன் முழுப் பொருளை உணர்த்தும் திராணி இல்லாது போய்விடுகின்றன.

எனவே சுதந்திரம் என்றால் நான் செய்ய நினைப்பதை நான் செய்வது என்று பொருள் கொள்ளலாம்.

ஆனால் புழங்கும் சொற்களில் சுதந்திரம் என்ற சொல் தன் உண்மையான பொருளை விட்டு விட்டது. சமுதாய காரணங்களாலோ, மரியாதை நிமித்தமாகவோ, துன்பம் தரக்கூடாது என்பதாலோ, நமக்கு ஆபத்து வந்துவிடும் என்று நினைப்பதாலோ, சுதந்திரம் என்பது ஒரு கட்டுப் படுத்தப் பட்ட சொல்லாகி விட்டது.

யார் இதைக் கட்டுப் படுத்தியது ?

நாம் தான். எப்படி ?

என்னுடன் நீங்கள் பேச வந்தால் நான் ஒரு கட்டுப் பாட்டுக்குள் இருக்க வேண்டியதாகிறது. நீங்கள் யார் என்பதைப் பொறுத்து கட்டுப்பாட்டின் அளவு இருக்கிறது.

நீங்கள் என் அம்மாவாய் இருந்தால் முழுச் சுதந்திரம் உண்டு,

நீங்கள் என் அப்பாவாய் இருந்தால் முழுச் சுதந்திரம் சற்று குறையும்.

நீங்கள் என் இளைய சகோதரன் அல்லது சகோதரியாய் இருப்பின் இது குறையும். ஆயினும் இதை நாம் உரிமையென்று கருதி மீறி விடுவோம்.

நீங்கள் என் மூத்த சகோதரன் அல்லது சகோதரியாய் இருப்பின் இது நிச்சயம் குறைகிறது. எவ்வளவு சுதந்திரம் என்பதை அவர் தீர்மானிக்கிறார்.

நீங்கள் என் மனைவியாய் அல்லது கணவனாய் இருப்பின், நிறைய குறையும். இந்த உறவிலும் ஒருவர் மற்றவருக்குத் தரும் சுதந்திரம் அவரவர் நிர்ணயிப்பது.

நீங்கள் என் மகன் அல்லது மகளாய் இருந்தால், ஆரம்பத்தில் முழுமையாக இருந்த என் சுதந்திரம் ஆண்டுகள் செல்லச் செல்ல குறையும்.

நீங்கள் மற்ற உறவுக்காரராய் இருந்தால் இது என் சொந்தக்காரர்கள் எவ்வளவு பேருக்கு நீங்கள் சொந்தக்காரராய் இருக்கிறீர்கள் என்பதை பொறுத்து குறையும்.

நீங்கள் என் சக மாணவனாகவோ, சக தொழிலாளியாகவோ இருக்கும்போதும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

நீங்கள் என் நண்பனாய் இருந்தால் மற்ற உறவை விட கட்டுப்பாடுகள் குறையும். இப்படி இல்லை யென்றால் அதன் பெயர் நட்பு அல்ல.

நீங்கள் என் ஆசிரியராய், என் அலுவலக அதிகாரியாய், அரசு அதிகாரியாய், ஆட்சியில் பங்குபெற்ற ஒருவராய் இருப்பின், கட்டுப்பாடுகள் என்பது மிக அதிக அளவில் இருக்கின்றன.

இதைத் தவிர, என்னை விட பலசாலியாய், பணக்காரராய், பதவி கொண்டவராய், அதிகாரம் படைத்தவராய் இருந்தால் நம்மை அறியாமலேயே கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனாலும் அறிஞர்கள், அனுபவசாலிகள், மூத்தோர்கள், எளியவர்கள், ஏழைகள், தன்னலம் துறந்தவர்கள் இவர்களின் அருகே இருந்தால் நாம் எடுத்துக் கொள்ளூம் சுதந்திரத்தின் உயரம் நம் அகங்காரத்தின் அளவைப் பொறுத்திருக்கிறது. அதாவது நம் அகங்காரம் அதிகமானால் நாம் இவர்களிடம் எடுத்துக்கொள்ளும் சுதந்திரம் அதிகமாகும். பண்புகள் அதிகமாக இருந்தால் அகங்காரம் குறையும். அப்போது சில கட்டுப் பாடுகளை நம் மனம் விதைக்கும்.

ஆகையால், எப்போதுமே நம் மனம்தான் நம் சுதந்திரத்தின் அளவை நிர்ணயிக்கிறது என்பது தெரிகிறது.

முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் என்று சொல்லும்போதுதான் என் சுதந்திரத்தைப் பற்றிய பேச்சும் அளவு பற்றி எண்ணமும் வருகிறது. ஏன் ?

நான் தனியாக இருக்கும்போது எனக்கு சுதந்திரத்தைப் பற்றி எந்த சிந்தனையும் இல்லை. ஆனால் நீங்களும் என்னருகில் வரும்போது  இதன் அளவுபற்றிய சிந்தனை ஏற்படுகிறது.

என்னைப் போன்ற உங்களுக்கும் இந்த சுதந்திரம் இருப்பதால். என் சுதந்திரம் என்பது ஒரு பெரிய பலூன் என்றால், நீங்கள் அருகில் வரும்போது உங்கள் பலூன் இடிக்கிறது. மனவியல் நிபுணர்கள் இந்த பலூனை ‘இடம்’ (space) சொல்கிறார்கள்.

ஒரு கற்பனை செய்யுங்கள். நீங்கள் ஒரு சமையல் அறையில் ஒரு கூட்டத்துக்காக சமைக்கிறீர்கள். சமையல் அறை மிகச் சிறியது. ஒருவர் மட்டுமே நிற்க முடியும். விருந்தினர் வந்து அமர்ந்திருக்கின்றனர். ஆதலால் எல்லா சமையல் வேலையையும் அதற்குத் தேவையான மற்ற வேலைகளையும் சமையல் அறையிலேயே செய்ய வேண்டும் என்று  வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சமைக்க எடுத்துக் கொள்ளும் நேரத்தில், கையில் ஏதேதோ இடிக்கிறது.  வியர்க்கிறது. வலிக்கிறது. உட்கார இடமில்லை. நீங்கள் குண்டான உடம்பு கொண்டிருந்தால் சிரமம் இன்னும் அதிகம்.

இதைப் போலவே இன்னொரு கற்பனை: நீங்கள் ஒரு ஆசிரியராகவோ அல்லது அலுவலக ஊழியராகவோ தொழிலாளியாகவோ இருக்கிறீர்கள். வேலை நிறைய இருக்கிறது. தொடர்ச்சியாக வேலை.  சற்றுகூட இடைவெளியில்லை. ஒரு வேலையை உங்கள் அலுவலகத்தில் பள்ளியில் தொழிற்சாலையில் தவறாகவே செய்கிறார்கள். உங்கள் அனுபவத்தில் அதை உணர்ந்த நீங்கள் அதை மாற்ற ஒரு வழி, ஒரு புது முறை, ஒரு சிறு மாற்றம் சொல்கிறீர்கள். இந்த வழியோ, முறையோ, மாற்றமோ நீங்கள் மட்டுமே செய்யக்கூடிய ஒன்றுதான். மற்றவர்களுக்கு இந்த மாறிய முறையினால்

எந்த விதமான அதிக வேலையும் இல்லை. மாற்றாக நிறுவனத்தின் செயலாக்கம் சிறக்கும். இருப்பினும் உங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. நீங்கள் செய்வதிலேயே ஒரு மாற்றத்தை கொண்டுவர உங்களால் முடியவில்லை.

இன்னும் ஒரு கற்பனை:  உங்கள் மேல் கட்டுப்பாடு விதிக்கக் கூடிய நபர் ஒருவர். அம்மா, அப்பா, அண்ணா, அக்கா, பாட்டி, கணவர், மாமனார், மாமியார், காதலன் அல்லது காதலி, உங்களை மிகவும் மெச்சுபவர், உங்களை மிகவும் கொஞ்சுபவர். இவர்கள் உங்கள் மீது அன்பு பொழிகிறார்கள். அது சில சமயங்களில் மிக அதிகமாகி விடுகிறது. மிக நெருங்கி விடுவதால் புழுக்கம் அதிகரிக்கிறது. சுவாசிப்பதற்கு (அதாவது சாதாரண எண்ணங்களை நினைக்கக் கூட) முடியாமல் போய் மூச்சு முட்டும் அளவுக்கு வந்து விடுகிறது. முற்றிப் போகும்போது அது இந்தச் சிறையை விட்டுத் தப்பித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தைத் தருகிறது.

கற்பனை செய்த இவை வெறும் கற்பனையல்ல. இது தினம் தினம் நம் வாழ்வில் நிகழ்கிறது.  இந்த அளவு நெருக்கம் ஏற்படும்போது நாம் உணர்வதுதான் ஆங்கிலத்தில் lack of personal space எனப்படுகிறது.  இந்த  personal space என்ற ‘சொந்த இடம்’ குறையக் குறைய நம் வாழ்வில் நிறைய உறவுகளை தலைகீழாக மாற்றிவிட்டு, நம் வாழ்க்கை பயணத்தையும் திசைதிருப்பி விடுகிறது. அன்பு செய்தவர் எதிரியாக, மிகவும் பிடித்தவர் எதிரியாக, சிறந்த நண்பர் சிறந்த எதிரியாக மாறிப் போய்விடுகிறார்கள். நாம் எந்த நோக்கத்துக்காக அந்த நட்பை, உறவை, வேலையை, நிலையை கொண்டோமோ அந்த நோக்கம் நிறைவேற்ற முடியாமல் போய் விடுகிறது.

அப்படி என்றால் மற்றவர்கள்தான் நம் சுதந்திரத்தைக் கெடுக்கிறார்களா என்ற கேள்வி எழும். அது அப்படி நாம் உணர்கிறோம் என்றுதான் பொருள். நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்.

உண்மையில் நம் பலூனின் உருவமும் அளவும் நாமே சுயமாக தீர்மானிப்பதுதான். மனைவிக்காக வேலையை விட்ட கணவனையும், கணவனுக்காக வேலையை விட்ட மனைவியையும், தனக்குப் பிடித்ததை எல்லாம் மனதார விட்டுவிட்டுக் கணவனுக்குப் பிடித்ததையே செய்யும் பெண்ணையும் நினைத்துப் பாருங்கள்.  இவர்களின் பலூன் அளவை அவர்களே விரும்பிச் சுருக்கும்போது அவர்களுக்கு இன்பம் அதிகரிக்கிறது. சிறுவயதில் இருந்து தன் வாழ்வை தன் குடும்பத்துக்காக உழைத்த ஒரு முதியவர், தன் அன்பு மகன், மகள் இவரைக் கையில் வைத்துத் தாங்கும்போது தன் பலூனின் அளவை மிகவும் சுருக்கிக் கொள்கிறார்.

வள்ளுவர் சொல்லுவதைக் கேளுங்கள்:

“அடக்கம் அமரருள் வைக்கும் அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்”

பொருள் : அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும் அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்

“காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூங்கில்லை உயிர்க்கு”

பொருள் : அடக்கத்தைச் செல்வமாக எண்ணிக் காக்க; அதைக் காட்டிலும் பெரிய செல்வம் வேறு இல்லை.

என்னடா இது வள்ளுவர் பைத்தியக் காரத்தனமாய் அடிமையாய் இருப்பதை ஆதரிக்கிறாரே என்று நினைக்க வேண்டாம். அந்த அறிவுப் பெருந்தகை

இதை மட்டுமா கூறினார் ?

“செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந் தாற்றின் அடங்கப் பெறின்”

பொருள் : அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்

“நிலையின் திரியா தடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது”

பொருள் : உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்

“ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து”

பொருள் : உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்

என்று இதையும்தானே கூறி இருக்கிறார். ஆக அவர் ஒன்றும் பைத்தியக் காரர் அல்ல. உலகம் முழுதும் எல்லோரும் அவரை மிகவும் பெரிய பேரறிஞர் என்றும் தமிழ் உலகுக்கு அளித்த மாணிக்கம் என்றும் அவரைப் போற்றுகிறார்கள்.

நீங்கள் கேட்கலாம். படிக்க, கேட்க, சொல்ல சுவைதான். இன்றைய கால கட்டத்தில் எடுபடுமா என்று கேட்கலாம். ஆனாலும் உலகில் வெற்றி அடைந்த பலரையும் பாருங்கள். இப்போது வெற்றி அடைகிறவர்களையும் பாருங்கள். அவர்களின் வாழ்வில் அவர்கள் அடக்கத்தைக் கைக் கொண்டவர் என்பது அவரது வரலாற்றை அறிந்தால் நமக்குப் புரியும்.

ஆகையால் நாம் நம் சுதந்திரத்தை விரும்பிக் குறைத்துக் கொள்ளும்போதுதான் சாதனையும், உயர்வும், மகிழ்ச்சியும், வளர்ச்சியும் எற்படுகிறது.

சுதந்திரம் என்பது தனியாள் விஷயம் மட்டும் அல்ல. அது ஒரு சமுதாய ஒப்பந்தம்.  நான் மதுக்கடையிலேயே கிடப்பேன், உழைக்கவே மாட்டேன், மற்றவர் உழைப்பிலேயே வாழ்வேன், யாரை ஏமாற்றி எப்படிப் பிழைக்கிறேன், இதுவெல்லாம் என் விஷயங்கள், என் சுதந்திரம் என்று சிலர் இருக்கிறார்கள்.

பிறரை அடக்குவேன், நான் சொல்வதைப் போலத்தான் அவர்கள் செய்ய வேண்டும், சிந்திக்க வேண்டும் என்று சொல்ல எனக்கு அதிகாரம் உள்ளது என்றும் அந்த அதிகாரம் தன் பணத்தினாலும், பதவியினாலும், படிப்பினாலும் தனக்குக் கிடைத்துள்ளது என்றும் சிலர் நினைக்கிறார்கள்.

இந்த எல்லாவற்றிலும் அவரவர் கொண்டுள்ள பலூன் ஊதி ஊதி மிகப் பெரிதாக ஆகும்போது ஒன்று தானாகவே உடைந்து விடும் அல்லது பிறரது ஊசியினால் குத்தப் பட்டு ஓட்டையாகி எல்லாக் காற்றும் அற்றுப் போய் விடும்.

இப்படிப் பட்டவர்கள்தான் பதவி போனதும், பணம் போனதும் வாழ்க்கையை ரசிக்க இயலாது கட்டையாகிப் போய் விடுகின்றனர். வேறு யாரும் இவருக்கு அருகில் வருவதில்லை. அப்படியே ஓரிருவர் வந்தால் அவர் இவரிடம் உள்ளதைப் பிடுங்கத்தான் வந்தார் என்று இவர் நினைத்து அருகில் விடுவதில்லை. பலரும் அப்படித்தான் வருகின்றனர். அந்த நிலையில் இவர் எவ்வளவுதான் சுதந்திரத்தை மற்றவருக்கு விட்டுக் கொடுக்கும் நிலையில் இருந்தாலும், யாரும் அருகில் வராமல், உலர்ந்து போய் சருகாகி, எப்போது சாவு வரும் என்ற நிலைக்குத் தள்ளப் படுகின்றனர்.

எல்லாவற்றிற்கும் காரணம் தனது பலூனை ஊதி ஊதிப் பெரியதாக்கியது தான். எனவே இந்த பலூனின் அளவு நமது உயர்வைக் குறைக்காத அளவில்தான் நாம் வைத்துக் கொள்ளவேண்டும்.

இந்த பலூனின் அளவைக் குறைய விடமாட்டேன், ஊதிக் கொண்டேதான் இருப்பேன் என்று பிடிவாதம் பிடிப்பவர்களை நான் சரமாறியாகத் திட்ட ஒரு சுதந்திரத்தை நான் எடுத்துக் கொள்ள மாட்டேன். மாறாக உங்களிடம் ஒரு விண்ணப்பத்தை மட்டும் வைப்பேன்.

அதாவது நீங்கள் ஒரு மாதத்திற்கு உங்களையும் உங்கள் சுற்றத்தாரையும், நண்பரையும், உம்முடன் பணிபுரிவோரையும் நன்றாகக் கவனிக்கவும். உங்கள் பார்வையில் அவர்கள் செய்யும் தவறுகள், தவறல்லாதவை, உயர்ந்தவை இவற்றை மூன்று பட்டியல்களாகத் தயாரிக்கவும். இது முழுக்க முழுக்க நீங்கள் சுதந்திரமாக வேறெந்த நபர் கட்டுப்பாடும் இல்லாமல் செய்யவேண்டியது என்று நினைவு கொள்ளுங்கள்.

அந்த ஒருமாத காலத்துக்குப் பிறகு திருக்குறள் நூலை பிரியுங்கள். (இன்னமும் வாங்காதிருந்தால் இப்போதாவது சென்று வாங்குங்கள்).

நான் ஒரு பட்டியல் தருகிறேன். இவையெல்லாம் திருக்குறளின் சில அதிகாரங்கள்.

 1. அறன் வலியுறுத்தல்
 2. அன்புடைமை
 3. விருந்தோம்பல்
 4. இனியவை கூறல்
 5. செய்ந்நன்றி அறிதல்
 6. நடுவுநிலைமை
 7. அடக்கம் உடைமை
 8. ஒழுக்கம் உடைமை
 9. பிறன் இல் விழையாமை
 10. பொறை உடைமை
 11. அழுக்காறாமை
 12. வெஃகாமை
 13. புறங்கூறாமை
 14. பயனில சொல்லாமை
 15. தீவினை அச்சம்
 16. ஒப்புரவு அறிதல்
 17. ஈகை
 18. புகழ்
 19. அருள் உடைமை
 20. கூடா ஒழுக்கம்
 21. கள்ளாமை :
 22. வாய்மை
 23. வெகுளாமை
 24. இன்னா செய்யாமை
 25. கொல்லாமை
 26. நிலையாமை
 27. கல்வி
 28. கல்லாமை
 29. கேள்வி
 30. அறிவுடைமை
 31. குற்றம் கடிதல்
 32. பெரியாரைத் துணைக்கோடல்
 33. சிற்றினம் சேராமை
 34. தெரிந்து செயல்வகை
 35. வலி அறிதல்
 36. காலம் அறிதல்
 37. இடன் அறிதல்
 38. தெரிந்து தெளிதல்
 39. தெரிந்து வினையாடல்
 40. சுற்றம் தழால்
 41. பொச்சாவாமை
 42. செங்கோன்மை
 43. வெருவந்த செய்யாமை
 44. கண்ணோட்டம்
 45. ஊக்கம் உடைமை
 46. மடி இன்மை
 47. ஆள்வினை உடைமை
 48. இடுக்கண் அழியாமை
 49. சொல்வன்மை
 50. வினைத்தூய்மை
 51. வினைத்திட்பம்
 52. வினை செயல்வகை
 53. குறிப்பு அறிதல்
 54. அவை அறிதல்
 55. அவை அஞ்சாமை
 56. பொருள் செயல்வகை
 57. நட்பு
 58. நட்பு ஆராய்தல்
 59. பழைமை
 60. தீ நட்பு
 61. கூடா நட்பு
 62. பேதைமை
 63. புல்லறிவாண்மை
 64. இகல்
 65. பகை மாட்சி
 66. பகைத்திறம் தெரிதல்
 67. உட்பகை
 68. பெரியாரைப் பிழையாமை
 69. பெண்வழிச் சேறல்
 70. வரைவில் மகளிர்
 71. கள் உண்ணாமை
 72. சூது
 73. மருந்து
 74. குடிமை
 75. மானம்
 76. பெருமை
 77. சான்றாண்மை
 78. பண்புடைமை
 79. நன்றியில் செல்வம்
 80. நாண் உடைமை
 81. குடி செயல்வகை
 82. இரவு
 83. கயமை

இவற்றில் உள்ள குறள்களைப் பொருளுடன் படியுங்கள். இப்போது தாங்கள் தயாரித்துள்ள பட்டியலை எடுங்கள். நீங்கள் தரம் வாரியாகப் பிரித்த  தவறுகள், தவறல்லாதவை, மற்றும் உயர்ந்தவை மூன்றிலும் நீங்கள் இட்டுள்ள கருத்துக்களையும் திருக்குறள் கூறுவதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

இந்தக் கேள்விகளுக்கு உண்மையாக நேர்மையாக பதிலளிக்க முயலுங்கள்:

 1. திருவள்ளுவர் சொல்லியுள்ள கருத்துக்களை நீங்கள் ஆராய்ச்சி செய்தவர்கள் கொண்டுள்ளனரா ?
 2. அப்படிக் கொண்டுள்ளவர் அதனால் எந்த நிலையை அடைந்திருக்கின்றார்?
 3. இப்போது தாங்கள் தயாரித்துள்ள மூன்று பட்டியல்களில் உள்ள உங்கள் கருத்துக்களை ஒரு பட்டியலில் இருந்து மாற்றி இன்னொரு பட்டியலில் வைக்கவேண்டுமா ?
 4. அப்படி வைத்தபின் உங்கள் பட்டியல்கள் எப்படி இருக்கின்றன ?
 5. இந்த சோதனையில் எதையாவது நீங்கள் உணர்ந்திருக்கின்றீர்களா ?

இந்த திருக்குறளைக் கொண்டு செய்யும் சுயபரிசோதனையைத் தொலைத்து விடாதீர்கள். இந்த முயற்சியின் போது உங்கள் செயலையும் ஏற்படும் கருத்துக்களையும்  பலவருடம் தாங்கக் கூடிய ஒரு நோட்டுப் புத்தகத்தில் கைப்பட எழுதவும். இப்போது மறந்து விடுங்கள் இந்த நோட்டுப் புத்தகத்தை.

அவ்வளவுதானா, இதற்கா இவ்வளவு பீடிகை ?

இல்லை இல்லை, அந்த நோட்டுப் புத்தகத்தை பத்திரமாக உங்களுடன் வைத்திருங்கள். உங்களுக்கு ஒவ்வொரு முறையும் கோபம், ஏமாற்றம், உற்சாகக் குறைவு, அவநம்பிக்கை, சோகம், வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, வருத்தம், உயர்வு, தாழ்வு, பெருமை, அவமானம், வீழ்ச்சி, கவலை இவை எற்படும் நேரத்தில் எல்லாம் இரண்டு காரியங்கள் செய்ய வேண்டும்.

ஒன்று இப்போது இந்த நிகழ்வில் தங்களுக்கு ஏற்பட்ட எண்ணத்தை தேதியுடன் சிலவரிகளில் எழுதவும்.

இன்னொன்று தங்களது திருத்திய பட்டியல்களைப் பார்க்கவும். எதேனும் மாற்றங்கள் தேவையா என்று பார்க்கவும். மாற்றவும்.

இப்போது உங்களது பலூனைச் சிறிதாக்க வேண்டிய எண்ணம் ஏற்படலாம்.

மறக்காமல் இந்த நோட்டுப் புத்தகத்தை மிக ரகசியமாக பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அடிக்கடி இந்த நோட்டுப் புத்தகத்தைப் பார்க்க வேண்டிய தேவை பலசமயம் ஏற்பட்டாலும், அடிக்கடி உங்கள் பட்டியலை மாற்றத் தேவையில்லாத ஒரு நிலையை நீங்கள் வாழ்வில் அடைந்து விட்டீர்கள் என்றால் நீங்கள் உங்கள் வாழ்வின் ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்து விட்டீர்கள் என்று பொருள்.

அதுசரி, நீங்கள் அடைந்து விட்ட அந்த முக்கியமான கட்டத்தில் உங்கள் பலூனின் அளவு என்னவாக இருக்கும் ?

அப்போதும் அதைத் தீர்மானிக்கும் உரிமை  உங்கள் கையிலேயே இருக்கும்.

உச்சத்தை அடையும்போது நமக்கு நம் கட்டுப் பாடுகள் தளர்வது இயற்கை. அப்படித் தளர்வதை உணரும்போது மறுபடியும் இந்த நோட்டுப் புத்தக பரிசோதனையைத் தான் செய்ய வேண்டும்.

அப்படி நீங்கள் செய்யத் தவறினாலும் நீங்கள் கவலைப் பட வேண்டாம்.

அதை இந்த உலகமும் உங்களைச் சார்ந்தவரும், உங்களைச் சாராதவரும், உங்களால் அல்லல் பட்டவரும், இந்த அரசாங்கமும், ஆண்டவனின் அரசாங்கமும் தங்களுக்கு உணர்த்த உரிமை பெற்றுள்ளனர் என்பதை மறக்க வேண்டாம்.

(மிக அதிகமாகப் பலூனை ஊதியவர்களுக்காக ‘குண்டர்கள்’ சட்டம் ஒன்று இருக்கிறது !!! — இது நகைச் சுவை மட்டுமல்ல)

***********************************************************************************

© ந கணபதி சுப்ரமணியன் ——- (இதன் உரிமை எனக்கே)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.