இறைவனிடம் கையேந்துங்கள்

அப்படி என்னதான் இருக்கிறது நாகூர் ஹனிபாவின் இந்த பாடலில்?

இறைவனிடம் கையேந்துங்கள்
**********************************

அப்படி என்னதான் இருக்கிறது நாகூர் ஹனிபாவின் இந்தப் பாடலில்?

இந்தப் பாடலை கேட்காத காதுகள் தமிழகத்தில் இல்லை. முணுமுணுக்காத உதடுகள் இல்லவே இல்லை.  பாராட்டாத உள்ளங்கள் இருக்கவே முடியாது.

அது ஏனோ தெரியவில்லை, நாகூர் ஹனிபாவை ‘இமிடேட்’ பண்ணுவதற்கு அத்தனை இஸ்லாமியப் பாடகர்களும் இந்தப் பாடலைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.

மேடையில் அரங்கேறும் கலைநிகழ்ச்சியின்போது ‘வைகைப்புயல்’ வடிவேலு ரசிகர்களைக் கவர நினைத்தாலும் இந்தப் பாடலை பாடித்தான் அசத்துகிறார்.

சின்னி ஜெயந்த் நாகூர் ஹனீபாவைப்போல் மேடை நிகழ்ச்சியில் ‘மிமிக்ரி’ செய்ய வேண்டுமென்றாலும் இந்தப் பாடலை பாடித்தான் கைத்தட்டல் பெறுகிறார்.

மதுரை மூத்த ஆதீனகர்த்தா அருணகிரி நாதர் தன் ஓய்வு நேரங்களில் விரும்பிக்கேட்கும் பாடல் இதுதானாம். அவரே சொல்லியிருக்கிறார்.

குன்றக்குடி அடிகளார், சோமசுந்தர தம்பிரான் போன்றவர்களின் மடத்திலும் இந்தப் பாடல்தான் ஒலிக்கிறது.

பொது நிகழ்ச்சிகளிலும் கோவில் விசேஷங்களிலும்கூட இப்பாடல் ஒலிபெருக்கிகளில் ஒலிப்பதை நாம் காது குளிர கேட்க முடிகிறது.

அதிகாலை வேளையில் வானொலியில் ஒலிபரப்பப்படும் “பக்தி கானங்கள்” பட்டியலில், எந்தப் பாடல் இடம் பெறுகிறதோ இல்லையோ இந்தப் பாடல் கண்டிப்பாய் இடம் பெற்று விடுகிறது.

கல்யாண வீடியோ கேசட் மற்றும் குறுந்தகடு பதிவில் இந்தப் பாடல் பின்னணியில் கட்டாயம் ஒலிக்கிறது.

அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் பாடலில்? கேள்வி மீண்டும் நம் உள்ளத்தைக் குடைகிறது.

எளிமையான வரிகள்; எல்லா மதத்தினரும் ஏற்கக் கூடிய கருத்துக்கள்; மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட சிந்தனை.

இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும் பாடல் என மறைந்த கிருபானந்த வாரியாரே பல மேடைகளில் பாராட்டிப் பேசியிருக்கிறார்.

ஓரிறைக் கொள்கையை உரத்துச் சொல்லும் கானம்; ஒவ்வொரு வார்த்தைகளும் தேர்ந்தெடுத்தாற்போல் உள்மனதைச் சென்றடையும்.

இப்பாடல் இசைத்தட்டாக வெளியிடப்பட்டபோது விற்பனையில் முதலிடத்தை வகித்தது. மற்ற பாடல்களின் சாதனையை அடியோடு முறியடித்தது.

இசையார்வலர்கள் இப்பாடலை மிகவும் சிலாகித்துப் பேசினார்கள்.

ஆம். சந்தேகமே இல்லை. “இறைவனிடம் கையேந்துங்கள்” என்ற இப்பாடல், காலத்தால் அழியாத கனிவான பாடல். இசை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பாடல்.

நாகூர் ஹனீபா அவர்கள் ஆயிரக் கணக்கில் பாடல்கள் பாடியிருக்கின்றார். மற்ற பாடல்களுக்கு இல்லாத விசேஷம் – தனிப்பட்ட சிறப்பு  – இப்பாடலுக்கு உண்டு.

இப்பாடலை பாடியது இசைமுரசு நாகூர் E.M.ஹனீபா என்ற விவரம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இப்பாடலை எழுதிய கவிஞரின் பெயர் பலருக்கும் தெரியாது.

இதை எழுதியவர் காலஞ்சென்ற ஆர்.அப்துல் சலாம் என்ற கவிஞர். இவர் மயிலாடுதுறை அருகிலுள்ள கிளியனூர் என்ற ஊரைச் சேர்ந்தவர். பொதுவாகவே கவிஞர்கள் வறுமையில் இருப்பார்கள் என்ற ஓர் எண்ணம் பரவலாக நிலவி வருகிறது. இப்பாடலை இயற்றிய கவிஞர் ஒரு ஜவுளிக்கடை உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ பணக்கார கவிஞரே’ என்று நாகூர் ஹனீபா அவரை அன்போடு அழைப்பதுண்டு. கவிஞர் அப்துல் சலாம் அவர்களைப் போன்று கவிஞர் அப்துல் அஜீஸ், கவிஞர் அ.மு.இப்ராஹிம், கவிஞர் சஹிதா செல்வன் போன்ற பல திறமைசாலிகளைப் பெற்றெடுத்த ஊர் கிளியனூர்.

“இறைவனிடம் கையேந்துங்கள்” “அல்லாஹ்வை நாம் தொழுதால்” “எல்லாப் புகழும் இறைவனுக்கே” – இந்த மூன்று பாடல்களும் பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமன் அவர்கள் இசையமைத்ததாகத்தான் இசைத்தட்டில் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது.

நாகூர் ஹனீபா அவர்கள் முன்னாள் ‘ராணி’ ஆசிரியர் அ.மா.சாமி அவர்களுக்கு அளித்த பேட்டியொன்றில் “இறைவனிடம் கையேந்துங்கள்” பாடலைத் தானே இசையமைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

கிளியனூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில்தான் இப்பாடல் முதன் முறையாக கவிஞர் அப்துல் சலாம் முன்னிலையில் அரங்கேறியது.

நாகூர் ஹனிபாவிடம் வாத்தியக் கலைஞராக பணியாற்றிய இன்பராஜ் ஒரு இசை மேதை. அபார இசைஞானம். ராகங்கள் அனைத்தும் அவருக்கு அத்துப்படி.  மெட்டமைத்து, இசையமைத்து மேடையில் இன்பராஜால் அரங்கேற்றப்படும் பாடல்கள், இசைத்தட்டாக வெளிவரும்போது, சற்று மெருகேறிய வண்ணமாக மேலும் சில வாத்தியங்கள் சேர்க்கப்பட்டு BGM சற்று மாற்றியமைக்கப்படும். மாற்றியமைத்த அந்த பிரபல இசையமைப்பாளரின் பெயர்தான் இசைத்தட்டில் பதிவாகும்.

இதுபோன்று எத்தனையோ பாடல்களில் இன்பராஜின் திறமையும் உழைப்பும் மறைக்கப்பட்டு, அவருடைய பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டதை நாம் காண முடிகின்றது.

நாகூர் ஹனீபா அவர்களிடம் “தங்களுக்கு மிகவும் பிடித்த ஆன்மீகப் பாடல் எது?” என்ற கேள்வி கேட்கப்பட்டபோது ‘இறைவனிடம் கையேந்துங்கள்’ என்ற பாடலைத்தான் முதன்மையாக குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.

ஹாங்காங் தமிழ் பண்பாட்டுக் கழகம் நாகூர் ஹனீபாவை வரவழைத்து இசை நிகழ்ச்சி நடத்தியது. அதுசமயம் முஹம்மது யூனூஸ் என்பவர் “இறைவனிடம் கையேந்துங்கள்” என்ற அவரது பாடலை வட இந்தியர்கள் புரிந்துக் கொள்ளும் வண்ணம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறியபோது இப்பாடலின் ஆழ்ந்த கருத்துமிக்க பொருட்செறிவை உணர்ந்து எல்லோரும் வெகுவாக பாராட்டிய நிகழ்வு வரலாற்று சிறப்புமிக்கது.

 

இதோ இப்பாடலின் பொருட்செறிவை சற்று கூர்ந்து கவனிப்போம்.

இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன்
பொக்கிஷத்தை மூடுவதில்லை

வணக்கத்திற்குரியவன் ஒருவன். அவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற ஏகத்துவ கருத்தைத்தான் – ஓரிறைக் கொள்கையைத்தான் எல்லா மதங்களும் போதிக்கின்றன.

‘அவன் தூணிலும் இருப்பான் துறும்பிலும் இருப்பான்’ என்கிறது இந்து மதம். ‘இறைவன் உன் பிடறி நரம்புக்கும் சமீபமாக இருக்கின்றான்’ என்கிறது இஸ்லாமிய மார்க்கம்.

மனிதனுக்குத் தேவை என்று ஏற்படும்போது யாரிடத்தில் கையேந்த வேண்டும்? எல்லோருடைய தேவைகளையும் பூர்த்தி செய்வதெற்கென்றே ஒருவன் தயாராக காத்திருக்கின்றான். அவனிடம் கேயேந்துவதுதான் பொருத்தமானச் செயல்.

அவன் வழங்கும் அருள் ஊற்று – வற்றாத ஜீவநதி. அருள்மழை பொழிவதை அவன் ஒருபோதும் நிறுத்துவதில்லை. அடையா நெடுங்கதவு அவன் கதவு. அமுத சுரபி போன்றது அவன் பொக்கிஷம். அள்ள அள்ள குறையாதச் சுரங்கம் அவன் அருட் சுரங்கம்.

“தட்டுங்கள் திறக்கப்படும்; கேளுங்கள் கொடுக்கப்படும்” என்று போதிக்கின்றது கிறித்துவ மதம். “அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்” என்கின்றது இஸ்லாமிய வேதம். அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்.

இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன்
ஈடு இணையில்லாத கருணையுள்ளவன்
இன்னல்பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன்
எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன்

பக்தன் தன்னிடம் கேட்க மாட்டானா என்று ஏங்குகிறான் இறைவன். அவன் அகராதியில் “இல்லை” என்ற வார்த்தைக்கே இடமில்லை. அவன் கருணைக்கு ஈடு இணையே இல்லை. இன்னல் படுபவன் தன் துன்பம் என்னவென்று இறைவனிடம் சொல்லி புலம்பும் முன்பே அவனுடைய பிரச்சினையை அறிந்துக் கொள்பவன் அவன். எல்லாம் அறிந்தவன் அவன். முக்காலமும் தெரிந்தவன். காலத்தை வென்றவன்.

ஆசையுடன் கேட்பவர்க்கு அள்ளித்தருபவன்
அல்லல் துன்பம் துயரங்களைக் கிள்ளியெறிபவன்
பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன்
பாவங்களைப் பார்வையினால் மாய்க்கின்றவன்
அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள்
அல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள்
அவனிடத்தில் குறையனைத்தும் சொல்லிக்காட்டுங்கள்
அன்பு நோக்குத் தருகவென்று அழுது கேளுங்கள்

இங்கு “அல்லாஹ்” என்று குறிப்பது இஸ்லாமியக் கடவுள் என்று பொருள் கொள்ளலாகாது. “அல்லாஹ் என்றால்” அரபி மொழியில் “GOD” என்று பொருள். “GOD” என்ற ஆங்கில வார்த்தைக்கு ஆண்பால், பெண்பால் உண்டு (உதாரணம்: God, Goddess, God Father, God Mother). அல்லாஹ் என்ற அரபிச் சொல்லுக்கு ஆண்பால், பெண்பால் கிடையாது. எனவேதான் ஆண்டவனை “அல்லாஹ்” என்று அழைப்பது மிகப்பொருத்தமாக இருக்கிறது.

எல்லாம் வல்ல இறைவனிடம் அழுது புரண்டு தேவைகளைக் கேட்பதற்கு ஏன் வெட்கப்பட வேண்டும்? இறைவனின் கருணைப் பார்வையில் நம் அல்லல்கள்கள் யாவுமே கரைந்தோடி விடும்.

தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்
தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்
வாடும் இதயம் மலர்வதற்கு வழிவகுப்பவன்
வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன்
அலைமுழங்கும் கடல்படைத்து அழகுபார்ப்பவன்
அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன்
தலைவணங்கிக் கேட்பவர்க்குத் தந்து மகிழ்பவன்
தரணியெங்கும் நிறைந்து நிற்கும் மகா வல்லவன்

பூஜ்ஜியத்திற்குள் இருந்துக்கொண்டு ராஜ்ஜியத்தை ஆளும் இறைவன் பாறைக்குள் ஒளிந்திருக்கும் தேரைக்கும் உணவளிப்பவன். தன்னிடம் கையேந்திக் கேட்பவர்கள் யாரென்று அவன் தராதரம் பிரித்துப் பார்ப்பதிலை. அவன் பணக்காரனா அல்லது ஏழையா என்ற பாரபட்சம் அவனுக்குத் தேவை இல்லாதது. எல்லோர்க்கும் வாரி வாரி வழங்குகின்றான் அவன்.

நாகூர் ஹனிபா தன் கம்பீரக் குரலால் பாடிய இப்பாடல் ஏன் எல்லா மதத்தினராலும் கொண்டாடப்படுகிறது என்ற கேள்விக்கு பதில் இப்போது வாசகர்களுக்கு புரிகிறதல்லவா?

*******************************************************************************************************

நன்றி: nagoori.wordpress.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.