உடலும் உயிரும் ஆன்மாவும் அறிவியலும் !!!

உடலும் உயிரும் ஆன்மாவும் அறிவியலும் – 1!!!

 

உடலும் உயிரும் ஆன்மாவும் அறிவியலும் !!!

by வழிப்போக்கன்

 

உலகம் தோன்றியது எவ்வாறு? மனிதன் தோன்றியது எவ்வாறு? உயிர் என்றால் என்ன?

இக்கேள்விகளை ஒரு மனிதர் கேட்பாராயினில் அவருக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை அறிவியல் பேசுவோருக்கும் இருக்கின்றது…ஆன்மிகம் பேசுவோருக்கும் இருக்கின்றது. அக்கடமையை அவர்கள் தட்டிக் கழிக்க முடியாது. நிச்சயம் பதில் கூறியே ஆக வேண்டும்.

இந்நிலையில் அவர்கள் கூறும் விடையினைக் கண்டோம் என்றால் ஆன்மிகம் பேசுவோர் இறைவன் உலகைப் படைத்தான் என்றும் அறிவியல் பேசுவோர் இறைவன் படைக்கவில்லை மாறாக உலகம் ‘பெரு வெடிப்பு’ முதலிய சில காரணியால் இயல்பாகவே உருவாயிற்று என்றும் கருதுவது புலனாகின்றது. இக்கருத்துக்களிடையே மாபெரும் சண்டைகளும் நீண்டக் காலமாக முடியாது ஓடிக் கொண்டு தான் இருக்கின்றன.

இந்நிலையில் கடவுள் இருக்கின்றார்…உலகையும் மனிதனையும் படைத்தது அவர் தான் என்றுக் கூறும் நம் மீதும் அக்கேள்விக்கான விடையினைக் கூறும் கடமை விழத் தான் செய்கின்றது. அதன் விளைவாக அக்கேள்விகளுக்கான விடைகளையும் நாம் காணத் தான் வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் அறிவியலையும் காண வேண்டி இருக்கின்றது ஆன்மீகத்தையும் காண வேண்டி இருக்கின்றது…காண்போம்…!!!

“அறிவியலின் துணை இல்லாத சமயங்கள் குருடாகும்
  சமயங்களின் துணை இல்லாத அறிவியல் ஊனமாகும் – ஐன்ஸ்டீன்!!!”

பொதுவாக இன்று அறிவியல் பேசுவோர் முன் வைக்கும் கூற்று ‘வலிமையானது பிழைக்கும்’ என்பதே ஆகும். அதாவது காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு உயிர் பிழைக்க வல்லமை உள்ள உயிரினம் உயிர் பிழைக்கும். அவ்வாறு பிழைக்கும் தன்மை அற்ற உயிரினங்கள் அழிந்து போகும் என்ற ஒரு கூற்றே அது ஆகும்.

இக்கூற்றினைத் தான் நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.

ஒரு உயிரினம் பிழைத்து இருக்க, அது அந்த குறிப்பிட்ட சூழலில் அதற்குரிய குணாதிசயங்களைக் கொண்டு எவ்வாறு தாக்கு பிடிக்கின்றது என்பதே முக்கியமான காரணம்.. அவ்வாறு தாக்கு பிடிக்க முடியாத உயிர்கள் அழிந்து போகின்றன என்ற கருத்தினை நாம் ஏற்றுக் கொள்கின்றோம்.

இப்பொழுது ஒரு எடுத்துக்காட்டினைப் காண்போம்.

கொசு இருக்கின்றது. நமக்கு அது தொல்லையாக இருப்பதினால் அது உயிர் வாழ முடியாத வண்ணம் ஒரு சூழலை மருந்துகள் கொண்டு உருவாக்குகின்றோம். அந்த மருந்தின் நச்சுத் தன்மை தாங்காது அதனை முழுமையாக உட்கொண்ட கொசுக்கள் முதலில் மாளுகின்றன.

ஆனால் பின்னால் நடப்பது என்ன, அந்த மருந்தினை சிறிதளவே உட்கொண்ட கொசுக்கள் பின்னர் அந்த மருந்தினை எதிர்க்கும் ஆற்றலைப் பெற்றுக் கொண்டு நாம் உருவாக்கிய அந்த சூழலில் வாழத் தொடங்குகின்றன. இப்பொழுது நாம் கவனிக்க வேண்டிய விடயம் அவை எவ்வாறு அந்த எதிர்ப்பு சக்தியினைப் பெற்றன என்பது தான். இங்கே தான் நாம் உடலினைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது.

உடல் – ஒரு இயந்திரம்.

அதற்கென்று சில வேலைகள் இருக்கின்றன. நிற்காது இயங்கிக் கொண்டு இருக்கும் இந்த உலகம் போல் உடலும் இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றது. அது நம்மை கேட்டு வேலை செய்வதில்லை. தனக்கு எது தேவை எது தேவை இல்லை என்பதும் எது நல்லது எது கெட்டது என்பதும் உடலிற்கு நன்றாகத் தெரியும். பல உணவுகள் நாம் உண்ணுகின்றோம், அதில் தனக்கு தேவையானதினை எடுத்து கொண்டு தேவை அற்றதை கழிக்கும் வல்லமை உடலிடம் உண்டு. அதேப் போல் தனக்கு எதிரி ஒருவன் வருகின்றான் என்றால் அவனை எதிர்க்கும் ஆற்றலும் உடலுக்கு உண்டு. அதை தான் நாம் வெள்ளை அணுக்கள் என்றுக் கூறுகின்றோம்.

உடலுக்கு ஒவ்வாத ஒன்று எப்பொழுது உடலினுள் நுழைகின்றதோ அதனை அறிந்து அதை எதிர்க்க உடல் தயாராகின்றது. ஒரு வேளை அந்த எதிரியினை உடலினால் அழிக்க முடியவில்லை என்றால் உடல் அழிகின்றது. அல்லது அந்த எதிரியினை உடலினால் அழிக்க முடிந்தால் அந்த எதிரியினைப் பற்றியப் பாடத்தினை அது கற்றுக் கொள்கின்றது. மீண்டும் ஒரு முறை அந்த எதிரி அதனைத் தாக்காதவாறு உடல் தன்னை வளர்த்துக் கொள்கின்றது.

அதாவது முன்னர் இருந்த செயல்பாடுகளுடன் உடல் புதிதாக இன்னொரு செயல்பாட்டினை சேர்த்துக் கொள்கின்றது…தான் பிழைப்பதற்கு.
மேலே சொன்ன அந்த உடலின் இயக்கம் தன்னிச்சையான இயக்கம். எதிரி வருகின்றான் அவனிடம் போய் மோது என்று உடலுக்கு நாம் கட்டளை இடத் தேவை இல்லை. அது உடலின் பணி. இது அனைத்து உயிர்களின் உடல்களுக்கும் பொருந்தும்.

உடல் ஒரு மாபெரும் அதிசயம் தான்.

ஆனால் எல்லாக் காலங்களிலும் உடலினால் தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியாது. அதன் இயக்கத்திற்கு சில தேவைகள் இருக்கின்றன. உதாரணம் நீர்…உணவு!!!

இவற்றினை தானே உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல் உடலுக்கு இல்லை. இங்கே தான் உடல் நம்மை எதிர்ப்பார்கின்றது. இங்கே தான் அறிவு களத்திற்கு வருகின்றது. ஒவ்வொரு உயிரினமும் தனது அறிவினைப் பயன்படுத்தி தன் உடல் இயங்குவதற்கு ஆவன செய்யத் தொடங்குகின்றன. தன் உடலுக்கு எது உகந்தது என்பது அந்த உயிரினங்களுக்கு தெரிந்து இருக்கின்றது.

உதாரணத்திற்கு,

 

ஒரு மரம் தனக்குத் தேவையானது நீர் என்று அறிந்து அதன் வேர்களை நீரினைத் தேடி அனுப்புகின்றது. பாறைகள் பல இருந்தாலும் தனக்கு எது நல்லது என்று அறியும் அறிவு மரத்திற்கு இருக்கின்றது. இறுதியில் நீரினை சென்று அடைகின்றது.

அதே போல் ஒரு நாயினை எடுத்து கொள்ளுங்கள். அதன் முன் மெழுகினால் செய்யப்பட்ட ஒரு ரொட்டித் துண்டினைப் போடுங்கள். அந்த நாய் அந்த ரொட்டித் துண்டினை முகர்ந்து விட்டு அது அதற்கு ஒவ்வாது என்பதினை அறிந்துக் கொண்டு உண்ணாமல் சென்று விடும். மெழுகு அதன் உடலிற்கு உகந்தது அல்ல என்பது அந்த நாயிற்கு தெரிந்து இருக்கின்றது.

அதேப் போல் குளிர்காலத்தில் கிழக்கில் வெப்பமாக இருக்கும் என்று அறிந்து பறவைகள் பல தூரம் வருடா வருடம் பயணிப்பது அவற்றின் அறிவினை வைத்துத் தான். அவ்வாறு பயணித்து அவை தங்களைக் காத்துக் கொள்கின்றன.நிற்க.

இப்பொழுது நாம் இரு வேறு சூழ்நிலைகளில் ஒரு உயிர் பாதுகாக்கப்படுவதனைக் கண்டு இருக்கின்றோம். ஒன்று, அந்த உயிரினத்தின் உடலே சூழ்நிலைகேற்ப தன்னை பாதுகாத்துக் கொள்ளல். இரண்டு தன் அறிவை பயன்படுத்தி உயிரினம் தன்னை பயன்படுத்திக் கொள்ளல். இந்த இரண்டு சூழ்நிலையிலும் தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியாத உயிரினம் அழிகின்றது.

ஐரோப்பிய அறிவியல் மேலே உள்ள அந்த இரண்டு சூழ்நிலைகளையும் மட்டுமே அறிந்த நிலையில் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டினை ஆராய்ச்சி செய்துக் கொண்டு இருக்கின்றது.

ஆனால் உடல் இயங்குகின்றது என்று கூறும் அறிவியல் உடல் எதனால் இயங்குகின்றது என்பதனைக் கூற முடியாது நிற்கின்றது. அறிவினை அறிந்த அறிவியல் அந்த அறிவின் பிரிவுகளை அறியாது நிற்கின்றது. இந்த நிலையில் தான் பரிணாம வளர்ச்சி என்னும் தத்துவத்தினை ஐரோப்பிய அறிவியல் முன் வைக்கின்றது. இந்த நிலையில் தான் அது மனிதனும் மிருகம் என்கின்றது. இந்த நிலையில் தான் நாம் அதனை எதிர்க்க வேண்டி இருக்கின்றது.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது, பரிணாம வளர்ச்சியில் வந்தவை என்று அறிவியல் கூறும் அனைத்தையும் நாம் அதற்கு பல காலம் முன்னரே அறிவின் அடிப்படையில் பிரித்து வைத்து இருக்கின்றோம்.

 

ஓரறிவு – மரம் – தொடு உணர்வு – உடல்.

ஈரறிவு – நத்தை – தொடு உணர்வு, சுவை உணர்வு – உடல்,வாய்.


மூன்றறிவு – எறும்பு – தொடு உணர்வு, சுவை உணர்வு, நுகரும் உணர்வு – உடல்,வாய்,நாசி(மூக்கு)


நான்கறிவு – நண்டு – தொடு உணர்வு, சுவை உணர்வு, நுகரும் உணர்வு, பார்வை உணர்வு – உடல், வாய், நாசி, கண்.


ஐந்தறிவு – குரங்கு, மாக்கள் – தொடு உணர்வு, சுவை உணர்வு, நுகரும் உணர்வு, பார்வை உணர்வு, கேட்கும் உணர்வு – உடல், வாய், நாசி, கண்,காது.


ஆறறிவு – மனிதன் – மேலே உள்ள அனைத்து உணர்வுகளுடன் ஏதோ ஒன்று இவனுக்கு சிறப்பாக இருக்கின்றது.

இதுவே தமிழ் அறிவியல் உயிரினங்களை பிரித்து இருக்கும் முறையாகும். இப்பொழுது நாம் மேலே கண்ட எடுத்துக்காட்டுகளை இந்த அறிவுப் பிரிவுகள் மூலம் பார்க்கலாம்.

மரம் தனக்குத் தேவையான தண்ணீரை தேடி வேர்களை அனுப்புகின்றது. வேர் நீரினை தொடுவதன் மூலம் அறிந்துக் கொள்கின்றது. ஒரு வேளை நீர் இல்லாவிடில் மரம் இறந்துப் போகுமே அன்றி என்னத்தான் முயன்றாலும் அதனால் அடுத்த அறிவிற்கு உரிய உறுப்பினை பெற முடியாது. அதன் அறிவு என்பது அதன் உடலினை அடிப்படையாகக் கொண்டது.

அதேப் போலவே மற்ற உயிர்களும் தங்களிடம் உள்ள புலன்களின் மூலம் மட்டுமே தங்களின் பிழைப்பிற்கு வழித் தேடுமே அன்றி மற்றொரு அறிவு நிலைக்கு உரிய புலன்களை அவை பெறுவதில்லை. அவற்றின் புலன்கள் அனைத்தும் பயனற்று போகும் நிலையில் அவை மரணத்தினைச் சந்திக்கின்றன.

இங்கேத் தான் நாம் மனிதனை சற்று பார்க்க வேண்டி இருக்கின்றது. அவனை ஆறறிவு படைத்த நிலையிலும் வைத்து இருக்கின்றனர். ஐந்தறிவு படைத்த நிலையிலும் வைத்து இருக்கின்றனர்.

மேலும் ஐந்தறிவு வரை புலன்களின் அடிப்படையில் உயிரினங்களை பிரித்து இருந்தோம். அந்த அந்த புலன்களுக்கு என்ன உறுப்புகள் என்பது நமக்கு தெரியும். ஆனால் மனிதனை ஆறாம் அறிவினை உடையவனாக கூறி இருக்கின்றனர். ஆனால் அந்த அறிவிற்கு உரிய உறுப்பு எது?

இந்தக் கேள்விக்கு பதில் தெரியாமல் தான் ஐரோப்பிய அறிவியல் மனிதனும் விலங்கு தான் என்கின்றது. காரணம் விலங்குகளின் உள்ள அதே உறுப்புகள் தான் மனிதனிடமும் இருக்கின்றன. அதன் செயல்பாடுகளும் ஒன்றினைப் போலவே இருக்கின்றன. ஆனால் காலப் போக்கில் மனிதன் பரிணாம வளர்ச்சியின் படி ஏதோ நிலையில் சற்று உயர்ந்தவனாகி விட்டான் என்கின்றது. ஏன் மனிதன் அவ்வாறு இருக்கின்றான் என்று அதற்கு தெரியவில்லை. காரணம் ஐரோப்பிய அறிவியல் உயிரினை அறியவில்லை. மனதினையும் அறியவில்லை!!!

எனவே தான் உடலினைப் பற்றி ஆராய்ந்துக் கொண்டு இருக்கும் ஐரோப்பிய அறிவியலால் உடல் எவ்வாறு இயங்குகின்றது என்றக் கேள்விக்கு பதில் சொல்ல முடிகின்றது ஆனால் உடல் எதனால் இயங்குகின்றது? என்றக் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை.மேலும்  உயிருடன் பேசிக் கொண்டு இருக்கும் ஒருவனுக்கும் உயிரற்ற ஒருவனுக்கும் என்ன வித்தியாசம்? என்றும் அதனால் பதில் கூற முடியவில்லை.

அந்தக் கேள்விகளுக்கு தமிழ் அறிவியலில் விடை இருக்கின்றதா…

 

***
உடல் ஒரு அற்புதமான இயந்திரம் என்றே நாம் கண்டு இருக்கின்றோம். பல்வேறுப் பணிகளை செம்மையாக செய்வதற்கு ஏற்றக் கருவிகளை கொண்டே அது அமைந்து இருக்கின்றது. உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பிற்கும் அதற்கென்று தனிப்பட்ட செயல்கள் இருக்கின்றன. அனைத்து உறுப்புகளும் சரியாகச் செயல்படும் பொழுது உடலின் செயலும் சீராக இருக்கின்றது. மாறாக ஏதேனும் ஒரு உறுப்பு பழுதடைந்து விட்டால் உடலில் அவ்வுறுப்பு செய்ய வேண்டிய பணிகளில் குறை நேர்கின்றது. உடல் தனது முழு திறனுடன் இயங்க முடியாத நிலை வருகின்றது.

உதாரணத்திற்கு, கண்கள் செம்மையாக இயங்கும் பொழுது உடலால் பிற பொருட்களைக் காண முடியும். மாறாக கண்கள் பழுதடைந்து இருந்தால் உடலால் பிற பொருட்களைக் காண முடியாது. நிற்க.

இப்பொழுது ஒரு கேள்வி…

உயிருள்ள உடலுக்கும் உயிரற்ற உடலுக்கும் என்ன வித்தியாசம்?

“அட என்னங்க…உயிர் உள்ள உடல் இயங்கிக் கொண்டு இருக்கும். உயிர் அற்ற உடல் இயங்காது…சில தினங்களுக்குள் மக்கிப் போய் விடும்…இந்த வித்தியாசத்தைக் கூடவா தெரியாமல் இருப்பார்கள்” என்கின்றீர்களா…சரி தான்!!!

உயிர் உள்ள உடல் இயங்கிக் கொண்டே இருக்கின்றது. உயிரற்றதோ வெறும் சடலமாக இயக்கமின்றி கிடக்கின்றது. இரண்டிலும் உறுப்புகள் இருக்கின்றன…ஆனால் உயிருள்ள உடல் இயங்கிக் கொண்டு இருக்கின்றது….உயிரற்ற உடலோ இயங்காமல் அழிந்துக் கொண்டு இருக்கின்றது.

இந்நிலையில் ஏன் இந்த வேறுபாடு என்றே நாம் கண்டோம் என்றால் விடை உயிர் என்றே நமக்கு கிட்டுகின்றது.

உயிர் இருக்கும் வரை ஒரு உடல் அழியாது இயங்கிக் கொண்டு இருக்கின்றது. உயிர் இல்லாத உடலோ அதன் இயக்கம் நிற்கப் பெற்று அழியத் துவங்குகின்றது. இதன் மூலம் நாம் அறியக் கூடிய விடயங்கள் என்னவென்றால்,

1) உயிர் உடலினை இயக்கிக் கொண்டும் அழியாது பாதுகாத்துக் கொண்டும் இருக்கின்றது.
2) உயிர் இன்றி உடல் இயங்குவது இல்லை.
3) உயிரும் உடலும் சேர்ந்தால் தான் உயிரினங்கள் உருவாகப் பெறுகின்றன.


உடல் எனும் அற்புதமான இயந்திரத்தை உயிர் இயக்கிக் கொண்டு இருக்கின்றது. அவ்வாறு உடலின் உறுப்புக்களை இயக்குவதன் வாயிலாக உடல் அழியாது இருக்க உயிர் வழி செய்கின்றது.

உணவு செரிக்கப்படல், செரிக்கப்பட்ட உணவு இரத்தத்தோடு கலக்கப்படல், இரத்தம் சுத்தமாக்கப்படல், சுத்தமாக்கப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் அனுப்பப்படல், தேவையற்ற பொருள்கள் கழிவுகளாக வெளியேற்றப்படல், உடலுக்கு தீங்கு வராமல் அனிச்சைச் செயல்கள் நிகழ்த்தப்படல் ஆகிய இயல்பூக்கச் செயல்களை, உடலின் உறுப்புக்களை இயக்குவதன் மூலம் உயிர் செய்து கொண்டு இருக்கின்றது.

உயிர் இருக்கும் வரை அந்த செயல்கள் நடந்துக் கொண்டே இருக்கின்றன…உடலும் அழியாது இயங்கிக் கொண்டு இருக்கின்றது. ஆனால் உயிர் எப்பொழுது உடலினைப் பிரிகின்றதோ அப்பொழுது அந்த செயல்கள் எல்லாம் நிற்கப் பெற்று உடலும் அழியத் துவங்குகின்றது.

இது உயிருள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும்.
நாம் ஏற்கனவே சென்றப் பதிவினில் கண்டு இருக்கின்றோம், தமிழ் அறிவியல் உயிர்களை ஆறு விதமாக (ஓரறிவு உயிரினம் முதல் ஆறறிவு உயிரினம் வரை) பிரித்து உள்ளது என்று. இப்பிரிவுகள் அவ்வுயிரினங்கள் கொண்டுள்ள புலன்களின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டு உள்ளன.இந்த உயிரினங்கள் அனைத்திற்கும் உயிர் உண்டு.

அந்த உயிர் அவ்வுயிரினங்களின் உடலினை இயக்கியும் பாதுகாத்தும் கொண்டு இருக்கின்றது. மேலும் உயிரின் இயக்கம் ஒவ்வொரு வகையான உயிரினங்களுக்கும் வேறும் படுகின்றது.

அதாவது ஓரறிவு உயிரினங்களின் உயிர் செயல்படும் முறை வேறு…ஈரறிவு உயிரினங்களின் உயிர் செயல்படும் முறை வேறு. காரணம் அந்த உயிரினங்கள் வெவ்வேறு தன்மையை உடையவை. ஈரறிவு உயிரினம் கூடுதலாக சுவை உணர்வினை தரும் வாயினைப் பெற்று இருக்கின்றது…எனவே அவ்வுயிரினத்தின் உயிர் அந்த புலனையும் இயக்கும் தன்மைப் பெற்றதாக விளங்க வேண்டி இருக்கின்றது. இந்த வேறுபாடு அனைத்து வகையான உயிரினங்களுக்கும் பொருந்தும்.

எனவே அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் இருந்தாலும் உயிரின் செயல்பாடுகள் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஏற்ப மாறுபடுகின்றது.

உதாரணத்திற்கு கடலில் வாழும் உயிரினங்களின் உடல் நீரில் வாழ்வதற்கு ஏற்பவே அமைந்து இருக்கின்றது. உயிர் அந்த உடலினை இயக்குகின்றது. நீரில் இருக்கும் வரை உடலின் துணைக் கொண்டு உடலினை இயக்குவதற்குரிய ஆற்றலை உயிர் பெற்றுக் கொண்டு உடலினை அழியாது பாதுகாக்கின்றது.

ஆனால் அதே உயிரினம் எப்பொழுது நீரில் இருந்து வெளியேறி தரைக்கு வருகின்றதோ, அப்பொழுது அந்த உயிரினால் உடலை இயக்க முடிவதில்லை. காரணம் தரையில் இருந்து இயங்க அந்த உடலுக்கு ஆற்றல் இல்லை…அந்த உடலின் உறுப்புகளும் தரையில் இயங்குவதற்கு பயன்படுவதில்லை. இந்நிலையில் உயிர், அந்த உடலின் உறுப்புகளை தன்னால் இயன்ற அளவு பயன்படுத்த முயன்றும் பயன் இல்லாததால் இறக்கின்றது. காரணம் உயிர் அதன் சேவைக்கு கொண்டிருந்த கருவிகள் நிலத்தில் பயனற்றுப் போய் விடுகின்றன. நிற்க.

எனவே ஒவ்வொரு உயிரினத்தின் உடலிற்கேற்ப உயிர் இயங்குகின்றது என்றே நாம் அறிகின்றோம். இந்நிலையில் ஒரு உயிர் மற்றொரு உயிராக மாறுவது என்பது இயலாத காரியம். ஏனென்றால் உடலின் தன்மைகேற்பவே உயிரால் உடலை இயக்க முடியும். ஈரறிவு உயிரினத்தின் உடலில் மூன்றாம் அறிவிற்கான புலனாகிய நாசியினை பயன்படுத்தவோ/உருவாக்கவோ உயிரால் முடியாது. நிற்க.

உடலிற்கேற்ப உயிரின் செயல்பாடுகள் அமைந்து இருக்கின்றது என்றும், ஒரு உயிர் மற்றொரு உயிராக மாறுவது இயலாத காரியம் என்றும் நாம் கண்டு இருக்கின்றோம். சரி…இப்பொழுது அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் இருக்கின்றது என்று நாம் கண்டு இருக்கின்றோம். அவை புலன்களுக்கு ஏற்ப ஓரறிவு முதல் ஆறறிவு வரை பிரிக்கப்பட்டும் இருக்கின்றன என்றும் நாம் கண்டு இருக்கின்றோம். இந்நிலையில் தான் நாம் மனிதனைப் பற்றி பார்க்க வேண்டி இருக்கின்றது.

காரணம் அவனை ஐந்து அறிவுடையவனாகவும் வைத்து இருக்கின்றனர், ஆறறிவு உடையவனாகவும் வைத்து இருக்கின்றனர். மேலும் மனிதனும் ஒரு வகை மிருகம் என்றும் சிலர் கூறுகின்றனர். அது ஏன் என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.

அதற்கு ஆறாம் அறிவைப் பற்றி நாம் காண வேண்டி இருக்கின்றது…!!!

***

தமிழ் அறிவியலில் உயிரை புலன்களின் அடிப்படையில் பிரித்து வைத்து இருக்கின்றனர் சரி. தொடு உணர்வு மட்டுமே இருக்கும் உயிர்களை ஓரறிவு உயிர்கள் என்றும் ஐம்புலன்களும் இருக்கும் உயிர்களை ஐந்தறிவு உயிர்கள் என்றும் கூறி உள்ளனர் சரி. ஆனால் மனிதனை மட்டும் ஆறறிவு படைத்த உயிரினமாக கூறி இருக்கின்றனரே…அது ஏன்? அவன் ஆறாவது அறிவினை உடையவன் என்றால் அந்த அறிவிற்கு உரிய உறுப்பு ஏது? ஆறாவது அறிவு என்றால் என்ன?

இப்பொழுது இக்கேள்விகள் தான் நம் முன்னே நின்றுக் கொண்டு இருக்கின்றன.நியாயமான கேள்விகள் தான். புலன்களின் வழியாக உயிர்களைப் பிரித்து இருக்கின்றார்கள் என்று கூறும் பொழுது ஆறாவது அறிவு என்று ஒன்று உள்ளது என்று நாம் கூறினால் ஆறாவது அறிவிற்குரிய உறுப்பு எது என்றும் நாம் நிச்சயமாகக் கூறித் தானே ஆக வேண்டி இருக்கின்றது.

சரி இப்பொழுது அக்கேள்விக்கான விடையினைக்காண முயலலாம்.

ஐந்தறிவு படைத்த உயிரினங்கள் இருக்கின்றன. மனிதனும் ஐம்புலன்கள் கொண்டவனாக இருக்கின்றான். ஆனால் அவன் மற்ற உயிரினங்களில் இருந்து வேறுபட்டு நிற்கின்றான். மற்ற உயிரினங்கள் மாறாது இருக்கும் பொழுது இவன் மட்டும் மாறிக் கொண்டே இருக்கின்றான். இதற்கு என்ன காரணம் என்று கண்டால் மனிதனுக்கு பகுத்தறியும் தன்மை இருக்கின்றது என்பதே சிலர் கொடுக்கும் விடையாகும்.

அதாவது மனிதனால் நன்மை தீமை என்று பகுத்தறிய முடியும் ஆனால் மிருகங்களால் அவ்வாறு பகுத்தறிய முடியாது, எனவே தான் மனிதன் மிருகங்களில் இருந்து மாறுபட்டு இருக்கின்றான் என்றும் அந்த பகுத்தறியும் தன்மையே ஆறாவது அறிவு என்பதுமே இன்று பரவலாகப் பரவி இருக்கும் விடயமாகும்.

ஆனால் உண்மை என்னவென்றால் விலங்குகளாலும் பகுத்தறிய முடியும். ஒரு நாயின்  முன்னே மெழுகினால் செய்த ரொட்டியினை நாம் வைத்தோம் என்றால் அது அதனுடைய புலன்களைப் பயன்படுத்தி (முதலில் முகர்ந்து பார்க்கும் பின்னர் நாவினால் சோதித்துப் பார்க்கும்) அந்த ரொட்டி சாப்பிட தகுந்தது அல்ல என்று அறிந்துக் கொண்டு அந்த ரொட்டியினை உண்ணாது நகர்ந்துச் சென்று விடும். அதாவது அதனுடைய புலன்களை பயன்படுத்தி ஒரு பொருளானது தனக்கு நல்லதா இல்லை கெட்டதா என்று பகுத்தறிந்துக் கொண்டு நாயானது சென்று விடுகின்றது.

எனவே பகுத்தறிவு என்பதுமனிதர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதும் அதுவே தான் ஆறாவது அறிவு என்பதும் சரியான ஒரு விடயமாக அமையாது.

இந்நிலையிலேயே தான் உண்மையிலேயே ஆறாவது அறிவு என்ற ஒன்று இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது. ஆறாவது அறிவு என்ற ஒன்று இல்லை என்றுக் கூறும் நாத்திக நண்பர்களும் இருக்கின்றனர். அவர்கள் இக்கால அறிவியலை வைத்துக் கொண்டு ஆறாவது அறிவு இல்லை என்று கூறுகின்றனர்.

மனிதனும் ஒரு விலங்கு தான். ஆறாவது அறிவு என்பது எல்லாம் வெறும் கதை என்பதே அவர்களின் வாதமாக இருக்கின்றது.

ஆனால் ஆச்சர்யவசமாக இதே கருத்தைத் தான் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருந்த பவணந்தி முனிவரும் கூறிச் சென்றுள்ளார்… அவரது தமிழ் நூலான நன்னூலில்!!!

மெய்ந் நா மூக்கு நாட்டம் செவிகளின்
ஒன்று முதலாக் கீழ்க் கொண்டுமேல் உணர்தலின்
ஓர் அறிவாதியா உயிர் ஐந்தாம்” – நன்னூல் 444

என்று உயிர் ஐந்து வகைப் படும் என்று நன்னூலில் கூறி இருக்கும் அவர்,

வானவர் மக்கள் நரகர் விலங்கு புள்
ஆதிசெவி அறிவோ டையறி வுயிரே” – நன்னூல் 449

என்று விலங்குகளும் மனிதர்களும் ஐந்தறிவுப் படைத்தவர்கள் என்றே கூறிச் சென்று உள்ளார். அதாவது இவர் ஆறாவது அறிவு என்ற ஒன்று இருப்பதை மறுத்து உள்ளார்.

ஆச்சர்யவசமாக இவரும் ஒரு நாத்திகரே!!! நாத்திக சமயமான சமண சமயத்தைச் சார்ந்தவர் இவர்.

சிந்திக்கத்தக்க விடயம் தானே இது.

மக்கள் தாமே ஆறறிவுயிரே” (தொல்காப்பியம் 1532)

என்று தொல்காப்பியரால்ஆறறிவு படைத்தவனாகக் கூறப் பெறும் மனிதனை, அவனது ஆறாவது அறிவு என்ற விடயத்தை மறுத்து அவனை ஐந்தறிவு விலங்குகளோடு பவணந்தி முனிவர் கூறி இருக்கின்றார்.

மேலும் தொல்காப்பியரும் “மாவும் மாக்களும் ஐயறிவினவே” என்பதன் வாயிலாக மக்கள் சிலரை விலங்குகளுடனே வைத்து ஒப்பிட்டு இருக்கின்றார்.

இந்நிலையில் நாம் எவருடையக் கூற்றினை ஏற்றுக் கொள்வது? தொல்காப்பியரின் கூற்றையா அல்லது பவணந்தி முனிவரின் கூற்றையா என்றே நாம் எண்ணிக் குழம்பிக் கொள்ள மனம் இல்லாத தமிழ் அக்கேள்விக்கும் விடையினை சுமந்துக் கொண்டே இருக்கின்றாள்.

ஆம்…தமிழ் உயிரினை புலன்களின் அடிப்படையில் மட்டுமே பிரித்து இருக்கவில்லை. மாறாக திணைகளின் அடிப்படையிலும் பிரித்து தான் வைத்து இருக்கின்றாள்.

தமிழர்களின் திணை இலக்கணம் உயிர்களை இரண்டாகப் பிரிக்கின்றது.

1) உயர்திணை (மனிதர்கள்)
2) அஃறிணை (மனிதர்கள் அல்லாத மற்ற உயிரினங்கள்)

இப்பிரிவுகள் தமிழில் மட்டுமே இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். தமிழர்களின் திணை இலக்கணம் மனிதர்களை மற்ற உயிரினங்களிடம் இருந்து சிறப்பாகப் பிரித்துக் கூறுகின்றது.

இந்நிலையில் தான் நாம் மீண்டும் பவணந்தி முனிவரைச் சந்திக்க வேண்டி இருக்கின்றது. காரணம் மனிதர்களை ஐந்து அறிவு உடையவர்கள் என்று கூறிய அவர் தமிழ் திணை இலக்கணத்தை விளக்க வேண்டிய தருணத்தில்

மக்கள் தேவர் நரகர் உயர்திணை
மற்றுயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணைநன்னூல் 261

என்று மக்களை மற்ற உயிரினங்களிடம் இருந்து வேறுபடுத்தி உயர்த்திக் கூறி இருக்கின்றார்.

அதாவது மனிதனுக்கு ஆறறிவு என்ற ஒன்றுக் கிடையாது என்று அவனை ஐந்தறிவு படைத்தவன் என்று விலங்குகளுடன் ஒப்பிட்டுக் கூறிய பவணந்தி முனிவர், தமிழின் திணை இலக்கணத்தைக் கூறும் பொழுது மனிதன் விலங்குகளிடம் இருந்து மேலானவன் என்றே கூறிச் சென்றுள்ளார். இந்நிலையில் தான் நாம் சில விடயங்களைக் காண வேண்டி இருக்கின்றது.

கடவுள் நம்பிக்கையுள்ள தொல்காப்பியர் ஆறாவது அறிவு இருக்கின்றது என்றும் அதனை உடையவர்கள் மனிதர்கள் என்றும் கூறிச் சென்று உள்ளார். மேலும் அவரும் சில மனிதர்களை ஐந்தறிவு படைத்த மிருகங்களோடு வைத்தே கூறி உள்ளார்.

நாத்திகரான பவணந்தி முனிவரோ ஆறாம் அறிவை மறுத்து மனிதனும் விலங்கும் ஐந்தறிவு உடையவரே என்றே கூறி இருப்பினும் தமிழர்களின் திணை இலக்கணத்தைக் கூற விழையும் பொழுது மனிதர்களை விலங்குகளிடம் இருந்து பிரித்து உயர்த்திக் கூறி உள்ளார்.

இந்நிலையில் சில விடயங்களை நாம் கவனிக்க வேண்டி இருக்கின்றது.

1) மனிதன் விலங்குகளை விட உயர்ந்தவன் என்பதனை இருவருமே ஏற்றுக் கொள்கின்றனர்.
2) தொல்காப்பியர் ஆறாம் அறிவைப் பற்றிக் கூறும் பொழுது அதனை பவணந்தி முனிவர் மறுக்கின்றார்.
3) தொல்காப்பியரும் அனைத்து மனிதர்களும் ஆறாம் அறிவை உடையவர்களாகக் கூறிச் செல்ல வில்லை.

இதனடிப்படையில் நாம் சிந்தித்தோம் என்றால் மனிதன் மற்ற உயிர்களை விட உயர்ந்தவன் என்ற எண்ணம் ஒன்றாக இருந்தாலும் ஆறாம் அறிவைக் குறித்த நிலையில் கருத்து வேறுபாடுகள் இருப்பது தெரிகின்றது. ஏன் இந்த வேறுபாடு என்று நாம் கண்டோம் என்றால் ஆறாவது அறிவினை அனைத்து மக்களும் அறிவதில்லை என்றே தொல்காப்பியர் கூறிச் சென்று உள்ளார்.

அதாவது ஆறாவது அறிவு என்ற ஒன்று இருக்கின்றது என்று கூறிய அவர் அனைத்து மக்களும் ஆறறிவோடு இருக்கின்றனர் என்றுக் கூறவில்லை. சிலரை ஐந்தறிவு நிலையில் தான் வைத்து உள்ளார்.

“அட என்னடா இது…ஆறாவது அறிவு இருக்கு அப்படினு சொல்றாங்க ஆனா எல்லாராலும் உணர முடியாது அப்படின்னு சொல்றாங்க…இவங்க என்னதான் சொல்ல வராங்க” என்று நாம் குழம்புவதை விரும்பாது விடையினை தந்து தான் சென்றுள்ளார் மெய்கண்டார் அவர்கள், அவரது நூலான சிவஞானபோதத்தில்.

மாயா இயந்திர தனுவினுள் ஆன்மாசிவஞானபோதம் 3 (விளக்கம்)

என்று உடலினுள் ஆன்மா இருக்கின்றது என்றுக் கூறும் அவர்,

ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்சிவஞானபோதம் 8 (விளக்கம்)

என்பதன் வாயிலாக ஆன்மா ஐம்புலன்களோடு வளர்ந்து இருக்கின்றது என்றும்,

“…ஆன்மா சகசமலத் துணராதுசிவஞானபோதம் 4 (விளக்கம்)
“…உணர்த்த உணர்தலின்சிவஞானபோதம் 3 (விளக்கம்)

அந்த ஆன்மாவானது தன்னை அறியாது இருக்கின்றது என்றும் கூறுகின்றார்.

அதாவது உடலினுள் இருக்கும் ஆன்மாவானது, ஐம்புலன்களுடன் இணைந்து தன்னை அறியா நிலையில் இருக்கின்றது என்பதே அவர் கூறும் கருத்தாகும்.

ஐம்புலன்களுடன் இருக்கின்றது என்றால் நிச்சயம் அந்த உயிரினம் ஐந்தறிவு பெற்றதாக இருக்க வேண்டும். அவ்வாறுப் பார்த்தோம் என்றால் விலங்குகளும் மனிதர்களுமே தான் வருகின்றனர். ஆனால் விலங்குகள் வெறும் ஐந்தறிவுப் படைத்தவையாகவே அறியப்பட்டு இருக்கின்றன. ஆனால் மனிதனோ விலங்குகளை விட உயர்ந்தவனாகவும், ஆறாவது அறிவினை உடையவனாகவும் அறியப்பட்டு இருக்கின்றான்.

இந்நிலையில் மனிதனை மற்ற உயிரினங்களிடம் இருந்து பிரித்து அவனைச் சிறப்பிக்கும் ஆறாவது அறிவு என்பது ஆன்மா தான் என்றே நாம் கருத வாய்ப்பு இருக்கின்றது தானே.

அந்த வாய்ப்பைத் தான் நாம் சிறிது ஆராய வேண்டி இருக்கின்றது.

ஆறாவது அறிவு ஆன்மாவா?

காண்போம்….!!!

பி   .கு:

ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன.
***

ஆறாவது அறிவிற்கு காரணமாக ஆன்மா விளங்கலாம் என்றே கண்டு இருந்தோம். இப்பொழுது அக்கூற்று சரியான ஒன்றா என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு ஆன்மா என்றால் என்ன என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நமக்கு துணையாய் மெய்கண்டாரின் சிவஞானபோதம் என்ற நூல் நிற்கின்றது. அதன் வழியே கண்டோம் என்றால்,

1) ஆன்மாவானது உடலினுள் இருக்கின்றது

  • “மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா” – சிவஞானபோதம் 3

2) ஐம்புலன்களை கட்டுப்படுத்தி வைத்துக் கொண்டு இருக்கின்றது

  • “ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின்” – சிவஞானபோதம் 3
  • “ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்” – சிவஞானபோதம் 8

3) தன்னை அறியாத நிலையில் அது இருக்கின்றது

  • “….ஆன்மா சகசமலத் துணராது” – சிவஞானபோதம் 4

4) இறைவன் உணர்த்தினால் இறைவனை உணரும் தன்மைக் கொண்டு இருக்கின்றது

  • “….உணர்த்த உணர்தலின்” -சிவஞானபோதம் 3

என்றே நாம் ஆன்மாவைப் பற்றி அறிய முடிகின்றது. இப்பொழுது இதை நாம் சிறிது விரிவாகப் பார்க்கலாம்.

ஆன்மா என்பது ஐம்புலன்களை கட்டுப்படுத்தும் வல்லமைப் பெற்றது என்றே நாம் அறியப்பெறுகின்றோம். ஐம்புலன்களைக் கட்டுப் படுத்த வேண்டும் என்றால் முதலில் ஐம்புலன்கள் இருக்க வேண்டும். சரி தானே. அப்படிப்பார்த்தால்,

ஓரறிவு முதல் நான்கறிவு படைத்த உயிரினங்கள் அனைத்தும் அடிப்பட்டு போய்விடுகின்றன. அவற்றிற்கு ஆன்மா கிடையாது. சரி இப்பொழுது மீதம் இருப்பது ஐந்தறிவு உயிரினங்களும் மனிதர்களும் தான். இவைகளுள் நாம் கண்டோம் என்றால் ஐந்தறிவினைக் கட்டுப்படுத்தும் தன்மை மனிதர்களுக்கு மட்டுமே இருக்கின்றது என்பது தெள்ளத்தெளிவான ஒரு விடயம். மேலும் மனிதன் விலங்குகளை விட சிறந்தவனாகவும், ஆறாவது அறிவினை உடையவனாகவும் அறியப்பட்டு இருக்கின்றான். அனைத்து உயிரினங்களையும் கண்டு அவற்றை ஆளும் வல்லமையையும் அவன் பெற்று இருக்கின்றான். அவன் மாறிக் கொண்டே இருக்கின்றான். ஆனால் வெறும் ஐந்தறிவுப் படைத்த மிருகங்களோ அவை தொடக்கத்தில் எவ்வாறு இருந்தனவோ அவ்வாறு தான் இன்றும் தொடர்ந்து இருந்துக் கொண்டு வந்து இருக்கின்றன.

இதனை நாம் காணும் பொழுது ஐந்தறிவினைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் மனிதன் ஒருவனுக்கே உள்ளது என்றே அறிந்துக் கொள்ளுகின்றோம். அதாவது ஆன்மா என்பது மனிதர்களுக்கு மட்டுமே இருக்கும் ஒரு விடயம். மற்ற உயிரினங்களுக்கு ஆன்மா கிடையாது.

அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் இருக்கின்றது…ஆனால் ஆன்மா மனிதனுக்கு மட்டுமே இருக்கின்றது என்றும் அதுவே மனிதனின் மேலாண்மைக்கு வழி வகுக்கின்றது என்றுமே நாம் அறிந்துக் கொள்கின்றோம்.

சரி ஆன்மா உடலினுள் இருக்கின்றது சரி…ஆனால் ஆன்மா செய்யும் செயல் என்ன என்றே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.

ஐம்புலன்களைப் பற்றி நாம் விவரிக்கத் தேவை இல்லை. ஒவ்வொருப் புலனும் ஒவ்வொரு வேலையைச் செய்கின்றது. கண் காட்ட உதவுகின்றது. மூக்கு நுகர உதவுகின்றது…இதனைப் போல ஒவ்வொரு புலன்களுக்கும் ஒவ்வொரு செயல்கள் இருக்கின்றன. அவ்வொவ்வொரு செயல்களும் ஒரு அறிவிற்கு காரணமாக இருக்கின்றன.

அவ்வாறு பார்த்தோம் என்றால் ஆறாம் அறிவு என்று ஒன்று இருந்தால் அந்த அறிவிற்கான உறுப்பும் நிச்சயமாக இருக்க வேண்டும் அல்லவா. அந்த உறுப்பினைத் தான் ஆன்மா என்கின்றனர் ஆன்மீகவாதிகள். சரி ஆறாவது அறிவிற்கான உறுப்பு ஆன்மா என்றே இருக்கட்டும், ஆனால் அந்த உறுப்பினால் பெறப்படும் ஆறாவது அறிவு என்பது என்ன என்ற கேள்விக்கு அவர்கள் விடையாய் தருவது,

ஆறாவது அறிவு என்பது இறைவனை உணரும் அறிவு என்பதே ஆகும். அவ்வாறு இறைவனை உணர உதவும் கருவியே ஆன்மா ஆகும் என்பதே அவர்களின் கூற்று.

அதாவது மனிதனின் ஆறாவது அறிவுக்கு காரணமான ஆன்மாவினால் மட்டுமே இறைவனை அறிந்துக் கொள்ளும் ஞானத்தை ஒருவன் பெற்றுக் கொள்ள முடியும்.

சரி…மனிதர்களுக்கு மட்டுமே ஆன்மா இருக்கின்றது, அதனால் தான் அவர்கள் உயர்திணை என்று தமிழால் உயர்த்தப்பட்டு இருக்கின்றனர் என்றும் ஆன்மாவின் வாயிலாக இறைவனை அறிந்துக் கொள்ளலாம் என்றுமே வைத்துக் கொள்வோம்…அப்படி இருக்கையில் மனிதர்களை ஐந்தறிவுப் படைத்த விலங்குகளோடும் தமிழ் அறிவியலில் வைத்து இருக்கின்றனரே…அது ஏன் என்றே கேள்வியை நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.

ஒருவருக்கு கண் இருக்கின்றது. ஆனால் கண் செயல்படாமல் இருக்கின்றது. இந்நிலையில் அவர் ஐந்தாவது அறிவிற்கான உறுப்பினைப் பெற்று இருந்தும் அதன் வழியாகப் பெறக் கூடிய அறிவினைப் பெற இயலாத நிலையில் இருக்கின்றார்.

அதனைப் போன்று தான் மனிதர்களும் ஆன்மாவினைப் பெற்று இருந்தும் அதனை அறியாத நிலையில் ஆறாவது அறிவான இறைவனை உணரும் ஞானத்தை அடையாது விலங்குகளைப் போல் ஐந்தறிவினை வைத்துக் கொண்டு வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றனர். அதனால் தான் அம்மக்களை மாக்கள் என்று தமிழ் அறிவியல் அழைக்கின்றது.

அதாவது அம்மக்களுக்கு ஆறாம் அறிவுக்குரிய ஆன்மா இருக்கின்றது, இருந்தும் அந்த ஆன்மாவானது தன்னை அறிந்துக் கொள்ளாமல் ஐம்புலன்களின் வழியே செயல் ஆற்றிக் கொண்டே இருக்கின்றது. அதனால் இறைவனை அறிந்துக் கொள்ள இயலாத அந்நிலையில் அம்மக்களை மாக்கள் என்ற நிலையில் தமிழ் வைத்து இருக்கின்றது.

ஆறாவது அறிவான இறைவனை உணரும் ஞானத்தை பெற்றவர்களையே மக்கள் என்று தமிழ் வழங்குகின்றது.

கண் இருந்ததும் கண் தெரியவில்லை என்றால் அது ஏதாவது நோயாக இருக்கலாம்…இல்லை கண் குறைபாடு உடையதாக இருக்கலாம். ஆனால் ஆன்மா சரியாக வேலை செய்ய வில்லை அதனால் இறைவனை அறிய இயலவில்லை என்றுக் கூறுவது எங்கனம்? ஆன்மா குறை உடையதாக இருக்குமா என்ற கேள்வி இங்கே எழலாம்.

அதற்கு விடையாக ஆன்மீகவாதிகள் கூறுவது என்னவென்றால் ஆன்மாவானது மாயையினால் சூழப் பட்டு இருக்கின்றது (சகசமலம்), அதனாலேயே தான் அது தன்னையும் சரி இறைவனையும் சரி அறியாத நிலையில் இருக்கின்றது.

ஆனால் எப்பொழுது இறைவன் ஆன்மாவிற்கு தன்னை உணர்த்துகின்றானோ அப்பொழுது ஆன்மாவானது இறைவனை உணர்ந்து அவனின் அடிப்பற்றி செல்ல ஆரம்பிக்கும் என்பதே ஆகும். அந்நிலையில் ஆன்மா என்பது மனிதர்களுள் இறைவன் குடி கொண்டு இருக்கும் கோவிலாக மாறும் என்றுமே ஆன்மிகம் பேசுவோர் கூறி இருக்கின்றனர்.

//உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? – I கொரிந்தியர் 6:19- இது பவுலின் கூற்று.

உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே. – திருமந்திரம் – இது திருமூலரின் கூற்று.

இதனைப் பற்றி விரிவாக காண நாம் சிவஞானபோதத்தைக் காண வேண்டி இருக்கின்றது. அதனைப் பின்னர் காணலாம்.

இப்பொழுது,

ஆன்மாவானது மனிதர்களிடம் மட்டுமே இருக்கின்றது என்றும் அதுவே அவர்களின் ஆளுமைக்கும் ஆறாம் அறிவிற்கும் காரணம் என்றும் ஆன்மாவின் வாயிலாகவே இறைவனை உணர முடியும் என்றுமே அறிந்து இருக்கின்றோம்.

ஆனால் ஆன்மாவானது தன்னையும் இறைவனையும் அறியாத நிலையில் இயல்பாகவே ஆன்மா இல்லை என்றும் இறைவன் இல்லை என்றும் கருத்துக்கள் உலகில் எழுந்துக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் எப்பொழுது ஆன்மாவினை சூழ்ந்து இருக்கும் மாயையினை இறைவன் அகற்றுகின்றாரோ அப்பொழுது ஆன்மாவானது இறைவனை உணர்ந்துக் கொண்டு மெய்யுணர்வுப் பெறும் என்பதே தமிழ் கூறும் ஆன்மவியலின் கருத்து.

இதையேத் தான் மெய்கண்டார்

“ஊனக்கண் பாசம் உணராப் பதியை
ஞானக் கண்ணினில் சிந்தை நாடி” – சிவஞானபோதம் 9

ஐம்புலன்களில் ஒன்றான கண்ணினைக் கொண்டு காண இயலாத இறைவனை ஞானக் கண் கொண்டு காணலாம் என்றும்,

திருவள்ளுவர்,

“ஐயுணர்வு எய்திய கண்ணும் பயமின்றே

மெய்யுணர்வு இல்லா தவர்க்கு” – குறள் 354

என்றும்

“இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு” குறள் 352

கூறிச் சென்று உள்ளனர்.

மேலும் சிலர் உயிரும் ஆன்மாவும் ஒன்று என்று கருதிக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் அக்கூற்று தவறென்று தமிழ் அறிவியல் தெளிவாக விளக்கிக் கொண்டு இருக்கின்றது.

உயிர் என்பது வேறு ஆன்மா என்பது வேறு.
இந்த விடயத்தைத் தான் தமிழ் அறிவியல் மிகவும் தெளிவாகக் கூறிக் கொண்டு இருக்கின்றது. அதனை அறிந்துக் கொள்ளாது உயிரினையும் சரி உடலினையும் சரி ஆன்மாவினையும் சரி தெளிவாக நம்மால் அறிந்துக் கொள்ள இயலாது.

உயிர்கள் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவாக இருக்கின்றது. ஆனால் ஆன்மா என்பது மனிதனுக்கு மட்டுமே உரிய ஒன்றாக இருக்கின்றது. ஆன்மா இருக்கும் காரணத்தினால் தான் மனிதனால் மற்ற உயிரினங்களை ஆட்சிப் புரிய முடிகின்றது. ஆன்மா இருப்பதினால் தான் அவனால் மாற்றங்களைப் புரிய முடிகின்றது. ஆன்மா அவனுக்கு சுயமாக முடிவு செய்யும் தன்மையை வழங்குகின்றது. ஆனால் ஆன்மாவையும் இறைவனையும் உணராத நிலையில் மனிதன் தவறுகளை செய்ய எத்தனிக்கின்றான்…எப்பொழுது இறைவன் அவனுக்கு உணர்த்துகின்றாரோ அப்பொழுது அவனது ஆன்மா விழிப்படைந்து அவன் ஞானம் பெறுகின்றான். இறைவனை அடைகின்றான்.

இது தான் தமிழக ஆன்மீகமும் அறிவியலும் கூறும் விடயமாகும்.

ஆனால் இதனை அறியாது வெறும் உடலினை வைத்து மட்டுமே ஆராய்ந்துக் கொண்டு இருக்கும் ஐரோப்பிய அறிவியல் மனிதன் ஒரு மிருகம் என்றும் அவன் மிருகத்தில் இருந்து பரிணாம மாற்றத்தால் உருவானான் என்றும் கூறிக் கொண்டு இருக்கின்றது.

உயிரையும் சரி ஆன்மாவையும் சரி ஐரோப்பிய அறிவியல் இன்னும் ஆராயத் துவங்கவே இல்லை. ஆனால் தமிழிலோ, உயிரைப் பற்றிய ஆராய்ச்சிகள் முற்றுப் பெற்று ஆன்மீகத்தைப் பற்றிய ஆராய்ச்சிகளும் வளர்ந்துக் கிடக்கின்றன. ஆனால் தமிழும் தமிழனும் அடிமைப்பட்டுக் கிடப்பதால் இந்த விடயங்கள் வெளிவராமலே இருக்கின்றன.

ஆன்மாவினைப் பற்றிய அறிவியலான ஆன்மவியல் தமிழிலே மட்டுமே வளர்ந்து இருக்கின்றது. இதனை அறியாது தான் ஐரோப்பிய அறிவியல் இன்னும் உடலினை வைத்துக் கொண்டு குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்றுக் கூறிக் கொண்டு இருக்கின்றது.

தமிழ் அறிவியல் வெளிவரும் வரை அந்நிலையும் சரி அக்கூற்றும் சரி தொடர்ந்து இருந்துக் கொண்டே தான் இருக்கும்.

அதனை வெளிக்கொணர வேண்டியக் கடமை நமக்கு இருக்கின்றது. முயல்வோம்…!!!

இத்துடன் இத்தொடர் முடிவு பெறுகின்றது. தொடர்ந்து படித்தமைக்கு நன்றி நண்பர்களே…!!!உங்களின் கேள்விகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன.

முற்றும்.

பி.கு:

(ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்)

 

 

***

 

நன்றி:   http://vazhipokkanpayanangal.blogspot.in/

Advertisements

One thought on “உடலும் உயிரும் ஆன்மாவும் அறிவியலும் !!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.