பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை – திருக்குறள் ஆராய்ச்சி

பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை – திருக்குறள் ஆராய்ச்சி

நன்றி “சென்னை வானொலி நிலையம்”

பதிவு செய்த நாள் : 18/10/2011

பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை – திருக்குறள் ஆராய்ச்சி

தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள் காலத்தால் அழியாத கருவூலம்; உள்ளுதொறும் உள்ளுதொறும் உயர் எண்ணங்களை விளைவிக்கும் உயர்நூல்; எழுதப்பட்டது ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட அக்காலத்தில்தான் என்றாலும் எக்காலத்திலும் ஏற்றம் தரும் வாழ்வியல் இலக்கியம்; உலகிலே எண்ணற்ற நூல்கள் தோன்றிவரினும் உலக நூலாகக் கருதக்கூடிய ஒரே ஒப்புயர்வற்ற அறநூல். ஒப்புயர்வற்ற திருக்குறளில் முற்றும் துறைபோகிய புலனழுக்கற்ற புலவர் பெருமானாய்த் திகழ்ந்தவர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள்.

தொல்காப்பியம், சங்கஇலக்கியங்கள், திருக்குறள் ஆகியவற்றை  ஆய்ந்தாய்ந்து அகன்ற அறிவுசான்ற சான்றோராக ஒருபுறமும் அவற்றைப் பாரெங்கும் பரப்பும் அருந்தமிழ்த் தொண்டராக மறுபுறமும் பேராசிரியர் சி.இலக்குவனார் திகழ்ந்தார். கடமையில் இருந்து வழுவாக் கல்வி ஆசானாகவும் தமிழ்நெறியைப் போற்றும் புலமையாளராகவும் உயர்தமிழுக்கு வரும் கேட்டினை உடைத்தெறியும் உரையாளராகவும் மக்களிடையே நல்ல தமிழைக் கொண்டு செல்லும் இதழாளராகவும் எங்கும் தமிழை ஏற்றம் பெறச்  செய்யும் போராளியாகவும் பன்முகப்பாங்குடன் திகழ்ந்த பேராசிரியர் அவர்களின் திருக்குறள் ஆராய்ச்சியைப்பற்றி மட்டும் ஈண்டுப் பார்ப்போம்.

ஆராய்ச்சிப்பாதைக்குக் கால்கோளிட்ட பள்ளிப்பருவம் 

பள்ளிப்பருவத்திலேயே பேராசிரியர் திருக்குறள் பாக்களை எளிதில் பயன்படுத்தும் சொல்வன்மையைப் பெற்றார். திருக்குறளைப் பலர் அறியாக் காலத்திலேயே அதனை மக்களிடையே பரப்பும் பணியில் ஈடுபட்டார். அப்பொழுது அவர் பெற்ற ஊக்கம் திருக்குறளைப் பரப்புவதை வாழ்நாள் கடமையாகக்  கொள்ளுமாறு செய்தது. பரப்புரைக்கான சொற்பொழிவுச் சிந்தனைகளும் கட்டுரை வன்மைகளும் அவரின் திருக்குறள் ஆராய்ச்சிப் பணியைச் செம்மையுறச் செய்தன.

இதழ்கள் வழி ஆராய்ச்சி 

இலக்கிய இதழ்களுக்கும் மலர்களுக்கும் திருக்குறள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியனுப்பிய பேராசிரியர் சி.இலக்குவனார், பல்வேறு இதழ்கள் நடத்தியும் தமிழ்த்தொண்டாற்றி உள்ளார். இலக்கியம், சங்க இலக்கியம், திராவிடக் கூட்டரசு, Dravidian Federation, குறள்நெறி (திங்களிதழ்), குறள்நெறி (திங்கள் இருமுறை இதழ்), Kuralnery (Bi-monthly), குறள்நெறி (நாளிதழ்) ஆகிய இதழ்கள் வாயிலாகத் தமிழ் பரப்புப் பணியை மேற்கொண்ட பேராசிரியர்  குறள்நெறி பரப்பும் தளமாகவும் இவற்றை அமைத்துக் கொண்டார். இவற்றுள் திருக்குறள் உரைகள் பற்றியும் கால ஆராய்ச்சி பற்றியும் கட்டுரைகள் எழுதி உள்ளார்.

புதுக்கோட்டையில் திருவள்ளுவர் கழகத்தின் மூலம் ‘குறள்நெறி’ எனத் தனிச் சுற்றுத்திங்களிதழும் நடத்தினார். இவ்விதழ் ‘தனி மனிதப்  படை’யாகத் திகழும் வண்ணம் திருக்குறள் விளக்கம்,  திருக்குறள்  விளக்கக் கதை பொதிபாடல், குறள் ஆராய்ச்சிக் கட்டுரைகள், குறள் உரைகளில் திருவள்ளுவருக்கு முரணாக இடம் பெற்றுள்ள மாறுபாடுகளும் அவற்றால் தமிழுக்கு ஏற்பட்டுள்ள ஊறுபாடுகளும் பற்றிய கட்டுரைகள் எனப் பலவற்றைத் தாமே படைத்தளித்துக் குறள்  விருந்து வழங்கினார். . . . பேராசிரியர் படைத்த ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஆராய்ச்சி அறிஞர்களாலும் தமிழ் ஆர்வலர்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டுத் தமிழன்னையின் வாட்டத்தைப் போக்கின.[1] திருக்குறள் ஆராய்ச்சியில் இவருக்கெனத் தனியிடத்தை இவை பெற்றுத்தந்தன.

எக்காலத்திற்கும்  ஏற்ற உரை 

தெய்வப்புலவர் திருவள்ளுவர் எக்காலத்திற்கும் ஏற்றவாறு திருக்குறள் நூலை அளித்துள்ளதுபோல் இருபதாம் நூற்றாண்டுத் திருவள்ளுவரான பேராசிரியர் சி.இலக்குவனாரும் எக்காலத்திற்கும்  ஏற்றவாறு உரை எழுதியுள்ளார்; முடியாட்சியில் வாழ்ந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர் தரும் அறவுரைகள் குடியாட்சியிலும் பொருந்தும் வகையில் நன்கு விளக்கம் தருகிறார். சில நேர்வுகளில் திருவள்ளுவர் கால மன்னராட்சிச் சூழலில் அவர் கூறியுள்ளார் எனக் குறிப்பிடினும் இன்றைய மக்களாட்சிக்கு எவ்வாறு மிகச் சரியாகப் பொருந்துகின்றது என்ற முறையிலும் விளக்கம் தருகிறார். பேராசிரியர் திருவள்ளுவர் பார்வையில் இன்றைக்குப் பொருந்தும்முறையை விளக்கி இருப்பார். அல்லது தம் கருத்துகளைத் தம் கருத்துகளாகவே தெரிவித்து அவை திருக்குறள் கருத்துகளுக்கு ஏற்றனவாக அமையும் வகையை விளக்கி உள்ளார்.

உரைநயம் உணர்த்தும் உரை வளம் 

இருபாலருக்கும் பொதுவாகவும் பெண்மையை உயர்த்தியும் சிறப்பான விளக்கவுரை அளித்துள்ளார். சில சொற்களுக்கு அவர் தரும் விரிவான விளக்கம் அவரின் நுண்மாண்நுழைபுலத்தை நன்கு புலப்படுத்துகின்றது. திருவள்ளுவர் தமிழ்மொழி, தமிழ்இனம் என்றெல்லாம் சாராமல் திருக்குறளைப் படைத்திருந்தாலும் விளக்கம் அளிக்கையில் தமிழ் உணர்வை ஊட்டும் வகையில் இன்றைய தேவைக்கேற்ப குறள் நெறி அறிஞர் இலக்குவனார் படைத்துள்ளார்; ஆனால், உலகப் புலவர் திருவள்ளுவரைப் புரிந்து கொண்டு இணக்கமான உரை தந்துள்ளார்.

பேராசிரியரின் ஆராய்ச்சிப் புலமை 

எல்லாரும் இந்நாட்டு அரசர், அமைச்சர் யார்?,  திருக்குறள் எளிய பொழிப்புரை, வள்ளுவர் கண்ட இல்லறம்  அல்லது காதல் வாழ்க்கை, வள்ளுவர் வகுத்த அரசியல் என்னும் தலைப்பிலான திருக்குறள் விளக்க நூல்கள் பேராசிரியரின் ஆராய்ச்சிப்புலமையைத் தெள்ளிதின் வெளிப்படுத்துகின்றன. தள்ளற்பாலன சாற்றும் இயல், அறிவன தெரிவன அறையும் இயல், கொள்ளற்பாலன கூறும் இயல் என்ற முறையில் திருக்குறள் அதிகாரங்களைத் தொகுத்துத் தரும் முறையும் அதிகாரங்களுக்கான விளக்கங்களும் திருக்குறள் கருத்துகளுக்கு மாறுபடாத பேராசிரியரின் ஆராய்ச்சிப் புலமையை நன்கு வெளிப்படுத்துகின்றன.

பேராசிரியரின் ஆராய்ச்சி அணுகுமுறைகளின்  சிறப்புகள் 

இவற்றைப் பின்வருமாறு தொகுக்கலாம்.

 

 1. எளிமை
  2. நுண்மை
  3. பகுத்தறிவுப் பார்வை
  4. தமிழ் நெறிப் பின்புலம்
  5. பெண்ணுரிமை பேணல்
  6. உரையாளர் தவறுகளை நயம்பட மறுத்தல்
  7. ஒப்புமைக் கருத்துகளைச் சுட்டுதல்
  8. எக்காலத்திற்கும் ஏற்ற உரை
  9. தனியர் தாக்குதல் இன்மை
  10.கருத்தில் வன்மை
  11.நடையில் மென்மை
  12.வகுத்தும் தொகுத்தும் விவரித்தல்
  13.சொல்விளக்கமும் இலக்கணக் குறிப்பும்
  14. அறிவியல்பார்வை
  15. புரட்சி எண்ணம்

 
இவை அனைத்தையும் காண்பதற்குக் காலச் சூழல் இடந்தராமையால் – பானைச் சோற்றுக்குப் பதம்பார்ப்பது போல் – இவற்றுள் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

மகளும் மகனும் இணையே! 

மகன் என்னும் சொல்லைத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கையாளும் இடங்களில் மகன் எனக் குறிப்பிடும் இடங்கள் மகளுக்கும் பொருந்துவதைப் பேராசிரியர் விளக்குகிறார். சான்றோன் எனக் கேட்ட தாய், தந்தை மகற்காற்றும் நன்றி, மகன் தந்தைக்காற்றும் உதவி, கொழுநன் தொழுதெழுவாள் முதலான குறளடிகளுக்கு ஆணையும் பெண்ணையும் இணையாகக் கருதிய அக்காலச் சூழலையும் திருவள்ளுவர் கருத்தையும் நன்கு விளக்கியுள்ளார். இவ்வாறு பெண்களும் ஆண்களும் இணை என்ற பழந்தமிழ்நெறிக்கு மாறான பிறரின்  விளக்கங்களுக்குப் பேராசிரியர் தந்துள்ள மறுப்புகள் அனைவரும் படித்தறிந்து பின்பற்ற வேண்டியன வாகும்.[2]
பெற்றோர் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையாக,
‘தந்தை  மகற்குஆற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்’ (திருக்குறள் 67)
என்கிறார் உலகப் புலவர்  திருவள்ளுவர். பேராசிரியர் இலக்குவனார், பின்வருமாறு விளக்கம் தருகிறார்:
மகற்கு’ என்று கூறினாலும் ‘மகளும்’ அடங்குவர். தந்தை தம் குழந்தைகட்கு நற்கல்வியை அளித்து எங்குச் செல்லினும் எவருக்கும் முற்பட்ட நிலையில் இருக்குமாறு செய்தல் வேண்டும்; அவை கூடும் இடங்களில் அவையின் பின் இருக்கைகளில் அமராமல், முன் இருக்கைகளில் அமரும் தகுதியைக் குழந்தைகட்கு உண்டாக்க வேண்டும். இக்குறட்பா வாயிலாகப் பெற்றோரின் கடன் வலியுறுத்தப்பட்டுள்ளது.[3]தந்தை மகனுக்குச் செய்ய வேண்டிய கடமையாகச் சொல்லாமல் தந்தை, தாய் ஆகிய பெற்றோர் மகன், மகளாகிய தம் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையாகப் பேராசிரியர் விளக்கியுள்ளது எந்நாட்டவருக்கும் பொருந்தக் கூடியதாக உள்ளது.

பெண்களும் அறியும் ஆற்றல் உடையவர்களே 

பெண்மைக்கு எதிராக எங்கு களை தோன்றினாலும் அதனைக் களையும் காவலராகப் பேராசிரியர் திகழ்ந்துள்ளார். எனவேதான் கல்வி ஆண் பெண் வேறுபாடின்றி அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்றார். இதனை ‘அறிவறிந்த மக்கட்பேறு (குறள் 71) என்பதை விளக்கும்பொழுதும் பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்: ‘‘மக்களாய்ப் பிறப்போர் அனைவரும் ‘அறிதற்குரியர்’தாம். அறிதற்குரியோருள்தான் சிலர் அறிவுடையோராகவும் சிலர் அறிவற்றவராகவும் வளர்ந்து விடுகின்றனர். அறிவறிந்தவர்தாம் செல்வமாகக் கருதற்குரியர். மக்கள் ஆண் பெண் இருபாலார்க்கும் உரியசொல். பெண் ஒழித்து நிற்பதற்குக் காரணம் பெண்கள் அறிய மாட்டாதவர்கள் என்னும் தவறான கருத்தேயாகும்  பெண்களும் ஆண்களைப் போன்று அறியும் ஆற்றல் உடையவர்களே என்பது வரலாறு உணர்த்தும் உண்மையாகும்.’’[4]

ஒருபாலரைக் குறிப்பது மறுபாலருக்கும் பொருந்தும் 
கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின் (திருக்குறள் 54) என்பதை விளக்கும் பொழுது, ‘இருபாலாரிடத்தினும் கற்பு நிலை பெறுகின்ற போதுதான் பெண்ணின் பெருமை நன்கு வெளிப்படும்’[5] எனக் கற்புநெறி இருவருக்கும் பொதுவே என்னும் தமிழர் நெறியை விளக்குகிறார். பெய்யெனப் பெய்யும் மழை (திருக்குறள் 55) என்பதை விளக்கும் பொழுது, ‘‘‘நஞ்சுண்டவன் சாவான்’ என்றால், ‘நஞ்சுண்டவளும் சாவாள்’ என்பது வெள்ளிடைமாலை. ‘திருடிவயவன் ஒறுக்கப்படுவான்’ என்றால், ‘திருடியவளும் ஒறுக்கப்படுவாள்’ என்பது தானே போதரும். அவ்வாறே இவ்விடத்தும் கருதுதல் வேண்டும். “தெய்வம் தொழாஅன் மனைவிதனைத் தொழுது எழுவான் பெய்யெனப் பெய்யும் மழை” என்பதும் கொள்ளப்படல் வேண்டும்’’ என இரு சாரார்க்கும் பொதுவான விளக்கம் நல்குகிறார்[6].

விளையுளுக்கு விளக்கம்: 
எவையெல்லாம் சேர்ந்திருப்பன நாடு எனத் திருவள்ளுவர் வரையறுத்து,
‘தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.’    (திருக்குறள் 731) என்கிறார்.
இத்திருக்குறளுக்குத் திருக்குறள் நெறி அறிஞர் இலக்குவனார் தரும் விளக்கம் ஒன்றே அவரின் உரைவளத்தையும் பொதுமை போற்றும் குறள்நெறி உணர்வையும் உணரப் போதுமானது எனலாம். இக் குறளுக்கு விளக்கம் தருகையில், ‘‘குறையாத விளைவிக்கப்படும் பொருள்களும் விளைவுக்குக் காரணமாம் அறிஞரும் குறைவு இலாத செல்வமுடையவரும் சேர்ந்திருப்பது நாடு ஆகும்’’[7] என்கிறார் பேராசிரியர் சி.இலக்குவனார். பிறர் விளக்கங்களின்றும் பேராசிரியர் சிறப்பாகவும் ஏற்கும்படியுமானதுமான விளக்கத்தைத் தருகிறார். அன்றும் இன்றும் அனைவரும் ‘விளையுள்’ என்றால், வேளாண்மை விளைவு, அல்லது வேளாண் பொருள் விளைவிப்போர், அல்லது விளையும் நிலம் என்ற பொருளில்தான் விளக்கம் அளிக்கின்றனர். வாழ்விற்கு உணவுதான் அடிப்படை. என்றாலும் அதுமட்டும் போதுமா? எனவே, பேராசிரியர், திருவள்ளுவர் கருத்தை உணர்ந்து உரிய பொருளைப்  பின்வருமாறு விளக்குகிறார்.
‘‘விளையுள் என்பது மக்களால் விளைவிக்கப்படும் எல்லாப் பொருள்களையும் குறிக்கும். உணவுப் பொருள் மட்டுமல்ல, மக்கள் வாழ்வுக்கு வேண்டிய அனைத்துப் பொருள்களையும் ஆக்கிக் கொள்ளும் ஆற்றலும் வாய்ப்பும் வசதியும் நாடு பெற்றிருக்க வேண்டும்’’ [8] என்கிறார். இவ்வாறு, ‘ஒரு நாடு உணவில் மட்டும் தன்னிறைவு பெற்றால் போதாது. வாழ்விற்கு வேண்டிய அனைத்தையும் ஆக்கும் ஆற்றலும் வாய்ப்பும் வசதியும் பெற்றுத் திகழ வேண்டும்’ என எந்நாட்டவர்க்கும் எக்காலத்தவர்க்கும் ஏற்ற உரை விளக்கம் அளித்துள்ளார்.

தக்கார் பற்றிய தகைசால் கருத்து: 

பேராசிரியர் சி.இலக்குவனார், தக்கார்  என்பார் நாட்டின் நலனைப் பெருக்கத்தக்கார் என்கிறார். ‘கற்றறிஞர், புதியன கண்டு பிடிப்போர், புதியன ஆக்குவோர் (Scholar, Discoverer, Inventor) இவரையே பொறுத்துள்ளது நாட்டின் விளையுள் பெருகுதல்’ [9]என விளக்குகிறார். பழந்தமிழ்ப் புலமையும் மேனாட்டு அறிவியல் புதுமையறிவும் கைவரப் பெற்ற பேராசிரியர், தக்கார் என்றால் நல்லோர், அறிவோர் என்று விளக்காமல், அறிவியல் வளர்ச்சிக்கு முதன்மை கொடுக்கும் வகையில் தக்கார் என்பதற்கு நாட்டின் நலனைப்பெருக்கத்தக்க கற்றறிஞரையும் அறிவியல் அறிஞரையும் குறிப்பிடுவது ஏற்கவும் போற்றவும் கூடிய கருத்தன்றோ !

‘செல்வம்’ உணர்த்தும் உரைச் செல்வம்: 
‘தாழ்விலாச் செல்வர்’  என்பது குறைவிலாச் செல்வமுடையவர் என்னும் பொருளைத் தரும் என்னும் பேராசிரியர் செல்வம் என்பது பொருள் சேர்க்கையன்று என இதற்குத் தரும் விளக்கம் எந்நாட்டவர்க்கும் எக்காலத்தவர்க்கும் ஏற்றதன்றோ !  அவரது விளக்கம் வருமாறு: ‘‘செல்வர் சேர்வது நாடு என்பதனால் வறியரும்  அங்கிருப்பர் என்று பொருள் படலாம். செல்வர்  என்று சிலரைப் பிரிப்பின் எஞ்சியோர் செல்வரல்லாதவர் என்றுதானே கருதுதல் வேண்டும் என்று நினைத்து எப்பொழுதும் செல்வர்களும் வறிஞர்களும் நிலைத்திருக்க வேண்டுமென்று வள்ளுவர் கூறுவது பொருத்தமுடைத்தன்று என்று புகல்வோருமுளர். செல்வர் என்றால் தமக்கு வேண்டிய உணவு, உடை, இருப்பிடம் முதலிய வாழ்க்கை வசதிகளைப் பெற்றிருப்பாரேயன்றி, அளவு கடந்த பொருளைத் திரட்டி யார்க்கும் பயன்படாது முடக்கி வைத்து மகிழ்வோரல்லர். ‘நுகரப் பெறுவன யாவும் உடையோரே செல்வர் ஆவார்;  நுகரப் பெறுவன இல்லாதார் வறிஞர் ஆவார்’ என்பதே தமிழ்நூலார் கருத்தாகும். ஆதலின் அங்குத் தாழ்விலாச் செல்வர் சேர்வது என்பது எல்லா மக்களும் யாவும் பெற்றிருப்போராய் இருத்தல் வேண்டும் என்பதற்கேயாம் என்று அறிதல் வேண்டும்.’’[10] இவ்வாறு செல்வம் என்பதற்குத் தமிழ்நெறிக்கேற்ற விளக்கத்தைப் பேராசிரியர் அளித்துள்ளார்.

அருங்கேடும் கேடறியாமையும் 

நல் விளைச்சலுக்கு நாடு கேடுகளின்றி இருக்க வேண்டும் என்பதை (குறள் 732) விளக்கும்பொழுது பிறரிடமிருந்து மாறுபட்டு, ‘‘பெருவெள்ளம், நிலநடுக்கம், கடல்அலைப்பு, எரிமலை முதலிய இயற்கைப் பொருள்களால் உண்டாகும் கேடுகள் அற்றிருக்க வேண்டும்’’[11] என இயற்கைஅறிவியல் அடிப்படையில் விளக்குகிறார். கேடறியாமையை நாட்டின் இலக்கணமாகத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறுமிடத்தில் (குறள் 736) அதனை மழை வளம், நீர்வளம் ஆகியவற்றுடன் தொடர்பு படுத்தி இயற்கையோடு இயைந்து யாவரும்  ஏற்கத்தக்க வகையில் பேராசிரியர்  விளக்குகிறார்.

உரிமையுள்ள நாடே பாதுகாப்பான நாடு 
நாட்டிற்கு அணிகலன்களில் ஒன்றாகப் பாதுகாப்பைத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் (குறள்738) குறிப்பிடுகிறார். இதற்கு, அனைத்து உரையாசிரியர்களிடமிருந்தும் வேறுபட்டுஎண்ணும் உரிமை, பேசும் உரிமை, எழுதும் உரிமை, வழிபடும் உரிமை, வாழும் உரிமை முதலியன பெற்றிருத்தல் வேண்டும். இவ்வுரிமைகள் பறிபோகாதவாறு பாதுகாவல் இருத்தல் வேண்டும்” எனச் சிறப்பாக ஆராய்ந்து உரைக்கிறார்.

செங்கோல்ஆட்சி இலக்கணம் 
செங்கோல்ஆட்சி இலக்கணத்தை உலகப் புலவர் திருவள்ளுவர்,

‘அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.’ (திருக்குறள் 543) என விளக்குகிறார்.
பேராசிரியர் சி.இலக்குவனார், தமிழ்ப் பண்பாட்டு அறநூலாம் திருக்குறளுக்கு ஏற்றவாறு பின்வருமாறு விளக்கம் தருகிறார்:
“அந்தணர் நூற்கும் – உயிர்களிடம் இரக்கம் கொண்டு தொண்டாற்றும் பெரியோர் வெளியிடும் நூல்களுக்கும், அறத்திற்கும் – நல்நெறிக்கும், ஆதியாய் – அடிப்படையாய், மன்னவன்கோல் – மன்னன் ஆட்சி, நின்றது – நிலைபெற்றது.
நாட்டுமக்கள் நல்வாழ்வு வாழ வழிகாட்டும் அறநூல்கள் வேண்டும். அவ் வறநூல்களை வெளியிடுவோர் அறவோர் ஆவார். அறவோராம் பெரியோர்கள் நல்நெறி நூல்களை வெளியிட ஆட்சி வேண்டும். அறவோர் நூல்களை வெளியிடாதவாறு தடுத்தலும் கூடுமன்றே. சில நாடுகளில், உயர்ந்த கருத்துகளைக் கொண்ட நூல்கள் தம் கொடுங்கோன்மை ஆட்சிக்கு மாறாய் இருத்தல் கண்டு, நூல்களைத் தடை செய்ததும், எழுதியவரைக் கொடுமைக்கு ஆளாக்கியதும் வரலாறுகள் கூறுகின்றன. ஆதலின், நல்நெறி நூல்கள் வெளிவர நல்லாட்சி இன்றியமையாதது. அந் நூல்களில் கூறப்படும் அறம் நிலைபெறவும் நல்லாட்சி வேண்டும்.”[12] இவ்வாறு படைப்புரிமைக்குத் தடையாக நில்லாமல் காப்பாக விளங்கும் செங்கோலாட்சியைப் பேராசிரியர் விளக்குகிறார்.

செங்கோலாட்சி 
செங்கோலாட்சியில் நாடுஇருக்கும் நிலையை,
‘இயல்புளி கோல்ஓச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.’ (திருக்குறள் 545)
என உலகப் புலவர் திருவள்ளுவர் படம்பிடித்துத் தருகிறார். பேராசிரியர் சி.இலக்குவனார், மன்னவனின் நல்லாட்சி முறையால் இவை அமையும் என்பதைப் பின்வருமாறு விளக்குகிறார்:
“நல்லாட்சியினையே நடத்த வேண்டுமென்று உறுதி பூண்டு, தான் செய்யும் ஒவ்வொரு செயலும் நல்லாட்சிக்கு உரியதுதானா என்று ஆராய்ந்து, ஆட்சி புரிதல் வேண்டும். அவ்விதம் ஆட்சிபுரியுங்கால், மக்களுக்கு வேண்டிய பொருள்கள் யாவை, அவற்றை உண்டாக்குவது எப்படி என்று எண்ணி எண்ணி வேண்டும் பொருள்களை உண்டு பண்ணுவதிலோ, பிற நாடுகளிலிருந்து பெறுவதிலோ கருத்துச் செலுத்தி, குறைபாடின்றிப் பெற வைப்பான். இயற்கை மழை பெய்யாவிடினும், செயற்கையிலேனும் மழை பெய்யும் முறையை அறிந்து ஆவன செய்து மழை பெய்யச் செய்வான். ஆதலின், நல்லாட்சி புரியும் மன்னவன் நாட்டில் மழையும் விளைவிக்கப்படும் பொருள்களும் உளவாம் என்று உரைத்துள்ளார்.”[13] அனைவரும் ஏற்கத்தக்க வகையில் சிறப்பாக விளக்கம் அளித்துள்ள பேராசிரியர் திறன் போற்றற்குரியது.
‘கல்வி’ க்கான விளக்கம்
‘கல்வி’ என்னும் அதிகாரத்தை விளக்கும் பொழுது தாய்மொழிவாயிலான கல்வியையே பெரும்பேராசிரியர் விளக்குவது வேறு யாரும் தெரிவிக்காத ஒன்றாகும். அவரின் விளக்கம் வருமாறு: “கற்றற்குரிய நூல்களைக் கற்றல் கல்வியாம். இங்குக் கல்வியென்பது தாய்மொழி வாயிலாகக் கற்பது தான். மக்கள் ஆட்சி நன்கு நடைபெற மக்கள் எல்லோரும் கல்வி கற்றவர் ஆக வேண்டுமென்றால் அவர்கள் தம் தாய்மொழியில் கற்றலைத்தான் குறிக்குமேயன்றி வேற்று மொழி வாயிலாகக் கற்றலன்று. அந்தந்த நாட்டுமொழியே கல்வி கற்பிக்கும் மொழியாகவும் அரசியல் மொழியாகவும் இருத்தல் வேண்டும். 

ஊழலுக்கு எதிரான கல்வி 
ஒழுக்கத்திற்கு ஊன்றுகோலாகவும் ஊழலுக்கு எதிரானதாகவும் கல்விப்பயிற்சி அமைதல் வேண்டும் எனத் திருக்குறள்அறிஞர் இலக்குவனார் பின்வரும் வகையில் விளக்குகிறார்: இடுக்கட்படினும் இளிவந்த செய்யாத உளப்பாங்கை இளமை யிலிருந்தே கொள்ளுமாறு கல்விப் பயிற்சியளித்தல் வேண்டும். மனத்துக்கண் மாசிலாத வாழ்வுக்குத் தம்மை உரிமையாக்கிக் கொள்ளுமாறு செய்தல் வேண்டும். கற்றவர் கற்றவாறு ஒழுகுவதற்குத் துணிவு பெறல் வேண்டும். கற்றவர் கற்றவாறு ஒழுகாமையால்தான் இன்று பல ஒழுக்கக்கேடுகள் நிலை பெற்றுள்ளன. ஆதலின் கற்றவாறு ஒழுகுதலையே கல்விப் பயிற்சியாகக் கொள்ளும் கல்வித் திட்டம் வகுத்தல் வேண்டும். இளமையிலிருந்தே திருக்குறளைப் பயிலுமாறு செய்து அதன் நெறியில் ஒழுகும் பயிற்சியை அளித்தல் வேண்டும்.
ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க 
சான்றோர் பழிக்கும் வினை[14] 
என்பதனை உறுதிமொழிக் கொண்டு வாழ்தல் வேண்டும். இவ்வாறு வினைத் தூய்மை பெற்று வாழ்ந்தால்அன்றிக் கையூட்டு ஒழிப்புக் குழுக்கள் கணக்கின்றித் தோன்றியும் பயனின்று. [15] 

திருவள்ளுவர் சமயம் கடந்தவர்
தெய்வப்புலவர் திருவள்ளுவரை ஒவ்வொரு சமயத்தவரும் தத்தம் சமயத்தவராகக் கூறுகையில் அவரைச் சமயங்களுக்கு அப்பாற்பட்டவராகப் பேராசிரியர் விளக்குகிறார்.

அனைவருக்கும் கல்வி உரிமை 
கண்உடையர் என்பவர் கற்றோர்; முகத்து இரண்டு
புண்உடையர் கல்லா தவர்     (திருக்குறள் 393) என்னும் குறளை விளக்கும் பொழுது, ‘‘பிறநாட்டு அறிஞர்கள், கல்வியை உணவுக்கும் காற்றுக்கும், ஞாயிற்றின் ஒளிக்கும் ஒப்பிட்டுள்ளனர். காற்றும், உணவும், ஞாயிற்றின் ஒளியும் மக்கள் உயிர்வாழ்க்கைக்கு எவ்வளவு இன்றியமையாதனவோ அவ்வளவு இன்றியமையாதது கல்வியும் என்று கருதினர். ஆனால் வள்ளுவர் கல்வியைக் கண்ணுக்கு ஒப்பிட்டுள்ளமை மிகமிகப் போற்றுதற்கு உரியது. காற்றும் உணவும் வெயிலும் பெறுவதில் மக்களிடையே வேறுபாடு இருத்தல் முடியும். செல்வர்கட்கு ஒருவகையும் அல்லாதவர்கட்குப் பிறிதொரு வகையும் பெறலாம். ஆண்கள் ஒருவகையாகவும் பெண்கள் ஒருவகையாகவும் பெறலாம். ஆனால் கண்களைப் பெறுவதில் வேறுபாடு இருத்தல் முடியாது அன்றோ. செல்வர்க்கு ஒருவிதமான கண்ணும் ஏழைகட்கு இன்னொரு விதமான கண்ணும் இல்லையே.’’[16] என்னும் பேராசிரியர்,  உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஆண், பெண் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் கல்வியைப் பெறும் உரிமை உண்டு என்பதைப் படிப்பவர் உள்ளத்தில் பதிக்கின்றார்.

எழுத்தைக் காக்க வள்ளுவர் ஆணை 
எண்என்ப; ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு.              (திருக்குறள் 392)
இக்குறள் மூலம் எண்ணையும் எழுத்துவடிவத்தையும் காக்க வேண்டித் தெய்வப்புலவர் திருவள்ளுவர் வலியுறுத்துவதை பேராசிரியர் விளக்குகிறார்.[17] 

பொருளியலிலும் நாட்டியல் 
ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்                                (திருக்குறள் 463)
இக்குறளுக்குப் பொருள்சார் விளக்கம் மட்டும் தராமல், ‘‘பிறர் நாட்டை அடிமைப்படுத்தச்  சென்று தம் நாட்டை இழந்த செயல்கள் வரலாறுகளில் நிறைய உள’’ [18] எனப் புதுமையாக நாட்டாசை அடிப்படையிலும் விளக்குகிறார்.

பேராசிரியரின் திருவள்ளுவர் கால ஆராய்ச்சி 
பேராசிரியர் அவர்கள் பிற அறிஞர்கள் கருத்திற்கிணங்கத் தற்பொழுது நடைமுறையில் உள்ள திருவள்ளுவர்ஆண்டைப் (கி.மு.31) பின்பற்றினாலும்  திருவள்ளுவர் காலம் தமிழ்ச் சங்கக்காலப் பகுதியில் வடக்கே அசோகர் வாழ்ந்த காலம் என்கிறார்.
திருவள்ளுவர் காலம் சங்கக் காலம் 
‘‘ஆலந்தூர் கிழார் என்பவர் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடுங்காலத்தில்,
“நிலம் புடைபெயர்வதாயினும் ஒருவன்
செய்திகொன்றோர்க்கு உய்திஇல்லென 
அறம்பாடிற்றே ஆயிழை கணவ” [19]
என்று பாடுகின்றார். இதில்,
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு”[20] என்ற குறளை எடுத்தாண்டு திருக்குறளை ‘அறம்’ என்றும் சுட்டுகிறார். ஆலந்தூர் கிழார் காலம் கி.மு.இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதி என்கின்றனர். ஆகவே, வள்ளுவர் காலம் அதற்கு முற்பட்டாதல் வேண்டும்’’ எனப் பேராசிரியர் ஆய்ந்து திருவள்ளுவரைச் சங்கக்காலப் புலவர் என்கிறார்.

திருவள்ளுவர் காலம் அசோகர் காலம் 
‘‘திருவள்ளுவர் “மழித்தலும், நீட்டலும் வேண்டாவாம் சான்றோர் பழித்தது ஒழித்து விடின்” என்ற குறளில் மழுங்கச் சிரைக்கும் புத்தமதக் கோட்பாட்டைக் குறிப்பிடுகின்றார். ஆகவே, புத்தமதம் தமிழ்நாட்டில் பரவிய காலத்தில் வள்ளுவர் வாழ்ந்தவர்ஆதல் வேண்டும். புத்தர் பெருமானுக்குப் பிற்பட்டுத் தோன்றி புத்தமதம் தமிழ்நாட்டில் பரவத் தொடங்கிய பொழுது வந்தார் என்று கொள்ளலாம். அசோகன் காலத்தில்தான் புத்தமதம் உலகம் எங்கும் பரவத் தொடங்கிற்று. தமிழ் நாட்டிலும் பரவிற்று. ஆதலால் அசோகன் காலமே வள்ளுவர் காலம் என்று கூறலாம். அசோகன் காலம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு என்பர்’’ என மேலும் ஆராய்ந்து திருவள்ளுவரின் காலம்  அசோகர்  காலம் என ஆராய்ந்து நிறுவுகிறார்.

பேராசிரியரின் முடிபுகள் 
பேராசிரியர் சி.இலக்குவனார் ஆய்ந்தாய்ந்து கொண்ட ஆராய்ச்சிப்புலமையால் பின்வரும் கருத்துகளை நிலைநாட்டி உள்ளார்.

 

 1. திருவள்ளுவர் உலகத்தின் முதல் புரட்சியாளர்
 2. பெண்களுக்கான முதல் புரட்சியாளர்
 3. எண்ணப்புரட்சி செய்தவர் திருவள்ளுவர்
 4. தமிழ்ப்பண்பாட்டை அழிந்து போகாமல் காத்தவர் திருவள்ளுவர்
 5. திருவள்ளுவர் ஒரு சீர்திருத்தப் பெரியார்
 6. திருக்குறள் உலகத்திற்கான நூல்
 7. வள்ளுவர் வரலாறு குறித்தன புனைந்துரைகளே!
 8. திருவள்ளுவர் காலம் சங்கக்காலம்
 9. திருவள்ளுவர் காலம் அசோகர் காலம்
 1. திருக்குறள் தனித்தமிழ் நூல்
  11.  திருக்குறள் தமிழ்மரபு தழுவியே இயற்றப்பட்டுள்ளது
  12.  குறள்நெறி ஓங்கின் குடியரசு ஓங்கும்


நிறைவுரை :
திருக்குறளைத் திருக்குறள் வழியிலேயே ஆராய்ந்து தமிழ்நெறியின்படியானஆராய்ச்சிச் சிறப்பினை அறிய இதுவரை சிலவற்றைப் பார்த்தோம். தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள், “இந்நாளில் திருக்குறளுக்குப் புதுப் புது  உரைகள் காணப்படுகின்றன. அவற்றுள் பொருந்தியன சிலவே. அச்சிலவற்றுள் ஒன்று தமிழ்ப் பேராசிரியர் சி. இலக்குவனார் உரை’’ என்று பராட்டியுள்ளமை பேராசிரியரின் உரை வளத்தின் சிறப்பாகும். ‘‘பொதுவாகப் புராணக் கதைகளைக் கேட்கத்தான் மக்கள் கூட்டமாக வருவர்; ஆனால் குறள்நெறி வகுப்புகளுக்காக மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டு வருகிறார்கள்’’ எனத் தந்தை பெரியார் அவர்கள், பேராசிரியரின் திருக்குறள் விளக்கக் கூட்டங்கள் குறித்துத் தெரிவித்தமை பேராசிரியரின் திருக்குறள் ஆராய்ச்சி மக்களால் பெரிதும் கவரப்பட்டதற்குச் சான்றாகும். இவ்வாறு அறிஞர்களாலும் ஆன்றோர்களாலும் போற்றப்படும் ஆராய்ச்சித்திறனால் பேராசிரியர் சி.இலக்குவனார்  அவர்களின் திருக்குறள் படைப்புகள்  எளிமையாய் அமைந்து எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்துமணிகளாக அமைந்துள்ளன. இவற்றிற்கிணங்கத் திருக்குறளைப் புரிந்து அதன் வழி நின்று திருவள்ளுவர் பெருமையைக் காலமெல்லாம் நிலைக்கச் செய்வோம்!

நன்றி: https://groups.google.com/forum/#!topic/anbudan/ZRJbV5YuV7g

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.