இலக்கியத்தில் மாலைமாற்றல்

இலக்கியத்தில் மாலைமாற்றல்

****************************************

தமிழ் இலக்கண நூலான தண்டியலங்காரத்தில் சித்திரக்கவி வகைகள் குறிக்கப் பட்டிருக்கின்றன.

 1. “கோமூத் திரியே கூட சதுக்கம்

மாலை மாற்றே யெழுத்து வருத்தனம்

நாக பந்தம் வினாவுத் தரமே

காதை கரப்பே கரந்துரைச் செய்யுள்

சக்கரஞ் சுழிகுளஞ் சருப்பதோ பத்திரம்

அக்கரச் சுதகமு மவற்றின் பால.”
சித்திரக்கவி வகைகளில் “மாலை மாற்றல்” என்று ஒரு வகையுண்டு. ஒரு செய்யுளின் முதலில் இருந்து படித்தாலும், கடைசியில் இருந்து படித்தாலும் ஒன்றாகவே வரும். (ஆங்கிலத்தில் வார்த்தைகளில் வரும் இவ்வமைப்பு palindrome எனப்படும்.)

சில உதாரணங்கள்:

***************************

தண்டியலங்காரத்தில் உதாரணக் கவிகள் சில கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு தமிழ்ப்பேரறிஞர் பரிதிமாற்கலைஞர் விளக்கம் தந்துள்ளார்.

 1. “நீ வாத மாதவா தாமோக ராகமோ தாவாத மாதவா நீ”

இதன் பொருள்: நீ வாத மாதவா – நீங்காத பெரும் தவம் உடையோனே! தா மோக ராகமோ தாவாது – வலிய மயக்க வேட்கையோ நீங்காது அம் மாது அவா நீ – (ஆதலால்) அழகிய பெண்ணினுடைய ஆசையினை நீக்கி அருள்வாயாக! (அவள் விருப்பத்தை நிறைவேற்றுவாயாக)

 

 1. “வாயாயா நீகாவா யாதாமா தாமாதா யாவாகா நீயாயா வா

வாயா யா – எமக்கு வாயாதன (கிடையாதவை) யாவை?

நீ காவாய் – நீ எம்மைக் காத்து அருள் புரிவாய்!

யாதாம் – (இன்றேல்) யாதாகும்?

மாது ஆம் மா தா – இம்மாது பெரும் வருத்தம் உறுவள்

யா ஆகா – (நீ விரும்பினால்) எவை முடியாதன?

ஆயா நீ வா – யான் கூறியவற்றை நன்கு ஆராய்ந்து நீ வருக

தலைவியின் ஆற்றாமையைப் பாங்கி தலைவனுக்கு உணர்த்தியது.

 

 1. “பூவாளை நாறுநீ பூமேக லோகமே பூ நீறு நாளைவா பூ”

பூவாளை நாறும் நீ – இயல்பாய் பூப்பு இல்லாதவளை மணந்து புலால் நாற்றம் வீசும் நீ

பூ லோகம் மேகமே – பூவையும் பொன்னையும் மழையாகச் சொரியும் மேகமோ!

பூ நீறு நாளை வா – பூவும் திருநீறும் தரித்து நாளைய தினம் வருவாய்

பூ – இவள் இப்பொழுது பூப்பினளாய் இருக்கின்றாள்

பூ மேகம் , லோக மேகம் என்று தனித் தனியாகக் கூட்டுக. பூவைச் சொரியும் மேகன் ‘புட்கலாவருத்தம்’ என்றும் பொன்னைச் சொரியும் மேகம் ‘சங்காரித்தம்’ என்றும் கூறப்படும்.

மணத்தல் – கலத்தல்

பூப்புனைதல் புலால் நாற்றம் நீங்குதற்கும், திருநீறு புனைதல் குற்றம் நீங்கிப் பரிசுத்தம் அடைவதற்குமாம்.

பரத்தையர் சேரி சென்று மீண்ட தலைவனுக்கு பாங்கி வாயிலாக மறுத்து உரைத்ததாம் இந்தச் செய்யுள்.

 

திருஞானசம்பந்தரின் மாலைமாற்றுப் பதிகம்

**************************************************************

3.117 சீகாழி – திருமாலைமாற்று

——————————————————-

பண் – கௌசிகம்

திருச்சிற்றம்பலம்

1257 யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா

காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா. 3.117.1

 1. யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா

யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா. 3.117.2

 1. தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா

மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா. 3.117.3

 1. நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே

மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ. 3.117.4

 1. யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ

வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா. 3.117.5

 1. மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே

யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே. 3.117.6

 1. நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே

நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீண. 3.117.7

 1. நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா

காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே. 3.117.8

 1. காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ

பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா. 3.117.9

 1. வேரியுமேணவ காழியொயே யேனை நிணேமட ளோகரதே

தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே. 3.117.10

 1. நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா

காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே. 3.117.11

 

இதற்கு விளக்கம்:

**********************

ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால் அது பொருந்துமா? நீயே ஒப்பில்லாத கடவுளென்றால் அது முற்றிலும் தகும். பேரியாழ் என்னும் வீணையை வாசிப்பவனே! யாவரும் விரும்பத்தக்க கட்டழகனே! பகைப்பொருள்களும் சிவனைச் சாரின் பகை தீர்ந்து நட்பாகும் என்ற உண்மையினை யாவரும் காணுமாறு பாம்புகளை உடையவனே. கை, கால் முதலிய அவயவங்கள் காணா வண்ணம் காமனை அருவமாகச் செய்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. இலக்குமியின் கணவனான திருமாலாகவும் வருபவனே! மாயை முதலிய மலங்களிலிருந்து எம்மை விடுவிப்பாயாக!.

வேள்வி வடிவினனே. யாழ் வாசிப்பவனே. அடியார்கட்கு அருள வரும்பொழுது உருவத்திருமேனி கொள்பவனே. மகா சங்கார கருத்தாவே. அனைத்துயிர்க்கும் தாயானவனே. ஆத்திப்பூ மாலை அணிந்துள்ளவனே. தாருகாவனத்து முனிபத்தினிகளாகிய மகளிர் கூட்டத்தை வேட்கையுறும்படி செய்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. துன்பங்கள் எவற்றினின்றும் எம்மைக் காப்பாயாக.

அழியாத மூப்பிலாத தசகாரியத்தால் அடையும் பொருளாக உள்ளவனே. சீகாழி என்னும் திருத்தலத்து முதல்வனே. எல்லோரும் அஞ்சி நீங்குகின்ற சுடுகாட்டில் நள்ளிரவில் நடனமாடும் நாதனே. மாண்புமிக்கவனே. ஐராவணம் என்னும் யானையின் மேல் ஏறி வருபவனே. கொடையில் கடல் போன்றவனே. சாவினின்றும் எங்களைக் காத்தருள்வாயாக. ஒளியுடைய மாணிக்கம் போன்றவனே. வேண்டும் வரங்களைத் தந்தருள்வாயாக. எங்கள்முன் எழுந்தருள் வாயாக. முன்னைப் பழம்பொருளே. காற்று முதலான ஐம்பூதங்களின் வடிவானவனே!

என்றும் மாறுதலில்லாத மெய்ப்பொருளானவனே. தாங்கிய வீணையை உடையவனே. கொடிய பிறவித் துன்பம் எங்களை அடையாவண்ணம் வந்து காத்தருள்வாயாக. விண்ணிலுள்ள தேவர்கள் துன்பம் அடையாதவாறு மேருமலையை வில்லாக ஏந்தி முப்புரங்களை அழித்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே, ஆகாய சொரூபியே! நீ விரைந்து வருவாயாக! அருள் புரிவாயாக.

யாவற்றுக்கும் கால கர்த்தாவாக விளங்குபவனே. எப்பொருளிலும் எள்ளில் எண்ணெய் போன்று உள்ளும், புறம்பும் ஒத்து நிறைந்திருப்பவனே! சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே! அறிவில் மேம்பாடு உடையவனே! அனைத் துயிர்கட்கும் தாயாகவும், உயிராகவும் உள்ளவனே! என்றும் அழிவில்லாதவனே! இன்குரல் எழுப்பும் கின்னரம் முதலிய பறவைகள் தன்னருகின் வந்து விழும்படி வீணைவாசிப்பவனே. யாங்கள் மேற்கொண்டு ஆவனவற்றிற்கு ஆராயாதவாறு எங்களைக் காத்தருள் வாயாக!.

மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த காலனைக் கடுங்குரலால் கண்டித்தவரே. உம் திருவடியால் அவனை உதைத்து அக்காலனுக்குக் காலன் ஆகியவரே. பொருந்திய சனகர் முதலிய நால்வர்க்கும் சிவகுருவாகிக் கல்லால மரத்தின் கீழ் உபதேசித்து மெய்யுணர்வு பெறச் செய்தவரே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பரம்பொருளே. மேகத்தை வாகனமாகக் கொண்டருளியவரே. அடியேங்கள் உம் திருக்கூட்டத்தில் ஒருவர் போல் ஆவோம்.

உன்னைவிட்டு நீங்குதலில்லாத உமாதேவியை உடையவனே! ஒப்பற்ற தாயானவனே! ஏழிசை வடிவானவனே! நீயே வலிய எழுந்தருளி எங்களைக் காத்தருள்வாயாக! பேரன்பு வாய்ந்த நெஞ்சத்தை இடமாக உடையவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும், வேதங்களை அருளிச்செய்து வேதங்களின் உட்பொருளாக விளங்குபவனே. எங்களைக் கொல்லவரும் துன்பங்களை நீ கொன்று அருள்செய்யாயோ?

இறைவரின் திருவடிகளில் பேரன்பு செலுத்தும் அடியவராம் பசுக்கள் தன்வயமற்றுக் கிடக்க, கட்டிய ஆசை என்று சொல்லப்படும் பெருங்கயிற்றைத் தண்ணளியால் அவிழ்த்தருள்பவரே. மிக வேகமாக ஓடும் மானின் தோலை அணிந்துள்ள பேரழகு வாய்ந்தவரே. பொறுக்கலாகாத் தீவினைத் துன்பங்கள் தாக்க வரும்போது காத்தருள்வீராக! மன்னித்தற்கரிய குற்றங்கள் எங்களின் சிறுமைத் தன்மையால் செய்தனவாகலின் அவற்றைப் பெரியவாகக் கொள்ளாது சிறியவாகக் கொண்டு பொறுத்தருள்வீராக! ஏழிசைவல்ல இராவணன் செருக்கினால் செய்த பெரும்பிழையைத் தேவரீர் மன்னித்து அருளினீர் அல்லவா? (அடியேம் சிறுமையால் செய்த பிழையையும் மன்னித்தருளும் என்பது குறிப்பு).

காற்றாகி எங்கும் கலந்தருள்பவனே. மறைப் பாற்றலின் வழி எவ்வுயிர்க்கும் மயக்கம் செய்து பின் அருள் புரிபவனே. பூக்களில் சிறந்த தாமரைப்பூவில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும், முறையே திருமுடியையும், திருவடியையும் காணுதலை ஒழித்த வைரத் தன்மையுடையவனே! சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. எங்களைக் கடைக்கணித்தருள்வாயாக. உன் திருவடியைத் தந்தருளுவாயாக!.

நறுமணமும், தெய்விக மணமும், பெருமையும், புதுமையும் கலந்து விளங்கும் சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே! துன்பங்களை நீக்கி அருள்பவனே. பேரருள் உடையவனே. அதனை அள்ளிக்கொள்ளல் அகத்தவத்தாராகிய சிவயோகிகளின் செய்கையே. புத்தர், சமணர்களின் மொழிகளை எண்ணுதலையும், நண்ணுதலையும் ஒழித்தருள்வாயாக! இப்புறச் சமயத்தார் பன்னெறிகளில் புகாமல் காத்தருளும் திறம் நின் திருவடிக்கே உரியதாகும்.

நேர்மையை அகழ்ந்து எறிவதாகிய, நெஞ்சத்தில் நிலைத்து எவரையும் துன்புறுத்தும் காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களையும் அழித்தருள வல்லவனே. உலகுக்கெல்லாம் தாயாம் தன்மையை ஏற்றருளத் தக்கவன், ஒப்பில்லாத நீ ஒருவனே. நன்மை புரிந்தருளுவதில் உயர்ந்தவனே! நாங்கள் தளர்ந்த இடத்து எங்களைக் காத்தருள்வாயாக! என்று நற்றமிழுக்கு உறைவிடமாகவுள்ள திருஞானசம்பந்தப் பெருமான் சிவபெருமானைப் போற்றி அருளிய பாடல்களை பாடுவோர்களையும், கேட்போர்களையும் உள்ளம் குழையச் செய்யும் இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்கு எந்தக் குறைவும் உண்டாகாது.

(விளக்கத்துக்கு நன்றி: thillai-ilanthendral.blogspot.in)

 

காஞ்சிப்புராணத்தில் மாலைமாற்றுக் கவிதை:

****************************************************************
வீயா வாமா மாவா யாவீ

யாவா யாரா ராயா வாயா

வாயா டேமா மாடே யாவா

மாரா மாதோ தோமா ராமா (காஞ்சிப்புராணம் 930)

*********************************************************************

————————————– nytanaya

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.