வாழும் கடவுளை வழிபடுங்கள்

வாழும் கடவுளை வழிபடுங்கள்

மதத்தின் ரகசியம் கொள்கைகளில் இல்லை, செயல்முறையில்தான் உள்ளது. நல்லவனாக இருப்பது, நன்மை செய்வது – இதுதான் மதத்தின் முழுப்பரிமாணம்.

முற்றிலும் ஒழுக்க வழியில் நில், தைரியமாக இரு. இதயம் பரிபூரணத் தூய்மையுடன் திகழட்டும். முற்றிலுமான நீதி வழியில் செல். உயிரே போனாலும் தைரியத்தைக் கைவிடாதே. மதக் கொள்கையைப் பற்றியெல்லாம் மூளையைக் குழப்பிக் கொள்ளாதே. கோழைகளே பாவம் செய்வார்கள். வீரர்கள் ஒருபோதும் பாவம் செய்வதில்லை; பாவ எண்ணத்தை மனத்தில் எழ விடுவதில்லை.

உண்மையில் நீங்கள் தூயவராக இருந்தால் தூய்மையின்மையை நீங்கள் எப்படிக் காணமுடியும் ? உள்ளே இருப்பதுதான் வெளியே தோன்றுகிறது. நம்மில் தூய்மையின்மை இல்லாமல் வெளியில் அதைக் காண முடியாது. வேதாந்தத்தின் செயல்முறைக் கருத்துக்களுள் இதுவும் ஒன்று. இதனை நாம் வாழ்க்கையில் செயல்படுத்துவோம் என்று நான் நம்புகிறேன்.

பிறருக்கு நன்மை செய்வது புண்ணியம், தீமை செய்வது பாவம். வலிமையும் ஆண்மையும் புண்ணியம், பலவீனமும் கோழைத்தனமும் பாவம். சுதந்திரம் புண்ணியம், சார்ந்திருப்பது பாவம். பிறரை நேசிப்பது புண்ணியம், வெறுப்பது பாவம். கடவுளையும் தன் ஆன்மாவையும் நம்புவது புண்ணியம், சந்தேகிப்பது பாவம். ஒருமையை அறிவது புண்ணியம், வேறுபாடு காண்பது பாவம். இன்பத்தையும் நன்மை அனைத்தையும் அளிப்பது ‘நான்’ அல்ல. ‘நீ’ என்பதே.

சொர்க்கமோ நரகமோ இருக்கிறதா இல்லையா என்று யார் கவலைப் படுகிறார்கள்? ஆன்மா இருக்கிறதா இல்லையா என்று யார் கவலைப் படுகிறார்கள்? மாறாத ஒன்று இருக்கிறதா இல்லையா  என்று யார் கவலைப் படுகிறார்கள்? இதோ உலகம் இருக்கிறது, அதில் துன்பம் நிறைந்திருக்கிறது. செல்லுங்கள்! புத்தர் சொன்னதுபோல் துன்பத்தைக் குறைக்கப் பாடுபடுங்கள்! இல்லாவிடில் அந்த முயற்சியில் உயிரை விடுங்கள். உங்களையே மறந்து விடுங்கள். இதுவே படிக்க வேண்டிய முதல் பாடம். நீங்கள் நாத்திகரோ, ஆத்திகரோ, ஆக்ஞேயவாதியோ, வேதாந்தியோ, கிறித்தவரோ, முகமதியரோ யாராக இருந்தால் என்ன? இதுவே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் பாடம். எல்லோருக்கும் பொதுவான ஒரே பாடம் என்னவென்றால் இந்தச் சிறிய ஆன்மா அழிந்து உண்மையான ஆன்மா நிறுவப்பட வேண்டும் என்பதுதான்.

“எவ்வளவோ தவங்களுக்குப் பிறகு நான் இந்த ஓர் உண்மையை உணர்ந்தேன் — கடவுள் ஒவ்வொரு உயிரிலும் நிறைந்துள்ளார். அதைத் தவிர வேறு கடவுள் இல்லை. உயிர்களுக்குச் சேவை செய்பவன் உலகநாயகனுக்குச் சேவை செய்தவனாகிறான்.”

இவைகள் யாவும் உன்முன்னே இருக்கும் அவனது வடிவங்கள்

இவைகளை விடுத்து வேறெங்கே இறைவனைத் தேடுகின்றாய் நீ.

மனத்தில் வேற்றுமை இல்லாமல் மண்ணுலகதனில் இருக்கின்ற

அனைத்தையும் நேசித்திடும் ஒருவன் ஆண்டவன் தனையே தொழுபவனாம்.

மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ ! – தாயும் தந்தையும் தெய்வம் என்று படித்துள்ளாய்; தரித்ர தேவோ பவ, மூர்க்க தேவ பவ – ஏழையும், பாமரனும் தெய்வம் என்று நான் சொல்கிறேன். ஏழை, முட்டாள், பாமரன், துயரத்தில் உழல்பவன் இவர்கள் உனது தெய்வம் ஆகட்டும். இவர்களுக்கு ஆற்றும் சேவையே உயர்ந்த தர்மம்என்பதைப் புரிந்துகொள்.

வாழும் கடவுளையே நாம் வழிபட விரும்புகிறோம். நான் என் வாழ்க்கை முழுவதிலும் கடவுளைத் தவிர வேறு எதையும் கண்டதில்லை, நீங்களும் அப்படியே. இந்த நாற்காலியைப் பார்க்க வேண்டுமானால் முதலில் கடவுளைக் காண்கிறீர்கள், பின்னர் அவரிலும் அவர்மூலமும்தான் நாற்காலியைக் காண்கிறீர்கள். “நான் இருக்கிறேன்” என்று கூறியபடியே அவர் எங்கும் இருக்கிறார், ‘நான் இருக்கிறேன்’ என்று உணர்கின்ற அந்தக் கணமே சத்தாகிய, இருப்பாகிய பரம்பொருளை நீங்கள் உணர்கிறீர்கள். நமது இதயத்திலும் பிற உயிர்களிலும் கடவுளைக் காண முடியாவிட்டால் வேறு எங்கு போய்க்காண முடியும்?

உலகமாகிய இந்த நரகத்தில், ஒருவன் ஒருநாளாவது மற்றவனது இதயத்திற்குச் சிறிது இன்பமும் அமைதியும் அளிக்க முடியுமானால் அதுவே உண்மை. வாழ்நாள் முழுவதும் பட்ட பிறகு நான் இந்த உண்மையை அறிந்தேன்; ஏனைய அனைத்தும் வெறும் மண்ணாங்கட்டி.

ஏதாவது நன்மை நடக்க வேண்டுமென்றால் இந்த மணி, சாமரம் எல்லாவற்றையும் கங்கையில் எறிந்துவிட்டு, வாழும் கடவுளை, மனித உருவில் காண்கின்ற கடவுளை வழிபடுங்கள். மனித உருவிலுள்ள ஒவ்வொருவரும் எங்கும் நிறைந்த அதே இறைவனே. எங்கும் நிறைந்த கடவுள் என்றால் இந்த உலகம்; அவரை வழிபடுவது என்றால் இவர்களுக்கு சேவை செய்வது என்று பொருள். இதுவே கிரியை என்பது. மணியடிக்கும் முன் சாமரம் விசக் கூடாது, நைவேத்தியம் பத்து நிமிடம் வைக்க வேண்டுமா, அரைமணி நேரம் வைக்கவேண்டுமா – இவையெல்லாம் கிரியை அல்ல, இவற்றின் பெயர் பைத்தியம். காசியிலும் பிருந்தாவனத்திலும் கோயில் கதவுகளைத் திறப்பதற்கும் மூடுவதற்குமாக எத்தனையோ லட்ச ரூபாய்கள் செலவாகிவிட்டன! இப்போது பிரபு நீராடுகிறார், இப்போது உணவு அருந்துகிறார், வேறு என்னென்ன செய்வாரோ தெரியவில்லை! இங்கே மனித தெய்வங்கள் உணவும் கல்வியுமின்றிச் சாகிறார்கள். பம்பாய் வணிகர்கள் மூட்டைப் பூச்சிகளுக்காக மருத்துவச் சாலைகள் கட்டுகிறார்கள்; மனிதர்களுக்கு? மனிதர்கள் சாகட்டுமே! இந்தச் சிறு விசயத்தைப் புரிந்துகொள்ளக்கூட உங்களுக்கு மூளையில்லை –- நம் நாட்டில் தொற்றுநோய்போல் பைத்தியக்கார விடுதிகளே எங்கும் உள்ளன.

ஆண், பெண், குழந்தை, ஒவ்வொருவரையும் கடவுளாகப் பாருங்கள். நீங்கள் யாருக்கும் உதவி செய்ய முடியாது, சேவைதான் செய்யமுடியும். பகவானுடைய குழந்தைகளுக்கு சேவை செய்யுங்கள். உங்களுக்கு அந்தப் பேறிருந்தால், அதன்மூலம் ஆண்டவனுக்கும் சேவை செய்தவர்கள் ஆவீர்கள். தன் குழந்தைகள் ஒருவருக்கேனும் உதவும் பேற்றை ஆண்டவன் உங்களுக்கு அளிப்பானானால் நீங்கள் அருள் பெற்றவர்கள்! உங்களைப்பற்றி பெரிதாக எண்ணிக் கொள்ளாதீர்கள். மற்றவர்களுக்குக் கிடைக்காமல் இந்த வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தது பெரும்பேறு! இந்தச் சேவையே இறைவனின் வழிபாடு எனச் செய்யுங்கள். ஏழைகளிடம் கடவுளைக் காணுங்கள்,  உங்கள் முக்திக்காகவே அவர்களிடம் சென்று அவர்களை வழிபடுங்கள். ஏழைகளும் துன்பப் படுபவர்களும் நமது முக்திக்காகவே உள்ளனர். அதற்காகவே பகவானும் நோயாளியாக, பைத்தியமாக, தொழுநோயாளியாக, பாவியாக நம் முன் வருகிறார்.

முதலில் பிரபஞ்சத்தை அதாவது உங்களைச் சுற்றி இருப்பவர்களை வழிபடுங்கள்.

வழிபடுங்கள், வழிபாடு – அதுதான் அந்த வடமொழிச் சொல்லுக்குச் சரியான பொருள். வேறு எந்த வார்த்தையும் பொருந்தாது. மனிதர்கள், மிருகங்கள், எல்லாமே நம் தெய்வங்கள். நாம் வணங்கவேண்டிய முதல் கடவுள் நம் நாட்டு மக்கள். ஒருவரோடு ஒருவர் பொறாமை கொண்டு சன்டையிடுவதற்குப் பதிலாக இவர்களை நாம் வழிபட்டாக வேண்டும்.

மனத்தூய்மை, பிறருக்கு நன்மை செய்வது – இதுவே எல்லா வழிபாடுகளின் சாரமாகும். ஏழையிடமும், பலவீனனிடமும், நோயுற்றோரிடமும் சிவபெருமானைக் காண்பவனே உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறான். விக்கிரகத்தில் மட்டுமே சிவபெருமானைக் காண்பவனின் வழிபாடு ஆரம்ப நிலையில் உள்ளது. ஒரே ஒரு ஏழைக்காயினும், அவனது சாதி, இனம், மதம் போன்ற எதையும் பாராமல், அவனிடம் சிவபெருமானைக் கண்டு, அவனுக்கு உதவிகள் செய்து, தொண்டாற்றுபவனிடம் சிவபெருமான் மிகவும் திருப்தி கொள்கிறார்; கோவிலில் மட்டுமே தம்மைக் காண்பவனைவிட, இவனிடம் அதிக மகிழ்ச்சி கொள்கிறார்.

ஒரு பணக்காரனுக்கு தோட்டம் ஒன்று இருந்தது. அதில் இரண்டு தோட்டக் காரர்கள் இருந்தார்கள். ஒருவன் சோம்பேறி, வேலையே செய்யமாட்டான். ஆனால் முதலாளி தோட்டத்திற்கு வந்தால் போதும், உடனே எழுந்துபோய் கூப்பிய கைகளுடன் அவரிடம், ‘ஓ, என் முதலாளியின் முகம் எவ்வளவு அழகாக இருக்கிறது’ என்று புகழ்பாடி அவர் முன்னால் பல்லை இளித்துக்கொண்டு நிற்பான். மற்றவன் அதிகம் பேசுவதே இல்லை, ஆனால் கடினமாக உழைப்பான். பலவகையான பழங்களையும் காய்கறிகளையும் சாகுபடி செய்து, நெடுந்தொலைவில் வசிக்கின்ற அந்த முதலாளியின் வீட்டிற்குச் சுமந்து செல்வான். இந்த இரண்டு தோட்டக்காரர்களுக்குள் யாரை முதலாளி அதிகம் விரும்புவார்?

சிவபெருமான்தான் அந்த முதலாளி. இந்த உலகம் அவரது தோட்டம். இங்கே இரண்டு வகையான தோட்டக் காரர்கள் இருக்கிறார்கள். ஒரு வகையினர் சோம்பேறிகள், ஏமாற்றுக் காரர்கள். அவர்கள் எதுவும் செய்வதில்லை; சிவபெருமானின் அழகான கண்களையும் மூக்கையும் மற்ற குணநலன்களையும் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள். ஏழைகளான, பலவீனர்களான எல்லா மனிதர்கள், விலங்குகள் மற்றும் அவருடைய படைப்பு அனைத்தையும் மிகுந்த கவனத்தோடு பராமரிப்பவர்கள் மற்றொரு வகையினர். இவர்களுள் யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்? நிச்சயமாக அவரது பிள்ளைகளுக்குச் சேவை செய்பவர்களே. தந்தைக்குச் சேவை செய்ய விரும்புபவர்கள், முதலில் பிள்ளைகளுக்குச் சேவை செய்ய வேண்டும். சிவபெருமானுக்குச் சேவை செய்ய விரும்புபவர்கள், அவரது பிள்ளைகளாகிய இந்த உலக உயிர்கள் அனைத்திற்கும் முதலில் சேவை செய்யவேண்டும். கடவுளின் தொண்டர்களுக்குச் சேவை செய்பவர்களே அவரது மிகச் சிறந்த தொண்டர்கள் என்று சாத்திரங்களிலும் கூறப் பட்டுள்ளது. இந்தக் கருத்தை மனத்தில் கொள்ளுங்கள்.

மீண்டும் சொல்கிறேன்: மனத்தூய்மையுடன் இருங்கள், உங்களை நாடி வரும் ஏழைகளுக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். இது நற்கர்மம். இதன் பலனாக உங்கள் இதயம் தூய்மை பெறும். எல்லோரிலும் உறைகின்ற சிவபெருமான் வெளிப்பட்டுத் தோன்றுவார்.சுயநலம் கொண்டவன் எல்லா கோயில்களையும் வழிபட்டிருந்தாலும், புண்ணியத்தலங்கள் அனைத்தையும் பார்த்திருந்தாலும், சிறுத்தையைப் போல் தன் உடம்பு முழுவதும் மதச் சின்னங்களைத் தீட்டிக் கொண்டிருந்தாலும் அவன் சிவபெருமானிடமிருந்து விலகியே இருக்கிறான்.

…………………………………………. சுவாமி விவேகானந்தர்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.