ஒப்புமை_இலக்கியம்

ஒப்புமை_இலக்கியம்

தமிழில் ஒப்புமை இலக்கியத்தில் கரைகண்ட, கொழும்புவில் வாழ்ந்த உயர்திரு தமிழய்யா கலாநிதி க. கைலாசபதி அவர்கள் எழுதிய “ஒப்பியல் இலக்கியம்” நூலிலிருந்து ஒரு எடுத்துக் காட்டு.

தமிழால் சுவாசிக்கும் தமிழன்பர்கள் சுவைக்க இப்பதிவு

********

இருகோட்பாடுகள்

புதுமைப் பெண்ணைப் பற்றிப் பாடவந்த பாரதியார் வீராவேசத் தோடு ஓரிடத்திலே, “நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்” என்றார். தமது சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் வீர சுதந்திரம் வேண்டி நின்ற கவிஞர், தமிழ்ப் பெண்கள் “விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை விரைவில் ஒழிக்க வேண்டுமென்று குரலெழுப்பினார். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகியன பல நுற்றாண்டுக் காலமாகப் பெண்மையின் இலக்கணங்களாக எமது இலக்கியத்திலே பாராட்டப் பெறுவதை மனத்திற் கொண்டே நவயுகக் கவியான பாரதியார், நாணும் அச்சமும் யாருக்கும் வேண்டாம் என்றார். மேற்கூறிய மெல்லியல்புகள் நான்கனுள்ளும் நாண் என்பதே சிறப்பாகக் கொள்ளப்பட்டு வந்தள்ளது. ‘உயிரினுஞ் சிறந்தன்று நாணே” என்று தேற்றத்துடன் கூறுகிறது தொல்காப்பியம். இவ்வாறு பெண்பாற்கரியதாகக் கூறப்படும் நாண் சான்றோர் செய்யுட்களிலே ஆண்களுக்குரியதாகக் கூறப்படுவதை நாம் காண்கிறோம். சான்றார் செய்யுட்களின் வழிவந்த திருக்குறளிலும் ஒழிபு இயலிலே உயர்ந்தோருக்கு உரிய குணங்களில் ஒன்றாக நாண் உடைமை தனி அதிகாரமாக வகுக்கப்பட்டுள்ளது.

“ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறல்ல
நாண் உடைமை மாந்தர் சிறப்பு.”

இதன் பொருள்: ஊண், உடை, உறக்கம், அச்சம், காமம் ஆகியன மக்களுயிர்க்கெல்லாம் பொது; ஆனால் நன்மக்கட்குச் சிறப்பியல்பு நாணுவுடைமையே அவையல்ல என்பதாகும். திருவள்ளுவர் தமக்கேயுரிய முறையில் அதன் சிறப்பைக் கூறியுள்ளார்.

“பெண்கள் விடுதலைக் கும்மி” என்னும் பாடலில் கற்பைப் பற்றிப் பாரதியார் பின்வருமாறு கூறுகிறார்.

“கற்பு நிலையென்று சொல்லவந்தார் – இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்.”

கற்பைப் பற்றி பேசினால் அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக இருத்தல் வேண்டும் என்றார். பிற்காலத்தில் எவ்வாறாக அமைந்திருந்தாலும் சான்றோர் செய்யுட்களில் நாண் இரு கட்சிக்கும் பொதுவில்” வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

சான்றோர் செய்யுட்கள் தமிழகத்து வீரயுகத்தை பிரதிபலிக்கும் சொல்லோவியங்கள். போரின் அடிப்படையிலேயே அன்றைய சமுதாயம் வாழ்ந்தது. இடைவிடாத போரின் மத்தியில் சில இலட்சியங்கள் நிலவத்தான் செய்தன. கற்றானைக் கற்றான் காமுறுவதுபோல் வீரனை வீரன் மதிக்கும் பண்பு வீரயுகத்தின் இலட்சியமாக இருந்தது. போரென்பது வாழ்க்கை முறையாக அமைந்துவிடவே அதற்குச் சில விதிகளும், ஒழுங்குகளும், ஏற்பாடுகளும், அத்தியாவசியமாயிருந்தன. இவை ஏட்டில் வரையப்பட்ட சட்டதிட்டங்களல்ல. சமூகத்திலே யாவராலும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை விதிகள். சமயங்களின் வளர்ச்சியைத் தொடர்ந்து தர்மம், அதர்மம், பாவம், புண்ணியம் முதலிய கோட்பாடுகள் மனிதனது சிந்தனைகளையும், செயல்களையும் பாதிப்பது போல வீரயுகத்திலே மனிதரது உறவுகளினடிப்படையிலே எழுந்த சில நம்பிக்கைகள் அவர்களின் செயல்களைப் பாதித்தன. அத்தகைய நம்பிக்கைகளில் ஒன்றுதான் நாண்.

நாண் என்றால் என்ன? சாதாரணமாக வெட்கம், கூச்சம் என்று பொருள் கூறப்படும். ஆயினும் எதற்காக, வெட்கப்படுவது, கூச்சப்படுவது என்று கேட்பது இயல்பே. பழைய உரையாசிரியரான இளம்பூரணர் மேல்வருமாறு விளக்கந் தந்துள்ளார்.

“ஒப்பு முதலாக நுகர்ச்சியீறாக அவ்வழிவரும் சொல்லெல்லாம் நாட்டின் வழங்குகின்ற மரபினானே பொருளை மனத்தினான் உணரினல்லது மாணாக்கர்க்கு இது பொருள் என வேறுபடுத்தி ஆசிரியன் காட்டலாகாத பொருளுடைய ‘நாண்’ என்றது பெரியோர் ஒழுக்கத்து மாறாயின் செய்யாமைக்கு நிகழ்வதோர் நிகழ்ச்சி; அதுவும் காட்டலாகாது.”

அதாவது நாண் என்றால் இன்னது எனக் காட்ட முடியாதென்றும், அது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திலே பிறந்து வளர்ந்தவர் அனுபவத்தின் மூலம் உணர்ந்தறிவதென்றும் கூறுகின்றார், உரையாசிரியர்.

“ஒழுக்கமும், வாய்மையும், நாணும் இம்மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந்தார். (குறள் 952)

என்னும் குறளுக்கு உரை கூறப்புகுந்த பரிமேலழகர் மேல்வருமாறு கூறுகிறார்.

“உயர்ந்த குடியின்கண் பிறந்தார் தமக்குரிய ஒழுக்கம், மெய்மை, நாண் எனப்பட்ட இம்மூன்றன் கண்ணும் கல்வியான் அன்றித் தா மாகவே வழுவார்.”

இவ்விடத்திலே நாணோடு தொடர்புடைய பழி என்னுஞ் சொல்லையும் சிறிது நோக்குவோம். நாணைப் போலவே பழியென்னும் கோட்பாடும் ஒருவனுடைய செயல்களைக் கட்டுப்படுத்துந் தன்மை யுடையது. ஆயினும் இரண்டும் ஒருவேறு நிலையிலுள்ளன.

நாண் என்பது ஒருவன் தனது செயலைப் பற்றித் தான் மனத்திலே கொள்ளும் உணர்ச்சியாகும். அந்த வகையில் அது மனச்சாட்சி போன்றது. நாண் மனத்திலுள்ளவன் இவ்வாறு ஒழுகமாட்டான் எனக் கூறும் பொழுது அது ஒருவனுடைய அக நிலையைக் குறிக்கின்றது. ஈழத்துப் பூதன் தேவனார் அகநானூற்றுப் பாடலொன்றில் (231) இவ்வகை நிலையினைத் தௌிவாக வர்ணித்துள்ளனர்.

“நல்லிசை வலித்த நாணுடை மனத்தர்”

‘நல்ல புகழைக் கருதிய நாணையுடைய மனத்தர்’ என்று தலைவன் தோழி வாயிலாகப் புகழப்படுகிறான். மான உணர்ச்சிமிக்க வீரரை ‘நாணுடை மறவர்’ எனப் புலவர் பல இடங்களில் வருணித்துள்ளனர்.

“போர்ப்பறை கேட்டவுடன் தாமதியாது புறப்பட்டுச் செல்பவர்கள் மானமிக்க மறவீரர் என்றும், பூக்கோள் குறித்த தண்ணுமை ஒலி கேட்கும்பரை தாமதித்துச் செல்பவர்கள் நாணுடைந்த மாக்கள்” என்பதும் அக்காலக் கொள்கை. உதாரணமாக, நொச்சி நியமங்கிழார் பாடிய புறப்பாடலில் (293) ‘நாணுடைய மாக்கள்’ என்னுந் தொடர், நாணுடைந்த மாக்களைக் குறிக்கும் எதிர்மறைக் குறிப்பு மொழியாக அமைந்துள்ளது. நாணுடைந்தவர்களை ‘மாக்கள்’ எனக் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. மாக்கள், மக்களினின்றும் வேறுபடுவர்; அவர் பகுத்தறிவிலார்; ‘மாவு மக்களும் ஐயறிவினவே’ என்பது தொல்காப்பியம். மக்கள் ஐம்பொறியுணர்வோடு மனவறிவுமுடையவர். இதனாலேயே “நாணுடை மனத்தர்” என்றார் பூதன் தேவனார். “நாணுடை நெஞ்சம்” என்பர் கழாத்தலையார். இவற்றை நோக்கும் போது நாண் என்பது ஒருவனது மனப்பக்குவம் சம்பந்தமானதாகத் தோன்றுகிறது. இதனை மனங்கொண்டே பொய்யாமொழியாரும்,

“நாண் அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர் மருட்டி யற்று”

என்றார். அதாவது, “நெஞ்சத்தே” நாணில்லாத மக்கள் இயக்கம், நாணுடைய பாவை இயக்கம் போல்வதல்லது உயிரியக்கம் அன்று” என்பதாம். எனவே நாண் என்பது தான் சம்பந்தமானது எனலாம். இது குறளிலே கட்டுரைக்கப்பட்டுள்ளது

“பிறர் நாணத் தக்கது தான்நாணான் ஆயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.”

காண்பவரும் கேட்பவருமாகிய பிறர் நாணத்தக்க பழியை ஒருவன் தான் நாணாது செய்வானேயானால், அது அவனைவிட்டு அறம் அகன்றுவிடத்தக்க குற்றமாகும். பரிமேலழகர் கூறுகின்றார்: “தான் எனச் செய்வானைப் பிரிக்கின்றார் ஆகலின் ‘பிறர்’ என்றார். நாணொடு இயைபு இல்லாதானை அறம் சாராது என்பதாம்.” பிற்காலக் கருத்துக்களையுஞ் சேர்த்துக் கூறுகின்றாரெனினும், நாண், பழி, புகழ், அறம் ஆகியவற்றுக்கிடையுள்ள தொடர்பையும் பிணைப்பையும் தௌிவாக்கியுள்ளார் உரை ஆசிரியர்.

பழி என்பது ஒருவன் தனது செயலைப்பற்றிப் பிறர் யாது கருதுவரோவெனக் கொள்ளும் அச்சமாகும். நாண் ஒருவன் தனது செயல் குறித்துக் கூச்சப்படும் உணர்ச்சியாயின், பழி அது குறித்து அவன் உலகிற்கு அஞ்சுவதாகும். இதனடிப்படையிலேயே பழியஞ்சுவது என்னுந் தொடரும் வழங்குவதாயிற்று. பிற்காலத்திலே சமயக் கருத்துக்கள் வேரூன்றிய பின்னர், பழியொடு பாவம் என்னும் கோட்பாடும் சேர்ந்து ‘பழிபாவம்’ என்னும் தொடர் மொழி நிலவலாயிற்று.

“அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்”

என்ற குறளின் உரையில், “பாவமும் பழியும் கேடும் முதலாக அஞ்சப்படுவன பலவாயினும்” எனக் கூறிச் செல்லும் பரிமேலழகர், பாவத்தினையும் பழியினையும் இணைத்துச் சொல்வதும் கவனிக்கத்தக்கது. எனவே பழி, என்பது பிறர் சம்பந்தமானது எனலாம். வீரயுகத்திலே புலவர்கள், மன்னர் முதலியோரது செயல்களை எடைபோடும்பொழுது, நாண், பழி, புகழ் முதலிய கோட்பாடுகளின் அடிப்படையிலேயே தமது கருத்துக்களைக் கூறினர். இப்பண்புகள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் “குடிபழிதூற்றுங் கொடுங்கோன்மையும், புலவர் பாடும் புகழ் பெறாமையும் இரவலர்க்கீயாமையும் ஒரு வேந்தனைக் கீழ்மைப்படுத்துவன” என்னும் உணர்வுடன் கூறிய புறப்பாட்டில் (72) தௌிவாகத் தெரிகின்றன.

“நகுதக்கனரே நாடுமீக் கூறுநர்
இளைய னிவனென வுளையக் கூறி
படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தான்
நெடுநல் யானையும் தேரும் மாவும்
படையமை மறவரும் உடையும் யாமென்
றுறுதுப் பஞ்சா துடல்சினஞ் செருக்கிச்
சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொ
டொருங்ககப் படேஎனாயிற் பொருந்திய
என்னிழல் வாழ்நர் சென்னிழற் காணாது
கொடிய னெம்மிறை யெனக் கண்ணீர் பரப்பிக்
குடிபழி தூற்றம் கோலே னாகுக
ஓங்கிய சிறப்பி னுயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் றலைவனாக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்
புலவர் பாடாது வரைகவென் னிலவரை
புரப்போர் புன்கண் கூர
இரப்போர்க் கீயா வின்மை யானுறவே.”

நாண் இல்லாதவனுக்கும், பழியஞ்சாதவனுக்கும் புகழ் சேராது என்பது அக்கால நம்பிக்கை. அக்கால மக்களைப் பொறுத்தவரையில் புகழையே உயிரினும் மேலாக மதித்தனர். எனவே புகழுக்குத் தடையாக இருக்கும் செயல்களை இயல்பாகவே விடுத்தனர். நடைமுறையின் வீரர் யாவரும் இவ்வுயரிய இலட்சியங்களைக் கைப்பிடித்தனரென்று நாம் துணிந்து கூறு முடியாது. இத்துணை நெடுங்காலத்திற்குப் பின் உண்மையறிவது இலகுவன்று. ஆயினும் சான்றோர் செய்யுட்களில் இவ்விலட்சியங்களே பெரிதும் போற்றப்படுகின்றன. எந்த ஒரு சமூகமும் சட்டதிட்டங்களும் நடைமுறை ஒழுக்கங்களுமின்றி நிலைத்து வாழ முடியாதாகலின், வீரயுகத்திலே மேற்கூறிய நம்பிக்கைகள் பெரும்பாலும் நிலவின எனக் கருதலாம். அதே சமயத்தில் புலவர்களும் இவ்விலட்சியங்களைப் பிரசித்தப்படுத்தினர் என்பதனை நினைவுகூர்தல் தகும். அகநானூற்றுப் பாடலொன்றிலே “புலவர் புகழ்ந்த நாண்” என்று கூறப்படுகிறது.

புகழ், பழி முதலியவற்றுக்குள்ள பிணைப்பைப் புறநானூற்றுப் பாடலொன்று தௌிவாகக் காட்டுகின்றது. இளம் பெருவழுதி என்பான் பாடிய அப்பாடல்” “உண்டா லம்ம…” எனத் தொடங்குவது.

“புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்.”

பழியச்சத்திற்கு ஓர் உதாரணம் பார்க்கலாம். நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய வீரன் சபதம் செய்கிறான். ‘வஞ்சினம்’ என்று அது கூறப்படும். தன்னை இகழ்ந்துரைத்த மன்னரைப் போரில் வென்று அவர் தம் முரசினையும், கொடி, குடை முதலியவற்றையும் கைப்பற்றாவிடின் தான் குடிகள் பழிதூற்றும் கொடுங்கோலனாக மதிக்கப்படக் கடவது என்கின்றான். பழிக்கு அஞ்சும் பான்மை வஞ்சினவாயிலாகத் துலக்கமாகின்றது.

போர்க்களத்தில் மட்டுமின்றி அக ஒழுக்கத்திலும் தலைமக்களுக்கு நாண் வற்புறுத்தப்படுகின்றது. களவொழுக்கத்தை நீட்டித்துத் திருமணத்திலே சிரத்தை காட்டாத ஆண்மகனுக்கு நாண் என்ற உணர்ச்சியின்பேரில் புத்திபுகட்ட முற்படுகின்றாள் தோழி. சிறைப்புறத்தேயுள்ள தலைவன் கேட்டு வரையும் பொருட்டுத் தோழியொருத்தி தலைவியை நோக்கிப் பின்வருமாறு கூறத் தொடங்குகிறாள்:

“பேணுப பேணார் பெரியோ ரென்பது
நாணுத் தக்கன்றது காணுங் காலை.” (நற். 72)

அதைப்போலவே, களவொழுக்கத்தின் கண்ணே தலைவியின் நிலைமை இன்னல் நிறைந்ததாய் உள்ளதென்று தோழி கூறக்கேட்ட தலைவன் அந்நிலையிலே தலைவியை வைத்தற்கு நாணினன் என்று குறுந்தொகைப் பாடலொன்று காட்டும்.

“நன்னர் நெஞ்சத்தன் தோழி
நின்னிலை யான்றனக் குரைத்தனெ னாகத்
தானா ணினனிஃ தாகாவாறே….”

“நல்ல நெஞ்சத்தையுடையனான தலைவன், இவ்வொழுக்கம் நான்றாகாமையை நினைத்து பெரிதும் நாணமுற்றனன்” என்பது தோழியின் கூற்று. கருவூர்க் கதப்பிள்ளை என்னும் சான்றோர் பாடிய இப்பாட்டின் முற்பகுதியிலே இவ்வாறு நன்னெஞ்சத்தோடு நாணிய தலைமகனுக்கு உவமை கூறப்படுகிறது.

“பண்டும்
தாமறி செம்மைச் சான்றோர்க் கண்ட
கடனறி மாக்கள் போல….”

இதன் பொருள்: “முன்னரும் தாமறிந்துள்ள நடுவுநிலைமையுடைய பெரியோரைக் கண்டவிடத்துத் தமது கடமைகளையறிந்த நன்மக்களைப்போல”.

தலைவன் களவொழுக்கத்திலிருப்பினும் தோழி வரைவு கடாதலைக் குறிப்பாகச் சொன்ன அளவிலே, தனது கடமையை உணர்ந்து கொண்டான் என்பதற்கு விளக்கமாக, “கடனறிமக்கள்” போல என்றார் புலவர். புலவர் கூறும் ‘கடனறிதல்’ என்பதற்கும், இளம் பூரணர் கூறும் விளக்கத்திற்கும் பெரிதும் ஒப்புமை இருப்பதைக் கவனிக்கலாம்.

நாண் என்பது அகத்தினும் புறத்தினும் வருவதாயினும் புறத்திலேயே வீரயுகப் பண்பிற்கு இயைபுடையதாய் அமைந்துளது. அகத்திணைப் பாடல்களிலே நாண் என்பதன் பொருள் விரிவடைந்து பொருட் செறிவிழந்தது என்று கூறலாம். அவருக்கு நாணுதல் முதலியன இத்தகையதே. புறப்பொருள் வெண்பாமாலை கைக்கிளைப் படலத்தில்,

“ஒன்றார் கூறு முறுபழி நாணி
மென்றோ ளரிவை மெலிவொடு வைகின்று”
என்னும் கொளு, மெல்லியளான தலைவி பொருந்தாதார் சொல்லும் அவருக்கு நாணி வாட்டமுறுவதைக் குறிக்கின்றது. அவருக்கு நாணுவதைப் போலவே இயற்கைப் புணர்ச்சியின் பின் தலைமகன் முன்னின்று நலம்பாராட்டக் கேட்ட தலைமகன், அவன் முன் நிற்கமாட்டாளாய், நாணி ஒரு மருங்கு ஒதுங்கிக் கண்களைப் புதைத்தலாகும். நாணிக் கண்புதைத்தல் அல்லது இடையூறு கிளத்தல் என்று இதனை ஒரு துறையாக அமைத்தனர் ஐந்திணைக் கோவையாசிரியர். நூற்றுக் கணக்கான துறைகளில் ஒன்றாகவிருந்த இதனையே விதந்தெடுத்து, ஒரு துறைக்கோவையாக நானூறு செய்யுட்கள் பாட முற்பட்டனர் பிற்காலக் கவிராயர்கள். இவருள் பதினேழாம் நூற்றாண்டில் இரகுநாத சேதுபதிமீது ஒருதுறைக் கோவை பாடிய அமிர்த கவிராயர் பிரசித்தமானவர். அளவற்ற கற்பனையும் நாணற்ற மொழியும் நிறைந்த இதுபோன்ற நூல் படிப்பார் நாணிக் கண்புதைக்க வேண்டியவராயுள்ளனர் என்கிறார் டாக்டர் சுப.மாணிக்கனார். இலக்கிய நெறியில் ஏற்பட்ட மாற்றத்தை மாத்திரமன்றி நாண் முதலிய கோட்பாடுகள்பற்றி நிகழ்ந்த கண்ணோட்ட மாற்றத்தையும் இத்தகைய பிற்கால நூல்கள் காட்டி நிற்கின்றன எனலாம்.

அகத்துறையில் பிறர் புகழ்ச்சிக்கு நாணுவது போலவே, புறப்பாடல்களில் தலைமக்கள் தம்மைப் பிறர் பாராட்டுங்கால் நாணுவர். உதாரணமாக வன்பரணர் பாடலில் (புறம் 152)

“மூவேழ் துறையு முறையுளிக் கழிப்பிக்
கோவெனப் பெயரிய காலை யாங்கது
தன்பெய ராகலி னாணி…”

என்னுமடிகளிலே பாணர் கூட்டம் தன் பெயரைச் சொல்லிப் புகழ்ந்தபோது நாணிய வல்விலோரிபற்றிக் குறிப்பிடப்படுகிறது. நல்லோர் தங்கள் முன்னர் பிறர் தம்மைப் புகழ்வதை நாணுவர் என்னுங் கருத்தைச் சூத்திரம்போலக் கூறுகிறது குறுந்தொகைப் பாடல் ஒன்று.

“சான்றோர்,
புகழு முன்னர் நாணு
பழியாங் கொல்பவோ காணுங்காலே.” (குறுந்.252)

நெய்தற்கலியிலே (2) மரங்கள் துயிலும் காட்சிக்கு உவமையாக.

“தம்புகழ் கேட்டார்போல் தலை சாய்த்து”

என்று வருகிறது. பிறபாடல்களிலும் (புறம் 258) இத்தகைய கருத்துக்களைக் காணலாம். இயற்பண்புடன் விளங்கும் இத்தகைய வருணனைகள் பிற்காலத்தில் கேவலம் வெறும் வருணனை மரபாகியதால் பொருட்சிறப்பிழந்து சொற்சிலம்பங்களாயின.

கடமையின்னதென்று சொல்லித் தெரிந்தால் அதிலே சிறப்பில்லை. நாணென்பதும் தன்னைத்தானே நல்லது கெட்டதிற்கூடாகச் செலுத்த உதவும் கோட்பாடாகும். கடமையுணர்ச்சிபோல அது உணர்வுபூர்வமானது என்பது சான்றோர் செய்யுட்களின் உட்கிடை கடமையைப்பற்றிப் பாரதியார் கூறுவதும் இவ்விடத்திற் பொருத்தமாக உள்ளது.

“கடமையாவன தன்னைக் கட்டுதல்
பிறர்துயர் தீர்த்தல் பிறர் நலம் வேண்டுதல்.”

இதுகாறும் கூறியவற்றால் ‘நாண்’ என்பது பண்டைத் தமிழகத்திலே ஆண்மைக்குரிய பண்புகளிலொன்றாகக் கொள்ளப்பட்டதென்றும், பழியஞ்சுதல் என்னும் கோட்பாட்டிற்கும் அதற்கும் நெருங்கிய தொடர்புண்டென்றும். அவ்விரண்டும் அக்கால மக்களின் வாழ்க்கையை நெறிப்படுத்தின என்றும், காலப் போக்கில் அவை சமயக்கோட்பாடுகளுடன் கலந்தனவென்றும் அறிந்து கொள்ளலாம்.

நாண், பழி, புகழ், அறம் முதலிய கருத்துப் படிவங்களும் அவைபற்றிய இலக்கிய வழக்காறும் பண்டைக் கிரேக்க இலக்கியத்திலும் காணப்படுகின்றன. இவ்வொற்றுமை எதிர்பார்க்கக் கூடியதொன்றே. ஆதி கிரேக்க நூல்களும் வீரயுகம் ஒன்றனுக்குரியனவாதலால் இரு தரப்பிலும் ஒத்த கருத்துக்களும் இலக்கியப் போக்குகளும் காணப்படுவது இயல்பே. அது மட்டுமல்ல; வீரயுகத்தையடுத்த காலப் பகுதிகளிலும் இரு நாட்டு இலக்கியங்களின் நோக்கும் போக்கும் பெருமளவில் இயைபடையனவாகவே உள்ளன. உதாரணமாக, வீரயுகத்தைத் தொடர்ந்து அறவியற் கருத்துக்கள் சார்ந்த பனுவல்கள் இரு மொழிகளிலும் முக்கியத்துவம் பெற்றன.

நாண், பழி ஆகிய இரண்டும் கிரேக்க மொழியில் முறையே Aidos, Namesis என்னுஞ் சொற்களாற் குறிக்கப்படுவன. இவை ஒன்றற்கொன்று நேர்ப்பதங்கள். இவ்விரு சொற்களையும் அவற்றின் பொருளாழத்தையும் தௌிந்தாலன்றிக் கிரேக்க சான்றோரிலக்கியத்தை முழுமையாக என்று கிரேக்க இலக்கிய அறிஞர் கூறுவர். இவ்விரண்டும் ஒன்றையொன்று வேண்டி நிற்கும் இரட்டைக் கருத்துப் படிவங்களாம். நாண், பழி ஆகியனவும், அவற்றை ஆதாரமாகக் கொண்ட புகழும் யாவரிடத்துச் சிறப்பாகச் செயற்படும் என்பது பற்றி, கிரேக்கர் கருதியது இங்குக் குறிப்பிடத்தக்கது. அவை சுதந்திரமுடையார்கண்ணே குடிகொண்டு விளங்குவன என அவர்கள் கொண்டனர். இற்பிறந்தார் மாட்டு இவ்வியல்புகள் சிறப்பாக அமைவன என்றே வள்ளுவரும் கூறியுள்ளதை ஏலவே பார்த்தோம். அதனுடைய விகற்பமாகவே சுதந்தரரைக் குறிப்பிடுகின்றார், கிரேக்க நூலாசிரியர். “ஒரு மனிதன் சுதந்தரமாக இருக்கும்போதே இவை செயற்படுகின்றன; நிர்பந்தம் இருத்தலாகாது” என்கிறார் பேராசிரியர் கில்பெர்ட் மறே. அதாவது பிறரேவலின்றிச் சுய உணர்வினால் இவற்றைக் கடைப்பிடிப்பவன் சுதந்தரன் என்பது அவர்கள் கொள்கை. இத்தகைய கருத்து விளக்கம் தமிழிலும் காணப்படுகிறது. உதாரணமாக அகனைந்திணைக்கு உரிய தலைமக்களை விவரிக்குமிடத்து உரையாசிரியர் இளம்பூரணர் பின்வருமாறு கூறுகிறார்.

“அகத்திணையாவன அறத்தின் வழாமலும் பொருளின் வழாமலும் இன்பத்தின் வழாமலும் இயலல் வேண்டும்; அவையெல்லாம் பிறர்க்குக் குற்றவேல் செய்வோர்க்குச் செய்தல் அரிதாகலானும், அவர் நாணுக் குறைபாடுடைய ராகலானும்….இன்பம் இனிது நடத்துவார் பிறர் ஏவல் செய்யாதார் என்பதானாலும், இவர் புறப்பொருட் குரியராயினார்.”

பிறரேவல் செய்வார் நாணுக்குறைபாடுடையவர் என்பதனால், அதன் மறுதலையாகச் சுதந்தரமாக வாழ்பவா நாண்வேலி (குறள். 1016) உடையவர் என்பது பெறப்படும்.

நாண் என்பதற்கு இளம்பூரணர் விளக்கங்கூறியவிடத்து, அதனையொருவன் ‘மனத்தினால் உணரினல்லது வேறுபடுத்திக் காட்டலாகாது’ என்று கூறியதைப் பார்த்தோம். இவ்வாறே கிரேக்கரும் கூறினர். பேராசிரியர் மறே எழுதுகிறார்: “அயிடோஸ் (நாண்) என்பது மன உணர்வேயாகும்; ஆகவே அதனை அளவிடமுடியாது; வகுக்க முடியாது; கொள்கையாகக் காட்ட முடியாது. அது தன்னளவில்தானே இயங்கி வளர்வது. அதற்கு வரம்பு கிடையாது. அதனை உடையோன் உள்ளமே அதன் எல்லை.” அடிமைகள் நாணுக்குறைபாடுடையவர் என்று இளம்பூரணர் கூறியதைப் போலவே கிரேக்கரும் அடிமைகளிடத்து நாண் இல்லையென்றனர். இன்பியல் நாடகாசிரியன் இயூரிபிடீஸ் இதற்குச் சமாதானம் கூற முனைந்தான். “இரக்கமின்மையே நியதியாயுள்ள இடத்தில் நாணைப் பற்றி ஏன் பேசவேண்டும்?”

இற்குடிப்பிறந்தானொருவன் தனக்கு இயல்பாயுள்ள நாணுடைமை காரணமாக அடிமைகளைப் பரிவுடன் நடத்தக்கூடும். ஆனால் அடிமைக்கு நாண் இருப்பதாகக் கிரேக்க ஆசிரியர்கள் கூறினாரல்லர். இதனடிப்படை சிறிது சிந்திக்கத் தக்கது. நாணும் பழியும் ஒழுகலாறு சம்பந்தமானவை. கிரேக்க இலக்கியங்களின்படி தலைவன் ஒருவன் சில செயல்களைச் செய்யும்பொழுது மனங்கூசுவதே இவ்வடிப்படை. அச்செயல்களை யாது காரணத்தாலோ செய்தால் அவற்றிற்காக நாணுகின்றான்; செய்யாவிட்டால் அவற்றைத் தவிர்க்க முயல்கிறான். எனவே, சில செயல்களைச் செய்யாதிருக்க அவனுக்குச் சுதந்தரம் இருத்தல் அவசியம். உதாரணமாக, பெண்ணைக் கொல்லுதல் நாணத்தக்க செயல் என்று உணரும் சுதந்தரன் கொல்லாது விடுகிறான். ஆனால் தலைவன் ஆணையிட்டால் அடிமை அக்கொடிய செயலைச் செய்தேயாக வேண்டும். அவனைப் பொறுத்தவரையில் நாண் பொருளற்றுப் போகிறது. தட்டிக் கேட்க ஒருவரும் இல்லாதவிடத்தும் தானே உணர்ந்து சில செயல்களைத் தவிர்ப்பதற்கு உள்ளார்ந்த நாணுர்வு காரணம் என்று கிரேக்கர் கூறினர்.

ஹோமான் இலியாது காவியத்தில் இதற்கோர் உதாரணம் பார்ப்போம். மாவீரன் அக்கிலீஸ் ஈற்றியனது நகர்மீது போர்தொடுத்தபோது, அங்கு நிறைந்திருந்த சிலிசியரையும் ஈற்றியனையும் கொன்று, நிதிக் குவைகளைச் சூறையாடினான். ஆயினும் ஈற்றியன் அணிந்திருந்த கவசம் முதலாயவற்றை மாசுபடுத்தாது விட்டான். அவன் நெஞ்சில் நிறைந்திருந்த நாண் அவ்வாறு செய்வதற்கு இடங்கொடுக்கவில்லை. அது மட்டுமல்ல. போரில் இறந்த ஈற்றியனைத் தகுந்த சிறப்புடன் சிதையில் வைத்து எரித்தான். நாணுக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாக இதனைக் கொண்டனர். நாணோடு கலந்து காணப்படும் மென்மையும் அக்கிலீசின் செயலிற் புலப்படுகிறது. ஈற்றியனுக்கு இவ்வாறு மரியாதை காட்டியதால் அக்க்லீசுக்கு லாபமோ நட்டமோ கிடையாது. ஈற்றியனது சிறப்புமிக்க போர்க்கவசத்தைச் சிதைத்திருப்பினும் அவனைக் கண்டிக்க யாருமில்லை. போரில் பகைவரது பொருட்களைச் சிதைப்பது சர்வ சாதாரண நிகழ்ச்சிதான். ஆயினும் அக்கிலீஸ் அகத்து இருந்த நாண் தடையாக விளங்கிற்று. “இதுவே தூய, உயர்ந்த நாணுர்வு” என்கிறார் மறே.

இதே அக்கிலீஸ் ஒரு சந்தர்ப்பத்தில் கோபாவேசத்திலே தன்னை மறந்து நாணத்தக்க செயலைப் புரிந்து பழிக்கு ஆளாகும் நிலையையடைந்துவிடுகிறான். தனது ஆருயிர் நண்பன் பட்ரோகிளஸ் போரில் இறந்தபோது, அவன் வஞ்சின முரைத்துப் போர்க்களம் புகுகின்றான். “உன்னைக் கொன்ற ஹெக்டரது போர்க்கவசத்தைக் கொண்டு வந்து, உனது, பாடைக்க முன் பன்னிரு டிரோஜ இளைஞரைப் பலிகொடுத்த பின்னரே உரிய மரியதைகளுடன் உனக்கு ஈமக் சடங்குகளைச் செய்வேன்” என்று நீள்மொழி உரைக்கின்றான். அடுத்து நிகழும் கடும் போரிலே தனது சபதத்தின் பெரும் பகுதியை நிறைவேற்றுகிறான். ஹெக்டரது தலையைக் கொய்வதற்குத் தெய்வத்தலையீடு தடையாயிருந்தது. ஆனால் இறந்த ஹெக்டரது சடலத்தைத் தேரிற் கட்டிப் புழுதியெல்லாம் இழுத்து மாசுபடுத்துகிறான். தன்னைக் கட்டுப்படுத்தும் உணர்வுகளை உதாசீனஞ் செய்கிறான். இது கண்ட தேவர்களே கோபப்படுகின்றனர். “அக்கிலீஸ் நாணத்தையும் இரக்கத்தையும் இழந்து விட்டான்” என்று அபோலோ கூறுவது நாண் பற்றிய விளக்கத்தை மேலும் தௌிவாக்குகிறது. நாண் கடைப்பிடிக்கப்படாவிட்டால் அது பற்றித் தண்டனையில்லை. அது உணர்வானைப் பொறுத்தது.

இதனைப் புறநானூற்றுப் பாடல் ஒன்று (36) சித்திரிக்குமாற்றைப் பார்ப்போம்:

அடுநை யாயினும் விடுநை யாயினும்
நீயளந் தறிதிநின் புரைமை, வார்கோல்
செறியரிச் சிலம்பிற் குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கிற் றெற்றி யாடும்
தண்ணான் பொருதை வெண்மணல் சிதையக்
கருங்கைக் கொல்ல னரஞ்செயவ்வாய்
நெடுங்கை நவியம் பாய்தலி னிலையழிந்து
வீகமர் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும்
கடிமரந் தடியு மோசை தன்னூர்
நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப
ஆங்கினி திருத்த வேந்தனோ டீங்குநின்
சிலைத்தார் முரசங் கறங்க.
மலைத்தனை யென்பது நாணுத்தக வுடைத்தே.

கதை இதுதான்: கிள்ளிவளவன் என்னும் சோழன் கருவூரை முற்றுகை யிட்டிருந்தான். கருவூர் மன்னன் போரிட விரும்பாது கோட்டைக்குள்ளே அடைப்பட்டிருந்தான். சோழனுடைய வீரர் நெடிய கையையுடைய கூரிய வாயுடைய கோடரிகளால் தனது காவலிலுள்ள கடிமரங்களை வெட்டி வீழ்த்தும் ஓசைதான் (மானமின்றி) இனிதாக இருந்த அரண்மனைக்கண் ஒலிக்கக் கேட்டும் வாளாயிருந்த வேந்தனுடன் போர் புரிவது தூய வீரர்க்கு நாணுத் தருவதாகும். இனி, கொல்வாயாயினும், கொல்லாமல் விடுவாயாயினும் அவற்றால் உனக்கு வரும் பெறுபேறுகள் யாம் சொல்ல வேண்டா. நீயே எண்ணி அறிவை. இது ஆலத்தூர் கிழார் கூற்றாக அமைந்துள்ளது. “மானமற்று (வாழ்வே பெரிதென்று) மறைந்திருந்த மன்னனுடன் பொருதா யென்பது நாணும் தகுதியை யுடைத்து” என்று புலவர் எடுத்துரைப்பது நாண் பற்றிய நல் விளக்கமாக அமைந்திருக்கிறது. இதனாலேயே “புலவர் புகழ்ந்த நாண்” எனப்பட்டது. இப்போரைக் கிள்ளிவளவன் தொடர்ந்து நடத்தினானோ அல்லது கைவிட்டானோ என்பது நமக்குத் தெரியாது. ஆனால் போரிலே நாண் எத்தகைய இடத்தை வகிக்கிறது என்பது எமக்குப் புலனாகிறது.

நாணத்தக்க பழிசூழும் செயல்களைப் பிறர் காணச் செய்யக் கூசினர் கிரேக்க வீரர். ஆனால் மனிதர் எவரும் பார்க்காத விடத்தும் இயற்கைச் சக்திகள் பார்ப்பதாக அவர்கள் நம்பினர். எனவே, நாணத்தக்க செயலைச் செய்தவன் பூமியையும் சூரியனையும் முகங் கொடுத்துப் பார்க்கத் தயங்குவான். யார் கண்ணுக்குத் தப்பினாலும் நிலம், நீர், காற்று முதலிய தெய்வங்களின் பார்வையிலிருந்து தப்ப முடியாதென்று ஹோமரும், ஹீசியொட்டும் கருதினர். பழி என்பது பிற்காலத்திலே சமயத் தொடர்பினால், கர்ம வினை முதலியவற்றுடன் பிணைப்புண்டு பொருள் விரிவு பெற்றது. கிரேக்க ஆதி இலக்கியங்களிலே அது ஒருவனது செயல் பற்றிப் பிறரது கணிப்பாகவே கருதப்பட்டது. கொன்றானைத் தொடர்ந்து பற்றும் கொலைப் பாவம் முதலிய கருத்துகள் பிற்காலத்துக்குரியன. பேராசிரியர் மறே கூறுவது போல “பழி என்பது துன்பத்துக்கு ஆளாகியவனது நேரடியான கோபம் அன்று; அச்செயலைப் பார்த்த மூன்றாம் நபருடைய குற்றச் சாட்டாகும்.”

நாண், பழி முதலியன சான்றோர் இலக்கியத்திலே சமயச் சார்பற்றனவாகவும் வாழ்க்கையோடு நேரடியான தொடர்புடையனவாகவும் காணப்படுகின்றன. கிரேக்க இலக்கியத்திலும் இவ்வாறேயிருக்கக் காணலாம்.

தெய்வ சாபம், தெய்வ நீதி முதலியவற்றுக் கஞ்சியன்றி, போரின் தேவைகளையும் நியதிகளையும் ஒட்டியே நாண், பழி முதலியவற்றை வழங்கினர். உதாரணமாக, போருக்கு அஞ்சுபவன் நாணமற்றவனாகக் கருதப்பட்டான். ‘நாணுடைந்த மாக்கள்’ என்ற தொடரை மேலே பார்த்தோம். கிரேக்கரும் கோழைத்தனம் நாணுத்தகவுடையது எனக் கருதினர்.

“ஆகிவியர்களே நாணமில்லையா? எதிர்
நின்று போர் புரிய மாட்டீர்களா?”

என்றும்
“போரிடப் பின்னிடாதீர்கள் உங்கள் நெஞ்சில்
நாணும் பழியும் நிறைந்திருக்கட்டும்”

என்றும் கூறப்படும்பொழுது போரின் மத்தியில் இவை பயனீட்டுக் கோட்பாடுகளாக வழங்குவதைக் காணலாம். உதாரணமாக நிராயுதபாணியாய் வந்து தஞ்சமடைந்தவனைக் கொல்லுதல் நாணுத்துறந்த செயலாகக் கருதப்பட்டது. உதவியற்றோரைக் கொல்வதும் பழிச்செயலாகக் கொள்ளப்பட்டது. இவ்வடிப்படையிலேயே கிரேக்க ஆதிகாவியங்களில் விருந்தினர். இரவர், முதியோர் என்றிவர்களுக்குத் தீங்குச் செய்வது நாணற்ற செயலாக கூறப்படுகிறது. ‘திக்கற்ற வர்க்குத் தெய்வமே துணை’ என்பது போல, கிரேக்கரும் திக்கற்றவரைத் தேவர்களின் அதிபதியான சீயஸ் கவனித்துக் கொள்கிறான் என எண்ணினர்.

சுருங்கக் கூறுவதாயின், பழந்தமிழ்ச் செய்யுட்களிற் காணப்படுவதுபோலவே கிரேக்க ஆதிகாவியங்களிலும் பழி என்பது பாவனத்தினின்றும் வேறாக உள்ளது. வீரயுகத்தில் பாவம் என்னும் கொள்கை தோன்றவில்லை. ஏனெனில் பாவம் கருத்து வடிவானது; காரணகாரியத் தொடர்பில் அமைந்தது. நாண், பழி என்பன தம்மளவில் தாமே நிறையுடையன, ஆனால் கிரேக்க இலக்கிய வரலாற்றிலும் ஹீசியொட் காலத்துக்குப் பின்னர், நாணத்தக்க செயல்கள் பாவச் செயல்களாகவே குறிக்கப்படலாயின. உதாரணமாக ஹீசியொட் தனது வேலைகள் என்னும் நூலிலே பஞ்சமா பாவங்களைக் குறிப்பிடுகிறான்:

(1)”திக்கற்றோருக்கும் இரவலருக்கும் தீங்கு இழைப்போன்; (2) தனது உடன் பிறந்தானின் மனைவியைப் பெண்டாளுபவன் ” (3) “அனாதைக் குழந்தைகளுக்குத் துன்பம் செய்பவன்;” (4) “வயோதிக காலத்தில் தந்தையைத் துன்புறுத்துபவன்; இவர்கள் யாவரும் ஒரே நிலையிலுள்ளவரே, இவர்களைச் சீயஸ் தெய்வமும் பொறுக்கமாட்டாது.”

ஹீசியொட்டின் குரலிலே பாவ, புண்ணிய தொனி தெரிகிறதாயினும், அவன் குறிப்பிடும் பஞ்சமா பாதங்கள் ஒருண்மையை எமக்கு நினைவூட்டுகின்றன. பாபச் செயல்கள் என அவன் குறிப்பிடுபவை, உண்மையில் பழைய குலமரபுக்கிளைகளிலே விலக்கப்பட்ட ‘சமூக விரோத’ச் செயல்களின் அடிப்படையில் எழுந்தவை. குற்றங்களைப் புரிபவனுக்குச் சமய நம்பிக்கையின் பேரில் தண்டனை கூறப்படுகிறதாயினும், குறிக்கப்படும் குற்றங்கள் சமுதாயத்தில் தவிர்க்கப்பட வேண்டியனவாயிருப்பது கவனிக்கத் தக்கது.

வீரயுகத்தையடுத்து தோன்றிய “இருண்ட காலப் பகுதி”யில் (சங்க மருவிய காலமென்றும், களப்பிரர் காலமென்றும் வெவ்வேறு பெயரிட்டு இக்காலப் பகுதியை இலக்கிய வரலாற்றாசிரியர் வழங்குவர்) எழுந்த அறநூல்களில், இனியது, இன்னாதது என்று புலவர்கள் அடுக்கிக் கொண்டுபோவதைப் பார்க்கும்போது, எமக்கு ஹூசியொட்டின் நினைவு தோன்றாமற் போகாது. சீருஞ் சிறப்பும் பொருந்திய வீரயுகத்திற்குப் பின் உலகில் ‘செம்மையெல்லாம் பாழாகிக் கொடுமையே அறமாகித் தீர்ந்த’தாக ஹீசியொட் நம்பினான். தான் வாழும் யுகமாகிய இரும்புக் காலத்திலே இரும்பு மாக்கள் மத்தியில் வாழ ஒருப்படாது நாணும் பழியும் நல்லோர் வாழும் என்ற நூலிற் குறிப்பிடுகின்றான். எவ்வாறாயினும் கிரேக்க ஆதிகாவியங்களுக்குப்பின் இக்கோட்பாடுகள் மெல்ல மெல்லச் செல்வாக்கிழந்தன.

கிரேக்க மொழியிலே பிற்பட்டுத் தோன்றிய ஒழுக்கவியலை நோக்கும்பொழுது அதில் நாண் சிறு வழக்கினதாகவே காணப்படுகிறது. பிளேட்டோ, அரிஸ்டோட்டில் முதலிய தத்துவவாதிகள் அதனை ஒரோவழி குறிக்கின்றனரெனினும், அவர்களது சிந்தனையில் அது சிறப்பிடம் பெறவில்லை. மனிதவாழ்க்கையை நெறிப்படுத்தும் தார்மீக சக்தி அதற்கு இல்லாது போய்விட்டது. அரிஸ்டோட்டில் போன்றோர் அதனை விரும்பத்தக்க நற்பண்புகளில் ஒன்றாகக் குறிப்பினும், உணர்ச்சிமிக்க அச்சொல்லை வற்புறுத்தினார் அல்லர். தமிழிலும் இத்தகையதொரு போக்கைக் காணலாம். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே நாண், பழி முதலியன இடம்பெற்றபோதும், அவை வாழ்க்கையோடு தொடர்புடைய உணர்ச்சி ஆழமிக்க சொற்களாகவன்றி எடுத்துரைக்கப்படும் கொள்கைகளாக அமைந்துள்ளன. நாண் முதலிய “கிளவியெல்லாம் காட்டலாகப் பொருள்” என்றார் தொல்காப்பியர். அதனையே விளக்கி “மாணாக்கர்க்கு இது பொருள் என வேறுபடுத்தி ஆசிரியன் காட்டலாகாத பொருளுடையது” நாண் என்றார் இளம்பூரணர். ஆனால் அறப்போதனை செய்த கீழ்க் கணக்கு நூல்களோ தம்மியல்புக்கியைய நாணையும் காட்டும் பொருளாக வரைகின்றன. இதுவொன்றே காலவேறுபாட்டைக் காட்டப்போதுமான தன்றோ? உதாரணமாக நல்லாதனாரின் திரிகடுகத்தில் (செய்யுள் 6) பின்வருமாறு நாண் தொகுத்துக் கூறப்படுகிறது :

“பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலம், பேணார்
திறன் வேறு கூறின் பொறையும், அறவினையைக்
கார் ஆண்மைபோல ஒழுகலும் – இம்மூன்றும்
ஊராண்மை என்றும் செருக்கு”

இதிலே பொறை முதலியவற்றுடன் நாண் சேர்க்கப்பட்டுள்ளமை பொருத்தமாகக் காணப்படவில்லை. அது போலவே கபிலதேவரது இன்னா நாற்பதிலும்,

“சூலத்துப் பிறந்தவன் கல்லாமை இன்னா;
நிலத்து இட்ட நல்வித்து நாறாமை இன்னா;
நிலத்தகையார் நாணாமை இன்னா; ஆங்கு இன்னா,
கலத்தல் குலம் இல்வழி.”

இத்தகைய செய்யுட்கள் வாழ்க்கையைத் தூர நின்று நோக்கிப் போதிக்கும் தன்மையன. எனவே உணர்வும் சுவையும் சிறப்பின்றியுள்ளன.

கிரேக்க மொழியிலும் தமிழிலும் நாண் காலப்போக்கில் தனது புராதண சக்தியை இழப்பதற்கக் காரணம்:
சமுதாய மாற்றமே அடிப்படைக் காரணம். வீரயுகத்திலே தனிச்சொத்துரிமை தலைகாட்டத் தொடங்கியிருந்தது. தனியொருவனது வீரமும், மானமும், ஆண்மையும், வினைத்திறனும் விளங்க வல்லான் வகுத்ததே வாய்க்காலாக இருந்தது. பழைய குலமரபுக் குழுக்கள் முட்டிமோதிப் புரண்டு கொண்டிருந்தன. வர்க்க பேதமுள்ள சமுதாயம் பிறந்துகொண்டிருந்தது. ஆட்சிமுறை சீராக உருப்பெற்றிருக்கவில்லை. சட்ட திட்டங்கள் வகுக்கப்படவில்லை. குலமரபுக் குழுக்களில் வழங்கிய உணர்வுபூர்வமான ஒழுக்க முறைகள் சிற்சில மாற்றங்களுடன் கைப்பிடிக்கப்பட்டது. முன்னர் கழுவுக்கும், கணத்திற்கும், பொதுவாக இருந்த ‘சகோதரத்துவ’ ஒழுகலாறு இப்பொழுது தலைநிலையெய்திய ‘பெருஞ் செய்யாடவர்’ ஒழுகலாறாக மாறியது. இரத்த உறவுகள் மாறி அல்லது வலுக்குறைந்து பொருளுறவுகள் தோன்றின. அக்காலக் கட்டத்திலே தவிர்க்கமுடியாத நடைமுறை விதிகளாக அமைந்தனவே நாண், பழி, அறம் முதலியன. அக்காலத்திலே புலவராக மட்டுமின்றி அறியவராகவும், வரலாற்றாசிரியராகவும், போதனாசிரியராகவும் விளங்கிய கவிஞர் இந்தநடைமுறை விதிகளைப் பிரசித்தப்படுத்தினர். சமுதாயம் முழுவதற்கும் பொதுவானவையல்ல இவ்விதிகள். தலைமக்களுக்கிடையேயுள்ள “கண்ணியமான” உடன்பாடே இவ்விதிகளின் அடிப்படையெனலாம்.

வீரயுகத்தைத் தொடர்ந்து புதிய-வர்க்க சமுதாயம் தோன்றிய பின்னர், இந்நடைமுறை ஒழுங்குகள் வேண்டாவாயின. கட்டுப்பாடற்ற சமுதாயத்திலே நாண் முதலியன மனிதரது ஒழுக்கத்தைக் கட்டுப்படுத்தும் தோன்றாச் சட்டமாய் விளங்கியது. வீரயுகத்தில் நிகழ்ந்த இடைவிடாத கோரப் போர்களின் விளைவாகப் புதிய அரசுகள் தோன்றியதும் அவற்றின் உடன் பிறப்பாக இராணுவம், சட்டம், நீதிமன்றம், அரச கட்டளை முதலியன தோன்றின. தோன்றவும் உருவற்ற நாண் உள்ளங்களிலிருந்து மறைந்தது. ஆயினும் அது பழைய கோட்பாடாதலின் வெறும் அலங்காரக் கருத்தாக நின்று இலட்சிய வடிவிற் போற்றப்படும் நற்பண்புகளில் ஒன்றாக இலங்கிற்று. அரசு தோன்றிய பின் சமயமும் அதற்குப் பக்கத்துணையாகியது. இகலோகக் கோட்பாடாக விருந்த பழி பரலோகத் தொடர்புடையதாக மாறியது. ஆனால் அது வேறு கதை.

கலாநிதி. . கைலாசபதி   எழுதிய “ஒப்பியல் இலக்கியம்” –

http://www.tamil.net/projectmadurai

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.