பரிசுப்பெட்டி

பரிசுப்பெட்டி

—————–

நாளை அவனது நண்பனின் திருமணம். அதற்குப் பரிசளிக்க ஏதேனும் ஒரு பரிசுப்பொருள் வாங்கலாம் என்று கடைக்குச் சென்றான். நீண்ட நேரம் பல கடைகள் ஏறி இறங்கி அவனது நண்பனுக்குப் பிடிக்கும் என்று இவனுக்குத் தோன்றிய ஒரு பொருளை வாங்கினான். அதை வைக்க ஒரு அட்டைப்பெட்டியையும், அலங்கரிக்க வெகு நேர்த்தியான வண்ணக் காகிதமும் வாங்கிச் சென்றான்.

 

அவனது வீட்டில் வைத்து விட்டு, சாப்பிட்டான். பின் மனைவியிடம், “செல்லம் என்ன செய்கிறாள்” என்று கேட்டான். “இரண்டுமணி நேரம் உங்களுக்காகக் காத்திருந்து காத்திருந்து ஒன்றும் சாப்பிடாமல் அழுதுகொண்டு இப்போதுதான் உறங்கினாள். அவளை எழுப்பவேண்டாம்” என்றாள் மனைவி. தான் சாப்பிடும் முன்னர் இதைக் கேட்டிருந்தால் தானும் சாப்பிடாமல் இருந்திருக்கலாமே என்று வருந்தினான். இந்த வருத்தத்தில் அவனுக்குத் தூக்கம் மெதுவாகவே வந்தது. காலையில் எழுந்ததும் பரிசுப் பெட்டியை தயார் செய்யலாம் என்று உறங்கினான்.

 

காலையில் இவனுக்குமுன் எழுந்துவிட்ட இவனது மூன்றுவயதுப் பெண், தந்தை வாங்கிவந்த அந்த வண்ணக் காகிதங்களைப் பார்த்தாள். இவள் என்ன செய்கிறாள் என்பதை அவளது அம்மாவும் கவனிக்கவில்லை.

 

இவன் விழித்ததும், மனைவியிடம், “மாதக் கடைசியில் இருந்த 300 ரூபாய் பாக்கியில் நேற்று நண்பனுக்குப் பரிசு ரூ.250 ஆகிவிட்டது. அட்டைப்பெட்டியும் 5 ரூபாயும் வண்ணக் காகிதம் 25 ரூபாயும் ஆகிவிட்டது. இந்தா மிச்சம் 20 ரூபாயை நீ  செலவுக்கு வைத்துக் கொள். மேட்டார்சைக்கிளுக்கு பெட்ரோல் போடக்கூட பணம் இல்லை. நான் பேருந்தில் செல்கிறேன். நான் குளித்துவிட்டு வருகிறேன். நீ தேநீர் தயாரித்துக் கொடு.  குளித்துவந்ததும் பரிசுப்பெட்டியை ஒட்டி எடுத்துச்செல்லவேண்டும்” என்று கூறிவிட்டு குளிக்கச் சென்றான்.

 

குளித்துவிட்டு வந்தவன், தேநீரைப் பருகிவிட்டு, தான் பரிசுப்பொருள் வைத்திருந்த மேசைக்கு வந்தான். அங்கே பரிசுப்பொருளும், அட்டைப்பெட்டியும், வண்ணக் காகிதத்தில் பாதியும் இருந்தது. உடனே மனைவியிடம் கத்தினான். அவன் கத்தலில் வெளியே வந்தாள் அந்தச் சின்னப் பெண். “அப்பா, அப்பா, உங்களுக்கு நாளை பிறந்த நாள் என்று அம்மா சொன்னாள். உங்களுக்காக நான் ஒரு பரிசு தயார் செய்திருக்கிறேன்” என்றவள் உள்ளே சென்று தனக்கு அம்மா கொடுத்திருந்த சிற்றுண்டிடப்பாவின் அட்டைப்பெட்டியை தான் அதன்மேல் ஒட்டியிருந்த வண்ணக் காகித உறையுடன் எடுத்துவந்து அவனிடம் நீட்டினாள். அதை அவன் தொடக்கூடவில்லை. கோபத்தில் ஒரே ஒரு அறைவிட்டான். சுருண்டு விழுந்தாள் குழந்தை.

 

“நீ இவளைப் பார்த்துக் கொள். அந்த 20 ரூபாயைக் கொடு. நான் வெளியில் கடையில் சென்று வேறு காகிதம் வாங்கி ஒட்டி எடுத்துச் செல்கிறேன்.”; சென்றுவிட்டான் அவன். மாலையில் வந்தவன் படுத்திருந்த மகளிடம் வந்தான். அவனுக்கு குழந்தையை அடித்துவிட்டோமே, தனக்கு பரிசளிக்கத் தானே அவள் அக்காகிதத்தை எடுத்திருக்கிறாள். இதை நாம் உணரவில்லையே. மடையன் நான். நீ ஒரு காண்டாமிருகம்டா என்று பலமுறை அவன் தாய் திட்டியதெல்லாம் இப்போது நினைவுக்கு வந்தன.

 

மனைவி இவனிடம் மகளுக்கு சுரம் எனவே, துடித்துப்போய் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மருத்துவரிடம் சென்றான். “இன்னும் 3 நாட்களுக்கு சுரம் இறங்காது. நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள், வேளாவேளைக்கு மருந்து கொடுங்கள்” என்றார் அவர். நண்பனிடம் கடனாகப் பெற்ற ரூபாய் 200இல் 100 ரூபாயைத் தந்து வீட்டுக்கு வந்தனர்.

 

மறுநாள் சுரத்தில் குழந்தை அனத்திக் கொண்டே இருந்தது. அப்பாவைப் பார்த்து, “அப்பா உங்களுக்கு இன்று பிறந்தநாள் அல்லவா, அந்தப் பெட்டி எங்கே” என்றாள். அதை அவன் எடுத்துவந்தான். எடுத்துவரும்போதே அது காலியாய் இருப்பதை உணர்ந்தான்.

 

காண்டாமிருகத்திற்கு மறுபடியும் கோபம் வந்துவிட்டது. “காலிப்பெட்டிக்கா அழகுக்காகிதத்தை வீணடித்தாய்” என்று மறுபடியும் குழந்தையிடம் கத்தினான். அழ ஆரம்பித்த குழந்தை அழுகையை நிறுத்தவேயில்லை நீண்ட நேரம். பின்னர் அவனிடம், “அப்பா, அது காலிப் பெட்டி இல்லேப்பா, நான் அதற்குள் 1000 தடவை என் முத்தத்தை உங்களுக்காக அதில் போட்டுத்தான் வைத்திருக்கிறேன். அதுதான் உங்களுக்கு என் பரிசு” என்றவள் திடீரென்று மயக்கம் அடைந்தாள்.

 

இவர்கள் மறுபடியும் மருத்துவரிடம் செல்ல, அவர் மருத்துவமனையில் இன்னும் இரண்டு நாட்கள் இருக்கவேண்டும் என்று சொல்ல, அவளை மருத்துவமனையில் சேர்த்தனர், பல இடங்களிலும் கடன் வாங்கி. ஆனால் அக்குழந்தையைக் காப்பாற்ற மருத்துவரால் இயலவில்லை.

 

இத்துயரைத் தாங்காத மனைவி இவனை விட்டுப் பிரிந்துவிட்டாள்.

 

தனிமரமான இவன் பின்னர் தொழிலில் வளர்ந்து பெரிய செல்வந்தரானான்.

இவனுக்கு வாழ்க்கை முழுதும் சோதனையாகிப்போனது.

 

இவனுக்குச் சோதனை வரும்போதெல்லாம் மகளின் கல்லறைக்குச் சென்று அவளிடம் இருந்து ஒரு மானசீக முத்தத்தைப் பெற்று வருவது இவனுக்கு வாடிக்கையாய்ப் போனது.

 

அப்போதெல்லாம் அன்பு என்ன என்று அவன் புரிந்துகொண்டதில்லை. இப்போதெல்லாம் இவனை நன்றாக யாருமே புரிந்துகொள்வது இல்லை. ஊழியர்கள் கூட தாங்கள் வாங்கும் சம்பளத்திற்காக மட்டும் இவனுக்கு மரியாதை காட்டுகிறார்கள். யாரும் இவனை நெருங்குவதில்லை.

 

உயிரிருந்தும் உயிரில்லாதவனைப் போல்தான் வாழ்கிறான். வாழ்வு எப்போது முடியும் என்று காத்திருக்கிறான்.

————————————————–

(படித்தது கொஞ்சம். கற்பனை மிச்சம். – கணபதிசுப்ரமணியன்)

==================================================

 

அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் 

வற்றல் மரம்தளிர்த் தற்று.

 

 

அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள்

சிறுகை யளாவிய கூழ்.

 

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் 
பகையும் உளவோ பிற.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.