ஒரு சாமானியனின் வரலாறு (சில தொடக்கப் பகுதிகள்)

ஒரு சாமானியனின் வரலாறு (சில தொடக்கப் பகுதிகள்*)

———————————————————————————————————————-

(*இந்தப் பதிவு நான் இந்த வலைப்பக்கத்தைத் தொடங்கியபோது எழுதியது. இத்தலைப்பில் சிறு கட்டுரைகளாக தொடர்ச்சியாக பிறகு மாற்றி எழுதப்பட்டது. இந்தப் பதிவு சில ஆரம்பப் பகுதிகளை மட்டும் கொண்டது. இப்பதிவு சில அறிஞர்களின் பார்வையையும் கருத்தையும் பெற்றதால், முழுமையில்லாத இப்பதிவு இவ்வலைப்பக்கத்தில் தொடர்கிறது)

இது ஓர் ஆரம்பம். ஒரு மனிதனின் கதையில் எவ்வளவோ விஷயங்கள் நடக்கின்றன. சில நிகழ்ச்சிகள் அவனை மேம்படுத்தக் கூடிய குணநலன்களைக் கற்றுக் கொடுக்கின்றன. சில நிகழ்ச்சிகள் அவனது இயல்பை மாற்றிவிடக்கூடிய சக்தியுடையவை. என் வாழ்வில் என் நினைவில் நிற்கும் சில விஷயங்களை மறக்கும் முன்னர் எழுதிவிடவேண்டும் என்பதால், இதை எழுத முயற்சி செய்கிறேன். இது இறைவனின் அருள் பார்வை கிடைத்தால், ஒரு தொடராகவோ அல்லது ஒரு முழு வரலாறாகவோ மலரும். பழைய நிகழ்ச்சிகள் நினைவுக்கு வரவர இது மேலும் சிற்சில மாற்றங்களுடன் வளரும். முழுமையில்லாத பகுதிகள் பின்னர் விரிவு படுத்தப்படும்

ஒவ்வொரு மனிதனும் தனித்துவம் பெற்றிருப்பதால், தனித்துவம் பெற்றிருந்த என் பெற்றோர் வளர்த்த நானும், பல விஷயங்களில் உலகோடு ஒத்துப் போகாமல், தனித்துவமாகவே இருக்கிறேன். நாம் வாழ்வில் ஒவ்வொரு முடிவையும் எடுக்கும்போது, நம் மனது அப்போது நம்பிருக்கும் கொள்கைகள், மற்றவர்களின் மற்றும் நமது நிலைமைகள், நம் அறிவு அதுகாறும் வளர்ந்திருக்கும் நிலை, நாம் அடைந்திருக்கும் பக்குவம், நமது தைரியம் அல்லது அச்சம், இதைப்போன்ற பல விஷயங்களைக் கொண்டுதான் முடிவு எடுக்கிறோம். எனவே, என் நிகழ்ச்சிகளைப் பற்றிப் படிப்பவர்கள், இதை ஒரு மாற்றமுடியாத வரலாறாகவே படிக்க வேண்டும். நான் வேறு வகையான முடிவுகள் எடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனையில் இறங்கிவிடவேண்டாம்.

——————————————————————————————————————————

தஞ்சை அருகிலுள்ள ஒரு கிராமம் நான் பிறந்த பூமி. உலகையே காக்கும் தாய் மாரியம்மன் கோவில் கொண்டுள்ள தலம் அது. எங்கள் குடும்பம் ஒரு சராசரியான கிராமத்துக் குடும்பம். என் தந்தையும் தாயும் தம் உயிரினும் மேலாக எங்களை அக்கறையுடன் வளர்த்து உருவாக்கினார்கள். அவர்கள் தங்களை சரிவரக் கவனித்துக் கொண்டார்களா என்பது சிறுவயதில், ஏன் வளர்ந்துவிட்ட பின்னரும் கூட என் சிந்தனையில் பதியாத ஒன்று. எங்களை எப்போதும் மகிழ்ச்சியுடன் வளர்த்தனர்.

பிறந்தவுடன் பஞ்சுக்கூடையில் வளர்ந்தது:

நான் குறைப் பிரசவத்தில் பிறந்ததால் என்னை மிக நன்றாகவே கவனிப்புடன் வளர்க்க வேண்டியதாய் விட்டது. மிகவும் நலிவாக இருந்ததால், உயிர்பிழைப்பேனோ என்று தெரியாமல், நான்கு மாதங்கள் நான் பஞ்சு நிரப்பிவைத்த தட்டியிலும் கூடையிலும் வளர்க்கப் பட்டேன்.  என்னை என் தாய்மாமா எப்போதும் ‘பஞ்சுக்கூடைப் பையன்’ என்று எப்போதும் வர்ணிப்பார். நான் பிறந்தவுடன் அம்மா உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிட்டது. அடிக்கடி நோய்வாய்ப் பட ஆரம்பித்து விட்டார்.

சிறுவயதுகளில்:

என் வாழ்க்கை சிறுவயது முதலே மிகுந்த சோதனைகளைக் கண்டது. கிராமத்துப்பள்ளியில் நல்ல ஆசிரியர்கள் அமைந்ததால், பள்ளி வாழ்க்கை நன்றாகவே இருந்தது.  ஆயினும் என் தாயாருக்கு பிறப்புக் காலகெடுவிற்கு ஒன்றரை மாதம் முன்னரே நான் பிறந்ததால் அதுமுதலே உடல் நிலை  நலிவாகப் போனது. என் தந்தையார் மிகவும் சிரமப் பட்டு என் தாயாரைக் கவனித்துக் கொண்டதோடு, என்னையும் என் தம்பியையும் முதுகலைப்பட்டப் படிப்பு வரையிலும், என் இரு தங்கைகளை பட்டப்படிப்பு வரையிலும் பயிற்றுவித்தார். இதற்காக அவர் இருந்த வீட்டையும், நிலங்களையும் விற்கவேண்டியிருந்தது. என் பள்ளி அடுத்தடுத்த தெருவில் இருந்ததால் சென்றுவர செலவில்லை. சிறுவயதுகளில் வீட்டில் மூன்று வேளைகளிலும் சாப்பாடு என் தாயார் என் தந்தையின் உதவியுடன் அளித்துவந்தார்கள். சாதத்தைத் தவிர வேறு எதுவும் அவ்வளவாக சிறுவயதில் உண்பதில்லை. பள்ளியில் அரைக்கால் டிராயர் மற்றும் சட்டையும் அணிந்தும், 10-11 வகுப்புகள் படிக்கும்போது வேட்டியும் சட்டையும் அணிவேன். ஆனால் அப்போது மனதில் வித்தியாசம் ஒன்றும் தெரியாது, அவ்வயதுக்குரிய மகிழ்ச்சியுடன் வளர்ந்து வந்தேன்.

நல்ல ஆசிரியர்கள் முக்கியமாக, தலைமையாசிரியர் திரு ராமசாமி அய்யர், திரு அப்பாத்துரை, திரு மாரியப்ப மன்னையர்,  தலைமையாசிரியர் திரு கோவிந்தன், திரு சுப்ரமணியன் (இவர்களை நான் அப்பொழுதும் இப்பொழுது நினைக்கும்போதும் தெய்வங்களாகவே மதிக்கிறேன்) இவர்களின் அன்பும் மாணவர்களின் படிப்பு, அறிவு மட்டுமல்லாது அவர்களது பண்புகளையும் வளர்த்தவர்கள். அவர்களால் நான் கல்வியில் மிகுந்த ஆர்வம் செலுத்திப் படித்தேன்.  படிப்பில் ஆர்வம் இருந்ததால், பல விருதுகளும் கிடைத்தன. இருப்பினும் எப்போதுமே அம்மாவிற்கு உடல் நலம் குன்றியே இருக்கிறதே என்று அழாத நாளில்லை.

பட்டப்படிப்பு:

அடுத்த ஊரிலுள்ள புஷ்பம் கல்லூரியில் நான் சேரும்போது, அப்பாவின் நண்பர் திரு தங்கவேல் முதலியார்தான் துணைக்கு வந்து என்னைக் கல்லூரியில் சேர்த்துவிட்டுப் போனார். நான் முதலில் அணிந்த முழுக்கால் சராய் என் உறவினர் ஒருவர் உபயோகப் படுத்தியதுதான், பல மாதங்களுக்கு, அப்படிக் கிடைத்த இரண்டு சராயும் சட்டையும்தான் உபயோகித்தேன். கல்லூரியிலும் நல்ல ஆசிரியர்கள் அமைந்ததால், அங்கும் விருதுகள் கிடைத்தன. எனக்கு கல்லூரியில் படிக்கும்போது டிவிஎஸ் டிரஸ்டின் திருப்பிச் செலுத்த வேண்டாத உதவித்தொகை பட்டப் படிப்பின் பின்னிரு ஆண்டுகளிலும் கிடைத்தது. அம்மாவின் உடல் நிலை தேறாமலேயே இருந்தது.  ஒவ்வொரு இளைஞனுக்கும் முழு சந்தோஷம் என்று ஒன்று இருக்கிறது என்றால் எனக்கு அது கிடைத்ததில்லை.  எதேனும் சோதனை இல்லையென்றால் அந்த நாளே எனக்குச் சந்தோஷமானது.  என் சந்தோஷத்தின் அளவு, நான் படிப்பதிலோ, மற்றவர் பாராட்டுவதிலோ இல்லாமல், என் அம்மாவின் உடல் நிலையின் அளவுக்கு சுருங்கி, அவரையே சார்ந்திருந்தது. என் இளம்பருவத்தில் சகோதர சகோதரிகளுடனான உறவு வழக்கமான குடும்பங்களில் உள்ளது போலவே சில நேரங்களில் சிறு சச்சரவுடன், ஆனாலும் அன்புடனே இருந்தது. அவ்வகையில் எவ்வித வருத்தமும் இல்லை. என் தந்தை எங்களுக்காகவே தான் எந்த சுகமும் படாமல்  உழைத்தவர். உடல் பொருள் ஆவி இவற்றினால் அவர் ஆற்றிய செயல்கள் சாதாரண மனிதர்கள் செய்யக்கூடியவை அல்ல. எனக்கு அவரைப்பற்றி இப்படிப்பட்ட ஒரு அபிப்பிராயம் ஏற்பட்டதே நான் வேலையில் சேரும் காலத்தில்தான்.

மேல்பட்டப்படிப்பு:

நான் பட்டப்படிப்பில் வணிகவியல் எடுத்திருந்தேன். ICWA படித்துக்கொண்டே ஏதாவது வேலையில் சேர்ந்துநான் வேலை தேடலாம் என்று யோசித்தவேளையில், என் அம்மா என்னை மேல் படிப்புப் படிக்கவேண்டும் என மிகவும் வற்புறுத்தினார்கள். நான் எவ்வளவோ மறுத்தும்கூட, என் தந்தையின் சிபாரிசினால் மறுக்கச் செய்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை. நாங்கள் இந்த தர்க்கத்திலேயே இருந்தகாலத்தில், விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க இன்னும் 3 நாட்களே இருந்த நிலையில் எப்படியும் மேல்படிப்பில் சேர்ந்தாகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.  எங்கள் கல்லூரியில் முது நிலைப் படிப்பு வணிகவியலில் இருக்கவில்லை. எனவே எந்தக் கல்லூரி என்று யோசித்தபோது, அருகில் உள்ள ஊரான திருச்சியில்தான் முடியும் என்று தோன்றியது.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நான் வந்து இருமுறை பலகல்லூரிகள் கலந்துகொண்ட போட்டிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளதால், அந்தக் கல்லூரி எனக்கு ஓரளவுக்கு பரிச்சயமானது. அங்கு சென்று விசாரித்ததில் வணிகவியலில் முதுகலைப் படிப்பு திருச்சியில் ஜமால் முகம்மது கல்லூரியில்தான் இருப்பது தெரிந்து, உடனே அங்கே சென்றால், அவர்கள் விண்ணப்பங்கள் 3 படிவங்கள் கொடுத்து, மூன்றையுமே சமர்ப்பிக்க வேண்டும் என்றும், விண்ணப்பத்தில் கண்டிருந்த படிக்க விருப்பமான மூன்று கல்லூரிகள் என்ற இடத்தில் தங்கள் கல்லூரியை முதல் அல்லது இரண்டாம் இடத்தில் எழுதி, அந்த விண்ணப்பத்தினை அடுத்த இரண்டு நாட்களுக்குள் சென்னை சேப்பாக்கத்தில் இருக்கும் சென்னைப் பல்கலைக் கழகத்தில்தான் சமர்ப்பிக்க வேண்டும், அதில் பல்கலைக்கழக இலச்சினை பெற்று ஒரு நகலைத் தங்கள் கல்லூரியில் ஒரு வாரத்துக்குள் கொடுக்கவேண்டும் என்று சொன்னார்கள்.

திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும் ஒரு நண்பனை அவன் தஞ்சையிலிருந்து 6 கி.மீ. தொலைவிலுள்ள எங்கள் கிராமத்துக்குச் சென்று, என் தந்தையிடம் நான் சென்னைசெல்வதாகச் சொல்லிவிடும்படி வேண்டி, அன்றிரவே சென்னைக்குப் புறப்பட்டேன்.

சென்னைக்குச் சென்று எந்தக் கல்லூரிகளில் வணிகவியல் முதுகலை உள்ளது என்றும் அதன் குறியீட்டு எண் பற்றியும்  விசாரித்த போது, சென்னைப் பல்கலைக்கழகத்தில் அப்போது திரு. தர்மராஜன் என்பவர் Student Counsellor அவருக்குதான் தெரியும் என்று சொல்ல, அவரிடம் கேட்டறிந்து விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து வேறு இடத்தில் சமர்ப்பிக்கச் சென்றபோது, அவர்கள் அங்கேயிருந்த ஒரு சீல்வைத்த பெட்டியில் (ஓட்டுச்சீட்டு போல்) விண்ணப்பங்களை போட்டுவிட்டுச் செல்லுமாறும், இலச்சினையொன்றும் வைத்துக் கொடுக்க முடியாது என்று சொல்லவே, அவர்களுக்குத் தெரியாமல் ஒரு நகலை மறைத்துவைத்துக்கொண்டு, இரு நகல்களை, இணைத்துப் போடாமல் தனித்தனியே பெட்டியில் போட்டுவிட்டேன்.

அன்று இரவே கிளம்பி காலையில் திருச்சிவந்து காலை 7.30 முதல் ஜமால் முகம்மது கல்லூரியில் யாராவது தென்படுவார்களா என்று காத்திருந்தேன். அது ஒரு வெள்ளிக்கிழமையாக இருக்கவே, நிறைய முகம்மதியர்கள் கல்லூரிக்கு அருகில் உள்ள முகம்மதிய பள்ளிவாசலுக்குத் தொழுகைக்கு வர ஆரம்பித்தனர். அவர்களில் ஒருவர் என்னைப்பார்த்து வகுப்புகள் விடுமுறையானதால் கல்லூரி 10 மணிக்குத்தான் திறக்கும் என்று கூறினார். நான் அங்கேயே காத்திருந்தேன். 8.45 மணியளவில் தொழுகையிலிருந்து வந்த மற்றொரு கண்ணியவான் என்னைப்பார்த்து, என்னருகில் வந்து எதற்காக நிற்கின்றேன் என்று வினவ நான் கல்லூரியில் விண்ணப்பம் சமர்ப்பிக்க நிற்கிறேன் என்று கூற, சரியென்று சொல்லிச் சென்று விட்டார். 9 மணியளவில் ஒரு கார் வந்ததும் கல்லூரிக்கதவுகள் திறக்கப்பட்டன. ஆசிரியர் ஒருவர் வந்து என்னை கல்லூரி முதல்வர் அழைக்கிறார் என்று கூற நான் பிரின்சிபாலின் அறைக்குள் சென்றேன். என்னைப் பார்த்த அதே கண்ணியவான்தான் கல்லூரி முதல்வர் உயர்திரு இஸ்மாயில் அவர்கள். அவர் அன்று வரவேண்டியதில்லை என்றும், என்னைப் பார்த்ததும் நான் காலையில் நெடு நேரம் நிற்பதை அறிந்ததால், வீட்டுக்குச் சென்று மறுசாவியை வைத்திருக்கும் இன்னொரு ஆசிரியரையும் அழைத்துவந்து, கல்லூரியில் என் விண்ணப்பத்தைப் பெறவே வந்ததாகக் கூறினார். விண்ணப்பத்தை வாங்கி எடுத்துச் சென்ற ஆசிரியர், திரும்பிவந்து, “என்ன இது, பல்கலைக்கழக இலச்சினை இல்லையே” என்று சொல்லி விண்ணப்பத்தை என் கையில் திருப்பிக் கொடுக்க, அச்சமயம் கல்லூரி முதல்வர் அவர்கள் நான் அவரிடம் எதனால் இலச்சினை இல்லை என்று விளக்கிவிட்டதாகக் கூறி, அவ்விண்ணப்பத்தின் மேல் அவர் கையொப்பமிட்டு, அவரை உள்ளே எடுத்துச் சென்று கல்லூரி முத்திரையிட்டு, வரிசை எண்ணை ஒரு கல்லூரித்தாளில் எழுதி என்னிடம் அளிக்குமாறும் உத்தரவிட்டார். பின்னர் “தம்பி, என்ன நடந்தது” என்று கேட்க, நான் அனைத்தையும் சொல்லிவிட்டேன். என்னைப் பற்றியும் என் படிப்பைப் பற்றியும் என் குடும்பத்தை பற்றியும் கேட்டு விட்டு, எப்படியும் தங்கள் கல்லூரியில் பல்கலைக் கழகத்தின் பரிந்துரை வந்துவிடும், அது வந்த பின்னர், என் விலாசத்துக்கு 3 மணி நேர  Entrance Test, மற்றும் நேர்காணலுக்கான தேதிபற்றிக் குறிப்பிட்ட கடிதம் அனுப்பப்படும் என்றும், அந்தத் தேர்விலும் நேர்காணலிலும் வெற்றிபெற்றால் கல்லூரியில் இடம் உண்டு என்றும் சொன்னார். நன்றிகூறி வணங்கிவிட்டு நான்  வெளியே வந்த உடனேயே கல்லூரியின் கட்டடக் கதவுகள் மூடப் பட்டன.

பின்னர் அத்தேர்விலும் நேர்காணலிலும் முதல்மாணவனாகத் தேறி, வந்திருந்த 100 மாணவர்களில், 16 பேரை மட்டும் தேர்ந்தெடுத்ததில், நானும் தேர்ந்தெடுக்கப்பட்டு, கல்லூரியில் ரூபாய் 750 கட்டி (ஒருவருடக் கட்டணம்) சேர்ந்துவிட்டேன்.

எழுதுவதில் ஆர்வம் பிறந்தது:

என் ஊரிலிருந்து தினமும் பேருந்துவில் தஞ்சை வந்து புகைவண்டியில் திருச்சி சென்று கல்லூரியில் படித்தேன். நான் இளங்கலை வகுப்புக்களில் பல பரிசுகள் வென்றிருந்ததால் (வணிகவியல் இரண்டாம் வருட்த்தில் கல்லூரியின் அங்கேயே அமர்ந்து எழுதும் கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்ற “இந்தியாவில் அரசு சார்ந்த தொழிற்சாலைகள்” என்பது பற்றிய 35 பக்கக் கட்டுரையை வணிகவியல் பேராசிரியர் உயர்திரு இராஜேந்திரன் அவர்கள் கல்லூரிச் செலவில் அச்சடித்துப் பல கல்லூரிகளுக்கும் அனுப்பியிருந்தார். மூன்றாம் வருட ஆரம்பத்தின் முதல் நாளில் கல்லூரியில் என் கட்டுரை பற்றிப் பெருமையாகப் பேசப்பட்டது)  எனக்கு எழுதவேண்டும் என்றும், கல்லூரிச் செலவுக்கு உதவியாக இருக்கும் என்றும் தோன்றியது.

முதலில் தமிழில் குங்குமம் மாத இதழில் என் எழுத்து அச்சேறியது. பின்னர் ஆங்கிலத்தில் அப்போது வந்துகொண்டிருந்த Onlooker  என்ற மாதமிருமுறை வரும் இதழிலும், மாதமொருமுறை வரும் Gentleman இதழிலும் நான் எழுதியவை வந்தன. எனக்கு ஒருமாதத்தில் ரூபாய் 200 வரை கிடைத்தது. பின்னர் Reader’s Digest India விற்கு நகைச் சுவைத் துணுக்குகளும், ‘Life is Like That”, ‘College Rags’ என்ற பகுதிகளுக்கு என் படைப்புக்களை அனுப்ப ஆரம்பித்து சம்பாதிக்க ஆரம்பித்தேன்.

ஜமால் முகம்மது கல்லூரியில் இருந்த வணிகவியல் துறையில் இருந்த   நூலகம் தமிழ் நாட்டிலேயே மிகப் பெரியது என்றும், திருச்சியில் இயங்கிவந்த ஹாட்டின் பீடி கம்பெனிக்காரர்கள், ரூபாய் இரண்டு கோடியைப் பள்ளிக்கு நூலகத்துக்கு மட்டுமே வழங்கினார்கள் என்றும், வணிகவியல் நூலகத்திற்கு அரிய புத்தகங்கள் வாங்க பேராசிரியர்கள் லண்டன், நியூயார்க் சென்று பல அரிய புத்தகங்களையும் வாங்கிவந்தனர் என்றும் அறிந்தேன். இதனால், ஒவ்வொரு முதுகலை மாணவனிடத்திலும் குறைவாக நூலகத்தின் 10 புத்தகங்களாவது இருந்து கொண்டிருக்கும். புரொபசர்கள் புத்தகம் வேண்டுமானால் மாணவர்களைக் கொண்டுவரச் செய்து, வகுப்பு முடிந்ததும் அந்த மாணவனிடமே கொடுத்துவிடுவர். எல்லாப் புத்தகங்களும் புத்தம் புதிதானவை, பெரும்பாலும் வெளி நாட்டில் அச்சானவை. விலை மிக உயர்ந்தவை. எப்போதும் என் வீட்டில் சராசரியாக கல்லூரியின் 10 முதல் 15 புத்தகங்களாவது இருக்கும். நான் அடிக்கடி ஒரு புத்தகத்தை வீட்டுக்குக்  கொண்டுவருவேன். அது மிகவும் மேன்மையான தாளில் அச்சிடப்பட்ட 2150 பக்கமுள்ள ஒரு தடிமனான The Handbook of Management (!!!) என்ற புத்தகம். அதன் விலை அப்போதே 300 அமெரிக்க டாலர்.

என் முதுகலை வகுப்புக்கள் காலை 9.30 முதல் மதியம் 1.30 வரைதான். எனக்குத் தஞ்சை திரும்பிச் செல்ல மாலை 4 மணிக்குத்தான் புகைவண்டி. எனவே மதியம் உணவருந்திவிட்டுத் தினமும் ஒன்றரை கி.மீ. தூரத்தில் இருந்த சென்னைப் பல்கலைக் கழகத்தின் மைய நூலகத்துக்குச் சென்று வருவது வழக்கமாயிற்று. எனக்கு ஒவ்வொரு வருடமும் 4 பாடங்கள்.  கோடிட்ட 40 பக்கம் நோட்டுப்புத்தகங்கள் நாலும் அந்த பல்கலைக்கழக நூலகத்திலிருந்து குறிப்புகள் எடுத்துக்கொள்ளவும், வகுப்பில் குறித்துக்கொள்ள ஒரு குயர் நோட்டுகள் இரண்டும், வாராவாரம் வாங்கி எழுதுவேன். அவ்வமயம் பல்கலைக்கழக நூலகத்தில் பார்த்த ஒரு மாத இதழ், World Bank/IMF அமெரிக்காவிலிருந்து வெளியிடும் வருடத்திற்கு நான்கு முறை இதழான Finance and Development  பத்திரிக்கை ஆகும்.      அது இலவசமாகப் பெறலாம் என்பது தெரிந்து, நான் எழுதி விண்ணப்பித்ததும் இரண்டுமாதம் கழித்து வீட்டிற்கு வர ஆரம்பித்துவிட்டது. அதைப் படிக்க ஆரம்பித்ததில், அதில் எவ்வகையான கட்டுரைகள் எழுதப்படுகின்றன என்று அறிந்தேன். நானே ஒரு பொருளைப் பற்றிய ஒரு தலைப்பைத் தேர்வு செய்து, குறைவாக 1000 பேரிடம் 20 முதல் 30 கேள்விகளுக்கான பதிலைப் பெற்று ஒரு ஆய்வு செய்து, அதை ஒரு கட்டுரையாக எழுதி அனுப்பிப் பார்ப்போம் என்று முடிவுசெய்தேன். உலகவங்கியிலிருந்து அப்போதெல்லாம் பல துறைகளில் அவர்கள் பதிப்பித்த எந்தப் புத்தகமும், ஆய்வறிக்கையும் வேண்டுமென்று நாம் எழுதினால் இலவசமாகவே அனுப்பப்படும்.     அவ்வகையில் நான் 50க்கும் மேல் புத்தகங்கள் பெற்றிருப்பேன். இது தவிர, International Monetary Fund மற்றும் World Bank இரு நிறுவனங்களின் Annual Report-ம் மற்றும் உலகவங்கியின் World Development Report-ம் ஒவ்வொரு வருடமும் வந்துவிடும் இலவசமாகவே. (இப்போதெல்லாம் அவை இலவசமாக அனுப்பப் படுவதில்லை. இணையத்தின் மூலம் பணம் கட்டித்தான் வாங்க வேண்டும். World Development Report  இப்போதெல்லாம் லண்டனிலுள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக அச்சகக் கடையில் மட்டும் இந்தியாவில் கிடைக்கிறது.) இவற்றைப் படிக்கப் படிக்க என் ஆர்வம் மேலும் தூண்டப் பட்டது.

எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரம்:

இந்தியாவில் பெண்கல்வி எந்த மாற்றத்தைச் செய்யமுடியும் என்பது குறித்து 35 கேள்விகள் தயார் செய்து, அதை Cyclostyle  முறையில் 2000 பிரதிகள் எடுத்து, இந்தியாவிலிருந்த என்னிடம் விலாசமிருந்த 20 பல்கலைக் கழகங்கள், 34 கல்லூரிகளுக்கு தலா 10 அனுப்பிப் பெண்களிடம் அவர்தம் வயது, படிப்பு, செய்யும் வேலை என்ற தகவல்களுடன் பதிலைப் பெற்று அனுப்புமாறும் இது நான் உலகவங்கிக்காகச் செய்வது என்றும் எழுதியனுப்பி, 13 பல்கலைக்கழகங்களில் இருந்தும், 19 கல்லூரிகளில் இருந்தும், மொத்தம் 360 பூர்த்தி செய்த படிவங்கள் பெற்றேன். பின்னர் மொத்தம் ஒரு ஆயிரம் படிவங்களாவது பெறவேண்டும் என்று, தினமும் நான் எங்கள் கிராமத்திலும், பேருந்திலும், புகைவண்டி நிலையத்திலும் முடிந்த பெண்களைப் பார்த்து, இன்னும் 400 படிவங்களில் பதில்கள் பெற்றேன். படிக்காதவர்களிடமும் கேட்கவேண்டும் என்று, அந்த கேள்வித்தாளை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் ரயில் நிற்கும்போதெல்லாம் ஏறி இறங்கி, பலரையும் நேரில் பேட்டி கண்டு சுமார் 450 படிவங்கள் பூர்த்தியாயின. மொத்தம் சுமார் 1200 படிவங்களில், எல்லாத் தரப்பிலும் கலந்து ஒரு ஆயிரத்தைத் தேர்ந்தெடுத்து, அந்த பதில்களை, படித்தவர், படிக்காதவர், குடும்பத்தில் எல்லோரும் படித்தவர், குடும்பத்தில் யாருமே படிக்காதவர் என்று நான்காகப் பிரித்து, எல்லா பதில்களையும் புள்ளியியல் துறையில் கற்றதை வைத்து, இந்த பதில்கள் எந்த முடிவை நமக்குக் காட்டுகின்றன என்பதை ஆராய்ந்து, 12 பக்கக் கட்டுரையொன்று எழுதி, செயல்முறையைப் பற்றியும் எழுதி அனுப்பினேன். இந்த முயற்சி ஆரம்பித்து நிறைவு செய்ய எனக்கு 5 மாதங்கள் ஆகியது. அனுப்பி 3 மாதம் கழித்து, என் கட்டுரை சிறிது மாற்றங்களுடன் அவர்கள் வெளியிடும் ஆசியா பற்றிய அறிக்கையில் இடம்பெறுவதாகவும் தபால் வந்தது. மாற்றம் செய்த வடிவமும் எனக்கு அனுப்பப் பட்டது. பின்னர் ஒரு மாதத்தில் ஒரு தபாலில் நான் அவர்கள் கொடுத்திருந்த 50 தலைப்புக்களில் நான் கட்டுரை எழுதி அனுப்பித்தால் பரிசீலிக்கப் படும் என்றும் தபால் வந்தது. ஒரு வருட காலத்தில் நான் 7 கட்டுரைகள் அனுப்பியிருந்தேன். ஒரு கட்டுரையின் சுருக்கம் மட்டும் Finance and Development-இன் ஒரு இதழில் வந்தது. பின்னர் எதுவும் வெளிவராததால் ஏமாற்றமடைந்து போனேன்.

முதுகலை இரண்டாம் ஆண்டு படிக்கும்போது ஒரு தபால் எனக்கு வந்திருப்பதாக கல்லூரி முதல்வர் அறையில் கூப்பிட்டிருந்தனர். அங்கு சென்றேன். கல்லூரி முதல்வர் அங்கு வந்திருந்த உலகவங்கியின் ஒரு அமைப்பிலிருந்து வந்துள்ள ஒரு கடிதத்தைக் கொடுத்தார். அதில், நான் எழுதியனுப்பிய அனைத்துமே அவர்கள் பதிப்பிலும் இணை நிறுவனங்களின் பிரசுரங்களிலும் வெளியிடப் பட்டன என்றும், அதற்கு மதிப்பாக ரூபாய் 21000 வரைவோலை மூலம் அனுப்பியதாகவும், சென்னை வந்தபோது அத்தபால் முடக்கப்பட்டு, இந்திய ரிசர்வ் வங்கியிடம் தகவல் அளிக்கப் பட்டு, நான் வெளி நாடுகளில் எழுதி சம்பாதிக்க அனுமதிக்கப் படவில்லை என்றும், அந்த வரைவோலையும் அவர்களுக்குத் திரும்பிவிட்டது என்றும், அதற்குப் பதிலாக, நான் எதேனும் ஒரு அயல் நாட்டில் குறிப்பிட்ட கல்லூரிகளில் படிக்கத் தேர்ந்தெடுக்கப் பட்டால் அதற்கு நிதியுதவி செய்வதாகவும் எழுதியிருந்தது. பின்னர் கல்லூரி முதல்வரின் ஆலோசனையுடன், Asian Institute of Management, Phillippinesஆல் நடத்தப் பெற்ற தகுதித் தேர்வில் கலந்து, ஆசியாவில் தேர்வு செய்யப் பட்ட 50 பேரில் ஒருவனாக தேர்வு செய்யப் பட்டேன்.  1975 டிசம்பர் மாதம் என்னை சென்னையிலிருந்து பிலிப்பைன்ஸ் செல்லும் கப்பலில் பயணிக்க வேண்டும் என்றும், எனக்கான தாற்காலிக பாஸ்போர்ட் மற்றும் விசா இவைகளை நான் சென்னையிலிருக்கும் USIS  என்ற நிறுவனத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம், பெற்றுக் கொண்டு 14ம் தேதியன்று கப்பலில் பயணிக்க வேண்டும் என்றும் கூறப் பட்டிருந்தது. அங்கு கல்லூரியில் MBA  படிப்பு சேர்ந்ததும், இரண்டுவருடம் அங்கு கல்லூரிக் கட்டணங்கள் தவிர, தங்குசெலவு, உணவுச் செலவு, உடைச் செலவு, புத்தகச் செலவுடன் வருடம் ஒருமுறை இந்தியா வந்து செல்ல விமானக் கட்டணமும் அளிக்கப் படும் என்றும், நல்லவிதமாக தேர்வு பெற்றால், உலகவங்கியின் நிறுவனங்களில் பணி செய்யப் பரிசீலிப்பதாகவும் எழுதியிருந்தது. எங்கள் கல்லூரி முதல்வர் மிகவும் மகிழ்ந்து, கவலைப் படாமல் சென்று சேருமாறும்,  M Com  தேர்வுகளை எழுதத் தேவையில்லை என்றும், கிடைத்திருப்பது உலகில் மிகவும் மதிக்கப் படும் படிப்பு என்றும், யாருக்கும் கிடைக்காத இத்தனை உதவிகளை வீண்செய்துவிடக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். நான் வீட்டில் சென்று, மெதுவாக என் பெற்றோரிடத்தில் இதைத் தெரிவித்து அவர்கள் அனுமதியைப் பெற்று வருவதாகவும், அதற்குள் இத்தகவலை என் வகுப்பில் யாரிடமும் தெரிவிக்காமல் இருக்கும்படியும், அக்கல்லூரியிலேயே படித்துவரும் என் அத்தை பிள்ளைக்கு முக்கியமாய் தெரியாமல் இருக்கவேண்டும் என்றும் சொல்லி ஒருவாரம்  விடுப்பு பெற்று வந்தேன்.

சோதனையும் நழுவிப்போன வாய்ப்பும்:

வீட்டுக்கு வந்து பார்த்தால், வீட்டில் அம்மாவும் அப்பாவும் இல்லை. என் தங்கைகள் அம்மாவுக்கு மிகவும் உடல் நிலை சரியில்லாமல், எங்கள் அப்பாவின் நண்பரும் ஹோமியோபதி வைத்தியரும் ஆன திரு கல்யாணசுந்தரத்தின் உதவியுடன் இருதய மருத்துவர் வாஞ்சிலிங்கத்திடம் சென்றுள்ளனர் என்று கூறினர். அடிக்கடி கோயிலுக்குப் போகாத நான் அன்று மாரியம்மன் கோவிலுக்குச் சென்று இறைவியிடம் அம்மாவை  நன்றாக வைக்க வேண்டும் என்று வேண்டி வந்தேன். இரவு வந்த என் பெற்றோர், மறு நாள் அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டும் எனவே நானும் கல்லூரிக்குச் செல்லவில்லை என்று கூறி மறு நாள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனகள் செய்து மருந்து வாங்கித் திரும்பிவந்தோம். மறு நாள் சென்றபோது, மருத்துவர்  என்னிடம் அம்மாவை நன்றாகப் பார்த்துக் கொள் என்று சொன்னார். அதற்கு  நான் மூத்த மகன். என் அம்மாவை நிச்சயம் பார்த்துக் கொள்வேன் என்றேன். இல்லையப்பா, உன் அம்மா எத்தனை மாதங்கள் இருப்பார் என்று சொல்வதற்கில்லை, எனவே நீ இதை அறிந்து பக்குவமாக அவர்களைப் பார்த்துக் கொள் என்று சொல்லிவிட்டார்.

நான் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி என்ன செய்வதென்பது அறியாமல், அந்த வாரக் கடைசியில் கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, திருச்சி வந்து, கல்லூரிக்குப் போகாமல், முக்கொம்பு எனும் இடத்திற்கு வந்து அந்த இயற்கை சூழலில் ஆகாரமின்றி மாலை 6 வரை யோசித்ததில், கடவுள் நம்மைச் சோதிக்கிறார் என்றும், எனக்கு முதல் கடவுள் என் தாயே என்றும், எனக்கு வந்திருக்கும் இந்த வாய்ப்பைப் பற்றி யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று முடிவுசெய்து வீடு திரும்பினேன்.  அடுத்த நாள் கல்லூரி முதல்வரிடம் இந்த முடிவைச் சொல்லும் போது அவர் அடைந்த கோபம் என்னைமிகவும் படுத்தியது. நான் அழுவதைக் கண்ட அவர், நீ உத்தமமான மனிதன், நீ சொல்வதைப் போல் நீ வெளி நாடு செல்ல வேண்டாம். அந்த எல்லாக் கடிதங்களையும், என்னிடம் கொடுத்துவிடு, நான் வைத்திருக்கிறேன். இன்னும் 10 நாள் விடுமுறையில் சென்று, உன் தாய்க்கு வேறு எங்கும் மருத்துவம் பார்த்தால் நிலை முன்னேறுமா என்று பார்த்து விட்டு வா. அல்லா உனக்கு வைத்திருக்கும் சோதனையில் நீ வெற்றி பெற்று, நீ பிலிப்பைன்ஸ் செல்ல வேண்டும் என்று நான் அல்லாவை தினமும் வேண்டிவந்தேன். மேலும் வேண்டுகிறேன். நான் தயங்கியபோது, தாம் யாரிடமும் தெரிவிக்காமல் இருப்பதாகவும், என் வீட்டுக்கும் யாரையும் அனுப்பி இத்தகவலை சொல்லப்போவதாகவும் இல்லை என்றும் கூறி விரட்டிவிட்டார்.

ஆனாலும் என்னால் எடுத்த முடிவை மாற்றிக் கொள்ள இயலவில்லை. என் அம்மாவின், அப்பாவின், தம்பியின், தங்கைகளின் முகங்களே எப்போதும் என் நினைவில் இருக்கத் தொடங்கின. ஒரு மாதம் கழித்து, உலகவங்கிக்கு எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால், குறித்த நாளில் என்னால் சென்னை செல்ல இயலவில்லை என்றும், என் அம்மா நலமில்லாததால், என்னால் பிலிப்பைன்ஸுக்குச் செல்ல முடியாது என்றும், உலகவங்கியின் உதவிக்கு நன்றி என்றும் கல்லூரி முதல்வர் அறையிலேயே அவர் அனுமதியுடன் எழுதி, கல்லூரியின் செலவில் உலகவங்கிக்கும், நகல்கள் பிலிப்பைன்ஸுக்கும், சென்னையில் USIS க்கும் அனுப்பப் பட்டன. இந்த நிகழ்ச்சிக்குப் பின் என் மன நிலை தெளிவாகி விட்டது. எந்தவிதமான வருத்தமும் இல்லாமல் போயிற்று. வருத்தத்தையெல்லாம் நான் அன்று முக்கொம்புவில் காவிரிக்கரையில் 4 மணி நேரம் அழுகையில் தொலைத்து விட்டிருந்தேன்.

வேலை தேடும் முயற்சிகள்:

பின்னர் நான் பல  நிறுவனங்களிலும் பணிக்காக விண்ணப்பிக்க ஆரம்பித்தேன். இரண்டு மாதத்தில் சுமார் 10 பணிக்கான தேர்வுகளுக்கும் 8 நேர்காணலுக்கும் சென்றேன்.

1976 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் எனக்கு வந்தது முதல் பணி நியமனக் கடிதம். அம்மாதத்திலேயே மேலும் 4 நியமனக் கடிதங்களும் வந்துவிட்டன: அவை (1) Bank of India – Probationary Officer – at Mandvi, Mumbai (2) McNeil & Magor, Management Trainee at Calcutta (3) MMTC, Management Trainee at New Delhi, (4) JK Group- Management Trainee at Mumbai (5) L&T – Trainee Manager at New Delhi. நமக்கும் வேலைக்குத் தகுதியிருக்கிறது என்று நான் மகிழ்ந்தாலும், இதில் ஒன்றில் சேர நாம் முதுகலை இரண்டாம் வருடத் தேர்வை முடிக்கும் வரை கால அவகாசம் கேட்போம் என்று ஐந்து நிறுவனங்களுக்கும் எழுதினேன்.   JK Group, L&T, McNeil & Magor இவற்றிலிருந்து 3 மாத கால அவகாசமும், மற்ற இரண்டில் 1 மாத கால அவகாசமும் கிடைத்தது. வீட்டில் இந்த வேலை கிடைத்தது பற்றி, (எல்லாமே வெகு தொலைவில் இருப்பதால்) சொல்லவில்லை. வேறு வாய்ப்புகள் தமிழ் நாட்டில் கிடைக்கும் என்று நம்பினேன்.

எங்கள் வீட்டில் தினமும்  The Hindu  வாங்குவோம். என் 8வது வகுப்பு முதல் எனக்காக என் தந்தை அதை வாங்க ஆரம்பித்தார். அதில் முதல்பக்கத்தில் கீழ்ப்பகுதியில் வலது பக்க கால் பக்கத்தில், ஒரு வாரத்துக்கு இரண்டு தடவையாவது இந்தியன் வங்கியின் புது கிளைகள் திறப்பு விளம்பரங்கள் வந்துகொண்டிருக்கும். வாரம் 1 முதல் 4 கிளைகளாவது புதிதாகத் திறக்கப்படும். வேறு எந்த வங்கியின் விளம்பரமும் அந்த அளவிற்கு வராது. (என் அப்பா 8 வது வரையும் என் அம்மா 10வது வரையும் படித்தவர்கள்)  தினமும் அதைப் பார்த்திருந்த என் அம்மா, நாட்டிலேயே பெரிய வங்கி இந்தியன் வங்கிதான் என்று நினைத்து, அதில் விண்ணப்பம் செய்யுமாறு பணித்தார். அச்சமயம் நான் 4 வங்கிகளில் அதிகாரி பணிக்கும், 5 தனியார் நிறுவனங்களில்  Management Trainee  பணிக்கும் விண்ணப்பித்திருந்தேன். தினமும் இந்தியன் வங்கி வேலை வாய்ப்பு விளம்பரம் வெளியிடுகிறதா என்று பார்ப்பார். ஒரு சமயம் இந்தியன் வங்கியின் விளம்பரம் வந்தது. ஆனால் அதிகாரி பணிக்கல்ல, ஆனாலும் என்னை என் அன்னை வற்புறுத்தியதில், மனதில் அவ்வளவு விருப்பமில்லாமல் விண்ணப்பம் அனுப்பினேன். எனக்கு எதேனும் ஒரு வங்கியிலோ நிறுவனத்திலோ அதிகாரிப்பணி கிடைக்குமென்றும், அம்மாவை அப்போது சமாளித்துக் கொள்ளலாம் என்றும் என்னைத் தேற்றிக்கொண்டேன்.

வேலையில் சேர்ந்துவிட்டேன்:

இந்தியன் வங்கியிலிருந்து எழுத்தர் பணிக்கு நியமனக் கடிதம் வந்தது, அதில் நான் தஞ்சாவூர் கிளையில் சேரவேண்டும் என்றும் எழுதியிருந்தது. என் அம்மாவுக்கு மிக்க மகிழ்ச்சி. நீ  MCom தேர்வுக்குப் பின் வேலைக்கு வருகிறேன் என்று தெரிவித்து விடு என்றார். நான் சென்று தஞ்சை சென்று விசாரித்ததில் இது அரசு வங்கி, இதில் எவ்வித மாற்றமும் கிளைமேலாளர் செய்ய முடியாதென்றும் கூறவே நான் வீட்டில் தெரிவித்து விட்டேன். நான் இதைத் தவிர்த்துவிடலாம் என்று நினைத்தேன். வேறு வேலைக்கான கடிதம் அதற்குள் வந்துவிடும் என்று நினைத்தேன். ஆனாலும் அம்மா என்னை உடனே சென்னை சென்று வங்கியின் தலைமையகத்திற்குச் சென்று அனுமதி பெற்றுவரச் சொல்லிவிட்டார். நானும் சென்னை வந்து வங்கியின் தலைமை அலுவலகம் சென்று அங்கு அப்போது Staff Superintendent (தற்போது அப்பதவி  General Manager – HRM) ஆக இருந்த திரு செல்லையா அவர்களைச் சந்தித்துக் கேட்டதில், அவர் “தம்பி, நீ சென்று வேலையில் சேர்ந்துவிட்டுப் பின் விடுமுறை விண்ணப்பம் செய். உனக்கு தேர்வுக்காக விடுப்பு அளிக்கப் படும்” என்று கூறவே, வீடு திரும்பினேன். இதை வீட்டில் சரியாகச் சொல்லவில்லை. சரியான பதிலுக்குக் காத்திருக்கிறேன் என்று சொன்னேன். இந்தியன் வங்கியில் சேருவதற்கான கடைசி நாள்தான்,  MCom தேர்வுகளின் முதல் நாள். தயக்கத்துடனேயே இருந்தேன்.

ஒரு நாள் அம்மாவுக்கு நெஞ்சுவலி அதிகமாகி மருத்துவரிடம் செல்லவேண்டியதாயிற்று. அப்போது மருத்துவர்கள் அம்மாவின் இருதயம் மிகவும் பலவீனமாக உள்ளது என்றும் மிக எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றும் கூறிவிட்டனர். நான் மறுபடியும் திருச்சி கிளம்பி, முக்கொம்புவில் எனக்குப் பரிச்சயமாகி விட்டிருந்த அந்த இடத்துக்குப் போனேன்.

அப்போது அங்கு 10 குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்தன. ஒரு குரங்கு பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் அருகே வந்து எதையோ பிடுங்க முயல, அருகிருந்த அவள்கணவர் ஒரு பெரிய தடியெடுத்து அதை நையப் புடைத்து விட்டார். அக்குரங்குக்கு எழுந்து ஓட முடியாமல் திண்டாடி, வேறு இரண்டு குரங்குகள் அக்குரங்கை இழுத்துப் போய் கரையருகே வைத்துவிட்டு, கீழே கிடந்த உடைந்த டப்பா ஒன்றை எடுத்துத் தண்ணீர் நிரப்பி காயம் பட்ட குரங்கின்மீது ஊற்றி அதைச் சுற்றி நின்றுகொண்டு அதைத் தொட்டுக்கொண்டே கத்திக் கொண்டிருந்தன. அங்கிருந்த 20 குரங்குகள் வேறு எங்கும் வராமல் மனிதர்களை ஒன்றும் செய்யாமல் அக்குரங்கைக் கவனிப்பதிலேயே அவ்விடத்தில் இருந்தன. குரங்குகள் கோபத்தில் வந்து மனிதர்களைக் காயப் படுத்திவிடும் என்று பலரும் அச்சமுற்றிருந்தனர். பள்ளி ஆசிரியைகள் தங்களுடன் வந்த குழந்தைகளை அவசர அவசரமாக திரும்ப அழைத்துக் கொண்டு தாங்கள் வந்த பேருந்து வண்டியில் ஏறிச் செல்ல ஆரம்பித்துவிட்டனர். அவ்விடத்தில் தினமும் இளநீர் விற்கும் வியாபாரி ஒருவர் எல்லோரையும் அஞ்சவேண்டாம் என்றும், இம்மாதிரிச் சமயங்களில் குரங்குகள் தங்களுக்குள்ளும் சண்டை போடாது, மனிதரிடத்திலும் வராது, எதையாவது செய்து அந்த அடிவாங்கிய குரங்கை உள்ளே அழைத்துப் போய்விடும் என்று சொன்ன பின், சிலர் என்னதான் ஆகிறது பார்க்க முடிவு செய்ய நானும் அங்கேயே இருந்தேன். அங்கேயிருந்த மேலும் 1 மணி நேரத்தில் அங்குவந்த பெண்கள் (அனேகமாக அவ்விடத்தைச் சேர்ந்தவர்கள்), குரங்குகள் மனிதரை விட நம்பிக்கையானவை என்றும், மனிதன்தான் பத்துமாதம் சுமந்துபெற்ற தாயையும் காலால் உதைத்துவிட்டு வேறு ஊருக்குப் போய்விடுவான் என்று, அங்கு நின்றிருந்த 10 பையன்களைப் பார்த்துப் பேச, அந்தப் பையன்கள் திருப்பிப் பேச வாக்குவாதம் முற்றி ஒரே ரகளையானது. நான் சற்று நேரம் புல்லில் சாய்ந்து தூங்கிவிட்டேன். விழித்தவுடன் என் மனம் இலேசாயிருந்தது. அம்மா சொன்னதையே மனதாரச் செய்வோம் என்று தீர்மானித்தேன்.

உடனே கிளம்பிக் கல்லூரிக்குச் சென்று முதுகலை வணிகவியல் தமைமைப் பேராசிரியரான திரு  N M  நியமத்துல்லா அவர்களுடன் ஆலோசித்ததில், வேலையில் சேருவதே எனக்கு இருந்த மன நிலையில் சரியானது என்று முடிவுசெய்து, அடுத்த வாரம் தேர்வுக்குப் போகாமல், தஞ்சையிலுள்ள இந்தியன் வங்கிக்கிளையில் வேலையில் 01.04.1976 அன்று சேர்ந்துவிட்டேன்.

வேலையில் இருந்து ராஜிநாமா செய்துவிடு என்று நிர்ப்பந்திக்கப் பட்டேன்:

வேலையில் சேர்ந்த 5ம் நாள் கிளை மேலாளர் என்னைக் கூப்பிட்டு, நீ ராஜினாமா செய்துவிட்டு, பெரியவேலையில் சேர்ந்துவிடு, உன் திறமைக்கு இது சரியான வேலையில்லை என்று கூறினார். அவரே திருச்சி கல்லூரியைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு முதல்வரிடம் பேசினார். “இவன் சான்றிதழ்களைப் பார்த்தால் மிக நன்றாகப் படிப்பவனாகத் தெரிகிறானே, அவன் வாங்கிய பரிசுகளும் அவன் கருத்தின் தரமும் மிக அதிகமாயிருக்கின்றதே, நான் இவன் இக்கிளையில் சேர்ந்ததை இன்றுவரை மேலிடத்துக்குத் தெரிவிக்கவில்லை, தாங்கள் இவனுக்குத் தங்கள் கல்லூரியிலேயே ஒரு ஆசிரியர் வேலை இவன் தேர்வுக்குப் பின் கொடுக்கக் கூடாதா, தங்கள் கல்லூரியில் முஸ்லீம்களுக்குத்தான் தருவீர்களா” என்றெல்லாம் பிளந்து தள்ளிவிட்டார். எனக்கே அவர் பேசிய விதம் பிடிக்கவில்லை. கல்லூரி முதல்வர் இவரிடம் எல்லாவற்றையும், எனக்கு பிலிப்பைன்ஸில் வாய்ப்பு கிடைத்தது முதல், 5 நியமனக் கடிதங்கள் வைத்திருக்கிறேன் என்றும், அதில் 3 நிறுவனங்களில் சேர ஏப்ரல் மாத இறுதிவரை காலம் அளிக்கப் பட்டுள்ளது என்பது வரை இவரிடம் வெகுவேகமாக (கோபத்துடன்) கூறிவிட்டார். இதற்குப்பின் வங்கிமேலாளர் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.

அவர் என்னை அருகிலிருந்த ஒரு உணவுச் சாலைக்கு அழைத்துச் சென்றார். அவருடன் எனக்கும் சிற்றுண்டி வாங்கி இருவரும் உண்டோம். நடுவில் ஒன்றுமே பேசாதிருந்த அவர், சாப்பிட்டு எழுந்ததும் என்னை விடுவிடு என்று இழுத்துக் கொண்டு அலுவலகம் வந்தடைந்தார். அங்கு இருந்த கார் ஓட்டுனர் கோவிந்தராஜை விரட்டி, என்னையும் காரில் ஏற்றி அவர் என் தந்தையைப் பார்ப்பதற்காக வண்டியை நான் வசிக்கும் மாரியம்மன் கோவில் கிராமத்துக்கு விடச் சொன்னார். நான் அன்று அடைந்த அச்சத்தை விட இது நாள் வரையில் வேறு எந்த நாளிலும் இடத்திலும் (ஒரு தடவை நல்ல மழையின்போது, தஞ்சைத் தெற்குவீதியில் வீடுகளின் ஓட்டோரமாகவே சென்றுகொண்டிருந்தபோது, ஒரு நல்ல பாம்பு என்மேல் விழுந்து என் கழுத்தைச் சுற்றிக் கொண்டபோதுகூட) அவ்வளவு அச்சத்தை நான் அடைந்ததில்லை.  ஆறு கிலோமீட்டர் தூரமும் நான் கெஞ்சக் கெஞ்ச அவர் முடியாது என, கோவிலைப் பார்த்தவுடன், “கோவிலுக்குச் செல்வோம், இந்த அம்மன் உனக்கு நல்ல புத்தியைத் தரட்டும்” என்று கூறி, கோயிலுக்குள் சென்றுவிட்டோம். உள்ளே சென்றதும் உள்ளூர்க்காரனான என்னைக் கண்டதும், அங்கு பூஜை செய்யும் திரு சுப்ரமணிய குருக்கள் என்னிடம் “ என்னடா, அதிசயமாகக் கோவிலுக்கு வந்திருக்கிறாய், இவர் யார், உன் ஆபீஸா, கோவிலுக்கு அழைத்துவந்தாயா, வாங்கோ, பேஷா ஸ்வாமியை தரிசனம் பண்ணுங்கோ” என்று உள்ளே அழைத்து சென்று நான் என்னுடன் வந்திருப்பவர் இந்தியன் வங்கியின் கிளை மேலாளர் என்று சொன்னதும் அவருக்கு சகல மரியாதைகளும் செய்தார். “ அங்கெ சித்த இருங்கோ, நான் பிரசாதத்தோட வரேன்” என்று போனவர், மாலை, தேங்காய் பழத்துடன் வந்து அமர்ந்து, கோயிலின் வரலாற்றையும், அம்பாளின் சக்தியையும் பற்றிச் சொல்லிவிட்டு, என்னிடம் “ ஏண்டா, நீ தினமும் ராத்திரியிலாவது ஆபீஸ் முடிஞ்சு வரும்போது அம்மனைப் பார்த்துவேண்டிக்கொள்ளக் கூடாதோ, உன் அம்மாவை சாக்ஷாத் ஈஸ்வரிதானேடா காப்பாத்தணும், என்னடா பிள்ளை நீ,  நன்றாகப் படித்தால் மட்டும் போதுமா, இருக்கிறவரை அம்மாவைப் பார்த்துக்கோடா” என்று கூறியதும் நான் விம்ம ஆரம்பித்து என்னால் ஏது செய்தும் அழுகையை அடக்க இயலவில்லை.

என் மேலாளர் முகமும் சிவந்துவிட்டது. உடனே அவர், இவன் தன் தகுதிக்கும் கீழே உள்ள பதவியில் அம்மாவுக்காகவே சேர்ந்துவிட்டான், தனக்கு வந்திருக்கும் உயர்ந்த பதவிகளைக் கூடத் துச்சமாக மதித்து, என்று குருக்களிடம் சொல்லித் தொலைத்துவிட்டார். அவரிடம் அன்று வங்கி மேலாளர் எதிரிலேயே “ மாமா, நீங்க நிச்சயமாக யாருக்கும் இத்தகவல்களைச் சொல்லக் கூடாது, சொன்னால் நான் எடுத்த எல்லா முடிவுகளும் முட்டாள்தனமானவை ஆகிவிடும், அதைத் தெரிந்துகொண்டால் ஒருமணி நேரம் கூட என் அம்மா உடலில் உயிர்வைத்துகொண்டிருக்கமாட்டார்கள்” என்று அழுததும் குருக்களும் உருகிவிட்டார். தான் செத்தாலும் இதைப் பிறரிடம் சொல்வதில்லை என்று சொல்லிவிட்டார் மிக்க உணர்ச்சியுடன்.

வீட்டுக்கு வந்த வங்கிமேலாளர்:

வங்கிமேலாளர் மறுபடியும் என் அப்பாவைப் பார்க்கவேண்டும் என்றும் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று கூற ,நான் அவரிடம் கத்திவிட்டேன். இருந்தாலும் அவர் வலியுறுத்தி அழைத்துப் போய், என் தாய்தந்தை இருவரையும் நெடுஞ்சாண்கிடையாக வணங்கி, (நல்லவேளையாக வேறு எதுவும் சொல்லாமல்)  ‘வந்த 4 நாளிலேயே உங்கள் பையனை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இவன் போன்ற புத்திரனைப் பெற்ற நீங்கள் இருவரும் தெய்வத்துக்கு சமானம். என்னையும் ஆசீர்வதியுங்கள்” என்று கண்ணில் நீருடன் கேட்டு, எங்கள் வீட்டில் காபி சாப்பிட்டுவிட்டு, “நாளை பார்க்கலாம், நீ இங்கேயே இரு. உன் பையை நாளைக்கு எடுத்துக்கலாம்” என்று சொல்லிக் கிளம்பிச் சென்றுவிட்டார்.

அந்த நிகழ்ச்சிக்குப்பிறகு தினமும் நான் காலையில் அலுவலுக்குப் புறப்படுமுன் அம்மனை வேண்டிக் கொண்டு கிளம்பி, பின்னர் இரவு வரும்போது கோயில் வாசலில் நின்று வணங்கிவிட்டுத்தான் வருவேன்.

அலுவலகத்தில் எனக்கு விடுப்பு அளிக்கப் படவில்லை. தலைமையகம் என் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டது. நான் சென்னைக்கு சென்றதும் அங்கு தலைமையலுவலகம் கொடுத்த நம்பிக்கையும் வீண்போயின. அதுதான் என் வாழ்வில் முதன் முதலில் நான் தோற்றுப் போனது. மற்ற வாய்ப்புக்கள் எல்லாவற்றையும் நான் மனதார முடிவுசெய்துதான் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

டெல்லிக்குச் செல்லல்:

சக்தியுள்ள அந்த புன்னை நல்லூர் முத்து மாரியம்மன் என்னைக் கைவிடவில்லை. என் தாயார்மேலும் நான்கு வருடங்கள் இருந்தார்கள். நான் TVS Trust கொடுத்த பணத்தை நன்றியுடன் திரும்பவும் அவர்களுக்கு அனுப்பிவிட்டேன்.

எனக்கு மணம் முடித்தார்கள். நான் பதவி உயர்வு பெற்று 1981 பிப்ரவரியில் தில்லிக்குச் சென்று, மறுபடியும் மே மாதம் திரும்பிவந்து, மனைவியையும், என் சிறிய தங்கையையும் தில்லிக்கு அழைத்துச் சென்று குடித்தனம் வைத்தேன், எங்களை டெல்லிப் பயணத்திற்கு வாழ்த்தி அனுப்ப சென்னை வந்திருந்த என் தந்தை ஒருவிதமான மகிழ்ச்சியில்லாத முகத்துடன் இருந்தார். நான் நாம் முதன் முதலாய் பிரிந்து நீண்ட தொலைவு செல்வதால் ஏற்படும் மன வருத்தம் கொண்டுள்ளார் என்றுதான் நினைத்தேன்.

மகன் வெகுதொலைவுக்குச் சென்றதால் மகனால் ஏற்பட்ட தாயாரின் பிரிவு:

டெல்லிக்கு நாங்கள் சென்ற ஒரு மாதத்துக்குள், என் தெய்வம் மாதருள் மாணிக்கமாகிய என் தாயார் எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார்கள். என் அலுவலகத்திற்கு என் மனைவி தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்தார். அது சனிக்கிழமை, வங்கி மேலாலரின் அனுமதியுடன் விடுப்பு பெற்று, வீடு வந்தேன். டெல்லியிலிருந்து உடனே திரும்பிவர கையில் காசில்லை. நாங்கள் டெல்லியில் மாளவியா நகரில் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் பஞ்சாபிக் காரர் திரு ரெலியா அவர்மனைவி என் மனைவியிடம் 600 ரூபாய் கொடுத்து உதவினர். டெல்லியில் அச்சமயம் வசித்துவந்த என் உற்ற உறவினர் தம்பதி வந்து, எங்களுக்கு விமான டிக்கெட்டு எடுக்க முயற்சி செய்தும், டிக்கெட் கிடைக்காததால், உடனே கிடைத்த Summer Special Train  ஏறினோம். Special Train  என்றால் ஒன்றும் Special இல்லை. வழக்கமான வண்டிகளுக்கு மேலாக இயக்கப்படும் அதிகப்படியான வண்டி என்றுதான் அர்த்தம் என்பது நாங்கள் வண்டியில் வந்த பிரயாணத்தின் போதுதான் அறிந்தோம். பல பெட்டிகளில் மின்சாரம் இல்லை. கூட்டம் மிக அதிகம். அநேகமாக பெரிய சிறிய நகரங்களில் ஒவ்வொன்றிலும் நின்றுதான் வந்தது. இப்படி சென்னை வந்தபோது அது திங்கள்கிழமையாகி விட்டது. என் தாயாரின் உடலைப் பார்க்கக் கூட எனக்குக் கொடுத்துவைக்கவில்லை. என் இளைய சகோதரன்தான் கொடுத்துவைத்திருந்தார். அவர்தான் என் அம்மாவுக்கு ஒரு மகன் கடைசியாக செய்ய வேண்டிய கடமைகளை செய்தார். அம்மாவின் கடைசி காலத்தில் அவருடன் கூட இருந்து அன்புடன் எல்லாக் கடமைகளையும் செய்துவந்த அவருக்கு அம்மா உயிருடன் இருக்கும் வரை அருகில் இருக்கும் வரமும், இளையவனாய் பிறந்த போதும், தாயின் சடலத்திற்கு சிதையூட்டும் வரை, அவர் உடலுடனும் கடைசி வரை இருக்கக் கூடிய  பெரும்பேறும் கிடைத்தது.

அம்மா விரைவில் எங்களை விட்டுப் பிரிந்து விடுவார் என்பது பிரபலமான ஜோசியரான என் தந்தைக்கு முன்னரே தெரிந்துதான் இருந்தது. அதனால்தான் எங்களை டெல்லிக்கு அனுப்பவந்தபோது அவர் முகம் களையிழந்து காணப்பட்டது என்று அறிந்தவுடன் என் துக்கம் மிகவும் அதிகமாகி, தந்தையின்மேல் நான் வைத்திருந்த மதிப்பு இன்னும் அதிகமாகி, என் மனதில் அவர் ஒரு தெய்வம்தான் என்ற உணர்ச்சி ஏற்பட்டுவிட்டது.

————————————————————————————————————————-

Advertisements

4 thoughts on “ஒரு சாமானியனின் வரலாறு (சில தொடக்கப் பகுதிகள்)

 1. Thanks lathikanarasimhan for your valuable comments. Your comments on all the posts in this blog will result in making this blog valuable and more useful to others.Thanks once again from nytanaya.

  Like

 2. வாசித்து முடித்தபின் வெகுநேரம் மெளனத்தில், மன அழுத்தத்தில், நாற்காலியில் சாய்ந்திருந்தேன். வீட்டார் விவரம் கேட்டார்கள். சொன்னேன். இருபது வயது முடிந்து ஐந்து மாத இடைவெளியில் துணைப்பேராசிரியரானவன் நான். கொங்குமண்ணுக்கு பர்மாவிலிருந்து பெயர்ந்து: கொங்கிலிருந்து புதுச்சேரி வந்து 21 வயதிலேயே பிரெஞ்சுக்குடியுரிமைக் குடும்பத்தில் புகுந்து… http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60609223&format=print&edition_id=20060922 பணிநிறைவுக்குப்பின் எழுதினேன். சகட வாழ்க்கை.. இருவருக்கும்.. மாதா பிதா குரு தெய்வம் தேசம்.. புரிகிறது. பிலிப்பைன்ஸ் / பிரான்ஸ் இரண்டின் எழுத்துகள் தொடக்கமும் முடிவும் ஒன்றேபோல.

  Liked by 1 person

 3. ஐயா, படித்து உருகிவிட்டேன். பெரும் சோதனைகளும், பெரும் வளர்ச்சியும், பெரும் ஆபத்தும், எளிமை வாழ்விலும் மனம் தளராத மாண்பும், அடடா! இப்படியொரு தந்தைக்குப் புதல்வனான தங்களை தேவமைந்தன் என்றது எப்படித் தவறாகும்?

  —- nytanaya.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.