துர்க்கா ஸூக்தம் – தைத்திரீய ஆரண்யகம் – 4.10.2

துர்க்கா ஸூக்தம் – தைத்திரீய ஆரண்யகம் – 4.10.2

 

 

ஓம் ஜாதவேஸே ஸுனவாம ஸோம

மராதீயதோ நிஹாதி வேத:

ஸ ந: பர்ஷதி துர்காணி விச்வா

நாவேவ ஸிந்தும் துரிதாத்யக்னி:                                                                  1

 

அக்கினிதேவனே, ஸோமத்தைப் பிழிந்து ரசத்தை  உனக்குப் படைக்கிறோம். வாழ்க்கையில் வரும் தடைகளை அக்கினி தேவன் எரிக்கட்டும், படகின்மூலம் கடலைக் கடத்துவிப்பது போல

எங்களை எல்லா துன்பங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் அக்கினிதேவன் காக்கட்டும்.

 

தாமக்னிவர்ணாம் தபஸா ஜ்வலந்தீம்

வைரோசனீம் கர்ம ஃபலேஷு ஜுஷ்ட்டாம்

துர்காம் தேவீக்ம் ரணமஹம் ப்ரபத்யே

ஸுதரஸி தரஸே நம:                                                                                          2

 

தீ வண்ணம் கொண்டவளும், தவத்தினால் ஒளிர்பவளும், இறைவனுக்கு உரியவளும், செயல்கள் மற்றும் அதன் பலன்களில் ஆற்றலாக உறைபவளுமான துர்க்கா தேவியை நான் சரணடைகின்றேன். துன்பக் கடலிலிருந்து எங்களைக் கரை சேர்ப்பவளே, எங்களைக் காப்பாய், உனக்கு நமஸ்காரம்.

 

க்னே த்வம் பாரயா நவ்யோ அஸ்மான்

ஸ்வஸ்தி பிரதி துர்காணி விச்வா

பூச்ச ப்ருத்வீ ஹுலா ந உர்வீ வா

தோகாய தனயாய ம்யோ:                                                                             3

 

அக்கினிதேவனே, நீ போற்றுதலுக்கு உரியவன். மகிழ்ச்சியான வழிகளின் மூலம் எங்களை எல்லாத் துன்பங்களுக்கும் அப்பால் அழைத்துச் செல்வாய். எங்கள் ஊரும், நாடும், உலகும் வளம் கொழிக்கட்டும். எங்கள் பிள்ளைகளுக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சியைத் தருபவனாக நீ இருப்பாய்.

 

 

விச்வானி நோ துர்ஹா ஜாதவேஸ்

ஸிந்தும் ந நாவா துரிதாதிபர்ஷி

க்னே அத்ரிவன் மனஸா க்ருணானோ

(அ)ஸ்மாகம் போத்யவிதா தனூனாம்                                                           4

 

அக்கினிதேவனே, எல்லாத் துன்பங்களையும் அழிப்பவனே, கடலில் தத்தளிப்பவனைப் படகின்மூலம் காப்பாற்றுவதுபோல் துன்பங்களிலிருந்து எங்களைக் காப்பாய். எங்கள் உடல்களைக் காப்பவனே! “எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்” என்று மனத்தால் மீண்டும் மீண்டும் சொல்கின்ற அத்ரிமுனிவரைப்போல் எங்கள்  நன்மையை மனத்தில் கொள்வாய்.

(வேதங்களிலும் புராணங்களிலும் அத்ரிமுனிவரின் பெயர் பலமுறை பேசப்படுகிறது. துன்பங்களைக் கடந்தவராக இருந்த அவர், மற்றவர்களும் அவ்வாறே துன்பங்களுக்கு அப்பால் செல்ல வேண்டும் என்ற கருணைவசப் பட்டவராக இருந்தார்)

 

ப்ருதனா ஜிதக்ம் ஸஹமானமுக்ரமக்னிக்ம்

ஹுவேம பரமாத் ஸஸ்தாத்

ஸ ந: பர்ஷதி துர்காணி விச்வா

க்ஷாமத்தேவோ அதி துரிதாத்யக்னி:                                                           5

 

எதிரிப்படைகளைத் தாக்குபவனும், அவற்றை அழிப்பவனும், உக்கிரமானவனுமான அக்கினிதேவனை சபையின் மிக உயர்ந்த இடத்திலிருந்து இங்கே எழுந்தருளுமாறு அழைக்கிறோம். அவன் எங்களை எல்லாத் துன்பங்களுக்கும், அழியக்கூடியவற்றிற்கும், தவறுகளுக்கும் அப்பால் எடுத்துச் செல்லட்டும். எங்களைக்

காக்கட்டும்.

 

 

ப்ரத்னோஷி கமீட்யோ அத்வரேஷு

ஸனாச்ச ஹோதா நவ்யச்ச ஸத்ஸி

ஸ்வாம் சாக்னே தனுவம் பிப்ரயஸ்வாஸ்

ப்யம் ச ஸௌபகமாயஜஸ்வ                                                                       6

 

அக்கினிதேவனே, வேள்விகளில் புகழப் படுகின்ற நீ எங்கள் ஆனந்தத்தை அதிகரிக்கிறாய், வேள்வி செய்பவர்களுள் பழையவனாகவும், புதியவனாகவும் நீ இருக்கிறாய். உனது வடிவாக இருக்கின்ற எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவாய். எங்களுக்கு எல்லாப் பக்கங்களிலிருந்தும் நன்மையைக் கொண்டுவருவாய்.

 

கோபிர்ஜுஷ்ட்டமயுஜோ நிஷிக்தம்

தவேந்த்ர விஷ்ணோரனு ஸஞ்சரேம

நாகஸ்ய ப்ருஷ்ட்தமபி ஸம்வஸானோ

வைஷ்ணவீம் லோக இஹ மாயந்தாம்                                                      7

 

இறைவா, நீ பாவம் கலவாதவன். எங்கும் நிறைந்தவன். ஏராளம் பசுக்களுடன் கூடிய செல்வத்தைப் பெற்று, பேரானந்தம் அனுபவிப் பதற்காக நாங்கள் உன்னைப் பின் தொடர்கிறோம். விஷ்ணு உருவான தேவியிடம் நான் கொண்டுள்ள பக்திக்காக உயர்ந்த தேவருலகில் வாழ்கின்ற தேவர்கள் இந்த உலகில் எனக்கு மகிழ்ச்சியைத் தரட்டும்.

 

ஓம் காத்யாயனாய வித்மஹே

கன்யகுமாரி ச தீமஹி

தன்னோ துர்கி: ப்ரசோயாத்

 

ஓம் காத்யாயனி தேவியை அறிந்துகொள்வோம். அதற்காக அந்த கன்னியாகுமரி தேவியை தியானிப்போம். அந்த துர்க்கா தேவி நம்மைத் தூண்டுவாளாக!

 

ஓம் சாந்தி:  சாந்தி:  சாந்தி:

Leave a comment