ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் அருளிய சகலகலாவல்லி மாலை

ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் அருளிய சகலகலாவல்லி மாலை

சுவாமி ஆசுதோஷானந்தர் உரையுடன்

 

எல்லாக் கலைகளின் தலைவியும் எல்லாக் கலைகளையும் நமக்குத் தரவல்லவளுமாகிய கலைமகளைப் போற்றுகின்ற, அவளது அருளைப் பிரார்த்திக்கின்ற துதிகளில் முதன்மையான ஒன்று சகலகலாவல்லி மாலை. எழுதியவர் 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள். இத்த மாலையைப் பாடி, சுவாமிகள் ஒரே இரவில் இந்தி மற்றும் உருது மொழிகளில் புலமை பெற்று, டில்லி சுல்தானைச் சந்தித்து பேசி வெல்ல முடிந்தது என்று அவரது வரலாறு கூறுகிறது

 

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்

தண்தாமரைக்குத் தகாது கொலோ ? சகம் ஏழும் அளித்து

உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்

கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே !                          1

 

எல்லாக் கலைகளிலும் வல்லமை தருபவளே ! ஏழு உலகங்களையும் காக்கும் தொழில் புரியும் நாராயணன் பிரளய காலத்தில் அவற்றைக் காப்பதற்காக அவற்றையெல்லாம் உண்டு தன் வயிற்றில் வைத்துக் காப்பாற்றியவண்ணம் பாற்கடலில் அறிதுயிலில் ஆழ்ந்திருக்கிறார். இறுதியில் எல்லாவற்றையும் ஒடுக்குபவரான சிவபெருமான் பித்தனாக ஊழித் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறார். முடிவில் மீண்டும் உலகங்களையும் உயிர்களையும் படைக்கும் விதத்தை அறிந்தவருக்கு இனிமை தரும் கரும்பு போன்றவளே ! நீ வெண்தாமரையில் வீற்றிருக்கிறாய். என் உள்ளமும் வெள்ளைதானே ? அதையும் ஒரு குளிர்ந்த வெண்தாமரை என்று கருதி உன் பாதத்தை அங்கேயும் வைக்கலாகாதா ?

 

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்

பாடும் பணியில் பணித்தருள்வாய் பங்கயாசனத்தில்

கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றும் ஐம்பால்

காடும் சுமக்கும் கரும்பே சகல கலாவல்லியே !                                                    2

 

எல்லாக் கலைகளிலும் வல்லமை தருபவளே ! தாமரை மலரில் வீற்றிருப்பவளே ! பசும்பொன் கொடி போன்றவளே ! பெருத்த குன்றினைப் போன்ற கொங்கைகள் உடையவளே ! ஐந்துவகை அலங்காரங்கள்* அணி செய்யும் கூந்தல் காட்டைத் தாங்கியிருப்பவளே ! புலவர்கள் நாடுவதும், பொருள் ஆழம் கொண்டதும், சொல் இனிமை ததும்புவதுமாகிய நான்குவகைக்** கவிதைகள் பாடுகின்ற பணியில் நான் ஈடுபடும்படி செய்தருள்வாய் !

( * 5 வகை முடியலங்காரங்கள் : கொண்டை, குழல் (அலங்காரமாக அவிழ்த்து விட்டுக் கொள்வது), பனிச்சை (பின்னல்), முடி (மகுடம் போல் அமைத்துக் கொள்வது), சுருள் (சுருட்டிவிட்டுக்கொள்வது))  (** 4 வகைக் கவிதைகள் : ஆசுகவி – நினைத்தவுடன் புதுமையான ஒரு பொருளைப் பற்றிப் பாடுவது, மதுரகவி – இசையுடன் இனிமையான சொற்களும் உவமைகளும் பொருந்தப் பாடுவது, சித்திரக் கவி – தேர் வடிவத்தில் சொற்களை அழகுடன் அமைத்துப் பாடுவது, வித்தாரக்கவி— பல்வேறு சித்திர வடிவங்களில் அமைவது போன்று சொற்களை அமைத்துப் பாடுவது)

 

அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து உன் அருட்கடலில்

குளிக்கும் படிக்கு என்று கூடும்கொலோ ? உளம்கொண்டு தெள்ளித்

தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக் கண்டு

களிக்கும் கலாப மயிலே ! சகல கலாவல்லியே !                                       3

 

எல்லாக் கலைகளிலும் வல்லமை தருபவளே ! உள்ளத்தில் ஆழ்ந்து சிந்திக்கச்சிந்திக்க தெளிவினை அள்ளித் தருகின்ற பாடல்களைப் பாடும் புலவர்கள் கவிதைகளை மழைபோல் பொழிவதைக் கண்டு மகிழும் அழகிய தோகை கொண்ட மயில் போன்றவளே ! தெள்ளிய அமுதம் போன்ற செழுமை மிக்கதான தமிழ் மொழியாற்றலை உன் அருளால் பெற்று, அந்த அருட்கடலில் நான் என்று குளிப்பேனோ !

 

தூக்கும் பனுவல் துறை தோய்ந்த கல்வியும் சொற்சுவை தோய்

வாக்கும் பெருகப் பணித்தருள்வாய் ! வடநூல் கடலும்

தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் செந்நாவில் நின்று

காக்கும் கருணைக் கடலே ! சகல கலாவல்லியே !                                               4

 

எல்லாக் கலைகளிலும் வல்லமை தருபவளே ! கருணைக் கடலே ! ஆராய்ந்து சீர்தூக்கிப் பார்க்கத் தக்கதும், அகம், புறம் ஆகிய இரண்டு பிரிவுகள் கொண்டதுமான தமிழ்க் கல்வி வளமும், கடல்போல் பரந்து கிடக்கின்ற வட மொழி நூல்களில் சிறந்துள்ள கருத்து வளமும், செழுமையான தமிழ் நூல்களில் புதைந்து கிடக்கின்ற அறிவு வளமாகிய செல்வமும், சொல் வண்மை மிக்க பேச்சுத் திறமையும் கலைஞர்களின் நாவில் குறையாது பெருகும் வண்ணம் அவர்களுக்கு அருள் புரிவாய் !

 

பஞ்சப்பிதம் தரும் செய்ய பொற் பாத பங்கேருகம் என்

நெஞ்சத் தடத்து அலராதது என்னே ? நெடுந்தாள் கமலத்து

அஞ்சத்துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்

கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய சகல கலாவல்லியே                                      5

 

எல்லாக் கலைகளிலும் வல்லமை தருபவளே ! நீண்ட தண்டினை உடைய தாமரை மலர்மீது வீற்றிருப்பவரும் அன்னப் பறவைக் ஒடியை உடையவருமான பிரம்ம தேவரின் சிறந்த நாவையும் உள்ளத்தையும் வெள்ளைத் தாமரை ஆசனமாகக் கொண்டு வீற்றிருப்பவளே ! செம்பஞ்சுக் குழம்பு* தீட்டப்பட்டதும் மென்மை வாய்ந்ததுமான உன் சிவந்த பொற்பாதத் தாமரைகள் என் நெஞ்சமாகிய குளத்தில் ஏன் இன்னும் மலரவில்லை !

(* செம்பஞ்சுக்குழம்பு – மருதாணிபோல் பெண்கள் கால்களிலும் கைகளிலும் தீட்டிகொள்வது. – சங்கப்பாடல்களிலும் மூவேந்தர் கால இலக்கியங்களிலும் இது பற்றிய குறிப்புகள் உள்ளன)

 

 

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்

எண்ணும் பொழுது எளிது எய்த நல்காய் எழுதா மறையும்

விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்

கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகல கலாவல்லியே !                                      6

 

எல்லாக் கலைகளிலும் வல்லமை தருபவளே ! எழுதப்படாதவையான வேதங்களிலும், வானம், பூமி, நீர், தீ, விரைந்து வீசும் காற்று ஆகிய ஐம்பூதங்களிலும், பக்தர்களின் கண்களிலும் நெஞ்சினிலும் நிறைந்திருப்பவளே ! இசையும் ஆடலும் மற்ற எல்லாவிதமான கலைகளும் நிறைந்ததான முத்தமிழ்ப் பாடல்களை நான் நினைத்த மாத்திரத்தில் எழுதுவதற்கான ஆற்றலை எனக்கு அருள்வாய் !

 

பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்

கூட்டும்படி நின் கடைக்கண் நல்காய் உளம் கொண்டு தொண்டர்

தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்

காட்டும் வெள்ளோதிமப் பேடே சகல கலாவல்லியே                                         7

 

எல்லாக் கலைகளிலும் வல்லமை தருபவளே! கலைநயம் மிக்கதான தமிழ் மொழியில் பாடல்கள் இயற்றுகின்ற கவிஞர்கள், உன் சிந்தனையில் தோய்ந்து எழுதினால், அந்தப் பாடல்கள் இனிய பாலமுதம்போல் தெளிவாகப் புரியும் விதத்தில் அமையும் வண்ணம் அருள் புரிகின்ற வெண்ணிறப் பெண் அன்னத்தை ஒத்தவளே ! நான் சொல்நயம் மிக்க பாடல்களை இயற்ற வேண்டும்; அந்தப் பாடல்களில் பொருள் வளமும் மிகுந்து காணப்பட வேண்டும். அந்தப் பொருள் நிறைந்த பாடல்களைப் பாடுவோர் பலன் பெற வேண்டும். அத்தகைய பாடல்களை நான் இயற்றுமாறு நீ உன் கடைக்கண் பார்வையால் அருள்புரிய வேண்டும் !

 

சொல்விற்பனமும் அவதானமும் கவி சொல்ல வல்ல

நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளின ஆசனம் சேர்

செல்விக்கு அரிது என்று ஒரு காலமும் சிதையாமை நல்கும்

கல்விப் பெரும் செல்வப்பேறே சகல கலாவல்லியே                                           8

 

எல்லாக் கலைகளிலும் வல்லமை தருபவளே ! எழில்மிகு ஆசனத்தில் எழுந்தருள்கின்ற கலைமகளால் எனக்கு வேண்டிய செல்வங்களைத் தர முடியாமல் போய்விட்டதே என்று நான் ஒருபோதும் மனம் வருந்தாத நிலையைத் தருகின்ற கல்வியாகிய பெரும் செல்வப் பேற்றைத் தருபவளே ! சொல்லாற்றலும், ஒரே நேரத்தில் பல விஷயங்களில் கவனம் செலுத்தவல்ல திறமையும், சொல்ல வேண்டியதை நேராக, எளிமையாகச் சொல்ல வல்ல மேலான அறிவும் எனக்கு அருளி என்னை ஆட்கொள்வாய் !

 

சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞானத்தின் தோற்றமென்ன

நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார் நிலந்தோய் புழைக்கை

நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை

கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே !                                      9

 

எல்லாக் கலைகளிலும் வல்லமை தருபவளே ! நிலத்தில் படும் அளவிற்கு நீண்ட துதிக்கையுடைய சிறந்த பெண் யானையும், அரச அன்னப் பறவியும் வெட்கப் படும் வண்ணம் நடை பயில்கின்ற தாமரைப் பாதங்களையுடைய தாயே, சொல்லிற்கும் பொருளுக்கும் உயிராக விளங்குகின்ற உண்மைப் பேரறிவின் தோற்றமோ என்று வியக்கும் வண்ணம் எழுந்தருள்கின்ற உன்னைச் சிந்திக்க வல்லவர் யார் !

 

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்

பண்கண்டளவில் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம்

விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விசும்பில் உன்போல்

கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலாவல்லியே !                                           10

 

எல்லாக் கலைகளிலும் வல்லமை தருபவளே ! படைப்புக் கடவுளான பிரம்ம தேவர் முதல் வானுலகில் வாழும் தெய்வங்கள் பலகோடி பேர் இருந்தாலும், உண்மையைச் சொல்வதானால், உன்னைப் போன்ற கண்கண்ட தெய்வம் வேறு யாரும் உண்டா என்றால் இல்லை. வெண்குடையின் கீழ் அமர்ந்து பூமியை ஆள்கின்ற மேன்மை மிக்க மன்னர்களும் என் பாடலைக் கேட்ட அளவில் என்னைப் பணியுமாறு அருள் புரிவாய் !

 

***

ஐந்து வயதுவரை வாய்பேசாதிருந்து, திருச்செந்தூர் முருகப்பெருமானின் சன்னதியில் பல நாள் வேண்டியும் குழந்தை பேசாதிருக்கக் கண்டு உளம் நொந்து, வேறு வழி தெரியாது குழந்தையுடன் தாமும் கடலில் குதித்து உயிரைவிட்டு விடலாம் என்று இவரது பெற்றோர் கடலில் இறங்கி நடக்கத் துவங்கியபோது, அலைகளின்மீது ஒருவர் கையில் பூவுடன் தோன்றி, அதைக் குழந்தையிடம் அளித்து, “இது என்ன ?” எனக்கேட்க, அதற்கு விடையாக, குமரகுருபரக் குழந்தை மடை திறந்த வெள்ளம் போல் கவிதை பாடத் தொடங்கிவிட்டது. பூவுடன் தோன்றிவர் திருச்செந்தூர் முருகப் பெருமானே. அவன் அருளால் இவர் முதலில் வாய்திறந்து பாடிய “பூமேவு செங்கமல” என்று தொடங்குவது கந்தர் கலிவெண்பா. குரு ஒருவரைத் தனக்கு காட்டவேண்டும் என்று இவர் முருகனைத் தொழ, முருகன் அசரீரியாக “யாருடைய சன்னிதியில் நீ பேச்சிழந்து நிற்பாயோ அவரே உன் குரு” என்று அருளினான். (adapted by NGS from many paragraphs of the text)

 

திருமலை நாயக்கர் மதுரையை அரசாண்ட காலத்தில், மன்னரின் கனவில் மதுரை மீனாட்சியம்மன் தோன்றி குமரகுபரர் தன்மீது பாடியுள்ள பிள்ளைத்தமிழ் நூலை ஒரு பண்டிதர் சபையில் பாடி விளக்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு பணித்தாள். அவ்வாறு மீனாட்சியம்மன் சன்னதியில் சபை கூட்டப்பட்டு தினமும் குமரகுருபரர் தமது பாடல்களைப் பாடி விளக்கம் தந்துகொண்டிருந்தார். ஐந்தாம் நாள் ‘வருகைப் பருவம்’ அதாவது தேவி வருகின்ற பகுதி பாடப்பட்டது. அப்போது சாட்சாத் தேவியே அர்ச்சகரின் மகளுடைய உருவில் வந்து, மன்னனின் மடியில் அமர்ந்து பாடல்களை உன்னிப்பாகக் கேட்டாள். “தொடுக்கும் பழம் பாடல்” என்று தொடங்கும் பகுதி வந்தபோது தேவி எழுந்து மன்னரின் கழுத்திலிருந்த முத்துமாலை ஒன்றைக் கழற்றி குமரகுருபரரின் கழுத்தில் அணிவித்து மறைந்துவிட்டாள்.

 

தருமபுரத்தில் பிரபலமாக விளங்கிய திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் மடத்தை அடைந்து அதன் நான்காம் தலைவராகத் திகழ்ந்த மாசிலாமணி தேசிகரைச் சந்தித்தார். தேசிகர் இவரை “ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள” என்று தொடங்கும் பெரியபுராண பாடலுக்கு விளக்கம் கூறுமாறு பணித்தார். சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானின் காட்சி பெற்று திகைத்து நின்றதைக் கூறுகின்ற பாடல் இது. தேசிகரின் ஆணையைக் கேட்டு பேச்சிழந்து நின்றார் குமரகுருபரர். தேசிகரே தன் குரு என்று தெளிந்தார்.

 

அன்றைய நாட்களில் மூடியே கிடந்த காசி விசுவ நாதர் கோயிலைத் திறக்கவும், மக்கள் வழிபாடு செய்யவும், காசியில் மடம் கட்டுவதற்கு நிலமும் பண உதவியும் அப்போது டில்லியை ஆண்டுவந்த சுல்தானும் ஔரங்கசீப்பின் தமையனுமான தாரா ஷிகோ விடம் சென்று கேட்க முடிவுசெய்தார். மொழிபெயர்ப்பாளர் ஒருவருடன் சென்ற குமரகுருபரரை

“உன் வேண்டுகோளை எனக்கு நேரடியாகச் சொல்லக்கூடத் தெரியாத உனக்கு என்னால் எந்த உதவியும் செய்ய முடியாது” என்று ஏளனம் செய்து அனுப்பிவிட்டான்.

 

மனம் வெதும்பிய குமரகுருபரர் மன வருத்தத்துடன் ஸரஸ்வதி தேவியைப் பாடிப் பிரார்த்தித்த பாடல்களே “சகலகலாவல்லி மாலை”. இந்தப் பாடலைப் பாடியதும் அவருக்கு ஒரே இரவில் இந்தி மற்றும் உருது மொழிகளில் புலமை ஏற்பட்டுவிட்டது. மறுநாள் தன் தவ வலிமையால்  ஒரு சிங்கத்தின்மூது அமர்ந்து, சுல்தானிடம் சென்று தூய இந்தியில் பேசியபோது பிரமித்துப் போன சுல்தான் அவரது மகிமையை உணர்ந்து அவரது வேண்டுகோள்களை நிறைவேற்றினான்.

 

முதலாவதாக காசி கோயிலைத் திறக்க ஆணையிட்டான் சுல்தான். பின்னர் மடத்திற்கான நிலத்தை, எங்கே எப்படித் தருவது என்று மன்னன் வினவ, காசி நகரின் மீது தாம் பறக்கவிடும் கழுகு எந்த அளவு நிலத்தின்மீது பறக்கிறதோ அந்த அளவு நிலத்தைத் தமக்குத் தருமாறு கேட்க, கழுகு மூடிக்கிடந்த கேதாரீசுவரர் கோயிலைச் சுற்றியுள்ள நிலத்தின்மீது பறந்தது. இந்த இடம் சுல்தானால் அளிக்கப்பட்டு அங்கே குமரகுருபர மடம் நிறுவப்பட்டது. குமாரசாமி மடம் என்று அந்த மடத்தை அழைக்கிறார்கள். இந்தக் காசி மடம் இன்றளவும் பிரபலமாகச் செயல்பட்டு வருகிறது. திரும்பி தருமபுரம் வந்து தேசிகரைத் தரிசித்து, அவர் ஆணையின்படி மறுபடி காசிமடத்துக்கு வந்து சேர்ந்தார். 1658 முதல் 1688 வரை சுமார் 30 ஆண்டுகள் காசியில் வாழ்ந்து 1688 வைகாசி தேய்பிறை மூன்றாம் நாளில் மகாசமாதி அடைந்தார்.

 

சுவாமிகள் காசியில் தொடர்ந்து செய்துவந்த கம்பராமாயண சொற்பொழிவு களால் தூண்டப் பெற்றே துளசிதாசர் இந்திராயணாமான “ராம் சரித் மானஸ்” இயற்றியதாகக் கூறப்படுகிறது.

 

ஸ்ரீகுமரகுருபரர் இயற்றிய நூல்கள்: 1. கந்தர் கலிவெண்பா 2. மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்  3 மதுரைக் கலம்பகம்  4 நீதி நிறி விளக்கம்  5 திருவாரூர் நான்மணி மாலை  6 முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ்  7 சிதம்பர மும்மணிக் கோவை  8 சிதம்பர செய்யுட்கோவை  9 பண்டார மும்மணிக் கோவை  10 காசிக் கலம்பகம்  11 சகலகலாவல்லி மாலை  12 மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை  13 மதுரை மீனாட்சியம்மை குறம்  14 தில்லைச் சிவகாமியம்மை இரட்டை மணிமாலை  14 டுண்டி விநாயகர் பதிகம்

 

***

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.