ஸ்ரீ காமாக்ஷி துதிகள்

ஸ்ரீ காமாக்ஷி

 

ஹ்ரீங்கார ப்ரணவாத்மிகாம் ப்ரணமதாம் ஸ்ரீ வித்யவித்யாமயீம்

ஐம் க்லீம் ஸௌம் ருசி மந்த்ர மூர்த்தி நிவஹா காரா மசே’ஷாத்மிகாம்

ப்ரஹ்மானந்த ரஸானுபூத மஹிதாம் ப்ரஹ்மப்ரியம் வாதினீம்

காமாக்ஷீம் கலயாமி கல்பலதிகாம் காஞ்சிபுரீ தேவதாம்

 

 

 

ஸ்ரீ காமாக்ஷீ து:க்க நிவாரண அஷ்டகம்

 

மங்களரூபிணி மதி அணி சூ’லினி மன்மத பாணியளே

சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் ச’ங்கரி ஸௌந்தரியே

கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியே

ஜய ஜய ச’ங்கரி கௌரி க்ருபாகரி து:க்க நிவாரணி காமாக்ஷி           1

 

கான் உறுமலர் எனக்கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்

தான் உறு தவஒளி தார்ஒளி மதிஒளி தாங்கியே வீசிடுவாள்

மான் உறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்

ஜய ஜய ச’ங்கரி கௌரி க்ருபாகரி து:க்க நிவாரணி காமாக்ஷி           2

 

ச’ங்கரி ஸௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே

பொங்கு அரிமாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே

எம்குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்த நல்துர்க்கையளே

ஜய ஜய ச’ங்கரி கௌரி க்ருபாகரி து:க்க நிவாரணி காமாக்ஷி           3

 

தண தண தந்தண தவில் ஓலி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்

கண கண கங்கண கதிர் ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய்

பண பண பம்பண பறை ஒலி கூவிடப் பண்மணி நீ வருவாய்

ஜய ஜய ச’ங்கரி கௌரி க்ருபாகரி து:க்க நிவாரணி காமாக்ஷி           4

 

பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே

கொஞ்சிடும் குமரனைக் குணம்மிகு வேழனைக் கொடுத்த நல்குமரியளே

சங்கடம் தீர்த்திடச் சமர் அது நல்சக்தி எனும் மாயே

ஜய ஜய ச’ங்கரி கௌரி க்ருபாகரி து:க்க நிவாரணி காமாக்ஷி           5

 

எண்ணியபடி நீ அருளிட வருவாய் எம்குல தேவியளே

பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்

கண்ணொளி அதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே

ஜய ஜய ச’ங்கரி கௌரி க்ருபாகரி து:க்க நிவாரணி காமாக்ஷி           6

 

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்றுநீ சொல்லிடுவாய்

சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்

படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்

ஜய ஜய ச’ங்கரி கௌரி க்ருபாகரி து:க்க நிவாரணி காமாக்ஷி           7

 

ஜய ஜய பாலா சாமுண்டேச்’வரி ஜய ஜய ஸ்ரீதேவி

ஜய ஜய துர்க்கா ஸ்ரீ பரமேச்’வரி ஜய ஜய ஸ்ரீதேவி

ஜய ஜய ஜயந்தி மங்களகாளி ஜய ஜய ஸ்ரீதேவி

ஜய ஜய ச’ங்கரி கௌரி க்ருபாகரி து:க்க நிவாரணி காமாக்ஷி           8

***


 

காமாட்சி அம்மன் விருத்தம்!

 

கணபதி காப்பு

மங்களம் சேர் கச்சிநகர் மன்னு காமாட்சி மிசை
துங்கமுள நற்பதிகம் சொல்லவே திங்கட்
புயமருவும் பனி அணியும் பரமன் உள்ளந்தனில் மகிழும்
கயமுகன் ஐங்கரன் இருதாள் காப்பு.

சுந்தரி சௌந்தரி நிரந்தரி துரந்தரி ஜோதியாய் நின்ற உமையே!
சுக்ர வாரத்தில் உனைக் கண்டு தரிசித்தவர்கள் துன்பத்தை நீக்கிடுவாய்!
சிந்தைதனில் உன்பாதம் தன்னையே தொழுபவர்கள் துயரத்தை மாற்றிவிடுவாய்!
ஜெகமெலாம் உன் மாயை! புகழவென்னாலாமோ சிறியனால் முடிந்திடாது
சொந்தவுன் மைந்தனாய் எந்தனை ரட்சிக்க சிறிய கடன் உன்னதம்மா
சிவசிவா மஹேஸ்வரி பரமனிட ஈஸ்வரி சிரோன்மணி மனோன்மணியும் நீ!
அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி அனாத ரட்சகியும் நீ
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!

பத்து விரல் மோதிரம் எத்தனை ப்ரகாசமது பாடகம் தண்டை கொலுசும்
பச்சை வைடூரியம் இச்சையாய் இழைத்திட்ட பாதச் சிலம்பின் ஒளியும்
முத்து மூக்குத்தியும் ரத்னப் பதக்கமும் மோகன மாலை அழகும்
முழுதும் வைடூரியம் புஷ்பராகத்தினால் முடிந்திட்ட  தாலி அழகும்
சுத்தமாய் இருக்கின்ற காதினில் கம்மலும் செங்கையில் பொன் கங்கணமும்
ஜெகமெலாம் விலை பெற்ற முகமெலாம் ஒளிவுற்ற சிறுகாதுக் கொப்பின் அழகும்
அத்தி வரதன் தங்கை சத்தி சிவரூபத்தை அடியனால் சொல்லத் திறமோ
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!

கெதியாக வந்துன்னைக் கொண்டாடி நினது முன்குறைகளைச் சொல்லி நின்றும்
கொடுமையாய் என் மீதில் வறுமையை வைத்து  நீ குழப்பமாய் இருப்பதேனோ
சதிகாரி என்று நான் அறியாமல் உந்தனைச்சதமாக நம்பினேனே
சற்றாகிலும் மனது வைத்து என்னை ரட்சிக்க  சாதகம் உனக்கில்லையோ
மதி போல ஒளியுற்ற புகழ் நெடுங்கரமுடைய மதகஜனை ஈன்ற தாயே!
மாயனுடை தங்கையே பரமனது மங்கையே மயானத்தில் நின்ற உமையே!
அதிகாரி என்று நான் ஆசையாய் நம்பினேன் அன்பு வைத்து என்னை ஆள்வாய்!
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே.

பூமியிற் பிள்ளையாய்ப் பிறந்து வளர்ந்துநான்பேரான ஸ்தலமும் அறியேன்!
பெரியோர்கள் தரிசனம் ஒருநாளும் கண்டு நான் போற்றிக் கொண்டாடி அறியேன்!
வாமியென்றே சிவகாமியென்றே உன்னைச் சொல்லி வாயினாற் பாடி அறியேன்!
மாதா பிதாவினது பாதாரவிந்தத்தை வணங்கி ஒருநாளும் அறியேன்!
சாமியென்றே எண்ணிச் சதுரருடன் கைகூப்பிச் சரணங்கள் செய்தும் அறியேன்!
சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டு நான் சாஷ்டாங்க தெண்டனிட்டு அறியேன்!
ஆமிந்தப் பூமியில் அடியனைப் போல் மூடன்ஆச்சி நீ கண்டதுண்டோ?
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே

பெத்த தாய் என்றுன்னை மெத்தவும் நம்பி நான் பிரியனாய் இருந்தனம்மா
பித்தலாட்டக்காரி என்று அறியாது உன்புருஷனை மறந்தேனம்மா
பத்தனாய் இருந்தும் உன் சித்தம் இரங்காமல் பாராமுகம் பார்த்திருந்தால்
பாலன் நான் எப்படி விசனமில்லாமலே பாங்குடன் இருப்பதம்மா!
இத்தனை மோசங்கள் ஆகாது ஆகாது இது தருமம்  அல்லவம்மா
எத்தனை ரட்சிக்க சிந்தனைகள் இல்லையோ இது நீதியல்லவம்மா!
அத்திமுகன் ஆசையால் இப்புத்திரனை மறந்தையோ அதை எனக்கு அருள்புரிவாய்!
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!

மாயவன் தங்கை நீ மரகதவல்லி நீ மணிமந்த்ரக்காரி நீயே!
மாயாசொரூபி நீ மகேஸ்வரியுமான நீ மலையரசன் மகளான நீ
தாயே மீனாட்சி நீ சற்குணவல்லி நீ தயாநிதி விசாலட்சியும் நீ
தாரணியில் பெயர் பெற்ற பெரியநாயகியும் நீ, சரவணனை ஈன்றவளும் நீ
பேய்களுடன் ஆடி நீ அத்தனிட பாகமதில் பேறு பெற வளர்ந்தவளும் நீ
ப்ரணவ சொரூபி நீ ப்ரஸன்னவல்லி நீ பிரிய உண்ணாமுலையும் நீ
ஆயி மகமாயி நீ ஆனந்தவல்லி நீ அகிலாண்டவல்லி நீயே
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!

பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்ற தாய் புத்திகளைச் சொல்லவில்லையோ
பேய்ப் பிள்ளையானாலும் தான் பெற்ற பிள்ளையைப்  பிரியமாய் வளர்க்கவில்லையோ
கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய்விட்டுக் கதறி நான் அழுத குரலில்
கடுகுதனில் எட்டிலொரு கூறு அதாகிலும் உன் காதினில் நுழைந்ததில்லையோ
இல்லாத வன்மங்கள் என்மீதில் ஏனம்மா இனி விடுவதில்லை சும்மா
இருவரும் மடிபிடித்துத் தெருதனில் வீழ்வதும் இது தருமம் இல்லையம்மா
எல்லோரும் உன்னையே சொல்லியே ஏசுவார் இது நீதி அல்லவம்மா
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!

முன்னையோர் ஜன்மாந்திரம் என்னென்ன பாவங்கள் மூடன் நான் செய்தனம்மா
மெய்யென்று பொய் சொல்லி கைதனில் பொருள் தட்டி  மோசங்கள் பண்ணினேனோ
என்னவோ தெரியாது இட்சணம் தன்னிலே இக்கட்டு வந்ததம்மா
ஏழை நான் செய்தபிழை தாய் பொறுத்து ரட்சித்து என் கவலை தீருமம்மா
சின்னங்கள் ஆகாது ஜெயமில்லையோ தாயே சிறுநாணம் ஆகுதம்மா
சிந்தனைகள் என் மீது வைத்து நல்பாக்கியம் அருள்  சிவசக்தி காமாட்சி நீ
அன்ன வாகனமேறி ஆனந்தமாக உன் அடியேன் முன் வந்து நிற்பாய்
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சியே உமையே!

எந்தனைப் போலவே ஜனனம் எடுத்தோர்கள் இன்பமாய் வாழ்ந்திருக்க
யான் செய்த பாவமோ இத்தனை வறுமையில் உன்னடி யேன் தவிப்பதம்மா
உன்னையே துணையென்று உறுதியாய் நம்பினேன் உன் பாதம் சாட்சியாக
உன்னையன்றி வேறு துணை இனி யாரையும் காணேன் உலகந்தனில் எந்தனுக்கு
பின்னையென்று நீ சொல்லாமலே வறுமை போக்கடித்து என்னை ரட்சி
பூலோகம் மெச்சவே பாலன் மார்க்கண்டன் போல் பிரியமாய்க் காத்திடம்மா!
அன்னையே இன்னமுன் அடியேனை ரட்சிக்க அட்டி செய்யாதேயம்மா
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!

பாரதனில் உள்ளளவும் பாக்கியத்தோடென்னைப் பாங்குடன் ரட்சிக்கவும்
பக்தியாய் உன் பாதம் நித்தம் தரிசித்த பாலருக்கு  அருள் புரியவும்
சீர் பெற்ற தேகத்தில் சிறுபிணிகள் வாராமல் செங்கலியன் அணுகாமலும்
சேயனிடம் பாக்கியங்களைத் தந்து ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும்
பேர் பெற்ற காலனைப் பின் தொடர வொட்டாமல் பிரியமாய்க் காத்திடம்மா
பிரியமாய் உன்மீதில் சிறியேன் நான் சொன்ன கவிபிழைகளைப் பொறுத்து ரட்சி
ஆறதனில் மணல் குவித்து அரிய பூசை செய்த என் அன்னையே ஏகாம்பரி
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!

எத்தனை ஜனனம் எடுத்தேனோ தெரியாது இப்பூமி தன்னிலம்மா
இனியாகிலும் கிருபை வைத்து என்னை ரட்சியும் இனி  ஜனனம் எடுத்திடாமல்
முத்திர தர வேணும் என்றுன்னையே தொழுது நான்முக்காலும் நம்பினேனே
முன்னும்பின்னும் தோணாத மனிதரைப் போல நீ விழித்திருக்காதேயம்மா
வெற்றி பெற உன் மீதில் பக்தியாய் நான் சொன்ன  விருத்தங்கள் பதினொன்றையும்
விருப்பமாய்க் கேட்டு நீ அளித்திடும் செல்வத்தை விமலனார் ஏசப்போறார்
அத்தனிட பாகமதை விட்டுவந்தே என் அரும் குறையைத் தீருமம்மா
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை  காமாட்சியே உமையே!

 

காமாட்சி ஸ்தோத்திரம்

 

மூக பஞ்ச சதியில் உள்ள… காமாட்சி அம்மனைத் துதிக்கும் மிக அற்புதமான ஸ்தோத்திரம் இது.

ச்ரியம் வித்யாம்தத்யாஜ்னனி நமதாம் கீர்த்திமமிதாம்
ஸுபுத்ரம் ப்ராதத்தே தவ ஜடிதி காமாக்ஷி! கருணா
த்ரிலோக்யாமாதிக்யம் த்ரிபுரபரிபந்திப்ரணயினி
ப்ரணாமஸ்த்வத்பாதே ஸமிததுரிதே கிம் ந குருதே

கருத்து: காமாட்சி அன்னையே! உன்னை வணங்குபவர்களுக்கு உனது கருணையானது தனம், வித்யை, அளவற்ற கீர்த்தி, நல்ல புத்திரன், மூவுலகிலும் மேன்மையாக இருக்கும் தன்மை ஆகியவற்றை வெகு விரைவிலேயே வரமாகத் தருகிறது. திரிபுர சம்ஹாரம் செய்த பரமேஸ்வரரின் பத்தினியே….! பக்தர்களது பாவத்தைப் போக்கும் தங்களின் சரணத்தில் செய்த நமஸ்காரமானது, எதைத்தான் கொடுக்காது?

பவுர்ணமி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், அம்பாளுக்கு உகந்த திருநாட்களிலும், அம்பாளுக்கு செவ்வரளி முதலான சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து, சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து, இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபட, சகல நன்மைகளும் உண்டாகும். செல்வம், வித்யை, புத்திரப்பேறு, கீர்த்தி, உத்தியோகம் ஆகியவற்றை விரும்புவோர் இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்து பலன் பெறலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.