சப்த கன்னியர் (மாதர்)

சப்த கன்னியர் (மாதர்)

 

நன்றி: தினமலர்

 

அருள்உடை – சப்த கன்னியர் – சரித்திரம்!

எல்லாம் வல்ல – என்றும் – அன்றும் – இன்றும் நம்மை ஆட்கொண்டருளும் கர்த்தா – சிவபெருமானே யாவார்! அவனுடைய சக்தி சிவசக்தி என்று பெயர் பெறும். சிவபெருமான் சிவன் என அழைத்து வரப்படுதல் போல; அவனது சக்தியும் சிவா என்றும் சிவை என்றும் சொல்லப்படுவாள்! சிவனோடு என்றும் பிரியாது விளங்கி அருள் செய்பவள் சக்தி. எந்த தெய்வத்தை யார் வேண்டி நின்றாலும், அந்த இறைவனாக நின்றருளும் சிவனோடு – சக்தியும் உடனுறை தெய்வமாய் நின்றருளுவாள்!

சிவாலயங்களில் இச்சக்தி – மூலசக்தியாகவும் (கருவறை அம்பாள்) யோக சக்தியாகவும் (அர்த்த மண்டப அம்பாள்) போக சக்தியாகவும் (மகா மண்டப அம்பாள்) வீர சக்தியாகவும் (முன் மண்டப அம்பாள்) இருந்தருளுகின்றாள். அதைப் போலவே, இச்சா சக்தியாகவும் (கருவறைக்கு தெற்கு மாட அம்பாள்) கிரியா சக்தியாகவும் (கருவறைக்கு மேற்கு மாவட அம்பாள்) ஞான சக்தியாகவும் (கருவறை வடக்கு மாட அம்பாள்) இருந்தருளுகின்றாள்! இவளது தனித்த ஆலயங்கள் யாவும் அம்பாள் ஆலயம் எனப் பொதுவாகவும், காமக்கோட்டம் – என ஆகம வழக்கிலும் சொல்லப்படும். அவ்வாலயங்களில் இவள் இருந்தும் – நின்றும் தன் அன்பர்களுக்கு அருளாசி நல்குவாள்! பொருள் ஒன்றே உள்ளது. ஏகம் சத் விப்ரா பகுதாவ தந்தி – என்பது வேதவாக்கியம். அம்முறையில் சக்தி என்பது ஒன்றே! ஆயினும், அது அதன் தொழிற்பாட்டால் பலவகை அம்பாள் பேதங்களாகக் கருதப்படுகின்றது. சக்தியை மட்டும் வழிபடுவோர் சாக்தர் – எனப் பெயர் பெறுவர்! சக்தி தான் பலவோ என்னில், தான் ஒன்றே அநேகமாக வைத்திடும் காரியத்தால் – என்று இதைச் சிவஞான சித்தியார் கூறும்.

சிவபெருமான்: பவன் – சர்வன் – ஈசன் – பசுபதி – ருத்ரன் – உக்ரன் – பீமன் – மகாதேவன் எனப்படும். அட்டமூர்த்தியாய் இருந்து அருள் புரிகின்றான்.

மகா விஷ்ணு: கூர்மம் – மச்சம் – வாமனம் – வராகம் – நரசிம்மம் – பரசுராமன் – இராமன் – கல்கி என்ற அட்ட வடிவம் கொண்டு ஆட்சி புரிகின்றான்.

விநாயகர்:  விசாலாட்சர் – விசுவரூபர் – அட்சயர் – மதவிப்பிரமர் – உன்மத்தர் – லளிதர் – பீமர் – தீக்ஷணதம்ஷ்டிரர் என்ற அட்டத் திருமேனி எடுத்து ஆட்கொண்டருளுகின்றார்.

முருகன்: ஜயந்தன் – அக்னிசிகன் – பூதபதி – கிருத்திகாபுத்ரன் – சேனானி – குகன் – ஹேமசூலன் – விசாலாட்சன் என்ற அட்ட பேதம் கொண்டு அருள் தருகின்றார்.

மகாலட்சுமி: தனலட்சுமி – தான்யலட்சுமி – தைர்யலட்சுமி – விஜயலட்சுமி – வீரலட்சுமி – சந்தானலட்சுமி – கஜலட்சுமி – வித்யாலட்சுமி என்ற அட்ட லட்சுமிகளாய் இருந்து வளம் சேர்க்கின்றாள்.

சிவபெருமானின் இடப்பாகத்தில் என்றும் நீங்காது விளங்கியருளும் அன்னை பராசக்தியும், நல்லோர்களைக் காப்பாற்று முகத்தான், பலரூபங்களை ஏற்று அருளுகின்றாள்! அன்னை பராசக்தி எடுத்த திருமேனிகள் ஏழு எனவும் – எட்டு எனவும் – ஒன்பது எனவும் சொல்லப்படும். அவைகள், சப்த கன்னியர் என்றும் அஷ்ட சக்திகள் என்றும் நவமாதாக்கள் என்றும் அழைக்கப்படுவர்.

சப்தகன்னியர்:  பிராமி; – மாகேசுவரி – கவுமாரி – வைஷ்ணவி – வராகி – இந்திராணி – சாமுண்டி எனப்பெயர் பெறுவர்.

அஷ்ட சக்திகள்: இந்த எழுவரோடு ரௌத்திரி சேர்க்கப்படுவாள். ஆனால், மதுரை அஷ்ட சக்தி மண்டபத்துள்; ரௌத்திரிக்குப் பதிலாக; மதுரைமீனாட்சியின் அவதார கோலமான சியாமளா சேர்த்து எழுந்தருளுவிக்கப்பட்டுள்ளாள்.

நவ மாதாக்கள்:  நவ மாதாக்கள் எனப்படுவோர் ஒன்பது துர்க்கைகளேயாவர் அவர்கள் மகா துர்க்கா – ருத்ர சண்டா – சண்டோக்ரா – ப்ரசண்டா – சண்டா – சண்ட நாயிகா – சண்டாசி – சண்டவதீ – உக்ர சண்டா எனப்பெயர் பெறுவர்!

இவர்களை, மனோண்மணி – சர்வபூதமணி – பலப்பிரதமணி -பலவிகரணி – கலவீகரணி – காளி – இரவுத்திரி – சேட்டை – வாமை என்ற ஒன்பது சக்திகளாகச் சைவ சித்தாந்தம் கூறும். உலகை இயக்கும் ஐந்தொழில்கள் புரிந்து வரும் அருளாற்றலாகிய சிவசக்தியானது. தனக்கென்று ஒரு பெயரும் – வடிவமும் இல்லாத தாயினும், அன்பர்களின் பொருட்டுப் பல பெயர்களையும் – வடிவங்களையும் கொள்ளும். இம்முறையில், எடுத்த திருமேனிகளே – சப்த கன்னியர் என்றும் – சப்த மாதாக்கள் என்றும் அழைக்கப்படுவர்! மகாகவி காளிதாசனின் – குமார சம்பவம் – என்ற மகா காவியத்தில் சப்த கன்னியர் சிவபெருமானின் பணிப்பெண்டிர் என்ற குறிப்புக்காணப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே சிவன் திருக்கோயில் கருவறை – தெற்கு திருமாளிகைப் பத்தியில் வடக்குத் திருமுகம் உடையவர்களாய் இந்த அம்பிகைகளின் திருமேனிகள் எழுந்தருளுவிக்கப்பட்டிருத்தலைக் காணலாம்! மூவர் முதலிகளில் ஒருவரான – சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது உலாவில், இக்கன்னியர் எழுவரும்; சிவபெருமானின் திருவுலாவின் போது; வீரபத்திரர் மற்றும் விநாயகர் காவலுடன் நடனமாடிச் சென்றதாகப் பாடித் தெரிவிப்பார். இதன் அடிப்படையிலேயே, சப்த கன்னியர் திருமேனிகள் அனைத்தும் வீரபத்திரர் மற்றும் விநாயகர் திருமேனிகளுடன் இணைந்து நவபேதங்களாக அமைந்திருக்கக் காண்கின்றோம். அத்தோடு, மத்தியப் பிரதேசம், தேவா மாவட்டத்திலுள்ள கூர்க்கி என்னும் இடத்திலிருந்து கொண்டு வரப்பட்டு, அலகாபாத் காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ள வீரபத்திரர் – விநாயகர் திருமேனிகளுடன் கூடிய சப்த கன்னியர் திருமேனிகள் நடனக் கோலத்துடன் இருக்கக் காண்கின்றோம். குசாணர்களது ஆட்சிக் காலம் முதல் சப்த கன்னியர் எனப்படும் சப்த மாதாக்கள் வழிபாடு தொடங்கிற்று எனக் கருதலாம். அவர்களது திருக்கோயில்களில் – சப்த மாத்திரிகைகள் சாதாரணப் பெண்கள் போன்று, இரு கரங்கள் கொண்டவர்களாய்; இரு புறமும் ஆயுதபுருடர்களுடன் கூடியதாய், அமைக்கப்பட்டன. குப்தர்கள் ஆட்சிக்காலத்தில் இவ்வழிபாடு சிறப்புப் பெற்றது. அவர்கள் காலத்தில் இந்த சப்த மாத்திரிகைகள் காவல் தெய்வமாகக் கருதி வழிபடப்பட்டனர். எனவே, ஆயுதங்கள் வாகனங்கள் அமைக்கும் வழக்குத் தொடங்கிற்று. முன்னும் – பின்னும் இருந்த காவலர் உருவங்கள் மாற்றப்பட்டு அவ்விடங்களில் வீரபத்திரர் மற்றும் விநாயகர் திருமேனிகள் எழுந்தருளுவிக்கப்பட்டன.

பல்லவர் ஆட்சிக்காலத்தில் – சப்த மாதர் வழிபாடு தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டது. பல்லவ மன்னன் இராசராச சிம்மன் கட்டிய காஞ்சிபுரம் கைலாசநாதர் கலைக்கோயிலில் சப்தமாதர்கள் திருமேனிகள் படைக்கப்பட்டன. சோழர்கள் ஆட்சியில் எழுப்பப்பட்ட கற்கோயில்களின் அட்டபரிவார மூர்த்தங்களுள் ஒன்றாக சப்த கன்னியர் திருமேனிகள் எழுந்தருளுவிக்கப்பட்டன. பாண்டியப் பேரரசர்களும், சோழர் வழக்கினையே பின்பற்றினர். மாத்ணாம் ஸகணாநாம்து ஸ்தாபநம்கத்யதே உதுநா சிவாயயேஷீ யாம்யே ஸ்யாத் க்ராமாதிஷ் வீச கோசரே; ஸெளம்யேவாதத் ப்ரசதஸ்தம் ஸ்யாந்தத்யா தீ நாஞ்ச தீரகே, உத்யா நேசவதுநே ரம்யே பர்வதேவாமநோ நமே – என்ற அஜிதாகம – அஷ்ட சத்வாரிசம் சத் படலவாக்கியத்திற்கிணங்க தமிழச் சிவாலயங்களின் தென் பாகத்திலும், க்ராமங்களின், ஈசானத்திலும், நதிகளின் கரைகளிலும், மலையடிவாரங்களிலும், சோலைகளின் நடுவிலும், சப்த கன்னியர் திருமேனிகள் இடம் பெற்றன!

சப்த கன்னியர் எனப்படும் சப்த மாத்திரிகைகள் பொதுவாக ஒரே கல்லில் வரிசையாக அமர்ந்திருப்பது போன்று அமைக்கப்படுவர். சில இடங்களில் தனித்தனித் திருமேனிகளும் கொண்டிருப்பர். நின்ற நிலையில் அமைக்கப்படுதல் பெரும்பாலும் வழக்கில் இல்லை. இருந்தருளும் நிலையில், இடது காலை மடித்து சுகாசன நிலையிலோ அல்லது உத்குடி ஆசன நிலையிலோ வைத்திருப்பர். வலது காலைத் தொங்கவிட்ட நிலையில் காணலாம். ஆகமம் மற்றும் புராணங்களில் இவர்களுக்குக் கரங்கள் பல கூறப்பட்டிருந்தாலும் பொதுவாக இரண்டு அல்லது நான்கு கரங்களுடனேயே இருப்பர். இரண்டு கரங்களானால் அபய வரதம் கொண்டிருப்பர்; நான்கு கரங்களானால் முன்னிரு கரங்களை அபயவரதமாகவும் பின்னிரு கரங்களில் தத்தமக்குரிய ஆயுதங்களைத் தாங்கியிருப்பர்.

தமிழகத்துச் சிவாலயங்களில் வீரேஸ்வரஸ்ச பகவான் த்ரிசூல : ச மாத்ரூணாம் அக்ரதோ பவேத்: மத்யேச மாதர: கர்த்தவ்யா: அந்தே தேஷாம் விநாயக – என்ற அம் சுமத் பேதாகமம் – 47 – ஆம் படல சூத்திரத்திற்கிணங்க; வீரபத்ரர் திருமேனி அன்னையர்க்கு முன்பும்; நடுவில் சப்த கன்னியர்களும்; அடுத்து விநாயகர் திருவுருவும் அமைக்கப்பட்டுள்ளன. கிராமியக் கோயில்களில் முதலில் கருப்பண்ணசாமி நின்ற நிலையில் இருக்க; அடுத்து சப்த கன்னியர் திருமேனிகள் எழுந்தருளுவிக்கப்படுகின்றன. தமிழகத்தின் சிவபெருமான் திருக்கோயில்களின் முதல் திருச்சுற்று – தென் திருமாளிகைத் திருப்பத்தியில் (மேடை) சப்த கன்னியர் எனப்படும் சப்த மாதர்கள் திருநிலை அமைந்திருக்கக் காணலாம். அம்மாதர் சிலைகளின் வலப்புறத்தே – வீரபத்திரர் திருவுருவும் இடப்புறத்தே – விநாயகர் திருவுருவம் அமைந்திருப்பதையும் காணலாம். வீரபத்திரர் திருமேனியை; திருக்கோயில் பூசகர்கள் தட்சிணாமூர்த்தி எனவும் கூறுவர், அது ஆகமம் அறிய வழக்கேயாகும். சப்த மாத்ருக்கள் முன்புள்ளவர் வீரபத்திரரும் அல்ல; வீரபத்ரை யாரும்; அதைப்போலவே பின்புள்ளவர் விநாயகரும் அல்ல; – விநாயகி எனப்படும் கணேசாயினி – ஆகிய விக்னேஸ்வரி ஆவாள்! இந்த வேற்றுமையைப் பூசகர்கள் கூட அறிந்திருக்க நியாயமில்லை; தத்துவம் உணர்ந்தோரே அறிவர். பொதுமக்களால் இவ்வேற்றுமையை அறிய முடியாது; அத்திருமேனிகளின் ஆடைகள் மறைத்துவிடும்; பூசகர்களும் அத்திருமேனிகளின் அபிடேகங்களின் போது ஊன்றி நோக்கினால் மட்டுமே அறியக்கூடும். மார்புப் பகுதி மட்டுமே மாறுபடும். இதர அமைப்புக்கள் ஒன்றுபோலவே இருக்கும்.

வீரபத்திரை என்ற திருமேனியும்; விநாயகி என்ற திருமேனியும்; திருக்கோயில்களில் இருக்கக் காணலாம். அதற்கான காரணத்தை பூசகர்கள் அறிந்திருக்கவில்லை; எனவே, ஆய்வாளர்கள் அறிய இயலவில்லை என்று எழுதுகின்றனர்! இறைத் திருமேனிகளாகிய; வீரபத்திரை மற்றும் விநாயகி என்ற இருவரும் சப்த கன்னியர் எனப்படும் சப்த மாத்ருக்கள் முன்பும் – பின்பும் அமைய; தத்துவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மூர்த்தங்களாகும்! பெண் தெய்வங்களின் காவலர்களாக பெண்கள் தானே இருக்க வேண்டும் ஆண்களுக்கு அங்கு வேலை இல்லையே? அம்பிகை பராசக்தியின் காவலர்களாக ஜயா – விஜயா தானே இருக்கின்றனர். அன்னை மகாலட்சுமி கூட கருடி வாகனத்தில் தானே எழுந்தருளுகின்றாள்! சிவபெருமான் திருக்கோயில் – அஷ்ட பரிவார அமைப்பினைக் கூறும் மான சாரம்; மூலமூர்த்தி கருவறைக்குத் தெற்கில் சப்த மாதர்களை அமைக்க வேண்டும் என்று கூறும். அதையே சற்று விரிவாக – விஸ்கர்மியம் கருவறைக்கு முன் விருஷபமும் அக்னி மூலையில் அக்னி அல்லது துர்க்கையும், தெற்கில் சப்தமாதர்கள், அதற்கு வலப்புறத்தில் வீரபத்திரன், இடப்புறம் – விநாயகரையும் ஸ்தாபித்தல் வேண்டும் என்று கூறும் மேலும், சப்த மாதர்களுடன் கூடிய வீரபத்திரனை மேற்கு முகமாகவும் – விநாயகரைக் கிழக்கு நோக்கியவாறும் ஸ்தாபித்தல் வேண்டும் என்று கூறி விளக்கும் ! இம்முறைப்படியே மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில், சப்த கன்னியர் அமைந்திருக்கக் காணலாம்.

அந்த சப்த கன்னியர் திருமேனிகள்

ப்ராஹ் மாணீம் ப்ரம்ஹவத்குர்யாத் மகேளீம்
ஈஸ்வரீரர் பமாம்; குமார வத்ச கௌமாரீம்
விஷ்ணுவத்ச, வைஷ்ணவீம் ததா;
குரோதாந நாந்து வாராஹீம் வாம நீந்து
ஹலாயூதாம்; ஸக்ராணீம் ஸக்ரவத்குர்யாத்
சாமுண்டீம் உக்ரரூபிணீம் – என்ற சுப்ர பேதாகமம் – 42 ஆம் படல சூத்திரங்களின் படி; ப்ரம்மாணியைப் ப்ரம்மனை ஒப்பவும், மகேசியை ஈசனை ஒப்பவும், கவுமாரியை குமாரனை ஒப்பவும், வைஷ்ணவியை அரியை ஒப்பவும், வராகியை வராக முகத்துடனும், இந்திராணியை இந்திரனை ஒப்பவும், சாமுண்டியை கபால சூலத்துடனும் – திருக்கோயில்களில் எழுந்தருளுவிக்கின்றனர்.

இவர்கள் அனைவரும் வரத ஆபயம் கொண்ட நாற்கரத்தர். தங்கள் தலைவர்கட்குரிய நிறமும் – படையும் – கொடியும் கொண்டவர்கள். தாமரை ஆசனங்களில் அமர்ந்திருப்பர் இந்த சப்த கன்னியர் எனப்படும் சப்த மாதாக்களின் தோற்றம் பற்றிய புராணச் செய்திகளையும் காண்போம்:

  1. சிவன் அந்த காசுரனுடன் போரில் ஈடுபட்ட போது; அந்த காசுரனின் உடலில் இருந்து வழிந்த இரத்தத்திலிருந்து தோன்றிய அசுரர்களை அழிக்கும் நோக்கில், சிவன் தனது வாயிலிருந்து தோன்றிய அக்னியிலிருந்து யோகேசுவரி – என்ற சக்தியைத் தோற்றுவித்தார் என்றும்; அவள் மாகேசுவரி – என்ற சக்தியை உருவாக்கினாள் என்றும்; அவளுக்கு உதவியாக பிரம்மன் தனது அம்ச பிராம்மியையும்; விஷ்ணு தனது அம்ச வைஷ்ணவியையும்; இந்திரன் – தனது அமட்ச இந்திராணியையும் ; முருகன் – தனது அம்ச கவுமாரியையும்; வராகமூர்த்தி – தனது அம்ச வராகியையும்; யமன் – தனது அம்ச சாமுண்டியையும் படைத்து அளித்தனர் என்று வராகபுராணம் கூறும்.
  2. சும்ப – நிசும்ப என்ற அரக்கர்களை அம்பிகை அழிக்கப்போர் புரிந்த போது அவளுக்கு உதவியாக இத்தேவியர்கள் உற்பவித்தனர் என்று மார்க்கண்டேய புராணம் கூறுகின்றது.
  3. நைரிதன் என்ற அசுரனை ஒழிக்கப் பிரதம்மா யுத்தம் செய்த போது; அவருக்கு உதவி புரிவதற்காக பிற தேவர்கள் தங்களது சக்திகளை உருவாக்கி, அளித்தனர் என்று சுப்ரபேதாகமம் செப்புகின்றது.
  4. அக்னி புராணம், மச்ச புராணம், தேவி புராணம் என்ற புராண நூல்களிலும், பூர்வ காரணாகமம், அம்சுமத் பேதாகமம் என்ற ஆகம நூல்களிலும்; விஸ்வகர்ம சாஸ்திரம், சில்பரத்தினம், ரூப மண்டலம், ரூபாவதாரம் என்ற சிற்ப சாஸ்த்திர நூல்களிலும்; இவர்களது உருவ அமைப்பு ஆயுதங்கள் முதலியன கூறப்படுகின்றன.
  5. ஆண் தெய்வங்களின் சக்திகளான இவர்கள் தத்தமக்குரிய ஆண் தெய்வங்களின்; ஆயுதங்கள் ஆபரணங்கள் வாகனம் கொடி என்பனவற்றினைக் கொண்டு விளங்குவர்!

சிவன் திருக்கோயிலில் சப்த கன்னியர் அமைப்பு

பிராமி
மாகேசுவரி
கவுமாரி
வைஷ்ணவி
வராஹி
இந்திராணி
சாமுண்டி
வீரபத்திரை
விநாயகி

அம்பிகை திருக்கோயிலில் சப்த மாதாக்கள் அமைப்பு

பிராம்மி
மாகேஸ்வரி
கவுமாரி
நாராயணி
வாராஹி
ஐந்திரி
சாமுண்டா
அம்பிகை கருவறை.

அய்யனார் திருக்கோயிலில் கன்னிமார் பெண்டுகள் திருவுரு அமைப்பு

கருப்பணசாமி
பிராமி
மாகேசுவரி
கவுமாரி
வைஷ்ணவி
வராஹி
இந்திராணி
சாமுண்டி
பூர்ணா
அய்யனார்
புஷ்கலா
யானை
குதிரை
காளை
நாய்
சேவல்

கிராம தேவதை – குதிரை வாகன அமைப்பு

பிராமி
மாகேசுவரி
கவுமாரி
வைஷ்ணவி
வராஹி
இந்திராணி
சாமுண்டி
குதிரைமேல் கருப்பர்

நீர் நிலைக்கரை சப்த கன்னியர் அமைப்பு

கருப்பர்
பிராமி
மாகேசுவரி
கவுமாரி
வைஷ்ணவி
வராஹி
இந்திராணி
சாமுண்டி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.