ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் – பற்றிய சில விவரங்களும், பலன்களும்

விளக்கங்கள் ”‘ஸகல காரிய ஸித்தி தரும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ரம்” என்னும் LIFCO புத்தகத்திலிருந்து.

 

நம் நாட்டில் பெரியோர்கள் ஸஹஸ்ரநாமத்தை ஜபம், பாராயணம் என்ற இரண்டு முறைகளில் அனுஷ்டித்து வருகிறார்கள்.

 

ஜபம்:

ஸஹஸ்ர நாமத்திற்கு ரிஷி, சந்தஸ், தேவதை முதலியவைகளைச் சொல்லி அங்கந்யாஸ கரந்யாஸங்களை முறைப்படி செய்தபிறகு ஸஹஸ்ரநாமத்தை ஒருமுறையோ பலமுறைகளோ சொல்வதற்கு ஜபம் என்று பெயர். உப நயனமான மூன்று வர்ணத்தினர் மட்டுமே இதைச் செய்யலாம்.

 

பாராயணம்:

 

ரிஷி, ஸந்தஸ், அங்கந்யாஸ கரந்யாஸங்கள் இவைகளைச் செய்யாமல் ‘விஶ்வம் விஷ்ணு:’ என்று  பகவந் நாமங்களை மட்டும் தொடங்கி பலஶ்ருதி முடியப் படிப்பதற்குப் பாராயணம் செய்ய வேண்டும்.  உபநயனம் ஆனவர், ஆகாதவர், ஸ்த்ரீகள் மற்றும் எல்லா வர்ணத்தவரும் இந்த முறையைப் பின்பற்றி ஸஹஸ்ரநாம பாராயணம் செய்யலாம்.

 

 

இரண்டுவிதமான பாராயணங்கள்: 1. நித்திய பாராயணம் 2. காம்ய பாராயணம்

 

நித்திய பாராயணம்:

 

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தை ஸ்நானம், ஸந்த்யாவந்தனம் போல் தினந்தோறும் எவ்வித பலனையும் எதிர்பாராமல் பகவத் ப்ரீதியாகப் பாராயணம் செய்யலாம். நித்ய பாராயணம் செய்வோர் மஹாப்ரதோஷங் களிலும் பாராயணம் செய்யாலாமென்பர் பெரியோர். நித்ய பாராயணத்துகு அதிகமாக எந்த நியமமோ நிர்ப்பந்தமோ இல்லை. வ்ருத்தி, க்ஷயம் என்ற

சுப-அசுப தீட்டுக் காலங்களைத் தவிர்த்து, மற்றெல்லாக் காலங்களிலும் கூடியவரையில் சுத்தமாக இருந்து, சுத்தமான இடத்தில் அமர்ந்து சௌகர்யம் போல் பாராயணம் செய்யலாம்.

 

காம்ய பாராயணம்:

 

ஸந்தானம், ஸம்பத்து, கீர்த்தி, ஆரோக்யம் என்று ஏதாவது ஒரு பலனை உத்தேசித்துச் செய்யப்படும் பாராயணம் காம்ய பாராயணம் எனப்படும். இதற்கு நியமங்கள் உண்டு. காலையில் ஸ்நானம், ஸந்த்யாவந்தனம் முதலியவைகளைச் செய்த பிறகும், மாலையில் ஸந்த்யாவந்தனம் செய்த பிறகும் செய்யலாம்.

 

ஒரு மண்டலம் (48 நாட்கள்), அரை மண்டலம், கால் மண்டலம் அல்லது பலன் ஏற்படும் வரை பாராயணம் செய்யவேண்டும்.

 

 • ப்ராணாயாமம் (2) ஸங்கல்பம் (3) அங்கந்யாஸ கரந்யாஸங்கள்

(4) கலச ஸ்தாபனம் (5) நிவேதனம் முதலியவைகளுடன் பாராயணம் செய்வது விரைவில் பலனை அளிக்கும்.

 

விசேஷ பலன்களுக்காக செய்ய விரைவில் பயனளிக்க வேண்டி ஒருவருக்கு மேற்பட்டவர்களைக் கொண்டு பாராயணம் செய்விக்கலாம். எவ்வளவுக்கு எவ்வளவு ஜப எண்ணிக்கை அதிகமாகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நற்பயன் விரைவில் ஏற்படும். ஆகவே வசதியைப் பொறுத்து, ஒரே சமயத்தில் பத்து பேர்களை வரித்து அவர்கள் மூலம் பத்துப் பத்து தடவை பாராயணம் செய்வித்தால் ஒரு நாளில் ஒரு லட்சம் பகவன் நாமங்கள் ஜபித்தாகும், 10 நாளில் பத்துலட்சம் ஜபம் ஆகும். மேற்கண்டவாறு பாராயணம் செய்யும் வைதீகர்களுக்கு ம்ருஷ்டான்ன போஜனம் அளித்து, பாராயணம் பூர்த்தி செய்யும் நாளில் தம் சக்திக்குத் தக்கவாறு அவரவர்களுக்கு வஸ்திரம், தாம்பூலம், தக்ஷிணை முதலியவற்றை ஸமர்ப்பித்து வேதோக்தமாக அவர்களிடம் ஆசீர்வாதம் பெற வேண்டும்.

 

காம்ய பாராயணத்திற்கு ஒரு முறை:

 

கிழக்கே பார்த்து உட்கார வசதியாகும்படி பூமியை கோமயத்தால் (பசுவின் சாணத்தினால்) மெழுகி, நன்றாகக் கோலம் போட்டு, கிழக்கு நுனியாக நுனி வாழை இலைச் சேர்த்து, அதில் சுமார் ஒரு படி அரிசி சேர்த்து, அந்த அரிசிமேல் பவித்ர விரலால் பத்மம் எழுதி, அதன்மேல் நான்கு தர்பங்கள் சேர்த்து, சுத்தம் பண்ணின சிறிய குடமோ அல்லது சுமார் ஒருபடி ஜலம் பிடிக்கும்படியான செம்போ எடுத்து, அதனுள் சாம்பிராணி புகை காட்டி, தீர்த்தம் நிரப்பி, மாவிலைக் கொத்து சேர்த்து, அதன்மேல் தேங்காய் ஒன்று வைத்துவிட்டு, கைகால் அலம்பி, இரண்டுதடவை ஆசமனம் செய்து, கும்பத்தின் முன்னால் உட்கார்ந்து, பிராணாயாமம் செய்து, வரிசையாக திதி வார நக்ஷத்ரம் வரை சங்கல்பம் சொல்லி, அதன் பிறகு பாராயணம் செய்ய வேண்டும். பாராயணம் முடிந்தவுடன் அந்தக் கும்ப தீர்த்தத்தால் கர்த்தாவைப் ப்ரோக்ஷிக்க வேண்டும்.

 

காம்ய பாராயணத்திற்கு வேறு ஒரு முறை:

 

தினம் காலையிலும், மாலையிலும் பூஜை க்ரஹத்தில் ஆசாரத்துடன் உட்கார்ந்து இஷ்ட காமனையை ஸங்கல்பம் செய்துகொண்டு, லகுபூஜை செய்து அர்ச்சித்துப் பாராயணத்தை ஆரம்பித்து, முடியும்போது நெய், வெல்லம் சேர்ந்த பாயசம் நிவேதனம் செய்து, பாராயணத்தை முடித்து விடவும். கீழ்க்கண்ட விதிப்படி ஒரு மண்டலம் செய்யும் பக்ஷத்தில் இஷ்டங்கள் ஸித்திக்கும். லகு பூஜையாவது: (1) துளஸி அல்லது தாமரைப் புஷ்பங்களால் அர்ச்சனை (2) இஷ்டார்த்த ஸங்கல்பம் (காமனை) (3) நெய் வெல்ல பாயசம் (நிவேதனம்) (4) சிரத்தையுடன் கூடிய பூஜை.

இவ்வாறு லகு பூஜையுடன் மாலையில் நாமபாராயணம் செய்துவரும் பக்ஷத்தில் காரியஸித்தி உண்டாவது திண்ணம்.

 

 

வைத்திய சாஸ்திரம் கூறும் ஸஹஸ்ர நாமப் பிரயோகம்:

 

ஆயிரமாயிரம் சிரஸுகளுள்ளவனும், சராசரங்களுக்குப் பதியும், ஸர்வ வியாபியுமான ஸ்ரீமந் நாராயணனை ஸஹஸ்ர நாமத்தால் துதி செய்தால் ஸகல விதமான ஜ்வரங்களும் நீங்கும்.

– சரகஸம்ஹிதை: சிகித்ஸாஸ்தாநம் அத்-3, சு-311

 

பாரதத்தில் சேர்ந்ததான விஷ்ணு ஸஹஸ்ர நாம ஜபத்தால் மேஹ வியாதி (urinary disease) நீங்கும். ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமஜபத்தை யக்ஷ்ம வியாதி  (consumption) நிவ்ருத்திக்காகப் பாராயணம் செய்யவேண்டும்.

 • ஸ்ரீபராசர பட்டர் தம்முடைய ஸஹஸ்ர நாம பாஷ்யத்தில்

 

 

மந்த்ர மஹார்ணவம் கூறும் ஸஹஸ்ர நாமப் பிரயோகம்:

 

விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தால் ஜபித்த பஸ்மத்தை விஷம் தீண்டியவனுக்கு அணிவித்தால், பகவந்நாம ப்ரபாவத்தாலே விஷம் நொடியில் நீங்கும்

-மந்த்ர மஹார்ணவம்

 

ஏவல், சூன்யம் முதலியவைகளும், பைத்தியமும், பெரிய பெரிய உத்பாதங்களும் மற்றும் பலவிதமான பயமும் ஏற்படுமானால் அச்சமயத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவை மனத்தில் தியானம் செய்து ஸஹஸ்ர நாம ஜபம் செய்தால் அத்தகைய துன்பங்கள் உடனே நீங்கும்.

-மந்த்ர மஹார்ணவம்

 

காகவந்த்யை, ம்ருதவந்த்யை, ஜன்மவந்த்யை என்ற மலட்டு வகையைச் சேர்ந்த பெண்ணுக்கும், பிறந்து இறந்து போகும் சந்ததியுள்ள பெண்ணுக்கும்

விஷ்ணு ஸஹஸ்ர நாம ஜபத்தால் அனேக ஸத்புத்ரர்கள் உண்டாவார்கள்.

-மந்த்ர மஹார்ணவம்

 

விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் அநுக்ரஹத்தால் மனிதம் ஜீவன்முக்தன் ஆகிறான். மூன்று லோகங்களையும் ஆட்டி வைக்கும் சக்தியுள்ளவனும் மூவுலகங்களையும் ஜயிக்கும் வல்லமை கொண்டவனும் ஆவான்.

-மந்த்ர மஹார்ணவம்

 

பூதம், பிரேதம், பிசாசு என்பவைகளும், அரக்கர், தானவர் வகையைச் சேர்ந்தவர்களும் விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைக் கேட்டவுடன் ஓடிப்போய் விடுவார்கள்.                                                                             -மந்த்ர மஹார்ணவம்

 

 

கர்ம விபாக நூல்களில் ஸஹஸ்ர நாம சாந்தி

 

புத்ரகாமனைக்காக புருஷஸூக்தம் விதிக்கப்பட்டு அதற்குப் பதிலாக விஷ்ணு ஸஹஸ்ர நாம பாராயணம் விதிக்கப்பட்டுள்ளது

கர்ம விபாகம் — புத்ர காமேஷ்டிப் ப்ரஹரணம்

 

நவக்ரஹ சாந்திக்காக விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தினால் சனியையும் புதனையும் பூஜிக்க வேண்டும்

கர்ம விபாகம் – நவக்ரஹ சாந்திப் ப்ரஹரணம்

 

வேத பாராயண , மஹாஸௌர, சதருத்ர, புருஷ ஸூக்த, விஷ்ணு ஸஹஸ்ர நாம பாராயணாதிகளாலே எல்லா பாபங்களும் எல்லா ரோகங்களும் போகும்

கர்ம விபாக ஸங்க்ரஹம்

 

வைத்தியர்கள் கண்டு பிடிக்க முடியாத ஜ்வரங்கள் நீங்கும்

கர்மவிபாகத்தில் சாதாதபர் சொன்ன பகுதி

 

ஒவ்வொரு மூட்டிலும் தாங்க முடியாத வேதனை ஏற்பட்டால் அது நீங்க விஷ்ணு ஸஹஸ்ர நாம ஜபம் செய்ய வேண்டும்

கர்மவிபாக ஸமுச்சயம் – தநுர்வாத ப்ரஹரணம்

 

கப வியாதி உள்ளவன் ஒரு மாதம் யவம் (தினை) என்ற தானியத்தை ஆகாரம் செய்துகொண்டு ஸஹஸ்ர நாம ஜபமும், 100008 ஹோமமும் செய்ய வேண்டும்.

கர்மவிபாகத்தில் யமன் கூறியது

 

நீர் ரோக (பஹுமூத்ர ரோகம்) நீங்க ஸஹஸ்ர நாமத்தையும் புருஷ ஸூக்தத்தையும் ஜபிக்க வேண்டும்

கர்மவிபாகம்

 

குழந்தைகள் பிறந்து தங்காமல் போனால் அதன் பரிஹாரமாக ஸஹஸ்ர நாம ஜபம் செய்ய வேண்டும்

கர்மவிபாகம்

 

விஷூசி (காலரா) விலகவும் ஸஹஸ்ர நாம பாராயணம் செய்ய வேண்டும்

கர்மவிபாகம்

 

ஸித்திஸாரம் என்ற நூலில் விஷ்ணு ஸஹஸ்ர நாம ப்ரயோகம்

 

உலகவசியம்:

விஷ்ணு ஸஹஸ்ர நாம ஜபம் செய்துகொண்டே சந்தனத்தை இழைத்து அந்தச் சந்தனத்தை நெற்றியில் திலகமாக அணிந்தால் உலகவச்யம் உண்டாகும்.

.

ஸகலரோக நிவாரணம்:

“நாரஸிம்ஹவபு: ஸ்ரீமாந் கேஶவ: புருஷோத்தம: “ என்று விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் அடங்கிய நாமங்களாகிய மந்திரத்தால் ஜலத்தில் ஏழு தடவை ஜபித்து, அந்தத் தீர்த்தத்தை நோயாளிமீது புரோக்ஷணம் செய்தால் ஸகல நோய்களும் நீங்கும்.

பெரும் பயம் நீங்க:

“சர்வஶ்ஶர்வ: ஶிவஸ்ஸ்தாணுர் பூதாதிர் நிதி ரவ்யய:” என்ற ஸஹஸ்ர நாம மந்திரத்தை ஏழு தடவை ஜபம் செய்தால் பெரிய பெரிய ஆபத்துகளும் நீங்கும்.

 

ஸித்திஸாரத்தில் கூறப்பட்டுள்ள மற்றும் பலவிதமான ஸித்திகள்:

 1. ஸகல காரியங்களும் ஸித்தியாகும்
 2. எந்தவிதமான விஷங்களும் தேகத்தில் பாயாது
 3. யுத்த சமயத்தில் ஸஹஸ்ரநாம கிரந்தத்தைத் தாங்கியிருந்தால் சத்ரு ஜயமுண்டாகும்
 4. தம் காரியங்களுக்கு ஏற்படும் விக்நங்கள் எல்லாம் நீங்கும்
 5. அதிகம் ஏன், ஸகல ஸௌபாக்யங்களும் சம்பத்துகளும் உண்டாகும்
 6. ப்ரஹ்மஹத்யாதி பாபங்கள் நீங்கும்
 7. முயற்சிகளெல்லாம் என்றும் பலிக்கும்
 8. ஸகல ரோகங்களும் நீங்கும்
 9. விக்நங்கள் பாதிக்கா
 10. தத்துவ ஞானமுண்டாகும்
 11. கல்வியறிவு பெருகும்
 12. வீரத்தன்மை வளரும்
 13. நினைத்த காரியம் நிறைவேறும்
 14. ஸகல சுகமும் உண்டாகும்

 

 

 

ஓர் அபூர்வ முறை

 

அ. காணாமல் போன சொத்தைத் திரும்பப் பெற

ஆ. ராஜத்வாரத்தில் ஸர்வாநுகூல்யம் ஏற்பட

இ. கோர்ட்டு வியாஜ்யங்களில் வெற்றிபெற

 

கீழ்க்கண்ட இருபத்தொரு நாமங்களை ஜபிக்க வேண்டும்.

…”ஶப்தஸஹ, ஶிஶிர, ஶர்வரீகர: |

அக்ரூர: பேஶலோ, தக்ஷோ, தக்ஷிண: க்ஷமினாம்வர: |

வித்வத்தமோ, விதபய:, புண்யஶ்ரவணகீர்த்தந: |

உத்தாரணோ, துஷ்க்ருதிஹா, புண்யோ, துஸ்ஸ்வப்நநாஶந: |

வீரஹா, ரக்ஷண: ஸந்தோ, ஜீவந: பர்யவஸ்தித: |

அநந்தரூப:”    சு. 97-100

 

 

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஜபமும் ஆஸ்திகர்களின் அநுபவமும்

”‘ஸகல காரிய ஸித்தி தரும் ஸ்ரீ விஷ்ணு

ஸஹஸ்ர நாம ஸ்தோத்ரம்” என்னும் LIFCO புத்தகத்திலிருந்து.

 

 • ஊரில் கொடிய நோய் நீங்கியது – ஓரு மண்டலம் ராத்ரியும் பகலுமாக பெருமாள் சன்னிதியில் அகண்டம் விளக்கு ஏற்றிவைத்து, பிரதிதினமும் மாலை 6 மணிக்கு ஸந்தியாவந்தனம் முடிந்ததும் எல்லோரும் கோவிலிலிருந்து ஸஹஸ்ரநாமம் ஆரம்பித்து சொல்லிக் கொண்டு அக்ரஹார வீதியில் நேரே தெருக்கோடி வரையிலும் வந்து மறுபடி திரும்பி கோயிலிலேயே கொண்டு ஸஹஸ்ரநாமத்தை முடிக்கவேண்டியது. இப்படிச் செய்துவருகையில் 25 நாளிலேயே கொடிய வியாதி பயம் நிவ்ருத்தி ஆகிவிட்டது

 

 • வைத்தியர் கைவிட்ட ஜுரம் நீங்கியது: அரை மண்டலம் சொன்னபின், வைத்தியர்களும் ஒன்றும் செய்ய இயலாது என்று கைவிட்ட ஜுரம் ஆச்சரியமாக விலகியது, ஆரோக்கியம் திரும்பியது பேரருளாளன் அருளால்.

 

 • ஆசார்யாளின் அற்புத முடிவு: முடிகொண்டானில் தங்கியிருந்தபோது, ஆசார்யாளுக்கு அளவிடமுடியாத ஜுரம் ஏற்பட்டு அங்குவந்த வைத்யர்களெல்லாம் கலங்கிப்போக, ஆசார்யாள் திடீரென எழுந்து ஸ்நானம் செய்து பூஜைக்கு வந்து அமர்ந்து, அங்குள்ள பக்தர்களை ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை ஜபிக்கச் செய்தார்கள். உடனே அவருக்கு குணமாயிற்று.

 

 • ஸகல ரோக நிவாரணம் செய்யும்: நித்யாக்னிஹோத்ரியான எனது பிதா நித்யகர்மாக்களைப் போல் ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமத்தை ஜபித்து வந்தனர். அவர்களுடைய வாழ் நாளில் தலைவலி, ஜுரம், வயிற்றுவலி முதலிய வ்யாதிகளே அற்றவர்களாய் இருந்ததோடு, சிறிது விபூதியை அவர்களது கையால் கொடுத்தால் வியாதிகள் யாவும் நீங்கிவிடும்.

 

 • சகல வியாதிகளும் நீங்கின: வியாதியின் தன்மைக்கேற்ப, ஒரு மண்டலமோ அல்லது அரை அல்லது கால் மண்டலமோ கும்பம் வைது ரித்விக்குகளை வைத்து ஜபித்து அந்த தீர்த்தத்தால் வ்யாதியஸ்தர்களை ப்ரோக்ஷிப்பதும், சிறிய அளவு ஜலத்தை உட்கொள்ளச் செய்வதும் வழக்கம். இதைச் செய்யும்போது மற்ற மருந்துகளையும் பத்யங்களையும் நிறுத்தக் கூடாது. ஔஷதம் ஜாஹ்நவீ தோயம் வைத்யோ நாராயணோ ஹரி:” என்கின்ற ரீதியில், டாக்டர்களின் முயற்சியும் மருந்துகளும் வீர்யமும் எல்லாம் எம்பெருமானது அனுப்ரவேசத்தாலல்லது பயனளிக்காது என்ற நம்பிக்கையுடன் அநுஷ்டிக்க வேண்டும்.

 

 • ஸ்ரீ ரமண மகரிஷியின் ஆக்ஞை: இரண்டாம் மஹாயுத்தத்தின் போது சென்னையை காலிசெய்து எல்லோரும் சென்றபோது ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்தை 8 பேர் சேர்ந்து பாராயணம் செய்தால் ஆபத்து நேராதென்று கட்டளையிட்டார்.

 

 • பேராபத்துக்கள் விலகின: வடதேசத்தில் இதைத் தினந்தோறும் ஐந்து தடவை பாராயணம் செய்தால் அபம்ருத்யு, அகால மரணம், கண்டதோஷம் முதலியன நீங்கும் என்று பெரும்புலவர்கள் பாராயணம் செய்வது வழக்கம். நானும் இந்த முறையில் சென்னையில் பல இடங்களில் நண்பர்களுக்காக ஆயுராரோக்யத்திற்கும், அபம்ருத்யு தோஷம் விலகுவதற்கும் பாராயணம் செய்திருக்கிறேன்.  நிறைய பலன்கள் கிடைத்தன. ஆகவே “சுக்லாம்பரதரம்” ஸ்லோகம் முதல் “ஆர்த்தாவிஷண்ணா”  ஸ்லோகம் வரை, நாகுக்கு ஐந்து தடவை ஒரு மண்டலமோ அரை மண்டலமோ பாராயணம் செய்தால் பேராபத்துக்கள் விலகும் என்பதில் அணுவளவும் ஐயமில்லை.

 

 • டைபாயிட் ஜுரம் நீங்கியது: ஏழு பிராமணர்கள் இருவேளைகளிலும் அவரது வீட்டில் ஸஹஸ்ரநாமப் பாராயணம் செய்ததில் மரணப் படுக்கையிலிருந்து விடுபட்டுள்ளார்.

 

 • வேலை தேடித் தந்தது: 1930இல் படித்து முடித்து வேலையில்லாமல் திண்டாடி, ஸ்ரீரங்கத்தில் ஒரு சுவாமி “சந்த்ர புஷ்கரணியில் ஸாயம் ஸந்த்யாவந்தனம் செய்துவிட்டு, ஸ்ரீரங்கநாதன் சன்னிதியில் ஒரு மண்டலம் ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்தால் வேலை கிடைக்கும்” என்று சொல்லக்கேட்டு அவ்விதம் செய்ய ஆரம்பித்த 10 நாளிலேயே வேலை என்னைத் தேடி வந்தது. திருப்பதியிலேயே வேலை.திவ்யதேசத்திலேயே வேலையைக் கொடுத்தான் ரங்கன். இன்னமும் அம்மண்டல பாராயணம் பூர்த்தியடையவில்லை. ரிடையரானதும் மறுபடி வேலை தேடித்திரிய, பழையருசியில் மறுபடியும் ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்யத்தொடங்கி ஏழாம் நாளில் மறுபடியும் வேலை. “பழைய பாராயணத்தையே இவன் முடிக்கவில்லை. இவனுக்குப் பயனளிக்கக்கூடாது” என்று ஸ்ரீரங்கன் (ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாம தேவதை) திருவுள்ளம் சீறவில்லை.

 “நேஹாபிக்ரம நாஶோஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே

ஸ்வல்ப மப்யஸ்த ர்மஸ்ய த்ராயதே மஹதோ யாத்”

என்பதை ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாம விஷயத்தில் நான் நன்கு உணர்ந்தேன்.

 

 • வீண் அபவாதம் நீங்கியது: கோவிலில் பணிபுரிந்து வந்தபோது, வேறொருவர் 12 ஆண்டுகளாக மடப்பள்ளியில் பணிபுரிந்து வருபவர் பேரில் நம்பிக்கை இல்லாத படியால், ஸன்னிதி சாவிகள் அனைதும் அடியேனிடம் அளிக்கப்பட்டு, அதனால் பொறாமை கொண்ட அவர் உள் மடப்பள்ளி சாவியை உபயோகித்து 4 ஸன்னிதிகளிலும் சில உயர்பொருள்களை அபகரித்ததன்றி, “வேறு யார் எடுத்திருக்க முடியும் ? பூட்டியது பூட்டியபடியே இருக்கிறது. இவன்தான் கொள்ளையடித்து விட்டான்” என்று அபவாதம் சொல்லிவந்தார். ஆயினும் ஒரு நாள் விசாரணையின்போது அதுசமயம் பகவான் பட்டர்மேல் ஆவேசித்து “உள் மடைப் பள்ளி சாவியால் திருடியவன் இவனே” என்று எதிரியின் கன்னத்தில் அறைந்தார். பிறகு பரிசோதித்ததில் உண்மை தெளிவாகி என்மேல் இருந்த அபவாதம் நீங்கியது. இதற்குக் காரணம், இந்த அபவாதம் ஏற்பட்டதும், நான் அஷ்டதிக்குகளையும் நோக்கி தினமும் 8 தடவை ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்துவந்தேன். அபவாதம் விலகியது பகவான் கருணையே. இது உண்மை.

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.