விநாயகர் அகவல்

சீதக் களபச் செந்தாமரைப்பூம்

பாதச்சிலம்பு பல இசை பாட

பொன் அரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்ன மருங்கில் வளர்ந்த்தழகெறிப்ப

 

பேழை வயிறும் பெரும் பாரக் கோடும்

வேழமுகமும் விளங்கு சிந்தூரமும்

அஞ்சுகரமும் அங்குச பாசமும்

நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்

 

நான்ற வாயும் நாலிறு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டுசெவியும் இலங்குபொன் முடியும்

திரண்ட முப்புரி நூல் திகழொளி மார்பும்

 

சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ் ஞான

அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே

முப்பழம் நுகரும் மூஷிக வாஹன

இப்பொழுது என்னை ஆட்கொள்ளவேண்டி

 

தாயாயெனக்குத் தானெழுந்தருளி

மாயாப்பிறவி மயக்கம் அறுத்து

திருந்திய முதல் ஐந்தெழுத்துந் தெளிவாய்

பொருந்தவே வந்து உளம்தனில் புகுந்து

 

குருவடிவாகிக் குவலயந்தன்னில்

திருவடி வைத்துத் திறமிது பொருளென

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளி

கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே

 

உவட்டா உபதேசம் புகட்டி என்செவியில்

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருணயின் இனிதெனக் கருளி

 

கருவிகள் ஒடுக்கும் கருத்தறிவித்து

இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி

மலமொரு மூன்றின் மயக்கமறுத்தே

 

ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்

ஐம்புலக்கதவை அடைப்பதுங்காட்டி

ஆறாதாரத்து அங்குச நிலையும்

பேரா நிறுத்தி பேச்சுரை அறுத்தே

 

இடை பிங்கலையின் எழுத்தறிவித்து

கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி

மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவிலுணர்த்தி

 

குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலாதாரத்து மூண்டெழு கனலைக்

காலாலெழுப்புங் கருத்தறிவித்து

 

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையுங் கூறி

இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடற்சக்கரத்தின் உறுப்பையுங் காட்டி

 

சண்முக தூலமும் சதுர்முக சூக்ஷ்மமும்

எண் முகமாக இனிதெனக் கருளி

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி

 

கருத்தினிற் கபால வாயில் காட்டி

இருத்திமுத்தி இனிதெனக் கருளி

என்னை அறிவித்து எனக்கருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்து

 

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து

இருள்வெளி இரண்டுக்கும் என்றிடமென்ன

அருள்தரும் ஆனந்தத்து அழுத்திஎன் செவியில்

 

எல்லையில்லா ஆனந்தம் அளித்து

அல்லல் களைந்து அருள் வழிகாட்டி

சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டி

சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி

 

அணுவிற்கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்தி

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

 

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்து

தத்துவ நிலையை தந்தெனை யாண்ட

வித்தக வினாயக விரைகழல் சரணே

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.