சத்ரு சங்கார வேற்பதிகம்

அருணகிரி நாதர் வணக்கம்

அந்தாதி இல்லா இறைவனுக்கு அந்தாதிஎன் றுரைத்தும்

நந்தா வகுப்பலங் காரம் அவற்கே நனி புனைந்தும்

முந்தா தரவில் அவன்புகழ் பூதியும் முற்றும் சொன்ன

என்தாய் அருணகிரி நாத என்னை நீ ஏன்றருளே (– பாம்பன் அடிகள்)

 

அருவமொரு நான்காகி உருவமொரு நான்காகி அறையிரண்டும்

மருவியுள உருவருவ மொன்றாகி முத்திறமும் வழுத்தவொண்ணாப்

பெருவெளிக்கு மப்பாலா யுள்ளபொருள் ஈதெனவே பெரிதும் சேயோன்

ஒருவனையே புகழ்ந்த அருள் அருணகிரி சேவடிப்போது உளத்துள் வைப்பாம்

(திருமுருக கிருபானந்தவாரியார்)

 

விருப்புடன் உபய சரணமென் மலரை வேண்டுவார் வேண்டியதளிக்கும்

பொருப்புகள் தோறு நின்றருள் ஒருவன் புகழினை அகநெகப் புகன்று

கருப்புகுதாத கதிதனைக் காட்டுங் கலையுணர் புலவர்கள் திலகம்

திருப்புகழ் அருண கிரியெம தடிகள் திருவடி குருவடி வாமே

(திருமுருக கிருபானந்தவாரியார்)

 

காப்பு:

 

சண்முகக் கடவுள் போற்றி சரவணத் துதித்தோய் போற்றி

கண்மணி முருகா போற்றி கார்த்திகை பாலா போற்றி

தண்மலர்க் கடப்ப மாலை தாங்கிய தோளா போற்றி

விண்மதி வதன வள்ளி வேலவா போற்றி போற்றி

 

நூல்:

 

அப்பமுட னதிரசம் பொரிகடலை துவரைவடை அமுதுசெய் யிபமுகவனும்

ஆதிகேசவ னிலட்சுமி திங்கள் தினகரன் அயிராவதம் வாழ்கவே

முப்பத்து முக்கோடி வானவர்க ளிடர்தீர முழுதுபொன் னுலகம் வாழ்க

மூவரொடு கருட கந்தருவர் கிம்புருடரும் முதுமறைக் கிழவர் வாழ்க

செப்பரிய இந்திரன் தேவியயி ராணிதன் திருமங்கலம் வாழ்கவே

சித்த வித்யாதரர் கின்னரர்கள் கணமான தேவதைகள் முழுதும் வாழ்க

சப்தகலை விந்துக்கு மாதியா மதிரூப சரஹணனை நம்பினவேர்மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தியெதி ராடிவிடுஞ் சத்ரு சங்கார வேலே           1

 

சித்திசுந் தரிகௌரி யம்பிகை க்ருபாநிதி சிதம்பரி சுதந்தரி பர

சிற்பரி சுமங்கலி நிதம்பரி விடம்பரி சிலாசுத விலாச விமலி

கொத்துதிரி சூலிதிரி கோணத்தி ஷட்கோண குமரிகங் காளி ருத்ரி

குலிசவோங் காரிரீம் காரியாங் காரிவூங் காரிரீங் காரி யம்பா

முத்திகாந் தாமணி முக்குண துரந்தரி மூவர்க்கு முதல்வி ஞான

முதுமுறைக் கலைவாணி யற்புத புராதனி மூவுலகு மான சோதி

சத்திசங் கரிநீலி கமலிபார் வதிதரும் சரஹணனை நம்பினவர்மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தியெதி ராடிவிடுஞ் சத்ரு சங்கார வேலே           2

 

மூரியுள முப்பத்து முக்கோடி தேவரும் முனிவரொடு மசுரர் கூடி

முழுமந்த்ர கிரிதன்னை மத்தாகவே செய்து முற்கணத் தமுதுபெறவே

கோரமுள வாசுகியி னாயிரம் பகுவாயில் கொப்பளித் திடுவிடங்கள்

கோளகையு மண்டலங்க ளியாவையு மெரித்திடுங் கொடிய அரவினைப் பிடித்து

வீரமுடன் வாயினாற் குத்தியுதி ரம்பரவ இருதாளிலே மிதித்து

விரித்துக் கொழுஞ்சிற கடித்தே யெடுத்துதறும் விதமான தோகை மயிலில்

சாரியாய் தினமேறி விளையாடி வருமுருக சரஹணனை நம்பினவர்மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தியெதி ராடிவிடுஞ் சத்ரு சங்கார வேலே           3

 

உக்ரமுள தாருகன் சிங்கமா சூரனும் உன்னுதற் கரிய சூரன்

உத்திகொளு மக்நிமுகன் பானுகோபன் முதல் உத்தண்ட அசுரர் முடிகள்

நெக்குவிட கரிபுரவி தேர்கள்வெள் ளங்கோடி நெடிய பாசங்கள் கோடி

நிறையிலா வஸ்திரம் வெகுகோடிகள் குருதி நீரிற் சுழன் றுலவவே

தொக்குதொகு திதிதிதிமி டுண்டுடுடு டகுகுடிகு துந்துமி தகுகுதி திகுதை

தோத்திமி டங்குகுகு டிங்குகுகு சங்குகென தொந்தக் கவந்தமாட

சக்ரமொடு சத்திவிடு தணிகை சென்னியில் வாழ் சரஹணனை நம்பினவர்மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தியெதி ராடிவிடுஞ் சத்ரு சங்கார வேலே           4

 

அந்தியிற் பேயுச்சி யுறுமுனிக் காட்டேரி அடங்காத பகலிரிசியும்

அகோர கண்டங்கோர கண்டசூன்யம் பில்லி அஷ்டமோஹினி பூதமும்

சிந்தியான வசுகுட்டி சாத்தி வேதாளமுஞ் சாகினி யிடாகினிகளும்

சாமுண்டி பகவதி ரத்தகாட் டேரிமுதல் சஞ்சரித் திடுமுனிகளும்

சிந்தைநொந் தலறிதிரு வெண்ணீறு காணவே தீயிலிடு மெழுகு போல

தேகமெல் லாங்கருகி நீறாகவே நின்று சென்னியிரு தணிகை மலையில்

சந்ததங் கலியாண சாயுச்ய பதமருளுஞ் சரஹணனை நம்பினவர்மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தியெதி ராடிவிடுஞ் சத்ரு சங்கார வேலே           5

 

கண்டவிட பித்தமும் வெப்புதலை வலியிருமல் காமாலை சூலை குஷ்டம்

கண்டமா லைத்தொடை வாழைவாய்ப் புற்றினொடு கடினமாம் பெருவியாதி

அண்டொணா தச்சுரஞ் சீதவாதச்சுரம் ஆறாத பிளவை குன்மம்

அடங்காத விருபஃது மேகமுட னாலுகத்தி லெண்ணாயிரம் பேர்

கொண்டதொரு நோய்களும் வேலென் றுரைத்திட கோவென்ன வோலமிட்டு

குலவு தினகரன்முன் மஞ்சுபோல் நீங்கிடுங் குருபரன் நீறணிந்து

சண்டமாருத கால வுத்தண்ட கெம்பீர சரஹணனை நம்பினவர்மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தியெதி ராடிவிடுஞ் சத்ரு சங்கார வேலே           6

 

மகமேரு வுதயகிரி யஸ்தகிரி யுஞ்சக்ர வாளகிரி நிடதவிந்தம்

மாவுக்ர தரநர சிம்மகிரி யத்திகிரி மலைகளொடு மதன சுமவா

ஜெகமெடுத் திடுபுட்ப தந்தமயி ராவதம் சீர்புண்ட ரீககுமுதம்

செப்புசா ருவபூம மஞ்சினம் சுப்ரதீப வாமன மாதிவா

சுகிமகா பதுமனா னந்தகார்க் கோடகன் சொற்சங்க பாலகுளிகன்

தூயதக் கன்பதும சேடனோ டரவெலாம் துடித்துப் பதைத்ததிரவே

தகதகென நடனமிடு மயிலேறி விளையாடுஞ் சரஹணனை நம்பினவர்மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தியெதி ராடிவிடுஞ் சத்ரு சங்கார வேலே           7

 

திங்கள்பிர மாதியரு மிந்திராதி தேவருந் தினகரரு முனிவரோடும்

சித்திரா புத்திரர் மௌளி யகலாம லிருபதஞ் சேவித்து நின்று தொழவும்

மங்கைதிரு வாணியு மயிராணி யொடுசத்த மாதரிருதாள் பணியவும்

மகதேவர் செவிகூற பிரணவ முரைத்திட மலர்ந்த செவ் வாய்களாறும்

கொங்கை களபம் புனுகுசவ்வாது மணிவள்ளி குமரிதெய் வானையுடனே

கோதண்ட பாணியு நான்முகனு மேபுகழ் குலவுதிருத்தணிகை மலைவாழ்

சங்குசக்ர மணியும் பங்கயக்கர குமர சரஹணனை நம்பினவர்மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தியெதி ராடிவிடுஞ் சத்ரு சங்கார வேலே           8

 

மண்டலம் பதினாலு லோகமு மசைந்திட வாரிதியொ ரேழும் வறள

வலிய அசுரர் முடிகள் பொடிபடக் கிரவுஞ்ச மாரியெழ தூளியாகக்

கொண்டனிற மெனுமசுர ரண்டங்க ளெங்குமே கூட்டமிட்டேக அன்னோர்

குடல்கை காலுடன் மூளைதலைகள் வெவ்வேறாகக் குத்திப்பிளந் தெடுத்து

அண்டர் பணி கதிர்காமம் பழநி சுப்பிரமணியம் ஆவினன் குடியேரகம்

அருணாசலம் கைலை தணிகைமலை மீதிலுறை அறுமுகப் பரம குருவாம்

சண்டமாருத கால சம்மார வதிதீர சரஹணனை நம்பினவர்மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தியெதி ராடிவிடுஞ் சத்ரு சங்கார வேலே           9

 

மச்சங் குதித்துநவ மணிதழுவ வந்தநதி வையாபுரிப் பொய்கையும்

மதியமுத் தஞ்செயும் பொற்கோபுரத் தொளியும் வான்மேவு கோயிலழகும்

உச்சிதம தானதிரு வாவினன் குடியில்வாழ் உம்பரிட முடிநாயக

உக்ரமயி லேறிவரு முருக சரஹணபவ ஓங்கார சிற்சொரூப வேல்

அச்சுத க்ருபாகர னானைமுறை செய்யவே ஆழியைவிடுத் தானையை

அன்புட னிரட்சித்த திருமால் முகுந்தனெ னும் அரிகிருஷ்ண ராமன் மருகன்

சச்சிதா னந்தபர மானந்த சுரர்தந்த சரஹணனை நம்பினவர்மேல்

தர்க்கமிட நாடினரைக் குத்தியெதி ராடிவிடுஞ் சத்ரு சங்கார வேலே           10

 

***

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.