ஸந்த்யாவந்தன க்ரமம்

ஸந்த்யாவந்தனம்

ஸ்ரீவத்ஸ வெ. ஸோமதேவ சர்மா எழுதி சென்னை மேற்கு மாம்பலம் ஸ்ரீ சுரபி ஜகத்குரு பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட “ஸ்ரீ ஸந்த்யாவந்தனம்” நூலிலிருந்து சில விளக்கங்கள்:

ஸந்த்யா எனும் தேவியைப் பூஜிப்பது ஸந்த்யாவந்தனம் எனப்படும். மும்மூர்த்திகளும் இதைச் செய்கின்றனர். எனவே, ஸரஸ்வதீ, லக்ஷ்மீ, பார்வதீ என்ற சக்திகளை விட, பிரம்மா, விஷ்ணு, ருத்ரர்களை விட, மேலான சிறந்த துரீய சக்தியாம் ஸந்த்யை எனப்படுவது.

ஸந்த்யாவந்தனத்தின் அங்கங்கள்:

அர்க்யப்ரதானம், ஸ்ந்த்யோபாஸனம் (அஸாவாதித்யோ..), காயத்ரீ ஜபம், உபஸ்தானம் என்ற நான்கும் மிக மிக முக்கியமான அங்கங்களாம். மற்றவை இவைகளுக்கு அங்கங்களாம்.

பூர்வ அங்கம்: ஆசமநம், ஸங்கல்பம், மார்ஜநம் (ஆபோஹிஷ்டா..), ப்ராசநம் (ஸூர்யஶ்ச, ஆப: புனந்து, அக்நிஶ்ச), மறுமுறை ப்ரோக்ஷணம் (ததிக்ராவண்ண:), முகர்ந்துவிடல் (த்ருபதாதிவ), ஜப ஸங்கல்பம், ப்ராணாயாமம்.

உத்தர அங்கம்: நவக்ரஹாதி தர்ப்பணம், ப்ராணாயாமம், திக்வந்தனம் முதலியவை.

பாஹ்ய அங்கம் : ஸ்நாநம், கச்சம் அணிதல், புண்ட்ரம் தரித்தல், சுத்தமான யஜ்ஞோபவீதம், சிகை

ஸந்த்யாவந்தன முறை பலதரப்பட்டது:

பராசரரது புத்திரரான வேத வ்யாஸர் வேதங்களை மூன்று பகுதிகளாகப் பிரித்தார். மூன்று வேதத்திலும், சிற்சில மாறுதல்களுடன், ஸந்த்யாவந்தன கர்மா உண்டு. காயத்ரீ மந்த்ரம் எல்லோருக்கும் ஒன்றேயாம்.

ரிக்வேதம்:  வேத வ்யாஸர் ரிக்வேதத்தை பைலர் என்ற சிஷ்யன் மூலமாக ப்ரகாசப்படுத்தினார். அந்த வேதம் 8 பிரிவாக பிரிக்கப்பட்ட்து (அஷ்டகங்கள்). ஐதரேயமும். கௌஷீதகி ப்ராம்மணமும் இதைச் சார்ந்ததாகும். ரிக்வேதிகளுக்கு ஆச்வலாயனர், ஸாங்க்யாயாயனர் என்ற மகரிஷிகள் முறையே ஶ்ரௌத ஸூத்ரம், க்ருஹ்யஸூத்ரம் என்ற கல்பஸூத்ரங்கள் செய்துள்ளனர். ஶ்ரௌத ஸூத்ரம் மூன்று அக்னிகளால் செய்யப்படும் யாகத்தைப் பற்றியும், க்ருஹ்யஸூத்ரம் நாற்பது ஸம்ஸ்காரங்களையும், ஸந்த்யாவந்தனம், ஶ்ராத்தம் முதலியவைகளைப் பற்றியும் கூறுவதாகும்.

யஜுர்வேதம்: வேத வ்யாஸர் யஜுர்வேதத்தை வைசம்பாயநர் முலமாக ப்ரசுரமாக்கினார். யஜுர்வேதம் சுக்லயஜுஸ், கிருஷ்ணயஜுஸ் என இரண்டாகப் பிரிந்தது. சதபதப்ராம்மணம், மைத்ராயணீயம் முதலியவை இதைச் சார்ந்தவை.  ஸுக்லயஜுஸ்ஸுக்கு காத்யாநர், பாஸ்கரர் க்ருஹ்யஸூத்ரங்களை எழுதியுள்ளனர். கிருஷ்ணயஜுஸ்ஸுக்கு ஆபஸ்தம்பர், போதாயனர், வைகாநசர், பாரத்வாஜர், வராஹர், ஸத்யாஷ்டர் முதலிய பலர் க்ருஹ்யசூத்ரங்கள் எழுதியுள்ளனர். இவைகளில் ஒன்றுக்கொன்று மற்றக் கர்மாக்களில் மாறுதல் உண்டு என்றாலும் ஸந்தியாவந்தனத்தில் மாறுதலில்லை.

ஸாமவேதம்: வேத வ்யாஸர் ஸாம வேதத்தை ஜைமிநி மூலமாக பிரசுரம் செய்தார். சாந்தோக்யம், தண்டியம், தலவகாரம் என்பவை ஸாமவேதத்தைச் சார்ந்தவை. இதற்குக் கல்பஸூத்ரம் எழுதியவர் த்ராஹ்யாயணர் கோபிலர்.

ஒரே வேதமாயிருந்தாலும், ஸந்த்யாவந்தனத்தில் ஆந்த்ரர், மத்வர், வைஷ்ணவர், ஸ்மார்த்தர் ஆகியோருக்குள் சிற்சிறு பேதம் உண்டு.

ஆசாரம்:

 • அதிகாலையில் எழுந்து குளிர்ந்த ஜலத்தில் (உடல் சுகமில்லையேல் வென்னீரில்) ஸ்நாநம் செய்யவேண்டும். அல்லது பழைய வஸ்த்ரத்தைக் களைந்து, ஈரத்துணியால் உடலைத் துடைத்துக்கொண்டு, மடியான வஸ்த்ரம், பட்டு, கம்பளி இவற்றில் ஏதாவதொன்றை இடுத்திக்கொண்டு, கால் அலம்பிக்கொள்ள வேண்டும்.
 • மலசுத்தி ஆனபிறகே ஸ்நாநம் செய்யவேண்டும். ஸ்நாநம் செய்தபிறகே ஸந்த்யை செய்வதென காலதாமதம் செய்யலாகாது.
 • விவாஹமானவை பஞ்சகச்சம் அணியாமல் ஸந்த்யை செய்தால் அது பயன்தராது.
 • சிகை இல்லாமல் இருந்தாலும் பயனைத் தராது. சிகையில்லாதவர், 3 தர்ப்பை நுனியைக் காதில் வைத்துக்கொண்டு கர்மாவைச் செய்யவேண்டும்.
 • யக்ஞோபவீதம் என்னும் பூணூல் சுத்தமாக இருக்கவேண்டும். அதில் சாவியையோ, தாயத்து அல்லது இஷ்டமான உருவமுள்ள லோகங்களையோ தரிக்கக் கூடாது. அப்படித் தரித்தாலும், ஜலமலவிஸர்ஜன காலத்தில் மாலையாக இல்லாமல் யக்ஞோபவீதமாகவே தரித்தாலும் கர்மா பயனற்றதாய்ப் போய்விடும்.

ஆசமனம்:

வேதத்தில் யாகத்தில் கூறப்பட்டது ஶ்ரௌத ஆசமனம். ஸ்ரௌத ஆசமனம், ஸ்ம்ருதி ஆசமனம், புராண ஆசமனம் என வகைகள் உண்டு.

 • தேவதீர்த்தம் எனப்படுவது கைவிரல்களின் நுனியால் ஜலம் விடுவது.
 • பித்ருதீர்த்தம் கட்டைவிரல் பக்கமாக ஜலம் விடுவது
 • ப்ரஹ்மதீர்த்தம் கையின் அடிப்புறத்தால் ஜலம் விடுவது
 • ரிஷிதீர்த்தம் சுண்டுவிரல் பக்கமாக ஜலம் விடுவது

ஓவ்வொரு கர்மாவின் ஆரம்பத்திலும் முடிவிலும் ஆசமனம் அவசியம் செய்யவேண்டும்.

 • ஜலத்தில் நின்றுகொண்டு செய்தால் முழங்கால் மறையும் அளவு ஜலத்தில் நிற்கவேண்டும். இடது கையால் ஜலத்தைத் தொடவேண்டும்.
 • குளம், நதிகளில் கரையில் உட்கார்ந்து செய்வதானால், வலதுகாலைக் கரையில் வைத்து, இடதுகாலை ஜலத்தில் வைத்துக்கொண்டு, இடது கையால் ஜலத்தைத் தொட்டுக்கொண்டே ஆசமனம் செய்யவேண்டும்.
 • வீட்டில் செய்வதானால், இருகால்களையும் குத்திட்டுக் கொண்டு உட்கார்ந்து இரு முழங்கைகளையும் அதற்குள் வைத்துக்கொண்டு ஆசமனம் செய்யவேண்டும்.
 • சுண்டுவிரலையும் மோதிரவிரலையும் நீட்டிவிட்டு மற்ற மூன்று விரல்களை சற்று வளைத்தால் உள்லங்கையில் ஏற்படும் குழியில், உளுந்து முழுகும் அளவு ஜலத்தை ஏந்தி மந்திரம் சொல்லி, (பல்லில் படாமல், உறிஞ்சாமல்) குடிக்கவேண்டும். முதலில் அருந்தியது உட்சென்ற பிறகே மற்றும் இருமுறை தனித் தனியே அருந்தவேண்டும்.
 • ஆசமனம் செய்தபிறகு இருமுறை உதட்டைக் கையால் துடைத்து ஒவ்வொரு முறையும் கையலம்ப வேண்டும். ப்ரஹ்மயக்ஞம் பற்றிக் கூறும் வேதம் “ மூன்று முறை ஆசமனம் செய்து இருமுறை துடை” என போதிக்கிறது.
 • வைதிக ஸத்கர்மாக்களை ஆரம்பிக்கும்போது ஆசமனம் செய்வதால் அது இந்திரியங்களைச் சுத்தமாக்கி, சுறுசுறுப்புடன் அதைச் செய்ய யோக்யதையை உண்டுபண்ணுகிறது.
 • சிறிது சிறிதாக உட்கொள்ளும் சீதளமான ஜலம் கபத்தை யகற்றி நாடிகளுக்கு ஒரு சுறுசுறுப்பைத் தருகிறது என்று வைத்தியர்கள் கூறுவர்.
 • ஆசமனம் செய்யும் ஜலம் உஷ்ணமாகவோ, நுரையுடனோ, உப்பு அல்லது வேறு எந்த ரஸம் கலந்ததாகவோ இருக்கக்கூடாது.
 • ஸமுத்ரஜலத்தில் ஆசமனம் செய்யக்கூடாது. தர்ப்பணம் செய்யலாம்.

ப்ராணாயாமம்:

நம் ஸரீரத்தில் ஸஞ்சரிக்கும் வாயுவான ப்ராணனை அடக்குவது ப்ராணாயாமம். ப்ராணாயாமம் செய்யசெய்ய நம் பாபம் விலகுகிறது. தர்ம ஶாஸ்த்ரம் “ப்ராணாயாமத்தை ப்ரதி தினம் 12 (அல்லது 16) முறை செய்பவர் ஸகல பாபங்களும் அகன்று சுத்தமாவர்” என்று கூறுகிறது. கல்பஸூத்ரம் ‘ ப்ராயச்சித்தம் ப்ராணாயாம” என்று இதை ஒரு ப்ராயச்சித்தமாக வர்ணிக்கிறது. இது நம் நாடிகளில் உள்ள தோஷங்களை நீக்குகிறது.

ஸங்கல்பத்தில் 1, அர்க்யஸங்கல்பத்தில் 1, ஆதித்ய உபாஸனையில் 1, ஜபஸங்கல்பத்தில் 1, காயத்ரிக்கு முன்பு 10, உபஸ்தாந ஆரம்பத்தில் 1, ஆக 15 ப்ராணாயாமம், ஒவ்வொரு வேளையிலும் விதிக்கப்பட்டுள்ளது.

அதற்குரிய மந்த்ரத்துடன் மூச்சை அடக்குவது ஸகர்ப்ப ப்ராணாயாமம். இது கர்ம அங்கமாகச் செய்வது;

ஜபம், தியானம் இல்லாமல் மூச்சை மாத்ரம் அடக்குவது அகர்ப்ப ப்ராணாயாமம். இது மனத்தை அடக்கச் செய்வது.

கந்தமூலம் என்ற மூலாதாரத்திலிருந்து கிளம்பி உடலில் சிறிதும் பெரிதுமான 72000 நாடிகள் இருக்கின்றன. வீணாதண்டம் எனப்படும் முதுகுத் தண்டின் அடியிலிருந்து கிளம்பி சிரஸ்ஸுக்குப் போகிற ஸுஷும்னா நாடியின் இடது பக்கம் செல்வது இடா நாடி, வலது பக்கம் செல்வது பிங்களா நாடி.  இவை இரண்டும் கந்தமூலத்திலிருந்து புருவம் வரை நேராக வருகின்றன. அங்கிருந்து இடா இடது நாஸிகையையும், பிங்களா வலது நாஸிகையையும் வந்தடைகின்றன.

 • இடது மூக்கு வழியாக மூச்சை இழுத்து பூரகம் செய்து, ஸுஷும்னையில் நிறுத்தி கும்பகம் செய்து, வலது மூக்கு வழியாக மூச்சை விட்டு ரேசக ப்ராணாயாமம் செய்யவேண்டும். இம்மூன்றும் சேர்ந்தே ஒரு ப்ராணாயாமம் ஆகும். இப்படிச்செய்ய இயலாதவர் இரு நாஸிகளையும் அடைத்து ப்ராணாயாம மந்திரத்தை ஜபித்துக் கும்பக ப்ராணாயாமமாவது செய்ய வேண்டும்.
 • பூரகத்திலும் ரேசகத்திலும் மெதுவாக சப்தம் கேளாமல் வாயுவை இழுத்து விடவேண்டும்.
 • பூரகம் செய்யும்போது நாபியின் நடுவில் ப்ரஹ்மாவையும், கும்பகத்தில் ஹ்ருதயத்தில் விஷ்ணுவையும், ரேசகத்தில் நெற்றியில் சிவனையும் த்யானம் செய்யவேண்டும்.
 • ப்ராணாயாமம் செய்யும்போது , ஆள்காட்டிவிரலையும், நடுவிரலையும் மடக்கிக்கொண்டு, கட்டைவிரலால் வலது நாஸியையும், மோதிரவிரல், சுண்டுவிரல்களால் இடது நாஸியையும் பிடித்துக்கொண்டு செய்ய வேண்டும். ஓவ்வொரு ப்ராணாயாமம் முடிந்தபின் வலது காதைத் தொடவேண்டும். வலது காதில் கங்கை உள்ளதால், கங்காஜலத்தால் கையைச் சுத்தமாக்கிக் கொள்கிறோம்.
 • ப்ராணாயாமம் செய்யும்போது கூறும் மந்திரத்தால்:
 1. ப்ரணவத்தால், ப்ரஹ்மனையும்,
 2. ஏழு வ்யாஹ்ருதிகளால், பரமனால் படைக்கப்பட்டு பரமனாகவே உள்ள ஏழு லோகங்களையும்,
 3. காயத்ரியால், நமது புத்திக்குச் சக்தியளிக்கும் பரமாத்மாவையும்,
 4. காயத்ரீசிரஸ் மூலமாக, ஜ்யோதிஸ்ஸாகவும், ரஸமாகவும், முவ்வுலகமாயுள்ள பரப்ரஹ்மத்தையும்

த்யானம் செய்கிறோம். இச்சிறந்த பரமாத்ம ஸ்வரூப த்யானத்தால் ஸகல பாபங்களும் அகலும்.

மார்ஜனம்: ஆபோஹிஷ்டா என்ற மந்திரத்தால் ஜலதேவதைகளைப் ப்ரார்த்தித்துத் தலைமீது ஜலத்தைப் ப்ரோக்ஷித்துக் கொள்ளவேண்டும். 9 வாக்யமுள்ள இந்த மந்திரத்தில், முதல் எட்டு வாக்யத்திற்கும் ஒவ்வொரு முறை ஜலத்தைத் தலையிலும், 9ஆவது வாக்யமான ‘யஸ்யக்ஷயாய ஜின்வத’ என்பதைக்கூறி இரு கால்களிலும் ப்ரோக்ஷித்துக் கொள்ளவேண்டும்.

ஜலத்தையே முதலில் பரமாத்மா ஸ்ருஷ்டித்தார். அது ப்ராணனை வ்ருத்தி செய்யும். ஜலம் ஸர்வ தேவ வடிவானது, ப்ராண ரூபமானது, மருந்தானது என்பன வேத வசனங்கள். ஜலத்தில் வித்யுத் சக்தி இருக்கின்றது. அது மந்த்ரபலத்தால் பன்மடங்கு அதிகமாகிறது. ஜலத்தில் மந்த்ரத்தை நிறுத்தி பாக்யம் முடிந்தவுடன் ப்ரோக்ஷித்துக் கொண்டால், பிரும்மஹத்தி பாபமகலும். வாக்கு, மநஸ், உடல், ரஜஸ், தமஸ், ஜாக்ரத், ஸ்வப்நம், ஸுஷுப்தி இவற்றால் உண்டாகும் பாபமும் அகலும்.

மந்த்ர ஆசமனம்: உள்ளே உள்ள பாபம் அகல, உள்ளங்கையில் ஜலத்தை ஏந்தி, காலையில் ‘ஸூர்யஶ்ச’ என்னும் மந்திரம், மாத்யாஹ்னிகத்தில் ‘ஆப: புநந்து’ என்னும் மந்திர, ஸாயங்காலத்தில் ‘அக்னிஶ்ச’ என்னும் மந்திரம் கூறி ஜலத்தை அருந்தவேண்டும்.

ஸூரியன், ஜலம், அக்னி, முதலிய தேவதைகள், கோபத்திற்கு அபிமான தேவதைகள் இவர்களை, நமது அவயவங்களாலும், மனத்தாலும் தெரிந்தும், தெரியாமலும் செய்த (நமக்குத் துன்பத்தை விளைவிக்கக்கூடிய) பாபத்தை அகற்றி நம்மைச் சுத்தமாக்கும்படிக் கோருகிறோம்.

புனர்மார்ஜனம்: ‘ததிக்ராவிண்ண’ மந்திரத்தால், ஒவ்வொரு வாக்யத்துக்கு ஒருமுறை உள்ளங்கையில் ஜலத்தை யேந்தி ஜபித்துத் தலையில் ப்ரோக்ஷித்துக் கொள்ளவேண்டும். மறுபடி ‘ஆபோஹிஷ்டா’ மந்திரத்தைச் சொல்லி, ஜலத்தை ஏந்தி ஜபித்து 8 வாக்யங்களால் தலையிலும், 9ஆவதால் கால்களிலும் ப்ரோக்ஷித்துக் கொள்ளவேண்டும்.

ஆந்த்ரர் ‘ஹிரண்யவர்ணா’ என்னும் நான்கு மந்திரங்களையும் கூரி ப்ரோக்ஷித்துக் கொள்வர்.

முகர்ந்துவிடல்: ‘த்ருபதாதிவ முஞ்சது’ எனக்கூறி ஜலத்தை முகர்ந்து கீழே விடவேண்டும். தொழுக்கட்டையிலிருந்து மனிதன் விடுபடுவதுபோல் என்னைப் பாபத்தினின்று விடுவிக்க ப்ரார்த்திக்கிறோம்.

அர்க்யப்ரதானம்: ஸந்த்யாவந்தனத்துக்கு ஜீவநாடி போன்றது. ப்ராணாயாமம், ஸங்கல்பம் செய்து அர்க்யப்ப்ரதானம் செய்யவேண்டும். இதைச் செய்வதற்காகவே இவ்வளவு பூர்வாங்கமும் செய்து நம் உடல், மொழி, மனஸ்களைச் சுத்தமாக்கிக் கொண்டோம்.

 • காலையில் நின்று கொண்டு பசுவின் கொம்பு உயரம் குதிகாலைச் சிறிது தூக்கி கிழக்கு முகமாக, கட்டைவிரலை விலக்கி (கட்டைவிரல் சேர்ந்திருந்தால் அது ராக்ஷஸர்களுக்கு ஆனந்தம்) இரண்டு கைகளாலும் அர்க்யம் தரவேண்டும்.
 • பகலிலும் நின்று கொண்டே தரவேண்டும்.
 • மாலையில் உட்கார்ந்து கொண்டு தரவேண்டும்.
 • வீட்டில் பாத்ரத்தை வைத்துக் கொண்டு ஸந்த்யாவந்தனம் செய்யும்போது, இடது கை கட்டைவிரல், ஆள்காட்டி விரல் இரண்டிற்கும் நடுவே பாத்திரத்தைப் பிடித்துக் கொண்டு இருகைகளாலும் அர்க்யம் தரவேண்டும். ஒரு கையால் அளிப்பதும் நமஸ்காரம் செய்வதும் தேவதைகளை அவமானம் செய்வது போலாகும், பாபம்.
 • காலையிலும் மாலையிலும் நாம் ஸூரியனுக்கு அளிக்கும் அர்க்யஜலம் வஜ்ரமாகி, வரபலத்தால் தினமும் ஸூர்யனை எதிர்த்துச் சண்டையிடும் அஸுரர்களை, மந்தேஹாருணம் என்னும் த்வீபத்தில் எரிகிறதாம். அவர்களை எறிந்த பாபமானது அர்க்யம் ஆனபின் செய்கின்ற ப்ரதக்ஷிணத்தால் அகல்கிறது.
 • “காணாமல், கோணாமல், கண்டு கொடு” என்று ஸித்தர் கூறிய காலமே அர்க்யம் கொடுப்பதற்குச் சிறந்த காலமாகும்.
 • காலையில் கிழக்கு நோக்கியும், மதியத்தில் வடக்கு நோக்கியும், மாலையில் மேற்கு நோக்கியும் அளிக்க வேண்டும்.
 • “அன்ய த்வீபங்களில் எவரும் அர்க்யம் அளிப்பதில்லையே ! அங்கு ஸூர்யன் உதயமாகவில்லையா ? “ எனக் கேட்கலாகாது. அங்கு ஸூர்ய உதயமும் ப்ரகாசமும் இங்கு உள்ளது போல் முப்பஹு நாழிகையும் இல்லை. ஸூர்ய ரஶ்மி அங்கு குறைவு, அதனால்தான் நிழலில் வளரும் செடி போல் வெளுத்திருக்கின்றனர். சரீர போஷணத்துக்கு வேண்டியதை இயற்கை மூலமாக இல்லாமல் செயற்கை மூலமாகப் பெறுகின்றனர். அது கர்ம பூமியும் அல்ல, புண்ய பூமியும் அல்ல. அல்லும் பகலும் அறுபது நாழிகையும் தெய்வத் தொண்டில் ஈடுபடாது உடலையே வளர்ப்பர்.
 • ஸூர்யன் நமது உதவியைக் கொண்டு ஜீவிப்பவரல்லர். வேறெவர் உதவியும் ஸூர்யஜ்யோதிஸ்ஸிற்கு அவஶ்யமில்லை. எனினும், (88000) எண்பத்தெண்ணாயிரம் மஹரிஷிகள் வேளை தவறாமல் அர்க்யம் அளிக்கின்றனர்.
 • அர்க்யமளிப்பதால் நாம் நோயற்ற வாழ்வு வாழ்ந்து குறைவற்ற செல்வத்தைப் பெறுகிறோம்.

ப்ராதஸ்ஸந்த்யா :சூரியனின் உதயத்துக்கு முன் 2 நாழிகை (24*2=48 நிமி) காலை நேர ஸந்தியாவந்தனத்துக்கு முக்கியகாலம். உதயத்துக்குப்பின் 3 ¾ நாழிகை (1 ½ மணி நேரம்) கௌண காலம்.

மாத்யாஹ்னிகம்: உதயம் 11 நாழிகைக்கு மேல் 15 நாழிகைக்குள் (10.30 முதல் 12.00 வரை) முக்கியகாலம். அஸ்தமனம் வரை கௌணகாலம்

ஸாயம்ஸந்த்யா: அஸ்தமனத்திலிருந்து முன் 2 நாழிகை வரை உரியகாலம்

                                     தர்ம சாஸ்திரம் – சி.வெ. ராதாகிருஷ்ண சாஸ்திரி

 ப்ராயஶ்சித்த அர்க்யம்: உரிய காலத்தில் ஸந்த்யை செய்யும்போதுகூட அளிக்கத்தான் வேண்டும். அது சரியான காலம் என்பதைப் பல காரணங்களால் சரியாக அறிய முடியாது. ப்ராயஶ்சித்தார்க்யம் செய்யாவிடில் பாபம் ஏற்படும். அது ஒரு ஸத்வாஸனையை உண்டுபண்ணுவதால் முன்னோர் ஸெய்தபடி நாமும் செய்ய வேண்டும்.

அடுத்தபடி ப்ரணவத்துடன் வ்யாஹ்ருதியைக் கூறி எழுந்து நின்று உடலால் தன்னை ஒரு ப்ரதக்ஷிணமாகச் சுற்றி, பரிசேஷநம் போல் ஜலத்தால் சுற்றி, இரு கைகளாலும் மார்பைத் தொடவேண்டும்.

பிறகு உட்கார்ந்து ஒரு ப்ராணாயாமம் செய்து “எதிரில் காணப்படும் ஆதித்யன் ப்ரஹ்ம ஸ்வரூபி. அந்த ப்ரஹ்மமாக நான் இருக்கிறேன். ப்ரஹ்மமே ஸத்யம்” என்று கூறி நன்கு மனத்தினால் த்யானம் செய்யவேண்டும்.

ஆதித்யாதி தர்ப்பணம்: பிறகு அமர்ந்து காலையில் கிழக்கிலும், மதியத்தில் வடக்கிலும், மாலையில் மேற்கிலும், ஆதித்யன் முதலிய நவக்ரஹங்களுக்கும், கேசவன் முதலிய பன்னிரண்டு நாமாக்களுடன் கூடிய மஹாவிஷ்ணுவுக்கும் இரு கரங்களாலும் அர்க்யம் அளிக்கவேண்டும். நம்மில் சிலர் இதைச் செய்வதில்லை. பிறகு ஆசமனம் செய்து ஸந்த்யா கர்மாவின் முன்பாதியைப் பூர்த்தி செய்கிறோம்.

ஜபமும் ஏற்ற இடம்: ஒருமுறை ஒன்றைக்கூறி நிறுத்தாமல் பலமுறைக் கூறுவதே ஜபம். சிலது மிகச் சுருக்கமாகவும் சிலது பெரிதாகவும் இருக்கும். ஏழுகோடி மந்த்ரங்கள் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.

ஜபம் செய்யும்போது ஒவ்வொரு நாமமும் இன்னொரு நாமாவுடன் சங்கிலிபோல் சேர்ந்து, அந்தந்த தேவதைகளின் திருவடியில் நம்மக் கொண்டு சேர்க்கிறது. ஜபத்தால் அந்தந்த தேவதையின் உருவம் நமக்கருகில் படைக்கப் படுகிறது.

ஸந்த்யை செய்த இடத்தை விட்டு நாற்பது அடிக்கு மேல் ஜபம் செய்ய வேறிடம் போகக்கூடாது. ‘ஆப்ரும்ம’ என்ற ஸ்லோகத்தைக் கூறி ஸமஸ்த  ப்ராம்மணர்களுக்கு நமஸ்காரம் செய்து, ‘அப ஸர்பந்து’ என்ற ஸ்லோகத்தைக் கூறி, ஜலத்தை ப்ரோக்ஷணம் செய்து ஜபஸ்தலத்திலுள்ள பூதங்களை அகற்றி, ஆசனத்தில் அமர்ந்து ஜபம் செய்யவேண்டும். எதிரில் தீர்த்தபாத்திரம் இருக்கவேண்டும். இவை நமது ஜபத்தின் பயனை மற்றவை கொண்டு போகாவண்ணம் ரக்ஷிப்பதற்காகவாம்.

 • ப்ராணாயாமம், ஸங்கல்பம் செய்து ‘ஆயாது’ என்ற மந்த்ரம் கூறி, காயத்ரீஜபம் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
 • காலையில் நின்றுகொண்டே கிழக்கு முகமாக ஜபம் செய்யவேண்டும்.
 • மதியத்தில் அவரவர் குலவழக்கத்தின்படி, நின்றுகொண்டோ அல்லது உட்கார்ந்து கொண்டோ கிழக்கு முகமாக ஜபம் செய்யவேண்டும். மாத்யாஹ்னிகத்தில் வடக்குமுகமாகவும் செய்யலாம் என்று சிலரும், காயத்ரிஜபத்தை ஒருபோதும் வடக்கு நோக்கி செய்யக்கூடாது என்று சிலரும் கூறுவதால், மதியத்திலும், வாதமில்லாத கிழக்கு முகமாகவே செய்யலாம்.
 • மாலையில் உட்கார்ந்து கொண்டு மேற்கு நோக்கி ஜபம் செய்யவேண்டும். அர்க்யம், பின் செய்யும் த்யானம், ஜபம் இவற்றை மாத்திரம் மாலையில் மேற்குமுகமாகத்தான் செய்யவேண்டும்.
 • சிலர் மாலையில் எல்லாவற்றையுமே மேற்கு நோக்கிச் செய்வது தவறு. எப்போதும் ஆசமனம், மார்ஜனம் முதலியவைகளைக் கிழக்கு அல்லது வடக்கு முகமாகத்தான் செய்ய வேண்டும். தெற்கிலோ மேற்கிலோ செய்யக்கூடாது.
 • ஒவ்வொரு வேளையும் 1008 ஜபம் செய்வது உயர்ந்தது. முடியாதவர் 108 ஜபம் செய்வது மத்யமம். மிக அவசரம், யாத்திரை மார்க்கம், ஆஶௌசம் இத்தகைய காலத்திற்காகக் கூறப்படும் 10 ஜபத்தையாவது செய்யவேண்டும். அது அதமம். அவசரமானாலும் கூட தீட்டில் செய்வது போல் 10 செய்யக்கூடாது.
 • காலையில் இருகரங்களையும் அஞ்ஜலி போல் அமைத்து, முகத்துக்கு நேராக (மதியம் மார்புக்கு நேராகவும், மாலையில் நாபிக்கு நேராகவும் வைத்துக்கொண்டு) கைகளை வஸ்த்ரத்தால் மூடிக்கொண்டு ஜபம் செய்யவேண்டும். (அஞ்ஜலி முத்ரைபோல் வைத்தால் எண்ண முடியாதாகையால், அர்க்யம் கொடுக்க இரு உள்ளங்கைகளையும் வத்துக் கொள்வதுபோல், உள்ளங்கை மார்புக்கு எதிராக இருக்கும்படி வைத்துக்கொள்ளலாம்.)
 • காயத்ரீ வேதமூலமானதால் (ஜபமாலை உபயோகிக்காமல்) -கைவிரல் மூலத்திலுள்ள ரேகைகள் மூலம் எண்ணுவது சிறந்தது என்று ரிஷிகள் கூறியிருக்கிறார்கள்.
 • மேல் வஸ்திரத்தை பூணூல் போல் போட்டு அதனால் இருகைகளையும் மறைத்துக்கொண்டு ஜபம் செய்யவேண்டும். தலையையும் உடலையும் மூடிக்கொண்டு, பேசாமலும், வேறு எதையும் பார்க்காமலும், கேட்காமலும், சிந்திக்காமலும், கண்களை மூடிக்கொண்டோ அல்லது இருகண்களாலும் மூக்கு நுனியைப் பார்த்துக்கொண்டோ ஜபம் செய்யவேண்டும்.
 • பூணூலைக் கையால் பிடித்துக்கொண்டோ, பூணூலால் எண்ணிக்கொண்டோ ஜபம் செய்யக்கூடாது.
 • பிறர் காதில் படுமாறு ஜபம் செய்வது அதமம், உதட்டை அசைத்து த்வனியில்லாமல் சொல்வது மத்யமம். மனதினாலேயே ஜபிப்பது உத்தமம்.

புரஶ்சரணம்: ஒரு அக்ஷரத்திற்கு ஒரு லக்ஷமாக எவ்வளவு அக்ஷரமுண்டோ ஒரு மந்த்ரத்தில் அவ்வளவு ஜபம் செய்து அதற்குத் தக்கபடி தர்ப்பணம், ஹோமம், அன்னதானம் செய்தால் அந்தந்த தேவதை நம் எதிரில் ப்ரத்யக்ஷமாகத் தோன்றும். இது புரஶ்சரணை எனப்படும்.

24 லட்சம் ஜாயத்ரீ ஜபம் செய்து, அதில் 10ல் ஒரு பங்கு அதாவது 24000 ஹோமம் செய்யவேண்டும். நெய், பால், அன்னம், எள்ளு, தூர்வை, தாமரைப்பூ, யவம், தேன் இந்த 8 வஸ்துக்களை வைத்துக்கொண்டு, தனித்தனி ஒவ்வொன்றினாலும் மூன்று மூன்று ஆயிரமாக (3X8=24; 24X1000=24000). இதன் பிறகுதான் நமது இஷ்டமான பலனைப்பெற அதற்குக் கூறியபடி ஹோமம் அல்லது ஜபத்தைச் எய்யவேண்டும்.

காயத்ரீ சாப விமோசனம்: காயத்ரீ ஜபத்திற்கு ப்ரும்மர், விச்வாமித்ரர், வஸிஷ்டர் இவர்களின் சாபத்தைப் போக்க சாபவிமோசனம் செய்யவேண்டும்.

*******

5 thoughts on “ஸந்த்யாவந்தன க்ரமம்

  1. Dear Sir. Namaskarams. I thank you for sharing my post containing extracts from the book by Sri Sri Somadeva Sarma. I am happy that my blog contained a post that is worthy of sharing.

   Like

  1. நான் படித்ததை எல்லோரும் படிக்க வேண்டி பகிர்ந்தேன். நன்றி ஸ்ரீமான் ஸ்ரீவத்ஸ ஸோமதேவ ஸர்மா அவர்களையே சாரும். இந்த என் வலைப்பக்கத்தில், இப்பதிவை வெளியிட்டது பலருக்கும் பயனுள்ளதாய் அறிந்து மகிழ்கிறேன். எல்லோருக்கும் பயனுள்ளதாயும் தேவையாயும் இருக்கும் என்ற என் எண்ணம் சரியானது என்பதை உணர்கிறேன்.
   தட்டெழுத்துப் பயிலாத நான் ஆங்கிலத்திலும் தமிழிலும் நான்கு விரல்களைக் கொண்டு தட்டச்சு செய்து எழுதி நடத்தி வரும் என் வலைப்பக்கத்தில் இப்பதிவை தட்டச்சு செய்து வெளியிட்ட முயற்சி வீண்போகவில்லை. தங்கள் வாழ்த்துக்கு நன்றியுடன், அடியேன்.

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.