வேதம் வணங்கும் தெய்வங்கள்

வேதம் வணங்கும் தெய்வங்கள்

இதே பெயரில் திரு A V சுகவனேஸ்வரன் எழுதி

ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை 2002ல்

பதிப்பித்த புத்தகத்திலிருந்து (280pp)

சில தகவல்கள் (சுருக்கப்பட்டவை)

 

விண்ணுலகத் தெய்வங்கள்

 

 1. திவம் ‘விண்’ என்று பொருள்படும் தெய்வமான ‘திவம்’ வடமொழியில் “தியௌஸ்’ என விளங்குகிறது. ரிக் வேதத்தில் இந்தச் சொல், பூமியைக் குறிக்கும் ‘மண்” உடன்சேர்த்து இருமைச் சொல்லாகவே ‘தியாவா, ப்ருதிவீ’ என்று பலமுறை சேர்ந்தே வருகிறது.

 

 1. வருணன் வேதம் வணங்கும் தெய்வங்களில், வலிமை வாய்ந்த போர்வீரனாக இந்திரனும் தலைசிறந்த ஆட்சியாளாராக வருணனும் முக்ய தெய்வங்களாகப் போற்றப் படுகின்றனர். ரிக்வேதம் அக்னியை வருணனின் முகமாகவும், ஸூரியனை வருணனின் கண்ணாகவும் வர்ணிக்கிறது. பல ரிக்குகள், வருணனையும் மித்திரனையும் சேர்த்து ஜோடியாகவே பேசுகின்றன.  மித்திரனுடன் சேர்ந்து வருணன் விண்ணையும் மண்ணையும் நடுவிலுள்ள காற்று மண்டலத்தையும் தாங்குகிறான்.

 

 1. மித்திரன் பல ரிக்குகள், வருணனையும் மித்திரனையும் சேர்த்து ஜோடியாகவே பேசுகின்றன.  மித்திரனுடன் சேர்ந்து வருணன் விண்ணையும் மண்ணையும் நடுவிலுள்ள காற்று மண்டலத்தையும் தாங்குகிறான். ரிக்வேதம் மித்திரன் பேசிக் கொண்டே மக்களை ஒன்று சேர்க்கிறான் என்று சொல்கிறது. காலை ஸந்த்யாவந்தன உபஸ்தான மந்திரத்தில் ஸூரியன் மித்திரனாகத் துதிக்கப் படுகிறான்.

 

 1. ஸூரியன் “இருப்பவைகளையும், இருந்தவைகளையும், இனி இருக்கப்போகிறவர்களையும், அசைபவைகளையும் அசையாதவை களையும், உண்டாக்குபவனும், அழிப்பவனும் ஸூரியன் ஒருவனே” என்று கூறப்படுகிறது. (பிருஹத் தேவதா 1.61)

 

 

 

 1. ஸவிதா வேதகாலத்தில் அனேகமாக ஒன்றாக கருதப்பட்ட

ஸூரியன், ஸவிதா இருவருக்கும் நுண்மையான வேறுபாடு உண்டு. யாஸ்கர், “இருள் நீங்கியபிறகு, விண்ணில் தென்படுவதுதான் ஸவிதா” என்கிறார் (நிருக்தம் XII.12). ரிக்வேதத்துக்கு உரை எழுதிய ஸாயனர், உதயத்திற்கு முன் உள்ள சூரியன் ஸவிதா எனப்படுவான் என்கிறார். ஸௌனகர் “எவனொருவன் பகலை உண்டுபண்ணும் ஸூரியணை இழுக்கிறானோ அவனே ஸவிதா” என்று கூறுகிறார். (பிருஹத்தேவதா 2,62). சந்த்யாவந்தனத்தில் காலையிலும், நடுப்பகலிலும், மாலையிலும் ஸவிதா வணங்கப் படுகிறான். இதிலிருந்து ஸவிதா என்பது ஸூரியனின் மற்றொரு பெயர் என்பதும், ஆனால் அது சிலசமயங் களில்தான் பொருந்தும் என்பதும் தெளிவாகிறது. ஸவிதாவை வேதம் பொன்னிறமாக வர்ணிக்கிறது.

 

 1. பூஷன் பன்னிரண்டு ஆதித்யர்களில் ஒருவன். ரிக் வேத காலத்தில் பூஷன் செல்வத்தையும் செழிப்பையும் வழங்குபவனாகவும், ஆடு மாடுகளைக் காப்போனாகவும், எல்லாப்பாதைகளையும் நன்கு அறிந்தவனாகவும், இறந்தவர்களை அவர்களுடைய உலகிற்கு அழைத்துச் செல்பவனாகவும், தெய்வங்களுக்கு நடுவில் ஓரளவு முக்கியமான இடத்தைப் பெறுகிறான். ஆனால், மற்ற வேதங்களின் காலத்தில் அவனுடைய முக்கியத்துவம் குறைந்துவிட்டது. புராணங்களில் அவனைப் பற்றிய குறிப்பைக் காண்பதே அரிதாகி விட்டது.

 

 1. விஷ்ணு ரிக் வேதம் விஷ்ணுவைப்பற்றி சொல்லும் முக்கியமான சம்பவம் அவர் எடுத்த மூன்று காலடி பற்றியது. “இதம் விஷ்ணுர் விசக்ரமே த்ரேதா நிததே பதம் ஸமூடமஸ்ய பாம்ஸுரே” என்று அதாவது “இம்மூன்று உலகங்களையும் விஷ்ணு மும்முறை காலடி ஊன்றி நடந்தார்’ பூமியிலுள்ள புழுதிகள் எல்லாம் அவருடைய கால்களை வருடின” என்பதாகும். மற்றொரு ரிக் “தத் விஷ்ணோ: பரமம் பதம் ஸதா பச்யந்தி ஸூரய: தி வீவ சக்ஷு ராததம்” அதாவது “விஷ்ணுவின் அந்த உயர்ந்த இருப்பிடத்தை நித்யஸூரிகள் எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த இருப்பிடம் விண்வெளியின் ஒரு கண்ணாக விளங்கியது” என்று சொல்கிறது.

 

 1. விவஸ்வான் அவன் இரவிற்கும் பகலுக்கும் ஒளி கொடுப்பதால் அவனை விவஸ்வான் என்றது வேதம். பெரும்பாலோர் இது ஸூரியனைக் குறிப்பதாகவே கருதுகிறார்கள்.ரிக்வேதத்தின் ஆரம்பகாலத்திலேயே அவனுடைய வழிபாடு குறைந்துவிட்டது. அசுவினி தேவதைகளும், யமனும் விவஸ்வானுடைய மகன்கள் என்று ரிக்வேதம் கூறுகிறது. வேத காலத்திலேயே விவஸ்வான் மனித குலத்தின் மூத்தவனான மனுவின் தகப்பனாக விளங்குகிறான்.

 

 1. ஆதித்தியர்கள் ஒரு குழுவாக எண்ணப்பெறும் ஆதித்தியர்கள் மொத்தம் எத்தனைபேர் என்பது வேத நூல்களில் தெளிவாகக் காணவில்லை.  ஆதித்தியர்களுக்கான ஒரு ஸூக்தத்தில் ரிக்வேதம் முதல் ரிக்கிலேயே ஆறு பெயர்களைக் குறிப்பிடுகிறது: மித்திரன், அர்யமன், பகன், வருணன், தக்ஷன், அம்சன்.  ஆனால் பத்தாவது மண்டலத்தில் ஓரிடம் ஏழு என்றும் மற்றோரிடம் எட்டு என்றும் சொல்கிறது. முதன்முதலாக சதபதப்ராம்மணத்தில் ஆதித்யர்கள் பன்னிரண்டு பேர் என்பதைக் காண்கிறோம். பிற்கால இதிஹாஸ புராணங்களும் பன்னிரண்டு ஆதித்யர்கள் என்றே குறிப்பிடுகின்றன. மேலே கூறிய ஆறு தெய்வங்களைத் தவிர சில வேத நூல்கள் சில இடங்களில் இன்னும் ஆறு பேரை ஆதித்யர்களுடைய குழுவில் சேர்க்கின்றன: மார்த்தாண்டன், தாதா, இந்திரன், விவஸ்வான், ஸூரியன், ஸவிதா.

 

 1. உஷஸ் பளபளவெனப் பொழுது விடியும் அதிகாலை நேரத்தை நளின நங்கையாக உருவகப்படுத்தி வேதம் கற்பனையின் உச்சிக்கே சென்று, மனத்தை உருக்கும் ரம்மியமான பல கவிதைகளை அள்ளிக் கொடுத்திருக்கிறது. Ushas is the most graceful creation of vedic poetry and there is no more charming figure in the descriptive religious lyrics of any other literature. – A.A.MacDonnel. ஒரு ரிக் எல்லாத் தெய்வங்களும் உஷஸுடன் விழித்துக் கொள்கின்றனர் என்று கூறுகிறது. அவள் ஸூரியனின் மனைவி. ஒரு ரிக், அவள் ஸூரியனையும் அக்னியையும் வேள்வியையும் உண்டாக்கியதாக்க் கூறுகிறது. ஆதித்யர்களில் ஒருவனான பகனுக்கு அவள் சகோதரி, வருணனுடைய உறவினர், இரவின் சகோதரி. பல இடங்களில் அவளை விண்ணின் மகள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

 

 1. அசுவினி தேவர்கள் குதிரைகள் உருவத்தில் இருந்து விவஸ்வானும் ஸரண்யூவும் பெற்றெடுத்த இரட்டையர்கள் குதிரை வடிவில் இருக்கும் அசுவினீ தேவர்கள். பெயர்கள் நாஸத்தியன், தஸ்ரன். இருவரையும் சேர்த்தே வேதம் பல இடங்களில் இவர்களை அசுவினீ தேவர்கள் என்கிறது.  தேனைக் குடிப்பவர்கள். உஷஸ், ஸவிதா, அசுவினி தேவதைகள் ஆகிய மூன்று தெய்வங்களும் விடியற்காலையில் ஸூரியன் உதிப்பதற்கு முன் தோன்றுகிறார்கள் என்று வேதம் சொல்கிறது. அசுவினி தேவதைகள் காதலர்களை ஒன்று சேர்ப்பதாக அதர்வ வேதம் சொல்கிறது. ஆபத்தில் சிக்கியவர்களுக்கு உடனே உதவி புரிந்து அவர்களை மீட்பது அசுவினி தேவதைகளின் குணாதிசயமாகும். இம்மாதிரி உதவிசெய்வதாக வேதம் அடிக்கடி வர்களை புகழ்கிறது. கடலில் மூழ்கித் தத்தளிப்பவர்களுக்கு உதவிபுரிகிறார்கள். அவர்களை வழிபடுபவர்கள் அவர்களைக் கடலிலிருந்தும், விண்ணிலிருந்தும் செல்வங்களைக் கொணரும்படி வேண்டித் துதிக்கிறார்கள். (போர்களில் உதவிசெய்ய மக்கள் இந்திரனை வேண்டுகிறார்கள்) அசுவினி தேவதைகளை தெய்வீக மருத்துவர்களாக வேதம் துதிக்கிறது.

 

 

 

காற்று மண்டல தெய்வங்கள்

 

 1. இந்திரன் ரிக் வேதத்தின் மிக முக்கியமான தெய்வம். இருபத்தைந்து  ஸூக்தங்களால் இவனைத் துதிக்கிறது. இடியை ஆளும் தெய்வம். போர்களின் நாயகன். இரும்பைப் போன்ற உறுதியான உடல் படைத்தவன். பழுப்பு நிறமான அவனுக்கு தலைமுடியும் தாடியும் செம்பட்டை நிறம். இடியுடன் கூடிய மின்னலை கைகளில் ஏந்தியவன். விருப்பம்போல் பல அழகிய உருவங்களையும், சிவந்த ஒளி வீசும் ஸூரியனைப் போன்ற உருவத்தையும் எடுக்கவல்லவன். பழுப்பு நிறக் குதிரைகளையுடைய பொன்னாலான அவன்தேர் மனத்தைவிட அதிவேகத்தில் செல்லும். அதிதியின் புத்ரன். பிறந்தவுடனேயே ஸோமரசத்தைக் குடித்தவன். வேதம் ஓரிடத்தில் எல்லாத்தேவர்களும் சேர்ந்து அசுரர்களைக் கொல்ல, எல்லா வல்லமையுடன் இந்திரனைப் படைத்ததாகக் கூறுகிறது.  அக்னியும் இந்திரனும் இரட்டையர்கள் என்றும், பூஷன் இந்திரனின் சகோதரன் என்கிறது. ரிக்வேதம் சில இடங்களில் இந்திரன்தான் ஸூரியன் என்றும், ப்ரம்மாண்ட உருவம் படைத்தவன், விண்ணுலகையும் மண்ணுலகையும் சேர்த்து அவன் பிடித்தபோது அவை இரண்டும் அவன் கையளவே ஆயின என்றும் சொல்கிறது. நூறு விண்ணுலகங்களும் நூறு மண்ணுலகங்களும் சேர்ந்தால் கூட இந்திரனுக்கு சமமாகாது, ஆயிரம் ஸூரியர்களை விட அதிகம் ப்ரகாசமுள்ளவன்’

 

 1. திரித ஆப்தியன் “வலிமையுள்ள மருத்துக்கள் போகும்பொழுது, மின்னல் பளிச் என்று மின்னுகிறது. திருதன் இடிமுழக்கத்துடன் கர்ஜிக்கிறான். சுற்றிலுமுள்ள தண்ணீரும் பலமாக ஓசை செய்கிறது” என்று பொருள்படும் ஒரு ரிக். மற்றொரு ரிக் “உலோகத்தை உருக்குபவன் எப்படித் தீயில் காற்றை ஊதி அதை நன்கு எரியும்படிச் செய்வானோ, அப்படியே விண்ணின் உயரத்திலுள்ள திருதன் காற்றை ஊதி அக்கினியைப் புகையுடன் கூடச் சுடர் விட்டெரிந்து  மேலெழும்படி செய்கிறான்” என்று கூறுகிறது.  திரித ஆப்தியன் என்ற பெயரில், தண்ணீரைக் குறிக்கும் ‘ஆப:’என்பதிலிருந்து ஆப்தியன் என்று உருவாகியிருக்கிறது என்றும் இது நீரின் மைந்தன் என்று பொருள்படும் என்றும் சாயனர் கூறுகிறார். அப்படியானால் திருதனும் அபாம் நபாத் என்ற மற்றொரு தெய்வமும் ஒன்றேயாகும்.

 

 1. அபாம் நபாத் ஆப: என்றால் தண்ணீர். நபாத் என்றால் பிள்ளை அல்லது பேரன். எனவே இவன் நீரின் பேரனான அக்கினியைக் குறிக்கும் என்று ஸாயனாசாரியார் சொல்கிறார்.  நீராவியாகிய மேகங்களிலிருந்து மின்னல் உண்டாகிறது. ஆகையால் மின்னல் ‘நீரின் மைந்தன்’ என்கிறது பிருஹத்தேவதா நூல்.

 

 1. மாதரிஸ்வான் சில ரிக்குகள் மட்டும் இவனைப்பற்றி கூறுகின்றன.  மாதரிஸ்வான் விண்ணிலிருந்து அக்கினியை மனிதர்களுக்காகக் கொணர்ந்தவன், சில ரிக்குகள் இவனே அக்கினி என்கின்றன. அக்கினியைப் பற்றிய ரிக் ஒன்று அவனைப் பற்றிக் கூறுகிறது: “விண்ணின் கர்ப்பத்தில் அவன் இருக்கும்பொழுது தநூநபாத் என்ற பெயர், பல உருவங்களில் பிறக்கும்போது நாரசம்ஸன், தாயிடத்தில் உருவத்தைப் பெற்றபொழுது அவன் மாதரிச்வன். போகும் வழியில் அவன் வேகமாக அடிக்கும் காற்றாக ஆகிறான்.” அக்கினி, ஸோமன் ஆகிய இருவர்களைக் குறித்துப் பேசுகையில் ரிக்வேதம், “உங்களில் ஒருவரை மாதரிச்வன் விண்ணிலிருந்து கொணர்ந்தான். மற்றதைக் கழுகு மலையிலிருந்து பிடுங்கியது” (ரிக்வேதம் 1.39.6) என்று சொல்கிறது.

 

 1. அஹி புத்னியன் காற்று மண்டலத்திலுள்ள பாம்பு என்று பொருள். “வெள்ளத்தில் பிறந்த பாம்பை நான் பாக்களால் புகழ்ந்து பாடுகிறேன். காற்று மண்டலத்தின் நடுவில், வீசும் காற்றின் கீழே அபன் உட்கார்ந்திருக்கிறான். அஹி புத்னியன் ஒருபொழுதும் நமக்குக் கெடுதல் செய்யாமல் இருக்கட்டும். நம்பிக்கைக்குப் பாத்திரமான இந்த ஏழையின் வேள்விக்கு அவன் ஒரு பொழுதும் வராமலிருக்கக் கடவது.”

 

 1. அஜ ஏகபாத் அஜ என்றால் பிறப்பில்லாதவன் என்றும் ஏகபாதர் என்றால் ஒருகாலுடையவன் என்றும் பொருள். ஸூரியனைக் குறிக்கும் என்று சில ஆச்சார்யர்களும், மின்னலைக் குறிப்பது என்று சிலரும், இது பாம்பைக் குறிக்கும் என்று காரணங்களுடன் ஜெர்மானிய ஆராய்ச்சியாளர் விண்டர்நிட்ஸ்-உம் சொல்கிறார்கள்.

 

 1. ருத்திரன் நாம் வணங்கும் சிவனே ருத்திரன். “சடையுடன் கூடிய முடியை உடையவரும், சிவப்பானவரும், கண்கூசும் ஒளிவீசும் உருவத்தை உடையவரும் ஆன ருத்திரனை, நாங்கள் பக்தியுடன் கீழே அழைக்கிறோம். அவர் கை நிறையச் சிறந்த மருந்துகளை எடுத்துவந்து, எங்களைக் காத்து, எங்களுக்கு நல்லதோர் வீட்டைக் கொடுக்கட்டும்.” (ரிக்வே 1.114.5). “அஞ்சா நெஞ்சம் படைத்த வீரர்களை     ஆளும் பலசாலியான ருத்திரனுக்கு, நாம், பயபக்தியுடன், இன்று, துதிகளைக் கூறுவோமாக; சுயம்பிரகாசமுள்ளவனும், மங்களமானவனும், மற்றவர்களைக் காக்கும் திறனுள்ளவனும் ஆன இவன் விண்ணுலகிலிருந்து கீழே வருகிறான். “(ரிக்வே 10.92.9)  இந்த ரிக்கில் ‘சிவ:’ என்பது ருத்திரனுக்கு உரிய உரிச்சொல்லாக இருக்கிறது. யஜுர்வேதத்தில் சிவனைத் துதிக்கும் நீண்ட வேண்டுதலாக ‘ருத்ரம்’ அமைந்துள்ளது.

 

 1. மருத்துக்கள் மருத் என்றால் காற்று என்று பொருள். இவர்களுடைய எண்ணிக்கை 27 என்றும் 36 என்றும் ரிக்வேதம் கூறுகிறது. புயற்காற்றின் தேவதைகள். ருத்திரனுடைய பிள்ளைகள். பிருஷ்ணி என்ற பசுமாடு அவர்களுடைய தாயார். பசுமாடு என்பது புள்ளிகளுடன் கூடிய புயலை உண்டாக்கும் மேகங்களைக் குறிக்கும். பிறந்தவுடன் மருத்துக்கள் மூட்டப்பட்ட தீச்சுடர்களை ஒத்திருப்பதாக ஒரு ரிக் கூறுகிறது. சிரித்துக் கொண்டிருக்கும் மின்னலில் இருந்து அவர்கள் பிறந்த்தாக ஒரு ரிக் பேசுகிறது. விண்ணின் மைந்தர்கள் என்றும், கடலைத் தாயாக உள்ளவர்கள் என்றும், தாங்களாகவே பிறந்தவர்கள் என்றும் பல ரிக்குகள் கூறுகின்றன. அவர்களை மருந்து கொண்டுவந்து தரும்படி வேண்டுகிறது வேதம்’

 

 1. வாயு “அவன் மிகவும் ஸூக்ஷ்மமாகக் காற்றில் இருந்து கொண்டு மூவுலகையும் ஊடுருவி (வ்யாப்ய:) இருப்பதால் அவன் வாயு எனப்படுகிறான்” – சௌனகர். அவன் தெய்வங்களின் மூச்சுக் காற்றாக விளங்குகிறான். ருத்திரனைப் போல அவனும் நோய்களைக் குணப்படுத்தி ஆயுளை அதிகரிக்கிறான். இடியுடன் கூடிய மின்னலுடனும், புயலுடனும் அவனுக்கு உள்ள தொடர்பை வேதம் வலியுறுத்துகிறது.

 

 1. பர்ஜன்யன் “மேகம், மழை, மழையின் தெய்வம் என்று பொருள். தாவரங்களிலும், பசுக்களிடத்தும், பெண் குதிரைகளிடத்தும், பெண்களிடத்தும், பர்ஜன்யன் கர்ப்பத்தை வைக்கிறான்”. நேரடியாகக் கூறாவிட்டாலும் சில ரிக்குகளில் இருந்து பூமிதான் பர்ஜன்யனுடைய மனைவி என்பது தெரிகிறது. ஸோமனை அவனுடைய மகனாகச் சில ரிக்குகள் சொல்கின்றன.

 

 1. ஆப: நீர்த்தேவதைகள். ஆறுகளிலும், மற்ற நீர் நிலைகளிலும், கடலிலும், மேகங்களிலுமுள்ள நீருக்கு இது பொதுவான பெயர். இந்திரனுடைய கட்டளைகளை அவை ஒருபோதும் மீறுவதில்லை. இவைகள் பெண் தெய்வங்கள். இவைகள் அக்கினியைப் பெற்றெடுக்கும் தாயார்கள். தினமும் ஸந்தாவந்தனத்தில் இவர்கள் வணங்கப் படுகிறார்கள்.

 

 

 

 

 

 

 

 

 

மண்ணுலகத் தெய்வங்கள்

 

 1. ஸரஸ்வதியும் மற்ற ஆறுகளும் ஆப: எனப்படும் ஜலதேவதை யைத்தவிர ரிக்வேதம் தெய்வீக ஆறுகளைப் பற்றியும் பாடுகிறது. சிந்து, கங்கை, யமுனை, பியாஸ் (தற்கால ராவி), சாதுத்ரீ (தற்கால சட்லெஜ்), சிந்து நதியில் வந்துசேரும் சில உபநதிகள், மற்றும் முக்கியமாக ஸரஸ்வதி இவைகள் வேதங்களில் குறிப்பிடப்படும் நதித்தெய்வங்கள்.

 

 1. பிருதிவீ (பூமி) ஸோம ரசத்தைப் பருகிய உத்சாகத்தில், இந்திரன் பூமியைத் தாங்கி, அதை அகலப்படுத்தினான். (ரிக்வே 2,15,2). பிருதிவீயைப் பெண் தெய்வமாகவும், தாயாகவும் வணங்குகிறார்கள். அந்திமக் கிரியையில் இறந்தவனின் அன்பு மிகுந்த அன்னையான பூமியின் மடிக்குப் போகும்படி கூறுகிறார்கள். இறந்தவனை அழியாமல் காக்குமாறு பூமியை வேண்டுகிறார்கள்.

 

 1. அக்கினி இந்திரனுக்கு(250) அடுத்தபடியாக அதிகம் ஸூக்தங்கள் அக்கினியின் மீதுதான் (200). எல்லாத்தெய்வங்களுக்கும் கொடுக்கப் படும் ஆஹுதிகளை உரிய தேவர்களுக்கு கொண்டுபோய் அக்கினி கொடுக்கிறான். ஹவிஸையும் மந்திரங்களயும் அவர்களுக்குக் கொண்டு சேர்க்கிறான். அக்கினிக்குள்ள மற்ற பெயர்கள்: ஜாதவேதஸ், வைஶ்வாநரன். ஸௌனகர் கூறுகிறார்: “மஹரிஷிகள் அவனை இவ்வுலகில் அக்கினி என்றும், நடுவிலுள்ள உலகில் ஜாதவேதஸ் என்றும் மேலுலகில் வைஶ்வாநரன் என்றும் புகழ்ந்து பாடுகிறார்கள்”. ஸாயனர் இருபொருள்களை கொடுக்கிறார்: “எல்லா மக்களுக்கும் பொதுவான நெருப்பு”, “ஜீரண சக்திக்கு வேண்டிய வயிற்றினிலுள்ள உஷ்ணம்”. வஹ்னி என்று ஒரு பெயர் அக்கினிக்கு உண்டு. “சாகாமையை அடைந்த தெய்வங்கள், வலிமையுள்ள அக்கினி பகவானுடைய மூன்று ஜோதிகளைச் சுத்தப்படுத்தினார்கள். அவைகளில் ஒன்றை அவர்கள் மனிதனுக்கு அவன் சந்தோஷமாக வாழ்வதற்காக்க் கொடுத்தார்கள். மற்ற இரண்டும் அருகிலுள்ள உலகங்களுக்குச் சென்றன.” (ரிக்வே2.9). வருணன் அக்கினியின் சகோதரன் என்று ஒரு ரிக் கூறுகிறது. மற்றொரு ரிக் இந்திரன், அக்கினி இருவரும் இரட்டையர் என்கிறது. இன்றும் சடங்குகளில் அடிக்கடி ஓதப்படும் ஒரு ரிக் அக்கினியை செல்வங்களைக் கொடுக்கும் படி வேண்டுகிறது.

 

 1. பிருஹஸ்பதி நடுவில் இருப்பதும் மேல் இருப்பதும் ஆன இரு பெரிய (பிருஹத்) உலகங்களை அவன் காப்பதால் (பதி:) அவன் இந்தப்பெரிய காரியத்தைச் செய்வதால் பிருஹஸ்பதி என்று புகழப் படுகிறான். (பிருஹத்தேவதா39). ப்ரும்ஹணஸ்பதி என்று ஒரு தெய்வத்தின் பெயர் ரிக்வேதத்தில் காணப் படுகின்றது. ஆனால் அவர் எந்தத் தெய்வம் என்பதை தெளிவாக வேதம் கூறவில்லை. ஆனால் பிருஹஸ்பதியும், பிரும்ஹணஸ்பதியும் மாறிமாறி ஒரே ஸூக்தத்தில் சில இடங்களில் ரிக்வேதத்தில் உள்ளன. இக்காலத்தில் சடங்குகளில் கணபதியைக் குறிப்பதாக ஓதப்படும் “கணானாம் த்வா கணபதிம்” என்ற ரிக்கில் (ரிக்வே 2.23.1) பிள்ளையார் இல்லாத வேதகாலத்தில் ப்ரம்மணஸ்பதி என்று குறிப்பிடப்பட்டவரை, ‘கணபதிம்” என்று ஒரு வார்த்தை உள்ளதாலேயே, பிற்காலத்தில்  வேதகால ப்ரம்மணஸ் பதியையும், புராணகால கணபதியையும் இணைத்திருக்கிறார்கள் என்பார் காஞ்சி பரமாசார்யாள். பிருஹஸ்பதி இரண்டு உலகின் மைந்தன் என்றும், துவஷ்டாவால் உண்டாக்கப் பட்டன் என்றும் ரிக்வேதம் இரண்டுவிதமாகக் கூறுகிறது. வேதகாலத்துக்குப் பிற்கால நூல்களில் நவக்கிரஹங்களில் ஒன்றான குருவுடன் அவன் இணைக்கப் படுகிறான்.

 

 1. ஸோமன் ஸோமன் வேதகாலங்களில் மிகவும் போற்றப்படும் தெய்வம். இந்திரனுக்கும், அக்கினிக்கும் அடுத்தாற்போல் ஸோமன் மூன்றாவது முக்கிய தெய்வமாகும். ஸோமன் என்பது ஸோமரஸம் தான் என்பது பல ரிக்குகளில் கூறப்படும் வர்ணனைகளில் தெரிகிறது. ஸோமனை செடிகளுக்கெல்லாம் அரசன், ஆறுகளுக்கு அரசன், பூமிக்கு அரசன், தெய்வங்களுக்கும் மனிதர்களுக்கும் அரசன் என்றெல்லாம் போற்றுகிறது. பெரும் வீரனாகவும், தலைவனாகவும் விவரிக்கிறது. வேதகாலத்துக்குப் பிற்பட்ட நூல்களில் ஸோமன் என்ற சொல் சந்திரனுக்கு மறுபெயராக விளங்குகிறது. ஸோமனைத் தேவர்கள் வேளை தவறாமல் குடித்துவருவதால் அவன் தேய்கிறான். அவனை ஸூரியன் நிரப்புகிறான், ஸோமனாகிய சந்திரனிடம் அமிர்தம் இருப்பதால், அதைக்குடிக்கும் தெய்வங்கள் மரிப்பதில்லை. ஸோமனாகிய சந்திரனுக்கு 27 நக்ஷத்திரங்களும் மனைவிகள் என்று யஜுர்வேதம் கூறுகிறது. ரிக்வேதத்தில் பெரும்பாலும் ஸோமனை ஒரு தாவரமாகவே கருதுகிறார்கள்.ஆனால் கடைசியில் (பத்தாவது மண்டலத்தில்) ஸோமன் சந்திரனையும் குறிப்பதாக ரிக்குகள் உள்ளன. வேதகால ஸோமரசத்திற்கும், பாரசீக நாட்டு ஜொராஸ்டிரிய மதத்தின் ஹோமம் என்ற ரஸத்திற்கும் பல ஒற்றுமைகளை ஆராய்ச்சியாளர்கள் காண்கிறார்கள்.

 

 1. இரண்டும் தாவரத்திலிருந்து பிழியப்பட்ட மஞ்சள் நிறப்பானம்.
 2. இரண்டையும் பாலில் கலந்து உண்கிறார்கள்
 3. இரண்டையும் விண்ணிலிருந்து கழுகு பூமிக்குக் கொண்டுவந்தது
 4. இரண்டையும் தெய்வமாக வணங்குகிறார்கள்
 5. இரண்டும் வணங்குவோருக்கு மக்கள் பேற்றையும் குதிரைகளையும் கொடுக்க வல்லன
 6. இரண்டும் சற்றுப் போதையூட்டும் தெய்வீக பானங்கள்

ஒரே வேற்றுமை, வேதத்தில் தெய்வங்களுக்குத் தினமும் மூன்றுமுறையும், பாரசீகமத நூலில் தெய்வங்களுக்கு தினமும் இரண்டுமுறையும் அளிக்கப்படுகிறது.

 

 

 

மற்ற தெய்வங்கள்

 

 1. த்வஷ்டா த்வஷ்டாவை தேவதச்சன் என்று பரமாசார்யாள் கூறுகிறார். சௌனகர் அவனை உருவங்களை உண்டுபண்ணுபவன் (ரூபக்ருந்) என்கிறார். கைவேலையில் மிகவும் தேர்ச்சி பெற்ற அவன் இந்திரனுடைய வஜ்ராயுதத்தை நிர்மாணித்தான். ப்ரம்மணஸ்பதியின் இரும்புக்கோடாலியைக் கூராக்கினான். வேள்வியில் உபயோகிக்கும் மரக்கரண்டிகள், தெய்வங்கள் அருந்தும் பானங்களை ஊற்றிவைக்கும் பாத்திரங்கள், வேகமாக ஓடும் குதிரைகள்,   வேகம் இவற்றை தயாரிக்கிறான். எல்லா ஜீவராசிகளுக்கும் அவரவர்களின் உருவத்தைக் கொடுக்கிறான். துவஷ்டாவின் மகள் சரண்யூவிற்கு யமன், யமீ என்ற இரட்டையர்கள் பிறந்தார்கள். யமன் அவனுடைய பேரன், வாயு அவனுடைய மாப்பிள்ளை, பிருஹஸ்பதி அவனுடைய மகன். துவஷ்டாவின் பத்து பெண்கள் (விரல்கள்) அக்கினியை உண்டாக்கின, ஆகவே அக்கினியும் அவன் மகன், ஸோமனைக்காக்கும் பொறுப்பும் உண்டு. ஆப்தேயின் அகராதியில் துவஷ்டாவைப்பற்றிய சுவையான ஒரு குறிப்பு: துவஷ்டாவிற்கு ஸம்ஞா என்ற மகள். அவளை சூரியனுக்கு மணம் செய்வித்தான். ஸூரியனுடன் வசித்த அவளால் ஸூரியனுடைய வெப்பத்தையும் கண்ணைப்பறிக்கும் ஒளியையும்  தாளமுடியாமல் தவித்தாள். தந்தை துவஷ்டா, சூரியனைத் தன்னுடைய இயந்திரத்தில் ஏற்றி, அவனுடைய உருண்டை வடிவிலிருந்து ஒரு சிறியபாகத்தைச் செதுக்கி எடுத்துவிட்டான். ஸூரியனுடைய வெப்பமும் தணிந்து, கண்கூசும் ஒளியும் சற்று மங்கியது. ஸம்ஞா தன் கணவனோடு மகிழ்ச்சியாக வாழலானாள். துவஷ்டா சூரியனிடம் இருந்து செதுக்கி எடுத்த பாகத்தைக் கொண்டு பல ஆயுதங்களை உருவாக்கினான். சிவனுடைய திரிசூலத்தையும், விஷ்ணுவினுடைய ஸுதர்சன சக்கரத்தையும் மற்றும் பல ஆயுதங்களையும் செய்தான்.

 

 1. விசுவகர்மா விசுவகர்மா என்றால் உலகத்தையும் உலகில் உள்ள எல்லாவற்றையும் சிருஷ்டித்தவன் என்று பொருள். அவனுக்கு நாற்புரமும் கண்களும், வாய்களும், கைகளும், கால்களும் உள்ளன. அவன் விண்ணையும் மண்னையும் உருவாக்கி அவைகளைக் கைகளாலும் இறக்கைகளாலும் ஒருங்கிணைத்தான்.(ரிக்வே 10.81.3) அவன் சிறந்த அறிவாளி, பேச்சுக்கு அதிபன், மனோவேகமாகச் செயல்களைச் செய்கிறான்.  நல்லவையே செய்பவன்.

 

 1. பிரஜாபதி பத்தாவது மண்டலத்தில் ஹிரண்யகர்ப்ப ஸூக்தம் இவனைப்பாடுகிறது. இவன் முதலில் உண்டானவன். எல்லா ஜீவராசிகளுக்கும் அதிபதி. எல்லோருக்கும் ப்ராணனையும் சக்தியையும் கொடுக்கிறான். அவன் மரணத்துக்கு அதிபன். அவனுடைய நிழலே சாகாமை. பிற்கால நூல்கள் ப்ரஜாபதியையும் ப்ரஹ்மாவையும் ஒருக்கிணைக்கின்றன.

 

 1. அதிதி                         வேத நூல்களில் அதிதியைப் பெண்ணாகவே, தாயாகவே பேசுகிறார்கள். “அதிதி என்பவள் அளவில்லாததைக் குறிக்கப் புனையப்பட்ட முதல் சொல்லாகும். அவள் மிகப்பழைமையான தெய்வம். Aditi, an ancient god or goddess, is in reality the earliest name invented to express the Infinite; not the Infinite as the result of a long process of abstract reasoning, but the visible Infinite, the endless expanse beyond the earth, beyond the clouds, beyond the sky” – என்று ஜெர்மானிய வேதவித்தகர் புகல்கிறார். வேதத்தின் ரிக்குகளில் மூன்று பொருள் தெரிகிறது:

 

 1. முதலாவதாக அவளது தாய்மையை வேதம் அடிக்கடி வற்புறுத்துகிறது. எல்லாத் தெய்வங்களுக்கும் தாயாகவும், முக்கியமாக எட்டு (அல்லது பன்னிரண்டு) ஆதித்யர்களுக்குத் தாயாகவும் விளங்குகிறாள்.
 2. இரண்டாவதாக, பாவங்களில் இருந்தும் பந்தங்களில் இருந்தும் மக்கள் அவளிடம் விடுதலையைக் கோருகிறார்கள்.
 3. மூன்றாவதாக, எல்லையில்லாததும் அளவற்றதும், எல்லாமுமாக விளங்கும் அதிதி, பிற்கால தத்துவ விசாரணைகளுக்கு ஒரு கருவாகவும் அமைந்திருக்கிறாள். இதுவரை உண்டான உயிருள்ள உயிரற்ற எல்லாமாகவும் இனி உண்டாகப் போகும் உயிருள்ள உயிரற்ற எல்லாமாகவும் ஆக அதிதி இருக்கிறாள் ((அதிதிர் ஜாதம், அதிதிர் ஜனித்வம் – ரிக்வே 1.89.10). ஆக மெய்ப்பொருள் ஒன்றே என்பது தெளிவாகிறது.

 

 

 1. சில பெண் தெய்வங்கள் ஏற்கனவே பார்த்தது: உஷஸ், ஸரஸ்வதீ, ப்ருத்வீ, அதிதி. மற்ற சிலர்:
  1. வாக் – உருவகப்படுத்திய பேச்சு (ஆன்மீகமான வேதப்பாசுரங்கள்தாம் இந்தப் பேச்சு),
  2. ராத்ரி இரவுக்காலம்,
  3. ஸினிவாலீ- எல்லோரும் அவளிடம் மக்கட்பேற்றை வேண்டுகின்றனர்.,
  4. ராகா- பௌர்ணமி தினத்துக்குத் தேவதை,
  5. குங்கூ அல்லது குஹு- அமாவாசைத் தினத்தேவதை,
  6. அரண்யாணி- காடுகளின் தேவதை,
  7. ஸூரியாவின் மகளான ஸாவித்ரீ,
  8. புரந்தீ- செழுமைக்குத்தேவதை,
  9. திஷணா- செழுமைக்குத்தேவதை,
  10. இலா-புஷ்டிக்குத் தேவதை,
  11. ஸரஸ்வதியுடன் சேர்ந்து இடா, பாரதீ என்று இருதேவதைகள்,
  12. பிருஷ்ணி– மருத்துக்களின் தாயார்,
  13. ஊர்வசி,
  14. இந்திராணி,
  15. வருணானி

 

 1. மற்ற சில தெய்வங்கள்

 

 1. அப்ஸரஸ் – அவர்களின் இருப்பிடம் தண்ணீர். நொடிப்பொழுதில் அவர்கள் அதிலிருந்து வெளிவந்தும், திரும்பவும் அதற்குள் போகவும் செய்கிறார்கள். அவர்கள் ஆலமரங்க ளிலும் அச்வத்த மரங்களிலும் இருந்துகொண்டு தங்களது தம்புராக்களையும், ஜால்ராக்களையும் ஒலித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று அதர்வவேதம் கூறுகிறது. தேவதைகளான அப்ஸரஸ் பெண்கள் இந்திரசபையில் அவனுக்குப் பணிவிடை செய்துவருகிறார்கள். அவர்களுள் முக்கியமானவள் ஊர்வசி. வஸிஷ்டரும் அகஸ்தியரும் அவளுடைய மகன்கள். அப்சரஸ் பெண்கள் மிகவும் அழகு வாய்ந்தவர்கள். பெரும்பாலும் தேவர்களே காதலர்கள். சில சமயங்களில் மனிதர்களும் காதலராக விளங்கியிருக்கின்றனர். (புரூரவஸ்-ஊர்வசி)

 

 1. கந்தர்வர்கள்: சற்று தெய்வாம்சம் பெற்ற ஆண்களுடைய குழுவாகும். காற்று மண்டலத்தின் உயர்ந்த பகுதியிலோ அல்லது விண்ணிலோ இருக்கிறார்கள். தனியே குறிப்பிடப்பட்டுள்ள ஒரு கந்தர்வன்: விசுவாசஸு, கந்தர்வனும் அப்ஸரஸும் தண்ணீரில் இருப்பதாக அதர்வவேதம் கூறுகிறது. இவர்கள் சிறந்த பாடகர்கள் என ராமாயணம் சொல்கிறது. ஆனால் இக்கருத்து வேதத்தில் இல்லை. கந்தர்வன் நல்ல வாசனையுள்ள ஆடைகளை உடுத்தி இருந்ததாக ரிக்வேதம் கூறுகிறது.

 

 1. வாஸ்தோஷ்பதி – வீட்டைக்காக்கும் தேவதை

 

 1. க்ஷேத்ரஸ்யபதி – வயலுக்குத் தேவதை

 

 

 1. யமன் விவஸ்வானுக்கும் ஸரண்யூவுக்கும் பிறந்தவன். யமீயுடன் இரட்டைப்பிறப்பு, அசுவினி தேவதைகள் இவன் தம்பியர். மனிதகுலத்தின் முதல் பிறப்புக்கள் யமனும், யமியும். யமனிடம் பாலுறவு கொள்ள விரும்பிய யமீயை தர்ம நியாயங்களை எடுத்துச் சொல்லித் தடுத்துவிடுகிறான். (ரிக்வே 10.10). அக்கினி அவனுடைய நண்பன். இறந்தவர்களின் உலகை ஆள்பவன். “தெய்வங்களுக்காக யமன் சாவை விரும்பி ஏற்றுக் கொண்டான். மனிதர்களுக்காக அவன் சாகாமையை விரும்பவில்லை. தனக்குப் பிரியமான உடலை அவன் அர்ப்பணிக்கிறான்” (ரிக்வே 10.13.4). ஆக அவன் இறந்தவர்களில் முதலாவதாகிறான். இறந்தபின் அவன் உயரமான இடங்களில் தேடி மற்றவர்கள் வருவதற்குப் பாதையைக் காண்பிப்பதாக ஒரு ரிக் சொல்கிறது. ஆந்தையும் புறாவும் யமனுடைய தூதர்கள். இப்பறவைகள் வீட்டிற்கு வந்தால் அது துர்ச்சகுனமாக வரப்போகும் சாவைக்குறிப்பதாக வேதகாலத்தில் கருத்து நிலவியது. இன்றும் இதே கருத்து இங்கிலாந்தில்(வடக்கு லிங்கன்ஷயர்) உள்ளது. ஆனால் ரிக்வேதத்தில் யமனுடைய முக்கியமான தூதர்களாக இருப்பது இரு நாய்கள். அவை இந்திரனுடைய தாயான சரமாவின் குட்டிகள்.

 

 1. ரிபுக்கள் வேதகாலத் தொடக்கத்திலேயே, மானிடர்களும் விடாமுயற்சியால் தெய்வத்தன்மையை அடைய முடியும் என்ற கொள்கைக்கு ரிபுக்கள் சிறந்த உதாரணமாவர். அங்கிரஸ் வம்சத்தைச் சேர்ந்த ஸ்தன்வனின் மூன்று பிள்ளைகள்:  ரிபு, வாஜன், விப்வன். இம்மூவரையும் ஒருங்கிணைத்து ரிபு என்று குறிக்கிறது வேதம். அவர்கள் இடைவிடாமல் மிகுந்த சிரத்தையுடனும் கவனத்துடனும் நல்ல காரியங்களையே செய்துவந்தார்கள். தெய்வத்தன்மை அடைந்து துதிப்பதற்கும் வணங்குவதற்கும் உரியவரானார்கள்.

 

 1. இன்னமும் சில தெய்வங்கள்:
  1. மனிதர்கள் – அரசனைத் தேவதையாக சொல்லப்பட்டிருக்கிறது
  2. குதிரை
  3. பசுமாடு
  4. நாய்கள்
  5. தவளைகள்
  6. தார்க்ஷ்யன் என்ற பறவை
  7. பருந்து
  8. சாதகப்பறவை
  9. வேள்விக்கம்பம்
  10. ஸோமரசம் பிழியும் கற்கள்
  11. மூலிகைகள்

 

 1. உருவில்லாத் தேவதைகள்
  1. படைப்பு
  2. ஞானம்
  3. ஒற்றுமை
  4. சிரத்தை
  5. தக்ஷிணை
  6. கொடை
  7. கோபம்
  8. ரதி(கூடலின்பம்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.