உறுப்பு தானம்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

உடல் உறுப்புகள் கொடை அல்லது உடல் உறுப்புகள் தானம் என்பது நோயுற்று உடலுறுப்பு பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மற்றொருவர் அந்த உடல் உறுப்பைத் தானமாக அளிப்பதாகும். இதை, ஒருவருடைய உடல் உறுப்புகளை இறந்த பின்னரும் வாழும் வாழ்க்கையைத் தருவது உடலுறுப்பு தானம் என்று சிறப்பித்துக் கூறுகின்றனர். உடலுறுப்புகளைத் தானமாகக் கொடுப்பது மதக் கோட்பாடுகளை மீறிய செயல் என்ற நிலை தற்போது மாறி வருகிறது. இருக்கும் வரை இரத்த தானமும், இறந்த பின்பு கண்தானமும் செய்வது மிகச் சிறப்பானது என்கிற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

ஒருவர் உயிருடன் இருந்தாலும் அவருடைய மூளையின் பகுதி பாதிப்படைந்து செயலிழக்கும் நிலையில் அவருடைய இருதயம், சிறுநீரகம் போன்ற முக்கியமான சில உடல் உறுப்புகளை அவருடைய வாரிசுதாரர்கள் விரும்பினால் தானம் செய்யலாம். இந்த உடல் உறுப்புகளைத் தானமாகப் பெற்று சிலர் உயிர் வாழ முடியும் என்பதால் இந்த உடலுறுப்புகள் தானம் செய்வது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.

உறுப்பு தானம் என்பது மிக உயர்ந்த தானம்.
1. சென்னையில் இரண்டு வருடத்திற்கு முன் இறந்தவரிடமிருந்து பெற்ற ஈரல் பொருத்தப்பட்டு, உயிர் பெற்று வாழும், பூனேயில் வசிக்கும் தியானஸ்ரீ கூலே என்னும் 18 வயதுப் பெண் கூறுகிறார். “எங்கள் குடும்பத்தில் எல்லோரும் உறுப்புதானம் செய்யத் தீர்மானித்துள்ளோம். எனக்கு அன்று மாற்றுருப்புக் கிடைத்திருக்காவிடில், தன் ஈரலைத் தரத் துணிந்திருந்த என் தாயாரின் ஈரலைத் தான் எனக்கு வைத்திருப்பார்கள். ஆனால் எனக்கு இறந்துவிட்ட ஒருவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட ஈரல் ஐந்து நாட்களுக்குள் கிடைத்தது. இறப்பவர்களின் உடலில் இருந்து கிடைக்குமென்றால் வாழ்பவர்களின் உடலில் இருந்து ஏன் எடுக்க வேண்டும் ?” (Times of India)

2. பிறர் ஈரலைப் பெற்ற மும்பையைச் சேர்ந்த சுப்ரதிம் பாசு சொல்கிறார். “சென்னையில்தான் இந்தியாவிலேயே மிக அதிக எண்ணிக்கையில் உறுப்பு தானம் செய்வதும் அதைப் பிறருக்குப் பொருத்தி உயிர்காப்பதும் அதிகம். மும்பையில் சென்ற வருடம் மூளையில் இரத்த நாளம் வெடித்து இறந்த திருமதி கவிதா கர்க்காரேயின் உடல் உறுப்புக்கள் தானம் செய்யப் பட்டபின், மும்பையிலும் இந்த விழிப்புணர்வு பெருக ஆரம்பித்திருக்கிறது.” (Times of India)

3. 2012ஆம் வருடம் வெளியான ஒரு அறிக்கையின்படி, தமிழ் நாட்டில் 54000 கண்கள் கொடையளிக்கப் பட்டு கண்பாதிப்புக்குள்ளானோர் நலமடைந்தனர். இது நாடு முழுவதும் நடந்த 2.21 இலட்ச கண்கொடைகளில் மிக அதிகமாக ஒரு மாநிலத்தில் மட்டும் நிகழ்த்தப் பட்டுள்ளது. சங்கர நேத்ராலயாவில் மட்டும் வருடத்திற்கு 1300 கண் கொடைகள் பெறப்படுகின்றன. (Times of India)

4. சங்கர நேத்ராலயாவின் உதவி இயக்குனரான திருமதி ரமா ராஜகோபால் கூறுகிறார்: “தகவல் வந்தவுடன் கண்களைப் பெற்றுவர, எங்களிடம் 24மணி நேரமும் இயங்கும் ஒரு மருத்துவர்குழு இருக்கிறது. 15 நிமிடங்கள்தான் கொள்ளும் ஒரு முறையால் கண்கள் இறந்தவரின் சடலத்திலிருந்து எடுக்கப்படும், இதனால் முகத்தில் எவ்வகையான மாற்றமும் ஏற்பட்டிருக்காது. எங்களுக்கு வேண்டியது இறந்த நபர் தன் கண்களைத் தானம் செய்ய உத்தேசித்துப் பதிவு செய்யாதவராயிருந்தால், அவரது குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதலேயாகும். .. நீரிழுவு, இரத்த அழுத்தம், இதய நோய் என எது இருப்பினும் அவை கண்தானத்துக்குத் தடையல்ல. கண்களில் காடராக்ட் அறுவை சிகிச்சை செய்யப் பட்ட கண்களாயிருந்தாலும் தானம் செய்யலாம். அவை பிறருக்குப் பொறுத்தப்பட்ட பின் சோதனை செய்யப்பட்டு சரிசெய்யப்படும்.” (Times of India)

5. சென்னை மியோட் மருத்துவமனையின் இயக்குனர் திரு R சுரேந்திரன், “ மூளைச்சாவு ஆகியிருப்போரின் உடல் பாகங்கள் எடுக்கப் பட்டு பிறருக்கு உயிர்வாழ பயன் படுத்தப் படுவதால், பெற்றவர் மூலமாக அவர்கள் தொடர்ந்து உயிர் வாழ்கின்றனர். ஆனால், படித்தவர்கள் உறுப்பு தானம் செய்வது மிகக் குறைவே. நம் நாட்டில், ஒவ்வொரு 1.9 நிமிட்த்துக்கு ஒருவர் என மூளைச் சாவுகள் எற்படுகின்றன. இதில் பாதி பேரின் உறுப்புக்கள் தானமாக அளிக்கப்பட்டால்கூட நிறைய நோயாளிகளை மறுபடி வாழ வைக்க இயலும்” என்கிறார். (Times of India)

6. மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தனது தாயின் உடல் உறுப்புக்களை தானம் செய்ய அவரது மகன் சுரேஷ்குமார் (14) தூண்டுகோலாக இருந்துள்ளான். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வெள்ளைய கவுண்டம்பட்டியைச் சேர்ந்த மருதை என்பவரது மனைவி சாந்திக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்திக்கு கடுமையான காய்ச்சல் காரணமாக மூளைச்சாவு ஏற்பட்டது. மருதை – சாந்தியின் மகன் சுரேஷ்குமார், தனது தாயின் இந்த நிலையைக் கண்டு மனம் கலங்கினாலும், உடல் உறுப்பு தானத்தைப் பற்றி தனது தந்தைக்கு எடுத்துக் கூறினான். உடல் உறுப்பு மூலமாக தனது தாயின் மூலமாக பலர் உயிர் வாழ வாய்ப்பிருப்பதாக தனது தந்தையிடம் கூறினான். இதையடுத்து மருதையும் உடல் உறுப்பு தானத்திற்கு ஒப்புக் கொண்டார். உடனடியாக சாந்தியின் உடல் உறுப்புக்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டு, உடல் உறுப்புகள் பழுதடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு பொருத்தப்பட்டது. உடல் உறுப்பு தானம் தற்போது மக்களிடையே பெரும் விழிப்புணர்வு பெற்று வருகிறது என்பது இந்த சம்பவமே உதாரணம்.

7. சென்ற மாதம் கேரளாவில் முதல்முறையாக, 200 கி.மீ. தொலைவிலிருந்து விமானம் மூலம் கொணரப் பட்டு பொருத்தப்பட்ட இதய மாற்றுச் சிகிச்சை : கொச்சியில் உள்ள லெஸ்லீ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மாத்தியூஸ் என்பவருக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள சித்ரத்திருநாள் மருத்துவ ஆராய்ச்சி நிலைய மருத்துவ மனையிலிருந்த, மூளைச்சாவு ஆன நீலகண்டன் சர்மாவின் இதயம், கடற்படையின் விமானத்தின் மூலம் கொண்டுவரப் பட்டு, நான்கு மணி நேரத்தில் மாத்தியூஸின் உயிர் காக்கப் பட்டது.

இதைப்போன்ற எத்தனையோ சாதனைகளை நமது மருத்துவர்கள் செய்து உயிர்காக்கும் கடவுளாக வாழ்கின்றனர். செய்தித் தாள்களில் இத்தகைய செய்திகள் வந்துகொண்டிருந்தாலும், படிப்பவர்களின் சுவையை இச்செய்திகள் இழுக்காததால், இதன் உண்மையான மகத்துவம் நமக்குப் புரிவதில்லை. இறந்தவர்களை அடக்கம் செய்வது, எரிப்பது என்ற கொள்கைகளையுடைய எம்மதங்களின் அறிவாளிகளும் பெரியோர்களும், உறுப்பு தானம் என்பதை ஆதரிக்கின்றனர்.

‘உடல் உறுப்பு தானம்’ என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும்.

நம் உடலில் தானம் செய்யக்கூடிய பகுதிகள் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்விகளுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் அருணா ராமகிருஷ்ணன்.

“பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டு வித தானங்கள் தான் அதிக அளவில் இருந்து வருகின்றன. வேறு எந்தமாதிரியான உடல் தானங்கள் கொடுக்கப்படுகின்றன என்பதை சொல்லலாமே?”

உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது.
உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன?

ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.

இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?

இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், சுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா).

யார் யார் உடல் உறுப்புக்களை தானமாக தரமுடியும்?

நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெபடைடீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாதவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.

உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா?

18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி தாமாக முன் வந்து தானம் செய்யலாம்.

உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதி முறைகள் உள்ளனவா?

ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்யலாம். என்றாலும் அதற்கென்று சில விதி முறைகள் உள்ளன. 1954-ம் ஆண்டு முதல் கடை பிடிக்கப்படும் விதிகள்:-

1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மாமா, அத்தை, சித்தப்பா, அவர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்தங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம்.

2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர்கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்பவர்கள், பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் போன்ற நெருக்கமானவர்களும் தரலாம்.

3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர்களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தாமல், மற்றொரு நோயாளிக்கு பொருந்துமேயானால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சிறுநீரகங்களை பரிமாறிக் கொள்ளலாம்.

தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா?

பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொள்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபாடிஸ்தான் காரணம். ஆனால் தானமாக பெற்ற உறுப்பை பொருத்துவதற்கு முன்னால் ‘ப்ளாஸ்மா பெரிஸிஸ்’ என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார்கள். அவ்வாறு, மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்¬ரலையும் எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப்படுவதில்லை.

உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தானம் செய்பவருக்கு ஏதாவது ஆபத்து இருக்கிறதா?

பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதில்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும் போது, இரண்டு உறுப்புகள் செய்ய வேண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பாதிப்பு இருக்காது. கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்த பின், தானாகவே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமுள்ள பகுதிகள் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக்கூடாது, ஆன்டிபயாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட்டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோகப்படுத்தி இருக்கக்கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பிட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாகவோ இருக்கக்கூடாது. ரத்த சோகை இருக்கக்கூடாது, குறைந்தது மூன்று மாதங்களுக்குள் ரத்தானம் செய்திருக்கக் கூடாது. மற்ற அனைவரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.

வேறு என்னென்ன உறுப்புகளை தானமாக தர முடியும்?

கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ்ஜை (போன் மாரோ), ரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அனைத்தையும் தானமாக தரலாம்.

ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர்களுக்கு தன் உறுப்புக்களை தானமாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது னரையீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோனரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருதயம் மட்டும் துடித்துக் கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர்களுடைய நெருங்கிய உறவினரின் சம்மதம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், எடுத்து தேவையானவர்களுக்கு பொருத்தலாம்.எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந்தாலும், எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தலாம். ஆனால் உடல் உறுப்புக்களான, இதயம், கல்லீரல், னரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதாவது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன்படும்.

ஒருவரின் மூச்சு – சுவாசம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது?

ஒருவரின் சுவாசம் நின்றவுடன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளையின் செல்கள் செயல் இழந்து போகின்றன. மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத்தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படுகின்றன நோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.

உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்?

உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உபயோகப்படும் ரசாயன கலவையை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத்தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக்கும்படி செய்கிறார்கள். கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன்படுத்தலாம். எடுக்கப்பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி, குடுவை அல்லது பாத்திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக்கப்படுகின்றது. அந்த பாத்திரத்தை சுற்றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த நீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகள் விறைத்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கலவைகள் உள்ளன. அவை ‘வயாஸ்பான் திரவம்’, ‘யுரோ கால்லின்ஸ்” திரவம், ‘கஸ்டோயியல்’ திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நிலையில் வைத்தாலே போதும்.

முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?
நம்மிடையே உள்ள ஆதாரங்களின்படி 1902-ம் வருடம் முதன் முதலாக ‘அலெக்ஸில்’ கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முதலாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணைத்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.
1905-ம் வருடம் டிசம்பர் மாதம், டாக்டர் எட்வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறுவை சிகிச்சை செய்தார்.
1918-ம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது.
1954-ம் ஆண்டுதான், அமெரிக்காவின் ‘பாஸ்டன்’ நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.
1954-ம் ஆண்டு பீட்டர் பென்ட் மருத்துவமனையில், ரிச்சர்ட், ரோனால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டிற்கு பொருத்தினார்கள்.
1960-ம் ஆண்டு – ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார்.
196-ம் ஆண்டு ‘கொலராடோ’விலுள்ள டென்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
1965-ம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்தவரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உபயோகித்தார்கள்.
1967-ம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் ‘கேப்டவுன்’ நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். ‘டென்னிஸ் டார்வெல்’ என்பவரின் இதயத்தை ‘லூயிஸ் வாஷ்கேன்ஸ்க்கி’ என்பவருக்கு பொருத்தினார்.
1968-ம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
1981-ல் முதன் முறையாக ஒரேநேரத்தில் இதய, நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை அமெரிக்காவின் ஸ்டான்போர்டில் நடைபெற்றது.
1983-ம் ஆண்டு ‘சர். மாக்டியா கூப்’ என்பவர் ஐரோப்பாவிலுள்ள மருத்துவமனையில், நுரையீரலையும், இதயத்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய்தார்.
1986-ம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
1994-ம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உள்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார்.
2001-ம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.
2005-ம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக்களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை.

உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்?

சிறு நீரகம் – 72 மணி நேரம் வரை
கல்லீரல் – 18 மணி நேரம் வரை
இதயம் – 5 மணி நேரம் வரை
இதயம் / நுரையீரல் – 5 மணி நேரம் வரை
கணையம் – 20 மணி நேரம் வரை
கண் விழித்திரை (கார்னியா) – 10 நாட்கள் வரை
எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறும்
தோல் – 5 வருடம், அதற்கு மேலும்
எலும்பு – 5 வருடம், அதற்கு மேலும்
இதயத்தின் வால்வுகள் – 5 வருடம், அதற்கு மேலும் பொ,துவாக, பாதுகாத்து வைத்து உபயோகப்படுத்தலாம்.

சீராட்டி பாராட்டி வளர்த்த நம் உடல், இறந்தபின் மண்ணுக்குள் இருக்கும் புழு, பூச்சிகள் அரித்து வீணாகி போக வேண்டுமா?
மாறாக, பிறந்து, வாழ்ந்து, இறந்த பின்னரும் நாம் தொடர்ந்து இந்த உலகத்தில் பலரின் உடம்பின் மூலம் இந்த உலகத்தில் வாழலாம். ஆகவே, இறந்த பின்னரும் இந்த உலகில் வாழ நாம் செய்ய வேண்டியது, நினைவு உள்ள போதே நம் உடல் உறுப்புக்களை தானம் செய்வதற்கான விருப்பத்தை தெரிவித்து அதற்கென்று உள்ள அடையாள அட்டையை வாங்கி வைத்துக் கொண்டால், நாம் நிச்சயமாக இந்த மண்ணில் என்றென்றும் வாழலாம்.(பதிப்பு: நிலாமுற்றம்)

கொடை என்பது கேட்காமலே கொடுக்கும் உள்ளம் சார்ந்தது. இறைவன் நமக்குக் கொடுத்தவைகளை நாமும் பிறருக்குத் தானாமாக்குவோம்.

எனவே நாமும் கூட உறுப்பு தானம் செய்வதை மேற்கொள்ளலாமே !

விருப்பமிருப்பவர் இந்த இணைய தளங்களில் தம்மைப் பதிவு செய்துகொள்ளலாம்.

1.Tamil Nadu Network for Organ Sharing : www.tnos.org/
2. Mohan Foundation: http://mohanfoundation.org/
3. Shatayu: http://shatayu.org.in/
4. Gift Your organ: http://giftyourorgan.org/
5. Gift a Life: http://giftalife.org/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.